பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கம்யூனின் வரலாற்றை ஒவ்வொரு முறை நாம் ஆராயும்போதும், பிற்கால புரட்சிகரப் போராட்டங்களில் இருந்து மற்றும் சமீபத்திய புரட்சிகளில் இருந்து (ரஷ்ய புரட்சி மட்டுமல்லாது ஜேர்மன் மற்றும் ஹங்கேரியப் புரட்சிகளில் இருந்து) பெற்ற அனுபவத்தின் உதவியால், அதனை ஒரு புதிய அம்சத்தின் பரிமாணத்தில் இருந்து நாம் பார்க்கிறோம். பிராங்கோ-ஜேர்மன் போர் குருதிபாயும் வெடிப்பாய், ஒரு தீவிர உலகப் படுகொலைக்கு கட்டியம் கூறியது என்றால், பாரிஸ் கம்யூன் ஒரு உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மின்னலாய் வந்து கட்டியம் கூறியது.

கம்யூன் உழைக்கும் வெகுஜனங்களின் தீரச்செயலையும், ஒரே கூட்டாக ஐக்கியப்படுவதற்கான அவர்களது திறனை, வருங்காலத்தின் பெயரில் தங்களை தியாகம் செய்யக் கூடிய அவர்களது திறமையை நமக்குக் காட்டுகிறது. ஆனால் அதேநேரத்தில், வெகுஜனங்கள் தங்களது பாதையைத் தெரிவதில் திறனற்று இருந்ததையும், இயக்கத்தின் தலைமை குறித்து முடிவு எடுக்காது இருந்ததையும், ஆரம்ப வெற்றிகளுக்குப் பின்னர் சட்டென்று நின்று விடும் அவர்களது விதிவசமான மனவிருப்பையும், அது எதிரி மீண்டும் மூச்சு விடுவதற்கும் தனது நிலையை மறு ஸ்தாபகம் செய்வதற்கும் அனுமதிப்பதையும் இது நமக்குக் காட்டுகிறது.

கம்யூன் மிகத் தாமதமாகத் தான் வந்தது. செப்டம்பர் 4 அன்றே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் அது கொண்டிருந்தது, அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் தொழிலாளர்கள் கடந்த காலத்தின் அனைத்து சக்திகளுக்கும் எதிராக (பிஸ்மார்க்குக்கு எதிராக, அதேபோல் தியேருக்கு எதிராகவும்) நடத்தி வந்த போராட்டத்தில் அவர்களது தலைமையிடத்தில் ஒரே அடியில் பாரிஸின் பாட்டாளி வர்க்கத்தை அமர்த்தியிருக்க அந்நிலை அனுமதித்திருக்கும். ஆனால் அதிகாரம் பாரிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் (deputies of Paris) என்கின்ற ஜனநாயக வாய்வீச்சுக்காரர்களின் கரங்களில் சென்று விட்டது. பாரிஸின் பாட்டாளி வர்க்கத்திடம் ஒரு கட்சியும் இல்லை, முந்தைய போராட்டங்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்டிருக்கக் கூடிய தலைவர்களும் இல்லை. தங்களை சோசலிஸ்டுகளாக கருதிக் கொண்டு தொழிலாளர்களின் ஆதரவை எதிர்பார்த்த குட்டிமுதலாளித்துவ தேசப்பற்றாளர்கள் (patriots) தங்கள் மீதே உண்மையில் எந்த நம்பிக்கையும் கொண்டிராமல் இருந்தார்கள். பாட்டாளி வர்க்கம் தன்னகத்தே கொண்டிருந்த நம்பிக்கையை அவர்கள் உலுக்கினார்கள். இயக்கத்தின் தலைமையை ஒப்படைப்பதற்காக, தங்களுடைய பைகளில் ஒரு டஜன் சற்றே புரட்சிகரமாய் தோன்றக்கூடிய சொல்லாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டிருந்த பிரபலமான வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பாராளுமன்றவாதிகளைத் தேடி அவர்கள் தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தார்கள்.

போல்-போன்கூர், ஏ.வரேன், ரெனோடெல் மற்றும் ஏராளமான மற்றவர்களை கொஞ்ச காலத்திற்கு பாட்டாளி வர்க்க கட்சியின் ஆசான்களாக இருக்க எது அனுமதித்ததோ அது தான் ஜூல் பேவர், கேமியே-பாஜ் மற்றும் அவர்களின் கூட்டம் பாரிஸில் செப்டம்பர் 4 அன்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் காரணமாய் அமைந்தது. ரெனோடெல்களும், போன்கூர்களும் இன்னும் லோங்கேகளும் மற்றும் பிரெஸெமேன்களும் கூட, தங்களது அனுதாபங்கள், தங்களது புத்திஜீவித்தன பழக்க வழக்கங்கள் மற்றும் தங்களது நடத்தையின் மூலம், புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலும் ஜூல் பேவர் மற்றும் ஜூல் பெரிக்கு மிக நெருக்கமாய் இருந்தனர். அவர்களது சோசலிச சொல்லாட்சி எல்லாம் வெகுஜனங்களின் மீது தங்களை இருத்தி்க்கொள்ள அனுமதிக்கிற வரலாற்று முகமூடியே அன்றி வேறு எதுவும் இல்லை. அத்துடன் பேவர், சிமோன், பிகார்டு மற்றும் மற்றவர்கள் எல்லாம் ஜனநாயக-தாராளவாத சொல்லாட்சிகளையெல்லாம் பயன்படுத்திய மற்றும் துஷ்பிரயோகம் செய்த அக்காரணத்தினால் தான் அவர்களது பிள்ளைகளும் பேரன்களும் சோசலிச சொல்லாட்சிக்கு கடமைப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளும் பேரன்களும் தங்களது தந்தையர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, அவர்கள் விட்ட வேலையை இவர்கள் தொடர்கிறார்கள். அமைச்சரவை குழுவில் எவரெவர் இருப்பது என்பது பற்றிய கேள்வியாக இல்லாமல் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியான பிரான்சில் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்ற் கேள்வி பற்றி முடிவெடுக்க அவசியமான சமயத்தில், ரெனோடெல், வாரேன், லோங்கே மற்றும் இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் காலிஃபெட்டின் கூட்டாளியும் கம்யூனைக் கொலை செய்தவருமான மிலெராண்டின் முகாமின் பக்கம் இருப்பார்கள் .... சலோன்களின் [பலரும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தங்களது மகிழ்ச்சிக்காகவும் ஒரு சிறப்பான தலைவரின் கீழ் ஒரு கூரையின் கீழ் கூடுகின்ற ஒரு இடம்] மற்றும் நாடாளுமன்றங்களின் புரட்சிகரப் பிதற்றல்காரர்கள் எல்லாம் உண்மை வாழ்க்கையில் புரட்சிக்கு நேருக்கு நேராய் தங்களை காண்கின்ற சமயத்தில், அதனை ஒருபோதும் அடையாளம் காணவும் இயலாதவர்களாய் இருக்கின்றனர்.

தொழிலாளர்களின் ஒரு உண்மையான கட்சி நாடாளுமன்ற தந்திரங்களுக்கான ஒரு கருவி அன்றி, அது பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுதிரட்டப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட அனுபவம் ஆகும். தனது கடந்த காலத்தின் மொத்த வரலாற்றின் மீது தங்கியிருக்கிறதும் அபிவிருத்தியின் பாதைகளை, அதன் அனைத்துக் கட்டங்களை தத்துவார்த்தரீதியாக முன்கூட்டி அறிகிறதும் மற்றும் அதில் இருந்து நடவடிக்கைக்கு அவசியமான சூத்திரத்தை எடுக்கின்றதுமான கட்சியின் உதவியால் மட்டுமே பாட்டாளி வர்க்கமானது தனது வரலாற்றிற்கு, அதாவது தனது தயக்கங்கள், தனது முடிவெடுக்காமை, தனது தவறுகள் ஆகியவற்றுக்கு மீளத் தொடக்கமளிப்பதின் அவசியத்தில் இருந்து எப்போதும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

அத்தகையதொரு கட்சி பாரிஸின் பாட்டாளி வர்க்கத்திடம் இல்லை. யாருடன் கம்யூன் மொய்த்துக் கொண்டிருந்ததோ அந்த பூர்சுவா சோசலிஸ்டுகள் தங்களது விழிகளை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள், ஒரு அற்புதம் அல்லது ஒரு தீர்க்கதரிசன அசரீரிக்காய் காத்திருந்தார்கள், தயங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த சமயத்தில் வெகுஜனங்கள் தட்டுத்தடவிக்கொண்டு, ஒரு சிலரின் முடிவெடுக்காமையாலும் மற்ற சிலரின் கற்பனை மயக்கங்களாலும் அம்மக்கள் தங்கள் சொந்த புத்தியைத் தொலைத்தனர். விளைவு, அவர்களின் வெகு மத்தியில் மிகத் தாமதமாய் புரட்சி வெடித்தது; பாரிஸ் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. கடந்த கால புரட்சிகளின் படிப்பினைகளை, வெகுமுந்தைய காலங்களின் யுத்தங்களை, மறுபடியும் மறுபடியுமான ஜனநாயக காட்டிக் கொடுப்புகளை எல்லாம் பாட்டாளி வர்க்கம் தனது நினைவில் மீண்டும் கொண்டுவந்து நிறுத்துவதற்குள் ஆறு மாதங்கள் கடந்து விட்டிருந்தன, அது அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இந்த ஆறு மாதங்கள் ஈடுசெய்ய முடியாத இழப்பாக நிரூபணமானது. புரட்சிகர நடவடிக்கையின் மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சி பிரான்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிடத்தில் செப்டம்பர் 1870ல் நிறுவப்பட்டிருக்குமானால், பிரான்சின் மொத்த வரலாறும் அத்துடன் சேர்த்து மானுட குலத்தின் மொத்த வரலாறும் வேறொரு திசையில் பயணித்திருக்கும்.

மார்ச் 18 அன்று பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரம் வந்தது என்றால், அதற்குக் காரணம் அது திட்டமிட்டு கைப்பற்றப்பட்டிருந்ததால் அல்ல, அதன் எதிரிகள் பாரிஸை விட்டுவிட்டு ஓடியிருந்தது தான் காரணம்.

அந்த எதிரிகள் தொடர்ந்து தங்களது பிடிமானத்தை இழந்து கொண்டிருந்தனர், தொழிலாளர்கள் அவர்களை அருவெறுப்பாய் கண்டு வெறுத்தனர், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் அவர்கள் மீது இனியும் நம்பிக்கை இருக்கவில்லை, அத்துடன் பெரும் முதலாளி வர்க்கம் இனியும் அவர்களைத் தங்களால் பாதுகாக்க முடியாது என்று அஞ்சினர். படைவீரர்கள் அதிகாரிகளுக்குக் குரோதம் காட்டினர். அரசாங்கம் தனது சக்திகளை வேறெங்கிலும் ஒருமுகப்படுத்தும் பொருட்டு பாரிஸை விட்டு ஓடியது. அதன்பின் தான் பாட்டாளி வர்க்கம் இச்சூழ்நிலையின் எஜமானாகியது.

ஆனால் இந்த உண்மையை அது மறுநாள் தான் புரிந்துகொண்டது. அதன்மீது புரட்சி எதிர்பாராவிதமாய் விழுந்துவிட்டது.

முதல் வெற்றி செயலின்மையின் ஒரு புதிய மூல ஊற்றாக இருந்தது. எதிரி வேர்சாய்க்கு ஓடி விட்டிருந்தான். அது ஒரு வெற்றி இல்லையா? அந்த சமயத்தில் அரசாங்க கூட்டமே இரத்தம் சிந்தாமல் நசுக்கப்பட்டிருக்க முடியும். பாரிஸில், தியேர் இனை தலைமையில் கொண்ட அத்தனை அமைச்சர்களும் சிறைப்பிடிக்கப்பட்டிருக்க முடியும். அவர்களைக் காப்பாற்ற ஒருத்தரும் கைதூக்கியிருக்கப் போவதில்லை. அது செய்யப்படவில்லை. சுற்றி நடக்கும் விடயங்களை அறிந்த, தனது முடிவுகளை நனவாக்குவதற்கான சிறப்பு அங்கங்களை உடைய ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சி அமைப்பும் அங்கு இல்லை.

காலாட்படையின் சிதறல்கள் வேர்சாய்க்கு திரும்ப விரும்பவில்லை. அதிகாரிகளையும் படையினர்களையும் பிணைத்திருந்த கயிறு மிக மென்மையானது. பாரிஸில் ஒரு வழிகாட்டும் கட்சி மையம் இருந்திருக்குமாயின், அது பின்வாங்கும் படைகளுக்குள் (பின்வாங்குவதற்கான சாத்தியம் இருந்ததால்) அர்ப்பணிப்பு கொண்ட ஒரு சில நூறு அல்லது ஒரு சில டஜன் தொழிலாளர்களையேனும் சேரச் செய்து அவர்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்கியிருக்கும்: ’படையதிகாரிகளுக்கு எதிரான படையினர்களின் அதிருப்தியை அதிகப்படுத்துங்கள், உளவியல்ரீதியாய் முதல் சாதகமான தருணம் வாய்த்தவுடன் அந்த படையினர்களை அதிகாரிகளிடம் இருந்து விடுவித்துக் கொள்ளச் செய்து அவர்களை பாரிஸ் மக்களுடன் இணைவதற்கு அழைத்து வாருங்கள்.’ இது எளிதாய் நனவாகியிருக்க முடியும், இதனை தியேரின் ஆதரவாளர்களே கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஒருவரும் சிந்திக்கவில்லை. அதனைக் குறித்து யோசிப்பதற்குக் கூட அங்கு ஒருவரும் இருக்கவில்லை. மேலும் பெரும் நிகழ்வுகளுக்கு இடையே இத்தகைய முடிவுகளை, ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்ற, அதற்காகத் தயாரிப்பு செய்கின்ற, தனது புத்தியைத் தொலைக்காத ஒரு புரட்சிகர கட்சி மட்டுமே, தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் காணப் பழகிய துணிந்து செயலாற்ற அஞ்சாத ஒரு கட்சி மட்டுமே எடுக்க முடியும்.

துணிந்து செயலாற்றும் ஒரு கட்சி மட்டும் தான் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்திடம் இல்லாத ஒன்றாய் இருந்தது.

குடிப்படையின் (Garde Nationale) மத்தியக் குழு என்பது உண்மையில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரின் பிரதிநிதிகள் மன்றமாகத்தான் (Council of Deputies). இருந்தது. புரட்சிகரப் பாதையை எடுத்துக் கொண்டிருக்கும் வெகுஜனங்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் இத்தகையதொரு மன்றம் துணிந்த செயல்பாட்டுக்கான ஒரு அற்புதமான அமைப்பையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் அதே சமயத்தில், புரட்சிகரவாதி கண்டுகொண்டுள்ள அதே நிலையில் இருக்கும் வெகுஜனங்களுடன் உள்ள உடனடியான மற்றும் அடிப்படையான தொடர்புகாரணமாக, இது வெகுஜனங்களின் அனைத்து வலிமையான பக்கங்களை மட்டுமல்லாமல் அவர்களின் பலவீனமான பக்கங்களையும் சேர்த்து பிரதிபலிக்கிறது, அத்துடன் முதலில் பலமான பக்கங்களை விட பலவீனமான பக்கங்களைத் தான் அதிகமாய் பிரதிபலிக்கிறது: முடிவெடுக்காத போக்கினை, காத்திருப்பதை, ஆரம்ப வெற்றிகளின் பின்னர் செயல்படாதிருக்கும் போக்கினை இது வெளிப்படுத்துகிறது.

குடிப்படையின் மத்திய குழுவிற்கு தலைமை கொடுக்கப்பட வேண்டியிருந்தது. பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அனுபவத்தின் அவதாரமாக இருக்கும் ஒரு அமைப்பு, அத்துடன் மத்தியக் குழுவில் மட்டும் இருக்கிறதாய் இல்லாமல் படையணிகளில், பட்டாளங்களில், பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் ஆழமான பிரிவுகளிலும் இருக்கிறதாய் இருக்கும் ஒரு அமைப்பு தவிர்க்கவியலாத அவசியமாய் இருந்தது. பிரதிநிதிகள் மன்றங்களின் வழியே (இங்கே அவை குடிப்படையின் கருவிகளாய் இருந்தன) கட்சியானது வெகுஜனங்களுடன், அவர்களின் மனோநிலையை அறிந்த நிலையில், தொடர்ச்சியான தொடர்பில் இருந்திருக்க முடியும்; அதன் தலைமை மையமானது ஒவ்வொரு நாளும் ஒரு முழக்கத்தை முன்வைத்து, கட்சியின் போராளிகள் என்னும் ஊடகம் வழியே, அது வெகுஜனங்களுக்குள் ஊடுருவி அவர்களின் சிந்தனையையும் விருப்பத்தையும் ஐக்கியப்படுத்தியிருக்க முடியும்.

அரசாங்கம் வேர்சாய்க்கு முழுமையாய் கூட பின்வாங்கியிருக்கவில்லை, பொறுப்பு மிகப் பிரம்மாண்டமானதாக ஆகியிருந்த அந்த சரியான தருணத்தில் தான் குடிப்படை தனது பொறுப்பை இறக்கிவைக்க அவசரப்பட்டது. கம்யூனுக்கு “சட்டபூர்வ” தேர்தல்களை மத்திய குழு கற்பனை செய்தது. வலதிடம் இருந்து “சட்டபூர்வமாக” தன்னை மறைத்துக் கொள்ளும் பொருட்டு பாரிஸின் மேயர்களுடன் அது பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைந்தது.

அதே நேரத்தில் வேர்சாய்க்கு எதிரான ஒரு தீவிரமான தாக்குதல் தயாரிப்பும் செய்யப்பட்டு வந்திருக்குமாயின், மேயர்களுடனான பேச்சுவார்த்தைகளை இராணுவ நிலைப்பாட்டில் முழுமையாய் நியாயமான, இலக்குடன் இயைந்த ஒரு தந்திரோபாயமான நடவடிக்கையாகக் கருதலாம். ஆனால் யதார்த்தத்திலோ, இந்த சண்டையை ஏதேனும் அற்புதங்களைக் கொண்டு தவிர்க்கும் பொருட்டே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. “சட்டபூர்வம்” என்பதையும் “சட்டபூர்வ” அரசின் ஒரு பகுதியின் வடிவத்தைக் கொண்டிருந்த மனிதர்களையும் (பிரதிநிதிகள், மேயர்கள் போன்றவர்கள்) மதித்து மரியாதை செய்த குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் மற்றும் சோசலிச கருத்துவாதிகளும் (socialistic idealists) தங்களது ஆன்மாவின் அடித்தளத்தில், ‘புரட்சிகர பாரிஸ் தன்னை “சட்டபூர்வ” கம்யூனால் மறைத்துக் கொண்ட நிமிடத்திலேயே தியேர் அதன்முன் மரியாதையுடன் நிறுத்தப்படுவார்’ என்று நம்பினர்.

இந்த இடத்தில் செயல்படாநிலையும் முடிவெடுக்கா நிலையும் கூட்டாட்சி மற்றும் தன்னாட்சி ஆகியவற்றின் புனித கோட்பாட்டால் ஆதரிக்கப்பட்டன. உங்களுக்குத் தெரியும், பாரிஸ் என்பது பல கம்யூன்களில் ஒரு கம்யூன் மட்டுமே. பாரிஸ் யார் மீதும் எதனையும் திணிக்க விரும்பவில்லை; அது “உதாரணமாய் திகழக்கூடிய சர்வாதிகாரமாக” இல்லாதபட்சத்தில் அது சர்வாதிகாரத்திற்காகப் போராடவில்லை.

சுருக்கமாய் பார்த்தால், அபிவிருத்தியுற்றுக் கொண்டிருந்த பாட்டாளி வர்க்க புரட்சியை பிராந்திய சுயாட்சி என்ற ஒரு குட்டி முதலாளித்துவ சீர்திருத்தத்தின் மூலம் இடம்பெயர்த்துவதற்காக நடந்த முயற்சியே தவிர இது வேறொன்றுமல்ல. உண்மையான புரட்சிகரப் பணி பாட்டாளி வர்க்கத்திற்கு நாடு முழுவதுமான அதிகாரத்தை உறுதிசெய்வதைக் கொண்டிருந்தது. பாரிஸ் அதன் அடித்தளமாக, அதன் ஆதரவாக, அதன் கோட்டையாக சேவை செய்ய இருந்தது. இந்த இலக்கை எட்டுவதற்கு, நேரம் தாமதியாமல் வேர்சாயை வெல்வதும் கலகக்காரர்களை, ஏற்பாட்டாளர்களை, அத்துடன் இராணுவப் படைகளை பிரான்ஸ் முழுவதும் அனுப்புவதும் அவசியமானதாக இருந்தது. அனுதாபிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதும், தயங்குவோருக்கு உறுதியைக் கூட்டுவதும் மற்றும் மாற்றார்களின் எதிர்ப்பை தகர்ப்பதும் அவசியமாய் இருந்தது. சூழ்நிலையைக் காப்பாற்றியிருப்பதற்கான ஒரே வழியாக இருந்திருக்கக் கூடிய இந்த தாக்குதலும் தீவிரமும் என்கிற கொள்கைக்குப் பதிலாக, பாரிஸின் தலைவர்கள் தங்களை பிராந்திய சுயாட்சிக்குள் ஒதுக்கிக் கொள்ளப் பார்த்தனர்: மற்றவர்கள் அவர்களைத் தாக்காத வரை அவர்கள் மற்றவர்களைத் தாக்க மாட்டார்கள்; ஒவ்வொரு நகரமும் சொந்த அரசாங்கத்திற்கான தனது புனிதமான உரிமையைக் கொண்டிருக்கிறது. சாதாரண அராஜகவாதத்தின் அதே வகையைச் சேர்ந்த இந்த கருத்துவாத பேச்சானது யதார்த்தத்தில் (இறுதி முடிவு வரை இடைவிடாமல் நடத்தப்பட்டிருக்க வேண்டும், இல்லையேல் ஆரம்பிக்கப்பட்டிருக்கவே கூடாது என்னும் வகையான புரட்சிகர நடவடிக்கைக்கு முகம் கொடுக்கும்போது காட்டப்பட்ட) கோழைத்தனத்தை மூடிமறைத்தது.

குட்டி முதலாளித்துவ பிராந்தியவாதம் மற்றும் சுயாட்சி வாதத்தின் பாரம்பரியமான முதலாளித்துவ ஒழுங்கமைப்பை நோக்கிய குரோதம் சந்தேகமில்லாமல் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பலவீனமான பக்கமே. வட்டாரங்களுக்கு சுயாட்சி, நகரின் பிரிவுகளுக்குத் சுயாட்சி, படையணிகளுக்குத் சுயாட்சி, நகரங்களுக்கு சுயாட்சி என்பனவெல்லாம் குறிப்பிட்ட புரட்சிகரவாதிகளுக்கு உண்மையான செயல்பாட்டுக்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குமான உச்சநிலை உத்திரவாதமாக இருக்கிறது தான். ஆனால் அது தான் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் செய்த பெரும் தவறாகிப் போனது.

“கொடுங்கோன்மை மத்தியமய வாதத்திற்கு எதிரான போராட்டம்” மற்றும் “மூச்சுத் திணறச் செய்யும்” ஒழுங்கிற்கு எதிரான போராட்டம் ஆகிய வடிவத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு குழுக்கள் மற்றும் துணைக் குழுவாக்கங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அவற்றின் அற்ப நலன்களுக்காக அவற்றின் அற்பமான நகரின் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பிராந்திய மேலிடங்களுடன் நடத்துகின்ற ஒரு சண்டை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும், அதன் தலைமையில், நகரின் பிரிவுகளுக்கு மற்றும் வட்டாரங்களுக்கு மேலாக குழுக்களுக்கு மேலாக மையப்படுத்தப்பட்ட மற்றும் எஃகு போன்ற ஒழுங்குறுதியால் பிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு இருக்கின்ற நிலையில், அதன் கலாச்சார தற்சிறப்பையும் அரசியல்நுட்ப பண்புகளையும் பாதுகாத்துக் கொள்கின்ற அதே சமயத்தில், நிகழ்வுகளால் கட்டியிழுக்கப்படாமல் அத்துடன் ஒவ்வொரு முறையும் அதன் எதிரிகளின் பலவீனமான பிரிவுகளின் மீது தனது மரண அடிகளுக்கு வழிநடத்திக் கொண்டு, திட்டமிட்ட வகையிலும் உறுதிப்படவும் செயல்பட முடியும். சிலர்நலன்வாதத்தை (Particularism - மனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நற்கதியும் கிடைக்கும் எனும் கோட்பாடு) நோக்கிய போக்கு, அது எந்த வடிவத்தை எடுத்திருந்தாலும் சரி, செத்துப் போன கடந்த காலத்தின் ஒரு பாரம்பரியம் ஆகும். எத்தனை விரைவில் பிரெஞ்சு கம்யூனிசம், சோசலிச கம்யூனிசம் மற்றும் தொழிற்சங்கவாத கம்யூனிசம் ஆகியவற்றில் இருந்து தன்னை எவ்வளவு விரைவாக விடுவித்துக் கொள்கிறதோ அத்தனையளவு பாட்டாளி வர்க்க புரட்சிக்கு அது உகந்ததாகும்.

                                                         * * * * * *

கட்சி தனது விருப்பத்தின்படி புரட்சியை உருவாக்கி விடுவதில்லை, தான் விரும்பும் சமயத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தருணத்தை அதனால் தெரிவு செய்யமுடியாது, ஆனால் அது நிகழ்வுகளில் செயலூக்கத்துடன் தலையீடு செய்கிறது, ஒவ்வொரு தருணத்திலும் புரட்சிகர வெகுஜனங்களின் மனோநிலைக்குள் அது ஊடுருவிப் பார்க்கிறது, அத்துடன் எதிரியின் எதிர்ப்பு சக்தியை மதிப்பிடுகிறது, இவ்வாறாக தீர்மானமான நடவடிக்கைக்கான மிக சாதகமான தருணத்தை அது நிர்ணயம் செய்கிறது. இது தான் அதன் பணியில் மிகவும் கடினமான பக்கமாகும். எல்லா சந்தர்ப்பத்திலும் செல்லுபடியாகும் எந்த முடிவும் கட்சியிடம் இல்லை. ஒரு சரியான தத்துவம், வெகுஜனங்களுடன் நெருக்கமான தொடர்பு, சூழ்நிலை மீதான புரிதல், ஒரு புரட்சிகர உணர்நிலை, ஒரு மகத்தான உறுதிப்பாடு இவையே அவசியப்படுபவை. எவ்வளவு ஆழமாக ஒரு புரட்சிகரக் கட்சி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் அனைத்து தளங்களிலும் ஊடுருவுகிறதோ, இலக்கு மற்றும் ஒழுங்கின் ஐக்கியத்தால் எந்த அளவுக்கு அது ஒற்றுமையாய் உள்ளதோ, அத்தனை வேகமாகவும் சிறந்த வகையிலும் அதன் கடமையைத் தீர்ப்பதற்கு அது சென்றுசேரும்.

ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட கட்சியின் இந்த அமைப்பினை உள்முகமாக எஃகு போன்ற ஒழுங்கினால் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் வெகுஜனங்களின் இயக்கத்துடன் அதன் ஏற்ற இறக்கங்களால் நெருக்கமாய் இணைக்கப்பட்டதாகவும் கொண்டிருப்பதில் தான் சிரமம் இருக்கிறது. உழைக்கும் வெகுஜனங்களின் சக்திவாய்ந்த புரட்சிகர அழுத்தம் இல்லையென்றால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதை சாதிக்க முடியாது. ஆனால் இந்த நடவடிக்கையில் தயாரிப்புக் கூறு ஒட்டுமொத்தமாக தவிர்க்கவியலாதது ஆகும். எந்த அளவுக்கு சிறப்பாய் கட்சி சரியான சந்தர்ப்பத்தையும் தருணத்தையும் புரிந்து கொள்கிறதோ, எந்த அளவுக்கு எதிர்ப்பின் அடித்தளங்கள் தயாரிப்பு செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு மேம்பட்ட வகையில் படைகளும் பாத்திரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், அந்த அளவுக்கு வெற்றி நிச்சயமானதாக இருக்கும், பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். கவனமாகத் தயாரிப்பு செய்யப்பட்ட ஒரு நடவடிக்கைக்கும் ஒரு வெகுஜன இயக்கத்துக்கும் இடையிலான இடைத்தொடர்பு அதிகாரத்தைக் கைப்பற்றுவதின் அரசியல்-மூலோபாயப் பணி ஆகும்.

இந்த கோணத்தில் இருந்து பார்த்தால் மார்ச் 18, 1871 உடன் நவம்பர் 7, 1917 ஐ ஒப்பிடுவது மிகவும் படிப்பினையுள்ளதாக இருக்கும். பாரிஸில், முன்னணி புரட்சிகர வட்டாரங்களின் தரப்பில் நடவடிக்கைக்கான முன்முயற்சி முற்றுமுதலாய் இல்லாது இருந்தது. பூர்சுவா அரசாங்கத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டிருந்த பாட்டாளி வர்க்கம் உண்மையில் நகரத்தின் எஜமானாய் இருந்தது. பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் என அதிகாரத்தின் அத்தனை சடக் கருவிகளையும் தனது உத்தரவின் கீழ் கொண்டிருந்தது. ஆனால் அது அதனை உணர்ந்துகொள்ளாததாக இருந்தது. முதலாளித்துவ வர்க்கம் மலையில் இருந்து ஆயுதத்தை மீண்டும் எடுத்துக் கொள்ள முயல்கிறது: அது பாட்டாளி வர்க்கத்தின் பீரங்கியைத் திருட விரும்புகிறது. அம்முயற்சி தோற்கிறது. அரசாங்கம் பாரிஸில் இருந்து வேர்சாய்க்கு பீதியில் ஓடுகிறது. இப்போது களம் தெளிவாகி விட்டது. ஆனால் மறுநாள் பாட்டாளி வர்க்கம், தான் தான் பாரிஸின் எஜமான் என்பதையே புரிந்து கொள்கிறது. “தலைவர்கள்” நிகழ்வுகளில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள், அவை ஏற்கனவே சாதித்து முடிக்கப்பட்ட பின் அவற்றைப் பதிவு செய்கின்றனர், புரட்சிகர முனையை மழுங்கடிப்பதற்கு தங்களது சக்திக்குட்பட்ட ஒவ்வொன்றையும் அவர்கள் செய்கின்றனர்.

பெட்ரோகிராட்டில் நிகழ்வுகள் வேறுவிதமாக அபிவிருத்தியுற்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி கட்சி உறுதியாகவும், தீர்மானத்துடனும் நகர்ந்தது - அதன் ஆட்கள் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தார்கள், ஒவ்வொரு நிலையாக உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டு வந்தது, தொழிலாளர்களுக்கும் ஒரு பக்கம் காவற்படைகளுக்கும் மறுபக்கத்தில் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒவ்வொரு நெடிய பிளவும் விரிவடையச் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜூலை நாட்களின் ஆயுதமேந்திய ஆர்ப்பாட்டம் வெகுஜனங்களுக்கு இடையிலிருக்கும் நெருங்கிய தொடர்பின் அளவையும் எதிரியின் எதிர்ப்பு சக்தியின் அளவையும் காண்பதற்கு கட்சியால் நடத்தப்பட்ட ஒரு பரிசோதிக்கின்ற நடவடிக்கை ஆகும். இந்த பரிசோதனை நடவடிக்கை இராணுவச் சாவடிப் போராட்டங்களாக மாற்றப்படுகிறது. நாம் தூக்கி வீசப்படுகிறோம், அதே சமயத்தில் இந்த நடவடிக்கை கட்சிக்கும் வெகுஜனங்களின் ஆழங்களுக்கும் இடையிலான ஒரு உறவை ஸ்தாபிக்கிறது. ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்கள் சக்திவாய்ந்த புரட்சிகர பாய்ச்சலை காண்கின்றன.

அதனைக் கட்சி அனுகூலமாக்கிக் கொள்கிறது, தொழிலாள வர்க்கம் மற்றும் படைகளில் உள்ள தனது ஆதரவான பகுதிகளை கணிசமான அளவில் வலுப்படுத்திக் கொள்கிறது. பின்னர் இரகசிய தயாரிப்புகளுக்கும் வெகுஜன நடவடிக்கைக்கும் இடையிலான ஒத்திசைவு ஏறக்குறைய தன்னியக்கமாக நடக்கிறது. சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நவம்பருக்கு நிர்ணயிக்கப்பட்டது. முன்வந்த எங்களது கிளர்ச்சி அனைத்துமே காங்கிரஸ் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அழைத்து செல்வதற்குத் தான். இவ்வாறாக, இந்த கவிழ்ப்பு முன்கூட்டியே நவம்பர் 7க்கு தகவமைக்கப்பட்டது.

இந்த உண்மை எதிரியால் நன்கு அறியப்பட்டதாகவும் புரியப்பட்டதாகவும் இருந்தது. கெரென்ஸ்கியும் அவரது ஆட்சிமன்றக் குழுவினரும் பெட்ரோகிராட்டில் தீர்மானமான தருணத்திற்காக தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை (அது எவ்வளவு குறைந்த அளவுக்காயினும்) எடுக்கத் தவறவில்லை. அத்துடன் படையினர் மத்தியில் மிகவும் புரட்சிகரமான பிரிவுகளை தலைநகரை விட்டு கடத்துவதற்கான அவசியத்திலும் அவர்கள் நின்றனர். ஒரு தீர்மானமான முக்கியத்துவம் கொண்ட ஒரு புதிய மோதலுக்கான மூலவளமாக இதனை ஆக்குவதற்கு எங்கள் தரப்பில் கெரென்ஸ்கியின் இந்த முயற்சியை நாங்கள் அனுகூலமாக்கிக் கொண்டோம்.

இராணுவ காரணங்களுக்காய் அல்லாமல் எதிர்ப்புரட்சி கூட்டுகளுக்கான நோக்கத்துடன் பெட்ரோகிராட் படையின் மூன்றில் ஒரு பங்கை அகற்றுவதற்கு திட்டமிட்டதாய் கெரென்ஸ்கி அரசாங்கத்தை நாங்கள் பகிரங்கமாய் குற்றம் சாட்டினோம் (எங்களது குற்றச்சாட்டு அதன்பின் உத்தியோகபூர்வ ஆவணத்தில் எழுத்துவடிவமான உறுதிப்படுத்தலையும் பெற்றது).

இந்த மோதல் பாதுகாப்பு படையுடன் எங்களை இன்னும் நெருக்கமாய் ஆக்கியதோடு அதன் முன் நவம்பர் 7 திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த சோவியத் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது என்னும் நன்கு-வரையறை செய்யப்பட்ட கடமையை முன்வைத்தது. இந்த பாதுகாப்புப் படை அனுப்பப்படவிருப்பதாய் அரசாங்கம் வலியுறுத்தியதால் (ரொம்ப பலவீனமான குரலில் தான் என்றாலும்) ஏற்கனவே எங்களது கரங்களில் இருந்த பெட்ரோகிராட் சோவியத்தில் அரசாங்கத் திட்டத்திற்கான இராணுவரீதியான காரணங்களை பரிசோதிக்கிறதான சாக்கில் நாங்கள் ஒரு புரட்சிகர போர்க் குழுவை (Revolutionary War Committee) உருவாக்கினோம்.

இவ்வாறாக பெட்ரோகிராட் படையின் தலைமையில் ஒரு முழுமையான இராணுவ அமைப்பை நாங்கள் கொண்டிருந்தோம். அது உண்மையில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கான ஒரு சட்டபூர்வ அங்கமாய் இருந்தது. அதேசமயத்தில் அனைத்து இராணுவப் பிரிவுகள், இராணுவ கிடங்குகள் போன்றவற்றில் நாங்கள் (கம்யூனிஸ்ட்) ஆணையர்களை நியமித்தோம். இந்த இரகசிய இராணுவ அமைப்பானது குறிப்பிட்ட தொழில்நுட்ப வேலைகளை செய்தது. அத்துடன் புரட்சிகர போர்க் குழுவை முக்கிய இராணுவக் கடமைகளுக்கான முழுமையான நம்பிக்கையான போராளிகளால் நிரப்பியது. தயாரிப்பு செய்வது, உணர்ந்து கொள்வது மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகியவை தொடர்பான அடிப்படை வேலைகள் கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவம் அதன் கண்களுக்குக் கீழ் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பகிரங்கமாகவும் மிக வழிமுறைப்பட்ட வகையிலும் நடந்தேறிக் கொண்டிருந்தன. (பாரிஸில், பாட்டாளி வர்க்கம் தான் வெற்றி பெற்றதையும் -மேலும் இந்த வெற்றி அது திட்டமிட்டு முனைந்து எதிர்நோக்கியதல்ல- தான்தான் சூழ்நிலையின் எஜமானன் என்பதையும் மறுநாள் தான் புரிந்து கொண்டது. பெட்ரோகிராடில் அதற்கு நேர்மாறான நிலை. தொழிலாளர்களையும் படையையும் அடித்தளமாய் அமைத்துக் கொண்ட எங்களது கட்சி ஏற்கனவே அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தது, ஓரளவு சத்தமில்லாத ஒரு இரவைக் கழித்த முதலாளித்துவ வர்க்கம் மறுநாள் காலையில் தான் நாட்டின் தலைமை தனக்கு புதைகுழி தோண்டுபவரின் கரங்களில் இருக்கக் கண்டது.)

மூலோபாயத்தைப் பொறுத்தவரை, எங்களது கட்சிக்குள் பல்வேறு கருத்து பேதங்கள் இருந்தன.

தருணம் இன்னும் வந்து சேரவில்லை என்றும், ’பெட்ரோகிராட் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், பாட்டாளி வர்க்கம் விவசாயிகளிடம் இருந்தும் தனித்து நின்றது’ என்பது போன்றும் நம்பிக்கொண்டு மத்தியக் குழுவின் ஒரு பகுதியே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எதிராக தன்னை அறிவித்துக் கொண்டிருந்தது என்பது நாம் அறிந்ததே.

நாங்கள் இராணுவ சதியாலோசனை பிரிவுகளுக்கு போதுமான முக்கியத்துவம் அளித்திருக்கவில்லை என்று மற்ற தோழர்கள் நம்பினர். அக்டோபரில் ஜனநாயக மாநாட்டு அமர்வு நடைபெற்ற அலெக்சாண்டிரின் அரங்கத்தை (Alexandrine Theater) சுற்றிவளைக்க வேண்டும் என்றும் கட்சியின் மத்திய குழுவின் சர்வாதிகாரத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் மத்தியக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கோரினார். அவர் கூறினார்: ’நமது கிளர்ச்சியிலும் அதேபோல் இரண்டாவது காங்கிரசுக்கான தருணத்திற்கான நமது இராணுவத் தயாரிப்பு வேலையிலும் நாம் நமது திட்டத்தை விரோதிக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறோம்; தன்னைத் தயாரித்துக் கொள்வதற்கும் தற்காத்துக் கொள்ளும் வகையில் நமக்கு முன்கூட்டியே தாக்குவதற்கான சாத்தியத்தை நாம் எதிரிக்கு வழங்குகிறோம்.’ ஆனால் ஒரு இராணுவ சதியாலோசனைக்கு மற்றும் அலெக்சாண்டிரின் அரங்கத்தை சுற்றிவளைப்பதற்கான முயற்சி உண்மையில் நிகழ்வுகளின் அபிவிருத்திக்கு மிகவும் அந்நியப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும் என்பதிலோ, அத்துடன் வெகுஜனங்களுக்கு இணக்கமற்ற ஒரு நிகழ்வாக அது இருந்திருக்கும் என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை. போராட்டத்தின் தர்க்கரீதியான அபிவிருத்தியை முன்னெதிர்பார்த்த நிலையில், நமது கன்னை ஆதிக்கம் செலுத்திய பெட்ரோகிராட் சோவியத்தில் கூட, இத்தகையதொரு விடயம் அந்த தருணத்தில் பெரும் ஒழுங்கின்மையைத் தூண்டியிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாய் படையினரிடையே. அங்கே தயக்கத்துடன் மற்றும் ஆழ்ந்து நம்பிக்கை கொள்ளமுடியாத படையணிகளான முக்கியமாக குதிரைப்படையணிகள் இருந்தன. தனது நிலைகளை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டு வரும் படையை (சோவியத்துகளின் வருங்கால காங்கிரசின் பெயரில் அதன் மீறாத்தன்மை பாதுகாக்கப்பட்டது) தாக்குவதைக் காட்டிலும் வெகுஜனங்கள் எதிர்பார்த்திராத ஒரு சதியாலோசனையை நசுக்குவது கெரென்ஸ்கிக்கு மிகவும் எளிதாகியிருக்கும். ஆகவே மத்திய குழுவின் பெரும்பான்மை ஜனநாயக மாநாட்டை சுற்றிவளைக்கும் திட்டத்தை நிராகரித்தது, அது சரியே. அந்த சரியான தருணம் நன்கு தீர்மானிக்கப்பட்டதாய் அமைந்தது: ஆயுதமேந்திய கிளர்ச்சி, ஏறக்குறைய எந்த இரத்தச் சிதறலும் இல்லாமல், இரண்டாம் சோவியத் காங்கிரசுக்காக முன்கூட்டி வெளிப்படையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த தேதியில் சரியாக வெற்றி காணப்பட்டது.

ஆயினும் இந்த மூலோபாயம் ஒரு பொது விதியாக ஆக முடியாது, இதற்கென்று பிரத்யேகமான நிலைமைகள் வேண்டும். ஜேர்மனியர்களுடன் நீண்ட போரில் யாருக்கும் இனியும் நம்பிக்கை இருக்காததுடன், புரட்சிகரத்தன்மை குறைவான படையினர்கள் போர்முன்னணிக்கு செல்வதற்காக பெட்ரோகிராடை விட்டு அகல விரும்பவில்லை. இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே ஒட்டுமொத்தமாய் படையணியினர் தொழிலாளர்களின் பக்கம் இருந்தது என்றால் கூட, கெரென்ஸ்கியின் சூழ்ச்சிகள் வெளிப்படுத்தப்பட்ட மட்டத்திற்குத் தான் அது தனது கண்ணோட்டத்தில் வலிமை பெற்றதாய் ஆனது. ஆயினும் பெட்ரோகிராட் படையின் இந்த மனோநிலை விவசாயிகளின் நிலைமையிலும் ஏகாதிபத்தியப் போரின் அபிவிருத்தியிலும் இன்னும் ஆழமானதொரு காரணத்தைக் கொண்டிருந்தது. படையினரிடையே ஒரு பிளவு இருந்திருந்தாலோ அல்லது கெரென்ஸ்கி ஒரு சில படைப்பிரிவுகளின் ஆதரவுக்கான சாத்தியத்தைப் பெற்றிருந்தாலோ, நமது திட்டம் தோற்றுப் போயிருக்கும். முற்றுமுழுமையாக ஒரு இராணுவக் கவிழ்ப்புத்திட்டத்தின் (இரகசிய ஆலோசனை மற்றும் மிகத் துரித நடவடிக்கை வேகம்) கூறுகள் தான் நிலவியிருக்கும். கிளர்ச்சிக்கு இன்னொரு தருணத்தை தெரிவு செய்வது அவசியமாகியிருக்கும்.

விவசாய படைப்பிரிவுகளை வென்றெடுப்பதற்கான முழுமையான சாத்தியத்தையும் கம்யூன் கொண்டிருந்தது. ஏனென்றால் அவை அதிகாரத்தின் மீதும் உத்தரவு மேலிடங்கள் மீதுமான அனைத்து நம்பிக்கையையும் மரியாதையையும் தொலைத்திருந்தன. ஆயினும் அதை நோக்கிய எதனையும் கம்யூன் செய்யவில்லை. இங்கே தவறு விவசாயிகளுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகளில் இல்லை, மாறாக புரட்சிகர மூலோபாயத்தில் இருக்கிறது.

இந்த விடயத்தில் இன்றைய சகாப்தத்தின் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை என்னவாக இருக்கும்? இந்த விடயத்தில் எதனையும் தீர்க்கதரிசனமாய் கூறுவது எளிதல்ல. ஆயினும் நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாய் அபிவிருத்தியுற்று வருகிற நிலையிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் கடந்த கால அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு தமது அனைத்து முயற்சிகளையும் செலுத்துகின்ற நிலையிலும், பாட்டாளி வர்க்கமானது, படையினர்களின் அனுதாபங்களை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஈர்ப்பதற்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதொரு பெரும் எதிர்ப்பை வென்றாக வேண்டியிருக்கும் என்பதைக் காண முடியும். அப்போது புரட்சியின் பக்கத்தில் இருந்து ஒரு திறமையான சரியான தருணத்திலான தாக்குதல் அவசியமாக இருக்கும். அதற்குத் தன்னை தயாரித்துக் கொள்வது தான் கட்சியின் கடமை ஆகும். சரியாக இக்காரணத்தால் தான், வெகுஜனங்களின் புரட்சிகர இயக்கத்தை பகிரங்கமாக வழிநடத்துகிறதாகவும் மற்றும் அதே சமயத்தில் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் ஒரு இரகசிய எந்திரமாக இருக்கிறதுமான ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட அமைப்பின் குணத்தை அது பராமரிப்பதும் அபிவிருத்தி செய்வதும் கட்டாயமாகும்.

                                                              * * * * * *

படைத்தலைமை தேர்ந்தெடுக்கப்படுவதான பிரச்சினை குடிப்படைக்கும் தியேருக்கும் இடையிலான மோதல்களின் காரணங்களில் ஒன்றாய் இருந்தது. தியேர் நியமித்த படைத்தலைமையை பாரிஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதனையடுத்து குடிப்படையின் படைத்தலைமை மேலிருந்து கீழ் வரை குடிப்படை வீரர்களாலேயே தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதான கோரிக்கையை வார்லன் உருவாக்கினார். இங்கு தான் குடிப்படையின் மத்திய குழு தனக்கான ஆதரவைக் கண்டது.

இந்த பிரச்சினை அரசியல் பக்கம் இராணுவப் பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களில் இருந்தும் கருதிப் பார்க்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை. ஆனால் பிரித்தறிய வேண்டியவை. குடிப்படையில் எதிர்புரட்சி படைத் தலைமையை அகற்றுவது அரசியல் கடமையில் இடம்பெற்றிருந்தது. முழுமையான தேர்ந்தெடுப்பு நிலை மட்டும் தான் அதற்கான ஒரே வழி. குடிப்படையின் பெரும்பகுதியாக தொழிலாளர்களும் புரட்சிகர குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினருமே இருந்தனர். அத்துடன் தவிர, “படைத்தலைமையை தேர்ந்தெடுப்பது” என்னும் இலக்கு காலாட்படைக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், ஒரே அடியில் தியேருக்கு எதிர்ப்புரட்சி அதிகாரிகள் என்னும் அவரது அத்தியாவசியமான ஆயுதம் இல்லாது போயிருக்கும். இந்த திட்டத்தை உணர்ந்து கொள்வதற்கு, இராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் தன் ஆட்களைக் கொண்ட ஒரு கட்சி அமைப்பு அவசியமாய் இருந்தது. ஒரே வார்த்தையில், இந்த விடயத்தில் தேர்ந்தெடுப்பது என்பதன் உடனடியான பணியாக இருந்தது போர்ப்படைகளுக்கு நல்ல படைத்தலைவர்களை கொடுப்பது அல்ல, மாறாக அவர்களை முதலாளித்துவத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட படைத்தலைவர்களிடம் இருந்து விடுதலை செய்வது தான். தேர்தல்முறை என்பது இராணுவத்தை வர்க்க வழியில் இரண்டு பாகங்களாக உடைப்பதற்கான ஒரு ஆப்பாக சேவை செய்தது. கெரென்ஸ்கியின் காலகட்டத்தில், எல்லாவற்றிற்கும் மேலாய் அக்டோபர் சமயத்தில் விடயங்கள் இவ்வாறு தான் நிகழ்ந்தன.

ஆனால் பழைய படைத்தலைமை அமைப்பில் இருந்து இராணுவத்தை விடுதலை செய்வதென்பது தவிர்க்கவியலாமல் அமைப்புரீதியான பிணைப்பை பலவீனப்படுத்துவது மற்றும் போரிடும் ஆற்றலைத் தணிப்பது ஆகியவற்றை கொண்டிருக்கிறது. ஒரு விதியாகவே, தேர்ந்தெடுக்கப்படும் படைத்தலைமை என்பது தொழில்நுட்ப-இராணுவ நிலைப்பாட்டில் இருந்து பார்க்கும்போதும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பராமரிப்பது தொடர்பான விடயத்திலும் சற்று பலவீனமானதாகவே இருக்கும். இவ்வாறாக, இராணுவம் பழைய எதிர்புரட்சி படைத்தலைமைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அந்த சமயத்தில், அதற்கு தனது இலட்சியத்தை எட்டும் திறனுடைய ஒரு புரட்சிகர படைத்தலைமையை வழங்கும் பிரச்சினை எழுகிறது. இந்த பிரச்சினை வெறுமனே தேர்தல்களால் மட்டுமே எவ்வகையிலும் தீர்க்கப்பட்டு விடமுடியாது. படையினர்களின் பரந்த எண்ணிக்கையிலானோர் படைத்தலைவர்களை நன்கு தெரிவு செய்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கும் அனுபவம் பெறுவதற்குள்ளாக புரட்சியானது, நூற்றாண்டுகளின் அனுபவத்தின் மூலம் செயல்படும் எதிரியின் தெரிந்தெடுத்த படைத்தலைமையின் வழிகாட்டலில் தோற்கடிக்கப்பட்டு விடும். வடிவமற்ற ஜனநாயகத்தின் வழிமுறைகள் (வெறுமனே தேர்ந்தெடுப்பது) மேலிருந்தான தேர்வு நடைமுறைகள் மூலமாக உதவப்பட வேண்டும், ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு இடம்பெயர்க்கப்படவும் வேண்டும். அனுபவம் வாய்ந்த நம்பகமான ஒழுங்கமைப்பாளர்களால் அமைந்த ஒரு அமைப்பை புரட்சி உருவாக்க வேண்டும். இந்த அமைப்பு ஒருவர் முழுமையான நம்பிக்கை கொள்ளத்தக்கதாகவும், அதற்கு படைத்தலைமையை தெரிவு செய்ய, பணி ஒதுக்க மற்றும் கற்பிக்க முழு அதிகாரங்களை வழங்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும். சிலர்நலன்வாதம் மற்றும் ஜனநாயக சுயாட்சிவாதம் ஆகியவை எல்லாம் பொதுவாகவே பாட்டாளி வர்க்க புரட்சிக்கு அபாயமானவை என்கின்ற அதே நேரத்தில், இராணுவத்திற்கு அவை பத்து மடங்கு கூடுதல் அபாயமானவை. அதனை நாம் கம்யூனின் துயரமான உதாரணத்தில் கண்டோம்.

குடிப்படையின் மத்திய குழுவானது தனது அதிகாரத்தை ஜனநாயகரீதியான தேர்ந்தெடுப்பு நிலையில் இருந்து தான் பெற்றது. தாக்குதலிலான தனது முன்முயற்சியை மிக உயர்ந்த மட்டத்திற்கு அபிவிருத்தி செய்ய அவசியமாய் இருந்த அந்த தருணத்தில் மத்திய குழு, ஒரு பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமை இல்லாத நிலையில், தனது புத்தியைத் தொலைத்து, தனது அதிகாரங்களை இன்னும் பரந்த ஜனநாயக அடிப்படை அவசியமாயிருந்த கம்யூனது பிரதிநிதிகளுக்கு கடத்துவதில் அவசரப்பட்டது. அந்த காலகட்டத்தில் தேர்தல்களைக் கொண்டு விளையாடுவது ஒரு பெரும் தவறு. ஆனால் தேர்தல் நடத்தப்பட்டு கம்யூன் ஒன்றுபடுத்தப்பட்டது என்றால், அப்போது ஒரே அடியில் அனைத்தையும் கம்யூனில் குவிப்பதும் குடிப்படையை மறுஒழுங்கு செய்வதற்கான உண்மையான அதிகாரத்தைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கும்படி செய்வதும் அவசியமாய் இருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனின் ஒரு பக்கத்தில் மத்திய குழுவும் இருந்தது; மத்திய குழுவின் தேர்ந்தெடுப்பு நிலையானது அதற்கு ஒரு அரசியல் அதிகாரத்தை வழங்கி அதன் பலனால் அது கம்யூனுடன் போட்டியிடவும் முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் கம்யூன் ஒழுங்கமைக்கப்பட்ட பின்னர் முழுமையான இராணுவப் பிரச்சினைகளில் (அவை தனது இருப்பிற்கான நியாயத்தைக் கொண்டிருந்தன) அவசியமான ஆற்றலும் உறுதியும் அதனிடம் இல்லாதிருந்தது. தேர்ந்தெடுப்பு நிலையும், ஜனநாயக வழிமுறைகளும் பாட்டாளி வர்க்கம் மற்றும் அதன் கட்சியின் கரங்களில் இருக்கும் சாதனங்களில் ஒன்று தானே தவிர வேறொன்றுமில்லை. தேர்ந்தெடுப்பு நிலை என்பது எந்த வகையிலும் குருட்டு பக்திக்கான விடயமோ அல்லது அனைத்து தீமைகளுக்குமான மருந்தோ அல்ல. தேர்ந்தெடுப்பு நிலையின் வழிமுறைகள் நியமன வழிமுறைகளுடன் இணைத்து பயன்படுத்தப்பட வேண்டும். கம்யூனின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிப்படையில் இருந்து வந்தது. ஆனால் உருவாக்கப்பட்டு விட்ட பின்னர், கம்யூன் அந்தப் படையை மேலிருந்து கீழாக இரும்புக் கரம் கொண்டு மறுஒழுங்கு செய்திருக்க வேண்டும், அதற்கு நம்பகமான தலைவர்களைக் கொடுத்திருக்க வேண்டும், அத்துடன் மிகக் கண்டிப்பான நிர்வாகமுறையை ஸ்தாபித்திருக்க வேண்டும். கம்யூனே ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர திசைகாட்டும் மையத்தைக் கொண்டிராத நிலையில் அது இதனைச் செய்யவில்லை. அதுவும் நசுக்கப்பட்டது.

இவ்வாறாக கம்யூனின் மொத்த வரலாற்றையும் ஒவ்வொரு பக்கமாய் புரட்டிப் பார்க்கும் போதும் நாம் அதில் காண்பது ஒரே ஒரு படிப்பினையைத் தான்: அதாவது ஒரு வலிமையான கட்சித் தலைமை அவசியம். வேறு எந்த பாட்டாளி வர்க்கத்தையும் விட பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம், புரட்சிக்கு அதிகமான தியாகங்களை செய்திருக்கிறது. ஆனால் அதேபோல் வேறு யாரையும் விட அதிகமாய் ஏமாற்றப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் முதலாளித்துவ வர்க்கம் குடியரசுவாதத்தின், தீவிரவாதத்தின், சோசலிசவாதத்தின் அனைத்து வண்ணங்களாலும் அதனைக் கண்கூசச் செய்து அதனை முதலாளித்துவத்தின் தளைகளுக்குள் எப்போதும் கட்டிப் போட்டு வந்திருக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் தனது முகவர்கள், தனது வழக்கறிஞர்கள் மற்றும் தனது பத்திரிகையாளர்களின் மூலமாக ஜனநாயகவாத, நாடாளுமன்றவாத மற்றும் சுயாட்சிவாத சூத்திரங்களின் மொத்தத்தையும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னே கொட்டியிருக்கிறது. இவை அனைத்தும் பாட்டாளி வர்க்கம் முன்னே அடி எடுத்து வைக்காமல் தடுக்கின்ற அதன் காலடியில் வைக்கப்பட்ட இடையூறுகளே அன்றி வேறொன்றும் அல்ல.

பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் மனோநிலை ஒரு புரட்சிகர எரிமலைக் குழம்பு. ஆனால் அந்த எரிமலைக் குழம்பு இப்போது ஏராளமான ஏமாற்றங்கள் மற்றும் ஊக்கக் குறைவின் விளைவால் தோன்றிய ஐயுறவுவாதத்தின் சாம்பலால் மூடிக் கிடக்கிறது. அத்துடன் பிரான்சின் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தினர் தங்களது கட்சி விடயத்தில் கூடுதல் கடுமை காட்ட வேண்டும் என்பதோடு சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் எந்த இணக்கமின்மை இருந்தாலும் அதனை இரக்கமின்றி தோலுரித்துக்காட்ட வேண்டும். பிரெஞ்சு தொழிலாளர்களுக்கு இரும்பைப் போல உறுதியானதும், புரட்சிகர இயக்கத்தின் ஒவ்வொரு புதிய கட்டத்திலும் வெகுஜனங்களால் கட்டுப்படுத்தப்படுகிற தலைவர்களைக் கொண்டதுமான ஒரு அமைப்பு அவசியமாய் இருக்கிறது.

நம்மை தயாரித்துக் கொள்வதற்கு வரலாறு எவ்வளவு காலத்தை வழங்க இயலும்? நமக்குத் தெரியாது. கம்யூன் வீரர்களின் (Communards) எலும்புகளின் மேல் மூன்றாம் குடியரசை தேர்ந்தெடுத்த பின்னர், பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் ஐம்பது ஆண்டுகளாக தனது கரங்களில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 71 ஆம் ஆண்டின் அந்த போராளிகள் சாகசத் திறனில் சளைத்தவர்கள் அல்லர். வழிமுறையில் தெளிவும் ஒரு மத்தியமயப்படுத்தப்பட்ட தலைமை அமைப்பும் தான் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது. அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கம்யூன் வீரர்களின் (Communards) மரணத்திற்குப் பழிதீர்க்கும் கேள்வியை பிரான்சின் பாட்டாளி வர்க்கம் முன்வைப்பதற்குள் அரை நூற்றாண்டு கடந்து விட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை நடவடிக்கை உறுதியானதாக கூடுதல் கவனம் குவிந்ததாக இருக்கும். தியேரின் வாரிசுகள் வரலாற்றுக் கடனை முழுமையாய் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.

Leon Trotsky

February 1921

Loading