கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை அரசாங்கங்கள் குறைக்கின்றன, வங்கிகளுக்கு கட்டுப்பாடற்ற பணம்

4 March 2020

மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது முதல் திங்கள் மாலை வரையிலான 72 மணிநேரத்தில் கொடிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஒரு பேரழிவு தரும் விரிவாக்கத்தைக் கண்டது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்த அதேவேளை பல ஐரோப்பிய நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

People walk past an electronic board showing Hong Kong share index outside a local bank in Hong Kong, Tuesday, March 3, 2020. (AP Photo/Kin Cheung)

இந்த காலகட்டத்தில், மூன்று தனித்தனி இடங்களில் “சமூகரீதியான பரவுதல்” என வல்லுநர்கள் உறுதிப்படுத்திய பின்னர் அமெரிக்காவில் வைரஸ் நோயால் ஆறு பேர் இறந்தனர். ஒரு மரபணு ஆய்வில், கொரோனா வைரஸ் ஆறு வாரங்களாக வாஷிங்டன் மாநிலத்தில் மக்கள் தொகையில் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டது. அதாவது 150 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டறியப்படாமல் நோய்வாய்ப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்த அழிவுகரமான செய்திக்கு மத்தியிலும், திங்களன்று டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1,294 புள்ளிகளுடன் மூடப்பட்டது. இது இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒரு நாள் புள்ளி அதிகரிப்பாகும்.

பொருளாதார நிலைமைகளில் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு சந்தை மீளவில்லை. பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு முழு ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பை 2009 க்கு பின்னர் ஆகக் குறைந்த மட்டத்திற்கு குறைத்த அதேவேளை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய பொருளாதார சுருக்கம் குறித்து திங்களன்று எச்சரித்தது.

மாறாக, சந்தைகள் வேறொருவிதத்தில் தமது பிரதிபலிப்பை காட்டின: நிதியச் சந்தைகளின் கையிருப்பில் கட்டுப்பாடற்றளவிலான பணத்தை கொடுப்பது, வங்கிகளின் சொத்துக்களை வாங்குதல் மற்றும் வட்டி விகிதங்களை குறைப்பதாக அதிகரித்துவரும் உத்தரவாதங்களை வழங்கின.

திங்களன்று, அமெரிக்க சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பு, ஜப்பான் வங்கி ஆளுநர் ஹருஹிகோ குரோடா "சந்தை நடவடிக்கைகள் மற்றும் சொத்து கொள்முதல் மூலம் போதுமான பணப்புழக்கத்தை வழங்குவதாக" உறுதியளித்தார். ஜப்பானிய மத்திய வங்கி கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் செலுத்த உடனடியாக நகர்ந்தது.

பிரெஞ்சு நிதி மந்திரி புருனோ லு மேர் முக்கிய மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் ஒருங்கிணைந்த வெட்டுக்கான சாத்தியத்தை முன்வைத்து, ஜி 7 பொருளாதாரங்கள் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக "ஒருங்கிணைந்த நடவடிக்கை" எடுக்கும் என்று அறிவித்து குரோடாவுடன் இணைந்தார். ஐரோப்பிய மத்திய வங்கி பின்னர் வட்டி விகிதங்களை பூஜ்ஜிய மட்டத்திற்குக் கீழே குறைத்து புதிய சுற்று சொத்து கொள்முதலைத் தொடங்கலாம் என்று கூறியது.

"எங்கள் கருவிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை ஆதரிக்க பொருத்தமாக செயல்படுவோம்" என்று உறுதியளித்த பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலின் அறிக்கையைத் தொடர்ந்து, இந்த அறிவிப்புகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியாகின. பெடரல் ரிசர்வ் மார்ச் 17-18 தேதிகளில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்பே மற்ற மத்திய வங்கிகளுடன் இணைந்து வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்பதற்கான சந்தைகளுக்கு தெளிவானதொரு சமிக்ஞையாக இருந்தது.

மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த ஒரு சொற்ப தொகை மட்டுமே வழங்கப்படுகிறது, ஆனால் நிதிய உயரடுக்கினை பிணையெடுக்க வரம்பற்ற நிதி கிடைக்கிறது. வோல் ஸ்ட்ரீட்டில் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலுத்த மத்திய வங்கி தயாராக இருக்கும்போது, டிரம்ப் நிர்வாகம் கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்துப் போராட வெறும் 2.5 பில்லியன் டாலர்களைக் கோரியுள்ளது. அதில் பாதியளவு ஏனைய திட்டங்களிலிருந்து இதற்கு மாற்றப்படும்.

பெரும்பான்மையான மக்களுக்காக எதுவும் செய்யாமல் நிதிய தன்னலக்குழுவிற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்து 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியை அவர்கள் கையாண்டதைப் போலவே அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தமது பிரதிபலிப்பை காட்டுகின்றன.

அமெரிக்காவில் நோய் வெடிப்பதற்கான பிரதிபலிப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பு என்னவெனில் அதிர்ச்சியூட்டும் விதத்தில் ஆயத்தமின்மையாக இருந்ததாகும். பல வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கையளிக்கப்பட்டு இருந்தபோதிலும், நோய்க்கான கட்டுப்பாட்டு மையங்கள் வைரஸுக்கு பெரிய அளவிலான சோதனைகளை மேற்கொள்ள முற்றிலும் தயாராக இருக்கிவில்லை. இது மிகவும் பரவலாக பரவவும், கணக்கிடமுடியாத எண்ணிக்கையிலான உயிர்களை இழப்பதையும் சாத்தியமாக்குகின்றது.

இந்த நெருக்கடிக்கான இந்த அழிவுகரமான பிரதிபலிப்பிற்கான காரணம், இடைவிடாமல் பல தசாப்தங்களாக செல்வத்தை கீழிருந்து மேலாக மறுபங்கீடு செய்வதோடு இணைந்த சமூக உள்கட்டமைப்புகளை இல்லாதொழிப்பதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் பொது சுகாதாரநல உள்கட்டமைப்பிற்கு திட்டமிட்டபடி நிதி குறைப்பு செய்யப்பட்டதாலேயாகும். ஒரு பகுதியாக .நெருக்கடிக்கு பேரழிவு ஏற்றப்படுத்தும் நிலைமை அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.

2008 நிதி நெருக்கடியைப் போலவே, ஆளும் வர்க்கமும் தனது சொந்த நலன்களைப் பாதுகாத்து விரிவுபடுத்துவதன் மூலம் உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பதிலளிக்கிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன, அதே நேரத்தில் பணக்காரர்களும், செல்வந்தர்களும் பிணை எடுக்கப்பட்டு, இன்னும் பணக்காரர்களாக ஆக்கப்பட்டனர்.

பெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க திறைசேரி கிட்டத்தட்ட 7 டிரில்லியன் டாலர் நிதி அமைப்புக்கு கடன் கொடுத்தன. இது 30 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி சொத்துக்களுக்கு முண்டுகொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகப்பெரிய நிதிய குமிழியை உருவாக்கி, பங்குச் சந்தை மதிப்புகளை 2009 இலிருந்து நான்கு மடங்காக அதிகரிக்க செய்தது.

மீண்டும், ஆளும் வர்க்கங்கள் ஒரு நூற்றாண்டில் மிக ஆபத்தான தொற்று நோய் வெடிப்பான இந்த புதிய நெருக்கடிக்கு முற்றிலும் வர்க்க அடிப்படையில் தமது பிரதிபலிப்பை காட்டுகின்றன.

இந்த நோயின் பெரும்பான்மையான பாதிப்பை தொழிலாள வர்க்கமும் மற்றும் ஏழைகளும்தான் சுமக்கப்போகிறார்கள் என்பது மத்திய வங்கிகளுக்கும் அரசாங்கங்களுக்கும் தெரியும். செல்வந்தர்கள் தொலைவிலிருந்து வேலைசெய்யும் அல்லது வேலையே செய்யாமலும் இருப்பதற்கான வசதிகளை கொண்டிருக்கையில், நோய்த்தொற்றுக்கு தம்மை உட்படுத்தக்கூடிய நிலையிலும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல் அல்லது இழந்த ஊதியங்களின் பேரழிவான தாக்கத்தால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தால் தொழிற்சாலைகள், கிட்டங்கிகள், மருத்துவ அலுவலகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் தொடர்ந்து பணியாற்றுவதற்காக கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

ஆளும் உயரடுக்கு சிறந்த மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதை உறுதி செய்துக்கொள்ளும் அதேவேளை தொழிலாளர்கள் நெரிசலான மற்றும் வசதிகள் குறைந்த மருத்துவமனைகளில் துன்புற வேண்டியிருக்கும். காப்பீடு செய்யப்படாத அல்லது குறைந்த காப்பீடு செய்யப்பட்ட 87 மில்லியன் அமெரிக்கர்கள் மருத்துவ பராமரிப்பை தவிர்த்துக்கொள்வதா அல்லது நிதிய அழிவை எதிர்கொள்வதா என்ற வேதனையான தேர்வின் முன்னே நிற்க நேரிடும்.

தொழிலாளர்கள் தங்கள் சொந்த வர்க்க நலன்களின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தை விட உறுதியுடன் நெருக்கடிக்கு பதிலளிக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிப்ரவரி 28 அறிக்கை தெளிவுபடுத்தியபடி:

இந்நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கங்கள் அவசியமான ஆதாரவளங்களை கிடைக்க செய்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையும் கவனிப்பும் வழங்க வேண்டும் மற்றும் பொருளாதார பின்விளைவுகளால் பாதிக்கப்படக் கூடிய நூறு மில்லியன் கணக்கானவர்களின் தொழில் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டுமென தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.

அறிக்கை தொடர்ந்தது:

இத்தகைய அவசரகால நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த கோருகையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது என்ற அதன் அடிப்படை நோக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது. மாறாக, அவசரகால நடவடிக்கைக்கான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தும் என்பதுடன், சர்வதேச வர்க்க ஐக்கியத்திற்கான தேவையைக் குறித்த அதன் புரிதலை அபிவிருத்தி செய்து, அதன் அரசியல் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, நோயால் ஏற்படும் ஆபத்துக்களும் மற்றும் ஆளும் உயரடுக்கினர் சமூகத்தின் இழப்பில் தங்கள் செல்வத்தையும் சலுகையையும் பாதுகாக்க எதனை செய்வார்கள் என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர்பரிந்துரைக்கும்கட்டுரைகள்:

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!

[28 February 2020]

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், உலகளவில் சமூகமயப்படுத்தப்பட்ட மருத்துவத்தின் அவசியமும்

[27 February 2020]

Andre Damon