ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

அனைத்து அதிகாரங்களும் GLC க்கே!

1975 க்கும் 1979 க்கும் இடையில் ஒரு பொதுத் தேர்தலுக்கான கட்சியின் போராட்டம், அதனை டோரி கொள்கையின் முன்னெதிர்பார்த்திராத கருவியாக மாற்றியிருந்தது என்றால், உள்ளூராட்சி சபைகளுக்கான (Community Councils) 1981 க்கு பின்னரான அதன் பிரச்சாரம் அதனை சமூக ஜனநாயகத் துரோகத்தினது ஒரு நனவுபூர்வமான முகவராக ஆக்கியிருந்தது. இப்போதிருந்து, WRP தலைமையின் அனைத்து வேலைகளும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சில பகுதிகளுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கூட்டினை அபிவிருத்தி செய்யவே ஒருமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய நிலைப்பாடு, சில பிரச்சினைகளுக்கு மத்தியில், நடைமுறையளவில் 1981 ஜனவரியில் தொடங்கி வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி சேவைகளை வெட்டுவதற்கான டோரி கோரிக்கைகளை முகங்கொடுத்திருந்த, ரெட் நைட்டால் (Ted Knight) வழிநடத்தப்பட்ட லம்பேத் (Lambeth) நகரசபையின் தொழிற் கட்சி ஆணையாளர்கள் (Labour Councillors), அரசாங்கத்தை எதிர்த்து போரிட்டு சேவைகளைப் பாதுகாப்பதா அல்லது தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து உள்ளாட்சி வரி வீதங்களை உயர்த்துவதன் மூலமாக மோதலை தவிர்த்துக் கொள்ள முயல்வதா என முடிவெடுக்க வேண்டியிருந்தது.

WRP வரி வீத உயர்வுக்கு எதிராக வந்தது. ஜனவரி 7, 1981, நியூஸ் லைன் தலையங்கம் “அருவருப்பான வேலையைச் செய்யாதீர்” என்று தலைப்பிட்டு எச்சரித்தது:

“டோரி வெட்டுக்களைத் தோற்கடிக்கும் முயற்சியாக உள்ளூராட்சி நகரசபைகளில் (Local councils) வரி வீதங்களை உயர்த்துவென்பது நெருப்போடு விளையாடுவதாகும். வரி வீத உயர்வுகளால் சாதாரணமாக ஈடுசெய்ய முடியாது என்பதால், அது பொருளாதாரரீதியாக அபத்தமானது மட்டுமல்ல, மாறாக அது அரசியல் தற்கொலைக்கு நிகரானது.

“அது மற்ற காரணங்களுக்காகவும் ஆபத்தானது. எரிவாயு, மின்சாரம், வெப்பமூட்டி மற்றும் பொதுப் போக்குவரத்திற்கு மிக அதிக கட்டணம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய விடயங்களில் ஏற்கனவே மிகவும் கொடுமையான பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகின்ற தொழிலாள வர்க்க குடும்பங்கள் மீது அது டோரி கொள்கைகளின் சுமையை மேலும் அதிகமாக இறக்கி வைக்கிறது.

“அது நடுத்தர வர்க்கத்துக்கும் கூட சவுக்கடி கொடுப்பதுடன், டோரி-எதிர்ப்பு கூட்டாளிகளாக இருக்க கூடியவர்களைத் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கசப்பான எதிர்ப்பாளர்களாக திருப்புகிறது. இதைத்தான் டோரிகள் விரும்புகிறார்கள்.”

ஆனால் மறுநாள், ஜனவரி 8, 1981 இல், லம்பேத் வரி வீதங்களை உயர்த்த நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக நியூஸ் லைன் அறிவித்தது. ஜனவரி 9, 1981 வாக்கில், அது வரி வீத உயர்வை ஆசிரியத் தலையங்கத்திலேயே ஆதரித்தது: "உள்ளூராட்சி சபை கூடுதல் வரி வீதத்திற்கு முடிவெடுக்காமல் இருந்து அது ஒரு கடன் செலுத்தவியலா பெரும் நிதியியல் நெருக்கடியில் போய் முடிந்தால், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மீது 11.2 மில்லியன் பவுண்ட்டுகள் பற்றாக்குறை கூடுதலாக சுமத்தப்படுவதுடன் அரசு ஆணையர்களால் சபைகள் கையேற்கப்பட வேண்டியும் இருந்திருக்கும். அது டோரிக்களுக்கு மட்டுமே உதவியாக அமையும் என்பதுடன், தன்னாட்சி பெருநகரங்களின் (boroughs) எதிர்காலத்திற்கும் அது ஆபத்தாக இருந்திருக்கும்."

ஏழாண்டுகளுக்கு முன்னர், WRP, சமூக சேவைகளைப் பாதுகாக்க ஒரு புரட்சிகரக் கொள்கையை முன்னெடுத்தது. அது குறிப்பிட்டிருந்தது: "வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை பொதுச் சேவைகள், முதலில் நாட்டின் செல்வத்திலிருந்து உதவி பெறப்படவேண்டும். நிலம், கட்டிடங்கள் மற்றும் கட்டுமானப் பொருள் தொழில்துறை, வங்கிகள், மருந்து உற்பத்திகளை தேசியமயமாக்குவது மட்டுமே இந்த சேவைகளைக் கட்டமைப்பதற்கான ஒரே அடித்தளம்.

“இந்த அத்தியாவசிய பணிகளுக்காக வங்கிகளிடமிருந்தும் கடன் வழங்குவோரிடமிருந்தும் பெறப்பட்ட கடனானது உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். தொழிற் கட்சி நகரசபை தலைவர்கள் (கவுன்சிலர்கள்) இந்த கடன்களை நிராகரிப்பதுடன், இந்த அத்தியாவசியமான சேவைகளை வழங்க வேண்டும்." (WRP முன்னோக்குகள், ஆகஸ்ட் 1, 1974 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது)

கட்சியை லம்பேத் சீர்திருத்தவாதிகளின் பின்னால் நிறுத்துவதற்காக, இந்த கொள்கை முழுமையாக தூக்கியெறியப்பட்டது. ஹீலி, ஜனவரி 17, 1981 இல் நியூஸ் லைனின் 24 பக்க சிறப்பு பதிப்பு ஒன்றை வெளியிட ஏற்பாடு செய்தார், அது லம்பேத் நகரசபை தலைவர்கள் மற்றும் ரெட் நைட் மீது பாராட்டுக்களைக் குவிப்பதற்காக அர்பணிக்கப்பட்ட எட்டுப் பக்க துணை இணைப்பையும் உள்ளடக்கி இருந்தது. ஆசிரியர் குழு அறிக்கை ஒன்று, "தொழிற் கட்சி கட்டுப்பாட்டிலான லம்பேத் நகரசபைக்கு முழு ஆதரவு வழங்க" இலண்டனில் "உள்ளாட்சி அரசாங்கத்தின் நெருக்கடி" என்ற மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தது, லம்பேத் நகரசபை "சரியான மற்றும் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக" அந்த அறிக்கை வாதிட்டது.

வரி வீதத்தை உயர்த்துவதற்கான லம்பேத் முடிவுக்கு எதிராக பல்வேறு திருத்தல்வாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நியூஸ் லைன் இன் வாய்சவடால் வீரர்கள் எழுதினார்கள்: "வரி வீத அதிகரிப்பைக் கொண்டு டோரி வெட்டுக்களை ஈடுசெய்ய முடியாது என்பதையும், அதற்கான அரசியல் விலை பேரழிவுகரமாக இருக்கும் என்பதோடு பொருளாதாரரீதியாகச் செய்யப்பட முடியாது என்பதையும் லம்பேத் நகரசபை தலைவர்கள் தான் முதன்முதலில் ஒப்புக்கொண்டார்கள்.

“ஆனால் இதுவல்ல விவாதம். மத்திய அரசாங்கத்தால் அலுவலகத்தில் இருந்து விரட்டுவதற்கு ஆளாகி, டோரி ஆணையர்களுக்கு வழிவிடும் விதத்தில், திவால்நிலையை அறிவிப்பதா அல்லது தொடர்ந்து நீடிப்பதற்காக தாட்சர்-ஹெசல்டைன் (Thatcher-Heseltine) அழிவுக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதா என்பதுதான் லம்பேத்தில் பிரச்சினையாக உள்ளது...

“லம்பேத் அல்லது வேறெந்தவொரு தொழிற் கட்சி நகரசபையும் அரசியல் தற்கொலை செய்யுமென்று நாங்கள் நம்பவில்லை. அவர்களின் பணி அலுவலகத்தில் இருப்பதும் டோரிக்களுக்கு எதிராக பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும் மற்றும் தாட்சரின் அழிவுக் கொள்கைகளுக்கு எதிராக சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்துவதற்காகவும் பிரச்சாரம் செய்வதும் ஆகும்...

“திரிபுவாதிகள் விரும்புவதுபோல், பிரதான போராட்டம் ஆரம்பிக்க முன்னரே லம்பேத் போராட்டத்தை இப்போது முடிக்கவேண்டும் என்பது, நகைப்பிற்கு இடமானதும் பிற்போக்குத்தனமானதும் ஆகும்.”

இது குட்டிச் சீர்திருத்தவாத அரசியல்வாதிகளின் வசதிகளை பாதுகாப்பதை தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியில் தங்கியிருக்குமாறு செய்யும் நாடாளுமன்ற கோணல்புத்தியின் சர்வசாதாரணமான மொழியாகும்.

ஹீலி அவரது அரசியலின் ஒத்திசைந்த தன்மையை நேர்மையாக வைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. வெறும் இரண்டாண்டுகளுக்கு முன்புதான், டோரிகள் தேர்தலில் ஜெயித்தால் தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்துவார்கள் என்பதை WRP அதுவே ஒப்புக் கொண்ட நிலைமைகளின் கீழ், தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி இருந்தார். இப்போது அதே ஹீலி, டோரிக்களுக்குப் பணிய மறுப்பதன் மூலம் தொழிற் கட்சியினர் "அரசியல் தற்கொலை நடத்துவது" அவர்களுக்கு "அபத்தமானதாகவும் பிற்போக்குத்தனமானதாகவும் அமையும்" என்று வாதிடுகிறார்.

ஜனவரி 19, 1981 வாக்கில், நியூஸ் லைன் முழுப் பக்க தலையங்கம் ஒன்று “லம்பேத் நகரசபைக்காக உறுதியாக நிற்போம்” என்று தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. வரி வீதத்தை உயர்த்துவது என்ற தொழிற் கட்சியினரின் முடிவை எதிர்த்த அனைவரையும் கண்டித்ததுடன், முற்றிலும் வெட்கமில்லாமல் தொழிற் கட்சியினருக்கு மன்னிப்பும் கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலைகளின் கீழ், ஹீலியின் அயோக்கியத்தனம், "திருத்தல்வாதம்" என்ற வார்த்தையிலிருந்த அனைத்து அர்த்தங்களையும் நீக்கியது. WRP தலைவர்களின் துரோகத்தால், குட்டி-முதலாளித்துவ குழுக்களுக்கு புதிய அந்தஸ்து வழங்கப்பட்டது:

“திருத்தல்வாதிகள் ‘வரிவீத உயர்வு வேண்டாம்’ எனும் தீர்மானத்தை எடுத்து அதனை ஓர் ஒழுக்க பிரச்சினையாக மாற்றுகிறார்கள். பரந்தளவில் மாறியிருந்த புறச் சூழ்நிலையையும் மற்றும் லம்பேத் போன்ற தீர்க்கமான தளங்களில் இருந்து டோரி-விரோத முன்னணியை அபிவிருத்தி செய்வதற்கான மேலோங்கிய அவசியத்தையும் ஒரு கணமும் எண்ணிப் பார்க்காமல், சனிக்கிழமை, லம்பேத் நகரசபை தலைவர்களைத் தோற்கடிக்க அதை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

“வரி வீதங்களை அதிகரிப்பதன் மூலமாக ஒரு தீர்வு என்றவொன்று கிடையாது, மேலும் அங்கே அவ்வாறொன்று இருப்பதாக லம்பேத் நகரசபை ஒருபோதும் கூறியதும் இல்லை. ஆனால் தாட்சருக்கு எதிரான நிலைப்பாட்டை தக்க வைத்திருக்கவும் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் பதவிகளில் நிலைத்திருக்கவும், கடந்த வாரம் கூடுதல் வரியை அறிமுகப்படுத்துவதில் நகரசபையின் பெரும்பான்மையினர் மிகவும் சரியாகவே இருந்தனர்...

“பழைய வெற்றிகளை போராட்டமின்றி விட்டுக் கொடுப்பவர்களால் ஒருபோதும் புதியவற்றைச் சாதிக்க முடியாது. அதுபோன்றவொரு தீர்வை உபதேசிப்பவர்கள் உண்மையில் ‘தாட்சரின் ஆட்கள்’ ஆவர், ஏனெனில் அவர்கள் ‘அவரின்’ மொழியைப் பேசுகிறார்கள்...

“வேறு வார்த்தையில் கூறுவதானால், அவர்களின் போலியான 'இடது' வார்த்தைகளின் பின்னால், மற்றும் டோரிகளுக்கு எதிரான 'போர்க்குணமிக்க நிலைப்பாட்டைக்' குறித்த அவர்களின் பேச்சுக்குப் பின்னால், உண்மையில் அவர்கள் லம்பேத்தில் இருந்து தொழிற் கட்சியை வெளியேற்றுவதையும் டோரிக்களை உள்ளே கொண்டு வருவதையும் என்ன விலை கொடுத்தாவது செய்து விட முயற்சிக்கிறார்கள்."

இது, WRP அதன் சந்தர்ப்பவாதத்தினை மூடிமறைப்பதற்காகவும், சமூக ஜனநாயகவாதிகளை எதிர்ப்பவர்களைக் கண்டிப்பதற்காகவும் அது பயன்படுத்திய ஸ்ராலினிச வார்த்தைஜாலங்களே தவிர வேறொன்றுமில்லை. இந்த தலையீடானது, WRP நனவுபூர்வமாக சமூக ஜனநாயகத்தின் ஒரு தொங்குதசையாக மாற்றமடைந்து கொண்டிருந்ததை எடுத்துக்காட்டியதுடன், அவ்விதத்தில் அது ட்ரொட்ஸ்கிசத்தைக் கைவிட்டு மத்தியவாத முகாமிற்குள் செல்வதை முழுமைப்படுத்தியது. 1981 வாக்கில் தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக WRP வெளிப்படையாகவே முதலாளித்துவ அரசை பாதுகாத்ததுடன், அரசு அதிகாரிகள் முகங்கொடுத்திருந்த நிதிப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் காட்டி தொழிலாளர் இயக்கம் மீதான தாக்குதல்களையும் கூட நியாயப்படுத்தியது.

இதே நிலைப்பாடுகளை ஒட்டி, ஜனவரி 20, 1981 இல் நியூஸ் லைன், “நாம் முதலாளித்துவத்தின் கீழ் வாழ்கின்றோம். அத்துடன் முதலாளித்துவம் மிகப்பெரும் நெருக்கடி கட்டத்தில் உள்ளது, இதற்குள் தான் அதிதீவிர பிற்போக்கு டோரி அரசாங்கத்தால் நலன்புரி அரசின் உரிமைகள் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன," என்பதை ஏற்றுக் கொள்ளாததற்காக, வரி வீத உயர்வுகளைத் தாக்கியவர்களை அது கண்டித்தது.

இந்த வலதுசாரி நிலைப்பாடு, ஹீலியால் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், பல ஆண்டுகளாக WRP க்குள் குறட்டை விட்டு கொண்டிருந்த சமூக ஜனநாயக பேராசிரியர்களின் ஓர் அடுக்குக்குள் உத்வேகத்தைத் தூண்டியது — இவர்கள் கட்சிக்குள் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டைப் பாதுகாத்தவர்களுக்கு எதிரான ஒரு கன்னை மோதலில் எப்போதெல்லாம் ஹீலியின் தரப்பில் நிற்க வேண்டுமோ அப்போது மட்டும் அவர்களின் கல்வித்துறை குகைகளில் இருந்து வெளிப்பட்டு கொண்டிருந்தார்கள். லம்பேத் சீர்திருத்தவாதிகளைப் பாதுகாக்க ஆர்வத்துடன் முன் வந்தவர்களில் ஒருவர், ஹல் பல்கலைக்கழகத்தின் ரொம் கெம்ப்பை (Tom Kemp) தவிர வேறு யாருமில்லை. அவர், வரி வீத உயர்வை எதிர்த்தவர்களை, 1931 இல் சமூக ஜனநாயக அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்காக இழிவார்ந்த "சிவப்பு வாக்கெடுப்பில்" (Red Referendum) பாசிசவாதிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்த ஜேர்மன் ஸ்ராலினிசவாதிகளுடன் ஒப்பிட்டார். துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால், கெம்ப் இன் கட்டுரை இரண்டாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அவரின் வேதனைக்குரிய கட்டுரையினூடாக, கெம்ப் "லம்பேத் திருப்பத்தின்" உண்மையான முக்கியத்துவம் குறித்து ஒரு உட்பார்வையை செலுத்தினார்:

““சீர்திருத்தவாதத்தில் இருந்து இப்போது விலகத் தொடங்கி இருக்கும் தொழிலாளர் இயக்கத்தின் பிரிவுகளுக்குள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) மரியாதையை உயர்த்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இது வழங்குகிறது. இவ்விடயத்தில் எதிர்காலத்தில் திருத்தல்வாத அபாயங்களாக காணப்பட்ட மத்தியவாத போக்குகளுடன் உறவை ஆழப்படுத்தியும் அகலப்படுத்தியும் அவற்றை மிக விரைவில் வெற்றி கொள்ள முடியும்.”” (நியூஸ் லைன், பெப்ரவரி 21, 1981)