ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமும் சர்வதேசிய வாதமும்

உலகிலேயே பழைமை வாய்ந்த தொழிலாள வர்க்கத்தின் மீது ஏகாதிபத்தியமும் அதன் தத்துவமும் கொடுத்த அழுத்தத்தை வெளிப்படுத்திய தேசியவாத கண்ணோட்டத்துக்கு எதிரான போராட்டம், பிரிட்டனில் ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கான முன்நிபந்தனையாக இருந்தது. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மகாநாட்டிற்கு முன்னர், தனது தேசிய சுய அதிகாரத்தை (national autonomy) பேணிக்கொள்ள பிரிட்டிஷ் I.L.P. (Independenr Labor Parry) ஆல் எடுக்கப்பட்ட முயற்சியை ட்ரொட்ஸ்கி விடாப்பிடியாக எதிர்த்தார். பின்னர் ஹீலி அப்பொழுது உறுப்பினராக இருந்த வேர்க்கஸ் இன்டர்நாஷனல் லீக் (W.I.L.) பிரிட்டனில் அதன் அணிரீதியான வேறுபாடுகளை சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்குக் கீழ்ப்படுத்த மறுத்ததாகவும் அதன் உலக கட்சியின் ஒழுங்கிற்குள் செயற்பட மறுத்ததாகவும் கண்டித்து திருத்தினார். அவர் W.I.L. தலைவர்களை பின்வருமாறு எச்சரித்தார்:

“உயர்ந்த கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே மிக அக்கறையுடன் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர அரசியல் குழுக்களை அபிவிருத்தி செய்வதும் பேணுவதும் சாத்தியமாகும். நான்காம் அகிலம் மட்டுமே இந்த கோட்பாடுகளை தன்னுள் பொதிந்துவைத்துள்ளது மற்றும் பிரதிநிதித்துவம் செய்கிறது, ஒரு தேசியக்குழு, நிலையான புரட்சிகர பாதையில் நிலை நிற்பதென்பது, அது உலகம் முழுதும் உள்ள தனது சக சிந்தனையாளர்களுடன் ஒரே இயக்கத்தில் உறுதியாக இணைக்கப்பட்டும், அவர்களுடன் நிலையாக அரசியல் தத்துவார்த்த ஒத்துழைப்பை பராமரிக்கவும் முடிந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நான்காம் அகிலம் மட்டுமே அப்படிப்பட்ட ஒரு அமைப்பாகும். சர்வதேச அமைப்பின் கட்டுப்பாட்டினையும், ஒழுக்க நெறியையும் நிராகரிக்கும் அனைத்துவித வடிகட்டிய தேசியக் குழுக்களும் சாரம்சத்தில் பிற்போக்கானவையே”  (நான்காம் அகிலத்தின் ஆவணங்கள், பாத்பைண்டஸ் பக்கம் 270)

இந்த எச்சரிக்கை W.I.L. ஆல் முதலில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. நான்காம் அகிலத்தின் அரசியல் ஆளுமையை ஏற்றுகொள்ளாமல் தங்களது அமைப்பின் அபிவிருத்தி சாத்தியமல்ல என்பதை இறுதியாக அதன் தலைவர்கள் ஏற்றுகொள்ளும் வரை மதிப்புமிக்க காலம் கழிந்தது. 1944ல் W.I.L, தற்போது இருக்கின்ற பிரிட்டிஷ் பகுதியுடன் ஒன்றிணைவதை ஏற்றுக் கொண்டது. ஜோக் ஹாஸ்ரனால் தலைமை தாங்கப்பட்ட, தலைமைக்குள் குட்டி முதலாளித்துவ கோஷ்டிக்கு எதிரான கூர்மையான உட்கட்சிப் போராட்டத்தின் மூலம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியின் (R.C.P) அபிவிருத்தி வெளிப்பட்டது. இது, சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) சாக்ட்மனுக்கு அனுதாபமாகவும், ஃபிலிக்ஸ் மோரோ, ஆல்பேர்ட் கோல்ட்மனால் பிரதிநிதித்துவம் செய்யப்பட குட்டி முதலாளித்துவ போக்குக்கெதிரான சர்வதேச போராட்டத்தின் ஒரு பாகமாக இருந்தது. இந்தப் போராட்டத்தின் பாதையினூடாக பிரிட்டிஷ் பகுதியின் தலைவராக ஹீலி உருவானார்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்ராலினிசத்திற்குள் கலைத்து விடவேண்டும் என்று முன்மொழிந்து 1953ல் பப்லோவாலும், மண்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட சர்வதேச திருத்தல்வாத போக்கின் வளர்ச்சியின் விளைவாக பிரிட்டிஷ் பகுதி பிளவுபட்டது. 1951ல் மூன்றாவது காங்கிரசின் ஆவணங்களில் வியாபித்திருந்த திருத்தல்வாதக் கருத்துகள் நான்காம் அகிலத்தை தத்துவார்த்த ரீதியாக கீழறுத்திருந்தது, அது நிலைத்திருப்பதற்கே ஆபத்தாக இருந்தது. முக்கியமான அரசியல் மற்றும் தத்துவார்த்தப் பிரச்சினைகளில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள தலைமைகளால் ஏற்படுத்தப்பட்ட முந்தைய பின்வாங்கல்கள் இருந்தபோதிலும், நான்காம் அகிலத்துக்குள் உள்ள தொழிலாள வர்க்கத்தை தங்களுக்கு அடித்தளமாகக் கொண்ட அந்த சக்திகள், திருத்தல்வாதிகளை தோற்கடிக்க அணிதிண்டனர். இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம், 1953ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவர் ஜேம்ஸ். பி. கனனால் வெளியிடப்பட்ட பகிரங்கக் கடிதம் ஆகும். இது சர்வதேச செயலகத்தில் உள்ள பப்லோவாத கலைப்புவாதிகளுக்கு எதிராக, மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளை அணிதிரட்டவும், தலைமை தாங்கவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை நிறுவியது. ஹீலி, பப்லோவிற்கும் பிரிட்டனில் உள்ள அவரது பிரதிநிதி ஜோன். லோரன்ஸிற்கும் எதிரான போராட்டத்தில் கனனுடன் நெருக்கமாக ஒத்துழைத்து பகிரங்க கடிதத்துக்கு ஆதரவளித்தார்.

“பல்வேறு நாடுகளில், வராலாற்று ரீதியாக வளர்த்தெடுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச காரியாளர்களை உடைக்கவும், பிளவுபடுத்தவும் சீர்குலையச் செய்யவும் நான்காம் அகிலத்தைக் கலைக்க வேண்டுமென்றே நனவுபூர்வமாக வேலை செய்து கொண்டிருந்ததற்காக” பப்லோவாதிகளை, இந்த வரலாற்று ஆவணம் கண்டனம் செய்தது. (மிலிட்டன்ட், டிசம்பர் 21, 1953)

கடிதம், ட்ரொட்ஸ்கிசம் அடிப்படையாகக் கொண்டிருந்த வரலாற்றுக் கோட்பாடுகளை மீண்டும் எடுத்துரைத்தது:

“(1) முதலாளித்துவ அமைப்பின் மரண ஓலமானது, மோசமாகிச் செல்லும் பொருளாதார மந்தங்கள், உலகப் போர்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான வெளிப்பாடுகளான பாசிசம் போன்றவற்றின் மூலம் நாகரிகத்தை ஒழித்துக்கட்ட அச்சுறுத்துகிறது. இன்று அணு ஆயுதங்களின் அபிவிருத்தி, இந்த ஆபத்தான தன்மையின் சாத்தியப்பாட்டை மிகக் கடுமையான வழியில் எடுத்துக்காட்டுகின்றது.

“(2) இத்தகைய படுபாதாளத்தை நோக்கிய சரிவானது, உலக அளவில் முதலாளித்துவத்தை திட்டமிட்ட சோசலிசப் பொருளாதாரத்தால் மாற்றீடு செய்வதன் மூலம் மட்டுமே தவிர்க்கப்பட முடியும், மற்றும் இவ்வாறு அதன் ஆரம்ப காலங்களில் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட திருகுபுரி வடிவிலான முன்னேற்றத்தை தொடருதலையும் அது புதுப்பிக்கும்.

“(3) இத்தகைய பணிசமூகத்தில்உள்ள ஒரேஉண்மையான புரட்சிகர வர்க்கமான தொழிலாள வர்க்கத்தின்தலைமையின்கீழ்மட்டுமேநிறைவேற்றப்பட முடியும். ஆனால் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு சமூக சக்திகளுக்கு இடையிலான உலக உறவுகளின் நிலைமை முன்னொருபோதும் இல்லாதவாறு சாதகமாக இருக்கின்றபோதிலும், தொழிலாள வர்க்கமானது ஒரு தலைமை நெருக்கடியை எதிர்நோக்குகின்றது.

“(4) இந்த உலக வரலாற்றுக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அதனை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் லெனினால் அபிவிருத்தி செய்யப்பட்ட பாணியிலான புரட்சிகர கட்சிகளை கட்ட வேண்டும்: அது ஜனநாயகத்தையும் மத்தியத்துவத்தையும் இயங்கியல் ரீதியாக ஒன்றிணைக்கும் —அதாவது முடிவுகளை எடுப்பதில் ஜனநாயக ரீதியானதாகவும், நடைமுறைப்படுத்துவதில் மத்தியத்துவமும், தலைமையை கட்சியின் அங்கத்தவர்கள் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், அம்முடிவுகளை மிகவும் கட்டுப்பாடான முறையில் கட்சியின் அங்கத்தவர்கள் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கும்— வகையில் திறமையுடன் போராடும் ஒரு கட்சியாக இருக்க வேண்டும்.

“(5) இதற்கு முக்கிய தடையாக இருப்பது ஸ்ராலினிசம், ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியின் தேட்டங்களை சுரண்டுவதன் மூலம் தொழிலாளர்களை தன் பக்கம் ஈர்த்த பின்னர், அவர்களது நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் முகமாக, தொழிலாளர்களை சமுக ஜனநாயகத்தின் பிடியில் சிக்கச் செய்ததுடன், பின்னர் மந்த நிலைக்கு கொண்டு சென்றது, அல்லது திரும்பவும் முதலாளித்துவத்தின் நப்பாசைகளில் வீழ்த்திவிட்டது. இத்தகைய துரோக நடவடிக்கைகளின் நேரடியான பலன்களான பாசிசத்தின் வளர்ச்சியும், அல்லது மன்னராட்சிகள் ஆதரவு சக்திகளின் வெளிப்பாடுகளின் மூலமும், மற்றும் முதலாளித்துவம் தோற்றுவிக்கும் புதிதான போர்கள் மூலமும் தொழிலாள வர்க்கம் விலையை செலுத்துகின்றது. எனவேதான், நான்காம் அகிலம் ஸ்ராலினிசத்திற்கு எதிராக, சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஸ்ராலினிசத்தை புரட்சிகர முறையில் தூக்கி வீசுவதை தனது முக்கிய கடமைகளுள் ஒன்றாக ஆரம்பத்தில் இருந்தே வகுத்துக்கொண்டது.

“(6) நான்காம் அகிலத்தின் அநேக பகுதிகளும் அதன் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் குழுக்களும் கட்சிகளும் எதிர்கொண்டிருக்கும் நெகிழ்வான தந்திரோபாயங்களின் தேவையானது, அவை எல்லாவற்றிலும் மிக அவசரமானதாக — ஏகாதிபத்தியத்துக்கும் அதனுடைய குட்டி முதலாளித்துவ ஏஜன்டுகளுக்கும் (தேசிய உருவாக்கங்கள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்றவை) ஸ்ராலினிசதத்திற்கும் சரணாகதி அடையாமல் எப்படி போராடுவது என்பதைத் தெரிந்து கொள்வதை தேவையாகக் கொண்டுள்ளது. எதிரிடையான முறையில், ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியாமலும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக (இறுதி ஆய்வில் ஏகாதிபத்தியத்தின் குட்டி முதலாளித்துவ ஏஜன்சியான) எப்படி போராடுவது என்பதை அறிவததையும் மிக அவசியமாக கொண்டிருக்கிறது.

“லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட இந்த அடிப்படை கோட்பாடுகள், அதிகரித்துவரும் சிக்கலான மற்றும் மாறிக்கொண்டிருக்கின்ற இன்றைய உலக அரசியலில், முழு செல்லுபடியான தன்மையையும் இன்னும் கொண்டிருக்கின்றன. உண்மையில் ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்தவாறு புரட்சிகர சூழ்நிலைகள் ஒவ்வொரு புறமும் திறந்துகொண்டிருக்கின்றன. ஒரு நேரம் உயிர்வாழும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக தொடர்பற்றதாகவும், ஏதோ தொலைதூரத்துக்கு உரியதாக தோற்றம் அளித்தவை இப்பொழுது, முற்றும் சரியானதாக வந்திருக்கின்றது. உண்மை என்னவெனில், அரசியல் ஆய்விலும், நடைமுறை செயல்பாட்டின் போக்கைத் தீர்மானிப்பதிலும் இந்தக் கோட்பாடுகள் அதிகரிக்கும் பலத்துடன் இப்பொழுது முக்கியமானதாகின்றன” (அதேபக்கம்).

கடிதம், பப்லோவின் வேலைத்திட்டத்தின் பிரதான நிலைப்பாடுகளையும் மற்றும் உலகம் முழுவதிலும் உடைக்கும் பிளவு நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்வதுடன், தொடர்ச்சியாக உலகம் முழுவதிலும் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு இந்த அழைப்பை விடுத்தது:

“சுருங்ககூறின்: பப்லோவின் திருத்தல் வாதத்துக்கும் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டுக் கோடுகள் அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் சமரசம் சாத்தியம் இல்லாத அளவிற்கு ஆழமான வேறுபாட்டினைக் கொண்டுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை உண்மையில் பிரதிபலிக்கும் ஜனநாயக முறையிலான முடிவுகளை வந்தடையத் தாம் அனுமதிக்கபோவதில்லை என்பதை பப்லோ கன்னை நிரூபித்துள்ளது. தங்களது கிரிமினல் கொள்கைக்கு முழுமையாக அடிபணிய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். நான்காம் அகிலத்தில் இருந்து மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைவரையும் துரத்திவிட அல்லது வாய்மூடப்பண்ண மற்றும் கைவிலங்கிட அவர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

“அவர்களது திட்டம் ஸ்ராலினிசத்துடனான சமரசத்தை சிறிதுசிறிதாக உள்ளே புகுத்தவேண்டும் மற்றும் அதேபோல சிறிது சிறிதான பாணியில், என்ன நடக்கிறது என்று அறிய வருபவர்களை மற்றும் ஆட்சேபனைகளை எழுப்புபவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இதுதான் பப்லோவாத சூத்திரப்படுத்தல்களின் பலவற்றுக்கும் இராஜதந்திர மழுப்புதல்களுக்குமான விநோதமான விளக்கமாகும்.

“இதுவரை பப்லோவாத கன்னை இந்த கோட்பாடற்ற மற்றும் மக்கியவெல்லியன் (Machiavellian) சூழ்ச்சியில் குறிப்பிட்ட வெற்றியை பெற்றிருக்கின்றது. ஆனால் பண்பு ரீதியான மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அரசியல் பிரச்சினைகள் சூழ்ச்சிகளின் மூலம் உடைந்துவிட்டன. இப்பொழுது திறமையை வெளிக்காட்டுவதற்குரிய போராட்டமாக இருக்கிறது.

“கீழ்மட்ட அணிகளுக்கு வெளியில் நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலிருந்து நான்காம் அகிலத்தின் பகுதிகளுக்கு நாம் கூறும் ஆலோசனை என்னவென்றால், செயல்படவேண்டிய, மற்றும் தீர்மானகரமாக செயல்படவேண்டிய வேளை வந்துவிட்டது என்பதுதான். நான்காம் அகிலத்தில் உள்ள பெரும்பான்மையினராகிய மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பப்லோ அதிகாரத்தை தட்டிப்பறித்ததை எதிர்த்து தங்களது உறுதியை நிலைநாட்டும் நேரம் வந்துவிட்டது”. (அதேபக்கம்)

சில மாதங்களுக்குப் பின்னர் 1954, மார்ச் 1 ல் இந்தப் பிளவின் வரலாற்று தாக்கங்களை கனன் ஆய்வு செய்தார்:

“நாம் மட்டுமே லெனின் ட்ரொட்ஸ்கியின் நனவான முன்னணி படையின் கட்சி மற்றும் புரட்சிகரப் போராட்டத்தில் அதன் தலைமைப் பாத்திரம் பற்றிய கோட்பாட்டின் நிபந்தனையற்ற ஆதரவாளர்களாவோம். இந்த தத்துவமே உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய நிஜத்தன்மையையும் இந்த சகாப்தத்தில் எல்லாவற்றிலும் மேலாதிக்கம் செய்வதையும் பெறுகிறது.

“இப்போதைய தலைமைத்துவ பிரச்சனை, நீடித்த நிகழ்ச்சிப்போக்கில் வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான வெளிப்பாடுகளுக்கு மட்டுப்படுத்துவதோ, சிறப்பாக முதலாளித்துவம் பலவீனம் அடைந்துள்ள இந்த அல்லது அந்த நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதாயினும் கூட அதற்கு மட்டுப்படுத்துவதோ அல்ல. அது சர்வதேச புரட்சியின் அபிவிருத்தி மற்றும் சமூகத்தின் சோசலிச உருமாற்றம் பற்றியதாகும். இது தானகவே நிகழும் என ஏற்றுக்கொள்வதன் விளைவு மார்க்சிசத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிடுவதாகும். இல்லை, அது ஒரு நனவான நடவடிக்கையாகத்தான் இருக்க முடியும். இது வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் நனவுபூர்வமான சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்யும் மார்க்சிச கட்சியின் தலைமையை வேண்டிநிற்கிறது. வேறு எந்தக் கட்சியும் செய்யப்போவது இல்லை. தொழிலாளர் இயக்கத்தில், வேறு எந்தபோக்கும் திருப்திகரமான பதிலீடாக அங்கீகரிக்கப்பட முடியாது. அதன் காரணமாக ஏனைய கட்சிகள் மற்றும் போக்கின்பால் நமது நோக்கு, சமரசம் செய்யமுடியாத வகையில் விரோதமானது.

“சக்திகளின் உறவானது, ஸ்ராலினிஸ்டுகள், சமூகஜனநாயகவாதிகள், மத்தியவாதிகள் ஆகிய பகை போக்கினால் மேலாதிக்கம் செய்யப்படும் அமைப்புகளுக்கு, முன்னணிப்படையின் காரியாளர்கள் ஒத்துப்போவது தேவைப்பட்டால், அந்த வகையான ஒத்துழைப்பு எல்லா வேளையிலும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை எளிதாக்குவதற்கான தந்திரோபாய ஒத்துழைப்பாகக் கருத வேண்டும், ஒருபோதும் அவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தக்கூடாது, பிரெஞ்சுப் பொது வேலை நிறுத்தத்தில் பப்லோவாதிகள் செய்த பாணியில் நட்பு ஆலோசனை மற்றும் 'விசுவாசமான' விமர்சனங்களை வழங்குவதற்கான சிறிய வேலைக்கு மார்க்சிஸ்டுகள் நியமிக்கப்பட்டுள்ளவாறாக, தீர்க்கமான வரலாற்று பங்கினை ஒருபோதும் அதன்மேல் சுமத்தக்கூடாது.” (திருத்தல் வாதத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கிசம், பகுதி 2, நியூபார்க், பக்கம் 65)

பப்லோவிற்கு எதிரான போராட்டம், பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அபிவிருத்திக்கு தீர்க்கமானதாகும். அவர்களின் சிறிய எண்ணிக்கையும், ஸ்ராலினிச ஆதரவு பப்லேவாதி, லோரன்ஸ் குழுவினால் தூண்டி விடப்பட்ட அதிக ஏழ்மையும் இருந்த போதிலும், பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் நான்காம் அகிலத்துக்குள் தத்துவார்த்த போராட்டங்களின் படிப்பினைகளால் அளவிட முடியாவகையில் பலப்படுத்தப்பட்டனர். இது, குருச்சேவ் ஸ்ராலினது குற்றங்களை பகுதி பகுதியாக வெளிப்படுத்தியது மற்றும் ஹங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, 1956ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வெடித்த நெருக்கடியில் தலையீடு செய்வதற்காக பிரிட்டிஷ் ட்ரொட்கிஸ்ட்டுகளை அவசியமான அளவு தயாரிப்புகள் செய்வதில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பப்லோவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அரசியல் ரீதியாக ஆயுத பாணியாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட அணிகளில் முக்கிய சக்திகளை வென்றெடுக்க முடிந்தது — இவ்வாறு இயக்கத்தின் அரசியல் தத்துவார்த்த வேலைகளையும் அதைப்போலவே அதன் செயற்பாடுகளையும் தொழிற்சங்கத்திற்குள்ளும் தொழிற் கட்சிக்குள்ளும் விரிவாக்குவதற்காக புதிய சந்தர்ப்பங்களை வழங்கியது. இந்த வெற்றிகள் 1959ல் சோசலிஸ்ட் லேபர் லீக்கை ஸ்தாபித்ததுடன் மேலும் உறுதியாக வலுப்படுத்தியது.

இந்தக் காலகட்டத்தின் போது, சிறப்பாக பப்லோவாதிகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டில் கனன் பலவீனமான பின்பு, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் அனைத்துலகக் குழுவின் வேலையில் செயலூக்கம் மிகுந்த அரசியல் பாத்திரத்தை வகிக்க முடிந்தது. ஹீலியும் அவரது நெருக்கமான ஒத்துழைப்பாளர் மைக்கல் பண்டாவும் சேர்ந்து ஐரோப்பாவில் பப்லோவாதிகளின் பரிணாமத்தை பின்தொடர்ந்தனர் —குறிப்பாக ஹங்கேரியின் ஆக்கிரமிப்புக்கு அவர்களின் மத்தியவாத நிலைப்பாடு— அனைத்துலகக் குழுவுக்கும் சர்வதேச செயலகத்திற்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் குறைந்துவிட்டன என குறிப்பிடுவதற்கு அங்கே எந்த அடிப்படையும் இல்லை என்று அவர்கள் நம்பினர். உண்மையில் அவர்கள் எதிர்ப்புறமாகவே நம்பினர். ஆகையால் அமெரிக்க SWP க்குள் பப்லோவாதிகளை நோக்கி வளர்ந்து வரும் நல்லிணக்கத்தை அதிக எச்சரிக்கையுடன் அவர்கள் பார்த்தார்கள்.

SLL மற்றும் SWP க்கு இடையே அதிகரித்துவரும் அரசியல் பதட்டங்களின் பின்னணியில் இரண்டு பகுதிகளின் நோக்குநிலையிலும் வளர்ந்து வரும் வேறுபாடு இருந்தது. 1957 முதல், SWP அமெரிக்காவில் "மறு இணைப்பு" என்று சொல்லப்பட்ட பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, அது தனது அரசியல் வேலையில் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத் தட்டினை நோக்கி திருப்புவது அதிகரித்திருந்தது. SWPன் நிலைப்பாடு, அதன் தத்துவார்த்த உறுப்பும் கூட, ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்று பகைவர்களுடன் அதிக சமரசமும் மென்மையான போக்கும் கொள்வது வளர்ந்தது. 1958 அளவில் ஹான்சன், கிரெம்ளின் அதிகாரத்துவத்துக்கு எதிரான அரசியல் புரட்சியை பகிரங்கமாகக் கைவிட்டார். மறுபக்கம் SLL, வலதுசாரி சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு எதிரான சளையாத போராட்டத்தின் அடிப்படையில், பரந்த தொழிலாளர் இயக்கத்துக்குள் தனது ஊடுருவலை ஆழமாக்கியது. 1958லும் 1960லும் ஹீலி, கனனையும் SWPன் ஏனைய தலைவர்களையும் சந்தித்து, பப்லேவாதிகளுடனான மறுஇணைப்பை நோக்கிய செங்குத்தான திடீர் வீழ்ச்சியின் நகர்வை தடுப்பது சாத்தியமா என்றும் மற்றும் சர்வதேச செயலகத்துடன் ஒன்றுபட்ட கலந்துரையாடலுக்கான முன்நிபந்தனை, சர்வதேச காரியாளர்களின் உச்சபட்ச தெளிவுபடுத்தலுக்காக பயன்படுமா என்றும் பார்த்தார்.

ஆயினும் SWPக்கும் SLLக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் விரிவடைவது தொடர்ந்தது. காஸ்ட்ரோ ஆட்சிக்குவந்து ஒரு ஆண்டு கழிந்து, 1960ல் SWP, கியூபாவில் தொழிலாளர் அரசு உண்டாக்கப்பட்டு விட்டது, “நனவற்ற மார்க்சிஸ்ட்டுகளை” கொண்டிருந்த “காஸ்ட்ரோ அணி” கியூபத் தொழிலாள வர்கத்தின் ட்ரொட்ஸ்கிச கட்சிக்கான போதுமான பதிலீட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற நிலைப்பாட்டிற்கு ஊசலாடியது.

1961 ஜனவரி 2 இல் SLLன் தேசியக் குழு, SWP தலைமைக்கு விடுத்த கடிதத்தில் அமெரிக்காவின் மூத்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நான்காம் அகிலத்தின் மூலோபாய இலக்கில் இருந்து பிறழ்ந்து சென்று விட்டார்கள் என அவர்களின் ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருந்தனர். அது SWP க்கு, கோட்பாட்டிற்கான போராட்டத்தின் அதி முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியது:

"நாங்கள் 1914-1917 உடன் ஒப்பிடக்கூடிய ஒரு காலகட்டத்திற்குள் நுழைகிறோம், இப்போது எமது சொந்த அணிகளுக்குள் உள்ள அனைத்து வகையான மத்தியவாத போக்கினருடன் தெளிவாகவும் கூர்மையாகவும் முறித்துக்கொள்வது இன்றியமையாததாகிறது. போல்ஷிவிக்குகள் செய்தது போல, வரும் ஆண்டுகளில் நமது புரட்சிகரக் கடமையை செய்ய வேண்டுமானால், நாம் லெனினின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும், லுக்செம்பேர்க்கினுடையதைப் போல் வெறுமனேயே விமர்சனம் செய்வதல்ல, சமரசத்திற்கு இடம் கொடாதவகையில் எல்லாவித நிகழ்கால காவுட்ஸ்கிகளிடமிருந்தும், முதலாவதும் முக்கியமானதுமாக பப்லோ கும்பலிடம் இருந்து நம்மை பிரித்து தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்” (திருத்தல்வாதத்துக்கு எதிராக ட்ரொஸ்கிசம் - பகுதி 3, பக்கம் 46)

புறநிலமை, வர்க்கப் போராட்டம் தீவிரப்படுத்துவதை முன்னுக்குக் கொண்டு வருகையிலும் தொழிலாள வர்க்கத்துக்குள் கட்சியை கட்டுவதன் சாத்தியத்தை விரிவடைய செய்யும்போதும், மத்தியவாதத்துக்கும் அனைத்துவித சந்தர்ப்பவாதத்துக்கும் எதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை SLL வலியுறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சமரசத்துக்கு இடங்கொடாத இந்த தத்துவார்த்த நோக்கு திட்டவட்டமாக அது —தொழிலாளர் இயக்கத்தினுள் SLL பெரிய வெற்றிகளை ஈட்டிய பொழுது— சிறப்பாக தொழிற் கட்சிக்குள் இருந்த இளம் சோசலிஸ்ட்டுகள் மத்தியில் ட்ரொட்ஸ்கிச காரியாளர்களை உருவாக்கவும், அங்கே SLL அதன் பகுதிகளை கட்டவும் இளம் காரியாளர்களை ட்ரொஸ்கிஸ்டுகளாக பயிற்றுவிக்கவும் செய்தது.

அது SWP ஐ எச்சரித்தது, “ஏகாதிபத்தியத்தின் பலத்துக்கோ அல்லது தொழிலாளர் இயக்கத்தின் அதிகாரத்துவ எந்திரத்துக்கோ அல்லது இரண்டுக்குமோ சரணாகதி அடைவதிலிருந்து ஊற்றெடுக்கும் கலைப்புவாதம் புரட்சிகர இயக்கம் எதிர்கொள்ளும் பேரபாயமாகும்; சர்வதேச மார்க்சிச இயக்கத்துக்குள் கலைப்புவாத போக்கை பப்லோவாதம் 1953 ஐ விட இப்பொழுது இன்னும் தெளிவாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், மார்க்சிச தத்துவம் மற்றும் மூலோபாயத்தின் மைய அம்சமாக வரலாற்றின் முன்னணிப் படையாக முன்னேறிய தொழிலாள வர்க்கம் பப்லோவாதத்தில் இனி இல்லை. ஆனால் மதிப்பிடப்பட்ட உலக வரலாற்று காரணிகளின் கைப்பாவையாக தொழிலாள வர்க்கம் அருவமான பாணியில் கணக்கெடுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.” (அதேநூல், பக்கம் 48)

பப்லோவாதிகளின் காட்சிவாதம் (Impressionism) மற்றும் நான்காம் அகிலத்திற்கான அவர்களின் திருத்தல்வாதத்தின் முக்கியத்துவத்தையும் SLL, ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டது: “....புரட்சிகர இயக்கத்தின் அனைத்து வரலாற்று பொறுப்புகளும் மறுக்கப்படுகிறது, அனைத்தும் கவர்ச்சிகரமான சக்திகளுக்கு கீழ்ப்படுத்தப்படுகிறது; காலனித்துவப் புரட்சியில் வர்க்க சக்திகள் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் பங்குபற்றிய பிரச்சினை தீர்க்கப்படாமலே விடப்பட்டுள்ளன. அது இயற்கையானது, ஏனெனில் இந்தப் பிரச்சனைகளின் பிரதான அம்சம், முன்னேறிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் பங்கும், அவர்களின் தொழிலாளர் இயக்கத்திற்குள் உள்ள தலைமை நெருக்கடியுமாகும்.” (அதே நூல், பக்கம் 49)

பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எச்சரித்தனர்: “தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீன மூலோபாயத்தில் இருந்தும் புரட்சிகர கட்சிகளைக் கட்டுதலில் இருந்தும் எந்த பின்வாங்கலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பங்களிப்பில் உலக வரலாற்றுக் குற்றத்தின் முக்கியத்துவத்தை எடுக்கும். பிரிட்டனில் SLL உருவானதில் இருந்தும் தொழிற் கட்சியின் தற்போதைய கொள்கை நெருக்கடியிலும் பப்லோவாத நடவடிக்கைகளில் பப்லோவாத திருத்தல் வாதத்தின் விளைவுகளை நாம் பார்த்திருக்கிறோம். பப்லோவாதம் பிரதிநிதித்துவப்படுத்தும் திருத்தல்வாதத்தில் இருந்து முற்று முழுதாக சுயாதீனமான லெனினிச கட்சியை கட்டவேண்டிய அவசியத்தை நாங்கள் முன்னெப்போதையும் விட உறுதியாக நம்புகிறோம்.” (அதே பக்கம்)

கட்சி கட்டும் வழியில், கொள்கை சார்ந்த நிலைப்பாட்டைக் கோருகிறவர்களுக்கு முரணாக, பரந்த மக்களின் எழுச்சியானது, தத்துவார்த்த சமரசமின்மையின் தேவையை நிராகரிக்கிறது என்ற, தொள தொள ஆடையில் உள்ள வஞ்சகன் எஸ். மிஷேலின் கூற்றுக்களுடன் நேரடியாக முரண்படும் வகையில் SLL பின்வருமாறு பிரகடனம் செய்தது:

“ட்ரொட்ஸ்கிசத்தின் முன் திறக்கப்பட்ட வாய்ப்புக்களின் முக்கியத்துவத்தின் காரணமாகவும் ஆகையால் அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவின்தேவை, நாம் திருத்தல்வாதத்தில் அதன் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக கோடுகளை வரைய வேண்டியதன் மிக அவசரத்தை வேண்டிநிற்கிறது. பப்லோவாத திருத்தல்வாதம், ட்ரொட்ஸ்கிசத்திற்குள் ஒருபோக்காக கருதப்பட்ட காலத்துக்கு முடிவை வரைய வேண்டிய நேரம் இதுவே. இது செய்யப்படவில்லையெனில் இப்பொழுது ஆரம்பமாகியுள்ள புரட்சிகர போராட்டத்திற்கு நாம் தயார் செய்யமுடியாது. இந்த உணர்வுடன் SWP நம்மோடு முன்னேக்கிச் செல்வதை விரும்புகிறோம்.” (அதேபக்கம்)

SLL இன் முன்மொழிவுகளுக்கு, SWP குரோதமாக பதிலளித்தது. அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை கைவிட்டு, நடுத்தர வர்க்க இயக்கமாக வந்து கொண்டிருந்ததன் கௌரவ ஓய்வு பெற்ற தேசியத் தலைவராக பணியாற்றுவதற்கு தன்னை சமரசம் செய்து கொண்ட கனன், ஃபெர்ரல் டொப்சுக்கு மே 12, 1961ல் எழுதியதாவது: “எமக்கும் ஜெர்ரிக்கும் இடையிலான பிளவு வெளிப்படையாக விரிவடைகிறது. சமீபத்திய போக்கை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதைக் காண்பதை விட அதை அங்கீகரிப்பது எளிதாக உள்ளது. ஜெர்ரி பேரழிவை நோக்கி அவருடன், அவரின் முழு அமைப்பையும் எடுத்து செல்கிறார்” என்பது எனது கருத்து. (அதேநூல், பக்கம் 71)

அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1953 பிளவின் வரலாற்று தொடர்பின் எந்த விளக்கத்தையும் தடுப்பதற்கான ஹான்சனின் அனைத்து முயற்சிகளையும் மீறி, SLL மார்க்சிச வேலைத்திட்டம் மற்றும் வழிமுறைகளின் (method) மிக அடிப்படை பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடலுக்கு வற்புறுத்தியது. SLL தலைவர்கள் தயாரித்த ஆவணங்கள், குறிப்பாக கிளீவ் சுலோட்டரால், 1939-40ல் குட்டி முதலாளித்துவ எதிர்ப்பினருக்கு எதிரான பெரும் போராட்டத்திற்கு பின்னர், ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும். இந்தப் போராட்டத்தில் தலைமை தாங்கியோர்க்கும் என்றும் மங்கா வரலாற்று புகழ் சேர்க்கும் வண்ணம் SLL, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துக் கொண்டிருந்த கலைப்புவாத அலையை தைரியமாக சவால் செய்தது. அரைக்காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தற்காலிகமாக மேலாதிக்கம் செய்து கொண்டிருந்த பல்வேறு குட்டிமுதலாளித்துவ தலைவர்களுக்கு அடிபணியும் வண்ணம் காணப்பட்ட அலைக்கு எதிராக SLL, ஒவ்வாதது மற்றும் காலாவதியாகிவிட்டது என எள்ளி நகையாடப்பட்ட கோட்பாடுகளில் துணிவாக நின்றது. நான்காம் அகிலத்தை கட்டுவதற்கு எளிதான வழியாக காட்சிவாதிகளாலும் நடைமுறைவாதிகளாலும் மார்க்சிச தத்துவம் தரம் தாழ்த்தப்பட்டதற்கு எதிராக திருப்பிப் போராடி, அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் முன்னோக்கை பாதுகாத்தது. அது வெறுமனே பகிரங்க கடிதத்தை மட்டும் பாதுகாக்கவில்லை. SLL ட்ரொட்ஸ்கியின் போதனைகளின் சாரத்தையும் உண்மையான பாட்டாளி வர்க்கக் கட்சியை கட்டுவதற்கான லெனினின் வாழ்நாள் முழுவதுமான போராட்டத்துடன் அவற்றின் வரலாற்றுத் தொடர்பின் சாரத்தையும் வடித்து எடுப்பதற்காகப் போராடியது. தத்துவார்த்த பாரம்பரியம், அனுபவத்தால் மேலாளுமை செய்யப்படும் நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மார்க்சிச தத்துவத்தின் மறுமலர்ச்சியின் வீரராகவும் ட்ரொட்ஸ்கிசத்தின் மீது தாக்குதல் தொடுத்த பப்லோவாதிகளின் இயங்கியல் விரோத அடித்தளங்களை கொண்டிருந்த திவாலான புறநிலைவாதத்தை அம்பலப்படுத்துவதில் தீரராகவும் ஆனார்கள்.

மறு இணைப்பு என்ற மூடுதிரையின் கீழ், ட்ரொட்ஸ்கிசத்தை கலைப்பதற்கான ஹான்சனின் திட்டத்துடன் SLL ஒத்துழைக்கப் போவதில்லை என்ற செய்தி பரவத் தொடங்கியதுமே, அவதூறாளர்கள், SLL மீதும் அதன் தேசியச் செயலர் மீதும் ஜோடனை புனையும் வகையில் செயற்படத் தொடங்கினார்கள், ஜெரி ஹீலி “அதிதீவிர இடது” குறுங்குழுவாதியென ஜோடிக்கப்பட்டார். பொய்களும் அவதூறுகளும் இருந்த போதிலும் SLL உலகின் பல்வேறு பகுதிகளுடன் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளுடன் தொடர்பை இனைப்பதற்கு வேலையை ஆரம்பித்தது. திருத்தல்வாதத்துக்கு எதிராக மிச்சமீதமில்லாத ஐயம்திரிபற்ற போராட்டத்தை நடாத்துவதன் மூலமல்லாமல், நான்காம் அகிலத்தை பாதுகாப்பதற்கும் அதன் பகுதிகளை உலகம் முழுவதும்; கட்டுவதற்கும் வேறுவழியில்லை என்பதை அதன் உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் பதியவைக்கும் வண்ணம், அபரிமிதமான பொறுமையுடன் SLL தலைவர்கள், SWP க்குள் ட்ரொட்ஸ்கிச பகுதியை பயிற்றுவிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டனர்; எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தவொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தை கட்டுவதற்கான போராட்டத்தை மையப்பணியாக வைக்காமல், பிரிட்டன் உட்பட உலகில் எங்கணுமே ஒன்றையும் கட்ட முடியாது என அவர்கள் வலியுறுத்தினர்.

1963 ஜூனில் SWP பப்லோவாதிகளுடன் கோட்பாடற்ற மறு இணைப்பை முன்னெடுத்தபோது —அந்நடவடிக்கை எண்ணற்ற பகுதிகளை அழித்ததுடன் பேரழிவுகரமான தவறுகளின் விளைபயனாக இலத்தீன் அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகளது வாழ்க்கையைப் பாதித்தது— ஹீலி, தான் 20 வருடங்களுக்கு மேலாக நெருக்கமாக ஒத்துழைத்த கட்சிக்கு இறுதியாக கடிதம் விடுத்தார். சிறீலங்காவில் லங்கா சமசமாஜ கட்சியின் (LSSP) காட்டிக் கொடுப்பைப் பற்றிய அவர்களின் மூடிமறைப்பையும் பென் பெல்லா போன்ற பல்வேறு முதலாளித்துவ தேசியவாதிகளை கட்டியெழுப்பும் அவர்களின் விளம்பரத்தையும் அவர் வெறுப்புடன் கண்டித்தார். ‘தனிமைப்படலில்’ இருந்து முறித்துக் கொள்வதாகக் கூறிக் கொண்டு கோட்பாட்டைக் கைவிட்டதை நியாயப்படுத்தியவர்களை இகழ்ந்தார்.

“‘நிச்சயமாக உங்களுக்கு SLL குறுங்குழுவாதிகளுக்காக’ நேரம் இல்லைத்தான். அடிமட்ட அணிகளிலும் தலைமையிலும் உள்ள எம்முடைய தோழர்கள் நாளும் பொழுதும் ஸ்ராலினிசம் மற்றும் திருத்தல் வாதத்துக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சிறந்த மரபுகளில் போராடுகின்றனர். ஆனால் அவர்கள் பென் பெல்லா, காஸ்ட்ரோ போன்று பொதுக் கூட்டங்களில் இலட்சக் கணக்கானோருடனோ, அல்லது சிலோன் மேதினக் கூட்டம் என்றழைக்கப்படும் கூட்டத்தை போன்றோ இன்னும் பேசவில்லை. உங்கள் பார்வையில் நாங்கள் வெறுமனே சிறியவர்கள், ‘அதிதீவிர இடது குழு’

“வேலையின்மைக்கு எதிரான அண்மைய பிரச்சாரத்தில் எமது தோழர்கள் தலைமை வகித்து, 1300 பேர் கொண்ட பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து பேசினார்கள், ஆனால் இது உங்களுக்கு அற்ப விஷயங்கள். பலாத்காரமான நரவேட்டைக்கு மத்தியிலும் எமது தோழர்கள் இளைஞர் இயக்கத்தில் உள்ள சமூகஜனநாயக வாதிகளுக்கு எதிரான சக்திமிக்க தாக்குதலை செய்தபோதும் உங்களது தகவல் தொடர்பாளர் டி.ஜே. பிட்டர்ஸ் (SWP இன் முன்னணி ஆதரவாளராக முன்னர் இருந்தவர், இப்போது ஒய்வு பெற்ற லிபரல் போல் எழுதுபவர்) ‘பிரிட்டிஷ் தொழிற் கட்சி’க்கு முன்னே மகத்தான எதிர்காலம் இருப்பதாக மட்டும் எழுதுகிறார்.

“நாங்கள் பழைய பாணியிலான ‘குறுங்குழு வாதிகள்’ எங்களது இயக்கம் எப்பொழுதும் நான்காம் அகிலத்தின் ஒருங்கிணைந்த பாகமாக இருந்து வருகிறது என்று நம்புகிறோம். அதுதான் பிரிட்டிஷ் லேபர் என்றழைக்கப்படும் ஊழல் தலைமைகளுக்கு ஒரே மாற்றை வழங்குகிறது. ஆனால் பீட்டர்ஸ்க்கு எங்களுக்காக நேரமில்லை, உங்களைப் போலவே அவரும் உண்மையிலேயே ஒளியை கண்டுவிட்டார்.

“அது உங்களுக்கு சிறிது நேரம் பிடித்துள்ளது (‘கிறிஸ்துவிடம் கடைசியாய் வருபவர் ஆழ்ந்த விசுவாசம் உள்ளவராய் இருப்பார்’ என முதுமொழி கூறுகிறது.) ஜோர்ஜ் கிளார்க் பப்லோவுடனான சக்திகளுடன் இணைந்து, அப்பொழுது நான்காம் அகிலத்தின் இதழாக வெளிவந்து கொண்டிருந்த மிலிட்டன் இல் அவமானகரமான மூன்றாவது காங்கிரசின் செய்தியை வெளியிட்டதில் இருந்து தோராயமாக 12 வருடங்களாகிறது. அந்தநேரம் நீங்கள் பப்லோவை பற்றிப் புரிந்து கொள்ளத் தவறி விட்டீர்கள். பின்னர் எங்களுக்கு 1953 பிளவு ஏற்பட்டது. கனன் இந்த பிளவை, நாம் ‘பப்லோவாத பக்கம் ஒருபோதும் போகமாட்டோம்’ என்ற வார்த்தைகளால் பாராட்டினார். ஆனால் கடைசியில் நீங்களும் அதையே செய்துள்ளீர்கள். ஃபிடல் காஸ்ட்ரோ முதல் பிலிப் குணவர்தன மற்றும் பப்லோ வரை எல்லா இடங்களிலும் உங்களுக்கு இப்போது கூட்டாளிகள் உள்ளனர்.

“நாம் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே கூறவிரும்புகிறோம்; இதில் எமது காங்கிரஸ் ஏகமனதாக இருந்தது. உங்கள் கட்சியின் பெரும்பான்மையான தலைமைகள் அடிபணிந்து விட்ட பிற்போக்கு சத்திகளுக்கு, இத்தகைய இழிவான சரணாகதிக்கு எதிராக எமது இயக்கம் எடுத்த நிலைப்பாடு குறித்து பெருமிதம் அடைகின்றோம்.”(அதே நூல், பக்கம் 163-164)

ஒரு வருடம் கழித்து, ஜூன் 1964 இல், பகிரங்க கடிதத்தை எதிர்த்த லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) —இது, மறு இணைப்புக்கு வழிவகுத்த சூழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகித்திருந்தது— பண்டாரநாயக்கா அம்மையாரின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் நுழைந்தபோது, SLL இன் எச்சரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டன. லங்கா சம சமாஜ கட்சியின் மகாநாட்டில் பங்கு பெறவும் கூட்டரசாங்கத்திற்குள் நுழைவதற்கு சதி செய்த துரோகிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் ஹீலி கொழும்பு சென்றார். 1964 ஜூன் 6 மாநாட்டு நாள் அன்று, ரவுன்ஹோல் வாயிலின் வெளியே நின்று தன்னை அனுமதிக்கும்படி கோரினார். தான் பேராளர்களிடம் பேசி, என்.எம்.பெரேரா, கொல்வின் டி. சில்வா மற்றும் ஏனைய LSSP தலைவர்களின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழையும் முடிவை நிராகரிக்கும்படி கோரமுடியுமெனக் கருதி தன்னை மாநாட்டிற்குள் அனுமதிக்கும்படி கோரினார். மாகாநாட்டிற்குள் நுழைவது சம்மந்தமாக வாக்கெடுப்பு நடாத்தும்படி நிர்ப்பந்திப்பதில் அவர் வெற்றிபெற்ற போதும், அவர் நுழைவதற்கு மறுக்கப்பட்டார். ஹீலி கூட்டத்திற்கு வெளியே உள்ள வாசலில் நின்றுகொண்டு LSSP தலைவர்களுடன் துண்டித்துக் கொண்டு புரட்சிப் பகுதிக்கு ஆதரவளிக்குமாறு பேராளர்களை கோரினார். மாநாடு முடிவுற்றதும் ஹீலி கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள், வெள்ளவத்தை துணியாலை தொழிலாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள், பல்கலைகழக மாணவர் குழு மத்தியிலும் பேசச்சென்றார். இந்த அனைத்து கூட்டங்களிலும் ஹான்சன்-மன்டேலின் ‘ஐக்கிய செயலகத்துடன்’ LSSP கூட்டாக ஒத்துழைத்த காட்டிக்கொடுப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்கினார். LSSP துரோகிகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாக்க அவர்விடுத்த அழைப்பு ஒரு சக்திவாய்ந்த பதிலைத் தூண்டியது. இலங்கையில் அவர் மேற்கொண்ட பணிகள் —மைக்கல் மற்றும் ரொனி பண்டாவின் அடுத்தடுத்த பயணங்களின் பொழுது மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டது— அந்த நாட்டில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை அமைத்தன.

அமெரிக்காவில், நான்காம் அகிலத்தை SWP கைவிட்ட பின்னர், SLL ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மறுசீரமைக்கும் வேலையை செய்தது. பிளவு பற்றிய பகுப்பாய்வில் மட்டுமல்லாமல், அமெரிக்க பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்வதிலும் மகத்தான அரசியல் உதவி வழங்கப்பட்டது. இந்தப் பிளவை, அமெரிக்காவில் தீவிரவாத அரசியல் சூழ்நிலைகளின் கண்ணோட்டத்தில் பார்த்த போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில், SLL தொழிலாள வர்கத்தில் நோக்குநிலை கொண்ட சர்வதேசியத்தை அடிப்படையாக கொண்ட உண்மையான மார்க்சிச கட்சியை உருவாக்க போராடியது. இந்த நீடித்த தத்துவார்த்த மற்றும் அரசியல் தெளிவின் விளைவாக, ஸ்பார்டாசிஸ்ட் குழுவின் குட்டி முதலாளித்துவ தீவிரவாத மற்றும் சர்வதேச விரோத தன்மை அம்பலப்படுத்தப்பட்டது. மற்றும் நான்காம் அகிலத்துக்கான அமெரிக்கக் குழு (American Committee for the Fourth International) 1966 நவம்பரில் வேர்கர்ஸ் லீக்காக மாற்றுவதற்கான நிபந்தனைகள் உருவாக்கப்பட்டன.

1961க்கும் 1966க்கும் இடையில் SLL ஆல் நடத்தப்பட்ட பணிகள், நான்காம் அகிலத்தை கட்டி எழுப்புவதற்கான வரலாற்றுப் பங்களிப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது. உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமாக பிரான்சில் OCI உடன் சேர்ந்து, திருத்தல் வாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமை தாங்கவும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மறுஒழுங்கு செய்வதிலும் பொறுப்புகளை உறுதிப்படுத்தியது.

சர்வதேச முன்னணியில் ஆழமான தத்துவார்த்த வேலைகளின் இந்த காலப்பகுதியின் பொழுது, SLL பிரிட்டனுக்குள்ளும் மகத்தான அரசியல் மற்றும் அமைப்புரீதியான முன்னேற்றத்துக்கும் அடித்தளம் இட்டது. 1964 இல் தொழிற் கட்சியின் இளம் சோசலிஸ்ட்டுக்களின் தலைமையை வென்றெடுத்தது. தொழிற் கட்சியில் வில்சன் தலைமையின் களையெடுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, அது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சுயாதீன இளைஞர் அமைப்பாக இளம் சோசலிஸ்டை (YS) ஸ்தாபித்தது.

இந்த புதிய தலைமுறையின் உள்வருகையானது, SLL இன் அரசியல் பணிகளின் விரிவாக்கத்தை சாத்தியமாக்கியது. பப்லோவாதிகளுக்கு எதிராக புரட்சிகர முன்னோக்கில் அது போராடிவந்த போராட்டம், 1968 மே-ஜூன் பிரெஞ்சு பொதுவேலை நிறுத்தத்தினால் முழுமையாக உறுதிப்படுத்தபட்டது. இந்த அபிவிருத்தி, பிரான்சில் OCI இன் விரைவான வளர்ச்சிக்கும் வழிவகுத்தது, தொழிலாள வர்க்கத்துக்கும் வலதுசாரி சீர்திருத்தவாத தொழிற் கட்சி அரசாங்கத்துக்கும் இடையில் வளர்ந்துவரும் மோதல் நிலைமைகளின் கீழ், SLL இன் அளவில் கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டது. 1969 செப்டம்பரில், முதல் ட்ரொட்ஸ்கிச தினசரி பத்திரிகையான வேர்க்கஸ் பிரஸ் நிறுவபட்டது.

டோரிகளை எளிதாக வெல்வதாகக் காட்டிய கருத்து கணிப்புகளின் அடிப்படையில், தொழிற் கட்சிவாதிகள் ஜூன் 1970ல் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர். ஆயினும் அரசாங்கத்தின் துரோக பதிவுகள், உதாரணமாக கூறினால் தொழிற் சங்க விரோத சட்டங்களை அறிமுகம் செய்ய முயற்சித்தமை டோரிகளின் வெற்றிக்கான நிலைமைகளை உண்டு பண்ணியது. இது, இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் இருந்து காணப்படாத பரந்த அளவிலான வர்க்க மோதலை இயக்கிவிட்டது. தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்கள் SLLக்கு கணிப்பிடமுடியாதளவுக்கு வர ஆரம்பித்தனர். இயக்கத்தின் வருமானம் மற்றும் வளங்கள் பிரமாண்ட வேகத்தில் விரிவடைந்தது. நடிகர்கள் நாடக ஆசிரியர்கள் SLL இன் விரிவுரைகளுக்கு வருகைதந்தனர், கட்சியில் சேர்ந்தனர். அத்துடன் 4000 பார்வையாளர்களை ஈர்த்த அலெக்சாண்டிரா அரண்மனை பேரணி போன்ற சக்திவாய்ந்த அணிவகுப்புகளை கூட்ட உதவி செய்தது. தொழிற்சங்க விரோத சட்டங்கள் ஹீத் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, SLL வேலையின்மைக்கு எதிரான பிரிட்டனில் ஆழமான ஆதரவை ஈர்த்த இளைஞர் பயணங்களை அடிப்படையாக கொண்ட தேசிய பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்தது. அதன் முன்னேற்றம் அனைத்துலகக் குழுவின் அனைத்து பகுதிகளிலும் பெருமையுடன் பின்பற்றப்பட்டது.

1970, 71, 72 இலையுதிர்காலத்தின்போது, எசெக்ஸில் கல்வி முகாம்கள் நடாத்தப்பட்டன. அவை என்றுமில்லா வகையில் சர்வதேச பேராளர்களை ஈர்த்தன. SLL இன் பலமும் உலகம் முழுதும் உள்ள புரட்சியாளர்களின் மத்தியில் உள்ள அதன் அந்தஸ்தும் பேரளவில் வளர்ந்தன. திருத்தல் வாதத்துக்கு எதிரான அதன் போராட்டத்தின் விளைவாக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் ஒரு போதும் முயற்சிக்காத, போருக்குப் பிந்திய முதலாளித்துவ செழுமைபற்றி முதல் மார்க்சிச ஆய்வை அபிவிருத்தி செய்யமுடிந்தது. டாலர் தங்க மாற்றீட்டின் அடிப்படையிலான சர்வதேச நிதியின் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தத்தில் உள்ள வெடிக்கும் முரண்பாடுகளை விளக்கியது. தொழிலாள வர்க்கத்தை, மத்தியதர வர்க்க எதிர்ப்பு இயக்கங்களுக்கு கீழ்ப்படுத்துவதற்காக மார்க்சின் மூலதனத்தை மன்னிப்புக்கோரலாக உருமாற்ற முயற்சிக்கும் மன்டேலின் நவகாலனித்துவ தத்துவத்தின் பதிவுவாத பண்பை, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அம்பலப்படுத்தினர்.