இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் அதன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தின் முதல் இரண்டு ஆண்டுகளின் படிப்பினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, நவம்பர் 10 அன்று கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் அநேகர் பங்குபற்றி ஒரு பகிரங்கக் கூட்டத்தை நடத்தின. சுமார் 100 கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் முகநூல் வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதற்கு முந்தைய மாதத்தில், சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள், வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்கக் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பைப் பற்றியும் கலந்துரையாடினர்.
சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பாணி விஜேசிறிவர்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வருவதற்குக் காரணமான அரசியல் சூழ்நிலைகளை அவர் ஆராய்ந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவியிலிருந்து வெளியேற்றிய 2022 வெகுஜன எழுச்சியை பாராளுமன்ற பாதைக்குள் திசைதிருப்பியதன் மூலம், அந்த இயக்கத்தை தொழிற்சங்கங்களும், முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடதுசாரி அமைப்புகளும் எவ்வாறு காட்டிக்கொடுத்தன என்பதை அவர் விளக்கினார். அதைத் தொடர்ந்து, ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் மற்றும் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுடன், 2024 தேர்தல்களில் ஜே.வி.பி./தே.ம.ச. வெற்றிபெற்றது.
சோ.ச.க. பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர பிரதான உரையை நிகழ்த்தினார். இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதுடன், உழைக்கும் மக்களுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் அதன் கூட்டாளிகளுடனும் அணிசேர்ந்து செயல்படும் ஒரு அரசாங்கமாகவே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இருக்கும் என்று சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) விடுத்த எச்சரிக்கைகளை அவர் நினைவூட்டினார்.
சாதாரண மக்கள் எதிர்கொண்டுவரும் பாரிய பொருளாதாரச் சுமைகளைக் குறைப்பது தொடர்பாக தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிர்மாறான நடவடிக்கைகளையே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பதை ஜயசேகர விளக்கினார்.
“இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி மூலதனம், இலங்கை ஆளும் உயரடுக்கு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் கோரிக்கைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது முதலாளித்துவ அரச இயந்திரத்தைப் பலப்படுத்தியுள்ளதுடன், தான் முன்னெடுத்துச் செல்லும் கொடூரமான சிக்கனத் திட்டத்திற்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, பொலிஸ் அரச ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது” என்று ஜயசேகர கூறினார்.
சிக்கன நடவடிக்கைகள், விலைவாசிகளின் கடுமையான உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளாலும் தூண்டப்பட்ட 2022 வெகுஜன எழுச்சியை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஜே.வி.பி./தே.ம.ச. ஆகியவை, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடது அமைப்புகளின் உதவியுடன் எவ்வாறு தடம்புரளச் செய்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அமைப்புகள் பாராளுமன்றத் தீர்வை ஊக்குவித்து, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை அமுலாக்குவதில் பேர் போனவரான ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும், அதைத் தொடர்ந்து ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வருவதற்கும் வழிவகுத்தன.
2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது, திசாநாயகவும் ஏனைய ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்களும் வாயின் இரண்டு பக்கம் இரண்டு விதமாகப் பேசினர். பொதுக் கூட்டங்களில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன உடன்படிக்கையை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட ஒடுக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்த அதேவேளை, பெரு வர்த்தக நிறுவனங்களிடம் “சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் எழுத்துக்கு எழுத்து நடைமுறைப்படுத்தப்படும்” என்றும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் அவர்களது நலன்களுக்கு முழுமையாகச் சேவையாற்றும் என்றும் உறுதியளித்தனர் என ஜயசேகர கூறினார்.
அரசாங்கப் பதவிக்கு வந்த பின்னர், ஜே.வி.பி./தே.ம.ச. உழைக்கும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் கைவிட்டது. அரசாங்கத்தின் இரண்டு வரவு-செலவுத் திட்டங்களிலும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்புகள், 2022 முதல் உண்மை ஊதியங்களில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியை ஈடுசெய்யத் தவறிவிட்டன. விக்கிரமசிங்க அரசாங்கத்தால் உழைக்கும் மக்கள் மீது விதிக்கப்பட்ட வரிகள் தொடர்ந்து அப்படியே நடைமுறையில் உள்ளன.
“அரசாங்கத்தின் பொருளாதார ‘மீட்சி’ என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். இது முதலாளித்துவ வர்க்கம், உலகளாவிய கடன் வழங்குநர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான மீட்சியாகும். தொழிலாளர்களும் ஏழைகளும் உண்மை ஊதியங்களின் வீழ்ச்சி, விலைவாசி அதிகரிப்பு, அதிகரித்த வரிகள் மற்றும் ஆழமடைந்து வரும் வறுமையையும் எதிர்கொள்கின்றனர்” என்று ஜயசேகர விளக்கினார்.
400 க்கும் மேற்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கும் மறுசீரமைப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள கோரிக்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் இலட்சக் கணக்கான அரச தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. “தேவையற்ற செலவினங்களைக்” குறைப்பது என்ற சாக்குப்போக்கில், 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கான திட்டங்களை அரசாங்கம் அண்மையில் அறிவித்த அதேவேளை, பொதுக் கட்டமைப்புகளையும் சேவைகளையும் தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சோசலிச சமத்துவக் கட்சியானது தனியார்மயமாக்கலை எதிர்ப்பதுடன், தனியார் இலாபத்திற்குப் பதிலாக சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது. “சோசலிச வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே இதனைச் செய்ய முடியும். சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடுகின்றன” என்று பேச்சாளர் விளக்கினார்.
வேலையின்மை, நிச்சயமற்ற தொழில், அதிகரித்து வரும் கல்விச் செலவுகள், சீரழிந்து வரும் பல்கலைக்கழக வசதிகள், ஆபத்தான வேலைகள் மற்றும் வறிய ஊதியங்கள் உட்பட இளைஞர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை ஜயசேகர சுட்டிக்காட்டினார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு, ஏனைய அடிப்படைத் தேவைகள் ஆகியவை சமூக உரிமைகளாகும் என்றும், அவை பெருநிறுவன இலாபங்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கும் அடிபணியச் செய்யப்படும் பண்டங்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒடுக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த போதிலும், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் ஏனைய கொடூரமான சட்டங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA), ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் (POCB) ஆகிய மேலும் இரண்டு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது. இவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கிட்டத்தட்ட அனைத்து கொடூரமான விதிகளையும் தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், சில விடயங்களில் அவற்றையும் தாண்டிச் செல்கின்றன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பைக் குற்றமாக்குவதற்கும், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய தொழிலாள வர்க்க நடவடிக்கைகளை அச்சுறுத்துவதும், அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்குவதுமே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்று ஜயசேகர எச்சரித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்குவதில், ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் உட்பட தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வகிக்கும் பாத்திரத்தை பேச்சாளர் அம்பலப்படுத்தினார். 2025 ஆரம்பத்தில், சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளில் செய்யப்பட்ட வெட்டுக்களுக்கு எதிரான எதிர்ப்பை சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்துடன் மட்டுப்படுத்தியதையும், அரசாங்கம் இராணுவத்தையும் பொலிஸையும் களமிறக்கிய நிலையில், தபால் ஊழியர்களின் ஒரு வாரகால வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் முடிவுக்குக் கொண்டுவந்ததையும் அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார். “முதலாளித்துவ அரசையும், ஆளும் வர்க்கக் கட்சிகளையும், சர்வதேச நாணய நிதியத்தையும் பாதுகாப்பதற்கு முழுமையாக கடமைப்பட்டுள்ள” தொழிற்சங்கக் கட்டமைப்பை தொழிலாளர்கள் நம்பியிருக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள், ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக அதே சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தைப் பாதுகாக்கின்றன என்று ஜயசேகர எச்சரித்தார். ஜே.வி.பி./தே.ம.ச.யை அரசியல் ரீதியாகப் பாதுகாப்பதில் முன்னிலை சோசலிசக் கட்சி வகிக்கும் பாத்திரத்தையும் அவர் அம்பலப்படுத்தினார். ஆரம்பத்தில், ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்ததை “மக்களின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடு” என்று முன்னிலை சோசலிசக் கட்சி வரவேற்றது. பின்னர், விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தை விமர்சித்தது. எனினும், பாரம்பரியக் கட்சிகளுக்கு ஒரு “முற்போக்கான மாற்றீடாக” ஜே.வி.பி./தே.ம.ச. இருப்பதாகவும், அதன் “அரசியல் வழியைத் திருத்திக்கொள்ள” அதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தொடர்ந்து வாதிடுகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் புதிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக முன்னிலை சோசலிசக் கட்சி முன்வைக்கும் விமர்சனத்தின் மோசடியான தன்மையை அம்பலப்படுத்திய ஜயசேகர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களான அத்தியாவசிய சேவைகள் கட்டளைகள், அவசரகால ஒழுங்குவிதிகள் மற்றும் ஏனைய ஒடுக்குமுறைச் சட்டங்கள், “பயங்கரவாதம்” மற்றும் “குற்றங்களை” ஒடுக்குவதற்குப் போதுமானவை என்று முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர்கள் வாதிட்டதைச் சுட்டிக்காட்டினார். “தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக தற்போதுள்ள அரச இயந்திரத்தை முன்னிலை சோசலிசக் கட்சி பாதுகாப்பதை இது அம்பலப்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.
தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் போலி இடது அமைப்புகளையும் நிராகரித்து, வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரையும் முதலாளித்துவக் கட்சிகளையும் ஓரங்கட்டி விட்டு, தங்களது சொந்த சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று ஜயசேகர அழைப்பு விடுத்தார். கிராமப்புற ஏழைகளும் விவசாயிகளும் சுயாதீனமான குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். இந்தக் குழுக்களின் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, தேவையான சோசலிச வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது.
இலங்கையிலுள்ள தொழிலாளர்கள் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அதே நிலைமைகளையே எதிர்கொள்கின்றனர் என்றும், “ஏகாதிபத்தியப் போர், சிக்கனக் கொள்கைகள், சர்வாதிகாரத் திட்டங்கள் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுவரும் ஏனைய நாடுகளின் தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணி (IWA-RFC) ஊடாக, தொழிலாளர்கள் தமது போராட்டங்களை சர்வதேச வர்க்கச் சகோதர சகோதரிகளின் போராட்டங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். தொழிலாளர்கள் இன, மத மற்றும் ஏனைய பிரிவினைகளையும் தேசிய எல்லைகளையும் கடந்து அணிதிரள வேண்டும். இலங்கையில் உள்ள சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அதன் சகோதரக் கட்சிகள் இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடி வருகின்றன.”
“இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதிலும், இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்குத் தேவையான வெகுஜனத் தொழிலாள வர்க்க சோசலிசக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புவதிலும் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் அழைப்பு விடுக்கின்றன” என்று கூறி அவர் தனது உரையை முடித்துக்கொண்டார்.
ஜயசேகரவின் உரையைத் தொடர்ந்து, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்துகொள்வதற்கான சர்வதேசப் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்து, சோசலிச சமத்துவக் கட்சியின் நான்காவது தேசியப் பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விஜேசிறிவர்தன முன்வைத்தார். போக்டனை விடுதலை செய்வதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்து வரும் சர்வதேசப் பிரச்சாரம் குறித்து ஜயசேகர உரையாற்றியதுடன், அதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், பங்கேற்பாளர்கள் அதன் மார்க்சிச ஆய்வைப் பாராட்டியதுடன், சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை இன்னும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
