ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

மார்ச் 1979 இன் நான்காம் மாநாடு

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நான்காம் மாநாட்டில் எற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை, தொழிற்சங்க இயக்கத்திலும் மற்றும் தொழிலாளர் இயக்கத்திலும் கட்சியின் அடித்தளத்தைச் சிதைத்து விட்டிருந்த நான்காண்டு கால அதிதீவிர-இடது முட்டாள்தனங்களின் உச்சக்கட்ட விளைவாக இருந்தது. பிரதிநிதிகள் ஒன்றுகூடிய வேளையில், பிரிட்டிஷ் முதலாளித்துவம் "குளிர்கால அதிருப்தி" நடவடிக்கையால் ("Winter of Discontent") அதிர்ச்சி அடைந்து, நிலைமை மீது கலஹன் அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்பதை உணர்ந்து, சமூக ஜனநாயகவாதிகளை வெளியேற்றவும் மற்றும் போருக்குப் பிந்தைய காலகட்டத்திலேயே மிகவும் வலதுசாரி டோரி அரசாங்கத்தை நிறுவவும் ஒரு நாடாளுமன்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருந்தது. இந்த அபிவிருத்திகள் என்னவாக இருந்தபோதினும் நான்காம் மாநாடு இவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, ஹீலியும் பண்டாவும் தொழிற் கட்சியைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான WRP இன் வெறித்தனமான பிரச்சாரத்தை பெருமைப்படுத்தினர்.

நான்காம் மாநாட்டு முன்னோக்குகளின் பெரும்பகுதிகள், 1975 இல் இருந்து கட்சியின் போக்கை நியாயப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. ஸ்ராலினிசத்தின் "மூன்றாம் காலப்பகுதிக்கு" ("third period") எதிரான இந்த போராட்டத்தின் போது 1931-32 இல் ட்ரொட்ஸ்கி ஆய்வு செய்திருந்த ஒவ்வொரு தவறையும் தோற்றப்பாட்டளவில் அது மீண்டும் உருவாக்கி இருந்தது.

அந்த ஆவணம் குறிப்பிட்டது: “தொழிற் கட்சி தலைவர்கள் இனியும் தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்து இருக்கவில்லை. அந்த அரசாங்கம் ஏறக்குறைய மூன்றாண்டுகள் தொழிலாள வர்க்கத்தின் சம்மதத்துடன் ஆட்சி செய்யவில்லை மாறாக உள்நாட்டில் டோரி, தாராளவாத கட்சி, ஸ்காட்டிஷ் தேசியவாத கட்சிகள் மற்றும் உல்ஸ்டார் யூனியன் கட்சிகளின் மிகவும் பிற்போக்குத்தனமான கூறுபாடுகளையும், வெளிநாடுகளில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கியாளர்களின் அங்கீகரிப்பையும் சார்ந்திருந்தது... தொங்குதசையாக தொழிற் கட்சி அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதென்பது தொழிலாள வர்க்கத்திற்குப் பெரும் அபாயங்களைக் கொண்டுள்ளது ஏனென்றால் அது இராணுவம், பொலிஸ் மற்றும் வலதுசாரிகளின் சூழ்ச்சிகளை மூடிமறைக்கிறது." (உலக அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர் புரட்சிக் கட்சியைக் கட்டமைப்பதும் ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டமும், பக்கம் 29-30)

ஒவ்வொரு வாக்கியமும் WRP தலைமையின் முழுமையான நோக்குநிலை பிறழ்ச்சியை அம்பலப்படுத்தின. சமூக ஜனநாயகம் தொழிலாள வர்க்கத்தின் மீது தங்கியிருக்கவில்லை என்று வாதிடுவது, அதன் வரலாற்று தோற்றுவாய்களை மறுப்பதாகவும் மற்றும் அதன் குறிப்பிட்ட அரசியல் செயற்பாட்டை புறக்கணிப்பதாகவும் உள்ளது. வேறெந்த ஐரோப்பிய நாடுகளையும் விட பிரிட்டனில், சமூக ஜனநாயகம் தான் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கி உள்ளது. அதன் தலைவர்கள் ஆளும் வர்க்கத்தின் முகவர்களாக செயல்படுகிறார்கள் என்ற உண்மை மார்க்சிஸ்டுகளால் நீண்ட காலத்திற்கு முன்பே உணரப்பட்டிருந்ததுடன், இந்த காரணத்திற்காக தொழிற் கட்சி விஞ்ஞானரீதியில் முதலாளித்துவ தொழிலாளர் கட்சி என்பதாக வரையறுக்கப்பட்டது. இந்த கருத்துருவின் மதிப்பு என்னவென்றால், இது, தொழிலாள வர்க்கத்தினது அரசியல் வாழ்வில் செல்வாக்கு செலுத்திய முரண்பாடுகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டியதுடன், பெருந்திரளானவர்களை தொழிற் கட்சியிலிருந்து முறித்துக் கொள்ள செய்வதற்கான போராட்டத்தை நோக்கி புரட்சியாளர்களை நோக்குநிலை கொள்ள செய்வதாகும். விடயத்தின் சாராம்சத்தை விட்டுவிட்டு, வெறுமனே தொழிற் கட்சி டோரிக்களை சார்ந்துள்ளது, முதலாளித்துவ வர்க்கம் தொழிற் கட்சியினர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று சர்வசாதாரணமாக கூறுவதன் மூலம், WRP அரசியல் யதார்த்தத்தைப் புரட்டிப் போட்டது, இதன் விளைவாக, கட்சியின் தந்திரோபாயங்கள் தலைகீழாக ஆக்கப்பட்டன.

தொழிலாள வர்க்கத்தை அடக்கி வைப்பதற்கான தொழிற் கட்சியின் ஆற்றல் மீது தவறுக்கிடமின்றி அவர்கள் முழுமையாக நம்பிக்கை இழந்திருந்தார்கள் என்பதால், மூன்று வாரங்களுக்குள், புதிய தேர்தல்களுக்கு நிர்பந்திப்பதற்காக டோரிக்கள் "நம்பிக்கையில்லா" தீர்மானத்தை அறிமுகப்படுத்த இருந்தனர். ஆனால் நான்காம் மாநாடு உவகையோடு பின்வருமாறு பிரகடனப்படுத்தியது:

“தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான போராட்டத்தால் மட்டுமே, இந்த தொங்குதசை தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்கவும் மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சோசலிச முன்னோக்கை வழங்கவும் முடியும்...

“ஹேலி மற்றும் கலஹனை (Denis Healey and James Callaghan) வெளியேற்றுவதற்கான சீர்திருத்தவாத அழைப்புகளின் மற்றும் போராட்டத்தின் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு கலஹன் ஆட்சிக்கு தங்களின் மவுனமான ஒப்புதலை மறைத்து வைத்துள்ள அனைவருக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் ஒரு சமரசமற்ற போராட்டம் இல்லாமல், டோரிகளுக்கு எதிராக எந்த பலமான போராட்டமும் சாத்தியமில்லை என்பதை நமது கட்சியின் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனுபவம் நிரூபித்துக் காட்டியுள்ளது." (அதேநூல், பக்கம் 33)

இந்த வாய்சவடாலின் அரசியல் சாராம்சம், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முன்னே நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து சரணாகதி அடைவதும் மற்றும் குட்டிமுதலாளித்துவ அவநம்பிக்கைவாதமும் ஆகும். தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு உள்ளே தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக வலதுசாரி தலைவர்களை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்று அது முடிவு செய்தது. இங்கே தான் WRP இனது அரசியல் நிலைப்பாட்டின் வர்க்க உள்ளடக்கத்தைக் கட்டவிழ்ப்பதற்கான திறவுகோல் உள்ளது. தொழிற் கட்சி அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான அதன் பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வந்த போர்க்குணம் மீதும் மற்றும் சீர்திருத்தவாதம் மீதான அதன் குரோதத்தின் மீதும் அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை, மாறாக சமூக ஜனநாயகத்தின் மீது அதிகரித்தளவில் ஏமாற்றமும் விரக்தியும் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தை அடித்தளமாக கொண்டிருந்தது. இவ்விதத்தில், தவிர்க்கவியலாமல் தொழிற் கட்சி அரசாங்கம் மீதான நாடு-தழுவிய வெகுஜன வாக்கெடுப்பாக ஆகவிருந்த, ஒரு பொது தேர்தலுக்கான அழைப்பு என்பது, நடுத்தர வர்க்கத்தின் சமூக சுமையை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக தொழிலாளர் இயக்கத்தினுள் சீர்திருத்தவாதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கடந்து செல்வதற்கான ஒரு நன்கு சிந்தித்திராத முயற்சியாக இருந்தது.

WRP இன் கொள்கை, நம்பிக்கையின்றி முரண்பாடுகளுடன் செலுத்தப்பட்டது. முதலில் ஹீலி கரகரப்பான குரலில், தொழிலாளர்கள் தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று முறையிட்டு முழங்கினார், அது டோரிக்களைச் சார்ந்திருப்பதாக அவர் வாதிட்டார். பின்னர் நான்காம் மாநாட்டு தீர்மானத்தின்படி:

“ஒரு பொதுத் தேர்தல் சம்பவத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சி அதன் சொந்த வேட்பாளர்களை நிறுத்தும் ஆனால் டோரிக்கள் மற்றும் தாராளவாதிகளை நீக்குவதற்காக தொழிற் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு முறையீடு செய்ய அது தயங்காது." (அதே நூல், பக்கம் 32)

சமூக ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த இந்த கடினமான தேர்தல் சுற்றுவழி எதற்காக அவசியப்படுகிறது என்பதையோ, ஒரு பொது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏன் இந்தளவுக்கு அதிசயமான குணப்படுத்தும் சக்திகள் வழங்கப்பட்டன? என்பதையோ ஹீலி ஒருபோதும் விளங்கப்படுத்தவே இல்லை! அல்லது தொழிற் கட்சி டோரிக்களைச் சார்ந்திருக்கிறது என்றால் டோரிக்களை வெளியேற்றுவதற்குக் கட்சி ஏன் ஒரு பொதுவான போராட்டத்தை முன்மொழிகிறது என்பதையும் ஹீலி விளங்கப்படுத்தவில்லை.

அனைத்திற்கும் மேலாக, ஆட்சியிலிருக்கும் தொழிற் கட்சி தலைமையின் கீழ் பொது தேர்தலை நடத்த வேண்டுமென ஏன் ஹீலி வலியுறுத்தினார் — "ஹேலி மற்றும் கலஹனை வெளியேற்றுவதற்கான சீர்திருத்தவாத அழைப்புகளுக்கு" WRP இன் வெளிப்படையான எதிர்ப்பிலிருந்து இந்த முடிவை மட்டுமே எட்ட முடியும்." (எதிர் மேற்கோள்., பக்கம் 33)

இந்த நிலைப்பாடு —சோவியத் ஒன்றிய அரசை மாற்றுவதற்காக சாக்ட்மன் ஹிட்லரைப் பயன்படுத்த முன்மொழிந்ததற்குப் பின்னர் இருந்து ஒருபோதும் பார்த்திராததைப் போன்ற தோற்கடிப்புவாதத்தின் ஓர் அரசியல் சாகசமாக இருந்த அது— முற்றிலும் தவறான கணக்கீடு என்று நிரூபணமானது. நடுத்தர வர்க்கத்தின் மனநிலையைச் சரியாக மதிப்பிட்டு மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத்தை கலைக்க நிர்பந்தித்த டோரிக்களின் முன்னோக்குகளுடன், தொழிற் கட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான WRP கோரிக்கைகள் பொருத்தமாக இணைந்து கொண்டன.