பங்களாதேஷ் தொழிற்சங்க அதிகாரத்துவம் வறுமை ஊதியங்களுக்கு எதிரான ஆடைத் தொழிலாளர்களின் போராட்டங்களை காட்டிக்கொடுக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பிரதமர் தாரிக் ரஹ்மானின் வலதுசாரி பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) அரசாங்கம், இந்த மாத தொடக்கத்தில் பல்லாயிரக்கணக்கான பங்களாதேஷ் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக பொலிஸ் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவம் நடைமுறையில் அரசாங்கத்தின் பக்கம் நின்று, ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

2026 நவம்பர் 4, புதன்கிழமை, பங்களாதேஷின் நாராயண்கஞ்சில் ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆடைத் தொழிலாளர்களுக்கு முன்னால் கண்ணீர்ப்புகைக் குண்டு வெடிக்கிறது. [AP Photo/Mahmud Hossain Opu]

செய்திகளின்படி, தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்கள் அக்டோபர் 31 அன்று தொடங்கி நவம்பர் 5 வரை தொடர்ந்தன. இவை ஊதியங்கள் தொடர்பாக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தின் விளைவாக இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்த அதேவேளை, முன்னர் உறுதியளித்தபடி அக்டோபர் மாதத்திற்குள் புதிய ஆடைத் தொழில்துறைக்கான குறைந்தபட்ச ஊதியச் சபையை (MWB) அமைக்க அரசாங்கம் தவறியதே உடனடித் தூண்டுதலாக அமைந்தது. டாக்கா மற்றும் காசிப்பூரின் பல்வேறு தொழில்துறைப் பகுதிகளைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளர்கள், தற்போதைய மாதாந்த குறைந்தபட்ச ஊதியமான 12,500 டாக்காவிலிருந்து (100 அமெரிக்க டொலர்கள்) 30,000 டாக்காவாக (240 அமெரிக்க டொலர்கள்) அதிகரிக்கக் கோரி வீதிகளில் இறங்கினர்.

இந்த வறுமை ஊதியங்கள், ஆடைத் தொழில்துறையில் நிலவும் கொடூரமான சுரண்டலை அம்பலப்படுத்துகின்றன. 2025ல், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசியச் செலவுகளை ஈடுசெய்வதற்கே மாதாந்தம் சுமார் 45,000–50,000 டாக்காக்கள் தேவைப்பட்டன.

நவம்பர் 2 அன்று டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 45 வயதான ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளியான மொஹ்சினா பேகம் பின்வருமாறு விளக்கினார்: “நான் காலை 7:30 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு, இரவு 8:00 மணிக்குப் பின்னரே வீடு திரும்புகிறேன். மேலதிக நேரப் பணியையும் சேர்த்து, மாதத்திற்கு சுமார் 18,000–20,000 டாக்காக்கள் சம்பாதிக்கிறேன். அதில் 8,000 டாக்காக்கள் நேரடியாக வீட்டு வாடகைக்குச் செல்கின்றன. எஞ்சியிருக்கும் 10,000–12,000 டாக்காக்களைக் கொண்டு மாதத்தைக் கடத்துவது சாத்தியமற்றது.”

தொழிற்சாலை உரிமையாளர்கள் அனுபவமிக்க தொழிலாளர்களைக் கூட்டாகக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் கடமையில் அமர்த்த வேண்டும், பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் எதேச்சதிகாரமான ஆட்குறைப்புகளை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் தொழிலாளர்கள் முன்வைத்தனர்.

மிர்பூர், காசிப்பூர்-கலியாகைர், சாவர்-அஷுலியா, நாராயண்கஞ்ச், மைமென்சிங் ஆகிய ஐந்து தொழில்துறைப் பகுதிகளுக்கும் போராட்டங்கள் பரவின. இதனால் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள், அதிர்ச்சிக் கையெறி குண்டுகள் மேலும் தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தது 50 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தொழிலாளர்களின் போராட்டங்கள் மேலும் பரவிவிடும் என்ற அச்சத்தில், நவம்பர் 1 அன்று முதலாளிகள் 529 தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்தனர். நவம்பர் 2 ஆம் திகதிக்குள், சுமார் 690 தொழிற்சாலைகள் உற்பத்தியை இடைநிறுத்தியிருந்தன. இதனால் 1.7 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதாக பங்களாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

நவம்பர் 4 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, மூங்கில் தடிகளை ஏந்திய பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் “ஒழுங்கைப் பேணுவதற்கும் ஊடுருவல்காரர்களை எதிர்ப்பதற்கும்” வீதிகளில் இறங்கினர். பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தற்போது கலைக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக பங்களாதேஷ் தேசியவாத கட்சி இதற்கு முன்னர் எந்தவொரு ஆதாரமும் இன்றி குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒரு தொழிலாளியின் கூற்றுப்படி, நவம்பர் 2 அன்று காசிப்பூரில் “ஒரு தொழிற்சாலையால் வேலைக்கு அமர்த்தப்பட்ட” குண்டர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொடூரமாகத் தாக்கினர். அந்தத் தாக்குதலைக் காணொளியாகப் பதிவு செய்துகொண்டிருந்த 21 வயதான தொழிலாளி தௌஃபிக் ஷேக் படுகாயமடைந்தார். குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவரான தௌஃபிக், மறுநாள் காயங்களினால் உயிரிழந்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, அதிகாரிகள் இந்த வன்முறையை நியாயப்படுத்தினர். எனினும், தொழிலாளர்கள் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தனர்.

நவம்பர் 3 அன்று, தொழிலாளர்களைத் தூண்டிவிட்டதாகக் கூறி, அஷுலியாவில் மூன்று தொழிலாளர் தலைவர்களைப் பொலிஸ் கைது செய்தது. சட்டத்தின் “குறிப்பிட்ட பிரிவுகளின்” கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தபோதிலும், அந்தச் சட்டப் பிரிவுகள் எவை என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.

அரசாங்கம் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், குறிப்பாக ஸ்ராலினிச பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPB) இணைந்த தொழிற்சங்கங்கள், இந்தப் போராட்டங்களிலிருந்து தங்களைத் தூர விலக்கிக்கொண்டன. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகப் போலியான கூற்றுகளை முன்வைத்த அதேவேளை, பங்களாதேஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஆடைத் தொழிலாளர் தொழிற்சங்க மையத்தின் (GWTUC) செயலாளர் சகேகுர் ரஹ்மான் ஷமிம், தொழிற்சங்கங்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கவில்லை என்று தெரிவித்தார்.

அரசாங்கப் படைகள் போராட்டங்களை ஒடுக்கிய பின்னர், ஆடைத் தொழிலாளர் தொழிற்சங்க மையத்தின் தலைவர் மொண்டு கோஷ், “நியாயமான ஊதியங்களுக்கான தொழிலாளர்களின் கோரிக்கை ஒரு குற்றமல்ல” என்று இழிந்த முறையில் கூறியதோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து “பாரபட்சமற்ற விசாரணை” நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் “பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார். அவர் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டாமல் அதன் பொறுப்பை மூடிமறைத்தார்.

ஸ்ராலினிஸ்டுகளும் ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் தங்களது கட்டுப்பாட்டிற்கு வெளியே தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது, ஏற்கனவே ஸ்தாபன தொழிற்சங்கங்கள் மீதான நம்பிக்கையின்மை வளர்ச்சியடைந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகும்.

பங்களாதேஷ் ஆடை மற்றும் ஸ்வெட்டர் தொழிலாளர் தொழிற்சங்க மையத்தின் தலைவர் எம்.ஏ. ஷஹீனும் தனது தொழிற்சங்கத்தை இந்தப் போராட்டங்களிலிருந்து தூர விலக்கிக்கொண்டார். bdnews24.com இன் தகவலின்படி, ஷஹீன், “தொழிலாளர்கள் எவ்வித ஒருங்கிணைப்போ அல்லது அறிவுறுத்தல்களோ இன்றி, மதிய உணவுக்குப் பின்னர் திடீரென வீதிகளில் இறங்கினர் என்றும், ஊதியச் சபைக்கு அவகாசம் வழங்குமாறு அவர்களிடம் தான் வலியுறுத்தியதாகவும்” தெரிவித்தார். IndustriALL பங்களாதேஷ் சபையின் பொதுச் செயலாளர் சலாவுதீன் ஸ்வபன், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இது மிகவும் முன்கூட்டிய தருணம் என்றும், புதிய ஊதியக் கட்டமைப்பு ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் கூறினார்.

நவம்பர் 1 அன்று, போராட்டங்களின் இரண்டாவது நாளில், தொழிலாளர்களின் கோபத்தைத் தணிப்பதற்கான அவநம்பிக்கையான முயற்சியாக, பங்களாதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கம் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குறைந்தபட்ச ஊதியச் சபையை (MWB) அறிவித்தது. டிசம்பர் மாதம் முதல் புதிய ஊதியக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு நவம்பர் 4 அன்று குறைந்தபட்ச ஊதியச் சபை இணங்கியதாகவும், புதிய ஊதிய அளவின் கீழ் தொழிலாளர்கள் தங்களது முதல் சம்பளத்தை ஜனவரி மாதத்தில் பெறுவார்கள் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. எனினும், ஊதிய உயர்வு எந்தளவுக்கு இருக்கும் என்பதை குறைந்தபட்ச ஊதியச் சபை தெரிவிக்கவில்லை.

பங்களாதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கம், பங்களாதேஷ் ஆடை மற்றும் தொழில்துறை சிராமிக் கூட்டமைப்பின் (BGISF) பொதுச் செயலாளர் பாபுல் அக்தர், மற்றும் ஆளும் கட்சியுடன் உடன் இணைந்துள்ள பங்களாதேஷ் தேசியவாத தொழிலாளர் கட்சியின் (BJSD) தலைவர் அன்வர் ஹொசைன் ஆகிய இரண்டு தொழிற்சங்க அதிகாரிகளை குறைந்தபட்ச ஊதியச் சபைக்கு நியமித்தது. அரசாங்க ஆதரவு தொழிற்சங்கத் தலைவர்களான இவர்கள், தொழிலாளர்களின் நலன்களுக்குப் பதிலாக ஆடை உற்பத்தி நிறுவனங்களின் நலன்களுக்குச் சேவையாற்றுவார்கள்.

IndustriALL பங்களாதேஷ் சபையின் உறுப்பினரான பங்களாதேஷ் ஆடை மற்றும் தொழில்துறை சிராமிக் கூட்டமைப்பு, தொழிலாளர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முயன்றதற்காக இழிபுகழ் பெற்றதாகும். நவம்பர் 2 அன்று, ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுமாறு அக்தர் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்: “தயவுசெய்து உங்கள் தொழிற்சாலைகளுக்குத் திரும்பிச் சென்று மீண்டும் வேலையைத் தொடங்குங்கள். உங்களுக்கான நியாயமான ஊதியங்களுக்காக நாங்கள் போராடுவோம். அவசியமானால், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்குமாறு உங்களை அழைப்போம்,” என அவர் அறிவித்தார்.

2019 ஜனவரியில், ஹசீனாவால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்த பற்றாகுறையான ஊதிய உயர்வுக்கு எதிராக அஷுலியா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த முடிவை நியாயப்படுத்திய அக்தர், “இந்த முன்மொழிவு எமது பிரதமரிடமிருந்து வந்ததால், நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனை எவ்வாறு அவமதிக்க முடியும்?” என்றார்.

குறைந்தபட்ச ஊதியச் சபைக்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றொரு உறுப்பினரான ஹொசைன், தொழிலாளர்களை தங்களது தொழிற்சாலைகளுக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் இயக்கம் “தொழிலாளர்களுக்கு உதவவில்லை, மாறாக அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பலவீனப்படுத்துகிறது” என்று அவர் கூறியதாக நவம்பர் 2 அன்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டது.

ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையிலான தொழிற்சங்கங்களான (BJSD) மற்றும் பங்களாதேஷ் ஆடைத் தொழில் மற்றும் தொழில்துறை தொழிலாளர் சம்மேளனம் (BGISF), ஆடைத் தொழிலாளர்களின் போராட்டங்களை மீண்டும் மீண்டும் தடுத்து வந்துள்ளன. இப்போது, யூனுஸின் இடைக்கால அரசாங்கம் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதித்து, தேர்தலில் போட்டியிடுவதைத் தடுத்த பின்னர் நடத்தப்பட்ட ஒரு போலித் தேர்தலின் மூலம் 2026 பெப்ரவரியில் ஆட்சிக்கு வந்த வலதுசாரி அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு அவை முன்வந்துள்ளன. சுமார் 900,000 பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டு, போர்ச் சூழலை ஒத்த நிலைமைகளின் கீழ் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

சில வாரங்களுக்குள்ளேயே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளைத் திணித்ததன் மூலமும், ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியதன் மூலமும் பங்பகளாதேஷ் தேசியவாத கட்சி ஆட்சி தனது வாக்குறுதிகளைக் கைவிட்டது. ஆடைத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் குறைந்த ஊதியம் பெறும் ஏனைய தொழிலாளர்களையும் போராட்டத்தில் இறங்க ஊக்குவிக்கும் என்று அஞ்சிய அரசாங்கம், அவற்றை ஒடுக்குவதற்கு பொலிஸையும் தொழிற்சங்கங்களையும் பயன்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், 30,000 டாக்கா குறைந்தபட்ச ஊதியம் வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை முதலாளிகள் பிடிவாதமாக நிராகரித்து வருகின்றனர். நவம்பர் 4 அன்று, பங்களாதேஷ் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மொஹம்மத் ஹத்தேம், இந்த ஊதிய உயர்வு ஏற்றுமதிப் போட்டித்தன்மையைப் பலவீனப்படுத்தி, வெளிநாட்டு கொள்வனவாளர்களை வேறு நாடுகளுக்குத் திருப்பிவிடும் என்று வாதிட்டார்.

குறைந்த ஊதியங்களும் பிரதான மேற்கத்திய சந்தைகளுக்கு வரியின்றி அணுகுவதற்கான வாய்ப்பும் பங்களாதேஷின் ஆடைத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தன. இந்தத் தொழில்துறை நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கிறது. இத்துறையில் சுமார் 4 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். H&M, Zara நிறுவனத்தின் உரிமையாளரான Inditex மற்றும் Walmart உட்பட உலகின் பிரதான வர்த்தக நாமங்களுக்கு இது ஆடைகளை விநியோகிக்கிறது. ஏற்றுமதி ஆணைகள் உச்சத்தை அடையும் பருவத்தில், தொழிலாளர்களின் அமைதியின்மை உற்பத்தி அட்டவணைகளைச் சீர்குலைத்துவிடும் என்று அரசாங்கமும் முதலாளிகளும் அஞ்சுகின்றனர்.

வேலைவாய்ப்பு நெருக்கடி நிலைமைகளை மேலும் மோசமாக்கி வருகிறது. பிரான்ஸைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான JusticeMakers Bangladesh, 2026 ஜூலை 15 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 80 ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 20,783 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 2024 ஆகஸ்ட் முதல் 2026 ஜூன் வரையான காலப்பகுதியில், 457 ஆடை மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

முன்மொழியப்பட்டுள்ள 4.5 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனுக்காக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளான பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் எரிபொருள் வரிகளை அதிகரித்தல், வரி விலக்குகளைக் குறைத்தல் மற்றும் எரிசக்தி மானியங்களைக் குறைத்தலும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீதான சுமையை மேலும் அதிகரிக்கும்.

தொழிலாளர்களின் புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவம், அரசாங்கம் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்கள், கண்ணியமான ஊதியங்கள் மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புக்கான போராட்டத்தை ஆசிரியர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும்.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முதல் இந்தியா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா வரையில் சர்வதேச ரீதியில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் போராட்டங்களுக்குள் தள்ளிவரும் அதே உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியையே பங்களாதேஷ் தொழிலாளர்களும் எதிர்கொள்கின்றனர். சுரண்டலைத் தீவிரப்படுத்தி உலகை காட்டுமிராண்டித்தனத்திற்குள் தள்ளிக்கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதன் மூலம் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் ஐக்கியப்படவேண்டும்.

Loading