Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியில் நெருக்கடி

177. மார்ச் 1974ல் தொழிற் கட்சியினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததானது, தொழிலாளர் புரட்சிகர கட்சி எதிர்பார்த்ததைப் போல, தொழிலாள வர்க்கத்திற்கும் புதிய அரசாங்கத்திற்குமான மோதல்களுக்கு துரிதமாக இட்டுச் சென்று விடவில்லை. IMF ஆதரவு மறுவீக்கமானது தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு தந்திரோபாயத்திற்கான இடத்தை வழங்கியது. இந்த புதிய சூழலானது WRP இன் அரசியல் அடித்தளங்களில் இருந்த பலவீனங்களை வெளிப்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கழகம் WRP ஆக மாற்றப்பட்டது, மற்றும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த "வெகுஜன ஆள்சேர்ப்பு" பிரச்சாரங்கள் எல்லாம் வெறுமனே தொழிலாள வர்க்கத்தின் பரவலான மற்றும் அடிப்படையான டோரி கட்சி எதிர்ப்பு உணர்வுக்கு விடுத்த வேண்டுகோள்கள் மீது தான் அடித்தளமிடப்பட்டிருந்தன என்கிற வரையில், புதிய கட்சியும் அதன் அங்கத்துவமும் தொழிற் கட்சியினர் மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியதால் உருவாக்கப்பட்ட கூடுதல் சிக்கலான சூழலைக் கையாள நல்ல திறமை பெற்றிருக்கவில்லை.

178. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியில் தான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு வேறொரு இடத்தில் ஆதரவு அடித்தளத்தை எதிர்நோக்குவதன் மூலம் பதில்நடவடிக்கை மேற்கொள்ள WRP தலைப்பட்டது. 1976ல் தொடங்கி மத்திய கிழக்கில் பல்வேறு தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளுடன் அரசியல் உறவுகளின் விருத்தியானது அரசியல் குழப்பமான நோக்குநிலையின் உயர்ந்த அளவினை வெளிப்படுத்தியது. மார்க்சிச இயக்கத்தை கட்டுவதில் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மிகவும் முக்கியத்துவம் தொடர்பான தனது முந்தைய வலியுறுத்தலில் இருந்து WRP பின்வாங்கிக் கொண்டது என்கிற வரையில், ஹீலியும் அவரது நெருங்கிய உதவியாளர்களான கிளீவ் சுலோட்டர் மற்றும் மைக்கல் பண்டாவும், தாங்கள் 1950கள் மற்றும் 1960களில் போராடிய பப்லோவாத கருதுகோள்களை நோக்கியே மேலும் மேலும் வெளிப்படையாக சாயத் தொடங்கினர். பப்லோவாத வேலைத்திட்டத்திற்கு அவர்கள் அடிபணிந்ததானது, பகுப்பாய்வின் இயங்கியல் சடவாத வழிமுறையின் இயல்பு, முக்கியத்துவம் மற்றும் பயன்பாட்டை மொத்தமாக சிதைத்த நிலையில் மார்க்சிசத்தின் ஒரு கருத்துமுதல்வாத புதிராக்கலுடன் சேர்ந்துகொள்ளப்பட்டதாய் இருந்தது.