ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஸ்தாபிதம்

1973 இல் SLL ஐ புரட்சிகரக் கட்சியாக உருமாற்றுதற்கு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒரு நிகழ்வு, தெளிவாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கான வரலாற்று விளைபயன்களைக் கொண்டிருந்தது. ஆனால் SLL தலைமை இந்த முடிவை எட்டிய விதமோ அல்லது அதன் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு அது விவரித்த விதமோ முறைப்படி இல்லை.

நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட ஆவணங்களைத் தயாரித்து, முதலாவதாகவும் முக்கியமாகவும், நான்காம் அகிலத்தின் அமெரிக்க கிளையின் வரலாற்று அடித்தளம் மற்றும் அதன் சர்வதேச முன்னோக்கு முன்வைக்கப்பட்டதன் மூலம், லியோன் ட்ரொட்ஸ்கியின் மேற்பார்வையின் கீழ், 1938 இல் SWP ஸ்தாபிதம் முன்னெடுக்கப்பட்டது. கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டம் பற்றிய அனைத்து முக்கிய பிரச்சனைகளும் விரிவாக்கப்பட்டன. புதிய புரட்சிகரக் கட்சியின் உருவாக்கமானது, ஆட்களைச் சேர்க்க உதவும் தற்காலிக தந்திரோபாய அணுகுமுறையாக அல்லாமல், பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளின் வரலாற்றுரீதியான வெற்றியாக கருதப்பட்டது. அது கம்யூனிச இயக்கத்துக்குள்ளும் மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளும் ஒரு நீண்ட சர்வதேச போராட்டத்தின் வெளிப்பாடாக முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் WRP இன் ஸ்தாபிதம் மிகவும் வித்தியாசமான முறையில் விவரிக்கப்பட்டது. பெப்பிரவரி 1, 1973 தேதியிட்ட ஒரு மத்திய குழு தீர்மானம், உலக சோசலிசப் புரட்சியின் மத்திய ட்ரொட்ஸ்கிச மூலோபாயத்தைக் கூட குறிப்பிடாமல், SLL ஐ கட்சியாக உருமாற்றுவதற்கான ஒரு முன்னோக்கை வழங்கியது. அது நான்காம் அகிலத்தின் அடிப்படை வேலைத்திட்ட நிலைப்பாடுகள் பற்றியும் விளக்கவில்லை, கட்சியாக ஸ்தாபிப்பதற்கான அந்த முடிவை பப்லோவாத திருத்தல்வாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பெற்ற தத்துவார்த்த வெற்றிகளுடனும் தொடர்புபடுத்தவில்லை.

தொழிலாள வர்க்கத்துக்குள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த டோரி எதிர்ப்பு இயக்கம் தொடர்பான நடைமுறை பரிசீலனைகளைத் தவிர அதற்கு அதிகமாக வேறு விடயங்களும், சோசலிச தொழிலாளர் கழகத்தை (SLL) தொழிலாளர் புரட்சிக் கட்சியாக (WRP) உருமாற்றமாற்றுவதன் அடித்தளத்தில் இருந்ததாக வரைவு முன்னோக்குகளில் எதுவுமே சுட்டிக்காட்டவில்லை. அந்த ஆவணம் தெளிவாக தொழிற்சங்க நனவின் பொதுவான மட்டத்தை ஏற்கும் நிலைப்பாட்டில் இருந்து எழுதப்பட்டிருந்தது, மேலும் அது விவரித்த வேலைத்திட்டம் வேலைத்திட்டம் ஏறத்தாழ முழுமையாக ஜனநாயக பண்புகளின் கோரிக்கைக்கு மட்டுபடுத்தப்பட்டிருந்தது. பிரிட்டனில் சோசலிசப் புரட்சியின் மூலோபாய இலக்காக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லப்படவில்லை. அந்த முன்னோக்குகள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வர்க்கத் தன்மையை விவரிக்கவும் இல்லை அம்பலப்படுத்தவும் இல்லை — இதுதான் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்துக்கான ஒரு புரட்சிகர வேலைதிட்டத்தின் முதல் தேவையாகும்.

அந்த ஆவணம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டம் பற்றியோ, அல்லது பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்துக்கும் உலகெங்கிலுமான ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் தேசிய விடுதலைக்குமான உறவு பற்றியும் ஒன்றும் கூறவில்லை. அந்த ஆவணத்தின் வேலைத்திட்ட பகுதி அயர்லாந்து சுய-நிர்ணயத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை.

அதன் உள்ளடக்கத்திலும் மற்றும் அடித்தளமாக கொண்டிருக்கும் கருத்துருவிலும், WRP ஸ்தாபிதம் அடிப்படையாக கொண்டிருந்த வேலைத்திட்டத்திற்கு ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்த விதத்திலும் ஒரு சம்பந்தமும் இருக்கவில்லை. ஒரேயொரு பந்தி கூட மத்தியவாத எல்லைக்கு வெளியில் செல்லவில்லை. இது எதை கொண்டு WRP தொடங்கப்பட்டதோ அந்த இன்றியமையா தேசியவாத முன்னோக்குடன் பிணைந்திருந்தது. ஹீலி தலைமை SLL ஐ உருமாற்றத்துக்காக அழைப்புவிடுக்கையில், டோரிக்களைப் பிரதியீடு செய்ய ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தல்! என்ற ஒரேயொரு இலக்கை மட்டுமே அது கொண்டிருப்பதாக முழங்கியது.

“புரட்சிகரக் கட்சியாக உருமாற்றம் செய்யப்படும் சோசலிச தொழிலாளர் கழகம் ஒரு குறிப்பிட்ட அரசியல் பணியை முன்னெடுக்கும்: டோரி அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து, அவ்விடத்தில் தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பிரதியீடு செய்யும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் பின்னால் தொழிலாள வர்க்கத்தை ஜக்கியப்படுத்தும்; முதலாளித்துவத்துக்கு சேவையாற்றும் தொழிற் கட்சி தலைவர்களை அம்பலப்படுத்துவதற்கான போராட்டத்திற்குத் தலைமை தாங்கும்; தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் சோசலிச கொள்கைகளுக்கான போராட்டத்தின் மூலம் டோரி-எதிர்ப்பு வெகுஜன இயக்கத்தை முன்னெடுக்கும்; இந்த போராட்டத்தில், பல்லாயிரக் கணக்கானோரை மார்க்சிசத்திற்கு வென்றெடுக்கும் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் சீர்திருத்தவாதத் தலைவர்களை தூக்கியெறியும்.

“அதுபோன்றவொரு புரட்சிகர கட்சி, தொழிற்சாலைகள், தொழிற்சங்கங்கள், இளைஞர் இயக்கம், வாடகைதாரர்களின் இயக்கம், வேலையில்லாதோர் மத்தியிலும், மாணவர் மத்தியிலும் —எங்கெல்லாம் டோரி அரசாங்கதிற்கு எதிரான ஒரு போராட்டம் உள்ளதோ அங்கே— இந்த சக்திகளுக்கு நிஜமான சோசலிச மாற்றீட்டை வழங்குவதற்காக செயல்படும்.

“கட்சியின் உறுப்பினர்கள் கூலி, வேலை, வாடகை, சமூகநலப்பணிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான ஒவ்வொரு போராட்டத்திலும் மிகவும் சுறுசுறுப்பாகவும், முன்னணி போராளிகளாகவும் இருப்பார்கள். ஆனால் இப்போராட்டங்களில் அவர்கள் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் டோரிகளை தூக்கியெறிவதற்குரிய அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்குப் போராடுவார்கள், புரட்சிகர கட்சியின் சக்திகளையும் அணிதிரட்டி பயிற்றுவிப்பது அதன் மையத்தில் இருக்கும்.” (Fourth International, Winter 1973, பக்கம் 132)

சமூக ஜனநாயக அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட காரணத்துக்காக ட்ரொட்ஸ்கிச கட்சியை நிறுவுவது வரலாற்றிலேயே அதுதான் முதல் தடவையாக இருந்தது! இதை விட பிராந்திய மட்டத்திலான ஒரு முன்னோக்கை எளிதாக கற்பனையும் செய்யவியலாது. வரைவு வேலைத்திட்டம் மீதான விமர்சனத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியிருந்தார்: “நமது சகாப்தத்தில், இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில், அதாவது உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும், நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கையில், எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் தனியாகவோ அல்லது பிரதானமாகவோ அதன் சொந்த நாட்டின் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் போக்குகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் அதன் வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது.” (லெனினுக்குப் பின் மூன்றாம் அகிலம், நியூ பார்க், பக்கம் 3)

ஆனால் 1973 இல் ஒரு தேர்தல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்சியை நிறுவ SLL முன்மொழிந்து கொண்டிருந்தது! அதற்கும் மேலாக, புரட்சிகர கட்சியை அமைப்பதற்கான அதன் உரிமையை வலியுறுத்துவதில், SLL, டோரியிசத்துக்கு எதிராகவும் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மிகவும் விடாப்பிடியான போராளியாக தன்னை முன்நிறுத்தியது. அது முழுவதுமாக அந்த புரட்சிகரக் கட்சி ஏறத்தாழ முற்றிலும் “அடிப்படை” உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் வரையறையில் இருப்பதாக அது விவரித்தது, அதன் வர்க்க உள்ளடக்கம் குறிப்பிடப்படவே இல்லை.

“இன்று, SLL தன்னை ஒரு புரட்சிகர கட்சியாக உருமாற்றம் செய்து கொள்வதற்கு ஆதரவு கோரி அழைப்பு விடுக்கும்போது, அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மற்றும் மாற்று தலைமைக்கான போராட்டத்திலும் அது கொண்டுள்ள அதன் சொந்த சாதனைகளின் அடிப்படையிலேயே அது அவ்வாறு செய்கிறது......

“வேலை செய்வதற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அடிப்படை கொள்கைகளுக்கான முழுப் போராட்டத்தில் இருந்தே தற்போதைய SLL வளர்ந்தது.” (அதே நூல், பக்கம் 130)

சில காலத்திற்கு, ஹீலி அந்த புதிய அமைப்பை “அடிப்படை உரிமைகள் கட்சி” என்று அழைக்கும் கருத்தை ஏற்றிருந்தார்! அதிர்ஷ்டவசமாக, அந்த முன்மொழிவை அவர் கைவிட்டார் என்றாலும், அந்த கருத்துக்கு உயர்வளித்த அரசியல் கண்ணோட்டம் அந்த ஸ்தாபக ஆவணத்தில் வியாபித்திருந்தது. அந்த ஆவணத்தின் வேலைத்திட்ட பகுதியில், T&GWU கொள்கை வகுக்கும் குழுவிடமிருந்து கடன் வாங்கியதைப் போல தெரிந்த அதில், அடிப்படை உரிமைகள் பின்வருமாறு ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டது: வேலை செய்வதற்கான உரிமை, வேலைநிறுத்தம் செய்வதற்கான மற்றும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான ஜனநாயக உரிமை, கடந்த காலத்தில் வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாக்கவும் அமைப்பை மாற்றுவதற்குமான(!) உரிமை, உயர்ந்த வாழ்க்கை தரத்துக்கான உரிமை, உடல்நலம் மற்றும் சமூகநலத்துக்கான உரிமை, மற்றும் சிறந்த வீட்டுவசதிக்கான உரிமை.

கழகத்தை கட்சியாக மாற்றுவது, ஒரு பரந்த ஆள்சேர்ப்பு பிரச்சாரம் மூலமாக முன்னெடுக்கப்பட்டது, இதில் இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படுபவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் பிரிவில் சேர்ந்து கொள்ள வரவேற்கப்பட்டார்கள். ஆனால் தெளிவில்லாத சமூக ஜனநாயக உணர்வுகள் கொண்ட எவரொருவரும் கூட உறுப்பினராக ஆவதற்குத் திறந்துவிடப்பட்ட விதத்தில் அந்த வேலைத்திட்டம் எழுதப்பட்டிருந்தது. இவ்வாறு SLL ஐ WRP ஆக மாற்றியமை கட்சியில் உறுப்பினராவதற்கான அரசியல் தகுதியை அபாயகரமாக கீழிறக்குவதுடன் பிணைந்திருந்தது. ஆள்சேர்ப்பானது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக அணிதிரட்டப்படவில்லை, மாறாக தொழிற் கட்சி அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் ஒரு சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தைச் சட்டமாக்குவதற்காகவும் செய்யப்பட்டது.

அதற்கும் கூடுதலாக, அந்த ஆவணம் சோசலிச தொழிலாளர் கழகத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவதை காண்பதே அரிதாக இருந்தது. சரியாக நான்கு சுருக்கமான பந்திகளே ட்ரொட்ஸ்கிச இயக்க வரலாற்றுக்காக அர்பணிக்கப்பட்டிருந்தது. திருத்தல்வாதத்தினைப் பொறுத்த வரை, அது அதன் பிரிட்டிஷ் வடிவத்தை, சர்வதேச மார்க்சிஸ்ட் குழுவை (International Marxist Group) மட்டுமே குறிப்பிட்டது, முந்தைய தசாப்தத்தில் நடத்தப்பட்ட வரலாற்று போராட்டங்கள் சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் சர்வதேச கம்யூனிச அமைப்பின் உறுப்பினர்கள் ஆகிறார்கள் என்பதையோ, அல்லது அவர்களின் அரசியல் வேலையில் அவர்கள் ICFI இன் முன்னோக்குகள் மற்றும் அதன் ஆளுமையுடன் உடன்படுகிறார்கள் என்பதையோ அறிந்திருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. முந்தைய தசாப்தத்தின் போது SLL இன் அரசியல் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியைப் பற்றி விளக்குகையில், அது பப்லோவாத திருத்தல்வாதத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்கான போராட்டம் குறித்து எதையும் குறிப்பிடவே இல்லை.

தொழிலாளர் புரட்சிக் கட்சியை (WRP) நிறுவும் முடிவு பற்றி அனைத்துலக குழுவின் நான்காவது மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை. அது திருத்தல்வாதத்துக்கு எதிரான சர்வதேச போராட்டத்துடன் தொடர்பில்லாத ஒரு தேசிய முயற்சியாக அணுகபட்டது. SLL ஐ WRP ஆக மாற்றியமை, பப்லோவாத கலைப்புவாதம் மற்றும் OCI இன் மத்தியவாதத்திற்கு எதிரான நீண்ட போராட்டத்தின் விளைபொருளாக, அதிலிருந்து ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை பேணுவதற்கும், பாதுகாப்பதற்குமான நனவுபூர்வமான போராட்டத்தின் மூலமாக நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, அந்த "உருமாற்றம்" SLL போராடியிருந்த வரலாற்று கோட்பாடுகளை கறைபடியச் செய்வதற்கும் மற்றும் வேலைத்திட்டத்தைத் தரந்தாழ்த்துவதற்குமான ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, WRP ஸ்தாபிக்கப்பட்ட அப்போதே ICFI ஐ கட்டி எழுப்புவதில் இருந்து விலகும் விளைவு பிரிட்டிஷ் பிரிவுக்குள் உணரக் கூடியதாக இருந்தது.

ஆனால் தொழிலாளர் புரட்சிக் கட்சியை (WRP) நிறுவியதில் தவறில்லை என்றோ, அல்லது அந்த புதிய கட்சி, ட்ரொட்ஸ்கிச கட்சியல்ல என்பதையே அந்த வேலைத்திட்டத்தின் மத்தியவாத குணாம்சம் அர்த்தப்படுத்தியது என்று கூறுவதோ சரியானதாகாது. தொடர்ச்சியான பல பிழையான மற்றும் பற்றாக்குறையான ஆவணங்கள் மட்டுமே தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்திற்குள் நடத்திய போராட்டங்களின் விளைபொருளான ஓர் இயக்கத்தின் தன்மையை மாற்றிவிடாது. ஆனால் WRP ஐ நிறுவிய விதம் ஒரு சந்தர்ப்பவாத விலகலால் பெயரைக் கெடுத்திருந்தது, இது கட்சிக்குள் வளர்ந்து வந்த பாரிய இயக்கத்தின் அழுத்தத்தை —அதுவும் குறிப்பாக அது அதன் தொழிற்சங்க நனவு மட்டத்தைத் தழுவியதை— வெளிப்படுத்தியது. தழுவிய இந்த விதம், நான்காம் அகிலத்திற்குள் மத்தியவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அபிவிருத்தி செய்யாமல் போனதுடன் நேரடியாக தொடர்புடையதாய் இருந்தது. மீண்டுமொருமுறை பழைய உண்மை ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது: அதாவது, யார் மத்தியவாதிகளுடன் அவசரகதியில் தத்துவார்த்தரீதியில் முழுமையின்றி முறிவை நிறைவேற்றுகிறார்களோ, அவர்களுடனேயே தளத்தையே ஏற்கும் நிலையில் போய் முடிகிறார்கள்.