World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Blair warns United Nations has no veto over US-led war vs. Iraq

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தொடுக்கும் போரில் ஐ.நா ரத்து அதிகாரத்திற்கு இடமில்லையென பிளேயர் எச்சரிக்கை

By Julie Hyland
18 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச மற்றும் உள்நாட்டு எதிர்ப்பையும் மீறி ஈராக்மீது தன்னிச்சையாக அமெரிக்கா போர் தொடுக்குமானல் அதை ஆதரிக்க தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டோனி பிளேயர் அறிவித்துள்ளார்.

மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதில், பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் போருக்கு எதிரான உணர்வுடன் உள்ளனர் என்பது தெளிவாகியதுடன், அவரது கட்சிக்குள்ளேயே ஈராக் போர் தொடர்பாக பிளவும் ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும் புத்தாண்டுக்குப் பின்பு முதன் முறையாக இந்த வாரத் தொடக்கத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டோனி பிளேயர், அமெரிக்கா தொடுக்கவிருக்கும் போரை மேலும் தீவிரமாக ஆதரிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.

தனது போருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கண்டிப்பவர்களை ''அனுபவமில்லாதவர்கள் தவறான வழிகாட்டலுக்கு'' ஆட்பட்டவர்கள் என்று புறம் தள்ளிவிட்ட பிரதமர் ஐ.நா ஒப்புதல் இல்லாமலே இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்திக் கூறினார். புஷ் நிர்வாகத்தின் ஈராக் ஆட்சிமாற்றக் கொள்கைக்கு தனது ஆதரவையும் சேர்த்துக்கொண்ட அவர், மேற்கு நாடுகளின் நலன்களுக்கு மிரட்டலாகச் செயல்படுவதாகக் கருதப்படும் இதர நாடுகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என எச்சரித்தார்.

சதாம் ஹுசேனின் ''மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை'' கண்டு பிடிக்க சோதனைகளில் இறங்கி இருக்கும் ஐ.நா ஆயுத ஆய்வாளர்களின் முதல் அறிக்கை ஜனவரி 27ந் தேதி வெளிவர இருக்கிறது. இதுவரை அந்த ஆய்வாளர்கள் ''பயங்கர ஆயுதம்'' எதுவும் இருப்பதாக கண்டுபிடிக்காததுடன், அவர்கள் மேலும் அவகாசம் கோரியுள்ளனர்.

செய்தியாளர்கள் மாநாட்டில், ஆயுத ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக காட்டிய பிளேயர் எப்படியும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவுபடுத்தினார்.

ஐ.நா தீர்மானங்களை ஈராக் மீறியதாக காரணம் கண்டுபிடித்துவிட முடியும் என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகள் ''நம்பிக்கையுடன்'' இருப்பதாக இறுமாப்புடன் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார். அதை வைத்து கார்டியன் பத்திரிகை பிரதமர் கையில் ''துருப்புச்சீட்டு'' இருப்பதாக அனுமானத்தை வெளியிட்டிருக்கிறது.

உண்மையில் பிளேயர் எப்போதுமே ஈராக் கதை முடிந்து விட்டதாகவே கூறிவருபவர். அமெரிக்காவின் உண்மையான நோக்கத்தை மூடி மறைப்பதற்காக ஐ.நா ஆயுத ஆய்வாளர்கள் ஜோடனை வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பிளேருக்குத் தெரியும். அமெரிக்காவின் குறிக்கோள் பழைய காலனி ஆதிக்க பாணியில் ஈராக்கை கைப்பற்றி அதன் எண்ணெய் வளங்களை கையகப்படுத்துவதேயாகும். இதில் போருக்குப் பின்னர் கிடைக்கும் வெகுமதிகளை பங்கு போடும் போது பிரிட்டனின் முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை தனது ஆதரவு உறுதி செய்து தரும் என்று பிரதமர் நம்புகிறார்.

''வெற்றியெல்லாம் அமெரிக்காவிற்கு தோல்வியெல்லாம் ஈராக்கிற்கே'' என்ற சூழலில் - பூவா? தலையா? போட்டுப்பார்க்கும் போது தலையெல்லாம் அமெரிக்காவிற்கு, பூவெல்லாம், ஈராக்கிற்கே ஆகும். ஆயுதங்கள் எதுவும் கிடைக்காவிட்டால் ஐ.நா தீர்மானங்களை மீறியதாக குற்றம் சாட்டுவது ஆயுதங்கள் கிடைத்தாலும் அதே குற்றச்சாட்டை சொல்வது என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறது.

பிரிட்டிஷ் நிர்வாகத்தின் சில பிரிவினர் மற்றும் ஆளும் தொழிற்கட்சியின் கனிசமான பிரிவினர் ஐ.நா ஆதரவோடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அப்போது தான் அது சட்டபூர்வமானதாக அமையும் என்று கவலை கொண்டிருக்கின்றனர். ஜனவரி 27 நெருங்கிக் கொண்டிருப்பதால் அமெரிக்காவுடன் தன்னிச்சையாக சேர்ந்துவிட வேண்டாம் என்று மிகுந்த பரபரப்போடு கோரிக்கைகள் விடுக்கின்றனர்.

அத்தகைய முறையீடுகள் எதையும் தான் பொருட்படுத்தப் போவதில்லை என்று பிளேயர் தெளிவு படுத்தியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் என்ன செய்யும் என்பது பிரச்சனை அல்ல ஆனால் ஐ.நா என்ன செய்வதற்கு தயாராக இருக்கிறது என்பது தான் பிரச்சனை என்று பிளேயர் குறிப்பிட்டார்.

"அங்கு விதிமுறை மீறல் இருப்பதாக ஐ.நா கண்டால், ஐ.நா ஒரு பக்கமாய் ஒதுங்கி நிற்கப் போகிறதா அல்லது அதன் விருப்பத்தை வலிந்து செயற்படுத்தப் போகிறதா?" அன்று அவர் கேட்டார்.

பிரிட்டனும் அமெரிக்காவும் "சர்வதேச சமுகத்துடன் சேர்ந்து வேலை செய்ய" மற்றும் "ஐ.நா வழியைப் பின்பற்ற...ஆழ்ந்து சிந்தித்த முடிவினை" செய்திருக்கின்றன. ஆனால் அது "இரு வழி நிகழ்ச்சிப் போக்காகும்" என அவர் மேலும் தொடர்ந்தார். பதிலுக்கு, ''அந்த முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு விரும்பும் நாடுகள், அந்த அளவுக்கு முன்னெடுத்துச் செல்லவும் மற்றும் அங்கு விதிமுறை மீறல் இருக்குமாயின், ஐ.நா அங்கீகரித்த நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனக் கூறுவதும் கூட கடமையாய் அமைகிறது".

''நான் இதை தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். மீறல் எதுவும் இருக்குமானால் ஐ.நா தந்திருக்கும் உறுதி மொழிகளை நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்று பிளேயர் குறிப்பிட்டார்.

ஈராக்கில் ரஷ்யாவிற்கும், பிரான்சிற்கும் ''மிகப் பெரிய அளவில் வர்த்தக நலன்கள்'' - அதாவது எண்ணெய் சப்ளை ஒப்பந்தம் இருப்பதால் ரஷ்யாவும், பிரான்சும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்திவிடும் என்று அஞ்சுகிறீர்களா? என்று நிருபர்கள் அவரைக் கேட்டனர். அப்படிப்பட்ட சாத்தியக்கூறு இருப்பதாக அவர் ஒப்புக் கொள்ளவில்லை, அத்தகைய வேறுபாடுகளை ஈராக்கில் மற்றொரு ஆட்சி இருக்குமானால் ''பேசி தீர்த்துக் கொள்ளலாம்'' என்று பிளேயர் குறிப்பிட்டார். புஷ் நிவாகத்தின் குறிக்கோள் ஈராக்கில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதுதான் என்பதை பிரதமர் முதல் தடவையாக தனது பேட்டியில் பகிரங்கப்படுத்தினார்.

நடவடிக்கைகள் சீராக செல்லவில்லை என்றால் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் - அதில் இறுதி முடிவு செய்ய முடியாது என்பதை பிளேயர் வலியுறுத்திக் கூறினார். அமெரிக்கா மற்றம் பிரிட்டன் நடவடிக்கைகளுக்கு சில நாடுகள் ''நியாயமற்ற அல்லது தன்னிச்சையான தடை நடவடிக்கைகளை'' எடுக்குமானால் அமெரிக்காவும் பிரிட்டனும் அவற்றிற்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது. ''என்ன நடந்தாலும் சதாம் வசமுள்ள ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும்'' என்று பிளேயர் மேலும் குறிப்பிட்டார்.

''சுழற்சி முறை'' போர் உத்தி ஒன்றை திட்டமிட்டிருப்பதாகவும், வடகொரியாவுடன் நெருக்கடிகள் முற்றிக் கொண்டு வருவது பற்றியும், இராணுவ நடவடிக்கை ''ஈராக்கோடு முடிந்து விடாது'' என்றும் பிளேயர் எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமரின் இத்தகைய போர் வெறிப் பேச்சை பெரும்பாலான ஊடகங்களும் கன்சர்வேட்டிவ் கட்சியும் ஆதரித்தன. அமெரிக்காவுடன் உறுதியாக நின்றால் மக்களது ஆதரவை அவர் பெற முடியும். ஆனால் அது விருப்பத்துடன் எடுக்கும் நடவடிக்கை மட்டுமல்ல என்று டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியது.

உண்மையில் பிரிட்டன், அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனை எந்த வகையிலும் கட்டுபடுத்த முடியாது என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது. ''போரா? போர் இல்லையா என்பது பிளேயர் முன் உள்ள கேள்வி இல்லை. ஆனால் வரக்கூடும் என்று கருதப்படும் ஒரு போரில் பிரிட்டன் குறிப்பிடத்தக்க இராணுவ ஈடுபாட்டுடன் இருந்தால் தான் அதற்கு அளவிற்கு அதிகமான அரசியல் செல்வாக்கு இருக்க முடியும். அல்லது போரில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைப்போல் ஓரத்தில் ஒதுங்கிநின்றால் தவிர்க்க முடியாத அமெரிக்க வெற்றியின் பின்னால், நடைபெறும் நிகழ்ச்சிகளில் எந்த பங்கும் வகிக்க முடியாது'' என்று இப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியது.

வெளியில் பிரதமரின் அறிவிப்பு ஆழ்ந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பி.பி.சி வலைத் தளம் வெளியிட்டுள்ள அவரது அரசியல் எதிர்காலம் பற்றிய கணிப்பில், ''ஐ.நா ஆதரவு இல்லாமல், சதாம் ஹூசேன் பயங்கரமான மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் பிளேயர் போருக்கு போவாரானால் பிரிட்டனில் பொது மக்களது கடுமையான எதிர்ப்பை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். சர்வதேச சமூத்திலிருந்து பிரிட்டன் தனிமைப் படுத்தப்பட்டுவிடும். மேலும் அமைச்சரவையில் பிளவு ஏற்படுவதற்கு வாய்ப்பாகிவிடும் என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற கவலையை தொழில் கட்சி பாராளுமன்ற எம்.பி.க்கள் புதன் கிழமையன்று நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் வெளியிட்டனர். அந்தக்கூட்டத்தில், இந்தப் பிரச்சனையில், கட்சிக்குள் முழுமையான பிளவு நிலவுவது சம்பந்தமான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த ரகசியக்கூட்டம் முடிந்த பின்னர் போருக்கு ஆதரவு தெரிவிக்கும் தொழிற் கட்சி எம்.பி.யான ஆன் காம்பல் கருத்து தெரிவிக்கையில் ஐ.நா அங்கீகாரம் இல்லாமல் இராணுவ நடவடிக்கையை அரசு ஆதரிக்குமானால் தனது தொகுதியைச் சார்ந்தவர்களில் பாதி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்து விடுவார்கள் என்று குறிப்பிட்டார். போருக்கு எதிரான எம்.பி யான அலன் சிம்சன் கருத்து தெரிவிக்கும் போது அரசு எடுக்கும் நடவடிக்கையால் தனது ''நம்பகத்தன்மையையும், ஜனநாயக முறையிலான'' மக்களது தீர்ப்பையும் இழந்துவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார். இன்னுமொரு தொழிற் கட்சி எம்.பி.யான அலிஸ் மகோன் தன்னை தேர்ந்தெடுத்த மக்களில் மிகப் பெரும்பாலோரது கருத்துக்களுக்கு முரணாக அரசின் ஈராக் கொள்கை அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

சேர்ச் ஆஃப் இங்கிலாந்து பாதிரிமார்களும் நடப்பு அரசு கொள்கையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். ''இது வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள சான்றுகளில் இருந்த ஈராக்கிற்கும் அல்கெய்டா இயக்கத்திற்கும் இடையே உறவு இருப்பதற்கு தெளிவான அடையாளம் இல்லை. அல்லது ஈராக் சர்வதேச பாதுகாப்பிற்கு மிரட்டலாக இருக்கிறது என்பதற்கும் தெளிவான சான்று இல்லை'' என்றும், இப்படி எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் ''இராணுவ நடவடிக்கை எடுப்பதை தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாது'' என்றும் மேலும் அந்த அறிக்கை விளக்குகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ஜியோப் ஹுன் அதே நாளில் பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு அவர்களின் கவலைகளை மேலும் அதிகரித்தது. அமெரிக்காவின் கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தரும் ''சன் ஆஃப் ஸ்டார் வார்ஸ்'' (Son of Star Wars) திட்டத்திற்கு பிரிட்டன் ஆதரவுதர கருதியிருப்பதாகவும் புதிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு பிரிட்டன் ராடார் வசதிகளை தருவதற்கு முன்வந்திருப்பதாகவும் அதே தினம் அறிவித்தார். இந்த அறிவிப்பு பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் பீட்டர்கில் போயிலுக்கு ஆத்திரமூட்டியது. அவரும் தொழிற்கட்சியைச் சேர்ந்தவர்தான். புஷ் நிர்வாகத்திற்கு பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை ''தாரைவார்த்து'' விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தன்னை கண்டிப்பவர்களுக்கு எந்த விதமான உறுதி மொழியும் தருவதற்கு பிளேயருக்கு இயலவில்லை என்பதில் வியப்பு எதுவுமில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் நோக்கில் ஜனவரி இறுதியில் பிரதமர் புஷ்ஷை சந்திக்கிறார். ஏற்கெனவே இது சம்மந்தமாக முடிவு செய்து விட்டார்கள் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. வளைகுடாப்பகுதியில் அமெரிக்கா மிகப்பெரும் அளவிற்கு படைகளை குவித்திருக்கிறது. கடற்படை உட்பட 1,50,000 துருப்புக்கள் அடங்கியிருக்கும் என்று இராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். தரைமார்க்கமாக மிகப்பெரிய தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதை இது கோடிட்டு காட்டுகிறது.

பி.பி.சி வானொலியின் நாலாவது அலைவரிசையில் ஒலிபரப்பப்படும் இன்றைய திட்டம் என்ற நிகழ்ச்சியில், நேட்டோவின் முன்னால் ஐரோப்பிய தலைமை தளபதி ஜெனரல் வெஸ்லி கிளார்க் கலந்து கொண்டார். ஐ.நா வில் உடன்பாடு உருவாவதற்கு அமெரிக்கா காத்திருக்காது என்று தாம் கருதுவதாகவும், தாக்குதலை எந்த நேரத்திலும் அமெரிக்கா நடத்தக் கூடும் என்றும், பிப்ரவரி மாத மத்தியிலிருந்து அந்தமாத முடிவிற்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தாம் மதிப்பிடுவதாக ஜெனரல் வெஸ்லி கிளார்க் குறிப்பிட்டார்.

சிறிய அளவில் பிரிட்டிஷ் படைகள் தற்போது வளைகுடா பகுதிக்கு சென்று கொண்டிருக்கின்றன. அவை அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து கொள்ளும். இராணுவ அடிப்படையில் பார்த்தால் பிரிட்டிஷ் படைகளின் எண்ணிக்கை மிக சொற்பமானதுதான். ஆனால் அரசியல் அடிப்படையில் ''எல்லாவகையிலும்'' புஷ்ஷிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிளேயர் அரசின் அடையாளச் சின்னமாகவே அவை அங்கு செல்கின்றன.

See Also :

போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

ஈராக்கிற்கு எதிரான போரின் உயிர் நாடி எண்ணெய்வளம்: பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்

பிரிட்டன்: 2003ல் ''அபாயகரமான பிரச்சனைகள்'' நிகழும் பிளேயர் முன்கணிப்பு

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page