ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

WRP தொழிற் சங்கங்களைத் தாக்குதல்

மே 1981 இல், தொழிற் கட்சியினர் உள்ளூராட்சி தேர்தல்களில் வெற்றிபெற்று, பெரிய இலண்டன் நகரசபையில் (GLC) பெரும்பான்மையை பெற்றனர், இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ அரசைப் பாதுகாத்து கொண்டிருந்த உள்ளூர் அரசாங்கத்தில் உள்ள "மத்தியவாத போக்குகளுடன்" WRP தலைமை அதன் உறவுகளை விரிவாக்க வாய்ப்பை வழங்கியது. வர்க்கப் போராட்டம் சம்பந்தமான இந்த திருப்பத்தின் முக்கியத்துவம் மிகவும் பட்டவர்த்தனமான முறையில் விரைவிலேயே எடுத்துக்காட்டப்பட்டது.

ஜூனில், சுரங்கப் பாதை போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் சங்கம் 15 சதவீத சம்பள உயர்வு பெறுவதற்கு வேலைநிறுத்த அச்சுறுத்தலை விடுத்தது. ஜூன் 26, 1981 தேதியிட்டு "திரு வெய்ஹெல்ஸின் ஏமாற்று நாடகம்" (Mr. Weighell's Double-Cross) என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில் நியூஸ் லைன் பதிலளித்தது:

“ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்திற்காக இலண்டன் சுரங்கப்பாதை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிட்னி வெய்ஹெல் (Sidney Weighell) அழைப்பு விடுப்பதை ஒரேயொரு விதத்தில் மட்டுமே விவரிக்க முடியும் — இது பெரிய இலண்டன் நகரசபை தலைமையிலான புதிய இடதுசாரிகளை மதிப்பிழக்க செய்வதை இலக்காகக் கொண்ட வலதுசாரிகளின் ஓர் ஆத்திரமூட்டலாகும்...

“அவரின் தொழிற்சங்க மாநாட்டுக்கு ஒருசில நாட்களே இருந்த நிலையில், வெய்ஹெல், இலண்டன் பொது போக்குவரத்தை நேரடியாக கட்டுப்பாட்டில் கொண்டிருந்த GLC ஐ அது விரும்பாத ஒரு மோதலுக்குள் தள்ளிவிட தயாரானார்...

“டோரி அரசாங்கத்திற்கு எதிரான பிரதான போராட்டத்துக்கு, பகுதியான கோரிக்கைகள் அடிபணியச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை தொழிலாளர் புரட்சிக் கட்சி விடாது வலியுறுத்தி உள்ளது. தொழிலாளர்களுக்கும் தொழிற் கட்சியின் நகரசபைகளுக்கும் இடையிலான மோதல்களால் தாட்சர் மட்டுமே பயனடைவார்.

“ஆனால், லிவிங்ஸ்டனுக்கு எதிரான அவரின் வசைபாடல் ஊர்ஜிதப்படுத்துவதைப் போல, டோரிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெய்ஹெல் க்கு அக்கறை இல்லை. சுரங்கப் பாதை போக்குவரத்து துறையின் NUR உறுப்பினர்கள் அவரது முடிவை நிராகரித்து, பிரதான எதிரிக்கு எதிராக —தாட்சர், ஹெசெல்டைன் மற்றும் ஃபௌவ்லெர்— பெரிய இலண்டன் நகரசபையுடன் உறுதியாக நிற்க வேண்டும்."

ஜூலை 4, 1981 இல் நியூஸ் லைன் கோரியது:

“இரயில்வே தொழிலாளர்களின் தேசிய சங்கத்திற்கும் (National Union of Railwaymen-NUR) தொழிற் கட்சி தலைமை தாங்கும் பெரிய இலண்டன் நகரசபைக்கும் இடையேயான இலண்டன் போக்குவரத்து சம்பள கோரிக்கை மீதான மோதல் என்ன விலை கொடுத்தேனும் தவிர்க்கப்பட வேண்டும்.

“சுரங்கப்பாதை தொழிலாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ள ஜூலை 20 இல் இருந்து தொடங்கும் வேலைநிறுத்தமானது, தொழிலாளர் இயக்கத்திற்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் இடையிலான ஒற்றுமையில் ஓர் அபாயகரமான உடைவை உருவாக்கும் என்பதுடன், டோரிக்கள் இதை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள விரைவார்கள்...

“GLC க்கும் NUR க்கும் இடையிலான எந்தவித சம்பள பேச்சுவார்த்தைகளும் இத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வின் உண்மைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்...

“தொழிற்சங்கங்களுக்கு அவற்றின் முழு கோரிக்கையை முன்னெடுக்க உரிமை உள்ளது, அத்துடன் தொழிற் கட்சி தலைவர் கென் லிவிங்ஸ்டன் தான் அவர்களுக்கு இந்த உரிமையை மறுக்கக்கூடிய கடைசி மனிதராக இருப்பார்.

“ஆனால் அதேபோல், டோரிகளுக்கு எதிரான நகரசபை போராட்டத்தில் அதனுடன் வெய்ஹெல் நல்லிணக்கத்துடன் நிற்க வேண்டுமென கோருவதற்கு GLC தலைவர்களுக்கும் உரிமை உள்ளது."

இவ்வாறு, ஒரு வேலைநிறுத்த நிகழ்வின் போது, தொழிற்சங்கத்திற்கு எதிராக GLC என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றை WRP ஆதரிக்கும் என்பதை, ஒற்றுமையின் பெயரில், அது தெளிவுபடுத்தியது. ஜூலை 8, 1981 இல், நியூஸ் லைன் லிவிங்ஸ்டனின் முழு பக்க கடிதம் ஒன்றை பிரசுரித்தது. இது GLC இன் நிலைப்பாட்டை பாதுகாத்தது — அவ்விதத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக WRP க்கும் லிவிங்ஸ்டனுக்கும் இடையிலான முழுமையான நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

இரண்டாம் உலக போரின் போதும் மற்றும் 1937 இல் ஸ்பெயினிலும் ஸ்ராலினிஸ்டுகளினது நிலைப்பாட்டுக்கும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான ஹீலியின் நிலைப்பாட்டிற்கும் இடையே ஒரு இம்மியளவு வித்தியாசமும் இருக்கவில்லை. அவ்விடயங்களில், ஸ்ராலினிஸ்டுகள், "பாசிச-எதிர்ப்பு" போராட்டம் என்றழைக்கப்பட்டதன் தேவைகளுக்காக தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை அடிபணிய செய்து கொள்ள வேண்டுமெனக் கோரினர், தொழிலாளர் புரட்சிக் கட்சியோ "பிரிந்து கிடக்கும் போராட்டங்கள்" —அதாவது, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள்— "டோரி அரசாங்கத்திற்கு எதிரான பிரதான போராட்டத்திற்கு அடிபணியச் செய்யப்பட வேண்டும்," என்று வலியுறுத்தியது.

எரிச்சலூட்டும் விதத்தில் இச்சொற்றொடர் ‘போராட்டம்’ என்ற வார்த்தையைக் கொண்டு விளையாடியதற்கு நிகராக இருந்தது. ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் பொறுத்த வரையில், தொழிலாள வர்க்கம், பாரம்பரிய வலதுசாரி தலைவர்களுடன் மட்டுமல்ல மாறாக மிக முக்கியமாக இடதுகளுடன் மோதலுக்கு நுழையும் போதுதான், முதலாளித்துவ எதிரிக்கு எதிராக வர்க்கப் போராட்ட அபிவிருத்தியின் மிக முக்கிய கட்டம் வருகிறது. இது, தொழிலாள வர்க்கம் புரட்சிகர போராட்டத்தை நோக்கி ஒரு பாதை எடுக்க முயல்கிறது என்பதற்கு தவறுக்கிடமற்ற ஒரு அடையாளமாகும்.

தொழிலாள வர்க்கம் தொழிற் கட்சி இடதுகளிடம் இருந்து அதன் முக்கிய ஆதரவை விலக்கிப் பார்க்க தொடங்குகின்ற போது இருப்பதை விட, வேறு எப்போதும் பிரிட்டனில் முதலாளித்துவ சமூகம் அந்தளவுக்கு மிகப் பெரிய ஆபத்தில் இருப்பதில்லை. ஆனால் திட்டவட்டமாக இந்த கட்டத்தில் தான், WRP, இத்தகைய சீர்திருத்தவாத வார்த்தைஜால பேச்சாளர்களின், அவ்விதத்தில் முதலாளித்துவத்திற்கே கூட, மிகவும் நனவுபூர்வமான பாதுகாவலராக செயல்பட்டது. இந்த இடதுகள் மீது கோரிக்கைகள் வைக்க மறுத்தும் —அவ்விதத்தில் அவர்கள் முதலாளித்துவத்துடன் உறவை முறித்துக் கொள்ள மறுப்பதை மிகவும் தெள்ளத்தெளிவான விதத்தில் அம்பலப்படுத்த மறுத்தும்— WRP தலைமை அவர்களுக்குச் சார்பாக தொழிலாள வர்க்கத்தை ஒழுங்குப்படுத்த செயல்பட்டது. WRP திரட்டியிருந்த அனைத்து அளப்பரிய வளங்களும் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான பாதைக்கும் ஒரு அளப்பரிய முட்டுக்கட்டையை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. முழுமையான அரசியல் மற்றும் வரலாற்று அர்த்தத்தில், ஜெரி ஹீலி தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு துரோகியாக மார்க்சிசத்திற்கு ஒரு எதிரியாக, மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்குள் முதலாளித்துவத்தின் ஓர் அரசியல் முகவராக மாறியிருந்தார்.

தொழிலாள வர்க்கம் மீதான அவரின் மிகப்பெரும் காட்டிக்கொடுப்பானது பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்திற்குள் நேரடியான மற்றும் பேரழிவு தரும் அரசியல் விளைவுகளைக் கொண்டிருந்தன. தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஒரு புரட்சிகர முன்னேக்கை பறித்தெடுக்க WRP நனவுபூர்வமாக செயல்பட்டது. இடது சீர்திருத்தவாதிகளின் —மூலதனத்தினது துரதிர்ஷ்டவசமான இந்த சேவகர்களின்— கொள்கைகளுக்கு அங்கே வேறெந்த மாற்றீடும் இருக்கவில்லை என்று அது நாளும் பொழுதும் வேறு விதமாக வாதிட்டது. WRP, அவர் தலைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்திற்குள் மனச்சோர்வையும் குழப்பத்தையும் விதைத்தது. தன்னைத்தானே புரட்சிகரமானதாக அழைத்துக் கொள்ளும் ஓர் அமைப்பு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இதை விட பெரிய குற்றம் செய்திருக்க முடியாது. WRP இன் சேதி இதுதான்: தொழிற் கட்சியினர் அதிகாரத்தில் இருக்கிறார்கள் —உங்கள் போராட்டங்களைக் கைவிடுங்கள்— உங்களின் சம்பள கோரிக்கைகளைக் கைவிடுங்கள் —சீர்திருத்தவாதிகளுடன் நல்லிணக்கத்தைப் பேணுங்கள்— உங்கள் தலைவிதியை அவர்கள் கரங்களில் ஒப்படையுங்கள் — அத்துடன், கடவுள் புண்ணியமாக, வீதிகளை விட்டு கலைந்து வீட்டுச் செல்லுங்கள்.