ராப் இசைப் பாடகி M.I.A. சிறையில் ஜூலியன் அசான்ஜை சந்தித்தார்: “இது, மக்கள் ஆதரிக்க வேண்டிய மற்றும் போராட வேண்டிய உண்மை பற்றியது” என்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாடகியும் ராப் இசைக் கலைஞருமான M.I.A., பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசான்ஜை சனிக்கிழமை சந்தித்ததுடன், அவரது விடுதலைக்காக போராட அழைப்பு விடுத்தார். விக்கிலீக்ஸ் பதிப்பாசிரியரும் மற்றும் ஊடகவியலாளருமான அவர், உளவுச் சட்டத்தின் கீழ் 175 ஆண்டுகள் சிறை தண்டனை பெறக்கூடிய சாத்தியமுள்ள குற்றச்சாட்டுக்களால் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொள்கிறார்.

வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடந்த சுருக்க விசாரணையைத் தொடர்ந்து அசான்ஜை M.I.A. சந்தித்தார். அசான்ஜை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பது தொடர்பாக விசாரணை செய்தாலும், அதிகூடிய பாதுகாப்பு சிறையில் தொடர்ந்து அவர் காவலில் வைக்கப்படவிருப்பதை உறுதிசெய்ய நீதிபதி டாம் இக்ராம் விசாரணை செய்வதற்கு ரிமோட் காணொளி இணைப்பு ஊடாக அவர் தோன்றினார். மேலும், அக்டோபர் 21 அன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார்.

பெல்மார்ஷ் சிறைக்கு வெளியே சனிக்கிழமை மாலை பத்திரிகையாளர் கூட்டத்தில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட M.I.A. என்றழைக்கப்படும் மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் பேசுகையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் ஆகிய அசான்ஜின் சித்திரவதையாளர்களை கண்டித்தார். M.I.A., அசான்ஜின் நீண்டகால நண்பியும் ஆதரவாளருமாவார்.

அசான்ஜின் நிலைமை பற்றி கேட்டதற்கு, அவர், “குற்றவாளிகளாக இருப்பவர்கள் வெளியே இருக்கின்றனர் என்பதையும் அமைதியை ஆதரிப்பவர்கள் உள்ளே இருக்கின்றார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என நான் நினைக்கிறேன். போரிலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள் வெளியே இருக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் ஏன் நோபல் பரிசு கூட அவர்களுக்கு வழங்கப்படுகிறது, அதுதான் வலிக்கிறது. மேலும், எவருக்கும் அது கஷ்டமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றவர் கூறினார்.

ட்ரோன் படுகொலையை தனிப்பட்ட முறையில் கண்காணித்தது உட்பட, உலகம் முழுவதிலும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் அதிகரித்தது என்றாலும் கூட, 2009 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிறையில் இருக்கும் “அனைவரது” நிலைமைகள் பற்றியும், “மேலும் கருத்து சுதந்திரத்திம் என்றால் என்ன என்றும், மற்றும் உண்மையில் அதன் அர்த்தம் என்ன” என்பது பற்றியும் தானும் ஜூலியனும் விவாதித்ததாக M.I.A. விவரித்தார்.

“சித்திரவதை செய்வதில் பங்கேற்கவோ அல்லது அதை மன்னிக்கவோ இல்லை” என்ற இங்கிலாந்து அரசாங்கத்தின் வலியுறுத்தல் பற்றி கருத்து தெரிவிக்கும் படி M.I.A. இடம் ஒரு WSWS நிருபர் கேட்டார். அசான்ஜ் முன்னொருபோதுமில்லாத அரசு துன்புறுத்தல் மற்றும் “உளவியல் சித்திரவதையால்” பாதிக்கப்பட்டுள்ளார் என்பது போன்ற சித்திரவதை தொடர்பான ஐ.நா. அறிக்கையாளர் நீல்ஸ் மெல்ஸரின் கண்டுபிடிப்புக்களை (மே 31 இல் வெளியிடப்பட்டது) சென்ற வாரம் இங்கிலாந்து அரசாங்கம் நிராகரித்தது.”

மேலும் அவர், “அவருக்காக ஒரு யோகா பயிற்சி புத்தகத்தை எடுத்து வந்து அவரிடம் கொடுப்பதற்கு ஒரு மாதமாக நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், ஏன் தற்போது கூட ஒவ்வொரு வாரமும் அவருக்கு அதைக் கொடுப்பதற்கு முயற்சிக்கிறேன், என்றாலும் அது முடியவில்லை… புத்தகங்கள் வாசிப்பதற்கு கூட மறுக்கப்படும் வகையிலான கடும் கட்டுப்பாடுகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே நினைக்கிறேன். மேலும், அவரது எண்ணங்களை எழுதவோ அல்லது வரைந்து காட்டவோ முடிந்த வரையும் புத்தகங்களையும் மற்றும் அவரது சிந்தனைக்கு ஊக்கமளிக்கும் புதிர் புத்தகங்களையும் கொண்டு செல்லக்கூட முடியவில்லை” என்று பதிலிறுத்தார்.

“அனைத்து கைதிகளும் அப்படித்தான் கையாளப்படுவார்கள் என்று முதலில் நான் நினைத்தேன், அங்கு அவர்கள் எந்தவித மதிப்பையும் பெற முடியாத மற்றும் எதையும் கேட்பதற்கு அவர்களுக்கென ஒரு சொந்த இடம் மற்றும் சிந்தனை சுதந்திரம் வழங்கப்படாத நிலையில் உள்ளனர்… அவர் நியாயமற்ற முறையில் கையாளப்படுகிறார் என நினைக்கும் நபர்கள் குறித்து நான் அனுதாபப்படத்தான் முடியும்… அங்கு ஒரு அடிப்படையான பாகுபடுத்தி பார்த்தல் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”

ஊடகங்கள் அசான்ஜின் செய்திகளை வெளியிடுவது பற்றி கருத்து கேட்டபோது, M.I.A. இவ்வாறு கூறினார், “அசான்ஜை அமெரிக்காவிற்கு ஒப்படைப்பது பற்றித்தான் விவாதம் நடக்கிறது என்று நாம் அறிந்த உண்மையை காட்டிலும் இன்னும் அதிகமாக அங்கு ஏதோ நடக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர் மீது ஏனையோர் குற்றம்சாட்டிய பிற விடயங்கள் இங்கு பெரிதும் முக்கியமானவை அல்ல. அதாவது இப்போது உண்மையை பற்றியது. குறிப்பாக இந்த ஆண்டுகளில் இதற்காகவே மக்கள் முன்வரவும் போராடவும் வேண்டும்.”

சுவீடனில் அசான்ஜூக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி M.I.A. நேரடியாக பதிலிறுத்தார்: “இப்போது இது உண்மையில் ஜூலியனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றியது. அந்த உண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதைப் பற்றியதொரு விளக்கத்தையும் மக்கள் உருவாக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.

“அவர் சில போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தினார், மேலும் அமைதிக்காக அவர் பிரச்சாரம் செய்தார் என்பதாலேயே அவர் அங்கிருக்கிறார் என்பதுதான் மிகுந்த அடிப்படையான காரணமாக உள்ளது. இது உதாரணமாக இருக்க முடியாது. 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடிக்கு தனிநபர் ஒருவர் கூட தண்டிக்கப்படாமல் மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை சமூகத்திற்கு ஒரு உதாரணமாக நாம் எடுத்துக்காட்டலாம். புஷ் இன் சகாப்தத்திற்கு முன்னரும், ஒபாமா சகாப்தத்திலிருந்தும் சரி, ஜனநாயகக் கட்சியினர் எதை செயல்படுத்திய போதிலும் சரி, போர்க்குற்றங்களுக்காக எவரும் தண்டிக்கப்படவில்லை. சட்டபூர்வமாக எதுவும் நடக்கவில்லை, எனவே சட்ட அமைப்பை ஏன் நாம் நம்ப வேண்டும், எந்தவொரு விடயத்தின் ஊடாகவும் அது நடைமுறைக்கு வரவில்லை.”

M.I.A. இன் பத்திரிகையாளர் சந்திப்பு பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது என்றாலும், முக்கிய செய்தி ஊடகங்களும் BBC யும் அதை புறக்கணித்துவிட்டன. Sputnik மற்றும் Ruptly ஆகிய செய்தி ஊடகங்கள் மட்டுமே நேரடி பதிவுகளை வெளியிட்டன. மேலும், ஒரு பத்திரிகை சங்க அறிக்கை Independent மற்றும் Belfast Telegraph ஊடகங்களால் எடுத்துக்கொள்ளப் பட்டது, அதேவேளை Daliy Mail அசான்ஜைப் பற்றிய தவறான மற்றும் அவதூறான அறிக்கைகளை மறுபதிவிட்டது. அதன் தலைப்புச் செய்தியாக, “பாடகர் M.I.A. ஜூலியன் அசான்ஜின் சமீபத்திய பிரபல ஆதரவாளராகிறார்…” என்று வெளியிட்டது.

M.I.A. பல ஆண்டுகளாக அசான்ஜை பாதுகாத்து வருகிறார் என்பதுடன், ஏகாதிபத்தியப் போர் மற்றும் ஒடுக்குமுறையின் வெளிப்படையான ஒரு எதிர்ப்பாளராவார். நவம்பர் 2013 இல், அவர் தனது இசை நிகழ்ச்சியை அசான்ஜின் 10 நிமிட நேரடி காணொளி உரையுடன் தொடங்கினார். இரகசிய செய்தி வெளியீட்டாளர் எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாப்பதற்கே அசான்ஜ் தன்னை அதில் வெளிக்காட்டினார். தேசிய பாதுகாப்பு அமைப்பின் உளவு நடவடிக்கைகளின் ஆபத்துகள் குறித்து அவர் எச்சரித்ததுடன், M.I.A. இன் ரசிகர்கள் அரசியல் ரீதியாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன், உலகத்தை சிறப்பாக மாற்றுவதில் செயலூக்கத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சனியன்று M.I.A., “நான் ஜூலியனை ஆதரிக்கிறேன், ஏனென்றால் அவர் பல்வேறு விடயங்களைப் பற்றி அறிந்தவராக இருக்கிறார் என்பதால் இவரைப் போன்ற ஒருவர் சமூகத்திற்கு மதிப்புமிக்கவராவார் என்று நான் கருதுகிறேன்” என்று விவரித்தார்.

“இவ்வளவு விரைவாக விடயங்கள் மாறியும் மற்றும் உருவாகியும் வரும் நேரத்தில் தவறான அபிப்பிராயத்திற்கு வழிவகுக்காமல் இருக்க நான் முயற்சிக்கிறேன். மக்களின் மதிப்புகள் மாறுகின்றன, மக்களின் நம்பிக்கைகள் மாறுகின்றன, அரசியல் சூழல் மாறுகிறது, சமூக சூழ்நிலை மாறுகிறது, நிதி நிலைமை மாறுகிறது — இந்த அனைத்து மாற்றங்களினால் தான், இந்த மனிதரை நாம் உறுதியாக்குகின்றோம்.”

M.I.A., இங்கிலாந்து உள்துறை அலுவலகத்திற்கு வெளியே சக ராப் கலைஞரான லோக்கியுடன் நவம்பர் 5 அன்று அசான்ஜூக்காக நடத்தப்படும் ஒரு இசை நிகழ்ச்சியில் மக்களை கலந்துகொள்ளும் படி வலியுறுத்தி தனது பத்திரிகையாளர் சந்திப்பை முடித்தார். இந்த இலவச நிகழ்ச்சி சென்ற மாதம் இதே கட்டிடத்திற்கு வெளியே நடந்த Pink Floyd பாடகர் ரோஜர் வாட்டர்ஸின் இசை நிகழ்ச்சிக்கு பின்னர் நடக்கிறது, அதில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு தங்களது ஆதரவை காட்டும் விதமாக நூற்றுக்கணக்கானோர் அங்கு ஒன்றுகூடியிருந்தனர்.

Loading