சீனாவில் புட்டினையும் ஷி ஜின்பிங்கையும் ட்ரம்ப் சந்திக்கும் வேளையில், ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் பேர்லின் உச்சிமாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துவதற்கு சதியில் ஈடுபடுகின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (வலது), சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (நடுவில்), ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் 2026 நவம்பர் 19 வியாழக்கிழமை சீனாவின் ஷென்ஷென் நகரில் உள்ள கிலின் வில்லாவில் நடைபெறும் முத்தரப்புக் கூட்டத்திற்காக வருகை தருகின்றனர். [AP Photo/Win McNamee]

கடந்த வியாழக்கிழமை ஷி ஜின்பிங், விளாடிமிர் புட்டின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து, சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால் வெளியிடப்பட்ட, பகட்டான தலைப்புக் கொண்ட “அமைதியை நோக்கிய பிரகடனமானது” உண்மையில் அப்படி எதனையும் கொண்டிருக்கவில்லை.

ரஷ்யா மீதான போரை இன்னும் பல ஆண்டுகளுக்குப் பாரிய அளவில் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, ஜேர்மன் அரசாங்கம் 30க்கும் மேற்பட்ட அரசாங்கத் தலைவர்களை பேர்லினில் ஒன்றுகூட்டிய அதே நாளில் நடைபெற்ற ஷென்ஷென் முத்தரப்புச் சந்திப்பு, உலகின் மூலப்பொருட்கள், சந்தைகள், உழைப்பு ஆகியவற்றின் மீதான மேலாதிக்கத்திற்காக மூன்றாம் உலகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பகைமைகள் கூர்மையடைந்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன.

35 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் இடைவிடாத போர்களை நடத்திவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைவர், பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அழித்தொழிப்புப் போரைத் தொடங்கி ஒன்பது மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். ஈரான் மீதான போர் தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் ஈரானின் அரச தலைவர் கொமேனியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்று ஒழித்ததற்கும், அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றொழித்ததற்கும் ட்ரம்ப் பொறுப்பாளியாவார். தன்னை ஒரு “அமைதிவாதி” என்று காட்டிக்கொள்ளும் அவர், 2027-ஆம் ஆண்டிற்காக 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தைக் கோரியுள்ளார். இது முந்தைய ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாகும்.

ஐரோப்பிய சக்திகளாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் நிதியளிக்கப்பட்டு வழங்கப்பட்ட உக்ரேனிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் ரஷ்ய நகரங்கள் மீது மழையெனப் பொழிந்துகொண்டிருந்த வேளையில், ட்ரம்ப் புட்டினைச் சந்தித்து அவரைத் தனது “நண்பர்” என்று அழைத்தார். பால்டிக் நாடுகள், போலந்து மற்றும் பின்லாந்து ஆகிய பகுதிகளில் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் நேட்டோவின் படைகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியை நேட்டோ முற்றுகையிட்டால், அதற்குப் பதிலடியாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று மாஸ்கோ செப்டம்பர் மாதம் எச்சரித்திருந்தது.

வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே புகைந்துகொண்டிருக்கும் பொருளாதார மோதல்களுக்கு மத்தியில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, ஷி ஜின்பிங்குடனான தனது “மிகவும் சிறப்பான உறவை” அமெரிக்க ஜனாதிபதி புகழ்ந்துரைத்தார். ஜனவரி மாதத்தில் சுங்க வரிகள் மீதான தற்காலிக நிவாரணம் காலாவதியாகும் போது இந்த மோதல்கள் மீண்டும் வெடிக்கக்கூடும். ட்ரம்பின் சொந்த நிர்வாகத்தில் உள்ள ஒரு பிரிவு உட்பட, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள், சீனாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கவும், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பாதுகாக்கவும், அதற்கு எதிராக மேலும் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளையும், இறுதியில் அதனுடன் ஒரு போரையும் கோரி வருகின்றன. இந்த உச்சி மாநாட்டிற்கு முந்தைய நாட்களில், மூன்றாம் நாடுகள் வழியாக சீனாவிற்கு என்விடியா சிப்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை வாஷிங்டன் விதித்தது.

ஜேர்மன் சான்சலர் பிரெட்ரிக் மெர்ஸ், கடந்த வியாழக்கிழமை பிற்பகுதியில் பேர்லினில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து, விருப்பமுள்ளவர்களின் கூட்டணி என்று அழைக்கப்படும் கூட்டத்தை நடத்தினார். கீயேவ்விற்கான தனது நேரடி நிதி மற்றும் இராணுவ ஆதரவை வாஷிங்டன் பெருமளவில் குறைக்கும் என்றும், அமெரிக்க மூலதனத்திற்காக ரஷ்யாவைத் திறக்க அந்நாட்டுடன் இருதரப்பு இணக்கத்தை நாடும் என்றும், ஐரோப்பிய சக்திகள் பணம் செலுத்தும் அளவிற்கு மட்டுமே உக்ரேனுக்கு இராணுவ உபகரணங்களை தொடர்ந்து வழங்கும் என்றும் ட்ரம்ப் தெளிவுபடுத்திய பின்னர், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ட்ரம்ப்பின் தூதர் ஸ்டீவ் விட்காப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, “தேவையான காலம் வரை கியேவுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்,” என்று மெர்ஸ் அறிவித்தார். “ஆனால் இந்தப் போர், தனது பிராந்திய ஒருமைப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு, தன் பக்கம் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கொண்டிருந்து, எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பியப் பாதுகாப்பில் ஒருங்கிணைந்த ஒரு உக்ரேனுடன் முடிவுக்கு வர வேண்டும்” என்றும் அவர் அறிவித்தார். அன்றைய தினத்திற்கு முன்னதாக, பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பியப் பிரதிநிதிகளை மாஸ்கோவிற்கு வருமாறு புட்டின் விடுத்த அழைப்பிற்கு மறுப்பாக, “நடுநிலையான பிரதேசத்தில்” அமெரிக்கா, ரஷ்யா, உக்ரேன் மற்றும் ஐரோப்பாவுடன் நான்கு தரப்புப் பேச்சுவார்த்தைகளை அவர் முன்மொழிந்தார். “உக்ரேனுக்கு நியாயமான, நிலையான அமைதியையே நாங்கள் விரும்புகிறோம்,” என்று மெர்ஸ் மேலும் கூறினார்.

உண்மை நிலை என்னவென்றால், ஐரோப்பா போருக்காகத் தன்னை ஆயுதபாணியாக்கிக்கொண்டிருக்கிறது. ஜேர்மனி தனது இராணுவத்தையும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பையும் நவீனமயமாக்க 1 டிரில்லியன் யூரோவுக்கும் அதிகமாகச் செலவிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது ஒன்றியம் முழுவதும் இராணுவமயமாக்கலுக்காக ஏறத்தாழ 800 பில்லியன் யூரோவை ஒதுக்க உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டு போருக்கு எரியூட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய 90 பில்லியன் யூரோ ஆதரவுத் தொகுப்பைத் தொடர்ந்து, உக்ரேனிய ஆட்சிக்கு 2027 வரை தொடர்ந்து நிதியளிப்பதற்காக 45 பில்லியன் யூரோ கடனை ஐரோப்பிய ஆணையம் இந்த வாரம் முன்மொழிந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் ஐரோப்பியக் கண்டத்தின் மீது ரஷ்யா படையெடுக்கப்போவதாகப் பரபரப்பூட்டும் கூற்றுகளை முன்வைத்து, இராணுவவாதத்திற்கும் போருக்கும் நிதி திரட்டுவதற்காகச் சமூகநலத் திட்டங்களிலும் பொதுச் சேவைகளிலும் எஞ்சியிருப்பவற்றை அழிப்பதை அரசியல் ஸ்தாபனம் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டு உச்சிமாநாடுகளில் பங்கேற்ற ஏகாதிபத்திய சக்திகள், “அமைதி” மற்றும் “இராஜதந்திரம்” குறித்த அனைத்து வார்த்தைஜாலங்களுக்கும் பின்னால், உலகத்தை மீண்டும் வன்முறை வழியில் பிரித்தெடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2023-ஆம் ஆண்டு முதல் காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு இந்தச் சக்திகள் ஒருமித்த ஆதரவை வழங்கி வருவது, தங்கள் பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களை அடைவதற்காக அவை எவ்வளவு காட்டுமிராண்டித்தனமான வழிமுறைகளைக் கையாளுகின்றன என்பதற்குச் சான்றாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (SEP அமெரிக்கா) கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தனது காங்கிரஸில் சுட்டிக்காட்டியபடி, மூன்றாம் உலகப் போர் எதிர்காலத்திற்கான ஒரு முன்கணிப்பு அல்ல. மாறாக, அது புற்றுநோய் போல வேகமாகப் பரவிவருகிறது. “ஒரு நாள்பட்ட மற்றும் விரிவடையும் நிலையாக அது உலகெங்கும் பரவிக்கொண்டு, புதிய பிராந்தியங்களைக் காலனியாக்கிக்கொண்டு, முன்னர் தனித்தனியாக இருந்த மோதல்களை ஒன்றிணைத்துக்கொண்டு, தான் நோக்கிச் செல்லும் பொதுவான பேரழிவுத் தீக்கு அவற்றைத் தயார்படுத்தும் வகையில், உலகப் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தேசிய அரசையும் படிப்படியாக மாற்றிக்கொண்டும் இருக்கிறது,” என்று டேவிட் நோர்த் குறிப்பிட்டார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணு ஆயுதமேந்திய சக்தியான ரஷ்யாவின் மீது மூலோபாயத் தோல்வியைத் திணிப்பதற்கான போரை நடத்துவது, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா தலைமையிலான ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தமது உலகளாவிய இலட்சியங்களைப் பின்தொடர்வதற்கு, உக்ரேன் மற்றும் ரஷ்யாவின் வளமான முக்கியக் கனிம இருப்புகள், எரிசக்தி வளங்கள், மலிவு உழைப்பு ஆகியவற்றை அணுகும் வாய்ப்பும், யூரேசியப் பெருநிலப்பரப்பின் மீதான புவிசார் மூலோபாய மேலாதிக்கமும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ட்ரம்ப் புட்டினுடன் இணக்கத்தை நாடுவது, கொள்ளைப் பொருட்களில் ஐரோப்பிய முதலாளிகளுக்குப் பங்கு இல்லாமல் செய்துவிடும் என்றும், உலகளாவிய சக்தியாக ஆகும் அவர்களின் அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

உக்ரேன் “ஐரோப்பியப் பாதுகாப்புக் கட்டமைப்பில் இணைந்திருக்க” வேண்டும் என்றும், உக்ரேனுக்கான “வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை” ரஷ்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மெர்ஸ் “அமைதி” குறித்துப் பேசும்போது, ​​அவர் உண்மையில் ஜேர்மன் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையே குறிப்பிடுகிறார். 2ம் உலகப் போருக்குப் பிந்தைய சூழலில், ஐரோப்பியப் படைகளின் பாதுகாப்போடு, ஜேர்மன் நிறுவனங்களும் வங்கிகளும் கொழுத்த இலாபங்களை ஈட்டும் ஒரு அமைப்பை உருவாக்குவதையே அவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். பேர்லினில் வெள்ளிக்கிழமையன்று ஒன்பதாவது ஜேர்மன்-உக்ரேனிய பொருளாதார மன்றம் நடைபெறவுள்ளது.

ட்ரம்ப்பின் “அமெரிக்காவுக்கே முதலிடம்” என்ற கொள்கை அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியின் வெளிப்பாடாகும். தனது உலகளாவிய முன்னிலைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ள சீனாவுடனான போருக்குத் தயாராகும் நோக்கில், மேற்கு அரைக்கோளமான அமெரிக்க கண்டத்தின் மீது வாஷிங்டனின் எவராலும் சவால் செய்யப்படாத மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காகவே அவர் கனடாவை இணைத்துக்கொள்வதாக மிரட்டியதுடன், வெனிசுவேலாவின் ஜனாதிபதியைக் கடத்துவதற்காக அந்நாட்டின் மீது படையெடுப்பையும் தொடுத்தார். புட்டினுடன் உடன்பாடு காண்பதை நோக்கிய அவரது நோக்குநிலை, தீவிரமடைந்துவரும் உலகப் போருக்கு மத்தியில், அட்லாண்டிக் கூட்டணியில் இருந்த முன்னாள் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளுக்கு இடையிலான கடுமையாக முரண்படும் நலன்களை வெளிப்படுத்துகிறது.

ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்களுக்குள் நடந்துவரும் கன்னை மோதல்கள், புட்டினையும் ஷியையும் ட்ரம்ப் சந்தித்ததை ஜனநாயகக் கட்சியினர் கண்டிப்பது உட்பட, எவ்வாறு முடிவடைந்தாலும், ஆழமடைந்துவரும் முதலாளித்துவ நெருக்கடியின் தர்க்கம், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான, பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் மேலும் தீவிரமடைவதையே சுட்டிக்காட்டுகிறது.

மீள் ஆயுதமயமாக்கலுக்கும், போருக்கும் நிதி திரட்டுவதற்காக, ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள அரசாங்கங்கள் பொதுச் செலவினத்தை வெட்டித்தள்ளி, தொழிலாளர்களின் ஜனநாயக, சமூக உரிமைகளைத் தகர்த்து வருகின்றன. சமீபத்திய வாரங்களில் ஐரோப்பா முழுவதும் போராட்டங்களில் இணைந்த, பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட நூறாயிரக்கணக்கான மக்களும், பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், அக்டோபர் 30 அன்று நடைபெற்ற சர்வதேசத் துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் ஆழத்தையும், போரைப் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்திவரும் ஆட்சிகளுக்கு வெகுஜன ஆதரவு இல்லை என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும், ஏகாதிபத்திய அரசாங்கங்களின் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மையும், சமூகப் பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்ப, பலமுறை சோதித்துப் பார்க்கப்பட்ட போர் என்ற வழிமுறை உட்பட, அவநம்பிக்கையான நடவடிக்கைகளை அவை நாடுவதற்கான சாத்தியத்தை அதிகமாக்குகின்றன.

இந்த நிலைமைகளின் கீழ், தமது ஆட்சிகள் பிரதிநிதித்துவம் செய்யும் முதலாளித்துவத் தன்னலக்குழுக்கள் ஏகாதிபத்தியத்துடன் ஏதேனும் ஒரு வகையான அமைதியான சமரசத்தை எட்ட முடியும் என்ற ஷி ஜிங்பிங், புட்டின் ஆகியோரின் நம்பிக்கை அபத்தமானது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலினிசக் கலைப்பு முதலே, ரஷ்யாவை அரைக் காலனித்துவ நிலைக்கு அடிபணியச் செய்வதற்காக அதைத் துண்டாடுவதில் வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய சகாக்களும் உறுதியுடன் இருந்து வருகின்றனர். சீனாவால் பொருளாதார ரீதியாகப் பின்னுக்குத் தள்ளப்படுவதை விட, போரையே வாஷிங்டன் விரும்புகிறது. கடந்த மூன்றரை தசாப்தங்களாக, தனது கடுமையான பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்வதற்காக, எஞ்சியிருக்கும் தனது இராணுவ மேலான்மையைப் பயன்படுத்தும் ஒரு தோல்வியுற்ற முயற்சியில் வாஷிங்டன் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் பெய்ஜிங்கிற்கு எதிராக பெருகிய முறையில் ஆக்ரோஷமான வர்த்தக நடவடிக்கைகளை விதித்து, இந்தோ-பசிபிக் முழுவதும் QUAD மற்றும் AUKUS போன்ற பிராந்தியக் கூட்டணிகளையும் கட்டியெழுப்பியுள்ளன.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, “உலகளாவிய சவால்களுக்கு ஐ.நா. இன்னும் திறம்பட பதிலளிக்கும் வகையிலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற அதன் அடிப்படை நோக்கத்திற்கு ஏற்பச் செயல்படும் வகையிலும் ஐ.நா.வைச் சீர்திருத்தத் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்பதில் ஜி ஜின்பிங் மற்றும் புட்டின் ஆகிய இருவரும் ட்ரம்ப்புடன் உடன்பட்டனர். இந்தச் சந்திப்பு “இராஜதந்திர வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை” எழுதியுள்ளதாக புட்டின் வலியுறுத்தினார். அதேவேளையில், “உலக அமைதியைப் பாதுகாப்பதில் இந்த மூன்று நாடுகளும் பொதுவான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கின்றன” என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.

கடந்த 35 ஆண்டுகால அனுபவத்தைக் கருத்தில் கொண்டால் —20-ஆம் நூற்றாண்டின் இரு உலகப் போர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை—, இத்தகைய கருத்துகள் வெறும் மாயைகளாகும். சீனா மற்றும் ரஷ்யாவில் உள்ள முதலாளித்துவ வர்க்கம், வலிமையான புரட்சிகர மரபுகளைக் கொண்ட தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமின்றிச் சுரண்டுவதன் மூலம் சமூக வெடிமருந்து கிடங்கின் மீது அமர்ந்திருக்கிறது. இத்தகைய சூழலில், ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாகச் செயல்படக்கூடிய எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான மாற்றையும் முன்வைக்கும் திறன் அவர்களுக்கு இல்லை.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், போரில் ஈடுபட்ட அனைத்து முக்கிய நாடுகளும் ஏதோ ஒரு வடிவத்தில் வாக்குறுதியளித்த “அமைதிக்கான வேலைத்திட்டம்” குறித்த ட்ரொட்ஸ்கியின் கண்டனம், இன்றும் சற்றும் வலிமை குறையாமல் பொருந்துகிறது. 1940 மே மாதம் வெளியிடப்பட்ட “ஏகாதிபத்தியப் போரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் குறித்த நான்காம் அகிலத்தின் அறிக்கை”யில் அவர் பின்வருமாறு எழுதினார்:

கடந்த தசாப்தங்களின் அனுபவத்தால் முற்றிலும் மதிப்பிழந்தபோன ஒரு மீட்புக்கான வேலைத்திட்டத்திற்கு உயிர்கொடுக்க, விதியின் ஏகாதிபத்திய எஜமானர்கள் வீணாக முயற்சிக்கிறார்கள். நீண்ட காலத்திற்கு முன்பே தங்களின் சொந்தக் கேலிச்சித்திரமாக மாறிப்போன அமைதிவாதச் சர்வ மருந்துகளை, அவர்களின் குட்டி முதலாளித்துவ அடிவருடிகள் வீணாகச் சூடுபடுத்துகிறார்கள். இதற்கு முன்னேற்றமடைந்த தொழிலாளர்கள் ஏமாற மாட்டார்கள். தற்போது போரை நடத்திக்கொண்டிருக்கும் அந்தச் சக்திகளால் அமைதி ஏற்படுத்தப்படாது. தொழிலாளர்களும் படையினர்களும் தமது அமைதிக்கான வேலைத்திட்டத்தைத் தாமே வகுத்து ஆணையிடுவார்கள்!

Loading