Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

நான்காம் அகிலமும் மையவாதத்திற்கு எதிரான போராட்டமும்

58. நான்காம் அகிலத்திற்கான அழைப்பு ஒன்றும் ஒரு தந்திரோபாய சூழ்ச்சிக்கையாளல் அல்ல. சோவியத் ஆட்சியின் சமூக அரசியல் மாற்றம் பற்றிய புறநிலை மதிப்பீடு மற்றும் அதன் தொழிலாள வர்க்கத்துடனான உறவின் அடிப்படையில் அது செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் ட்ரொட்ஸ்கி 1930 களின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்த பல அரசியல் குழுக்களுடன் தீவிர மோதலில் ஈடுட்டார்; அவை அனைத்தையும் "மையவாதம்" என்று குறிப்பிட்டார். சோசலிச புரட்சிக்கு தங்கள் விசுவாசத்தை அறிவிக்கையிலேயே, இந்தப் போக்குகள் நான்காம் அகிலம் அமைக்கப்படுவதை எதிர்த்தன. ஸ்ராலினிசம், ட்ரொட்ஸ்கிசம் இவற்றிற்கு இடையே ஒரு நடுப் பாதையை இவை காண விரும்பின, சீர்திருத்தம் புரட்சி இவற்றிற்கு இடையே ஒரு நடுப் பாதையை காண விரும்பின.

59. 1934ம் ஆண்டு ட்ரொட்ஸ்கி மையவாதப் போக்குகள் நிறைந்திருந்த குறிப்பிட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்த இயல்புகளை அடையாளம் கண்டார். ஒரு மையவாதி என்பவர், "புரட்சிகரக் கொள்கையை வெறுப்புடன் காண்கிறார்; அதன் நிலை என்னவாக இருக்கிறது. புரட்சிகர கொள்கைக்கு பதிலாக தனிப்பட்ட திறமையையும், அற்பமான அமைப்புரீதியான ராஐதந்திரத்தையுமே நோக்கி விருப்பம் கொள்கிறார்" மேலும், "ஒரு மையவாதி சந்தர்ப்பவாதிக்கும் மார்க்சிஸ்டுக்கும் இடையே ஒரு நிலையை கொண்டுள்ளார்; ஒரு குட்டி முதலாளி எப்படி முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே ஒரு நிலையைக் கொண்டுள்ளாரோ அப்படித்தான் இதுவும்; அவர் முதல் கருத்தோடு மண்டியிடுகிறார் இரண்டாம் கருத்தோடு வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கிறார்." மையவாதத்தின் மற்றொரு கூறுபாடு, ஒரு சரியான சர்வதேச கொள்கையினதும் பார்வையினதும் உறுதியான முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்துகொள்ளும் திறனற்ற தன்மையாகும். "தற்போதைய சகாப்தத்தில் ஒரு தேசிய புரட்சிகர கட்சி ஒரு சர்வதேச கட்சியின் பகுதியாகத்தான் கட்டமைக்கப்பட முடியும் என்பதை மையவாதி புரிந்து கொள்ளவில்லை. சர்வதேச கூட்டாளிகள் பற்றிய அவரது விருப்பத்தேர்வில், தன்னுடைய சொந்த நாட்டைவிட குறைவாகவே வேறுபாட்டை மையவாதி பார்க்கிறார்" என்றும் ட்ரொட்ஸ்கி கூறினார்.[37]

60. தொழிலாள வர்க்கம் இடதிற்கு நகர்ந்தது, எதிர்ப்புரட்சிகர சக்திகளான ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுடன் மோதலுக்கு வந்தபோது, மையவாதக் குழுக்களானது புரட்சிகரப் போராட்டத்திற்காக புதிய அமைப்பு நிறுவுதலை தடுத்துவிட்டன. மையவாதப் போக்குகள் அதாவது --பிரிட்டனில் இருக்கும் சுதந்திர தொழிலாளர் கட்சி (Independnet Labour Party), அல்லது ஜேர்மன் புலம்பெயர் அமைப்பு SAP (வருங்கால SPD தலைவரும் ஜேர்மனிய அதிபருமான வில்லி பிராண்ட், முக்கியமாக, குறிப்பாக துரோகப் பங்கை ஆற்றினார்), ஸ்பெயினின் POUM போன்றவை-- புரட்சிகர மற்றும் சீர்திருத்த அரசியலுக்கு இடையே நடு வீட்டைக் காண முற்பட்டன. நான்காம் அகிலம் நிறுவப்படுவது தேவை என்ற அறிவித்தல் "காலத்திற்கு முந்திய நிலை" என்ற அவர்களின் வலியுறுத்தலின் பின்னே இருப்பது 1) ஸ்ராலினிச ஆட்சி மற்றும் அதனுடன் உறுப்பாக இணைந்துள்ள கட்சிகளை ட்ரொட்ஸ்கி எதிர்ப்புரட்சிகரமானவை என்று பண்புநிலைப்படுத்தியதுடன் உடன்பாடின்மை மற்றும் 2) தங்கள் தேசிய சூழலுக்குள் இருக்கும் சந்தர்ப்பவாத அரசியல் உறவுகளுடன் உறுதியாக முறித்துக் கொள்ள விருப்பம் இன்மை ஆகியனவாகும்.


[37]

Writings of Leon Trotsky 1933-34 (New York: Pathfinder, 1998), p. 233.