1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்

கீர்த்தி பாலசூரிய

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற ஆறாவது திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்காததன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத்முத்தேட்டுவேகமை ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இனவாத ஒடுக்குமுறையாளருடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார். அத்தோடு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை முதலாளித்துவத்திற்கு அடிமைப்படுத்தி சிதைக்கவும் இதன்மூலம் இன்னுமோர்படி முன்சென்றுள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்டுள்ள நிலைமையில் கூட, இத்தடையை அமுல் செய்யும் பிற்போக்குச் சர்வாதிகார குண்டர் ஆட்சிக்கு தமது அடிமைத்தனத்தை காட்டுவதாக இந்நடவடிக்கை உள்ளது. இந்நடிவடிக்கை தொழிலாள வர்க்கத்திற்கும், தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் எதிராக இலங்கையிலும் அனைத்துலகிலும் ஸ்ராலினிசம் செய்த கேடுகெட்ட துரோகங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம்பெறும்.

அவ்வாறே பாராளுமன்றத்தில் தமது பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் மட்டுமே முத்தேட்டுவேகமையின் இந்தத் துரோகத்துடன் கைகோர்த்துக் கொள்ள முடியாமல்போன இலங்கை சமசமாஜக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளும் அவர்கள் 1983 ஜீலை 24-ம் திகதிவரை கடைப்பிடித்துவந்த இனவாத சார்பான கொள்கைகளால் இத்துரோகத்தின் பங்காளிகளாகின்றனர்.

ஆறாவது அரசியலமைப்பு சட்ட திருத்மானது 1983ல் ஜீலை 23-ம் திகதி பிரமாண்டமான முறையில் கட்டவிழ்த்துவிட்ட தமிழர் விரோத மக்கள் படுகொலைக் கிளர்ச்சியின் எதிர்ப்புரட்சி சாராம்சத்தை சட்டரீதியானதாக்கி நியாயப்படுத்துகின்றது. தேசிய ஒடுக்கு முறையாளரிடம் இருந்து பிரிந்து, வேறான ஒரு அரசினை அமைப்பதற்கு எந்தவொரு ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் உள்ள உலகளாவிய அடிப்படைய ஜனநாயக உரிமை, இத்திருத்தத்தின் மூலம் தமிழ் தேசிய இனத்திடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்தப் பிற்போக்கு அரசியலமைப்பு திருத்தம், தொழிலாள வர்க்கத்திற்கு முன்னொருபோதும் தொடுக்கப்படாத கொடியதொரு சட்டரீதியான தாக்குதலுமாகும். முதலாளி வர்க்கத்தின் இனவாதப் படுகொலை நடவடிக்கைகளை சவால் செய்வதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள அடிப்படை உரிமையும் இதன்மூலம் பிடுங்கப்பட்டுள்ளது.

அதாவது, சுருங்கக்கூறின் இது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து சிந்தனை முறையிலும், அரசியல் ரீதியிலும் பிரிவதை சட்டரீதியில் தடைசெய்த ஒரு பிற்போக்கு அரசியல் சட்டமாகும். இலங்கை என்ற அரசினுள் சஞ்சரிக்கும் அனைவரையும் உத்தியோகபூர்வமாக இனவாதிகளாக ஆக்குவதன்மூலம், தேசிய ஒடுக்குமுறையையும் இனவாதத்தையும் எதிர்ப்பவர்களை குடியுரிமை அற்றவர்களாக பிரகடனம் செய்வதற்கு வழிசமைப்பதே இதன் நோக்கம்.

தமிழ் தேசிய இனத்தை ஒழித்துக் கட்டவும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் அடிமைகளாக்கவும் செயல்படுகின்ற முதலாளித்துவ கட்சிகளும், அவர்களின் தரகர்களும் மட்டுமே இந்த பிற்போக்கு சட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும்.

உண்மையில் நடைபெற்றிருப்பது இதுதான். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை முதலாளித்துவத்திற்கு விற்பதையே தமது வாழ்க்கை பிழைப்பாக கொண்டுள்ள ஸ்ராலினிஸ்டுகள், சமசமாஜிஸ்டுகள், அதிகாரிகள் யூ.என்.பி. அரசாங்கத்தின் பிற்போக்குச் சட்டத்தை தமது காட்டிக் கொடுப்புக்களை மூடிமறைப்பதற்குப் பாவிக்கிறார்கள்.

ஸ்ராலினிச பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதற்கு எந்தவிதமான தடையோ அல்லது சங்கடமோ இருக்கவில்லை. இந்த திருத்தம் உள்ளடங்கலான முழு அரசியலமைப்பு சட்டத்தையும் நீக்குவதற்கு மக்களின் அங்கீகாரத்தை கோரிப் பிரச்சாரம் செய்ய அவருக்கும் ஏனையோருக்கும் உரிமை உண்டு.

எனினும் இந்த எந்தவொரு தலைமையும் சரி, இந்த உரிமையை பாவிப்பதாக இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் முதலாளித்துவத்துடன் நன்கு பிணைக்கப்பட்ட முதலாளித்துவத்தின் தலைவிதியுடன் மாட்டிக் கொண்டுள்ள அரசியல் ஒட்டுண்ணிகளாக இருப்பதே.

யூ.என்.பி. சர்வாதிகாரத்திற்கு எதிராக ‘‘ஜனநாயகத்தை’’ காப்பதாக கூறிக் கொண்டு முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சியினதும், மக்கள் ஐக்கிய முன்னணி என்ற இனவாதக் கந்தல்களதும் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பவும், இக்கட்சிகளை ஏந்திப்பிடிக்கவும் சமசமாஜ - கம்யூனிச - நவசமசமாஜ கட்சிகளும், இடத்துக்கு இடம் நாடோடிகளாய் அலைந்தவண்ணம், தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் அரசியல் சூழ்நிலையை கெடுப்பதற்கு என்றே ஜீவியம் நடத்தும் திருத்தல்வாதக் குழுக்களும், கோஷ்டிகளும் கடந்த காலத்தில் நடத்திய கேடுகெட்ட அரசியலின் விளைச்சலை இன்று தொழிலாள வர்க்கம் அறுவடை செய்யமுடிகிறது.

இச்சகல முதலாளித்துவ கட்சிகளும், ஒருவருக்கு மற்றவர் எந்தவிதத்திலும் குறைவற்றவிதத்தில் துள்ளி எழுந்து தமிழ் தேசிய இனத்தை ஒழித்துக்கட்ட தமக்குள்ள வெறியை வெளிக்காட்டியதுடன் மட்டுமன்றி தொழிலாள வர்க்கத்திற்கு விலங்குமாட்டி அரசியல் அடிமைத்தனத்துள் தள்ளவும், யூ.என்.பி. அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னால் அணிதிரண்டனர்.

‘‘பிற தேசிய இனத்தை ஒடுக்கும் தேசிய இனத்திற்கும் சுதந்திரம் கிடையாது’’ என மார்க்ஸ் ஒருமுறை குறிப்பிட்டார். கொடிய தேசிய ஒடுக்குமுறையானது தொழிலாள வர்க்கத்தின் மீதும் திணிக்கப்படுகின்ற கொடூரமான எதிர்ப்புரட்சி ஒடுக்குமுறையாகும்.

பாராளுமன்றம், பாஞ்சாலை, திருச்சபை, பாடசாலை, இராணுவ முகாம், புதினப் பத்திரிகைகளையும் ஏனைய தொடர்புச் சாதனங்களையும் பாவித்துத் தமிழ் தேசிய இனத்தை வேட்டையாடவும், பிரிந்து வேறான ஒரு அரசை அமைப்பதற்கு அவர்களுக்குள்ள உரிமையை பறிக்கவும் இடம்பெற்றுவரும் வெறி கொண்ட இயக்கமானது, வங்கியாளர்களுக்கு முற்றிலும் அடிபணிந்துபோன ஒட்டுண்ணி முதலாளி வர்க்கத்தின் ஒரு மிலேச்ச அரசியல் சர்வாதிகாரத்தை தொதுலாள வர்க்கத்தின் மீதும், சகல மக்கட் பிரிவினர் மீதும் திணிப்பதற்கான ஒரு இயக்கமாகும்.

தொழிலாள வர்க்கத்தினதும் ஏழை விவசாயிகளதும் வர்க்கத் தேவைகளை இந்தக் கொடிய எதிர்ப்புரட்சி மோசடிகளில் இருந்து தனிமைப்படுத்துவதற்கு பதிலாக ஸ்ராலினிஸ்டுளும், சமசமாஜிஸ்டுகளும் இம்மோசடியை அதிகரிக்கச் செய்யும்பொருட்டு தமது மார்க்சிச விரோத நச்சுக்குண்டுகளை தொழிலாள வர்க்கத்தின்மீது வீசுகின்றனர்.

தனியான தமிழ் அரசுக்கான போராட்டம் இல்லாமல் தமிழ் தேசிய இனத்துக்கு எந்தவிதமான பாதுகாப்போ எதிர்காலமோ கிடையாது என்பதை 1983 ஜீலை மக்கட் படுகொலைகள் நிரூபித்துக் காட்டிற்கு. அதுமட்டுமின்றி, பிரிந்துசென்று தனியான ஓர் அரசை அமைக்க தமிழ் தேசிய இனத்திற்கு உள்ள உரிமைக்காகப் போராடாமல் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவிதமான விமோசனமும் கிடையாது என்பதையும் அது நிரூபித்தது.

ஜீலை 23-ம் திகதி ஆரம்பமான இனவாதப் படுகொலை கலகங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொலையுண்டனர். கொழும்பு மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் தமிழர்கள் அகதி முகாம்களில் தள்ளப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் தமிழருக்கு சொந்தமான எந்தவொரு கடையோ வேலைத்தலமோ அல்லது வெற்றிலைச் சுருள் வண்டியோ எஞ்சவில்லை. ஒருசில இடங்கள் தவிர்த்த ஏனைய சகல இடங்களிலும் தமிழர்கள் தமது வசிப்பிடங்களில் இருந்தும் துரத்தியடிக்கப்பட்டதோடு, நூல்பந்து ஈறாக அனைத்தும் கொள்ளையிடப்பட்டு, சுட்டுப் பொசுக்கப்பட்டது.

சாதாரண மனிதர்கள் மட்டுமன்றி அரசாங்க உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள - ஆயுதப்படை அதிகாரிகள், நீதியரசர்கள் முதலானோரும் இந்நிலைக்கு பலியாகினர். இது வட-கீழ் மாகாணங்கள் தவிர்த்த ஏனைய சகல மாகாணங்களிலும் சகல தமிழ் மக்களையும் அடியோடு கிள்ளி எறியும் மோசமான தாக்குதலாகும்.

கலகங்கள் தேயிலை, இறப்பர் தோட்டங்களையும் பற்றிப் படர்ந்தது. தோட்டத்துறை அடியோடு தீமூட்டப் படாததற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பும், இந்திய மக்கள் கிளர்ச்சியின் உக்கிரமுமே. கலகக்காரர்கள் அரசாங்கத்தின் ஒரு அமைச்சரான தோட்டத் தொழிலாளர் தலைவர் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு தலைமை அலுவலகத்தை தாக்கியதோடு, அதன் ஒரு பகுதிக்கும் தீ மூட்டினர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக கலகக்காரர்கள் இந்திய தேசிய இனத்தினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் சொந்தமான சிறிய - பெரிய தொழிற்சாலைகள் அனைத்தையும் அடித்து நொருக்கி உற்பத்திக் கருவிகளையும் தூளாக்கி தீயிட்டனர். இத்தொழிற்சாலைகளில் வேலைசெய்தவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதத்துக்கும் மேலானோர் சிங்களம் பேசும் தொழிலாளர் ஆவர். மஹாராஜா தொழிற்துறை நிறுவனம், சின்டெக்ஸ், ஹைதராமணி, கே.ஜீ.இன்டஸ்றீஸ், ஜெட்ரோ இன்டஸ்றீஸ், டாடா காமன்ட்ஸ் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்த தொழிற்சாலைகள் அடியோடு நொருக்கப்பட்டுள்ளன.

தமிழ் போராளிகள் படுகொலை

இவை எல்லாவற்றையும் மிஞ்சுவது, வெலிக்கடை அரசாங்கச் சிறைச்சாலையில் இருந்த தமிழ் விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த ஐம்பத்தி நான்கு அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவத் தலையீட்டின் மூலம் சிறைச்சாலைக்குள்ளேயே கொலைசெய்யப்பட்டதாகும்.

தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக இடம்பெற்ற கேடுகெட்ட இந்த அநியாயங்கள் முப்பத்தைந்து ஆண்டுகள் பூராவும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த தேசிய ஒடுக்குமுறையினதும் அடக்குமுறையினதும் உச்சகட்டமாகும். இவற்றை தற்செயலான நடவடிக்கைகள் எனத் துரோகிகளும், மோசடியாளர்களும் மட்டுமே கூறமுடியும்.

இந்தப் படுகொலை நடவடிக்கைகள், உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பிடியுள் அகப்பட்டு வங்குரோத்தடைந்துள்ள தேசிய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் தமது மரணத்தை ஒத்திப்போட எடுக்கும் கையாலாகாத்தனமான நடவடிக்கைகளில் இருந்தே பெருக்கெடுக்கின்றது என்பதை மார்க்சிஸ்டுகள் முன்கூட்டியே நிரூபித்துள்ளனர்.

இந்தக் கலகங்களின் உள்ளடக்கத்தை நன்கு அவதானமாக ஆராயும்போது இக்குற்றச் சம்பவங்களிலும், படுகொலைகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் சகல பிரிவினரும் சகல கட்சிகளும், ஆயுதப்படைகள், சிறைச்சாலைகள், உள்ளடங்கலான முதலாளித்துவ அரசின் சகல அமைப்புக்களும், பாஞ்சாலைகள், திருச்சபைகள், முதலாளித்துவ பத்திரிகைகள், குட்டி முதலாளித்துவத்தின் வெறிபிடித்த மேல்தட்டினரும் தத்தம் பாணியில் பங்குகொண்டது நிரூபணமாகிறது.

இது தேசிய ஒடுக்குமுறையைப் பற்றிய ஒரு உலகளாவிய தோற்றப்பாடேயன்றி, ஸ்ராலினிஸ்டுகளும் திரிபுவாதிகளும் சுட்டிக்காட்ட முற்படுவதுபோல் முதலாளித்துவ சமுதாயத்தினுள் அழிந்து சிதைந்துபோயுள்ள பிற்போக்கானதும் தனிச்சிறப்பானதுமான ஒரு சமூக மட்டத்தினரிடையே இருந்து காலத்துக்காலம் வெடித்துக் கிளம்பும் இனவாதம் அன்று. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் தீர்க்கப்படாத ஒரு நாட்டில் ஏகாதிபத்திய சார்பான முதலாளி வர்க்கம் உலக நெருக்கடியின் தீப்பிளம்புக்குள்ளே அகப்படுவதற்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத தொடர்பினையே 1983 ஜீலை கலகங்கள் கடைசியாக நிரூபித்துக்காட்டியுள்ளது. இதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது.

ஸ்ராலினிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் இந்த அடிப்படையான விடயத்தை மூடிமறைக்கும் பொருட்டு விதண்டாவதங்களை பரப்பிவருகின்றனர். முதலாளித்துவத்தின் இறுதிக்கட்டத்தில் - இறந்து செல்லும் கூட்டத்தில் - அவை உருவாக்கியுள்ள பெரும் ஆழமான பரஸ்பர முரண்பாடுகளின் ஆழத்தை அம்பலமாக்குவதற்கு பதிலாக அவற்றை மழுங்கடித்து, மூடிமறைப்பதன்மூலம் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் சிந்தனையை கெடுத்து உதாசீனத்தை பரப்பும் ஏஜண்டுகளாக செயற்பட்டு வருகின்றனர்.

ஆறாவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக ஸ்ராலினிச பாராளுமன்ற உறுப்பினர் கூறியது என்ன?

‘‘இறுதிமுறையாக தனி நாடு பற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாம் தனி நாட்டை எதிர்க்கிறோம். தமது எதிர்காலத் தலைவிதியை நிர்ணயம் செய்து கொள்ள தமிழருக்கு உள்ள உரிமையை நாம் அங்கீகரித்தாலும் நாம் சிறிய நாட்டினுள் தனிநாட்டுக்காக பேசமாட்டோம்’’. (1983 ஆகஸ்ட் 4 - ஹன்சார்ட் 1338-1339)

திருவாளர் ஸ்ராலினிஸ்ட் அவர்களே

இது நன்கு பின்னப்பட்ட பழைய சூழ்ச்சியாகும். விவாதத்துக்கு இலக்காகி இருப்பது நாடு சிறியதா இல்லையா என்ற பிரச்சனை அன்று. இது இலாபம் உழைக்கும் உபாயமாகும். தமிழர் விரோத தேசிய ஒடுக்குமுறை, வங்குரோத்து சிங்கள முதலாளித்துவத்துடன் நேடியாக சம்பந்தப்பட்டிருப்பதே இன்று விவாதத்துக்கு இலக்காகியுள்ளது.

கூட்டுவாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத கட்டத்திற்கு சிங்கள இனவாத தேசிய ஒடுக்குமுறை சென்றுவிட்டது என நாம் கூறுகின்றோம். இந்த தேசிய ஒடுக்குமுறை பழைய நிலமானிய சமுதாய அழிபாடுகளின் பெறுபேறு அல்ல. சர்வதேச நாணய நிதியத்துடன் கைகோர்த்துக் கொண்ட முழு தேசிய முதலாளித்துவ நெருக்கடியினதும் மையத்தில் இருந்து பெருக்கெடுக்கின்றது என நாம் நிரூபித்தோம். இவ்விடயங்களை நாம் எழுப்பியபோது ஸ்ராலினிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் முதலாளித்துவத்துக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையேயான தொடர்பினை தட்டிக் கழித்துவிட்டு பூகோளத்தில் உள்ள ஏனைய சகலத்தையும் பற்றி வாயடிக்கத் தொடங்கினர்.

தனியான தமிழ் அரசுக்கான போராட்டத்துக்கு எதிராக ஸ்ராலினிஸ்ட்டுகள் முன் வைக்கும் தர்க்கங்களை பார்ப்பது கூட அனைத்துலகவாதிகளுக்கு வெட்கத்தை உண்டுபண்ணும்.

‘‘அது சாத்தியம் அல்ல. அது பொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியம் அல்ல. அது புவியியல் ரீதியல் சாத்தியம் அல்ல. அது அரசியல் ரீதியில் சாத்தியம் அல்ல. தமிழ் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், சிங்கள தொழிலாளர் - விவசாயிகளுக்கும் அதனால் நன்மை இல்லாததால் நாம் தனி நாட்டை எதிர்க்கின்றோம்’’. (அதே பேச்சு). இதில் தர்க்கத்தை விட மிரட்டலே அதிகம்.

இன்றைய பிரச்சனையாக உருவெடுத்திருப்பது ஏனைய சகல நிபந்தனைகளும் -அதாவது தேசிய சமத்துவத்தின் சகல நிபந்தனைகளும்- இட்டு நிரப்பப்பட்டுள்ள நிலைமையில் பேரினம் புவியியல், பொருளியல் தொடர்புகளதும், பெரிய சந்தையினதும் பெரிய அரசினதும் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளாததா? இது வெட்கக்கேடாகும். லெனின் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டியது போல் மக்கள் தமது அன்றாட அனுபவங்களின் மூலம் அவற்றின் முக்கியத்தை நன்கு அறிவர்.

தேசிய ஒடுக்குமுறை அடக்குமுறை பற்றிய பிரச்சனைகளுடன் தொடர்பற்ற விதத்தில் இவ்விடயத்தை எழுப்புவது சோசலிசம் ஆகாது, அது குண்டர் ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுக்கும் கோட்பாடாகும். ஸ்ராலினிஸ்டுகள் இக் ‘‘கோட்பாட்டை’’ யூ.என்.பி காரர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

முக்கிய பிரச்சனை தேசிய ஒடுக்குமுறையாகும், லெனின் திரும்பவும் சுட்டிக்காட்டியது போல்  ‘‘ஆதலால் அவர்கள் தேசிய ஒடுக்குமுறையும், தேசிய வெடிப்புக்களும் கூட்டு வாழ்க்கையை முற்றிலும் சகித்துக் கொள்ள முடியாத போதும், சகல பொருளாதார கொடுக்கல் வாங்கல்களும் தடைப்படும் போதும் மட்டுமே பிரிந்து சென்று வேறான ஒரு அரசை நிறுவும் நடவடிக்கையில் இறங்குவார்கள். அத்தகையதொரு நிலையில் பிரிந்து சென்று வேறான ஒரு அரசை அமைப்பதே முதலாளித்துவ அபிவிருத்தியின் நலன்களுக்கும், வர்க்கப் போராட்டத்தின் சுதந்திரத்திற்கும் நன்கு பொருத்தமானது’’. (‘‘தேசிய இனங்களின் சுயநிர்ணயம்’’ - லெனின்)

ஆதலால் இப்பிரச்சனையில் ஒரே தீர்க்கமான காரணி தேசிய ஒடுக்குமுறையும், தேசிய வெடிப்புக்களும் கூட்டு வாழ்க்கையை தொடர்ந்தும் கொண்டு நடத்த முடியாத நிலைமையை உருவாக்கி உள்ளதா என்பது மட்டுமே. ஏனைய யாவும் உதவாக்கரையானவை.

இந்த தீர்க்கமான அம்சத்தை பற்றி ஸ்ராலினிஸ்டுகளும் திருத்தல்வாதிகளும் வாய் திறப்பதாயில்லை. யூ.என்.பி. அரசாங்கத்தின்கீழ் இந்நிலைமை உருவாகியிருப்பினும், முழு முதலாளித்துவமும் இன்னும் கெட்டுப் போய்விடவில்லையென்றும், சில முற்போக்கு சக்திகள் முதலாளி வர்க்கத்தினுள் இன்னும் இருப்பதாகவும் அவர்கள் சைகை செய்கிறார்கள். பின்னர் வரும் கூட்டரசங்கத்தின் கீழோ அல்லது எதிர்ப்பு இயக்கத்தின் கீழோ நிலைமை அவ்வளவு மோசமடையாவிட்டால் பிரிவினைக்கு பதிலீடு இருப்பதாகக் காட்டப்பார்க்கிறார்கள்.

இது வெறுமனே பகற்கனவு திருஷ்டி மட்டுமின்றி தொழிலாள வர்க்கத்தை முழுப்படியே காட்டிக் கொடுப்பதுமாகும். இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்கும் புற முதுகு காட்டிவிட்டு, நாளைய பொழுதின் உக்கிரம் அடையாத பிரச்சனை பற்றிக் கனவு காணும்‘‘ இந்த விதிமுறை லெனின் சுட்டிக் காட்டியது போல் சகல காட்டிக் கொடுப்பாளர்களதும் ஏகாதிபத்திய கைக்கூலிகளதும் விதிமுறையாகும்.

முக்கியமான விடயம் தேசிய ஒடுக்குமுறையே ஆதலால் தொழிலாள வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே போராட்டத்தின் குறுக்கிடும் தேசிய ஒடுக்குமுறையின் இந்த தோற்றப்பாட்டை தூக்கி வீசாமல் முதலாளித்துவத்தை தூக்கி வீசி முன்செல்லும் பாதை சிங்களம்பேசும் தொழிலாள வர்க்கத்துக்கு இல்லை. தனியான தமிழ் அரசினை நிறுவுவது மட்டுமே இந்நிலைமையில் தொழிலாள வர்க்கமும், ஏழை விவசாயிகளும் முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை நெழிவு சுழிவுகள் அற்ற நேரடிப் போராட்டமாக்குகின்றது. பிரிந்து செல்வதே வர்க்கப் போராட்டத்தின் சுதந்திரத்திற்கும் நல்ல நிலைமைகளை சிருஷ்டிக்கின்றது.

நாம் ஸ்ராலினிஸ்டுகளை போல ‘‘ஒரு நாட்டின் சோசலிஸ்ட்டுகள்’’ அல்ல. தமிழ் தேசிய இனம் பிரிந்து சென்று வேறான ஒரு அரசை அமைப்பது தமிழ் பேசும் தொழிலான வர்க்கத்துக்கும் சிங்களம் பேசும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையே முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துக்கான ஐக்கியத்திற்கு அடித்தளமிடுகிறது. ஸ்ராலினிஸ்டுகள் செய்வதைப் போல், தேசிய ஒடுக்குமுறைக்கு ஆதரவு அளிப்பது வடக்கு கிழக்கில் முதலாளித்துவ வளர்ச்சியை பலாத்காரமாக நசுக்குகின்றது. அதனால் சோசலிசத்துக்காக போராடும் தொழிலாள வர்க்கம் துரிதப்படுத்தப்படுவதை பலாத்காரமாகத் தடைசெய்கின்றது. வட - கீழ் மாகாண தொழிலாளர் - ஏழை விவசாயிகளின்மீது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிடியைப் பாதுகாக்கின்றது. இவை வரலாற்று எதிர்ப்புமிக்க கடைகெட்ட எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளாகும்.

1974ல் ஏகாதிபத்தியவாதிகள் தேசிய முதலாளிகளுடன் சேர்ந்து திணித்த செயற்கையான தேசிய எல்லைகளையும் அரச அமைப்புக்களையும் பாதுகாப்பதானது சோவியத் ஸ்ராலினிஸ்டுகள் ஏகாதிபத்தியத்துடன் கடைப்பிடித்து வரும் நிறைவமைதி சமாதான சகவாழ்வு களுடன் நேரடியாக இணைந்துள்ளது. ஸ்ராலினிஸ்டுகளின் இக்கொள்கைகள், இன்று சோசலிசப் புரட்சியை பலாத்காரமாக நசுக்க ஏகாதிபத்தியங்களுக்கும் அவர்களின் ஏஜெண்டுகளுக்கும் துணை நிற்கின்றது.

ஜீலை இனவாத கலகங்களுக்கும் முதலாலித்துவத்தின் நெருக்கடிக்கும் இடையேயான தொடர்புகள் பற்றியும் சகல முதலாளித்துவ கட்சிகளுக்கும், முதலாளித்துவ அமைப்புகளுக்கும் இதனுடனான தொடர்புகள் பற்றியும் எந்தவிதமான ஆய்வும் செய்யாமல், பிரிவினை நல்லதா? கெட்டதா?’’ என வம்பளப்பது சோசலிசப் புரட்சிக்கு எதிராக ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துக் கொள்ளுவதாக இருக்க காரணம் இதுவே.

வர்க்க நனவுள்ள எந்தவொரு தொழிலாளியும் இந்த ஸ்ராலினிச நெழிவுசுழிவுகளின் மூலம் வழிதடுமாறக்ககூடாது. ஜீலை இனவாத கலகங்கள் முதலாளித்துவத்தின் படுகோரமான நாற்றமெடுப்பில் இருந்து தோன்றிய தேசிய ஒடுக்கு முறையின் சட்டரீதியான வெளிப்பாடாகும்.

கலகத்தின் பின்னர் அக் கலகத்தின் சாராம்சத்தை சட்டரீதியானதாக்க யூ.என்.பி. சிறீலங்கா சுதந்திரக் கட்சி எம்..பி. முதலாளித்துவக் கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இவர்கள் அனைவரும் திருச்சபை, பாஞ்சாலை, பத்திரிகை பைத்தியங்கள் அனைத்துடனும் ஒன்றுகூடி ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்குள்ள சுயநிர்ணய உரிமையை பறித்தனர்.

இப்பறிப்பானது இன்னும் மோசமான ஒரு தொகை தாக்குதல்களுக்கான ஆரம்பமாகிறது. இராணுவத்தினரும், குண்டர்களும் நாசமாக்கிய தமிழர் உடைமைகளை நேரடியாக அரசுடைமையாக்கியமை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் . அமிர்தலிங்கம் குறிப்பிட்டது போல் சட்டவிரோதமான கொள்ளையடிப்பின் பின்னர் சட்டப்பூர்வமான கொள்ளையடிப்பின் ஆரம்பமாகும். இச்சொத்துக்களை திருத்தி தமிழர்களுக்கு கொடுப்பதாகக் கூறுவது ஜெயவர்தனாவின் மோசடிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததாகாது.

இது தொடர்பாக அவமானம்மிக்க சிறில் மத்தியூ (கைத்தொழில் அமைச்சர்) ஆற்றிய பேச்சின் ஒருபகுதி வருமாறு

‘‘வர்த்தகம் முழுவதும் சிங்களவர் அல்லாதோரின் கைகளிலேயே உள்ளது. நான் கேட்கிறேன், இதற்கு நாம் தரும் பதில் எனன? நம் நாட்டில் பெரும்பான்மையினர் சிங்களவர் என்கிறோம். நூற்றுக்கு 74 வீதமும் சிங்களம் பேசும் ஒரு ஆளைக் கண்டு பிடிப்பது கடினம். அவ்வாறே மொத்த வியாபாரமும் சிங்களவர் அல்லாதோரின் கைகளிலேயே உள்ளது. இன்னும் ஓர் பிரச்சனை உண்டு. ஏன் இந்த சிங்கள மக்களுக்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது? வர்த்தகம் செய்வோர் வங்கிகளுக்கு போனால் என்ன நடக்கிறது? அங்கு இருக்கின்ற உயர் அதிகாரிகள் எல்லோரும் சிங்களவர் அல்லாதோர். இலங்கை வங்கிக்குப் போனாலும் அப்படி ஹட்டன் நாஷனல் வங்கிக்குப் போனாலும் அப்படி. இந்தியன் வங்கிக்கு போனாலும் அப்படி கொமேர்ஷல் வங்கிக்கு போனாலும் அப்படி.

‘‘இப்போ அவர்கள் (சிங்களவர்கள்) கேட்கிறார்கள் என்ன செய்வது என்று. மீண்டும் இதைச் சிங்களவர் அல்லாதோரின் ஏகபோகம் ஆக்கவா போகிறீர்கள் என அவர்கள் கேட்கிறார்கள். ... சிங்கள மக்கள் இப்பிரச்சனைகளையே முன் வைக்கிறார்கள். இது பெரிய பிரச்சனை. இன்று நேற்று நடந்த சம்பவங்கள் இக்காரணத்தினாலேயே நடைபெற்றன.

‘‘இந்த பிரச்சனை, இந்தக் கையறுநிலை, சிங்கள மக்கள் மத்தியில் இருபத்தைந்து, முப்பது வருடங்களாக கொதித்து, கொதித்து வந்தது, அதற்கு ஒரு தீச்சுவாலை மட்டுமே அவசியமாக இருந்தது. அது 24-ம் திகதி அன்று விழுந்தது’’. (1983 ஆகஸ்ட் 4 - ஹன்சார்ட் 1315-1317-1318)

ஜெயவர்தனாவின் இனவாத வலதுகரமான சிறீல் மத்தியூவின் இப்பேச்சு சகல தமிழர்களையும் சிங்களவர் அல்லாதோரையும் சகல நிறுவனங்களில் இருந்தும் துரத்தி அடிப்பதாக மட்டுமன்றி அரசாங்க கூட்டுத்தாபன துறைகளைச் சேர்ந்த சகல தமிழ் ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் விடுவிக்கப்பட்ட ஒரு சவால் ஆகும்.

இதனுடன் கைகோர்த்துக் கொண்டு அரசாங்கக் காணிகளில் உத்தரவின்றிக் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு என்று இன்னுமோர் மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு தயாராகி வருகின்றது.

இப்பிற்போக்கு மசோதாவின் ஒரே இலக்கு, இனவாத கலகங்களால் தோட்டத் துறையில் இருந்து வெளியேற்றப்பட்டு, வட கீழ் மாகாணங்களில் அகதிகளாக குடியேற்றப்பட்டுள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்தும் அடித்துத் துரத்துவதே.

தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்மசோதாவை பற்றி வெளியிட்ட அறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டுவது இங்கு போதுமானது.

‘‘முன்பொரு தடவை இடம்பெற்ற (1981) கலவரங்களின் பின்னர் அகதிகளாகக் கொண்டுவரப்பட்டு இப்பிரதேசங்களில் விடப்பட்ட இந்திய வம்சாவளியினரை குடியேற்றுவதை சட்ட ரீதியானதாக ஆக்குகின்ற பிரகடனம் செய்யப்பட்ட கொள்கையை அமுல் செய்வதற்கு பதிலாக, பல்வேறு திரைமறைப்புகளின் கீழ் அவர்களை நிலங்களில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் இடைவிடாது முயன்றனர்.

‘‘ஜீலை மாதமளவில் பொலிசாரும், ஆயுதப்படையினரும் இக்குடியிருப்பாளர்களுக்கு எதிராக காடைத்தனங்களை கட்டவிழ்த்ததன் மூலம் அவர்களை வெளியேற்றுகின்ற பிரச்சனை மேலும் உக்கிரம் அடைந்தது.

‘‘இந்த வேலைத்திட்டத்தை சட்டரீதியானதாக்கும் பொருட்டு காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் இலங்கையினுள் சட்டவிரோதமாக காணிகளை கைப்பற்றிக் கொள்வதை தடுக்கவும், இலங்கையின் எந்தவொரு தனி ஆளோ அல்லது குழுவோ, அமைப்போ அல்லது தனியார் சபையோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யும் மசோதா என்ற பெயரில் ஒரு மசோதாவை சமர்ப்பித்தார்’’.

‘‘இதன்படி அமைச்சருக்கு பரந்த அதிகாரங்கள் கிடைக்கும் பயங்கரவாத தடைச்சட்ட மசோதாவில் அடங்கியுள்ள கொடிய சரத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. அமைச்சரின் உத்தரவின்படி வழங்கு விசாரணை இன்றி ஒரு நபரை 18 மாதகாலம் வரை கைது செய்து வைத்திருக்கும் அதிகாரமும் அதில் ஒன்றாகும். குடியிருப்பாளர்களை பயங்கரவாதிகளாக பேர் சூட்டி, கட்டிடங்களை உடைத்து தகர்ப்பதற்கு பொலிஸ், தரைப்படை, கடற்படையினரை பாவிப்பதற்கு அரசாங்க அதிபருக்கோ அல்லது உதவி அரசாங்க அதிபருக்கோ அதிகாரம் வழங்குவது இன்னுமொன்றாகும்.’’

இவை எல்லாம் பொருளாதார வீழ்ச்சியினுள் அகப்பட்டுப் போயுள்ள சிங்கள முதலாளி வர்க்கத்தால் தேசிய ஒடுக்கமுறையும், அடக்குமுறையையும் கைவிட முடியாது என்பதற்கு நல்ல சாட்சிகளாகும். தேசிய ஒடுக்குமுறை, சிங்கள முதலாளி வர்க்கத்திடம் இருந்து பிரிக்க முடியாத - உயிரும் உடலும் போன்றது. ஸ்ராலினிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் தலைகீழாக நின்றாலும் தமது பௌதிகவாத பொய் பேச்சுக்களால் இந்த தீர்க்கமான உண்மையை மறைக்க முடியாது.

இந்த நிலைபெற்றுவிட்ட தேசிய ஒடுக்குமுறையே பிரிந்து சென்று தனியான ஒரு அரசை அமைக்கும் போராட்டத்தைவிட வேறு மாற்றுவழியை தமிழ்மக்களுக்கு இல்லாமல் செய்துள்ளது.

ஸ்ராலினிஸ்டுகளும் திரிபுவாதிகளும் இறந்து செல்லும் முதலாளித்துவத்தின் இந்த நச்சுத்தனமான வடிவத்தை சுலபமாக மறந்து விடுகிறார்கள். அங்ஙனம் மறந்துவிட்டு தேசிய விடுதலைப் போராட்டத்தின் உக்கிரத்தை பற்றிப் பேசுகிறார்கள். தொழிலாள வர்க்கத்தை குழப்பியடிக்கும் இந்த கடைகெட்ட முயற்சியின் அரவணைப்பில், சகல நெருக்கடிக்கும் காரணம் ஒடுக்குவோருக்கு எதிராக ஒடுக்கப்படுவோர் போராடுவதே என்ற சுரண்டலாளரின் கருத்து இருக்கிறது.

ஸ்ராலினிசப் பேச்சாளரின் பக்கம் மீண்டும் திரும்புவோம்

‘‘மிகவும் பயங்கரமான நிலைமைக்கு இடமளிக்கும் அநேக கொலைகள் பயங்கரவாதிகளால் யாழ்ப்பாணத்திலும் வட மாகாணத்தின் வேறு இடங்களிலும் செய்யப்பட்டன. இதன் பின்னர் 22-ம், 23-ம் திகதிகளில் நாட்டின் இம்மாகாணத்தில் வாழும் தமது சகோதர மக்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் அற்ற வெறிபிடித்த நபரால் அல்லது நபர்களால் கொலை செய்யப்பட்ட பதின்மூன்று படைவீரர்களின் சடலங்கள் கனத்தைக்கு கொண்டு வரப்பட்டன’’. (ஹன்சார்ட் - 1333 பக்கம்)

பேரின இனவாத ஒடுக்குமுறையையும், அடக்குமுறையையும் தற்செயலானது என நியாயப்படுத்துகின்றனர். மறு பக்கத்தில் ஒடுக்கு முறைக்கு எதிரான ஒடுக்கப்படுவோரின் போராட்டத்தை ‘‘ஆத்திரமூட்டும் செயல்’’ எனப் பெயர் சூட்டியழைக்கின்றனர்.

மார்க்சிசத்துக்கு எதிராக சுரண்டலாளர்களின் வர்க்கங்கள் கட்டி எழுப்பும் சகலவிதமான பின்தங்கிய சிந்தனை முறைகளையும் பயன்படுத்துவதன் மூலமே ஸ்ராலினிசம் இன்று உயிர் வாழ்கிறது.

இனவாத இராணுவத்தினர் மாணவிகளை கற்பழித்தும், கிராமங்களை நாசமாக்கியும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்த கொலைகார ஒடுக்குமுறைக்கு பதிலடியாகவே, ஜீலை 22-ம் திகதி ஆயுதப் படைப்பிரிவினர், விடுதலை இயக்கத்தின் போராளிகளால் சுற்றிவழைக்கப்பட்டு தாக்கப்பட்னர்.

அரசாங்கத்தின் சகல பக்க பலத்துடன் ஆயுதப்படையினர் மக்களை நசுக்கும் போது, ஒடுக்கப்டும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த ஸ்ராலினிஸ்ட் சொல்கிறார்? ஆக்கிரமிப்பு இராணுவத்தை தமது தாய் நாட்டின் மண்ணில் இருந்து வெளியேற்ற அவர்களுக்கு உரிமை இல்லையா? ஒடுக்கப்படும் மக்களுக்கு உரிய இந்த அடிப்படை உரிமையை தாக்குவதானது மக்கட் படுகொலையை சமாதான சகவாழ்வின் பேரால் அங்கீகரிக்கும்படி கோருவதாகும். தொழிலாளர்களே நன்றாக ஞாபகத்தின் வைத்திருங்கள் இதுதான் ஸ்ராலினிசம்.

யூ.என்.பி. அரசாங்கத்தையும் இனவாத ஒடுக்குமுறையையும் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இங்கு கடைபிடிக்கும் உபாயத்தின் மூலம் வரலாற்று ரீதியாக தீர்மானம் செய்யப்பட்ட மோதுதலை இரண்டு துட்டுக் காசு குழப்பமாக திருப்புகின்றார்.

லெனின் தமது காலத்தில் இந்த வகையறாவை சேர்ந்த பிலிஸ்தீன்களின் விதிமுறையைப் பற்றி அம்பலப்படுத்துகையில்

‘‘... உதாரணமாக ஒரு யுத்தத்தின் உள்ளடக்கம் எதிரியின் தேசிய ஒடுக்குமுறையை தூக்கி வீசுவதற்கு எனில் ஒடுக்கப்படும் அரசு அல்லது ஒடுக்கப்படும் மக்களை பொறுத்தமட்டில் அந்த யுத்தம் முற்போக்கானது. எவ்வாறெனினும் யுத்தத்தின் உள்ளடக்கம் காலனிகளை பங்குபோடுதல் கொள்ளைகளை பங்குபோடுதல், வெளிநாட்டுப் பிரதேசங்களை சூறையாடுதல் என்பனவாயின் - அத்தகைய யுத்தங்களில் தாய்நாட்டை பாதுகாப்பது பற்றிப் பேசுவது மக்களை முழுமனே ஏமாற்றுவதாகும்.

‘‘அங்ஙனமாயின் ஒரு யுத்தத்தின் உள்ளடக்கத்தை நாம் வெளிப்படுத்தி கருத்துத் தெரிவிப்பது எப்படி? யுத்தம் என்பது ஏதேனும் ஒரு கொள்கையை தீர்க்கமாக முன்னெடுத்துச் செல்வதாகும். ஆதலால் நாம் யுத்தத்திற்கு முன்னர் கடைப்பிடிக்கப்பட்டதும், யுத்தத்திற்கு காரணமாக இருந்ததுமான கொள்கைகளை ஆராய வேண்டும்.

பிலிஸ்தீன்கள், யுத்தம் ஏதேனும் ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்கின்றது என்பதை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. அதனால் யுத்தத்தில் என்ன பிரச்சனை பணயம் வைக்கப்பட்டுள்ளது எந்த வர்க்கம் யுத்தத்தை கொண்டு நடத்துகின்றது, எந்த இலக்கில் யுத்தம் நடைபெறுகின்றது என்ற பிரச்சனைகளை நினைத்தும் பார்க்காமல் ‘‘எதிரி எம்மீது தாக்கியுள்ளான்’’ ‘‘எதிரி எனது நாட்டை ஆக்கிரமித்துள்ளான்’’ என்பன போன்ற சூத்திரங்களுடன் நின்றுவிடுகிறார்கள்.

‘‘பிலிஸ்தீன்களுக்கு முக்கியமானது இராணுவம் எங்கே நிற்கிறது, இக்கூட்டத்தில் வெல்வது யார் என்பவை தான். மார்க்சிஸ்டுக்கு முக்கியமானது, இந்த யுத்தத்தில் பணயம் வைக்கப்பட்டிருக்கும் பிரச்சனை என்ன என்பதே’’ (லெனின், மார்க்சிசத்தின் விகடச் சித்திரமும் ஏகாதிபத்திய பொருளாதாரவாதமும் - தொகுதி -23)

இன்று தோன்றியுள்ள யுத்தம் தொடர்பாகவும் இந்த விதத்திலேயே பிரச்சனையை அணுக வேண்டும். இந்த யுத்தத்திலும் தமிழ் விடுதலைப் போராளிகளை போலவே யூ.என்.பி. அரசாங்கமும் தாய்நாட்டை காப்பாற்றவே தாம் போராடுவதாகக் கூறிக் கொள்கின்றது.

தமிழ் விடுதலைப் போராளிகளின் கையில் உள்ள போராட்ட சுலோகத்துக்கு அர்த்தம் உண்டு. ஏனெனில் அவர்கள் மக்கட் படுகொலை இனவாத ஒடுக்குமுறையாளரிடமிருந்து தமது தேசிய இனத்தின் உயிர் வாழ்க்கை, நிலம், சொத்து, போக்குவரத்து முதலான அனைத்தையும் காப்பாற்ற போராடுகிறார்கள். அது சிங்கள தேசிய இனத்தினதோ அல்லது வேறு தேசிய இனத்தின் உயிர்களுக்கோ, சொத்துக்களுக்கோ, நிலங்களுக்கோ, போக்குவரத்துக்களுக்கோ தாக்குதல் நடத்தி தவிடுபொடியாக்கும் யுத்தம் அன்று. உயிர் பாதுகாப்பு யுத்தமாகும். ஆதலால் அது நியாயபூர்வமான யுத்மாகும். தொழிலாள வர்க்கம் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

இந்த தீர்க்கமான யுத்தத்தில் யூ.என்.பி. அரசாங்கமும், சிங்கள முதலாளி வர்க்கமும் கைகளில் தாங்கியுள்ள தாய் நாட்டைக் காப்பாற்றும் சுலோகம் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு என்றே பயன்படுத்தப்பட்ட மோசடியாகும். அதாவது, ஒடுக்கப்படும் தேசிய இனத்தை பலாத்காரமாக அடிமைப்படுத்தி, அவர்களின் உயிர்களை பலிவாங்கி, சொத்துக்களை கொள்ளையடித்து, அடிப்படை உரிமைகளை பிடுங்கிக் கொள்வதற்காக நடத்தும் கொடிய ஆக்கிரமிப்பை மூடிமறைக்கும் பொருட்டு சிருஷ்டித்த கதையளப்பாகும்.

அவ்வாறே, இந்த யுத்தம் - தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை பறித்தும், அதன் அமைப்புக்களை சிதறடித்தும் ஏகாதிபத்திய வங்கியாளர்களின் மிலேச்சை சுரண்டலுக்கு தொழிலாளர்-விவசாயிகளை பலியிடுவதற்கும் அவசியமான நிலைமைகளை சிருஷ்டிக்கும் யுத்தமாகும்.

இந்தப் பிற்போக்கு யுத்தத்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு விடுதலைப் படைகளின் கரங்களால் எமது படைகளை தோல்வியடையச் செய்வதாக இருக்க வேண்டும்.

அழிவுக்கிடமான யுத்தத்தை நடத்தும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகக் கிளர்ந்து, அவர்களதும், அவர்களது ஏகாதிபத்திய எஜமான்களதும் சொத்துக்களை தொழிலாளர் நிர்வாகத்தின் கீழ் தேசிய மயமாக்குவதோடு, கொலைகார ஆயுதப்படைகளை கலைத்து, வட-கீழ் மாகாண தமிழ் தேசிய இனம் பிரிந்து சென்று வேறான அரசை அமைப்பதற்கு உள்ள உரிமையை பாதுகாப்பது தொழிலாள வர்க்கத்தின் பணியாகும்.

ஸ்ராலினிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் இவை எவற்றுக்காகவும் போராடுவதாய் இல்லை. ‘‘எமது படைகளுக்கு’’ நேரிடும் தலைவிதியை பற்றியும், விடுதலைப் போராட்டத்தின் பயங்கரம் பற்றியும் கூச்சல் போடும் அதே வேளையில் தாம் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இது அப்பட்டமான பொய்யாகும்.

‘‘தேசிய சுயநிர்ணயம் என்பது, பூரண தேசிய விடுதலைக்காகவும், பூரண சுதந்திரத்துக்காகவும், குழிபறிப்புகளுக்கு எதிராகவும் நடக்கும் போராட்டமாகும். ஆதலால் சோசலிஸ்டுகள் -அவர்கள் சோசலிஸ்டுகள் என்ற விதத்தில் தோல்வி காணாது- அப்போராட்டம் கிளர்ச்சி, யுத்தம் வரையிலான என்ன வடிவில் வந்தாலும் அப்போராட்டத்தைக் கண்டிக்க முடியாது’’. (லெனின் தொகுப்பு 23-பக்கம் 34)

இதுதான் மார்க்சிச நிலைப்பாடு, எவரும் எதிர்ப்புரட்சி இனவாத முதலாளி வர்க்கத்தின் கைக்கூலியாக மாறாதவரை இந்நிலைப்பாட்டை புறக்கணிக்க முடியாது.

ஸ்ராலினிசத்தின் இத்துரோகத்துக்கு நவசமசமாஜக் கட்சியின் திருத்தல்வாதிகள் நேரடி ஆதரவு வழங்குகின்றனர். தேசிய ஒடுக்குமுறையாளனின் அரசாங்கமான யூ.என்.பி. அரசாங்கத்துடன் நடத்தும் வட்டமேசை பேச்சுவார்த்தைகள் மூலம் தேசிய இனப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என ஸ்ராலினிஸ்டுகள் போதிக்கும் போது நவசமசமாஜிஸ்டுகள் கூறுவது என்ன? யூ.என்.பி. அல்லாத வேறொரு அரசாங்கத்தின் கீழோ அல்லது எதிர்க்காலத்தில் ஏற்படுக்கூடிய சீர்திருத்தவாத எதிர்ப்பு இயக்கத்தின் கீழோ தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்கின்றனர்.

தமிழ் தேசிய இனப்படுகொலைகளுக்கு முன்னோடியாக யூ.என்.பி. அரசாங்கம் வடமாகாண பிரச்சனையை தீர்க்க பாராளுமன்றத்தின் சகல கட்சிகளையும் கொண்ட வட்டமேசை மகாநாட்டிற்கு அழைப்பு விடுத்த சமயத்தில் நவ சமசமாஜக்கட்சி வெளியிட்ட அறிக்கை இதனை அளவுக்கு அதிகமாக நிரூபித்துள்ளது.

‘‘யூ.என்.பி. அரசாங்கத்தினால் கட்டப்படும் அனைத்துக் கட்சி கலந்துரையாடல்கள் எதிலும் நவசமசமாஜக் கட்சி கலந்து கொள்ளாது. இந்நாட்டின் இனவாதக் கலவரங்களின் முக்கிய காரணம் ஜே.ஆர். (ஜெயவர்த்தனாவும்) யூ.என்.பி. அரசாங்கமும் அமைச்சரவையில் உள்ள சிறில் மத்தியூ போன்ற பாசிச பிரிவினருமே என நாம் கருதுகின்றோம், தமிழ் பேசும் மக்களின் முக்கிய ஒடுக்குவோர் அவர்களே, ஐக்கியத்துக்கான ஒரேவழி இப் பிற்போக்கு இனவாத அரசாங்கத்தை வீழ்த்துவதே’’ (‘‘வமே சட்டன’’ - 1983-07-14, நவ சமசமாஜக் கட்சி அறிக்கை)

யூ.என்.பி. அரசாங்கததை கண்டிக்கும் பொருட்டு இங்கு கடுமையான வார்த்தைகளை கையாண்டிருப்பினும், இதன் அரசியல் பிற்போக்கு நிலைப்பாடுகளையே அடித்தளமாக கொண்டுள்ளது. முதலாவதாக இனவாதத்தின் பிரதான காரணி யூ.என்.பி. அரசாங்கம் எனக் கூறுவதானது முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கும் தேசிய ஒடுக்குமுறைக்கும் இடையேயான உறவு பற்றிய பிரச்சனையை பூசிமெழுகி முதலாளித்துவத்தை காப்பதாகும்.

இது மறதி அன்று ஜனநாயகப் புரட்சியின் பிரச்சனைகளை முதலாளித்துவ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தட்டினர் எனப்படுவோரும், தீவிரவாதிகளும் தீர்ப்பதற்கு இடமுண்டு எனக்கூற இடமளிப்பதாகும்.

இரண்டாவதாக, தமிழ் தேசிய இனத்தின் தலைவிதியை நிர்ணயம் செய்வதற்குப் பேரினத்தின் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கட்சிகளின் கூட்டுகளுக்கோ உரிமை கிடையாது என அப்பட்டமாக கூற மறுப்பதானது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை காட்டிக் கொடுப்பதாகும்.

கூட்டு நிர்ணயம் சுயநிர்ணயத்துக்கு முற்றிலும் எதிரானது. இங்கு நாம் தீவிரவாத வார்த்தை ஜாலங்களின் பின்னணியில் திருத்தல்வாதிகள், நானாவிதமான முதலாளித்துவ குழிபறிப்புகளுக்கு எங்ஙனம் முண்டு கொடுக்கின்றனர் என்பதைக் காண்கிறோம்.

இன்றைய சகாப்தத்தின் அடிப்படையான தன்மையும் இலங்கையினுள் அது திட்டவட்டமாக எடுத்துள்ள வடிவம் ஒருபுறமும், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தின் ஒரே உறுதியான போராளி என்ற விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தொழிற்பாடு மறுபுறமும் உள்ளது. இவற்றை நிராகரித்துவிட்டதன் பின்னர் நவசமசமாஜ கட்சி தலைவர்கள் முதலாளித்துவ எதிர்ப்புரட்சிக்கும் - சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமான தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் இடைநடுவில் கூடாரம் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் பரஸ்பர முரண்பாடானதும் பின்தங்கியதும், படு சந்தர்ப்பவாதமும் பின்னிப்பிணைந்த நடைமுறைகளினால் இழுபட்டுச் செல்கின்றனர்.

ஒரே சமயத்தில் இனவாத கலவரங்களின் முக்கிய பங்காளிகளான ஆயுதப் படையினரின் ‘‘மனித உரிமை’’ களுக்கும் ‘‘தமிழ் மக்களின் தேசிய உரிமை’’ களுக்கும் கோஷமெழுப்புவதில் இக்கட்சியினர் வெற்றிகண்டதற்கு காரணம் அதுதான்.

தேசிய விடுதலை இயக்கத்தை நசுக்கும் பொருட்டு வடக்கே அனுப்பப்பட்ட ரஜரட்ட றைபிள் படைப்பிரிவின் ஒரு சாரார் மே மாதத்தில் அரசாங்கத்தின் கட்டளையையும் மீறி வீடுகளுக்கு தீயிட்டும், கொள்ளையடித்தும் வந்தனர். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது இந்தப் படைப்பிரிவினை சேர்ந்த ஏனையோர் தரைப்படையினின்றும் வெளியேறினர். இந்த இராணுவக் கலகம் தற்செயலானதல்ல. இது இனவாதப் படுகொலைகளை துரிதப்படுத்தும்படி சிங்கள - பௌத்த இனவாத அமைப்புக்களும், சிறில் மத்தியூவின் குண்டர் படைப்பிரிவும் கூட்டாக நடத்திய இயக்கமாகும். ஐலன்ட் (திவயின) பத்திரிகை கும்பல் இக்கிளர்ச்சிக்கு நேரடி ஆதரவை வழங்கியது.

இந்த இராணுவக் கலகத்தை பற்றிய நவ சமசமாஜ கட்சியின் நிலைப்பாடு என்ன?

‘‘ரஜரட்ட றைபிள் படைப்பிரிவின் படையாட்களின் ஒரு பகுதியினருக்கும், ஆணையிடும் அதிகாரிகள் பிரிவிற்கும் எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிய பிரச்சனையை தோற்றுவிக்கிறது. தேசிய ஒடுக்குமுறைக்கு மேலாக வேலையின்மை, கல்வி வெட்டு, நிலமின்மையால் உருவான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை நெருக்கி வீடு சென்ற ரஜரட்ட றைபிள் படையாட்கள் சரியான முறையில் நடந்து கொண்டுள்ளனர். சகல ஜனநாயகவாதிகளதும் பணி, இந்த படையாட்களின் மனித உரிமையை பேணுவதே. பயங்கரவாதத்தை ஒடுக்கும் தனது வேலைத்திட்டத்திற்கு குறுக்கீடாக இருப்பதால் ஜே.ஆர். (ஜெயவர்த்தனா) இனவாத கொள்கைகள், தீவைப்புகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளார்’’.

(இராணுவத்தை வெளியேற்று - சும்மா செத்துமடிய படையாட்களை அனுப்பாதே -நவசமசமாஜ கட்சி அறிக்கை- 8-6-1983) படு குழப்பமான இந்த தூஷணங்களில் இருந்து தொழிலாளி என்ன முடிவுக்கு வருவது? தூண்டிவிடப்பட்ட மத்தியதர வர்க்க பொதுஜன அபிப்பிராயத்தின் இடதுசாரி வாலாக ஒட்டிக் கொள்ளும் பொருட்டு எந்தவொரு காடைத்தனத்தையும் தீவிரவாதத்தின் பேரால் காத்தருள எடுக்கப்படும் இம்முயற்சி இனவாதத்துடன் அரசியல் ரீதியில் சமரசம் செய்வதைவிட வேறென்னவாக இருக்கும்?

வடக்கில் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான வெறியர்களால் தூண்டிவிடப்பட்ட அந்த மத்தியதர வர்க்க பொதுஜன அபிப்பிராயத்தை நியாயப்படுத்துவதற்காக விடுதலைப் போராட்டத்தை தோன்றி மறையும் தற்செயலான ஒரு தோற்றப்பாடு எனவும், சரியான எதிர்ப்பு இயக்கம் ஒன்று ஆரம்பமாகும்போது அது மறைந்துவிடும் எனவும் காட்டும் சித்திரத்தை தீட்டுவதில் நவசமசமாஜ தலைவர்கள் பின்னர் இறங்கினர்.

‘‘தமிழ் இளைஞர்களின் பயங்கரவாத இயக்கம் (தேசிய விடுதலை இயக்கத்துக்கு அவர்கள் கொடுத்த பெயர்) அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும், வாழ்க்கைத்தர வெட்டுக்கும் எதிராகக் கிளம்பியுள்ள துணிச்சல்மிக்க பதில் நடவடிக்கை மட்டுமே. பயங்கரவாத இயக்கம், தொழிலாள வர்க்கத்தினை அடிப்படையாக கொண்ட பலம்வாய்ந்த புரட்சிகர இயக்கம் இன்னும் தோன்றாததன் காரணத்தால் ஏற்பட்டதாகும். நிஜமான புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை நிறுத்தமுடியும்.

‘‘அதன்படி பயங்கரவாதத்தை நிறுத்தி தேசிய ஐக்கியத்தை உண்டுபண்ணும் பொருட்டு மேற்சொன்ன வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்படுமாறு நாம் சகல தொழிலாள, இடதுசாரி, மனித உரிமை, ஜனநாயக இயக்கங்களை வேண்டுகின்றோம்.

‘‘இனவாத காடைத்தனங்களை அடக்க நடவடிக்கை எடு. வடக்கில் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளை காப்பாற்று. அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக் கொள்கைகளின் வங்குரோதத்தை வெளிக்காட்டி வீடுகளுக்கு வரும் படையாட்களின் மனித உரிமைகளைப் பேணு’’. (அதே அறிக்கை)

இந்த முழு கொள்கையும் (அல்லது கொள்கையின்மை) பரிதவிப்பாக தோன்றினும் இப்பரிதவிப்பில் திட்டவட்டமான தர்க்கமுறை ஒன்று உள்ளது. வடக்கின் விடுதலைப் போராட்டம் சகல ஆயுதப்படைகள், சகல ஸ்ராலினிச - சமசமாஜ ஊழல் கட்சிகள், சகல முதலாளித்துவ - குட்டி முதலாளித்துவ இயக்கங்கள், முதலாளித்துவ அரசு, தொழிலாள வர்க்கம் என்பவற்றுக்கிடையே பூரண சமபல நிலையை உண்டுபண்ணும் பொருட்டு இவை எல்லாவற்றினதும் மேலதிகங்களை அடிபணியச் செய்யக்கூடிய சரியான சீர்திருத்தவாத மக்கள் முன்னணி ஒன்றை அமைக்கும்படி இவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ‘‘பயங்கரவாதத்துக்கு காலாகவுள்ள’’, ‘‘தொழிலாள வர்க்கத்தினை அடிப்படையாக கொண்ட பலம்வாய்ந்த புரட்சிகர இயக்கம் இன்னும் தோன்றாமை’’, ‘‘பயங்கரவாரத்தை நிறுத்தக்கூடிய நிச புரட்சிகர இயக்கம்’’ என்ற கூற்றுக்களின் அர்த்தம் இதுதான்.

ட்ரொட்ஸ்கி ஒருமுறை இதனை குடை, பற்றிய கொள்கை எனப் பெயர் சூட்டினார்.

‘‘பழைய பிரெஞ்சு நகைச்சுவையாளர் ஒருவர், குட்டி முதலாளி குடையை சிஷ்டித்ததை பற்றி விபரித்தார். மழை காலத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த குட்டி முதலாளி வீதிகளுக்கு மேலாக கூரை இருப்பின் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணினார். ...எனினும் அப்போது சுதந்திரக் காற்றோட்டம் தடைப்படுமே... அந்த ஆகாய வீதியில் உலாவுபவருக்கு அங்குமிங்கும் எடுத்துச் செல்லக்கூடியதாக இருப்பின்... என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த அவர், ‘‘ஆஹா குடையை கண்டுபிடித்துவிட்டேன் எனத் துள்ளிக்குதித்து கத்தினார். இந்தக் குடை கண்டுபிடிப்பாளர்களை ஒவ்வொரு அடியிலும் இன்று "இடதுசாரிகளிடையே" காணமுடியும்? (ஸ்பெயினின் தோல்விக்கு காரணம் - 1939 மார்ச் 4 - ட்ரொட்ஸ்கி)

பிரச்சனை தொழிலாள வர்க்கத்தினை அடிப்படையாக கொண்ட புரட்சிக் கட்சி இல்லாமையாம்! இது இன்னுமோர் குதர்க்கமாகும், திருத்தல்வாத மோசடியாகும். தொழிலாள வர்க்கத்தின் அந்தப் புரட்சிகர பாத்திரம் முதலாளித்துவத்தின் முழுமுற்போக்கு அபிவிருத்தியால் தீர்மானம் செய்யப்படுகின்றதேயல்லாமல் ‘‘தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட’’ அந்த அல்லது இந்த இயக்கத்தினால் தீர்மானம் செய்யப்படுவது அன்று. தேசிய ஒடுக்குமுறையின் நல்ல உறுதியான எதிர்ப்பாளி என்ற முறையிலும், தமிழ் தேசிய இனம் பிரிந்து சென்று வேறான ஒரு அரசை அமைக்கவுள்ள உரிமையின் உறுதியான பிரச்சாரகன் என்ற முறையிலும் தொழிலாள வர்க்கத்தின் இந்த புரட்சிகரப் பாத்திரம் வெளிப்பாடாக வேண்டும். அத்தோடு அது கட்டாயம் வெளிப்பாடாகியே தீரும். ஒரு கணம் தன்னும் இதனைச் சந்தேகிப்பவர் வரலாற்றில் இருந்து எந்தவொரு படிப்பினையையும் பெறாத பிலிஸ்தீன் ஆக மட்டுமே இருக்கமுடியும்.

தொழிலாள வர்க்கத்தின் அந்தப் புரட்சிகரப் பாத்திரம் வெளிப்பாடாகாமல் தடுப்பதே எதிர்ப்புரட்சி ஸ்ராலினிசத்தினதும் துரோக திருத்தல்வாதத்தினதும் தொழிலாகும். உண்மை அதுவே, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணயம் உரிமைக்கான போராட்டத்தின் கொடிய எதிரிகளாவதன் மூலம் அவர்கள் இதனையே செய்கின்றனர். அவர்கள் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்துவிட்டு தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்துடன் நேருக்குநேர் மோதும் சிந்தனைமுறையை ‘‘தொழிலாள வர்க்கத்தினை அடிப்படையாகக் கொண்ட’’ இயக்கத்தின் பேரால் தொழிலாள வர்க்கத்தின்மீது திணிக்கிறார்கள். ஆதலால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் ‘‘வெளிப்பாடாகுதல்’’ எனக் கூறும்போது அது இந்தக் கேடுகெட்ட முதலாளித்துவ சிந்தனை முறைக்கு எதிராக ஈவிரக்கமின்றி யுத்தம் தொடுப்பதை குறிக்கிறது. மார்க்சிசத்தின் பணி அதுவே. எனவேதான் மார்க்சிச புரட்சிக் கட்சிக்கான இப்போராட்டம் இல்லாமல் தொழிலாள வர்க்கத்தினை அடிப்படையாக கொண்ட புரட்சிகர இயக்கம் பற்றிப் பேசுவது குதர்க்கமாகும்.

‘‘பயங்கரவாதத்தை நிறுத்தி தேசிய ஐக்கியத்தை மீண்டும் கட்டி எழுப்புவது’’ பற்றிய அவர்களின் பேச்சு, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி கட்டவிழ்த்துவிட்டுள்ள பரஸ்பரம் முரண்பாடான சக்திகளுக்கிடையே வரலாற்று ரீதியால் தவிர்க்க முடியாது இடம்பெற்றுவரும் மோதுதல்களை கண்டு கிலியடைந்து மன்றாடுவதாக உள்ளது.

‘‘சகல தேசிய ஒடுக்குமுறைகளும் பரந்த மக்களின் எதிர்ப்பினை சிருஷ்டிக்கின்றது’’. "அவ்வாறே தேசிய ஒடுக்குமுறைக்கு" ஆளான மக்களின் எதிர்ப்பு எப்போதும் தேசிய கிளர்ச்சியாக திரும்பவும் முயல்கின்றது... ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம் தேசிய கிளர்ச்சியை பற்றிப் பேசினாலும், தமது மக்களுக்குத் தெரியாமல் அம்மக்களுக்கு எதிராக ஒடுக்கும் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கத்துடன் சமரசத்துக்கு செல்வதை நாம் தினமும் காண முடிகிறது. அத்தகைய நிலைமைகளில் புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் கண்டனம் தேசிய இயக்கத்திற்கு எதிராக அன்றி அதை சிறியதோர் சச்சரவாகத் திருப்புவதற்கு எதிராக அமைய வேண்டும்’’ என லெனின் குறிப்பிட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் பணி, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்து, இப்போராட்டத்தினுள் சமசரத் தலைவர்களின் பிடியை சுக்குநூறாக்கி, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் நம்பிக்கையை தம்பால் வென்றெடுப்பதே. தொழிலாள வர்க்கத்தின் அரச அதிகாரத்தை நிலைநிறுத்துகின்ற போராட்டத்தின் இப்பாதையை இழுத்து மூடும் திருத்தல்வாதத்தையும், ஸ்ராலினிசத்தையும் தூக்கி வீசி, மார்க்சிச கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட புரட்சிகர தலைமையை கட்டி எழுப்புவது தீர்க்கமான பணியாகும்.

கீர்த்தி பாலசூரிய மறைவின் இருபதாம் ஆண்டு நிறைவு
கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்
ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இரண்டாம் நிறை பேரவையின் ஆவணங்கள்
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு
நான்காம் அகில சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் - மார்ச் 1987
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்
லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு
இலங்கை : மாபெரும் காட்டிக்கொடுப்பு
நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை, ஜூலை 5, 1964
பியர் பிராங்கின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் குழு அறிக்கை
இலங்கையில் வரலாற்றுக் காட்டிக் கொடுப்பு
இலங்கையில் ட்ரொட்ஸ்கிசமும் திரிபுவாதமும்
சமசமாஜ வரலாற்று ஏட்டிலிருந்து

தேசிய பிரச்சினைகள்
நிரந்தரப் புரட்சியும் இன்று தேசியப் பிரச்சனையும்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம்
1983 யூலை தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்