இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) இணைந்து, “ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகள்: சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்களை திணிக்கின்ற பெரும் வர்த்தகர்களின் அரசாங்கம்” என்ற தலைப்பில், நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் குறித்து மதிப்பீடு செய்வதுடன், தொழிலாள வர்க்கம் முன்னோக்கிச் செல்வதற்கான வழி குறித்துக் கலந்துரையாடும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மதிப்பிழந்த பாரம்பரிய ஸ்தாபகக் கட்சிகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பைச் சுரண்டிக்கொண்டு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆட்சிக்கு வந்தது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய அதேவேளை, பெருவணிகத்தினதும் வெளிநாட்டு மூலதனத்தினதும் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்து, இரட்டை வேடம் கொண்ட தேர்தல் பிரச்சாரத்தை அது நடத்தியது.
முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) தலைமையிலான போலி இடதுகள், தேர்தல் வெற்றியைப் புகழ்ந்து, தேசிய மக்கள் சக்தியை “மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்குதல்” என்று சித்தரித்தனர். இன்று, தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்குகின்ற நிலையில், இதே சக்திகள் வர்க்கப் போராட்டத்தை அரசாங்கத்தை “சரியான பாதையில் செல்லுமாறு” அழுத்தம் கொடுப்பதற்குத் திசைதிருப்ப வேண்டும் என்று போதிக்கின்றன.
ஜே.வி.பி.யானது தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) என மறுபெயரிடப்பட்ட பின்னரும், அது சிங்களப் பேரினவாதத்தில் ஊறிய மற்றுமொரு முதலாளித்துவக் கட்சியே என்றும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடிவந்த தொழிலாளர்களுக்கு அது ஒரு பொறியாக அமையும் என்றும் சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) மட்டுமே எச்சரித்தன.
ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைக் கைவிட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இதற்கிடையில், ஜே.வி.பி./தே.ம.ச. வாக்குறுதியளித்த “வளமான நாடு” என்ற இலக்கு, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் இழப்பில் பெருவணிகத்திற்கான யதார்த்தமாக மாறிவருகிறது.
அரசாங்கம், சீனாவுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்டுள்ள வாஷிங்டனின் இராணுவ மூலோபாயத்திற்குள் இலங்கையை மேலும் நெருக்கமாக இழுத்துச் சென்றுள்ளதுடன், காஸாவில் இனப்படுகொலையை நடத்திவரும் இஸ்ரேலுடனான உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்துவரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, அரசாங்கம் கொடூரமான சட்டங்களை வலுப்படுத்தி, ஜனநாயக உரிமைகளை மேலும் கீழறுத்து வருகிறது.
அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து போலியான விமர்சனங்களை முன்வைத்தாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீதான அதன் உறுதிப்பாட்டைப் பகிர்ந்துகொள்கின்றன. ஜே.வி.பி.யின் சொந்தத் தொழிற்சங்கங்கள் உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், தொழில்துறை பொலிஸ் படையைப் போலச் செயல்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் பரந்த அணிதிரள்வில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாத்துள்ளன.
2022 வெகுஜன எழுச்சி, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக வலிமையை நிரூபித்தது. எவ்வாறாயினும், அந்த எழுச்சி பின்னடைவைச் சந்தித்ததிலிருந்து பெறப்பட வேண்டிய படிப்பினை என்னவெனில், வெகுஜன இயக்கத்தை வெற்றிக்கு வழிநடத்துவதற்குச் சோசலிச சர்வதேச முன்னோக்கைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமை அவசரமாகத் தேவைப்படுகின்றது என்பதாகும்.
முதலாளித்துவக் கட்சிகள், அவற்றுக்குக் கண்மூடித்தனமாக வக்காலத்து வாங்கும் போலி இடதுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள வேண்டும். அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராகப் போராடுவதற்காக, அது கிராமப்புற ஏழைகளையும் சமூகத்தின் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் தன்னுடன் அணிதிரட்ட வேண்டும்.
தொழிலாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள், சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படுவதை எதிர்க்கும் அனைவரையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தொழிலாள வர்க்கமும் வெகுஜன மக்களும் முன்னோக்கிச் செல்வதற்கான வழி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்
திகதி மற்றும் நேரம்: நவம்பர் 10, செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணி
