Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி

65. ட்ரொட்ஸ்கி 1936ல் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் சமூக-பொருளாதார அவசியத்தை ஸ்தாபித்த காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலை எழுதினார். ட்ரொட்ஸ்கி சோவியத் அதிகாரத்துவத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் தவிர்க்க முடியாத அழிவை ஆளுமைசெய்யும் திட்டவட்டமான விதிகளை வெளிக்கொணர்ந்தார். அவர் அதிகாரத்துவத்திற்கு ஏதாவதொரு முற்போக்கு வரலாற்றுப் பாத்திரத்தை கற்பிப்பதை மறுத்தார். தொழிலாளர் அரசுக்குள் ஒரு சலுகைமிக்க தட்டாக அதிகாரத்துத்துவத்தின் இருப்பை ஆளுமை செய்யும் முரண்பாடுகளை ஆராய்ந்த ட்ரொட்ஸ்கி, போல்ஷிவிக் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை பாதுகாக்கும் அதே வேளை, தீவிரமான கிளர்ச்சி எழுச்சி ஒன்றின் ஊடாக சோவியத் தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை தூக்கியெறியும், ஒரு அரசியல் புரட்சியின் ஊடாக மட்டுமே 1917 அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் முடியும் என்பதை ஸ்தாபித்தார். சோவியத் ஆட்சியின் தலைவிதி உலகப் புரட்சியிலேயே தங்கியிருப்பதால் அதை இடைமருவு என ட்ரொட்ஸ்கி வரையறுத்தார். தனது ஆய்வின் முடிவில் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:

சோவியத் ஒன்றியமானது முதலாளித்துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையில் அரைகுறையான ஒரு முரண்பாடான சமுதாயமாகும். இங்கு, (அ) உற்பத்தி சக்திகள் அரச சொத்துக்களுக்கு ஒரு சோசலிசப் பண்பை வழங்கப் போதாத நிலையில் உள்ளன; (ஆ) தேவையின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதித்திரட்சியை நோக்கிய போக்கு திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் நுண்துளைகளின் ஊடாக திடீரென தோன்றுகிறது; (இ) விநியோக விதி முறைகள் சமுதாயத்தின் புதிய வேறுபடுத்தல்களின் அடிநிலையில் இருக்கும் முதலாளித்துவ பண்பை பேணுகின்றன; (ஈ) பொருளாதார வளர்ச்சியானது உழைப்பாளிகளின் நிலைமையை மெல்ல மெல்ல சீர்படுத்துகின்ற அதேவேளை, ஒரு சலுகை மிக்க அடுக்கு துரிதமாக உருவாகுவதை முன்நிலைப்படுத்துகிறது; (உ) சமூகப் பகைமையை சுரண்டிக்கொள்ளும் அதிகாரத்துவம், சோசலிசத்துக்கு அந்நியமான ஒரு கட்டுப்பாடற்ற தட்டாக தன்னையே மாற்றிக்கொண்டுள்ளது; (ஊ) ஆளும் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்ட சமூகப் புரட்சி, இன்னமும் சொத்து உறவுகளிலும் மற்றும் உழைக்கும் வெகுஜனங்களின் நனவிலும் இருந்துகொண்டிருக்கின்றது. (எ) ஒன்றுதிரண்ட முரண்பாடுகளின் மேலும் கூடிய அபிவிருத்தி சோசலிசத்திற்கு வழிவகுப்பது போலவே மீண்டும் முதலாளித்துவத்துக்கும் வழியமைக்கக் கூடும்; (ஏ) முதலாளித்துவத்துக்கான பாதையில் எதிர்ப்புரட்சியானது தொழிலாளர்களின் எதிர்ப்பை தகர்க்க வேண்டியிருக்கும்; (ஐ) சோசலிசத்துக்கான பாதையில் தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை தூக்கிவீச வேண்டியிருக்கும். இறுதி ஆய்வுகளில், இந்தப் பிரச்சினையானது தேசிய மற்றும் உலக அரங்கில், வாழும் சமூக சக்திகளின் போராட்டத்தால் தீர்மானிக்கப்படும்.[39]

66. சோவியத் சமூதாயம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆய்வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரசித்திபெற்ற எதிர்ப்புக்களில் ஒன்றான, அதிகாரத்துவம் புதிய ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்ற நிலைப்பாடு, "அரச முதலாளித்துவம்" என பொதுவில் இனங்கண்டிருந்த கோட்பாட்டுடன் அடையாளங்காணப்பட்டது. அதன் சகல வேறுபடுத்தல்களிலும் அதிகாரத்துவத்தை ஒரு வர்க்கமாக அது பண்புமயப்படுத்தியவற்றை மார்க்சிச முறையில் மெய்ப்பிக்கத் தவறிய அந்த தத்துவத்தை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். மார்க்சிசத்தை பொறுத்தவரையில், வர்க்கமானது சமுதாயத்தின் பொருளாதார கட்டமைப்பில் அதன் சுயாதீனமான மூலங்களாலேயே வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. வர்க்கத்தின் இருப்பானது, வரலாற்று ரீதியில் வறையறுக்கப்பட்ட சொத்து வடிவங்கள் மற்றும் உற்பத்தி உறவுகளுடன் கட்டுண்டதாகும். அது முறையே சமூக அடுக்கின் செயற்பாடுகளில் பொதிந்துள்ளன. சோவியத் அதிகாரத்துவம் அத்தகைய வரலாற்று சக்தியை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அதிகாரத்துவமானது அரசியல் அதிகாரத்தை பறித்துக்கொண்டுள்ளது; அது அரசை நிர்வகிக்கின்றது; மற்றும் அது சோவியத் ஒன்றியத்தின் சொத்துக்களின் கணிசமான பகுதியை பேராவலுடன் விழுங்கியுள்ளது. ஆனால் சொத்துக்களின் வடிவம், தொழிலாள வர்க்கப் புரட்சியிலிருந்தே தோன்றியதாகும். அதிகாரத்துவத்தால் கடுமையை£ய் முயற்சிக்கப்பட்ட அரசுமீதான அதிகாரத்துவத்தின் அபரிமிதமான அரசியல் கட்டுப்பாடு, "அதிகாரத்துவத்துக்கும் மற்றும் நாட்டின் செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு புதிய மற்றும் இதுவரை தெரிந்திராத உறவை உருவாக்கிவிட்டுள்ளது"[40] என்பதை ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இது ஒரு அரசியல் புரட்சியின் ஊடாக முன்கூட்டியே தடுக்கப்படாவிட்டால் "பாட்டாளி வர்க்க புரட்சியின் சமூக வெற்றி முழுமையாக கரைந்து போக வழிவகுக்கக் கூடும்"[41] என ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி வெளியிடப்பட்டு 55 ஆண்டுகளின் பின்னர் முடிவில் இதுவே நடந்தது. எவ்வாறெனினும், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் விளைவு, அதிகாரத்துவம் ஒரு வர்க்கம் அன்றி ஒரு சமூகத்தட்டு மட்டுமே என்ற ட்ரொட்ஸ்கியின் முடிவை தீர்க்கமானமுறையில் உறுதிப்படுத்தியது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, அரச சொத்துக்கள் கலைக்கப்படுவதற்கும் மற்றும் அவை தனியார் சொத்துக்களாக மாற்றப்படுவதற்கும் துரிதமாக வழிவகுத்தது. அனுகூலமாக அமர்ந்துகொண்டிருந்த அதிகாரத்துவவாதிகள் தாம் முன்னர் நிர்வகித்து வந்த அரசுக்கு சொந்தமான தொழில், நிதி மற்றும் இயற்கை வளங்களை தமது சொந்த சொத்துக்களாக மாற்றினர். தமது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக அரசு சொத்துக்களை திருடுவதன் ஊடாக ஏறத்தாழ முழுமையாக எடுத்துக்கொண்ட தமது சொத்துக்களை அங்கீகரிப்பதற்கு இந்த புதிய முதலாளித்துவத்தை அனுமதிக்கும் பரம்பரை உடமை சட்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. பங்கு பரிவர்த்தனையும் ஸ்தாபிக்கப்பட்டது. உழைப்பு, மதிப்பு விதியின் மூலம் ஒழுங்குபடுத்தப்படும் பண்டமாக மாற்றப்பட்டது. அரச திட்டமிடலில் எஞ்சியிருந்ததும் பொறிந்து போனது. ஆளும் அதிகாரத்துவத்தை தனித்தன்மை கொண்ட ஒரு வர்க்கமாக சட்டபூர்வமாக அடையாளப்படுத்தும் ஏதேனும் ஒரு விசேட சமூக தனி இயல்பு கூட சோவியத் ஒன்றியத்தில் உயிர் பிழைக்கவில்லை. சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்னர் இருந்தது "அரச முதலாளித்துவம்" எனில், அது தொழிலாளர் அரசுடன் சேர்ந்து காணாமல் போய்விட்டது! அரச முதலாளித்துவம் என்ற "தத்துவம்" சோவியத் சமுதாயம் பற்றிய ஒரு சமூகவியல் புரிந்துணர்வுக்கோ அல்லது ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர போராட்டத்துக்கான மூலோபாயத்துக்கோ பங்களிப்பு செய்யவில்லை.

67. வேறு எவரும் இவ்வாறு சோவியத் சமுதாயத்தை மிகவும் அறிவுக்கூர்மையுடனான திறனாய்வுக்கு உட்படுத்தப்படுத்தவில்லை. தொழிலாள வர்க்கத்தால் தூக்கிவீசப்படாவிட்டால், சோவியத் ஒன்றியம் அதிகாரத்துவத்தால் கலைக்கப்படுவதோடு முதலாளித்துவ உறவுகள் பதிலீடு செய்யப்படும் என ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். சோவியத் ஒன்றியம் உண்மையாகக் கலைக்கப்பட்டு மற்றும் முதலாளித்துவத்தை மீள் ஸ்தாபிதம் செய்வதற்கான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஐம்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர், காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் ட்ரொட்ஸ்கி செய்த ஆய்வு திகைப்பூட்டுமளவு நிரூபிக்கப்பட்டுள்ளது.

68. ஸ்ராலினிச அதிகாரத்துவமானது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் புரட்சியை நசுக்கும் நடவடிக்கையில் ஒரு முழு மார்க்சிச பரம்பரையையே படுகொலை செய்தது. சினோவியேவ், காமனேவ், புக்காரின் மற்றும் ரடெக் உட்பட நீண்ட கால போல்ஷிவிக் கட்சி உறுப்பினர்கள் மீது 1936 க்கும் 1938க்கும் இடைப்பட்ட காலத்தில் காட்சிக்காக போலி வழக்குகள் திட்டமிடப்பட்டன. பிரதிவாதிகள் தம்மைத் தாமே கண்டனம் செய்துகொள்ள நெருக்கப்பட்ட (அத்தகைய ஒப்புதல் வாக்கு மூலங்களை வழங்கினால் பிரதிவாதிகளும் அவர்களது குடும்பங்களும் காப்பாற்றப்படுவதாக வழங்கப்பட்ட பொய் வாக்குறுதியின் பேரில்) இத்தகைய அச்சமூட்டும் நடவடிக்கைகள், மாற்றமுடியாத மரண தண்டனை தீர்ப்புடன் முடிவுற்றது. இந்த மரணதண்டனைகள் ஒரு சில மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன. இந்த வழக்கு விசாரணைகள், வெகுஜனங்களின் கண்களுக்குப்படாமல் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த முன்னெப்போதுமில்லாத மக்கள் படுகொலை பிரச்சாரத்தின் பகிரங்க உருவமாக இருந்தன. இலட்சக்கணக்கான சோசலிஸ்டுகள், மார்க்சிச புத்திஜீவிகளின் பல அரசியல் பரம்பரைகளின் மிகச் சிறந்த பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களும் அடியோடு இல்லாமல் செய்யப்பட்டனர். பாசிச சர்வாதிகாரியான முசோலினி, தன்னைவிட மிக அதிகமான கம்யூனிஸ்டுகளை ஸ்ராலினின் ஆட்சி படுகொலை செய்துள்ளதாக போற்றிப்பாராட்டி கருத்துத் தெரிவித்தார்! 1936 தொடக்கம் 1939 வரை ஒரு எதிர்ப் புரட்சி வன்முறை அலையினால் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்ராலின் "புரட்சிக்கு சவக்குழி தோண்டுபவர்" என்ற ட்ரொட்ஸ்கியின் மதிப்பீட்டை மிகவும் நேரடியான விதத்தில் உறுதிப்படுத்திய இந்த தீர்த்துக்கட்டும் நடவடிக்கை, சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவுக்கு ஒரு பெரும் அடியாகியது. இதிலிருந்து சோவியத் ஒன்றியம் மீளவேயில்லை. ஸ்ராலினிசமும் ட்ரொட்ஸ்கிசமும் ஒரே மார்க்சிசத்தின் வெறும் வெவ்வேறு வடிவங்களே என்ற கூற்றுக்கள் ஒரு புறம் இருக்க, ஸ்ராலினிசமானது மார்க்சிச தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபியத்தை தனது அத்திவாரமாகக் கொண்டுள்ளது என்று கூறும் எண்ணற்ற முதலாளித்துவ பிரச்சாரகர்களின் கூற்றை இத்தகைய சமாந்தரமற்ற குற்றவியல் வரலாறும் சாதனையும் மறுக்கமுடியாதவாறு பிழையென நிறுவுகின்றன. ஸ்ராலினிசத்துக்கும் ட்ரொட்ஸ்கிசத்துக்கும் இடையிலான தொடர்பு ட்ரொட்ஸ்கியாலேயே சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது: அவை "ஒரு இரத்த ஆற்றின்" மூலம் பிரிக்கப்பட்டுள்ளன என அவர் எழுதுகிறார்.


[39]

[The Revolution Betrayed: What Is the Soviet Union and Where Is It Going? (Detroit: Labor Publications, 1991), p. 216]

[40]

Ibid., p. 211.

[41]

Ibid.