இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
கடந்த வெள்ளி அன்று பத்தரமுல்லவில் நடைபெற்ற அரச நில அளவையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உறையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக, தனது அரசாங்கம் பொதுச் செலவுகளை வெட்டுவதற்காக 34 அரச நிறுவனங்களை மூட உள்ளதாக அறிவித்தார். இந்த நிறுவனங்களை மூடவும் ஒன்றிணைக்கவுமான பணிகளைக் கண்காணிப்பதற்காக ஒரு விஷேட குழுவை நியமித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், வினைத்திறனை மேம்படுத்தவும் ”தேவையற்ற செலவீனங்களை” ஒழிக்கவும் இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் எனக் கூறிக்கொண்டார்.
மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தப் போகிறது என்பதை இந்த அறிவித்தல் சுட்டிக்காட்டுறது.
நிதி அமைச்சராகவும் உள்ள திசநாயக, இந்த நிறுவனங்களை மூடுவதற்கான திட்டங்களை அமைச்சு வரைந்துள்ளதாக தெரிவித்த போதிலும் மூடுவிழாவுக்கு தயாராக உள்ள 34 நிறுவனங்களின் பெயர்களை கூறவில்லை. எத்தனை அரச ஊழியர்கள் பாதிக்கபட உள்ளனர் என்பதை குறிப்பிடவும் இல்லை. அவர் குறிப்பிட்டது எல்லாம் பொதுச் செலவுகளை வெட்டிக்குறைத்து அரச நிறுவனங்களின் “வினைத்திறனான செயற்பாட்டை” உறுதிப்படுத்த இது அவசியம் என்பதாகும்.
திசாநாயக, இந்த மூடல்களை நியாயப்படுத்துவதற்காக, தொழிலறிஞர்களை தக்கவைப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் நிர்வாக அமைப்பின் கீழ்மட்டங்களில் “அரசியல் நியமனங்கள்” குவிந்திருப்பது போன்ற சிக்கல்கள் உட்பட “பொதுச் சேவையில் உள்ள பலவீனங்களுடன்” முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்களை தொடர்புபடுத்தினார். அரசாங்கம் ஒரு “வலுவான அரச நிர்வாக அமைப்பையும்” தனது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றக்கூடிய “திறமையான பொதுத்துறையையும்” கொண்டிருக்க வேண்டும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்ட இந்த அரச நிறுவனங்களின் மூடுதலும் மறுசீரமைப்பும், 2027 ஆம் ஆண்டில் முதன்மை வரவு-செலவுத் திட்ட (பாதீடு) உபரியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாக மீட்டெடுக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு இணங்க அமைந்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்ட பரிமாணங்களில், வருவாய் திரட்டலை அதிகரித்தல், எரிசக்திக்கான 'செலவை மீட்கும்' விலை நிர்ணயம், நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மை மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தொடர்தல் அல்லது வணிகமயமாக்கலும் அடங்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் டொலர் பிணையெடுப்பு கடனின் ஏழாவது தவணையான 345 மில்லியன் டொலர், அதன் கடுமையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே ஒக்டோபர் 5 அன்று நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகளில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை அதனிடம் சமர்ப்பிப்பது மற்றும் நிதி உத்தரவாதங்கள், கடன் மறுசீரமைப்பு ஆகியவை குறித்த ஆய்வை நிறைவு செய்வதும் உள்ளடங்கும். சர்வதேச நாணய நிதியம் தனது அலுவலர்கள் மட்டத்திலான ஒப்பந்தத்தை அறிவித்த மறுநாள், நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, 2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க இருக்கும் என்று உறுதிப்படுத்தினார்.
2022 இல் ஏற்பட்ட நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, அரசாங்கம் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, 2023 இல் சர்வதேச நாணய நிதியத்தின் மீட்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளில், பொதுச் செலவினங்களைக் குறைத்தல், வரிகளை அதிகரித்தல், மானியங்களை நீக்குதல் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மூடுதல் அல்லது அவற்றை வணிகமயமாக்கல் அல்லது தனியார்மயமாக்கலுக்காக மறுசீரமைத்தலும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய அரசாங்கம் சுமார் 430 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கத் திட்டமிட்டதோடு அவற்றில் சில ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. இலங்கையின் பிரதான அரச நிறுவனங்களில் ஒன்றான இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), சுமார் 2,000 தொழில்களை அழித்து, திசாநாயக அரசாங்கத்தால் இந்த ஆண்டு ஆறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றிய தனது உரையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை தனது அரசாங்கத்தால் உயர்த்த முடியாது என்று திசாநாயக வலியுறுத்தினார். தனது 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையின்போது, அரச ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் முன்மொழியப்பட்ட பணவீக்கத்திற்குக் குறைவான உயர்வை அவர் சுட்டிக்காட்டிய போதிலும், 2028 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் கீழ் அடிப்படைச் சம்பளத்தில் மேலும் எந்த உயர்வும் திட்டமிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
ஒக்டோபர் 12 அன்று, இலங்கை வர்த்தக சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் ஒத்துழைப்பை ஆதரித்தார். சர்வதேச நாணய நிதியத்தின சிக்கனக் கோரிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவுகரமான சமூகத் தாக்கங்கள் இருந்தபோதிலும், அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கங்களுக்கும் இடையில் 'ஒப்பீட்டளவில் சில முரண்பாடுகளே' இருந்ததாக அவர் அறிவித்தார். 'இது பாரிய மறுதலிப்புகள் இன்றி அமுலாக்கம் தொடர வழிவகுத்துள்ளது,' என்று அவர் வலியுறுத்தினார்.
வணிகத் தலைவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திசநாயக்க, முக்கியமான அரசுச் சேவைகள் தனியார்-இலாபம் ஈட்டலுக்கு திறந்துவிடப்படும் என்றும், முதலீட்டாளர்களின் நலன்கள் சட்டக் கட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்படும் என்றும் மீண்டும் மீண்டும் உறுதியளித்தார். இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு “வெளிப்படையான நிர்வாகம்”, புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள், அத்துடன் முதலீட்டிற்குச் சாதகமான சூழலை உருவாக்கும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
- வலுசக்தி துறையில், முக்கிய மின்சார பரிமாற்றக் கம்பி அமைக்கும் மற்றும் இயக்கும் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது; இதன் மூலம், மின்சார பரிமாற்றக் கட்டமைப்பை உருவாக்குவதில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த இலங்கை மின்சார சபையின் பங்களிப்பு முடிவுக்கு வருகிறது.
- 150 மெகாவாற்ஸ் மின் உற்பத்தித் திறன் கொண்ட திட்டங்கள் உட்பட, மிதக்கும் சூரியசக்தி மின் திட்டங்களை தனியார் ஏலத்திற்கு விடவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. இதில் ஏற்கனவே சூரியசக்தி மின் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பங்கேற்க முடியும்.
- துறைமுகங்களைப் பொறுத்தவரை, கிழக்கு கொள்கலன் முனையத்தை அரசாங்கத்தால் சொந்தமாக முழுமையாகத் தொடர்ந்து நிர்வகிக்க முடியாது எனவும் அரசு அதன் உரிமையைத் சம்பிரதாயப்படி தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளை, தனியார் முதலீட்டை அனுமதிக்கும் வகையில் ஒரு நிறுவனத்தை உருவாக்க உத்தேசித்துள்ளதாக திசநாயக அறிவித்தார்.
அரசாங்கத்தின் “முதலீட்டு” திட்ட நிரலானது, பொது நிதியிலிருந்து அபிவிருத்திசெய்யப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை செல்வந்த முதலீட்டாளர்களுக்கு இலாபம் ஈட்டும் வளங்களாக மாற்றுவதையே குறிக்கிறது என்பதை இந்த நடவடிக்கைகள் எடுத்துகாட்டுகின்றன. “முதலீடு மற்றும் வணிகப் பாதுகாப்பை” வழங்குவதற்கான சட்டமானது பெயரளவிலான தொழிலாளர் பாதுகாப்புகளைக் கூட பலவீனப்படுத்தவும், மறுசீரமைப்பின் சுமையை தொழிலாளர்கள் மீது சுமத்தவும் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுடன், தயாரிக்கப்பட்டு வருகிறது.
நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிலை இழக்கும் சாத்தியத்துடன் 34 அரசு நிறுவனங்களை மூடுவதாக திசநாயக அறிவித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இருப்பினும், இந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும் முன்வரவில்லை.
இதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. 2024 தேர்தலுக்கு முன்னதாக, தொழிலாளர்களின் போராட்டங்களைத் தடுத்து நிறுத்தியதன் மூலமும் ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வர இந்த தொழிற்சங்கங்கள் உதவியதோடு ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்க்கை நிலை மேம்படும் என்ற பொய் வாக்குறுதியை அளித்து, தங்கள் உறுப்பினர்களை இந்தக் கட்சிக்கு வாக்களிக்குமாறு ஊக்குவித்தன. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தை தொழிற்சங்கங்கள் ஒருபோதும் எதிர்த்ததும் இல்லாமல் அடிமட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இது குறித்த எந்தவொரு விவாதமும் நடைபெறுவதை தடுத்தும் வந்தன.
தொழிலாளர்கள் மத்தியில் விரோதமும் கோபமும் எழுந்தபோது, தொழிற்சங்கங்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையையும் கட்டுப்படுத்தி ஒடுக்கின. 2025 தொடக்கத்தில், ஒரு லட்சம் சுகாதாரத் தொழிலாளர்கள் தங்கள் கொடுப்பனவுகளை குறைப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்தபோது, தொழிற்சங்கத் தலைவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தங்களை மட்டுமே நடத்திவிட்டு, மேலதிக நடவடிக்கைகளை முடக்கினர். அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தையும் மீறி தபால் ஊழியர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கம் இராணுவத்தையும் பொலிசையும் களமிறக்கிய பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவம் அவர்களை மீண்டும் வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டனர். அவர்களின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.
தொழிலாளர்கள் தங்கள் தொழில்களையும் வேலை நிலைமைகளையும் காக்க தொழிற்சங்கங்களை, முதலாளித்துவ எதிர்க்கட்சிகளை அல்லது முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது அமைப்புகளை நம்பியிருக்க முடியாது; மாறாக, தொழிலாளர்கள் இந்த விவகாரங்களை தங்களது கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கான வழிமுறைகளை ஸ்தாபிக்க, தொழிற்சங்கங்கள் மற்றும் சகல முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் பிரிந்து, வேலைத் தளங்கள், தோட்டப்புறங்கள் மற்றும் பிரதான பொருளாதார மையங்களில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
திட்டமிடப்பட்ட மூடல்களை கைவிடச்செய்யவும், ஒவ்வொரு வேலைவாய்ப்பையும் பாதுகாப்பதற்கும்; சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நிராகரிப்பதற்கும், வெளிநாட்டுக் கடனை இரத்து செய்வதற்கும்; வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை தேசியமயமாக்குதன் மூலம் பொதுச் சேவைகளை மீட்டெடுத்து விரிவுபடுத்துவதற்கும்; அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது.
இந்தப் போராட்டம் சர்வதேசரீதியானதாகும். திசநாயகவைப் போலவே, உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் சிக்கன நடவடிக்கைகளையும் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளன. தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் (IWA-RFC) ஊடாகத் தங்கள் நடவடிக்கைக் குழுக்களை ஒருங்கிணைத்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுமாறு இலங்கைத் தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
மேலும் படிக்க
- இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசாங்கத்திற்கு சமூக எதிர்ப்பை ஒடுக்குவதற்கான பரந்த அதிகாரங்களை வழங்குகிறது
- சோ.ச.க. (இலங்கை) பகிரங்கக் கூட்டம்: ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் — IMF சிக்கன வெட்டுக்களை திணிக்கின்ற பெரும் வர்த்தகர்களின் அரசாங்கம்
- ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களைத் தோற்கடிப்போம்!
