மரணங்களின் மீது வோல் ஸ்ட்ரீட் குதுகலிக்கிறது

17 April 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று, ஏப்ரல் 14, COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட உலகெங்கிலுமான மொத்த மரணங்கள் 126,000 ஐ கடந்தன. செவ்வாய்கிழமை அமெரிக்காவில் 2,400 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த போது, நாடெங்கிலுமான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 26,000 இனை அடைந்தது. இந்த உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை ஐயத்திற்கிடமின்றி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை விட கணிசமானளவுக்கு குறைவு தான்.

அமெரிக்க மக்களின் சமூக நல்வாழ்வின் மீது இந்தளவுக்கு நாசகரமாக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நெருக்கடியை அமெரிக்கா 1930 களுக்குப் பின்னர் அதன் மண்ணில் இதுவரையில் அனுபவித்ததில்லை. நியூ யோர்க் நகரில் பாரிய புதைக்குழிகள் வெட்டப்படுவதையும், டெட்ராய்ட் மருத்துவமனைகளில் சடலங்கள் மூடிய பைகள் குவிந்து கிடப்பதையும், தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க உணவு பெறுவதற்காக ஓட்டுனர்களுடன் கார்கள் முடிவின்றி காத்திருப்பதையும் காட்டும் புகைப்படங்கள் Dorothea Lange இன் பெருமந்த நிலைமை சகாப்த புகைப்படங்களைப் போல நினைவுகூரப்படும். பத்து மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வருமானமும் இல்லாமல், அவர்களின் அடமானக் கடன்கள், வாடகைகள், காப்பீட்டு தவணைகள், நிலுவையிலுள்ள கடன்களுக்கான வட்டி, தவிர்க்கவியலாத ஏனைய அன்றாட, வாராந்தர மற்றும் மாதாந்தர செலவுகளுக்குப் போதுமான கையிருப்புகள் இல்லாமல் உள்ளனர். 16 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்மை சலுகைகளுக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வேலையின்மைக்கான காசோலைகள் வருவதற்கு மாதங்கள் இல்லையென்றாலும் வாரங்கள் கூட ஆகலாம். கடந்த மாதம் காங்கிரஸ் நிறைவேற்றிய CARES சட்டமசோதாவின் பாகமாக வாக்குறுதி அளிக்கப்பட்ட 1,200 டாலர் தொகை மிகச் சில வங்கி கணக்குகளில் மட்டுமே இடப்பட்டுள்ளது.

President Donald Trump speaks about the coronavirus in the Rose Garden of the White House, Wednesday, April 15, 2020, in Washington. (AP Photo/Alex Brandon)

ஒரு சமூக பேரழிவு கட்டவிழ்ந்து வருகிறது. ஊடகங்கள் உற்சாகமாக துணைக்கிழுக்கும் "நம்பிக்கை ஒளி" க்கும் பரந்த பெரும்பான்மை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் யதார்த்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. “மலைஉச்சி" “மேட்டுநிலம்" என்பவற்றை நோய்த்தொற்றுதல் அடைந்துவிட்டது எனக்கூறப்படும் மேற்கோள்கள் பெரிதும் பாசாங்குத்தனமான தன்மையைக் கொண்டுள்ளன. இந்த தொற்றுநோய் நாடெங்கிலும் ஆக்ரோஷமாக பரவி உள்ளது. இப்போதும் வேலையிலிருக்கும் மில்லியன் கணக்கானவர்களைப் பொறுத்த வரையில், வேலைக்குச் செல்வது என்பது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான தீவிர அபாயத்தை ஏற்பது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

இருப்பினும், இந்த அளப்பரிய நெருக்கடிக்கு மத்தியிலும் கூட, இந்த சிக்கலான நேரத்தின் போதும், சமூகத்தின் ஒரு சிறிய பிரிவு செல்வச் செழிப்பாகி உள்ளது.

வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர் தான், மார்ச் 23 இல், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 18,591 இல் நிறைவடைந்தது. கடந்த ஐந்து வாரங்களின் போது, இந்த தொற்றுநோயின் தீவிரம் குழப்பத்துடன் படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த நிலையில், பெப்ரவரி 13 இல் 29,551 புள்ளிகளில் இருந்த டோவ் அதிலிருந்து அண்மித்து 35 சதவீதம் சரிந்திருந்தது.

ஆனால் மார்ச் 23 இக்குப் பின்னர் இருந்து, இரண்டு எண்ணிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்துள்ளன: COVID-19 உயிரிழப்புகளும் மற்றும் (எஸ்&பி, நாஸ்டாக் போன்ற ஏனைய பிரதான சந்தை சராசரிகளுடன் சேர்ந்து) டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியும் ஆகும்.

மார்ச் 23 இல், அமெரிக்காவில் இந்த தொற்றுநோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தது. அதற்கடுத்த நான்கு நாட்களில், நிதி அமைப்புகளுக்கும் பெருநிறுவன அமைப்புகளுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் அதன் பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பை காங்கிரஸ் வேகவேகமாக நிறைவேற்றியது. “CARES Act” என்பது மார்ச் 27 இல் சட்டமாக அமுலாக்க கையெழுத்திடப்பட்டது. அதே நாளில், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 21,636 இல் நிறைவடைந்தது. இந்த பிணையெடுப்பு வரவிருந்த நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பே வெறும் நான்கு நாட்களில் அந்த சந்தையில் அண்மித்து 3,000 புள்ளிகளை அதிகரித்திருந்தன. ஆனால் மார்ச் 23 மற்றும் மார்ச் 27 க்கு இடையே, அமெரிக்காவில் இந்த தொற்றுநோயால் உயிரிழிந்தவர்களின் எண்ணிக்கை அண்மித்து மூன்று மடங்கு அதிகரித்து, 1,697 ஆக அதிகரித்திருந்தது.

மார்ச் 30, அந்த வாரத்தின் போது, அந்த தொற்றுநோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக வெடிப்பார்ந்து அதிகரித்தது. வெள்ளிக்கிழமை ஏப்ரல் 3 அளவில், பலியானவர்கள் எண்ணிக்கை 7,139 ஐ எட்டியது. அந்த வாரயிறுதி நெடுகிலும், ஊடகங்கள் இன்னும் வேகமாக இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்காக மக்களைத் தயாரிப்பு செய்ய முயன்று வந்தன. ஆனால் ஊடக வார்த்தைப்பிரயோகங்களின் தொனியில் அங்கே ஒரு மாறுபட்ட மாற்றமும் இருந்தது. “நம்பிக்கைக்கான அறிகுறிகள்,” “திருப்பமடைந்துள்ளது” தவிர்க்கவியலாத "நம்பிக்கை ஒளி" என்பது போன்ற வார்த்தைகள் ஊடகங்களின் பிரச்சார பக்கவாத்தியங்களின் பாகமாக ஆகியிருந்தன. ஏதேனும் விதத்தில் வேகமாக வேலைக்குத் திரும்புவதற்கான அதிகரித்தளவில் ஆக்ரோஷமான பிரச்சாரமும் இத்துடன் சேர்ந்திருந்தன.

அவ்வாரம் நெடுகிலும், இறப்பு எண்ணிக்கையில் வேகமான அதிகரிப்பானது சமூக துன்பியலின் விரிவடைந்து வரும் பரிமாணங்களை எடுத்துக்காட்டியது. அரசாங்கங்களால் ட்ரில்லியன் கணக்கான டாலர் வெகுமதி வழங்கப்பட்ட பங்குச்சந்தை சராசரிகளின் அதிகரிப்பானது இந்த நெருக்கடியிலிருந்து இலாபமீட்டவும் முன்பினும் அதிக செல்வ வளத்துடன் அதிக பலமாக மேலெழுவதற்குமான நிதியியல் உயரடுக்கின் எதிர்ப்பார்ப்பைப் பிரதிபலித்தது.

ஏப்ரல் 6 திங்கட்கிழமை வாக்கில், COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை 10,895 ஐ எட்டியது. டோவ் 22,679 இல் நிறைவடைந்தது. ஏப்ரல் 9 வாக்கில், இறப்பு எண்ணிக்கை 16,712 ஆக உயர்ந்தது. டோவ் 23,319 இல் நிறைவடைந்தது. நேற்று, மரண எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் 26,000 வரம்பைக் கடந்து அதிகரித்த நிலையில், முதலீட்டாளர்களும் ஊகவணிகர்களும் டோவ் ஜோன்ஸ் மேலும் 569 புள்ளிகள் அதிகரித்து 23,935 இனை சென்றடைந்ததைக் கண்டு குதூகலித்தனர்.

வாசகர் இந்த புள்ளிவிபரங்களைப் பொறுமையாக கவனிக்க வேண்டும். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, மார்ச் 23 இல் இருந்து COVID-19 தொற்றுநோய் அமெரிக்காவில் 25,000 க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது. அதே காலத்தில், டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 30 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

மேற்பரப்பில், அங்கே சந்தைகளின் இந்த அசாதாரண வேகமான அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கான எந்த பொருளாதார செய்திகளும் இல்லை. உண்மையில், கிடைக்கும் எல்லா தகவல்களும், இந்த தொற்றுநோயின் உலகளாவிய பாதிப்பு 1930 களின் பெருமந்தநிலை அளவுக்கு தீவிரமாகவும் நீண்ட காலத்திற்கும் இருக்குமென சுட்டிக் காட்டுகின்றன.

நேற்று காலை, “மாபெரும் அடைப்பு: பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார மந்தநிலை,” என்று தலைப்பிட்டு சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் எழுதிய அந்த அறிக்கை மேலோங்கிய நிலைமையை "வேறு எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு நெருக்கடி,” என்று விவரிப்பதுடன், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் நீண்டகால சரிவை முன்கணிக்கிறார். “இது, இந்த மாபெரும் அடைப்பை பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிக மோசமான பின்னடைவாக ஆக்குகிறது, மேலும் [2008-2009] உலகளாவிய நிதி நெருக்கடியை விட மிகவும் மோசமானதாக ஆக்குகிறது,” என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிடுகிறது:

இந்த தொற்றுநோய் நெருக்கடியால் 2020 மற்றும் 2021 இல் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான ஒட்டுமொத்த இழப்பு, ஜப்பான் மற்றும் ஜேர்மனியின் ஒருமித்த பொருளாதாரங்களை விட அதிகமாக, சுமார் 9 ட்ரில்லியன் டாலராக இருக்கும்.

வோல் ஸ்ட்ரீட்டின் பரவச நிலையைத் தூண்டியது தெளிவாக தற்போதைய பொருளாதார உத்தேச கணிப்புகள் எதுவுமில்லை; உலகளாவிய சுருக்கம் முன்பினும் படுமோசமாக அதிகரிக்கையில் தற்போதைய ஓட்டத்தை நீடித்து வைத்திருப்பதும் பெரிதும் சாத்தியமில்லை. ஆனால் தற்போதைக்கு, இந்த பரவச நிலையானது சுதந்திரமான ட்ரில்லியன் கணக்கான டாலர்களாலும் பெடரல் ரிசர்வ் வழங்கி வருகின்ற கண்காணிப்பில்லா பணத்தாலும் உந்தப்பட்டு வருவதுடன், செல்வவளத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் பைகளுக்குள் இன்னும் வேகமாக மாற்றுவதற்கு உதவும் விதத்தில் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் வர்க்க உறவுகளையும் மறுகட்டமைப்பு செய்வதற்கு அமெரிக்காவிலும் அத்துடன் ஐரோப்பாவிலும் இந்த நெருக்கடி பெருநிறுவன-நிதிய செல்வந்த தட்டுக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் இது உந்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பரவச நிலைக்கு எதிராக செயல்படும் மற்றொரு காரணியும் உள்ளது; அது அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதாரம் எவ்வாறு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும், செல்வ வளம் எவ்வாறு மறுபகிர்வு செய்யப்பட வேண்டும் என்பதன் மீது அதன் சொந்த கருத்துக்களை அபிவிருத்தி செய்து வரும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Trump, the media, and the COVID-19 disaster
[14 April 2020]

Biden joins the “back-to-work” bandwagon
[13 April 2020]

Trump’s campaign to reopen businesses risks hundreds of thousands of lives
[11 April 2020]

Fiction, reality and the global crisis of capitalism
[7 April 2020]

David North