ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

1981: தொழிலாளர் புரட்சிக் கட்சி மக்கள் முன்னனியைத் தழுவுகிறது

எஃகு ஆலை தொழிலாளர்கள் மீதான சிடுமூஞ்சித்தனமான காட்டிக்கொடுப்பானது WRP தலைமைகள் முன்னர் தொழிலாள வர்க்கத்திலிருந்து பின்வாங்கியதுடன் பிணைந்திருந்தது, இது 1981 நெடுகிலும் கொள்கைகள் ஒட்டுமொத்தமாக கைவிடப்பட்டதன் மீதிருந்த மறைப்புகளை அகற்றி இருந்தது. சமூக ஜனநாயகத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் நடத்திய கடுமையான அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தை பொறுமையின்றி கைவிட்டிருந்த ஹீலி, இப்போது தொழிலாள இயக்கத்துக்குள் முற்றிலும் சந்தர்ப்பவாத செயல்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்தார். WRP இன் மொத்த வேலைகளும் "அடிமட்ட" மக்கள் இயக்கத்தினுள் ஊடுருவுவதில் ஒருமுனைப்பட்டிருக்கவில்லை — அதாவது, ஒருவர் பின் ஒருவராக இளைஞர்களையும் ஆலை தொழிலாளர்களையும் நியமிப்பதன் மூலமாக மற்றும் அவர்களை கட்சிக் காரியாளர்களாக மாற்றுவதில் ஒருமுனைப்பட்டிருக்கவில்லை, மாறாக "மேலிருந்து" மூலோபாய பதவியிலிருந்த தொழிற் கட்சிவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடையே நட்பை வளர்ப்பதில் ஒருமுனைப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்களை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “மேலோட்டமான பொறுமையின்மை, கட்சியின் செல்வாக்கு படிப்படியாக வளரும் என்பதில் நம்பிக்கையின்மை, ஓர் அமைப்புரீதியான உபாயங்கள் அல்லது தனிப்பட்ட இராஜதந்திரத்தின் உதவியுடன் பெருந்திரளான மக்களை வென்றெடுப்பதற்கான விருப்பம் ஆகியவை சந்தர்ப்பவாதத்தின் உளவியல்ரீதியான மூல ஊற்றுக்களாகும். இதிலிருந்து திரைமறைவு அரசியல் சேர்க்கைகள், மௌனமாக இருக்கும் கொள்கைகள், வாயடைக்க வைக்கும் சத்தம், சுய-துறவின் கொள்கை, மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் கோஷங்களை ஏற்றுக்கொள்ளும் கொள்கை; இறுதியில், சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கு முழுமையாக பாதை அமைப்பது எழுகின்றது.” (மார்க்சிசமும் தொழிற்சங்கங்களும், நியூ பார்க், பக்கம் 74)

சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களிலும், முதலாளித்துவ அரசு எந்திரத்தை திருட்டுத்தனமாக கைப்பற்றி தொழிலாள வர்க்கத்தின் சேவையில் நிறுத்த முடியும் என்ற கருத்துருவை விட மிகவும் அபாயகரமான மற்றும் அரசியல்ரீதியில் ஆபத்தானது வேறொன்றுமில்லை. இந்த பிரச்சினையில் வழி தவறி போயிருந்த முதல் நபர் லஸ்ஸால் (Lassalle) ஆவார், அடுத்தடுத்து ஒவ்வொரு பரிசோதனையும் பெரும் பாதகங்களை மட்டும் உருவாக்கி இருக்கவில்லை, மாறாக நிஜமான குற்றங்களையும் காட்டிக்கொடுப்புகளையும் உருவாக்கி இருந்தது. இப்போது இந்த முட்டாள்தனத்தைக் கையிலெடுத்து முயற்சிக்க ஹீலி தயாராக இருந்தார்.

எஃகு ஆலை வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், லம்பேத்தில் ரெட் நைட் (Ted Knight) எனும் பெயர் கொண்ட ஒரு தொழிற் கட்சி நடவடிக்கையாளருடன் ஹீலி மீண்டும் அவர் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டிருந்தார். இந்த மனிதர் 1960 களின் தொடக்கத்தில் ஹீலியுடன் முன்னர் தொடர்பில் இருந்தவர் என்றாலும், ட்ரொட்ஸ்கிசத்திற்கும் தொழிற் கட்சியில் ஒரு தொழில்முறை வாழ்வுக்கும் இடையே வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்பட்டபோது, அவர் தனது மனசாட்சியின் ஆணைப்படி, (WRP இன் முன்னோடியான) சோசலிச தொழிலாளர் கழகத்துடன் திட்டவட்டமாக உறவைத் துண்டித்துக் கொண்டார். நீண்ட கால தொடர்பின்மைக்குப் பின்னர், இப்போது, அவர்களின் பாதைகள் மீண்டும் சந்தித்துக் கொண்டன. ஒருவர் மற்றவருக்குத் தேவையான ஏதோவொன்றை கொண்டிருப்பதாக அவர்கள் கண்டனர். தொழிற் கட்சிக்குள் முக்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நைட், கென் லிவிங்ஸ்டன் (Ken Livingstone) என்ற பெயர் கொண்ட வளர்ந்து வந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்க "இடது" நபர் ஒருவருடன் நல்ல நட்புறவில் இருந்தார். மறுபுறம், ஹீலி, ஒரு சில அச்சகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், நைட் இற்கு தேவையானால் மிகப் பெரிய எந்திர வளங்களை அவருக்கு வழங்க கூடியவராக இருந்தார். ஒரு பேரம் முடிந்தது. இடது மீதான விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு நைட்டின் அடித்தளத்தை விரிவாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஹீலி அவருக்கு வழங்குவார். “ரெட் டெட்" ("Red Ted") கூறியவாறு, லம்பேத் மற்றும் இலண்டன் மாகாண சபை மூலமாக தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கு மாற்றீடான ஒரு ஒன்றை நைட் ஹீலிக்கு வழங்குவார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்ட நிலையில், அவரின் 70 ஆம் வயதை நெருங்கிக் கொண்டிருந்த ஹீலி, இலண்டனில் சீர்திருத்தவாத இரட்சகர்கள் சிலரின் செல்வாக்குக்காக, கணக்கை முடித்துக் கொள்ள தயாரானார். 1928 இல் புரட்சிகரப் பாதையில் புறப்பட்டு, ஹீலி —அவரே கடந்த காலத்தில் எதிர்த்து போராடி இருந்த மற்றும் அலட்சியம் செய்திருந்த பலரைப் போலவே— இறுதியில் அவரும் நீண்ட பயணத்தின் பிரயோசனமற்ற தன்மையில் நம்பிக்கை கொண்டார். ஒரு குறுக்கு வழி கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது, ஆகவே அவர் ஒரு புதுமையான கருத்தால் ஈர்க்கப்பட்டார்: அதாவது, சோவியத்துகளைக் கொண்டு நாடாளுமன்றத்தைப் பிரதியீடு செய்ய அவரால் தொழிலாள வர்க்கத்தை தயார் செய்ய முடியவில்லை என்றால், ஏன் நாடாளுமன்றவாதிகளை சோவியத் ஆணையாளர்களாக மாற்ற முயற்சிக்கக்கூடாது? என்பது தான் அது.

நைட் உடன் எட்டப்பட்ட பேரம் ஒரு விடயம். அதை கட்சிக்கு விற்றது மற்றொரு விடயம். மும்மூர்த்தி கச்சேரியின் (Three Penny Opera) இந்த அரசியல் பாய்ச்சலை, அவசியமான "இடது ஒலியெழுப்பும்" வார்த்தையாடல்களை கொண்டு நிரப்ப வேண்டியிருந்தது. இதன் வழியிலேயே இதற்காக சமூக சபைகளின் (Community Council) அடிப்படையிலான தொழிலாளர் புரட்சிகர அரசாங்கத்தின் கதைக்கரு மேலெழுந்து வந்தது.

சமூக சபைகளை அடிப்படையாக கொண்ட தொழிலாளர் புரட்சிகர அரசாங்கம், சோவியத்துகளை அடிப்படையாக கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பிரிட்டன்-தயாரிப்பு வடிவமாக, வெறுமனே புதுப்பிக்கப்பட்ட ஒன்றுதான் என்று அடிமட்ட WRP உறுப்பினர்களுக்கு உத்தரவாதங்கள் வழங்கப்பட்ட போதினும், முன்னர் அறியப்படாத இவ்விதமான அரசு அதிகார வகைப்பாட்டின் நிஜமான உள்ளடக்கம் முற்றிலும் வேறுவிதமானதாக இருந்தது.

WRP இன் வேலைதிட்ட அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்ததைப் போல, சமூக சபைகள் என்பவை பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்திற்கான சுயாதீன அங்கங்களாக இருக்கவில்லை, மாறாக முதலாளித்துவ உள்ளாட்சி அரசாங்கத்தின் அரசியல் துணை அமைப்புகள் கருத்தில் எடுக்கப்பட்டிருந்தன. டோரி நிதியியல் பிழிவுகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே சிக்கிய தொழிற் கட்சி ஆணையாளர்களுக்கு எடுபிடியாக சேவையாற்றுவதே இந்த சபைகளுக்கு WRP ஆல் ஒதுக்கப்பட்ட பிரத்யேக பணிகளாக இருந்தன.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல், சமூக வாழ்வில் தொழிற்சங்கங்கள் செல்வாக்கு கொண்டிருந்த போதினும், இந்த சபைகளை உருவாக்குவதிலும் தலைமை கொடுப்பதிலும் தொழிற்சங்க அமைப்புகளுக்கு WRP வெகு குறைவான பாத்திரமே ஒதுக்கி இருந்தது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும். பெப்ரவரி 1981 இல் WRP இன் ஐந்தாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அறிக்கை '81 (Manifesto '81) இவ்வாறு குறிப்பிட்டது:

“தொழிற்சங்கங்கள் தான் சமூக சபைகளின் இதயத்தானத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த சமூக சபைகள் வேலைகளுக்காகவும், வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் மற்றும் வர்த்தகர் சபைகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பொறுப்பேற்று அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடும்.” (பக்கம் 8, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)

தொழிலாளர் புரட்சிக் கட்சி விரைவிலேயே, தொழிற்சங்க போராட்டங்களை, நடைமுறையளவில் முழுமையாக, தொழிற் கட்சி செல்வாக்கு கொண்ட உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளின் நலன்களுக்கு, அதாவது பிரிட்டனில் கடந்த 400 ஆண்டுகளாக முதலாளித்துவ அரசு அங்கங்களாக பரிணமித்து வந்துள்ள இவற்றுக்கு அடிபணிய செய்யுமாறு கோர இருந்தது. தொழிற் கட்சியினர் டோரிக்களைச் சார்ந்திருப்பதாக அது இரண்டாண்டுகளுக்கு குறைவான காலத்தில் வலியுறுத்தி கொண்டிருந்த போதினும், தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் தொழிற் கட்சி கட்டுப்பாட்டிலான "உள்ளாட்சி அரசாங்கம்" முக்கிய பாத்திரம் வகிப்பதை இப்போது WRP அலட்சியம் செய்தது. உள்ளாட்சி அரசாங்கத்தின் பெரும்பான்மை ஆசனங்கள் ஒருசமயம் தொழிற் கட்சி ஆணையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அதை தொழிலாளர்களினது ஆட்சிக்கான அங்கமாக ஆக்குவது என்பது WRP அபிவிருத்தி செய்த கொள்கையில் தொக்கி நின்ற முற்றிலும் சீர்திருத்தவாத கருத்துருவாகும். இது, இரண்டாம் அகில சகாப்தத்தின் போது பூத்துக் குலுங்கிய "நகரசபை" சோசலிசம் ("municipal" socialism) என்ற பழைய மதிப்பிழந்த கருத்துருக்களுக்குப் புத்துயிரூட்டுவதற்கு மேலதிகமாக வேறொன்றுமில்லை, இது தான் இன்று இத்தாலியில் ஸ்ராலினிச மூலோபாயத்தின் மையக்கருவாக விளங்குகிறது.

தொழிலாள வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்கத்திடம், அதுவும் காஸ்ட்ரோ போன்ற குட்டி முதலாளித்துவ தீவிர தலைவர்களுக்கும் கூட, கீழ்ப்படுத்துவதை WRP எதிர்த்த அந்நாட்களில் இருந்து அது வெகுதூரம் விலகி சென்றிருந்தது. ஆனால் இப்போதோ அவர்கள் முதலாளித்துவ அரசு அமைப்புகளை ஜனநாயகமயப்படுத்துவதற்கும் மற்றும் அவற்றை தொழிலாள வர்க்க நலனுக்காக பயன்படுத்துவதற்குமான சாத்தியக்கூறைக் குறித்து பெருமைபீற்றினர்.

முக்கியமாக WRP முன்நிறுத்திய சமூக சபைகளின் பாட்டாளி வர்க்கம் அல்லாத அச்சினை புரிந்து கொள்வதில் முக்கியமானது அதன் பின்வரும் கோரிக்கையாகும்:

“சில இடங்களில் ஏறக்குறைய ஒரே இரவில் முளைத்திருந்த தற்போதிருக்கும் உள்ளாட்சி சமூக அமைப்புகளை சமூக சபைகளுடன் இணைக்க வேண்டும் — சான்றாக, பொலிஸ் வன்முறைக்கு எதிரான, இனவாதத்திற்கு எதிரான, மருத்துவமனை மற்றும் பள்ளிமூடல்களுக்கு எதிரான, விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகங்கள் போன்ற உள்ளாட்சி வசதிகளுக்கு செய்யப்படும் வெட்டுக்களுக்கு எதிரான, மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக்கழக கல்விகள் மீதான வெட்டுக்களுக்கு எதிரான சமூக குழுக்கள், வாடகைதாரர்கள் மற்றும் வரி செலுத்துவோர் அமைப்புகள் ஆகியவற்றை.” (அதே ஆவணம், வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது)

இவை அனைத்தும் பிரபல்யமானவையாகவும் ஜனநாயகமானவையாகவும் ஒலித்தன என்றாலும், நிஜமான உண்மை என்னவென்றால் அது புரட்சிகர போராட்டத்தின் அச்சை பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் சுயாதீனமான வர்க்க அமைப்புகளிடம் இருந்து விலக்கி, முதலாளித்துவ அரசின் துணை அமைப்புகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகரீதியில் ஒழுங்கமைக்கப்படாத பல்வேறு "உள்ளாட்சி அமைப்புகளுக்கு" மாற்றுவதற்கான ஒரு முயற்சிக்கு நிகராக இருந்தது. தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளி வர்க்க அச்சிலிருந்து விலகிய இந்த விலகல் மக்கள் முன்னணி வர்க்க கூட்டுக்குப் பகிரங்கமாக வக்காலத்துவாங்க நேரடியாக இட்டுச் சென்றது. WRP வலியுறுத்தியது, சமூக சபைகள் "டோரிக்களை எதிர்த்து போராடும் அனைவருக்கும் — அதாவது, உள்ளாட்சி தொழிற் கட்சி குழுக்களுக்கும், தொழிலாளர் இயக்கத்தின் ஏனைய அரசியல் அமைப்புகளுக்கும் மற்றும் மதம், நிறம், தேசியம் பார்க்காமல் மற்றவர்களுக்கும், அவர்கள் ஒருவேளை கடந்த பொது தேர்தலில் தவறுதலாக டோரிக்களுக்கு வாக்களித்து இருந்தாலும் கூட,அவர்களுக்கும் — கதவுகளைத் திறந்து விட வேண்டும். (அதே ஆவணம், வலியுறுத்தல் சேர்க்கபட்டது)

இந்த “ஏனையோர்” என்பவர்களில் முந்தைய டோரி அரசாங்கங்களில் “தவறுதலாக” பதவிகளை வகித்த டோரி "குடியினரையும்", மற்றும் டெட் ஹீத் போன்ற, ஒருவேளை "தவறுதலாக" தொழிற்சங்கங்களை அழிக்க முயன்றவர்களையும் உள்ளடக்கி இருக்குமா என்பது விவரிக்கப்படவில்லை. அது ஹீலியால் "திறந்த கேள்வி" என்ற பக்கத்தில் கைவிடப்பட்டிருந்தது.