இலங்கை: குமாரவடிவேல் குருபரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மனித உரிமை ஆர்வலரும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவருமான குமாரவடிவேல் குருபரன், ஜூலை 16 அன்று, தனது பதவியில் இருந்தும் பல்கலைக்கழகத்தில் இருந்தும் வெளியேறும் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும், தனிப்பட்ட சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்கு அவருக்கு இருந்த அனுமதியை ரத்து செய்ததை எதிர்த்து, குருபரன் நவம்பர் 23 அன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு எட்டு மாதங்களுக்கும் மேலாக விசாரிக்கப்படாததாலும், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடவிடாமல் தொடர்ந்தும் தான் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை இனி பொறுத்துக்கொள்ள முடியாததாலும் தான் ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக அவர் தனது பதவி விலகல் கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

குமாரவடிவேல் குருபரன்

நவம்பர் 9 அன்று, இராணுவம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பேரவை, குருபரன் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது. இராணுவத்தின் குற்றங்கள் மற்றும் கொழும்பு ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகும் குருபரனை அந்த வழக்குகளில் இருந்து நீக்குவதே இந்த தலையீட்டின் நோக்கம் ஆகும்.

1998 இல் இராணுவக் காவலில் இருந்த 24 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை சம்பந்தமான வழக்கில், இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி.சி. கெப்பெடிவலான குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆட்கொணர்வு வழக்கு, அந்த வழக்குகளில் பிராதன ஒன்றாகும்.

இதற்கு மேலாக, போரில் இறந்த தங்ககளது உறவினர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும், கொழும்பு அரசாங்கத்தின் இனவாத கொள்கைகளையும் சவால் செய்யும் பல சட்ட நடவடிக்கைகளுக்கு குருபரன் பங்களித்துள்ளார்.

குருபரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, இராணுவத்தை அடித்தளமாகக் கொண்டு, ஒரு சர்வாதிகார ஆட்சியை கட்டியெழுப்பும் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஜனநாயக-விரோத செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஜனாதிபதி ராஜபக்ஷ, ஒரு போர்க்குற்றவாளியான முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவை விடுதலை செய்து, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இராணுவத்திற்கு தண்டனையில் இருந்து விலக்களிப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார்.

இராணுவத் தளபதியின் சார்பில் பிரிகேடியர் ஈ.எஸ். ஜெயசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊழியரான குருபாரனுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்றும், அவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவது பல்கலைக்கழக அனுமதியுடனா, அப்படியாயின் எந்த அடிப்படையில், என்று வினவி இருந்தார்.

குற்றவாளித் தரப்பான இராணுவத்தின் மறைமுக அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, நவம்பர் 5 அன்று, அவருக்கு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதற்கான தனது அனுமதியை ரத்து செய்ய முடிவு செய்தது. நவம்பர் 9 அன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையும் இதே முடிவை எடுத்து குருபரனுக்கு அதை அறிவித்தது. வழக்குகளில் பங்குபற்றுவது அவரது விரிவுரை நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக இருக்கிறது என்பது ஒரு போலிக் காரணமாக மட்டுமே இருப்பதோடு, இராணுவம் தலையீடு செய்யும்வரை இத்தகைய கவலைகள் இருக்கவில்லை.

இந்த தீர்மானத்திற்கு வருவதற்கு முன்பு குருபரன் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 1, இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் குருபரனையும் ஏனைய வழக்கறிஞர்களையும் ஒளிப்படம் எடுத்தார். ஆகஸ்ட் 07 அன்று, குருபரன் நடத்தும் அடையாளம் மையத்தின் அலுவலகத்திற்கு வந்த பயங்கரவாத புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகள், அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை விசாரணை செய்துள்ளனர்.

குருபரனை இலக்காகக் கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு குவிந்த போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நவம்பர் 26 அன்று சட்ட பீட விரிவுரையாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் மற்றொரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

தனது ராஜினாமா கடிதத்தில், குருபரன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “பல்கலைக்கழக பேரவையின் தீர்மானம், கல்விசார் நிர்வாகத்தினதும் மற்றும் அவர்களது கற்கை நடவடிக்கைகளதும் சுதந்திரத்திற்காக பல்கலைக்கழகத்துக்கு உள்ள சுயாதீனத்தை வெட்கமின்றி காட்டிக் கொடுப்பதாகும். எந்தவொரு பல்கலைக்கழகத்தினதும் சிறப்பான நிலைமைக்கு கல்வி சுதந்திரம் இன்றயமையாததாகும்.” இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், குறைந்தபட்சம் பல்கலைக்கழக பேரவையோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அவரை வரவழைக்கவில்லை.

மேலும் அவர் எழுதியதாவது: “எனது மட்டுப்படுத்தப்பட்ட அனுபவத்தில், பல்கலைக்கழகத்தைப் பற்றிய என் கருத்து என்னவெனில், அது (பல்கலைக்கழகம்) சட்டபூர்வ தன்மை, நல்லாட்சி, கற்கை சுதந்திரம் மற்றும் மதிப்பு சம்பந்தமான அடிப்படைக் கொள்கைகளை நிலைநிறுத்த முழுமையாகத் தவறிவிட்டது. பல்கலைக்கழகமானது அது ஸ்தாபிக்கப்பட்டுள்ள “உண்மையை காண்பது என்பதே அறிவாகும்” என்ற குறிக்கோளின் அடிப்படையில் அன்றி, சுயநலக் கணக்கீடுகளின் அடிப்படையிலேயே ஆகும்.”

இராணுவத்தின் தலையீட்டின் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக விதிக்கப்பட்ட இந்தத் தடை, பல்கலைக்கழகங்களின் சுயாதீனம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலாகும்.

எவ்வாறாயினும், குருபரன் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடும் பல்கலைக்கழகங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய கொள்கைகள் எதையும் முதலாளித்துவ அமைப்பு சீரழிந்து வரும் காலகட்டத்தில், முதலாளித்துவ ஆட்சியின் கீழ் எதிர்பார்க்க முடியாது.

இந்த ஆண்டு ஜனவரியில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அங்கு இயங்கும் இராணுவ புலனாய்வு வலையமைப்பைப் பற்றி அம்பலப்படுத்தி, மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மே 18, 2019 அன்று, அரசுக்கு சொந்தமான சிலுமின செய்தித்தாள், முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரனை பற்றி, “பிரபாகரனை உயிர்த்தெழுப்ப முயன்று வீட்டிற்கு சென்ற யாழ்ப்பாண துணைவேந்தர்” என்று தலைப்பிட்டு, அவரை இராணுவம் பின்தொடர்ந்துள்ளதை பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியவாத அரசியலை தடை செய்யாமல் "தேசிய பாதுகாப்புக்கு" அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் நீக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவத்தை அனுப்பிய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம், மாணவர் விடுதிகள் மற்றும் மாணவர் சங்க அலுவலகங்களில் வலுக்கட்டாயமாக தேடுதல்களை நடத்தியது. இதன் போது, தமிழ் பிரிவினைவாத அரசியலில் ஈடுபட்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட "இராணுவ சீருடைகள்" வடிவமைப்பைப் பிரதிபலிக்கும் கமா டி-ஷர்ட்களை காட்டிய ஊடக செய்திகள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அர்த்தப்படுத்தின.

இந்த குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புக்காக என்ற பெயரில், மாணவர்களை மட்டுமன்றி, விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா தொழிலாளர்களை கூட கண்காணிக்க கூடியவாறு, பல்கலைக்கழக கட்டமைப்பு முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தப்பட்டன. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, மாணவர்கள் மற்றும் கல்விசாரா தொழிலாளர்கள் கடந்த காலங்களில் தொடர்ந்து வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இராணுவத்தின் நோக்கம், தங்கள் குற்றங்களை விசாரிக்கும் வழக்குகளில் இருந்து குருபரனை விலக வைப்பது மட்டுமல்லாமல், மற்ற வழக்கறிஞர்களை இதுபோன்ற வழக்குகளில் ஈடுபடக்கூடாது என்று அச்சுறுத்துவதும் ஆகும். இறுதியாக, ராஜபக்ஷ அரசாங்கமும் ஒட்டுமொத்த முதலாளித்துவமும் ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களின் மீது இதேபோன்ற கொடூரத்துடன் இராணுவத்தை ஏவிவிட விரும்புகின்றன. எனவே, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகளாக வேலை செய்யலாமா இல்லையா என்ற கேள்வி, அடிப்படை அச்சுறுத்தலை மூடிமறைப்பதற்கான ஒரு போர்வை மட்டுமே.

ஜனநாயக அடிப்படைகள் மீதான தாக்குதல், எதிர்காலத்தில் உருவாகும் தங்களது சொந்த போராட்டங்களை இலக்காகக் கொண்ட தாக்குதலாக இருப்பதால், குருபரனதும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்பட முழு பல்கலைக்கழக அமைப்பினதும் சுயாதீனத்திற்காகவும், போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பிற்காகவும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்க ஒடுக்கப்பட்ட மக்களும் நிபந்தனையின்றி முன்வர வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) இயக்கமும், குருபரனுக்கு எதிரான அரச வேட்டையாடலை கடுமையாக கண்டிக்கின்றன. அதை வேளை, குருபரன் பின்பற்றும் தமிழ் தேசியவாத பிற்போக்கு அரசியலுக்கு நாம் எந்த ஆதரவும் வழங்கவில்லை.

கோட்டாபய இராஜபக்ஷ அரசாங்கத்தின் இந்த கோழைத்தனமான நடவடிக்கைக்கு விரோதமான எதிர்ப்பை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்குள் ஒழுங்கமைப்பதற்கு, ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பு விடுக்கின்றது.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர் வழக்கறிஞராக செயற்படுவதை தடை செய்ய இராணுவம் தலையிடுகின்றது

[19 டிசம்பர் 2019]

சோசலிச புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது

[ஜனவரி 3, 2020]

Loading