ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு உடனான மோதல்

இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதும் அல்லது இன்னும் சரியாகக் கூறுமிடத்து இந்த முன்னேற்றங்களுடன் பிரிக்க முடியாத தொடர்புடன், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) உடனான பிளவுக்கு பின்னர் அனைத்துலகக் குழுவுக்குள் புதிய பிரச்சனைகள் எழுந்தன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாத்திரம் தொடர்பாக 1966 முற்பகுதியிலேயே SLL க்கும் OCI க்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. ஏப்ரல் 1966 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாவது காங்கிரசில் ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சி பற்றிய பிரச்சனை, உலக இயக்கங்களுக்குள் நிலவிய மத்தியவாத விலகல்களின் தெளிவான அறிகுறியாக இருந்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI), SLL உடன் சேர்ந்து, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம் வரலாற்று தொடர்ச்சிக்கான இன்றியமையா வரையறை என்பதைப் பகிரங்கமாக நிராகரித்த ரொபேட்சனைட்டுகளுக்கும் (Robertsonites) மற்றும் Voix Ouvriere (தொழிலாளர் குரல்) குழுவுக்கும் எதிராக போராடிய அதேவேளை, இரு பிரிவினருக்கும் இடையிலான வேறுபாடுகளும் விரிவடைந்தன. நான்காம் அகிலம் “மீளக்கட்டமைக்கப்பட வேண்டும்” ("reconstructed") என்ற பிரெஞ்சு பிரிவினரின் வலியுறுத்தல் வெறும் சொல்லாடல் மீதான பிரச்சினையாக இருக்கவில்லை. சர்வதேச மறு அணிசேர்க்கை என்ற மூடுதிரையின் கீழ் மத்தியவாத சக்திகளை நோக்கிய ஓர் அரசியல் நோக்குநிலையை அது பரிந்துரைத்தது, இவ்வாறு பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டத்தின் பலாபலன்களை ஆபத்தில் ஆழ்த்தியது. நான்காம் அகிலம் “உயிரிழந்துவிட்டது” அது "மீளக்கட்டமைக்கப்பட வேண்டும்" என்று கோரியவர்களுக்கு விட்டு கொடுப்பதன் மூலம், அது, திருத்தல்வாதத்துக்கு எதிரான கடந்தகால போராட்டங்களின் படிப்பினைகள் தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று மறைமுகமாகவேனும் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது. இவ்வாறு அது, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய போக்குகளின் அரசியல் முன்வரலாறைப் பொருட்படுத்தாமல் அனைவரும் ஒன்றுபடலாம் என்று நேரடியாக மத்தியவாத புதைக்குழிக்குள் இட்டுச் சென்றது.

1968 இல் பிரான்சில் தொழிலாள வர்க்கம் மற்றும் மாணவ இளைஞர்களின் எழுச்சிகரமான சூழ்நிலையின் கீழ், இந்த மத்தியவாத ஊசலாட்டங்கள், OCI மற்றும் ICFI இன் அரசியல் அபிவிருத்தியில் ஆழமான முக்கியத்துவம் கொண்டிருந்தன. சாதரணமாய் அதன் கடமைகளை செய்யவும் தொழிலாளர் இயக்கத்துக்குள் தனது இருப்பை நிலைநாட்டவும் வருடக்கணக்காக போராடி வந்த அந்த பிரெஞ்சு அமைப்பு, திடீரென ஊதிப் பெருத்த பலூன் போல வளர்ச்சி அடைந்தது. 1970 வாக்கில் அது பாரிசின் லு பூர்ஜ்ஜே (Le Bourget) விமான நிலையத்தில் 10,000 தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற அணிவகுப்பை அணிதிரட்டக் கூடியதாக இருந்தது. ஆயினும் லம்பேர் மற்றும் ஜூஸ்ட் இன் OCI தலைமை அந்த இயக்கத்துக்குள் பாய்ந்த சார்லஸ் பேர்க் போன்ற குட்டிமுதலாளித்துவ சக்திகளை ஏற்றுக் கொண்டது. அதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, வலதுசாரி வால், கட்சி நாயை ஆட்டத்தொடங்கியிருந்தது.

இந்தக் காலகட்டம் முழுவதுவும் SLL க்கும் OCI இக்கும் இடையிலான வேறுபாடுகள், 1967 போரின் போது சியோனிச அரசுக்கு எதிராக அரைக்காலனித்துவ எகிப்துக்கு ஆதரவளிக்க பிரெஞ்சு அமைப்பு மறுத்ததிலிருந்து 1969 ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் மே-ஜூன் பொதுவேலைநிறுத்தத்தின் போது OCI இன் தொழிற்சங்கவாத (syndicalist) மற்றும் தவிர்ப்புவாத (abstentionist) நிலைபாடுகள் வரையில், பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகளாக அபிவிருத்தி அடைந்தன.

அவர்கள் கணிசமான வளர்ச்சியை அனுபவித்து வந்த நிலையில், OCI தலைவர்கள் அதிகரித்தளவில் தன்னம்பிக்கையையும் அனைத்துலகக் குழுவை நோக்கி அலட்சியத்தையும் கொண்டனர். பாரியளவிலான பாதுகாப்பு அரண் போன்ற கட்டமைப்புக்குள் தங்களை இடம்பெயர்ந்து அதில் அவர்களின் புதிய சுய-முக்கியத்துவத்தை அமைத்து கொண்டு, லம்பேர் மற்றும் ஜூஸ்ட்டும் உலகெங்கிலுமான மத்தியவாதிகளுடன் பேரங்களை அடிப்படையாக கொண்ட அவர்களின் சொந்த சர்வதேச நடவடிக்கைகளை ஸ்தாபிக்க விளைந்தனர். அவர்களது மிகவும் கோட்பாடற்ற உறவுகளுள், G. லோறா தலைமையிலான பொலிவிய POR அமைப்புடன் அவர்கள் வளர்த்துக் கொண்ட உறவும் ஒன்றாகும், 1953 இல் பப்லோவால் ஆதரிக்கப்பட்டிருந்த அந்த அமைப்பு முதலாளித்துவ தேசியவாதிகளுடன் கூட்டுறவு வைத்து கொண்ட நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தது.

OCI, 1971 ஜூலையில், முற்றுமுழுதாக மத்தியவாத அடிப்படையில், ஜேர்மனியின் எசனில் (Essen) இளைஞர் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தது, அதில் ஸ்பானிய பாட்டாளி வர்க்கத்தைப் படுதோல்வியுறச் செய்ததில் பெரும் பங்காற்றிய மத்தியவாத அமைப்பான POUM இன் பிரதிநிதிகளை மட்டுமன்றி, ரொபேட்சனைட்டுகளையும், CIA நிதியுதவி பெற்று வந்த அமெரிக்க தேசிய மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளையும் கூட அழைத்திருந்தனர். அந்த பேரணியில் SLL கலந்து கொள்ள சம்மதித்திருந்த நிலையில், அப்பேரணியில், பிரிட்டிஷ் இளம் சோசலிஸ்ட் (YS) பிரதிநிதிகள் குழு முன்வைத்த ஒரு தீர்மானம் இயங்கியல் சடவாத அபிவிருத்திக்கான போராட்டத்துக்கு இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்குமாறு அழைப்புவிடுத்தது. அத்தீர்மானத்தை முன்வைப்பதற்கு எதிராக SLL உடன் விவாதத்திருந்த OCI, பகிரங்கமாக அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

ஒரு மாதம் கழித்து, பொலிவிய இராணுவம் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் விளைவாக ஜெனரல் தொர்ரெஸின் (Torres) ‘இடது’ இரானுவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு, மக்களவை அழிக்கப்பட்டதில் போய் முடிந்தது. ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் போது அந்த இராணுவ ஆட்சி தொழிலாள வர்க்கத்துக்கு ஆயுதங்களை வழங்குமென எதிர்பார்த்து, தொர்ரெஸ் அரசாங்கத்தை ஆதரித்திருந்த லோரா, இந்த அரசியல் பேரழிவுக்கு ஆழமாக உடந்தையாய் இருந்தார். வேர்க்கர்ஸ் லீக்கின் அப்போதைய செயலாளராக இருந்த ரிம் வொல்வ்போர்த், SLL இன் உடன்பாட்டுடன், POR இன் கொள்கைகள் மீது ஒரு விமர்சனத்தை பிரசுரித்தார்.

பாரிசில் அதன் சர்வதேச பகுதியினரின் ஒரு கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து விடையிறுத்த OCI, POR ஐ பகிரங்கமாக தாக்கியதன் மூலம் ஏகாதிபத்தியத்திடம் சரணாகதி அடைந்து விட்டதாக SLL மற்றும் வேர்க்கர்ஸ் லீக்கைத் தாக்கி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதற்கும் மேலாக, லோரா ICFI இன் உறுப்பினர் என்று போக்கிரித்தனமாக வாதிடவும் துணிந்தது.

இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, SLL தலைமையிலான ICFI இன் பெரும்பான்மை, 1971 நவம்பரில் 24 இல் OCI உடனான ஒரு பகிரங்கமான உடைவைப் பிரகடனம் செய்தது. ஒரு மத்தியவாத அமைப்பாக OCI ஐ குணாம்சப்படுத்தியமை அரசியல்ரீதியில் சரியானதே என்பதிலும், அந்த பிரெஞ்சு அமைப்பின் அரசியல் நிலைப்பாடு சம்பந்தமான விமர்சனங்கள் முற்றிலும் நியாயமானதே என்பதிலும் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அதற்கும் மேலாக, தத்துவவார்த்த பிரச்சினையைப் பொறுத்த வரையில், இயங்கியல் சடவாதம் மார்க்சிசத்தின் அறிவு கோட்பாடு என்பதை மறுப்பதற்கும், இடைமருவு வேலைத்திட்டம் மார்க்சிச கோட்பாட்டை தேவைக்கு மிஞ்சி ஏதோவிதத்தில் கூடுதலாக அபிவிருத்தி செய்கிறது என்று வாதிடுவதற்குமான OCI இன் முயற்சியை SLL சரியான விதத்தில் எதிர்த்தது.

இருந்தபோதிலும், SWP உடனான போராட்டமானது கட்சி அணிமுழுவதிலும் நீண்டகாலத்திற்கும் மேலாக எடுக்கப்பட்டது போலஅன்றி, OCI உடனான பிளவு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள்ளோ அல்லது அதனுடைய தேசிய பகுதிகளின் காரியாளர் மத்தியிலோ எவ்வித ஆழமான கலந்துரையாடலும் இன்றி நடத்தப்பட்டது. சர்வதேச பிரிவின் அந்த பிளவு அவசரமாக கையாளப்பட்டதாக மட்டுமே இருந்தது, அது 1961 மற்றும் 1966 இக்கு இடையே SLL தொடுத்திருந்த சர்வதேச போராட்டத்துடன் எவ்விதத்திலும் ஒத்ததாக இருக்கவில்லை. லம்பேர்-ஜூஸ்ட் தலைமைகளின் தத்துவார்த்த மற்றும் அரசியல் திவால்நிலைமை இருந்தபோதினும், ICFI, அந்த பிரெஞ்சு அமைப்பிலிருந்து ஒரேயொரு உறுப்பினரைக் கூட வென்றெடுக்கவில்லை என்பதை மட்டுமாவது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாக உள்ளது, மேலும் இன்னும் மோசமானது என்னவென்றால், OCI இக்குள் ஒரு கன்னையை அபிவிருத்தி செய்ய எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்பதாகும். SLL இன் ஒரு ஆவணம் கூட பிரெஞ்சு உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு கோரி முறையீடு செய்யும் அளவுக்குச் செல்லவில்லை.

SWP இன் சீரழிவுக்கு எதிராக SLL பெரிதும் பொறுமையுடனும் விடாப்பிடியாகவும் போராடி இருந்தது, இது பிளவிற்கு பின்னரும் கூட தொடர்ந்தது (ICFI இன் அமெரிக்க ஆதரவாளர்கள் அதற்கடுத்து ஓராண்டு கூட SWP இல் இருந்தார்கள்) என்ற நிலையில், இதற்கு நேர்மாறாக, OCI உடனான முறிவு அரசியல் அவசரத்துடன் நடத்தப்பட்டிருந்தது என்பதுடன் இது பிரெஞ்சு மத்தியவாதிகளுக்கு சாதகமாக குழப்பத்திற்கான மரபை மட்டுமே விட்டுச் செல்வதாக இருந்தது. அந்த பிளவுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வரையில் ICFI இன் எந்த மாநாடும் கூட்டப்பட்டிருக்கவில்லை என்பதோடு, அடுத்த முழு மாநாடு, அதாவது நான்காவது மாநாடு நடத்தப்பட இருந்த ஒருசில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த முறிவு நடந்தது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. OCI அனைத்துலகக் குழுவின் ஓர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், மீண்டும் மீண்டும் கலந்துரையாடலைக் கோரியது. இது சோசலிஸ்ட் தொழிலாளர் கழகத்தால் ஒருதலைபட்சமாக நிராகரிக்கப்பட்டதுடன், அது சர்வசாதாரணமாக முறிவு தவிர்க்க முடியாது என்றும் வரலாற்றுரீதியாக அவசியம் என்றும் பிரகடனப்படுத்தியது.

இந்நிலைமைகளின் கீழ் அந்த பிளவானது —அனைத்துலகக் குழுவின் காரியாளர்களைக் கல்வியூட்டும் நிலைப்பாட்டில் இருந்தும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் மிக முன்னேறிய பிரிவுகளை தெளிவுபடுத்தும் நிலைப்பாட்டில் இருந்தும் பார்க்கையில்— குழப்பத்திற்கிடமின்றி முதிர்ச்சியடையாததாக இருந்தது. அது, 1961 இல் SWP இன் சீரழிவுக்கு எதிராக SLL போராடிய போது அது ஏற்றிருந்த சர்வதேச கடமைகளில் இருந்து அது பின்வாங்கியதையே பிரதிநிதித்துவம் செய்தது. ஆனால் மத்தியவாதத்தில் வேரோடியிருந்த அணுகுமுறை மீதான விமர்சனம் அவசியமாக இருந்ததுடன், அந்த பிளவானது, தத்துவம் மீதான இன்றியமையா கேள்விகள் மீது அமைந்திருந்தது என்று அடுத்தடுத்து வாதங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், இயங்கியல் சடவாத பிரச்சினை தீர்ந்துவிடவில்லை அல்லது தீர்க்கப்பட வேண்டியதாக இருந்த அடிப்படை அரசியல் மற்றும் வேலைத்திட்ட கேள்விகளை ஒதுக்கிவிடவில்லை.

பொலிவிய நிகழ்வுகள் அந்த உடைவை நேரடியாக விரைவுபடுத்திய அதேவேளை, அவை வெறுமனே இரண்டாம் தர முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எசன் நகரில் இயங்கியல் சடவாதம் மீதான தீர்மானத்தை OCI எதிர்த்தபோதே ICFI உடனான உடைவு ஏற்கனவே நடந்துவிட்டது என்றும் SLL வேகவேகமாக வாதிட்டு வந்தது. இதுவொரு மோசடியான வாக்குவாதமாகும். பொலிவிய நிகழ்வுகள் — இதில் OCI லோராவுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கிய நிலையில்— சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு, எல்லாவற்றுக்கும் மேலாக இலத்தீன் அமெரிக்க பாட்டாளி வர்க்கத்திற்கு அளப்பரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போதைய இந்த காலகட்டத்தில் மத்தியவாதத்தின் எதிர்ப்புரட்சிகர உள்நோக்கங்களை அம்பலப்படுத்துவதற்காக —ட்ரொட்ஸ்கி சீனா, ஜேர்மன் மற்றும் ஸ்பெயின் நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்தது போல— ICFI அந்த அனுபவத்தை மிகவும் துல்லியமாக விவரமாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்பது முற்றுமுழுதாக இன்றியமையாததாக இருந்தது. லோராவும் OCI உம் தவறிழைத்தார்கள் என்று குறிப்பிடுவது மட்டும் போதாது. மார்க்சிச நிலைப்பாட்டில் இருந்தும் மற்றும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக ICFI ஐ அபிவிருத்தி செய்வது என்ற நிலைப்பாட்டில் இருந்தும் மிகவும் முக்கியமாக, அந்த சம்பவத்தைச் சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் மூலோபாய அனுபவ மட்டத்திற்கு உயர்த்துவதாக இருந்திருக்க வேண்டும். இது, பொலிவிய பாட்டாளி வர்க்கம் நான்காம் அகிலத்துடன் நீண்டகாலம் இணைந்திருந்த அளவுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. 1951 இல், பப்லோ, பொலிவியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பாராளுமன்ற பாதையில் செல்ல அனுமதி வழங்கினார், இவ்வாறு 1952 புரட்சியின் தோல்விக்கு வழி வகுத்தார். 1972 ஏப்ரலில் ICFI இன் நான்காவது மாநாட்டில், பொலிவிய நிகழ்வுகள் மேம்போக்காக மட்டுமே குறிப்பிடப்பட்டன.

1968-69 இல் OCI பிரான்சில் செய்த பெரும் பிழைகளை SLL சரியாக சுட்டிக்காட்டி இருந்திருக்க வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அந்த வேறுபாடுகள் பிளவுக்கு முன்னதாக அனைத்துலக குழுவுக்குள் விவாதிக்கப்படவில்லை. அதற்கும் மேலாக, OCI இன் தவிர்ப்புவாதம் (abstentionism) மீதான ஒரு மார்க்சிச பகுப்பாய்வின் அடிப்படையில் பார்த்தால், பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்துக்கான ஒரு திடமான புரட்சிகர முன்னோக்கை அபிவிருத்தி செய்யும் புள்ளியை அது எட்டுவதற்கு முன்னரே OCI இன் விமர்சனம் முடிந்துவிட்டது.

இதுவொரு அடிப்படை பிரச்சனையாகும். நான்காம் அகிலத்தின் தலைவர்கள் எதிர்கொண்டிருக்கும் பணி, வெறுமனே காட்டிக்கொடுப்புகளை வெளிக்கொணர்வதும், தவறுகளை அம்பலப்படுத்துவதும் மட்டுமல்ல, மாறாக சரியான பாதையைக் கண்டறிவதுமாகும். SWP க்கு எதிரான போராட்டத்தின் போக்கில், SLL, அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நடைமுறையில் தொழிற் கட்சியின் தந்திரோபாயத்தை சரியான இடத்தில் மீளநிறுத்தியது. பின்னர் அது, வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் இருந்த கறுப்பு தேசியவாதத்துக்கு ஒத்துப்போகும் போக்கினை திருத்தியதுடன், இப்பிரச்சினையை நோக்கிய ஒரு சரியான வேலைத்திட்ட மனோபாவத்தை அபிவிருத்தி செய்யும் தீவிரமான தத்துவார்த்த வேலைகளை ஊக்குவித்தது.

உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியில் பிரான்ஸ் மூலோபாய முக்கியதுவம் கொண்டிருந்த போதினும், அந்நாட்டிற்கான ICFI இன் முன்னோக்கு தொடர்பான அனைத்து வேலைகளும், உடைவு முழுமையாக நிறைவடைந்ததும் முடிவுக்கு வந்தது. இவ்வாறு அந்நாட்டின் பாட்டாளி வர்க்கத்துடன் ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆழமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்த போதிலும் — ட்ரொட்ஸ்கியின் மகத்தான எழுத்துகள் சிலவற்றில் அந்நாட்டின் பிரச்சினைகள் கருப்பொருளாக இருந்த போதினும் கூட— பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை SLL சர்வசாதாரணமாக கைவிட்டது.

ஏன், அப்போது, SLL இவ்வழியை முன்னெடுத்து சென்றது? அனைத்திற்கும் முதலாவதாக இதற்கான விடையை பிரிட்டனில் வர்க்கப் போராட்டத்தின் அரசியல் அபிவிருத்தியிலும் பிரிட்டிஷ் பகுதியின் வேலையிலும் காண வேண்டும். டோரி அரசாங்கத்தின் கீழ் கூர்மையடைந்து கொண்டிருந்த வர்க்கப் போராட்டம், ஏற்கனவே நாம் குறிப்பிட்டவாறு, தொழிலாள வர்க்கத்துக்குள் ஓர் அடிப்படை எழுச்சியை உருவாக்கியது, இது நூற்றுக்கணக்கில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க SLL இக்கு உதவியது. ஆனால் பல அமைப்புரீதியான வெற்றிகள் இருந்த போதும், அவை முக்கியமானதாக இருப்பினும், பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்தின் இந்த தன்னெழுச்சிகளைத் தழுவிய ஓர் அரசியல் நிகழ்ச்சிப்போக்கு நடக்க தொடங்கியது — அது அரசியல் அம்சங்களில் ஏறத்தாழ உடனடியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்பாக பிரிட்டிஷ் தலைவர்களின் அணுகுமுறை மாற்றத்தில் பிரதிபலித்தது.

நேர்மாறாக, SLL தலைமை, அவர்களின் சொந்த அமைப்பின் வளர்ச்சிக்கு அவர்களின் அரசியல் முன்னேற்றங்களுக்கு, பெரும்பாலும் OCI விடையிறுத்த அதே விதத்திலேயே விடையிறுத்தனர். ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரும் பிரிட்டனுக்குள் நடைமுறை வேலைகைளை நிறைவேற்றுவதற்கான ஒரு துணைப் பிரிவாக ICFI ஐ பார்க்கத் தொடங்கினர். ICFI ஐ கட்டியெழுப்புவதே பிரிட்டனுக்குள் இருந்த இயக்கத்தின் பலாபலன்களை அபிவிருத்தி செய்வதற்கும் பலப்படுத்துவதற்குமான முன்நிபந்தனையாகப் பார்ப்பதைக் காட்டிலும், SLL இன் வளர்ச்சியை ICFI இன் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக பார்க்கும் கண்ணோட்டம் அதிகரித்து வந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதனுடைய அரசியல்ரீதியில் அனுபவமற்ற சிறிய அணிகளை நோக்கிய அவர்களின் நோக்கு, 1930 களின் “பெரிய” ILP நான்காம் அகிலத்தை எவ்விதத்தில் அலட்சியமாக பார்த்ததோ அதற்கு ஒத்திருந்தது.

அனைத்துலகக் குழு முழுவதிலும் மற்றும் அதன் சொந்த அணிகளுக்கு உள்ளேயும் மத்தியவாதத்திற்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த போராட்டமின்றி, சோசலிச தொழிலாளர் கழகம் OCI உடன் முறித்துக் கொள்ள காட்டிய அவசரம், பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் தன்னெழுச்சியை அது தழுவியதைப் பிரதிநிதித்துவம் செய்ததுடன், நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கான போராட்டத்தில் இருந்து ஆழமாக அது பின்வாங்கியதையும் குறித்து நின்றது. ஒரு தசாப்தத்துக்கு முன்பே அது எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதினும், நான்காம் அகிலத்துக்குள் மத்தியவாதத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்யத் தவறிய SLL, அப்போராட்டத்தின் படிப்பினைகளை அதன் சொந்தக் காரியாளர்களுக்கு அரசியல்ரீதியாக கல்வியூட்டுவதற்கான அடிப்படையாக ஆக்கவும் தவறியது. இது ஒரு கடினமான நேரத்தில் நடந்திருந்திருக்கவில்லை. ஏனெனில் திட்டவட்டமாக SLL க்குள் பரந்த புதிய அடுக்குகள் நுழைந்து கொண்டிருக்கையில், இந்த சக்திகளை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அடித்தளங்களிலும், அனைத்து விதமான திருத்தல்வாதத்துக்கு எதிராக அது நடத்திக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டங்களின் அடிப்படையிலும் நிறுத்துவது முன்னெப்போதையையும் விட மிகவும் அவசியமானதாக இருந்தது.

இந்த பின்வாங்கல், SLL செய்திருந்த வெற்றிகளை தவிர்க்க முடியாத வகையில் கீழறுத்தது. பெரும்பாலான புதிய சக்திகள், உலக முன்னோக்கு மீதான ஒரு தெளிவான புரிதலுடன் மீளப்பலப்படுத்தப்பட்ட மகத்தான சர்வதேச கொள்கைகளில் ஆதாரப்படுத்தப்படாத நிலையில், கட்சிக்குள் உள்உறவுகள் தவிர்க்க முடியாத வகையில் உடனடி இலக்குகளை மையப்படுத்திய மட்டுப்படுத்தப்பட்ட தந்திரோபாய உடன்பாடுகளை ("டோரி அரசாங்கத்தை கீழிறக்கு”) அடிப்படையாக கொண்ட நடைமுறைவாத தன்மையை அதிகரித்தளவில் ஏற்று வந்தது. அதற்கும் மேலாக, அரசியல்ரீதியில் தெளிவுபடுத்தப்படாத உறுப்பினர்கள் பல்வேறுபட்ட வர்க்க சக்திகளது மனோபாவ மாற்றங்களுக்கு சேதப்படக் கூடியவர்களாக இருந்தனர், தலைவர்களும் கடந்த கால போராட்டங்களின் முக்கிய படிப்பினைகளை தத்துவார்த்தரீதியாக கிரகிக்கத் தவறிய நிலையில், அவர்களும் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள தொடங்கினர்.

இவ்வாறு, 1971-73 இல் வெடித்த உலக முதலாளித்துவ நெருக்கடியின் வெடிப்பால் கட்டவிழ்த்து விடப்பட்ட பலம் வாய்ந்த வர்க்க சக்திகளின் அழுத்தத்தின் கீழ், மிகக்குறுகிய காலத்திற்குள், SLL வேகமாக மத்தியவாதத்தின் திசையில் அபிவிருத்தியடைய தொடங்கியது. இதுதான் 1961 இல் ஹீலி தலைமை நான்காம் அகிலத்திற்குக் கொடுத்த வாக்குறுதியை காக்கத் தவறியதற்கான அளவிட முடியா விலையாக இருந்தது.