ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

அதிதீவிர இடதின் கீழ்நோக்கிய திருப்பம் வலது-மத்தியவாதத்திற்கு வழியமைத்து கொடுக்கின்றது

டோரி வெற்றிக்கு WRP தலைவர்களின் விடையிறுப்பானது வலதை நோக்கிய ஒரு கட்டாய திருப்பத்தினை தொடங்கி வைத்திருந்ததுடன் இது தொழிற் கட்சி சீர்திருத்தவாதிகளுக்கு மிகவும் வெட்கக்கேடாக ஒத்துழைப்பதில் உச்சத்தை அடைய இருந்தது . இந்த திருப்பம், ISTC அதிகாரத்துவமும் அதன் வலதுசாரி தலைவர் பில் சர்ஸூம் (Bill Sirs) மூன்று மாதகால எஃகு ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்ததற்கு WRP வழங்கிய பகிரங்க ஆதரவில் மிகத் தெளிவான அதன் முதல் வெளிப்பாட்டைக் காட்டியது.

1980 ஜனவரி தொடக்கத்தில் வேலைநிறுத்தம் ஆரம்பமானது. வேலைகள் மீதான டோரியின் தாக்குதலுக்கு எதிரான பொது வேலைநிறுத்த நடவடிக்கையில் WRP ஆரம்பத்தில் தொழிற்சங்கங்களை அணித்திரட்டுவதற்காக பிரச்சாரம் செய்தது. அது சர்ஸ் தலைமையை நோக்கி ஒரு விமர்சன போக்கை எடுத்திருந்தது. ஜனவரி 18, 1980 இல் வெளியான ஒரு முதல் பக்க அறிக்கையில் நியூஸ் லைன் இவ்வாறு குறிப்பிட்டது, “சர்ஸ் மற்றும் அவரின் சக TUC அதிகாரத்துவவாதிகளும், இந்த மோதலின் அரசியல் விளைவுகளைத் தவிர்க்கவும், வேலைநிறுத்தத்தை முற்றிலுமாக தொழிற்சங்க மற்றும் சம்பள பிரச்சினைகளுக்குள் மட்டுப்படுத்துவதற்காகவும் அவர்கள் சாத்தியமான அனைத்தையும் செய்துள்ளனர்...

“டோரிகளுடனும் முதலாளித்துவ அரசுடனும் கட்டமைந்து வந்த மோதல்கள் பற்றி தொழிற்சங்க தலைவர்கள் பீதியடைந்தனர். ஏனென்றால் ஒரு பொது வேலைநிறுத்தமானது உடனடியாக அரசு அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

“இதுதான் எஃகு ஆலை வேலைநிறுத்தத்தில் மத்திய பிரச்சினையாக உள்ளது, சீர்திருத்தவாத சமரசமும் அதிகாரத்துவ உபாயங்களும் இதை எந்த விதத்திலும் தீர்க்க முடியாது. இந்த வேலைநிறுத்தம் நெடுகிலும், சர்ஸ் அது பரவுவதைத் தடுக்கவும் அவர் உறுப்பினர்களை வெறுமனே சம்பள உயர்வு கோரிக்கைகளுக்குள் கட்டி வைக்கவும் அவரால் ஆன அனைத்தும் செய்துள்ளார்.”

பத்து நாட்களுக்குப் பின்னர், நியூஸ் லைன் (WRP இன் தொழில்துறை அங்கமான) அனைத்து தொழிற்சங்க கூட்டணியின் (All Trades Unions Alliance) அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அது ISTC தலைவரைக் கடுமையாக கண்டித்திருந்தது: “அவரும் சாப்பேயும் (Chappie) ஒரு பொது வேலைநிறுத்தத்தை நோக்கிய நகர்வுகளைத் 'தடுத்ததற்காக' டோரி பத்திரிகை அப்போதிருந்து சர்ஸைப் புகழ்ந்து வருகிறது... “ (ஜனவரி 28, 1980)

ஜனவரி 29, 1980 இல் நியூஸ் லைன் மற்றொரு தொழிற்சங்கத் தலைவர் மீதான கண்டனத்துடன் சேர்த்து சர்ஸ் மீது தாக்குதலைத் தொடுத்தது: “அல்லது 1980 களின் ஆர்தர் ஸ்கார்கில், ஏ. ஜெ. கூக் ஆகியோரின் அரசியலைப் பரிசீலியுங்கள், இவர் [கூக்] 1974 இல் இருந்ததைப் போலவே எஃகு ஆலை வேலைநிறுத்தத்தை டோரிக்களுக்கு எதிரான சம்பளத்திற்கான போராட்டமாக முன்வைக்க வலியுறுத்துகிறார். ஸ்கார்கில் TUC தலைவர்களிடம் அடக்கமான கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கிறார், வேலைகள், சம்பளங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் தொழிற்சங்க இயக்கத்தை அணித்திரட்டுவது தான் TUC தலைவர்களின் பொறுப்பு என்றாலும், 1977/78 தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தத்தை இவர்கள் தான் நனவுபூர்வமாக காட்டிக்கொடுத்தனர்”

இந்த அறிக்கைக்குப் பின்னர், நியூஸ் லைன் அரசியல் தொனியில் அங்கே ஒரு புதிரான மாற்றம் இருந்தது. டோரி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தை எஃகு ஆலை தொழிலாளர்களின் பின்னால் அணித்திரட்டுவதை சர்ஸ் தொடர்ந்து எதிர்த்து வந்தார் என்ற உண்மைக்கு மத்தியிலும், அதற்கடுத்த மாதம், அங்கே சர்ஸ் மீது எந்த விமர்சனமும் வைக்கப்படவில்லை. நியூஸ் லைனின் புதிய வலியுறுத்தல் டோரி வன்முறை அபாயம் மீது நிலை கொண்டிருந்தது. “டோரி வன்முறைக்கு எதிராக ஐக்கியப்படு” என்று தலைப்பிட்டு, பெப்ரவரி 25, 1980 இல் வெளியிடப்பட்ட அரசியல் குழுவின் பிரதான அறிக்கையில், வேலைநிறுத்தத்தின் முதல் வாரங்களின் போது சர்ஸ் மீது கூறப்பட்ட முந்தைய விமர்சனங்களில் ஒன்று கூட மீண்டும் கூறப்படவில்லை. மார்ச் 1, 1980 இல் வெளியான ஒரு நீண்ட ஆசிரியர் குழு அறிக்கையும், ISTC தலைமை மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை. சர்ஸின் பெயர் கூட குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இறுதியாக, மார்ச் 6, 1980 இல் நியூஸ் லைன் மிகவும் மிதமான விமர்சன தொனியில், எஃகு ஆலை தொழிற்சங்க தலைவர்கள் பின்வாங்கும் அபாயம் இருப்பதாக அறிவித்தது. அதற்கடுத்த நாள் சம்பளங்கள் மற்றும் வேலை பிரச்சினைகளைத் தனியாக பிரிப்பதன் மீது சில பணிவடக்கமான விமர்சனம் வந்தது.

மார்ச் 8, 1980 பதிப்பு, நியூஸ் லைனின்"முற்றிலும் நேர்மையான செய்தி வெளியீட்டுக்காக" அதை பாராட்டுகின்ற, ISTC இன் ஒரு முழு பக்க விளம்பரத்தை தாங்கி வந்தது.

மார்ச் மாதம் முழுவதும் வேலைநிறுத்தம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், எஃகு ஆலை தொழிலாளர்கள் பின்னே தொழிலாள வர்க்கத்திற்குள் ஆதரவு, குறிப்பாக லிவர்பூல் துறைமுகத் தொழிலாளர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் நியூஸ் லைனின் செய்திகளோ ISTC தலைமையை நோக்கி நடைமுறையளவில் விமர்சனபூர்வமற்று இருந்ததுடன், "சர்ஸ் TUC தலைவர்களைச் செயல்படுமாறு கோரி பகிரங்கமாக அழைப்புவிடுக்க மாட்டார்," என்றவொரு வரியைக் குறிப்பிட்டு மார்ச் 14, 1980 பதிப்பில் வெளியான கருத்துரை போன்ற அவ்வப்போதைய கண்டனத்திற்கு கூடுதலாக எதுவும் வழங்கவில்லை.

சர்ஸ் தலைமை, மார்ச் 31, 1980 இல், ஓர் அற்ப சம்பள தீர்வை ஏற்றுக் கொண்டும், எஃகு தொழில்துறையில் நிச்சயமாக பத்தாயிரக் கணக்கான வேலைகளை அழிக்கும் டோரி முன்மொழிவுகளுடன் இணைந்துகொண்டு, திட்டவட்டமாக அந்த வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தது. ISTC அதிகாரத்துவம் வேலை வேகப்படுத்தல் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் எஃகு நிறுவனத்துடன் ஒத்துழைக்க உடன்பட்டது, இவை தொழில்துறை எங்கிலும் ஒரு நாசகரமான விளைவுகளை ஏற்படுத்த இருந்தன. இவ் ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் ஏறக்குறைய உடனடியாக பரவலாக வெளியாயின.

சர்ஸ், "வேலை மறுஒழுங்கு மூலமாக ஏற்கனவே இருக்கும் ஆட்களைக் குறைக்கும்" வரையறை 4(3) மற்றும் "தேவைக்கு அதிகமான செயல்பாட்டு பகுதிகளை" ஆய்வுகுட்படுத்துவதை உறுதியளிக்கும் வரையறை 4(4) ஆகியவற்றை ஏற்றுக் கொண்டார். வரையறை 4(6) உத்தரவாதமான வாராந்த வேலை நாட்களை இல்லாமல் செய்ய கதவைத் திறந்து விட்டது, மற்றும் எஃகு தேவை மேலதிகமாக குறைவது போன்ற வெளிக்காரணிகளை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமென வரையறை 5(4)b குறிப்பிட்டது.

இந்த அப்பட்டமான காட்டிக்கொடுப்பு மீதான அதிர்ச்சிதான் WRP தலைமைக்குள் தென்பட்ட முதல் பிரதிபலிப்பாக இருந்தது, அந்த ஏற்பாட்டைப் பகிரங்கமாக கண்டனம் செய்து வந்த எஃகு ஆலை தொழிலாளர்களின் முன்னால் தமது முகத்தை பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 2, 1980 நியூஸ் லைன் பதிப்பு ISTC-BSC உடன்படிக்கையை விற்றுத்தள்ளப்பட்ட ஒன்றாக குறிப்பிட்டதுடன், அதற்கடுத்த நாள் “எஃகுத் துறையில் கோபம் மீண்டும் திரும்புகிறது,” என்று தலைப்பிட்டு வெளியான அலெக்ஸ் மிட்செல் எழுதிய ஒரு முக்கிய கட்டுரை, சம்பள ஒப்பந்தம் பணவீக்க விகிதத்தைக் கூட கருத்தில் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டது.

எனினும், ISTC அதிகாரத்துவம் மீதான இந்த தாக்குதலால் ஹீலி மிகவும் கோபமடைந்தார், வெறும் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் ISTC அதிகாரத்துவம், வேலைநிறுத்த காட்டிக்கொடுப்புக்கான தயாரிப்பில் அது வகித்த பாத்திரம் குறித்து நியூஸ் லைன் விமர்சனமின்றி செய்திகள் வெளியிட்டதற்காக அதன் பாராட்டை தெரிவித்திருந்தது. மற்ற தேசிய பத்திரிகைகளைப் போலவே, நியூஸ் லைனும் ஏப்ரல் 4, 1980 இல் வெளியாகவில்லை. WRP கொள்கையில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை அறிமுகப்படுத்த, ஹீலி, இந்த ஒரு நாள் விடுமுறையை நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஏப்ரல் 5, 1980 சனிக்கிழமை அந்த பத்திரிகை மீண்டும் வெளியானபோது, முதல்பக்க அரசியல் குழு அறிக்கை ஒன்று அந்த வேலைநிறுத்தம் மீதான மதிப்பீட்டில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை அறிவித்தது. தொழிற்சங்க போர்குணம் மீதிருந்த மிட்செலின் மெல்லிய இணைப்பு சட்டென அறுந்து போயிருந்தது. இப்போது சர்ஸின் காட்டிக்கொடுப்புக்கு நியூஸ் லைன் ஒரு பலவீனமான பாதுகாப்பைத் தயாரித்தது:

“மூன்று மாதம் சிரமமான வேலைநிறுத்த நடவடிக்கைக்குப் பின்னர், எஃகு ஆலை தொழிலாளர்கள் அவர்களால் ஆனமட்டும் முற்றிலும் சம்பளங்கள் சம்பந்தப்பட்ட போராட்டத்தை எடுத்திருந்தனர், அதற்கு மேலதிகமாக அங்கே ஒரு சல்லிக்காசு கூட அதிகமாக கிடைக்கவில்லை.

“அவர்கள் அடுத்த கட்ட டோரி அச்சுறுத்தலை — அதாவது, 50,000 வேலைகள் மீதான தாக்குதலை — சந்திக்க வேலைக்குத் திரும்பினார்கள்...

“பொதுக்குழுவில் இருந்த TUC தலைவர்கள் தான் எஃகு ஆலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்தார்கள், ISTC தலைவர்கள் இல்லை. பில் சர்ஸ் தன்னை ஒரு புரட்சியாளராகவோ அல்லது அதுபோன்ற ஒருவராகவோ கூறிக் கொள்ளவில்லை.

“பொருத்தமற்ற பெயர் கொண்ட ‘சோசலிச தொழிலாளர் கட்சி’ இன் அரசியல் வெட்டிப் பேச்சாளர்கள் மற்றும் உளறல் பேர்வழிகளிகளால் வழி நடத்தப்படும் திருத்தல்வாதிகள், இவ்வார முன்பக்கத்தில் 'விற்றுத் தள்ளப்பட்டதாக' குறிப்பிடும் ஒரு தலைப்பைக் கொண்டுள்ளனர். (சோசலிஸ்ட் வேர்க்கர், ஏப்ரல் 5, 1980)

“பில் சர்ஸை வெறுக்கத்தக்கவராக ஆக்க முயற்சிப்பவர்கள் தான், பிரச்சினையை வேண்டுமென்றே குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, எஃகு ஆலை வேலைநிறுத்தத்தின் நிஜமான துஷ்டர்களை —TUC தலைவர்களை— மூடி மறைத்து வருகிறார்கள்.”

இவ்விதமான ஈனத்தனமான குதர்க்கம், முன்னரெல்லாம் ஸ்ராலினிஸ்டுகள் பிரசுரித்த பத்திரிகைகளில் தான் நிறைந்து கிடந்தது, இவர்கள் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்தவர்களுக்கு மன்னிப்பை வழங்குவதிலும் மற்றும் துரோகிகளை விமர்சனம் செய்வோரைக் கண்டிப்பதிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். இப்போதோ, இந்த எதிர்ப்புரட்சிகர கள்ளத்தனம் ஹீலியால் நியூஸ் லைனுக்குள் கடத்தி கொண்டு வரப்பட்டிருந்தது.