Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி

55. "மூன்றாம் காலம்" கொள்கையின் செல்வாக்கை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் முன்பு கொண்டிருந்த தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ தேசிய கட்சிகளுடனான சந்தர்ப்பவாத இணக்கச் செயல்களுக்கு பதிலாக தீவிர இடது வேலைத்திட்டம் ஒன்றை பின்பற்றுமாறு வழிகாட்டப்பட்டனர். இதில் சுதந்திரமான "சிவப்பு" தொழிற்சங்கங்கள் அமைக்கப்படும் மற்றும் ஐக்கிய முன்னணி என்ற தந்திரோபாயம் நிராகரிக்கப்படும். ஒன்றுபட்ட முன்னணி தந்திரோபாயத்திற்கு பதிலாக சமூக ஜனநாயக கட்சிகள் "சமூக பாசிஸ்டுக்கள்" என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும்.

56. அகிலத்தின் புதிய கொள்கை ஜேர்மனியில் பேரழிவு தரக்கூடிய விளைவுகளைக் கொடுத்தது; அங்கு பாசிசத்தின் எழுச்சி சோசலிச இயக்கத்திற்கு மரண அடி கொடுக்கக்கூடிய ஆபத்தான அறைகூவலைக் கொடுத்தது. அதிர்ந்து போய்விட்ட, பொருளாதார நெருக்கடியினால் அழிவிற்கு உட்பட்டிருக்கும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் இயக்கம்தான் பாசிசம்; இது பூர்ஷ்வா மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டிற்கும் இடையே நெரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. சோசலிச இயக்கங்களின் தோல்வியானது, குட்டி முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகளை தம் பிரச்சினைகளுக்கு தொழிலாள வர்க்கம் தீர்வு அல்ல, அவைதான் காரணமென்று நம்பவைத்தது. முதலாளித்துவ சிதைவுக்காலத்தில் பாசிசம், நிதி மூலதனத்தால் தொழிலாளர் அமைப்புக்களை அழித்துவிடவும் தொழிலாள வர்க்கத்தை சிறு துகள்களாகச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. ஜேர்மனியில் சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்புக்களே 1933ல் பாசிசம் வெற்றி பெற முடிந்ததற்கு காரணமாகும். சமூக ஜனநாயகவாதிகள் தங்கள் நம்பிக்கையை, அழுகிப்போன பூர்ஷ்வா ஜனநாயக ஜேர்மன் அரசில் கொண்டிருந்தனர்; முதலாளித்துவத்துடன் தொழிலாள வர்க்கத்தை பிணைத்த கொள்கைகளை தொடர்ந்தனர். "சமூக பாசிசம்" என்ற ஸ்ராலினிச கொள்கை --இதன்படி சமூக ஜனநாயகம் மற்றும் ஹிட்லரின் கட்சியும் "இரட்டைகள்" எனப்பட்டன-- கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையில் அனைத்துவித ஒத்துழைப்பும், பாதுகாப்பிற்காக கூட இருக்கக்கூடாது என்று எதிர்க்கப்பட்டது. இது பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவதை தடுத்தது: அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சமூக ஜனநாயகத்திற்கு இன்னமும் விசுவாசமாக இருக்கும் தொழிலாளர்களிடம் இருந்து விரோதப்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை குற்றம் சார்ந்த முறையில் "ஹிட்லருக்கு பின், நாங்கள்" என்ற சுயதிருப்தி கோஷத்தை வளர்த்தனர். டிசம்பர் 1931ல் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்; "தொழிலாளர்-கம்யூனிஸ்ட்டுக்களே, நீங்கள் பல நூறாயிரக்கணக்கானவர்கள், மில்லியன்கள் எண்ணிக்கையில் இருப்பவர்கள்; நீங்கள் எந்த இடத்திற்கும் செல்ல முடியாது; உங்களுக்கு போதுமான கடவுச்சீட்டுக்கள் இல்லை. பாசிசம் ஆட்சிக்கு வந்தால், உங்கள் முதுகெலும்புகள் மண்டையோடுகளின்மீது பயங்கரமான டாங்கிகளை ஏற்றும்; உங்களுக்கு விடிவுகாலம் என்பது கருணையற்ற போராட்டத்தின் மூலம்தான் வரும். சமூக ஜனநாயகவாதிகளுடன் இணைந்து போராடுவதின் மூலம்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சடுதியில் செயல்படுக, தொழிலாளர் கம்யூனிஸ்ட்டுக்களே உங்களுக்கு அதிக கால அவகாசம் இல்லை!"[35] இந்த எச்சரிக்கை துன்பியலான முறையில் உறுதியாயிற்று; 1933ல் ஹிட்லர் பதவிக்கு வந்தபின் அவர் தொழிலாள வர்க்கத்தின் தலைமையை கைது செய்தார், அல்லது தூக்கிலிட்டார், அதன் சுயாதீன அமைப்புக்களை அழித்தார்.

57. ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சீரழிவில் ஒரு திருப்பு முனையாகும். ஸ்ராலினிச கொள்கை பேரழிவுதரக்கூடியதாக இருந்தது; ஆனால் கம்யூனிச அகிலத்தின் தலைமைக்குள் அதற்கு எதிர்ப்பு ஏதும் தோன்றவில்லை. அதற்கு விடையிறுக்கும் வகையில் ட்ரொட்ஸ்கி புதிய கட்சிகளை நிறுவி ஒரு புதிய அகிலத்தை அமைப்பதற்கு அழைப்பு விடுத்தார்; ஏனெனில் ஸ்ராலினிச அமைப்புக்களை சீர்திருத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. "மாஸ்கோ தலைமை ஹிட்லருக்கு வெற்றி உறுதியைக் கொடுத்த கொள்கையை தவறுக்கு இடமில்லாதது என்று அறிவித்ததோடு மட்டும் அல்லாமல், என்ன நடந்தது பற்றி என்பதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்றும் தடை செய்துவிட்டது" என்று ஜூலை 1933ல் அவர் எழுதினார். "இந்த வெட்ககரமான தடை மீறப்படவில்லை, தூக்கி எறியப்படவும் இல்லை. எந்த தேசிய காங்கிரஸும், எந்த சர்வதேச காங்கிரஸும்; கட்சிக் கூட்டங்களில் எந்த விவாதமும் இல்லை; செய்தி ஊடகங்களில் விவாதம் ஏதும் இல்லை! பாசிசத்தின் இடிமுழக்கத்தாலும் எழுந்திருக்காத ஒரு அமைப்பு, அதிகாரத்துவத்தின் சீற்றம் தரும் இத்தகைய செயல்களுக்கு குனிந்து செல்லும் அமைப்பு அது மடிந்துவிட்டது என்பதைத்தான் நிரூபிக்கிறது; எதுவும் இனி இதைப் புதுப்பிக்க முடியாது."[36] சோவியத் ஒன்றியம் பாரதூரமாக சீரழிந்துவிட்ட போதிலும், அதனை ஒரு தொழிலாளர் அரசுதான் என்று ட்ரொட்ஸ்கி தொடர்ந்து வரையறுத்தார்; நீண்டகாலம் அது தப்பிப் பிழைப்பது என்பது ஒரு அரசியல் புரட்சியின் மூலம் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதில்தான் தங்கியுள்ளது என்றார்.


[35]

“For a Workers’ United Front Against Fascism” in The Struggle Against Fascism in Germany (New York: Pathfinder Press, 1971) p. 141.

[36]

“It is Necessary to Build Communist Parties and an International Anew” in The Struggle Against Fascism in Germany, p. 420