தென் ஆசிய வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர், மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் மாதத்திலிருந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா உட்பட தென் ஆசியா முழுவதும் 700 க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை மற்றும் மழை தொடர்வதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 மில்லியன் மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவில், முக்கியமாக வட மாநிலங்களான அசாம், மேற்கு வங்கம், பீகார், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான அசாமில், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 87 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர், கோல்பாரா, பார்பேட்டா மற்றும் மோரிகான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாகும்.

பங்களாதேஷில், 2.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளனர் என்று நாட்டின் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது.

திங்களன்று, பங்களாதேஷின் சுகாதார சேவைகள் பொது இயக்குனர் 79 பேர் "வெள்ளம் தொடர்பான பிரச்சினைகளில்" கொல்லப்பட்டதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களில் 4,500 க்கும் மேற்பட்டோர் பல்வேறு நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

காத்மாண்டு போஸ்ட் இந்த வாரம் நேபாளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் மற்றும் வெள்ளத்தினால் பாலங்கள் உடைத்து தள்ளப்பட்டதனால் பல மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டன மற்றும் நிலச்சரிவுகளினால் நெடுஞ்சாலைகள் தடுக்கப்பட்டன என்றும் திங்களன்று, காத்மாண்டு பள்ளத்தாக்கு வழியாக செல்லும் வெள்ளத்தில் மூழ்கிய பாகமதி நதி, பல குடியிருப்பு மாவட்டங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது என்றும் அறிவித்தது.

செய்தித்தாள் மேற்கோள் காட்டிய வல்லுநர்கள் சமீபத்திய வெள்ள பேரழிவுகளின் தீவிரம் "இடையூறான நகரமயமாக்கல் மற்றும் பொறுப்பற்ற நில பயன்பாட்டினால்" ஏற்பட்டது என்றனர். இதற்கான அரசியல் பொறுப்பு அடுத்தடுத்த தேசிய மற்றும் உள்ளூர் நேபாள அரசாங்கங்களின் முடிவுகளில் தான் உள்ளது.

இந்திய மற்றும் பங்களாதேஷ் குடியிருப்பாளர்கள் மே மாதத்தில் இப்பகுதியை தாக்கி அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுடன் 260,000 வீடுகளை அழித்த அல்லது சேதப்படுத்திய ஆம்பன் சூறாவளியிலிருந்து மீள முயற்சிக்கும் போதுதான் பருவ மழை வெள்ளம் வந்தது. அந்த சூறாவளியில் இந்தியாவிலும் பங்களாதேஷிலும் குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சமீபத்திய பேரழிவு, தென் ஆசியாவில் COVID-19 ஏற்படுத்திய நாசகரமான அழிவுடன் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. நேற்று, இந்திய சுகாதார அதிகாரிகள் 1.24 மில்லியன் நோய்த்தொற்றுகள் மற்றும் 29,861 இறப்புகளை பதிவு செய்துள்ளனர், பங்களாதேஷில் இந்த புள்ளிவிவரங்கள் 216,000 க்கும் அதிகமான நோய்த்தொற்றுகளாகவும் 2,801 இறப்புகளாகவும் உயர்ந்துள்ளன. நேபாளத்தில் 18,241 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் மற்றும் 43 இறப்புகள் பதிவாகியுள்ளன.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் இந்த வார அறிக்கை ஒன்று சரியாக குறிப்பிட்டுள்ளது, அதாவது சமீபத்திய வாரங்களில் வீடுகள், சிறு வணிகங்கள், விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் அழிக்கப்பட்டதனால் மேலும் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் வாழ தள்ளப்படுவார்கள். அலட்சியமான அரசாங்க எதிர்வினைகள், COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அக்கறையின்மைக்கு இணையாக உள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவலுடன் வெள்ள நிலைமை குறித்து பேசினார், மேலும் மக்களுடன் தனது “ஐக்கியத்தை” வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பேரழிவுக்கும் அவர் அளித்த பதிலைப் போலவே, பொது மக்களின் ஆதரவை பெறுவதற்காக மோடி அர்த்தமற்ற முதலை கண்ணீரை வடித்தார்.

அசாமை தளமாகக் கொண்ட pratidintime.com வலைத் தளத்தின்படி, அந்த ஆண்டு மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தில் கணிசமான மனித மற்றும் பொருள் இழப்புகளை சந்தித்த போதிலும், 2014 முதல் இந்திய அரசாங்கத்தின் தேசிய பேரிடர் பதிலளிப்பு நிதியிலிருந்து மாநிலத்திற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

செவ்வாயன்று ஒரு வீடியோ மாநாட்டில், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரின் கஷ்டங்களையும் போக்க ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் கூறினார். இது வெற்று பகட்டு, உறுதியான விவரங்கள் எதுவுமில்லை, மேலும் பட்டினியைத் தவிர்க்க போராடும் நூறாயிரக்கணக்கானோருக்கு சிறிதும் உதவி செய்யாது.

குரிகிராம் மாவட்டத்தில் 300,000 க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதாகவும், குடிநீர், உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் புதன்கிழமை டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளத்தால் தப்பிய 48 வயதான சலேஹா பேகம், குடியிருப்பாளர்கள் “கடந்த எட்டு நாட்களாக ஒரு மனிதப் பண்பற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்” என்றும் “யாரும் உதவ முன்வரவில்லை.” என்றும் Star இடம் கூறினார்.

வெள்ளப் பேரழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய இறப்புகள், அழிவு மற்றும் வறுமை ஆகியவை தென் ஆசியாவில் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பருவமழை வெள்ளத்தால் குறைந்தது 600 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2017 ஆம் ஆண்டில், பிராந்தியத்தில் வெள்ளத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

சில தசாப்தங்களுக்குள், 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பங்களாதேஷ், புவி வெப்பமடைதலால் ஏற்படும் கடல் மட்ட உயர்வுகளினால் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதன் நிலங்களை இழக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் 18 மில்லியன் மக்கள் இடம்பெயர நேரிடும்.

கடந்த ஆண்டு மே மாதம், தென் சீன மார்னிங் போஸ்ட் எச்சரித்தது: “அதிகரித்து வரும் வெப்பநிலை, இமயமலை பனிப்பாறைகள் உருக காரணமாக இருந்தன, அது மழைக்காலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது. பனிப்பாறைகள் நீண்ட காலமாக, நிரந்தரமாக காணாமல் போவது யாங்சே, மீகாங் மற்றும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட முக்கிய ஆசிய நதிகளின் ஓட்டத்தை பாதிக்கும்.”

சிந்து, ஜீலம், செனாப், ரவி, சட்லுஜ் மற்றும் பியாஸ் ஆகிய ஆறு ஆறுகள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாய்கின்றன. இவற்றில் மூன்று ஜம்மு-காஷ்மீர் வழியாக செல்கின்றன. இதற்கிடையில், சிந்துவிலிருந்து வரும் நீர் இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்கிறது. கங்கையை இந்தியாவும், முன்னாள் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேஷும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஆறுகளில் மிகப்பெரியதான பிரம்மபுத்ரா, சீன கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திலிருந்து உருவாகி இந்தியா மற்றும் பங்களாதேஷ் வழியாக பாய்கிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் பிராந்திய முதலாளித்துவ உயரடுக்கினரால் தென் ஆசியாவில் திணிக்கப்பட்ட தன்னிச்சையான, ஜனநாயக விரோத மற்றும் பிற்போக்கு தன்மையுடைய 1947 வகுப்புவாத பிரிவினை, இந்த பேரழிவுகளை வெற்றிகாண ஒரு ஒருங்கிணைந்த மூலோபாயத்தை உருவாக்குவதை தடுக்கிறது. இந்த பரந்த பகுதியில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இயற்கை பேரழிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக, பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிகளுக்கு ஒரு முற்போக்கான, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்க முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசியல் சேவகர்களும் திராணி அற்றவர்களாக இருக்கின்றனர்.

இது நிகழக்கூடிய நிலைமைகளை உருவாக்க கூடிய சக்தி, தொழிலாள வர்க்கம் மட்டும் தான். அது முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தென் ஆசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிக்கவும் ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்குக்கு பின்னால் ஒன்றிணைந்து அணிதிரட்டப்பட்ட வேண்டும்.

Loading