Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

"தனி நாட்டில் சோசலிசம்" என்பதின் விளைவுகள்

44. ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் சோவியத் ஒன்றியத்திற்குள் சரியான பொருளாதாரக் கொள்கை செயற்படுத்தப்படுவதற்காக போராடுகின்ற அதேவேளையில், புரட்சிகர ஆட்சியின் இறுதி விதி சோவியத் எல்லைகளுக்கு அப்பால் புரட்சி விரிவுபடுத்தப்படுதலை நம்பித்தான் உள்ளது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். முன்னேறிய முதலாளித்துவ ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் தொழிலாள வர்க்கம் வெற்றி பெறப்படாவிட்டால், சோவியத் அரசு தப்பிப் பிழைக்காது. இந்தப் பிரச்சினையில்தான் இடது எதிர்ப்பும் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மையம் கொண்டிருந்தன. 1924ம் ஆண்டு புக்காரினுடைய ஆதரவுடன் ஸ்ராலின் சோசலிசம் ஒரு தேசியவாத அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தில் கட்டியமைக்கப்படலாம் என்ற கருத்தை முன்வைத்தார். "தனி நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டின் பிரகடனம், மார்க்சிச கோட்பாட்டின் ஒரு அடிப்படைக் கருத்தையும் அக்டோபர் புரட்சியின் தளமாகக் கொண்டிருந்த உலக புரட்சி முன்னோக்கையும் அடிப்படையில் நிராகரித்த தன்மையை பிரதிபலித்தது. இது சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆயிற்று. சோவியத் ஒன்றியத்தின் கொள்கைகள் உலக சோசலிச புரட்சியின் விதியில் இருந்து அதிகாரத்துவத்தால் துண்டிக்கப்பட்டு விட்டன. "தேசிய சோசலிசம் என்ற வேலைத்திட்டத்தில் வெளிப்பாட்டை கண்டிருந்த சடரீதியான நலன்களே அதிகாரத்துவத்தின் நலன்களாக இருந்தன. அரச சொத்தானது அதிகாரத்துவத்தின் வருமானத்தின் தோற்றுவாயாகவும் மற்றும் சிறப்புரிமைகளாகவும் இருந்ததோடு, ஒரு இன்றியமையாத பாதுகாப்பு பண்புடைய தேசியக் கொள்கையாக ஸ்ராலினிச ஆட்சியின் நலன்களுக்கு சேவை புரிந்தது. வெளியுறவுக் கொள்கை பற்றிய நிலையானது "தேசிய நலனுடைய" சந்தர்ப்பவாதக் கணிப்பீடுகளால், கோட்பாட்டுரீதியான சர்வதேச புரட்சிகர கருதுதல்களை பிரதியீடு செய்தது. மிகமிக வெளிப்படையாக, ஸ்ராலினிச ஆட்சியானது கம்யூனிச அகிலத்தை ஒரு இன்றியமையாத சோவியத் தேசிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக மாற்றம் செய்துவிட்டது. முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கான கருவிகளாக உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் ஆட்சியால் பயன்படுத்தப்பட்டன. இறுதியில் ஸ்ராலினிச கட்சிகளை அரசியல் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் கொலைகாரக் கருவிகளாக மாற்றிவிட்ட வர்க்க சமரசக் கொள்கைகளின் அரசியல் மூலத்தோற்றம் இங்குதான் உள்ளன.

45. சோவியத் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் தொடக்க சர்வதேச விளைவுகள், மே 1926 பிரிட்டனில் நடைபெற்ற பொதுவேலைநிறுத்த தோல்வியின்போது நிரூபணம் ஆயிற்று. பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின் தேசியத் தலைமையுடன் நல்லுறவை நாடிய ஸ்ராலினின் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியை, TUC (Trades Union Congress) என்ற அதிகாரத்துவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பிற்கு விமர்சனமற்ற ஆதரவை, நெருக்கடி மிகுந்த தேசிய வேலைநிறுத்த காலத்திற்கு முன்பிருந்தே கொடுக்கக் கூறினார். இது TUC ஆல் பொதுவேலைநிறுத்தம் தவிர்க்க முடியாமல் காட்டிக் கொடுக்கப்பட்டபோது தொழிலாள வர்க்கத்தை தயார் நிலையில் இல்லாமல் இருக்க செய்து விட்டது.

46. இன்னும் மிகப் பெரிய பேரழிவுகள் விரைவில் தொடர இருந்தன. அதனது தேசியவாத திருப்பத்துடன் இணைந்த வகையில் சோவியத் அதிகாரத்துவம் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின்மீது ஒரு தாக்குதலை நடத்தி, பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சி இருக்கும் நாடுகளில் மென்ஷிவிக்குகளின் இரு கட்ட புரட்சி தத்துவத்தை புதுப்பித்தது. 1925-27ல் சீனாவில் ஸ்ராலின் கோமின்டாங்கின் தேசிய முதலாளித்துவ இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்டார்; இது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக "நான்கு வர்க்கங்களின் கூட்டு" என்ற தத்துவத்தின் அடிப்படையில் எனக் கூறப்பட்டது. இத்தகைய வர்க்க ஒத்துழைப்புக் கொள்கையை ட்ரொட்ஸ்கி கடுமையாக எதிர்த்ததுடன், சீனாவில் சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புக்களில் இது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்தார். ஏகாதிபத்தியத்தால் சீனா ஒடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மை, சீன முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு இடையேயான மோதலை ஒன்றும் குறைத்துவிடவில்லை. உண்மையில் எதிரிடையான நிகழ்வுதான் உள்ளது. ட்ரொட்ஸ்கி கூறினார்:

சீன வாழ்வில் வெளிநாட்டு மூலதனத்தின் சக்திவாய்ந்த பங்கானது சீன முதலாளித்துவ வர்க்கத்தின் வலுவான பகுதிகள், அதிகாரத்துவம் மற்றும் இராணுவத்தை தங்கள் வருங்காலத்தை ஏகாதிபத்தியத்துடன் பிணைக்க வைத்துள்ளது. இந்த உறவு இல்லாமல் தற்கால சீனாவில் இராணுவவாதிகள் என்றழைக்கப்படுபவர்களுடைய மிகப் பெரிய பங்கை விளங்கிக்கொள்ள முடியாது இருந்திருக்கும். சீனாவில் வெளிநாட்டு மூலதனத்தின் பொருளாதார, அரசியல் முகவர்களான தரகு முதலாளித்துவ வர்க்கம் என அழைக்கப்படுபவர்களுக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்று அழைக்கப்படுபவருக்கும் இடையே மிகப் பெரிய பிளவு இருக்கும் என்று நினைப்பது ஆழ்ந்த வெகுளித்தனம் ஆகிவிடும். உண்மையில் இந்த இரு பிரிவுகளும், பூர்ஷ்வாவிற்கும் பரந்துபட்ட தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் இடையில் உள்ள பிணைப்பை விட, ஒப்பிட்டுப்பார்க்கமுடியாத அளவிற்கு ஒன்றோடொன்று நெருக்கமாகத்தான் உள்ளன.ஏகாதிபத்தியம் வெளியிலிருந்து எந்திரரீதியாக சீனாவில் இருக்கும் வர்க்கங்கள் அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கிறது என்று நினைப்பது மிகப் பெரிய தவறாகிவிடும்... ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டம் வர்க்கங்களுக்கு இடையேயான அரசியல் வேறுபடுத்தல்களை வலுவிழக்கச் செய்யாது, மாறாக வலுப்படுத்தத்தான் செய்யும்.[29]

47. ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் துன்பியலான முறையில் உறுதியாயின. ஏப்ரல் 1927ல் சியாங் கேய் ஷேக்கின் தலைமையில் கோமின்டாங் இராணுவப் படைகள் ஷாங்காய் தொழிலாள வர்க்கத்தின்மீது இரத்தம்தோய்ந்த படுகொலையை நடத்தி, சீனக் கம்யூனிஸ்ட் தலைமையின் மிகப் பெரிய பிரிவைக் கொலை செய்தன. ஏப்ரல் 1927க்கு பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வாங் சிங் வெய் தலைமையில் இருக்கும் ''இடது'' கோமின்டாங் பிரிவுடன் சேர உத்தரவிடப்பட்டது. சியாங் கேய் ஷேக் போலவே வாங் சிங் வெய் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தை மிருகத்தனமாக நசுக்கினார். இதன்பின் 1927 டிசம்பர் மாதம் கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட முழுத் தளர்ச்சியைக் கண்டு சிதறிய நிலைக்குப் போனபோது, அகிலத்தின் (கொமின்டேர்னின்) தலைமை உடனடியாக ஆயுதமேந்திய எழுச்சிக்கு மாறுமாறு கோரியது. இக்கொள்கையை கன்டோனில் செயல்படுத்தும் முயற்சி மூன்று நாட்களிலேயே இரத்த வெள்ளத்தில் மூழ்கிப் போயிற்று. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் நீண்டகால தாக்கங்களை கொண்ட இத்தகைய பேரழிவு தரக்கூடிய தோல்விகள் சீன தொழிலாள வர்க்கத்திடையே சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஒரு வெகுஜனக் கட்சி என்பதற்கு முற்றுப்புள்ளியை வைத்தன.ஸ்ராலினுடைய கொள்கைகளின் விளைவால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து நாட்டுப்புறத்திற்கு தப்பி ஒடும் வகையில் எஞ்சியிருந்த மாவோ சேதுங் உட்பட சீன கம்யூனிஸ்ட கட்சித் தலைமையானது மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை விவசாயிகளை அடித்தளமாக கொண்ட ஒரு அமைப்பாக நிறுவினர்கள். தற்போது முதலாளித்துவச் சுரண்டலின் மிகக் கொடுர வடிவிலான கோட்டையாக வெளிப்பட்டிருப்பது உள்ளடங்கலாக ஸ்ராலினின் "நான்கு வர்க்கங்களின் கூட்டு" பற்றி ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தின் சூழ்நிலை பொருத்தத்தின் எல்லைக்கு உள்ளாய் நின்றும் மற்றும் 1927 இனுடைய அந்த துன்பியலும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளையும் தவிர்த்தும் சீனாவினுடைய பிற்கால வரலாற்று பின்னணியை புரிந்து கொள்வது சாத்தியமில்லை.


[29]

Leon Trotsky on China (New York: Pathfinder, 1976), pp. 176-77.