Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

அமெரிக்கா யுத்தத்திற்கு நுழைகிறது

93. பேர்ல் துறைமுகத்தின் மீது 1941 டிசம்பர் 7ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல், யுத்தத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டுக்கு களம் அமைத்தது. எவ்வாறெனினும் 1941 டிசம்பருக்கு முன்னதாக, அமெரிக்கா அரசியல் ரீதியிலும், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலும் பூகோள மோதலுக்குள் ஆழமாக ஈடுபட்டிருந்தது. ரூஸ்வெல்ட் நிர்வாகமானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து பிரமாண்டமான அரசியல் மற்றும் நிதி சலுகைகளை கறந்துகொள்வதற்காக பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் எதிர்கொண்ட அவநம்பிக்கையான நிலைமையை சுரண்டிக்கொண்டது. ஆயினும், முடிவில் ஆசியாவிலும் பசுபிக்கிலும் ஐரோப்பிய அல்லது ஜப்பானிய மேலாதிக்கத்தை ஜேர்மன் பற்றிக்கொள்வதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக கூறப்பட்ட விடயத்தில், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிலிப்பைனை இரத்தக்களரியுடன் வென்றதில் இருந்தே, அமெரிக்கா பசுப்பிக்கை ஒரு அமெரிக்க ஏரியாகவும், மற்றும் பொக்ஸர் கிளர்ச்சியை நசுக்கியதில் இருந்து சீனாவை ஒரு அமெரிக்க காப்பகமாகவும் கருதியது. பேர்ல் துறைமுகம் மீதான ஜப்பானின் அவநம்பிக்கையான தாக்குதல், தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரார்த்தனை செய்த "தலைவிதியின் கூடுமிடம்" என்ற வேலைத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு ரூஸ்வெல்ட்டுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தனது தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக பாசாங்குகள், இந்த காலகட்டம் பூராவும் மில்லியன் கணக்கான ஆபிரிக்க அமெரிக்கர்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்ற உண்மையால் மட்டுமன்றி, அமெரிக்காவில் வாழ்ந்த பத்தாயிரக்கணக்கான ஜப்பானியர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது உட்பட, யுத்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளாலும் பொய்யாக்கப்பட்டது. யுத்தம் நடந்த காலத்திலேயே "தேசிய பாதுகாப்பு அரசின்" வரைவுகளின் பெரும்பகுதியும் திட்டமிடப்பட்டது. அமெரிக்காவுக்குள் வேலை நிறுத்தமற்ற வாக்குறுதிக்கு வெட்கமின்றி ஆதரவளித்த ஸ்ராலினிசக் கட்சிகள், 1941 ஜூனில் ஒரு முறை சோவியத் ஒன்றியம் நாசி ஜேர்மனியால் தாக்கப்பட்டபோது, "ஜனநாயக" ஏகாதிபத்திய சக்திகளின் மிகவும் உத்வேகமான ஆதரவாளர்களாக முன்வந்தனர்.

94. ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட பின்னர், சோசலிச தொழிலாளர் கட்சியானது பாட்டாளி வர்க்க அனைத்துலகவாத முன்னோக்கை தூக்கி நிறுத்தியதோடு ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய யுத்த குறிக்கோள்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் அடிபணியச் செய்வதையும் எதிர்த்தது. இந்த காரணத்தால் அமெரிக்காவினுள் யுத்த காலத்தில் சிறைவைக்கப்பட்ட தலைவர்களை கொண்ட ஒரே தொழிலாள வர்க்க போக்காக சோசலிச தொழிலாளர் கட்சி விளங்கியதோடு, பின்னர் அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்மானிக்கப்பட்ட 1940 ஸ்மித் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட முதலாவது மனிதர்களும் அவர்களாக இருந்தனர். 1941ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலவர்கள் மற்றும் உறுப்பினர்களுமாக 18 பேருக்கு அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தூண்டியவர்கள் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தனது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த கால பங்காளிகளுடனும் மற்றும் தனது ட்ரொட்ஸ்கிச இயக்கம் மீதான இரக்கமற்ற எதிர்ப்புடன் அணிதிரண்டுகொண்ட கம்யூனிஸ்ட் கட்சி, இந்த வழக்குகளை ஆதரித்தது. யுத்தத்தின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஸ்மித் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற போது, முதலாளித்துவ அரசின் தாக்குதல்களுக்கு எதிராக ஸ்ராலினிஸ்டுகளை பாதுகாக்கும் கொள்கைப் பிடிப்பான நிலைப்பாட்டை சோசலிச தொழிலாளர் கட்சி எடுத்தது.

95. இரண்டாம் உலக யுத்தத்தின் துன்பகரமான சம்பவங்கள், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற இரண்டு தேர்வுகளை மட்டுமே என லுக்செம்பேர்க் விடுத்த எச்சரிக்கையின் சரிநுட்பத்தை வெளிப்படுத்துகிறது. யுத்தத்தின் போது இழைத்த குற்றங்கள் ஒரு முழு பரம்பரையின் எதிரில் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியது. நாஜி மனிதப்படுகொலையில், ரோமா என்றழைக்கப்படும் சுமார் ஐந்து மில்லியன் சோவியத் யுத்தக் கைதிகள், போலந்தர்கள் மற்றும் பாசிச அரசாங்கத்தால் குறி வைக்கப்பட்ட ஏனையவர்களுடன் சேர்த்து ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். கைதிகளை சாவை நோக்கி கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ரயில் பாதைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்த மறுத்த, மனித குலத்தை அடியோடு அழிக்கும் நாசி வேலைத்திட்டத்தை அலட்சியம் செய்த அமெரிக்க அரசாங்கம், ஜப்பானில் பொதுமக்கள் வாழ்ந்த இரு பெரும் நகரங்கள் மீது அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் 200,000 க்கும் 350,000க்கும் இடைப்பட்ட மக்களை கொன்று, தனது சொந்த காட்டுமிராண்டி செயலை காட்சிப்படுத்தியது. மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் புதிய அமெரிக்க ஆயுதங்களின் பேரழிவு ஏற்படுத்தும் ஆற்றலை உலகத்துக்கு, குறிப்பாக சோவியத் ஒன்றியத்துக்கு வெளிக்காட்டுவதே இந்த குற்றத்தின் பிரதான நோக்கமாகும். மொத்தத்தில், இந்த ஆறு ஆண்டுகால மோதலில் சுமார் 100 மில்லியன் மக்கள் அழிந்துபோனார்கள். இந்த யுத்தம், தமது தலைமையின் துரோகத்துக்கும் மற்றும் சோசலிசப் புரட்சியின் தோல்விக்கும் தொழிலாள வர்க்கம் கொடுக்கத் தள்ளப்பட்ட மோசமான விலையாகியது. இதன் பின்னர் யுத்தத்துக்கு பிந்திய செழிப்பு கட்டியெழுப்பப்பட்டது பிணக்குவியல்களின் மீதே ஆகும்.