இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுரகுமார திசாநாயக, நவம்பர் 12 அன்று தனது அரசாங்கத்தின் மூன்றாவது சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டத்தை (பாதீடு) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்து, பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கடுமையான வெட்டுக்கள் மற்றும் வணிகச் சார்பு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உள்ளடங்கிய நிபந்தனைகளை மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றும் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தனது வரவு-செலவுத் திட்ட உரையில், திசாநாயக, இலங்கை கடந்தகால சவால்களை வெற்றிகொண்டு “பொருளாதார ஸ்திரத்தன்மையை” அடைந்துள்ளதாக அறிவித்தார். அரசாங்கத்தின் அடுத்த இலக்கு, 2027 ஆம் ஆண்டில் “எதிர்காலத்தை நோக்கியதும் மாற்றத்திற்கானதுமான ஒரு சகாப்தத்தைத் தொடங்குவதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.
“ஸ்திரத்தன்மை” என்று கூறப்படுவது, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் கொடூரமான சிக்கன வேலைத்திட்டத்தின் கீழ், மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வறுமைக்குள் தள்ளியதன் மூலமே அடையப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முந்தைய நாளில், அரசாங்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அஸ்வெசும சமூக நலத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளில் வெட்டுக்களை அறிவித்தது. இந்த வெட்டுக்கள் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் ஏழை மக்களைப் பாதிக்கும்.
திட்டமிடப்பட்டுள்ள 4.85 டிரில்லியன் ரூபாய் (15.5 பில்லியன் டொலர்) பெறுமதியான அசல் மற்றும் வட்டிக் கடன் மீள்செலுத்தல்கள், அரசாங்கம் எதிர்பார்க்கும் 6.23 டிரில்லியன் ரூபாய் வருவாயில் கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பங்கை விழுங்கிக்கொள்ளும். வட்டிக் கொடுப்பனவுகள் மாத்திரம் அரசாங்கத்தின் மொத்த வருவாயில் சுமார் 43 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும். கடன் சுமை பொதுநிதி நிலைமையை எந்தளவுக்குத் தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த நிலைமை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆண்டுதோறும் 220,000 ரூபாய்க்கும் (661 டொலர்) அதிகமான கடன் சேவைச் சுமையை திணிக்கின்றது.
இலங்கை வர்த்தக சம்மேளனமும் கூட்டு ஆடைச் சங்கங்களின் சங்கமும் தமது முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதற்காக இந்த பாதீட்டைப் பாராட்டின. அரசாங்கம், 2 டிரில்லியன் ரூபாய் மூலதனச் செலவினங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளதுடன், 3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீட்டை மேற்கொள்ளும் ஏற்றுமதி உற்பத்தி நிறுவனம் மற்றும் சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு வரிச் சலுகையும் வழங்கியுள்ளது. இதன்படி, அந்த நிறுவனங்கள் தமது மூலதனச் செலவினங்களின் இருமடங்கு தொகையை வரிக்குட்பட்ட வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. மேலும், தரவு மையங்களை அமைப்பதற்குத் தனியார் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் மின்சாரக் கட்டணச் சலுகைகளையும் ஏனைய ஊக்குவிப்புச் சலுகைகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
திசாநாயக, பெருவணிக நிறுவனங்களின் தேவைகளுக்குச் சேவை செய்யும் வகையில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல, 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச-தனியார் கூட்டாண்மை சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை அறிவித்தார். அரசாங்கம் ஏற்கனவே 34 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மூடுவதற்கான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது.
திசாநாயக, 2022 ஆம் ஆண்டில் 774 பில்லியன் ரூபாய் ஒட்டுமொத்த நட்டத்தைச் சந்தித்த 52 பிதான அரச நிறுவனங்கள், 2025 ஆம் ஆண்டில் 444 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளமையை ஓர் “சாதனையாக” எடுத்துரைத்தார். வேலைவாய்ப்புகளையும் உண்மையான ஊதியங்களையும் குறைத்து, தொழிலாளர்களின் வேலைப்பளுவை அதிகரித்த அதேவேளை, பொதுச் சேவைகளுக்கான செலவுச் சுமையை அதிக கட்டணங்கள் மூலம் மக்கள் மீதே சுமத்தியுள்ள, சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளே இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
அரசாங்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதம் முதன்மை உபரியை உருவாக்குதல், பாதீட்டுப் பற்றாக்குறையை 5 சதவீதமாக குறைத்தல், அனைத்து வயது வந்தவர்களும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) கட்டாயமாகப் பெறவைப்பது உட்பட பரந்த வரிவிதிப்பு மற்றும் கடுமையான வரி வசூல் மூலம் அரசாங்க வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதமாக உயர்த்துதல் ஆகிய, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள சிக்கன இலக்குகளுக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.
2027 மார்ச் மாதத்தில் தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முடிவடையவுள்ள நிலையில், திசாநாயக்க தனது வலதுசாரி, பெருநிறுவனச் சார்பு மறுசீரமைப்புக் கொள்கைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் நோக்கில், மேலும் ஓர் சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இணைவது குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மின்சாரம் மற்றும் எரிபொருள் மீதான செலவீன மீட்புக் கொள்கை, சர்வதேச எரிசக்தி விலையேற்றத்தின் சுமையைத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மீது சுமத்துவதுடன், போக்குவரத்து, உணவு விநியோகம், விவசாயம், மீன்பிடி மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான செலவுகளையும் அதிகரிக்கின்றது. திசாநாயக, மத்திய கிழக்குப் போரின் “மிகவும் பாதகமான தாக்கம்” குறித்தும், உருவாகிவரும் எல் நினோ காலநிலை நிலைமைகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்தும் எச்சரித்துள்ளார்.
தற்போதைய 8.3 சதவீத பணவீக்க வீதமானது, உணவுப் பொருட்களின் விலைகள் ஏறத்தாழ 100 சதவீதம் அதிகரித்த, நாடு தழுவிய வெகுஜன எழுச்சிக்கு வழிவகுத்த 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின்போது ஏற்பட்ட பாரிய விலை உயர்வுகளுக்கு மேலதிகமாக ஏற்பட்டுள்ளது. பின்னர் பணவீக்க வீதம் குறைந்தபோதிலும், விலைகள் அவற்றின் முந்தைய நிலைகளுக்குத் திரும்பவில்லை.
தொடர்ந்து சரிந்துவரும் கொள்வனவுச் சக்தியை ஈடுசெய்வதற்காக அரச ஊழியர்களுக்கு கணிசமான பொதுவான ஊதிய உயர்வு எதனையும் பாதீடு வழங்கவில்லை. 2025 ஆம் ஆண்டு பாதீட்டில் அறிவிக்கப்பட்ட மாதாந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தின் 15,750 ரூபாய் (47 டொலர்) அதிகரிப்புக்கு 330 பில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாகவும், அதன் இறுதிக்கட்டம் 2027 ஆம் ஆண்டில் மேலும் 110 பில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் திசாநாயக வலியுறுத்தினார். மேலதிக ஊதிய உயர்வுகளை வழங்க மறுப்பதை நியாயப்படுத்துவதற்காக அவர் இந்தப் புள்ளிவிபரங்களை முன்வைத்தார்.
ஜனாதிபதி, ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் நீதித்துறையினர் உட்பட அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட கொடுப்பனவு அதிகரிப்புகளை அறிவித்தார். மேலும், மருத்துவ அதிகாரிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 25,000 ரூபாயால் (75 அமெரிக்க டொலர்) அதிகரிப்பதாகவும், தாதியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் ஏனைய ஊழியர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான கொடுப்பனவு அதிகரிப்புகளை வழங்குவதாகவும் அறிவித்தார். அதேபோன்று, கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய களப்பணியாளர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட பற்றாக்குறையான கொடுப்பனவுகளையும் அறிவித்துள்ளார். சில கொடுப்பனவு அதிகரிப்புகள் 2028 ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்தச் சலுகைகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பொதுவான ஊதியச் சரிசெய்தல் எதனையும் வழங்கவில்லை. இந்த பாதீடு பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தனியார்துறை ஊழியர்களையும் புறக்கணிக்கின்றது.
திசாநாயக, தனது தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து விலகி, பல தசாப்தங்களாகப் போதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படாததால் சீரழிந்துவரும் பொதுச் சேவைகளுக்கு தொழிலாளர்களையே குற்றம் சாட்டினார். வரவு-செலவுத் திட்டத்திலிருந்து அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக ஒதுக்கப்படும் நிதிக்கு நிகரான பொதுச் சேவைகளைப் பிரஜைகள் பெறுகின்றார்களா என்று சிந்தித்துப் பார்க்குமாறு அரச ஊழியர்களுக்கு அவர் சவால் விடுத்தார். இதனை, உண்மையான ஊதியத்தில் மேலும் பல வெட்டு நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதற்கான எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.
2027 ஆம் ஆண்டுக்கான பாதீடு, புதிய கல்வித் திட்டங்களுக்காக வெறும் 8.6 பில்லியன் ரூபாயையும், புதிய சுகாதார முன்மொழிவுகளுக்காக 24.75 பில்லியன் ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்புகள், ஒதுக்கப்பட்ட நிதி உண்மையில் செலவிடப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. நிதி அமைச்சின் தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் செப்டம்பர் மாதம் வரையில் வெறும் 28 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது.
திசாநாயக, தேசிய இறையாண்மையையும் செழிப்பான இலங்கையையும் முன்னிறுத்தி, பாதீட்டின் நோக்கம் “இலங்கையர் என்ற அடையாளத்தை அறிவுத்திறன், நற்பண்பு மற்றும் சிறப்பின் அடையாளமாக மாற்றுவதாகும்” என்று அறிவித்தார். உண்மையில், கண்ணியமான ஊதியங்களையும் மேம்பட்ட சமூக நிலைமைகளையும் வழங்குவதற்குப் போதிய நிதி வசதி இல்லை என்று தொழிலாளர்களிடம் கூறுகின்ற அதேவேளை, அரசாங்கம் முழுப் பொருளாதாரத்தையும் சர்வதேசக் கடன் வழங்குநர்கள் மற்றும் பெருவணிக நிறுவனங்களின் தேவைகளுக்குக் கீழ்ப்படுத்தி வருகின்றது.
சமீபத்திய ஆண்டுகளில் சமூக சமத்துவமின்மை பெருமளவில் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், குடும்பங்களின் உண்மையான இடைநிலை வருமானம் 11.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, செல்வந்தர்களில் முதல் 20 சதவீதத்தினரின் செல்வம் 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய இலாப அறிவிப்புகள் இந்தப் போக்கு தொடர்ந்து நீடிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கொமர்ஷல் வங்கி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 35 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத அதிகரிப்பாகும். இலங்கையின் மிகப்பெரிய பல்துறை நிறுவனங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 5.17 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 213 சதவீத அதிகரிப்பாகும்.
போலி இடதுக் கட்சியான முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (FSP) கூறுவதுபோல், இந்தப் பிரச்சினை வெறுமனே ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை மீறியதன் அல்லது தவறான கொள்கைகளைப் பின்பற்றுவதன் விளைவு அல்ல. இந்தக் கொள்கைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலிருந்து அரசாங்கத்திற்குத் தோன்றுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விளக்கியுள்ளபடி, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை எழுத்துக்கு எழுத்து நடைமுறைப்படுத்துவதாக அளித்த உத்தரவாதங்களின் அடிப்படையிலேயே, ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஆதரவுடன் இலங்கை முதலாளித்துவ வர்க்கம் ஜே.வி.பி./தே.ம.ச.யை ஆட்சிக்குக் கொண்டுவந்தது.
ஆழமான பொருளாதார வீழ்ச்சியால் உந்தப்பட்ட 2022 ஆம் ஆண்டின் வெகுஜன எழுச்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்தித்தது. அதனைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் 2023 மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நான்கு ஆண்டுகளுக்கான 2.9 பில்லியன் டொலர் கடன் வசதியைப் பெற்றுக்கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதாக உறுதியளித்தது. 2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பரவலாக நிலவிய எதிர்ப்பை ஜே.வி.பி./தே.ம.ச. சுரண்டிக்கொண்டதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதாகவும், ஏழைகள் மீதான சுமையைக் குறைப்பதாகவும் வாக்குறுதியளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக அந்த வாக்குறுதியை உடனடியாகக் கைவிட்டு, விக்கிரமசிங்கவின் சிக்கனக் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து மேலும் தீவிரப்படுத்தினார்.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒடுக்க முயற்சித்து வருகின்ற போதிலும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தாங்க முடியாத வாழ்க்கை நிலைமைகள், அவர்களைப் போராட்டங்களில் இறங்குவதற்குத் தள்ளுகின்றன. 2027 ஆம் ஆண்டு பாதீடு அறிவிக்கப்பட்ட உடனேயே, தொழிலாளர்களும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்திற்கு எதிரான வீதிப் போராட்டங்களில் இணைந்துகொண்டனர்.
சோசலிச சமத்துவக் கட்சி, ஒவ்வொரு வேலைத்தளம், தொழிற்சாலை, பெருந்தோட்டம் மற்றும் குடியிருப்புப் பகுதியிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் சகல முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இந்தக் குழுக்கள், சிக்கன நடவடிக்கைகள், தனியார்மயமாக்கல், ஊதிய ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும். தொழிலாளர்களும் கிராமப்புற ஏழைகளும் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தெற்காசியா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன் தமது போராட்டங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.
