World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Student protest exposes rift in Chinese regime

சீனா ஆட்சியில் பிளவை அம்பலப்படுத்திய மாணவர் கண்டனம்
By John Chan
24 February 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி ஆரம்பத்தில் ஹூஃபி (Hefei) நகரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பாரியளவில் உள்ளூரில் நடந்த ஒரு பிரச்சனைக்காக தமது கண்டனத்தை தெரிவித்தனர். இந்தக் கண்டனத்தின் மூலம், சமூக அதிருப்தி உணர்வை எப்படிச் சமாளிப்பது என்பதில் சீன அதிகாரத்துவத்திற்குள் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன என்ற விவரங்கள் இந்த மாதம் அம்பலத்துக்கு வந்தன.

ஹூஃபி தொழில்துறைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 12.000 மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய விடயங்கள் ஹொங்காங் பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன. ஜனவரி 6 ந்தேதி நடைபெற்ற போக்குவரத்து விபத்து தொடர்பாக போலீஸார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மறுநாள் மாணவர்கள் அரசாங்க கட்டிடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இந்த விபத்தின்போது ட்ரக் வண்டி ஒன்று மாணவர்கள் மீது மோதியதில் இரண்டு மாணவிகள் அதில் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் கடுமையான காயத்திற்கு உள்ளானார்.

இந்த ட்ரக் வண்டி சிகப்பு வெளிச்சத்திற்கு நில்லாமல் வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டியபோதும், அதிகாரிகள் மாணவர்கள்தான் இந்த விபத்திற்கு பொறுப்பே தவிர டிரைவர் அல்ல என்று குறிப்பிட்டனர். இறந்துவிட்ட மாணவிகளின் நண்பர்கள் துக்கத்தோடு காத்திருந்தபோது இந்த விபத்து பற்றி விசாரணை எதுவும் நடத்தப்படமாட்டாது என்றும் யார் மீதும் குற்றம்சாட்ட முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் மிகுந்த அலட்சிய மனப்பான்மையோடு நடந்து கொண்டதற்கு மிக ஆவேசத்துடன் மாணவர்கள் கண்டனம் செய்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தன.

ஆனால், பெய்ஜிங்கிலிருந்து வந்த கருத்தானது இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வதாக இல்லை. இதுபோன்ற கண்டனங்கள் தெரிவிக்கப்படும்போது அவற்றை புறக்கணிப்பது அல்லது அந்த நிகழ்ச்சியை அப்படியே மூடிமறைத்துவிடுவது மத்திய அரசாங்கத்தின் வழக்கமான அணுகுமுறையாக இருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) செயலாளராக புதிதாக பதவியில் அமர்த்தப்பட்டுள்ள ஹூ ஜின்டாவோ (Hu Jintao) ஹூஃபி மாணவர்களுக்காக தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டார். இவர், மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் தேசிய மக்கள் காங்கிரசில் (NPC) சீனாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி 7 அன்று கட்சியின் உயர் அதிகார செயற்குழுக் கூட்டத்தில் ஹூ ஒரு வேண்டுகோளை வெளியிட்டார். இந்த வேண்டுகோளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அலுவலகம் வெளியிடும் தினசரி செய்திக் குறிப்பில் இதுபற்றி இடம்பெற வேண்டும் எனவும், அன்ஹூயி (Anhui) அரசாங்கம் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ''சமூக ஒழுங்கை நிலைநாட்டும் படியும்'', இந்த விபத்து பற்றி சட்டப்படி வழக்குத் தாக்கல் செய்து ட்ரக் வண்டி ஓட்டுநர் மீது விசாரணை செய்யும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஹொங்காங்கிலிருந்து வெளிவரும் செங்மிங் சஞ்சிகையின் பிப்ரவரி இதழில் ஹூ வினுடைய இந்த முயற்சிக்கு ஓய்வுபெறும் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் (Jiang Zemin) உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. ஜனவரி 8 ந்தேதி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிரந்தரக்குழுவின் விரிவான கூட்டம் நடைபெற்றபோது ஜனாதிபதி ஜியாங், ஹூவின் நடவடிக்கைகளை கண்டித்தார். ஹூவின் இந்த நடவடிக்கையால் மேலும் கண்டனங்கள் ஊக்குவிக்கப்பட்டு, 1989 மே-ஜூனில் தியானாமென் சதுக்கத்தில் நடைபெற்றது போன்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பெருமளவில் நடைபெற்று ஆட்சிக்கே மிரட்டலாக மாறிவிடும் என்று ஜியாங் கண்டனம் தெரிவித்தார்.

''சில கம்யூனிட் கட்சித் தலைவர்கள் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாணவர் மற்றும் இளைஞர் தொடர்புடைய அரசியல் நிகழ்ச்சிகளின் பாதக மற்றும் சாதக அம்சங்களை கிரகித்துக்கொள்ள தவறிவிட்டனர்'' என்று ஜியாங் குறிப்பிட்டார். ''ஒரு நாள் காலையில் அல்லது இரவில் பல்லாயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் இதர இளைஞர்களுடன் சேர்ந்து கண்டனம் தெரிவிப்பதற்காக தெருக்களில் அணிவகுத்து வந்து மாகாண அரசாங்கங்களை, ஏன் ஷாங்நாங்காயை (Zhongnanhai - பெய்ஜிங்கிலுள்ள ஆட்சி தலைமை அலுவலகக் கட்டிடம்) முற்றுகையிடமாட்டர்கள் என்று எவரும் உறுதியளிக்க முடியாது'' என்று ஜியாங் எச்சரித்தார். மேலும் அரசாங்கம் முடக்கப்பட்டு, சமூகத்தில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் என்றார்.

இதனை அடுத்து ஜியாங் இளம் கம்யூனிஸ்ட் லீக் (YCL) அமைப்பை குற்றம் சாட்டினார். ஹூ ஜின்டாவோவிற்கு பாரிய ஆதரவுத் தளமாக இருக்கும் இந்த அமைப்பு, மாணவர்கள் ஊர்வலம் வந்ததற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் குற்றம் சாட்டினர். YCL ஆனது அரசாங்க அதிகாரிகளிடையே அதிருப்தியை ஊக்குவிக்கிறது என்றும், 2002 ம் ஆண்டில் மாணவர்கள் மற்றும் YCL ன் அமைப்புகள் சட்ட விரோத கண்டனங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தியதாகவும் 2000 க்கு மேற்பட்ட அங்கீகாரம் பெறாத கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெற்றுள்ளன எனவும் ஜியாங் விளக்கினார்.

அரசின் அதிகாரபூர்வமான பத்திரிகையான பீப்பில்ஸ் டெய்லியில் ஹூஃபி மாணவர்களது ''சட்ட விரோத'' நடவடிக்கைகளை கட்சி கண்டனம் செய்து தலையங்கம் எழுதுவதை ஏற்கச் செய்வதற்கு ஜியாங் மத்திய குழுவில் முயன்று தோல்வியடைந்தார். மாணவர்களின் கண்டனம் ஏற்கெனவே முடிவிற்கு வந்துவிட்டதால் கட்சியின் நிரந்தரக்குழுவில் போதுமான ஆதரவு வாக்குகள் கிடைக்கவில்லை என செங்மிங் சஞ்சிகை கூறியுள்ளது.

ஹூ ஜின்டாவோவிற்கும், ஜியாங் ஜெமீனுக்கும் இடையில் ஹூஃபி மாணவர்களின் ஆர்ப்பட்டத்தையொட்டி உருவாகியுள்ள பிளவு ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்குள் நிலவும் விரிவான கொந்தளிப்புகளின் வெளிப்பாடாகவே உள்ளது. குறிப்பாக, பொருளாதார சீரமைப்புக் கொள்கைகளின் தாக்கத்தால் பரவலாக மக்களிடையே எதிர்ப்பும், வெறுப்பு உணர்வும் உருவாகியுள்ளது. அண்மை மாதங்களில் தொழிலாளர்கள், சிறிய விவசாயிகள் மற்றும் சமூகத்தின் இதர உறுப்பினர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துவிட்டது.

ஆட்சி தனிமைப்படுத்தப்பட்டு வருவதை உணர்ந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சென்ற ஆண்டு நடைபெற்ற 16 ஆவது காங்கிரஸின் அரசியலமைப்பு சட்டத்தில் கட்சி அமைப்பு விதிகளை மாற்றுவதற்கு சம்மதித்தனர். இந்த மாற்றத்தின் மூலம் வர்த்தகம் மற்றும் சொத்து உரிமையாளர்கள் ஆளும் கட்சியில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டது. சீனாவில் உருவாகிக்கொண்டு வரும் முதலாளித்துவ வர்க்கத்தை சட்ட பூர்வமாக்கி மத்தியதர வர்க்கத்தினரிடையே ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்க பெய்ஜிங் முயன்று வருகிறது. ஹூ இதற்கு அப்பாலும் சென்று அரசியல் சீர்த்திருத்தங்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். இந்த அரசியல் சீர்த்திருத்த ஆலோசனைகள் ஏற்கப்பட்டால், அதனால் அரசியல் கண்டன பேரணிகள் உருவாகி கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடக்கூடும் என்று ''பழைய பாதுகாவலர்களான'' ஜியாங் ஜெமீனும், மற்றவர்களும் இதற்கு அச்சம் தெரிவித்துள்ளனர்.

தியனன்மென் சதுக்க கண்டனங்கள்

1989 மே மாதம் கட்சியின் அன்றைய செயலாளர் ஜாவோ ஜியாங் மாணவர்களின் கண்டனப் பேரணியை பிசுபிசுக்கச் செய்வதற்காக, அவர்களது கோரிக்கைகளை ஏற்று பத்திரிகை சுதந்திரம் போன்ற சில சலுகைகளை வழங்கத்தள்ளப்பட்டதோடு, அரசு ஊழல்களையும் கட்டுப்படுத்தினார். ஜாவோ மாணவர்களது ஆதரவைப் பெற்றபோதிலும் அவரது நடவடிக்கைகளால், பல்லாயிரக்கணக்கான பெய்ஜிங் தொழிலாளர்களும் மற்றும் ஏழைகளும் தங்களது சமூகக் கோரிக்கைகளை முன்வைத்து கண்டனப் பேரணிகளை நடாத்தத் தொடங்கினர். மாணவர்கள் தியானாமென் சதுக்கத்தை பிடித்துக்கொண்டபோது அது தொழிலாள வர்க்க இயக்கத்தின் எடுத்துக்காட்டாக ஆகிவிடும் என்ற ஆபத்து உருவாகியது. ஆதலால் டெங் ஷியாவோபிங், ஜியாங் ஜமீன் மற்றும் லீ பெங் ஆதரவோடு ஜாவோ ஜியாங்கை வீட்டுக் காவலில் வைத்தார். இதன் பின்னர் இச்சதுக்கத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்களை சிதறடிப்பதற்கு இராணுவத்திற்கு கட்டளையிட்டார்.

1989 ம் ஆண்டு ஜியாங் மற்றும் லீ பெங் தலைமையில் உருவான தலைமையானது 1990 கள் முழுவதிலும் பொதுமக்களது அதிருப்தி மற்றும் மீண்டும் கிளர்ச்சி ஏதும் உருவாகாத அடிப்படையில் செயல்பட்டது. அவர்கள் அமைப்பு ரீதியில் எந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் திட்டமிட்டு ஒடுக்கமுறைகளைக் கையாண்டார்கள். அதிருப்தியாளர்கள் 1998 ம் ஆண்டு சீன ஜனநாயகக் கட்சியை உருவாக்கியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடுமையான சிறைத் தண்டனைகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டன. அரை மத அமைப்பான பாலுங்காங் (Falun Gong) அடக்கி ஒடுக்கப்பட்டது. இந்த இயக்கம் தன்னை ஒரு மத பிரிவு என்று குற்றம்சாட்டிய ஊடகங்களுக்கு எதிராக கண்டனப் பேரணிகளையும் நடாத்தியது.

சலுகைகளை வழங்கும் கொள்கை போக்கிற்கு சென்றால் அது கிளர்ச்சியை தூண்டிவிடும் என்று ஜியாங் விவாதிக்கிறார். ஆனால், அவரது கோஷ்டி எதிர்ப்பாளர்கள் அதற்கு நேர்மாறான கருத்தை எடுத்து வைக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மிரட்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகள் மக்களிடையே மிகப்பெரும் அளவிற்கு வெறுப்பை உருவாக்கியிருப்பதால், இந்த அரசு நீடித்திருப்பதே கேள்விக்குறியாகிவிட்டதாக அவர்கள் கூறகின்றனர். டிரன்ட் சஞ்சிகையின் நவம்பர் இதழில் முன்னாள் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜாங் ஜ பிங்கின் வேண்டுகோள் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஹூ ஜின்டாவோ ''சீர்த்திருத்தத்தை'' புதிய தலைமையில் அச்சாணியாக ஆக்கவேண்டும். இல்லையென்றால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ''மரணப் படுகுழியில்'' வீழ்ந்துவிடும் என்று அதில் கூறியுள்ளார்.

ஸ்டாலினிச அதிகாரிகள் அரசியல் சீர்த்திருத்தங்களை முடுக்கிவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை செங்மின் சஞ்சிகையின் செய்தி மேலும் கோடிட்டு காட்டுகிறது. மார்ச் 5 ந்தேதி 2003 தேசிய மக்கள் காங்கிரஸ் நடைபெற இருக்கிறது. அதற்கு முந்திய வாரங்களில் கோஷ்டி மோதல்கள் மற்றும் கொந்தளிப்புகள் தீவிரமடையலாம். இந்த மோதல்களின் விளைவாக ஜியாங் ஜமீனும், லீ பெங்கும் தங்களது அதிகாரபூர்வமான அரசு பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

1989 ல் இருந்த சீனா 2003 ல் இல்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் மேலும் செல்வாக்கு சரிந்துவிட்டது. தொழிலாள வர்க்கத்தின் சமூகச் சுமை மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சீன நகரங்களில் மக்கள்தொகை 150 மில்லியனுக்கு மேல் வளர்ந்துள்ளது. கடற்கரைப் பகுதி சுதந்திர வர்த்தக வலயங்களில் ஏராளமான கிராமத்து விவசாயிகள் தொழில்துறை தொழிலாளர்களாக மாறியிருக்கின்றனர். எனவே ஒரு கிளர்ச்சி வெடிக்குமானால் அது தியானாமென் சதுக்க கண்டன ஆர்ப்பாட்டத்தைவிட மிகப்பெரியதாக வளர்ந்துவிடும்.

1989 ம் ஆண்டு மாணவர் தலைவராகயிருந்த வாங்டான் தற்போது சீன அதிருப்தியாளர்கள் சார்பில் சீன அரசியல் விமர்சகராக செயல்பட்டு வருகிறார். ஜியாங் மற்றும் லீ பெங் ஆட்சிக் காலத்தைவிட இன்னும் அதிகமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் ஹூ ஜின்டாவோ தலைமையின் கீழ் அதிரகாரத்தை உருவாக்க எல்லா முன்னேற்பாடுகளும் மிக வேகமாக நடைபெற்று வருவதாக வாங்டென் கூறுகிறார். தைய்பே டைம்ஸ் பத்திரிகையில் வாங்டென் ஜனவரி மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ''ஆரம்பத்தில் ஹூ யாபாங் மற்றும் ஜாவோ ஜியாங்கை பின்பற்றிய குழுவினர் படிப்படியாக கட்சி நிர்வாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பெய்ஜிங் அரசியல் வட்டாரங்களில் வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. தத்துவார்த்த அடிப்படையிலும், அமைப்பு முறையிலும் புதுமைகள் புகுத்தப்படும் என்று ஒவ்வொருவரும் உரத்த குரலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் அரசியல் சீர்த்திருத்தம் பற்றிய விவாதம் படிப்படியாக மிகுந்த துடிப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

ஆட்சி நிர்வாகத்திற்குள் நடைபெறுகின்ற கருத்து வேறுபாடுகள் முழுவதும் அரசியல் தந்திரோபாய அடிப்படையில் அமைந்தவையாகும். ஆளும் தட்டின் ஊழலையும், சலுகை பெற்றவர்களையும் தாங்கி நிற்பதில் இந்தக் போட்டிக் கோஷ்டிகள் ஒன்றுபட்டு நிற்பதுடன், இவர்கள் தமக்குள் பொதுவான முன்னோக்கையும் கொண்டுள்ளார்கள். இந்த இரண்டு கோஸ்டிகளுமே பெரிய நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் புதிய சீன முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாப்பதில் உறுதி கொண்டுள்ளார்கள். 1990 களில் சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து உலக சந்தைக்காக கோடிக்கணக்கான சீனத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் மோசமான அளவிற்கு சுரண்டப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் பயனடைந்துள்ள சீன முதலாளித்துவ வர்க்கத்தை இரண்டு கோஷ்டிகளுமே பாதுகாத்துக்கொண்டு நிற்கின்றனர்.

ஹூஃபி மாணவர்களது குறைபாட்டை ஹூ ஜின்டாவோ தனது எதிர்க் கோஷ்டிக்காக பயன்படுத்திக்கொள்ள தயாராகவிருக்கின்றார். ''சீர்த்திருத்தவாதிகள்'' என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் ஆளும் தட்டுக்கு நேரடியாக அடித்தளத்திலிருந்து மிரட்டல்கள் வரும்போது ஒடுக்குமுறைகளை கையாளுவதற்கு தயங்கமாட்டார்கள். சாதாரண சிறிய ஒரு மாணவர் கண்டனம் கட்சி தலைமையில் விவாதிக்கப்படுகிற ஓர் அம்சமாக மாறியிருக்கிறது. இது ஆளும் தட்டிலுள்ள எல்லாக் கோஷ்டிகளும் சமூகப் வெடிப்புக்கள் உருவாகக்கூடும் என்பது பற்றி எந்த அளவிற்கு பீதியடைந்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

See Also :

சீன முதலாளித்துவம்: உலகின் செயலாக்க சக்தியா அல்லது கடும் உழைப்பை வாங்கும் தொழிற்கூடமா?

புதிய சீனத்தலைமையின் விவரக்குறிப்புகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ செல்வந்தத் தட்டுக்கு கதவு திறக்க தானே அறிவிப்பு

Top of page