Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்படுதல்

48. ஒவ்வொரு தோல்வியுடனும் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சி பற்றிய நம்பிக்கை குறைந்துகொண்டு சென்றது. அதன்விளைவாய் அதிகாரத்துவத்தின் பழமைவாதம் வலுப் பெற்றதுடன் தொழிலாள வர்க்கத்திடம் அது கொண்டிருந்த விரோதப் போக்கும் அதிகரித்தது. சோவியத் ஒன்றியத்தில் அதிகாரம் பெருகிய முறையில் ஸ்ராலின் தலைமையில் இருந்த அதிகாரத்துவத் தன்னலக் குழுவின் கரங்களில் ஒன்றுதிரண்டது. 1926ம் ஆண்டு இடது எதிர்ப்பு குறுகிய காலத்திற்கு காமனேவ் மற்றும் சினோவியேவ் உடன் இணைந்து ஐக்கிய எதிர்ப்பு என்பதை அமைத்தது. ஜூலை-அக்டோபர் 1926ல் காமனேவும், ட்ரொட்ஸ்கியும் அரசியற்குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்; நவம்பர் 1927ல் ட்ரொட்ஸ்கியும் சினோவியேவும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். டிசம்பர் மாதம் இடது எதிர்ப்பின் அனைத்து ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். சினோவியேவ் மற்றும் காமனேவ் பின்னர் ஸ்ராலினுக்கு அடிபணிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்; ஆனால் ட்ரொட்ஸ்கி ஜனவரி 1928ல் அல்மா அட்டாவிற்கு நாடுகடத்தப்பட்டு பின்னர் 1929 பெப்ருவரியில் சோவியத் யூனியனில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

49. தன்னுடைய இறுதி வெளியேற்றத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஸ்ராலினிச கன்னைக்கும் இடது எதிர்ப்பிற்கும் இடையே இருந்த அனைத்து வேறுபாடுகளும் சோசலிசம் பற்றிய சமரசத்திற்கு இடமில்லாத எதிரெதிர் கருத்துருக்களை அவை கொண்டிருந்ததில் இருந்து வந்தது என்று வலியுறுத்தினார். ரஷ்யாவின் ஆதாரங்களை அடித்தளமாக்கொண்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தேசிய சோசலிச சமூகத்தை கட்டமைப்பது இயலும் என்ற அடிப்படையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் நடந்து கொண்டனர். இடது எதிர்ப்போ தொழிலாளர் அரசின் தலைவிதி மற்றும் சோசலிசத்தில் அதன் முன்னேற்றம் என்பது, உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியுடன் தவிர்க்கமுடியாமல் பிணைந்துள்ளது என்று வலியுறுத்தியது. நிரந்தரப் புரட்சி என்ற தலைப்பில் இரு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த துண்டுப்பிரசுரத்தின் ஜேர்மனியப் பதிப்பின் முன்னுரையில் 1930 ம் ஆண்டு எழுதுகையில், அடிப்படைப் பிரச்சினை பற்றி ட்ரொட்ஸ்கி சுருக்கி எழுதினார்:

மார்க்சிசம் தனது ஆரம்ப புள்ளியை, தேசிய பிரிவுகளின் கூட்டு என்ற விதத்தில் அல்லாமல், சர்வதேச உழைப்புப் பிரிவினை மற்றும் உலகச் சந்தையில் இருந்து தோன்றுகிற, பலமான மற்றும் சுயாதீனமான யதார்த்தம் என்றவகையில் உலகப் பொருளாதாரத்தில் இருந்து எடுக்கிறது. எமது தசாப்தத்தில் இதுதான் அதிகாரத்துடன் தேசிய சந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சக்திகள் நீண்ட காலத்திற்கு முன்னரே தேசிய எல்லைகளைக் கடந்துவிட்டன. 1914-1918 ஏகாதிபத்திய யுத்தம் இந்த உண்மையின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். உற்பத்தியின் தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் சோசலிச சமூகம் முதலாளித்துவ சமுதாயத்தை விட ஒரு கட்டம் உயர்ந்துதான் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து தற்காலிக வெற்றிகளும் ஒருபுறம் இருக்க, தேசிய அளவில் தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச சமூகத்தை கட்டமைக்கும் நோக்கத்தின் அர்த்தம் உற்பத்தி சக்திகளை, முதலாளித்துவ முறையோடு ஒப்பிடும்போது கூட, பின்னோக்கி இழுப்பது என்பதாகும். உலக ஐக்கியத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஒரு நாட்டின் புவியியல், பண்பாட்டு மற்றும் வளர்ச்சியின் வரலாற்று நிலைமைகளைப் பற்றி கருதாமல், தேசிய கட்டமைப்பிற்குள் பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒரு மறைவான ஒப்பிட்டுபார்த்தலுக்கு உட்படுத்துவது என்பது ஒரு பிற்போக்கு கற்பனாவாதத்தை பின்பற்றுவதாகத்தான் அர்த்தப்படுத்தும்.[30]

50. ஸ்ராலினுடைய தேசிய சோசலிச முன்னோக்கு பற்றிய ட்ரொட்ஸ்கியின் விமர்சன அரசியல் தாக்கங்கள் சோவியத் கொள்கைகளின் பிரச்சினைகளுக்கு அப்பால் சென்றன. உலக முன்னோக்கின் மிக அடிப்படையான பிரச்சினைகளும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயப் பணிகளும் ஆபத்திற்கு உட்பட்டுவிட்டன. சோவியத் ரஷ்யாவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த அளவு ஒரு சர்வதேச மூலோபாயம் முக்கியமோ அதே அளவிற்குத்தான் ஒரு முன்னேற்றமடைந்த முதலாளித்துவ நாட்டில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் அது முக்கியம். ட்ரொட்ஸ்கி எழுதினார்:

தேசிய வரம்புகளுக்குள் சோசலிசப் புரட்சி முழுமை அடைவது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது ஆகும். பூர்ஷ்வா சமூகத்தின் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அதனால் தோற்றுவிக்கப்படும் உற்பத்தி சக்திகள் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் சமரசப் படுத்த முடியாதவை என்ற உண்மை ஆகும். இதில் இருந்து ஒரு புறம் ஏகாதிபத்தியப் போர்கள், மறுபுறம் ஒரு முதலாளித்துவ வகை ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் என்று பின்தொடரும். சோசலிச புரட்சி தேசிய அரங்கில் ஆரம்பமாகி, சர்வதேச அரங்கில் விரிவடைந்து, உலக அரங்கில்தான் முடிவுறும். இவ்விதத்தில் சோசலிசப் புரட்சி என்பது சொல்லின் புதிய, பரந்த பொருளில் ஒரு நிரந்தரப் புரட்சியாக இருக்கும்; முழு பூமியிலும் புதிய சமூகத்தின் இறுதி வெற்றியில்தான் அது முழுமையடையும்.[31]


[30]

(London: New Park Publications, 1971), p. 22.

[31]

Ibid, p. 155.