முன்னோக்கு

பைடெனுக்கான போலி-இடது அனுதாபிகளும், “குறைந்த தீங்கு" அரசியலின் திவால்நிலைமையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்கா முன்னொருபோதும் இல்லாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ளது. ஏற்கனவே 235,000 அமெரிக்கர்களின் உயிரைப் பறித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய், முன்பில்லாதளவில் புதிய நோயாளிகள் எண்ணிக்கையுடன், வேகமாக பரவி வருகிறது. பத்து மில்லியன் கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளதுடன், பட்டினி, வறுமை மற்றும் வீடற்ற நிலைமையை முகங்கொடுக்கிறார்கள். கருத்துக்கணிப்புகளில் பின்தங்கியுள்ள ட்ரம்ப், வீதிகளில் பாசிசவாத வன்முறையைத் தூண்டிவிட்டும், மக்கள் வாக்கு முடிவுகளை நிராகரித்தோ அல்லது மாற்றியமைத்தோ பதவியிலேயே தங்கியிருக்க சூழ்ச்சி செய்து வருகிறார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சியும் அதனுடன் இணைந்த ஊடக நிறுவனங்களும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மொத்த சக்தியும் ஜோ பைடெனைத் தேர்ந்தெடுப்பதை நோக்கி திருப்பி விடப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

Democratic presidential candidate Joe Biden speaks at a union training center in Hermantown, Minn., September 18, 2020 [Credit: AP Photo/Carolyn Kaster]

இந்த நிலைப்பாடு ஜனநாயகக் கட்சியிடமிருந்து மட்டுமே வரவில்லை, மாறாக அதைச் சுற்றியுள்ள இடது அமைப்புகள் அல்லது வெளிவேட "சோசலிச" அமைப்புகளிடமிருந்தும் வருகின்றன. பைடெனுக்குச் சாத்தியமானளவில் மிகப்பெரும் வாக்குகள் பதிவாவதை உறுதி செய்வதில் முழு உத்வேகத்தைக் காட்ட சூளுரைத்து அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) தலைமை இம்மாத ஆரம்பத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டது. புதன்கிழமை மாலை WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் உடனான ஒரு இணையவழி விவாதத்தில், முன்னணி இடது கல்வித்துறையாளரும் DSA உறுப்பினருமான அடோல்ஃப் ரீட், “பைடென் வெற்றியைக் கொண்டு வர என்னவெல்லாம் செய்ய முடியுமோ, நிச்சயமாக, நாம் செய்தாக வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

பைடெனை ஆதரிக்கும் "இடது" வாதம் செவ்வாய்கிழமை நியூ யோர்க் டைம்ஸில் தலையங்கத்திற்கு அடுத்த பக்கத்தில் வெளியான பகுதியில் தொகுத்தளிக்கப்பட்டிருந்தது. நிறுவனம்சாரா பத்திரிகையாளர் ஜீசன் அலீம் எழுதியிருந்த அந்த கட்டுரை, “கூட்டத்தில் சோசலிஸ்டுகள் ஏன் பைடெனுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்ற தலைப்பில் அப்பத்திரிகையின் அச்சு பதிப்பில் பிரசுரமாகி இருந்தது.

அலீமிடமிருந்து ஒரு கட்டுரையை எழுதப் பெறுவதென, ஜனநாயகக் கட்சியின் பிரதான பத்திரிகையான டைம்ஸின் முடிவு, முதலாளித்துவத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பு மீதும் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டின் மீதும் அதிகரித்து வரும் விரோதம் மீதம் ஆளும் வர்க்கத்தினுள் நிலவும் பயத்தை எடுத்துக்காட்டுகிறது. அது இந்த கோபத்தைக் கட்டுப்படுத்தி வேறு திசையில் திருப்பி விட வேண்டிய வாதங்களை ஒழுங்குப்படுத்தி வருகிறது.

அலீம் வாதங்களில் புதிதாக ஒன்றும் இல்லை. நடுத்தர வர்க்க அரசியல், ஒரு பொதுவான சம்பிரதாயத்தைப் போல, மிகவும் குறுகிய பார்வையுடன் நடைமுறைவாத கணக்கீடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. சமூகத்தின் பொருளாதார அடித்தளங்கள் மீதான விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வு மீது அதன் அடித்தளத்தை அமைக்க தகைமையிழந்து, அரசின் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் வர்க்க நலன்கள் மீது எந்தவொரு தீவிர ஆய்வுமின்றி, அரசியல் கட்சிகளின் வேலைத்திட்டங்கள் மீது ஆழமான ஆய்வுகளை எதிர்த்து, முக்கியமாக மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்களை உருவாக்குவதில் வரலாற்று படிப்பினைகளைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சி மீதும் கோபத்துடன், குட்டி-முதலாளித்துவ அரசியல் பிரதிநிதிகள் ஆளும் உயரடுக்கையே சார்ந்து பின்தொடர்கிறார்கள்.

ஆளும் உயரடுக்கை அவர்கள் பொருளாதாரரீதியில் சார்ந்திருப்பது, ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டம் மற்றும் நோக்குநிலையை நெறிப்படுத்துவதற்கு அவர்கள் இலாயக்கற்று இருப்பதில் பிரதிபலிக்கிறது. நடுத்தர வர்க்க அரசியலின் இத்தகைய நன்கறியப்பட்ட பிற்போக்கான தன்மைகள், இவற்றின் மீது மார்க்சிஸ்டுகள் நிறையவே கவனத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுடன், தேர்தல்களை நோக்கிய அவர்களின் மனோநிலையில் வழமையாக அவர்களின் மிகவும் அற்பத்தனமான மற்றும் கோழைத்தனமான வெளிப்பாட்டைக் காண்கிறது. பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கின் அரசியலில் இருந்து அரசியல் சுயாதீனத்திற்கான எல்லா பாசாங்குத்தனங்களும் —சோசலிச வார்த்தைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கூட— கைவிடப்பட்டுள்ளன. “தீமை குறைவு" (lesser evilism) என்ற அரசியல் தவிர்க்கவியலாத தேவையாக பிரகடனப்படுத்தப்படுகிறது.

“சோசலிச இடதின் ஒரு பேராபத்தைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டியிருந்தால்,” அலீம் இவ்வாறு தொடங்குகிறார், “அது ஜனாதிபதி ட்ரம்பை விட மிகவும் கொடூரமான ஒருவரைக் குறித்து சிந்திக்க முடியாததாக இருக்கும்.” ஆனால் "இடதின் சில கால்வாசிப் பகுதிகளில் ஜோ பைடெனுக்கு வாக்களிப்பதில் தயக்கம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன,” என்றவர் கவலைப்படுகிறார்.

“இடதுசாரிகள்,” பைடெனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்கள் அதை உத்வேகத்துடன் செய்ய வேண்டும் என்று அலீம் வலியுறுத்துகிறார். “அரசியல்,” என்பது "சமூகத்தில்—மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையே, உயரடுக்குகளுக்கும் விளிம்பில் உள்ளவர்களுக்கும் இடையே—அதிகார சமநிலை சம்பந்தப்பட்டது,” என்றவர் எழுதுகிறார்.

பைடெனுக்கான வாக்கு, துல்லியமாக, எவ்வாறு சமூகத்தில் மூலதனத்திடமிருந்து உழைப்பாளிக்கு, “உயரடுக்குகளிடமிருந்து "விளிம்பில் இருப்பவர்களுக்கு" அதிகாரத்தை மாற்றும்? ஜனநாயகக் கட்சி என்பது என்ன, அது பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்கள் என்ன என்பதைக் குறித்து எந்தவொரு உண்மையான பகுப்பாய்வும் அலீமின் கட்டுரையில் முற்றிலுமாக காணவில்லை.

ஜனநாயகக் கட்சியானது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் ஒரு கட்சி. சொல்லப்போனால், தேர்தல் நெருங்குகின்ற நிலையில், மூன்றாம் காலாண்டில் பைடெனின் நிதி திரட்டலுக்கு நிதித்துறையிலிருந்து பெரும் பணம் பாய்ந்து உள்ளது, அந்த துறை இந்த மூன்றாம் காலாண்டில் ட்ரம்புக்கான 10 மில்லியன் டாலருக்கு எதிராக ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்திற்கு 50 மில்லியன் டாலருக்கும் அதிகமாக பங்களிப்பு செய்தது. தேர்தலை நோக்கி சந்தைகளின் மனோபாவம் குறித்து Politico சமீபத்தில், “ட்ரம்ப் பொருளாதார பேரழிவு குறித்து எச்சரிக்கையில், வோல் ஸ்ட்ரீட்டில் பைடென் மீதான மயக்கம் அதிகரிக்கிறது,” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டது.

கடந்த நான்காண்டுகளாக, ட்ரம்புக்கான ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு அவரின் பாசிசவாத அரசியல் மீது ஒருமுனைப்பட்டிருக்கவில்லை, மாறாக ரஷ்யாவுக்கு எதிராகவும் மற்றும் மத்திய கிழக்கிலும் இன்னும் அதிக இராணுவவாத வெளியுறவு கொள்கை கோரும் இராணுவ மற்றும் உளவுத்துறை முகமைகளின் செல்வாக்கான கன்னைகளது கோரிக்கைகள் மீது ஒருமுனைப்பட்டிருந்தது, இது பதவிநீக்க குற்றவிசாரணையின் தோல்வியில் போய் முடிந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னணி போர் குற்றவாளிகள் சிலரின் ஆதரவை பைடென் பெற்றுள்ளார் — இத்தகையவர்கள் உலகெங்கிலும் "விளிம்பில் உள்ளவர்கள்" மீது பேரழிவுகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்: சான்டினிஸ்டாக்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவிலான போரில் ஹோண்டுராஸிற்கான முன்னாள் அமெரிக்க தூதரும், ஈராக்கிற்கான முன்னாள் தூதரும் மற்றும் தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனருமான ஜோன் நெக்ரொபொன்ட்; புஷ்ஷின் கீழ் "இருட்டறை" சித்திரவதை கூடங்களைக் கட்டமைப்பதில் உடந்தையாய் இருந்த சிஐஏ இன் முன்னாள் இயக்குனர் மிக்கெல் ஹெடென்; 2003 ஈராக் படையெடுப்பின் முன்னணி வடிவமைப்பாளர்களில் ஒருவரான கொலின் பவெல்; மற்றும் இன்னும் எண்ணற்றவர்கள் உள்ளனர்.

இந்த பிரச்சாரக் குழுவைத் தான், “வருத்தமோ அல்லது தயக்கமோ இல்லாமல்—சற்று உற்சாகத்துடன் கூட" சோசலிசவாதிகள் ஆதரிக்க வேண்டுமென அலீம் முறையிடுகிறார்.

அலீமைப் பொறுத்த வரையில், பைடென் தேர்வாவது, “சோசலிசவாதிகள் தாக்குதலுக்குச் செல்லவும் மற்றும் அனைவருக்கும் மருத்துவக் கவனிப்பு முறை மீது அழுத்தமளிக்கவும்" மற்றும் ஒரு "புதிய பசுமை உடன்படிக்கை" செய்வதற்குமான நிலைமைகளை உருவாக்கி, “மாற்றுவதற்கேற்ற அரசியல் களத்தை" உருவாக்குமாம்.

ஆனால் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் கொள்கை சமூக சீர்திருத்த கொள்கையல்ல மாறாக கடுமையான சிக்கன நடவடிக்கை கொள்கையாகும். ஒபாமா நிர்வாகத்தின் எட்டாண்டுகள், இதில் பைடென் துணை ஜனாதிபதியாக இருந்தார், சமூக சீர்திருத்தத்திற்கான ஆண்டுகளாக இருக்கவில்லை, மாறாக 2008 பொருளாதார நிதியியல் நெருக்கடியைத் தொடர்ந்து செல்வவளத்தைப் பாரியளவில் செல்வந்தர்களுக்கு மாற்றுவதற்கானதாக இருந்தன என்பதை அலீம் குறிப்பிடவில்லை. சொல்லப் போனால், ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரத்தின் வலதுசாரி இராணுவவாத பண்புகளுடன் சேர்ந்து, ஒபாமாவின் பாரம்பரியம் தான், நடப்பு நடைமுறைக்கு ஒரு எதிர்ப்பாளராக தன்னை உணர்ச்சிகரமாக காட்டிக்கொள்ள ட்ரம்பை அனுமதித்தது.

CARES சட்டம் என்றழைக்கப்பட்ட, வோல் ஸ்ட்ரீட்டுக்கான பல ட்ரில்லியன் டாலர் மார்ச் மாத பிணையெடுப்பை, அண்மித்து ஒருமனதாக, ஜனநாயகக் கட்சி ஆதரித்தது என்பதையும் அலீம் குறிப்பிடவில்லை—பைடெனின் அனுதாபிகள் யாருமே குறிப்பிடவில்லை. பணக்காரர்களுக்குச் செல்வவளம் கைமாற்றப்பட்டதற்கு விலையாக, தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இலாபங்களை உறிஞ்சுவதற்காக வேலைக்கு மீண்டும் திரும்ப வேண்டுமென ஆளும் வர்க்கம் கோரி வருகிறது.

ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று முன்மொழிந்ததைத் தவிர, பரவி வரும் இந்த தொற்றுநோயைக் கையாள்வது குறித்தோ அல்லது அது உருவாக்கி உள்ள பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்வது குறித்தோ ஜனநாயகக் கட்சியினர் எதுவும் முன்மொழியவில்லை. குறிப்பாக, அலீமின் கட்டுரையில் "தொற்றுநோய்,” “கொரொனா வைரஸ்,” “வேலை வாய்ப்பின்மை,” “வறுமை,” “பட்டினி,” அல்லது "வீடற்ற நிலைமை,” என்ற வார்த்தைகள் ஒரு முறை கூட தென்படவில்லை. அல்லது போர் மற்றும் இராணுவவாதம் குறித்தும் அங்கே எந்த குறிப்பும் இல்லை.

பெருந்திரளான மக்கள் பைடெனுக்கு வாக்களிப்பது "போட்டி நிறைந்த காங்கிரஸ் சபையின் ஏனைய பதவிகளுக்கான போட்டிகளின் முடிவுக்கும் துணையாக இருக்கக்கூடும்" மற்றும் "செனட் சபையில் மீண்டும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டை பெறுவதை உறுதிப்படுத்த உதவும்,” என்று அலீம் வாதிடுகிறார். ஆனால் "காங்கிரஸ் சபையின் ஏனைய பதவிகளுக்கான" ஜனநாயகக் கட்சியினர் யார்? அத்தகைய வேட்பாளர்கள் பலரையும் மற்றும் காங்கிரஸ் சபையிலுள்ள ஜனநாயகக் கட்சியின் தற்போதைய பிரதிநிதிகளையும் WSWS பல இடங்களில் ஆவணப்படுத்தி உள்ளவாறு, இவர்கள் நேரடியாக இராணுவ-உளவுத்துறை முகமைகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள்.

இதற்கடுத்து, ட்ரம்ப் "நீதித்துறையை அரசியல்மயப்படுத்துவது மற்றும் போராட்டங்கள் மீது வன்முறையான ஒடுக்குமுறைகளுக்கு அழைப்பு விடுப்பது" உள்ளடங்கலாக, “ஜனநாயகத்திற்கு திரு. ட்ரம்ப் முன்நிறுத்தும் பிரத்தியேக அச்சுறுத்தல்களை" தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்க்க வேண்டியுள்ளது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. “தபால் வாக்குகளின் சட்டபூர்வத்தன்மை மீது அவர் கேள்வி எழுப்புவதும், அதை சிதைப்பதற்கான [அவரின்] முயற்சிகளும் இருக்கையில்,” “பாரியளவில் இடதுசாரி அணித்திரள்வு" அவசியப்படுகிறது என்று அலீம் எழுதுகிறார்.

உண்மையில் ட்ரம்ப் தபால் வாக்குகளின் சட்டபூர்வத்தன்மையை மட்டும் கேள்விக்குட்படுத்தவில்லை, அவர் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்காக ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒழுங்கமைக்க முயன்று வருகிறார். ஆனால் ட்ரம்பின் பாசிசவாத சூழ்ச்சிகளை எதிர்க்காமல், ஜனநாயகக் கட்சியினர் என்ன நடந்து வருகிறதோ அதை மூடிமறைக்கவும், அதற்கு எதிரான ஓர் அணித்திரள்வைத் தடுக்கவும் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகின்றனர். தேர்தலின் இந்த இறுதி வாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் அமி கொனெ பாரெட்டை வேக வேகமாக உள்நுழைத்ததற்கு ஜனநாயக கட்சியினர் எந்த எதிர்ப்பையும் முன்வைக்கவில்லை, அங்கே அப்பெண்மணி தேர்தல் முடிவுகளைச் சவால் விடுக்கும் ட்ரம்ப் வழக்குகளை அவர் தான் விசாரிக்க உள்ளார்.

தேர்தல்கள் “ஒரே குழுவின்" இரண்டு தரப்புகளுக்கு இடையே நடக்கும் "உள்கட்சி பூசல்" என்ற ஒபாமாவின் இழிவார்ந்த அறிக்கையிலிருந்து தொடங்கி, கடந்த நான்காண்டுகளாக, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்புக்கு எதிரான மக்கள் எதிர்ப்பைத் தடுக்க செயல்பட்டுள்ளனர். ட்ரம்புக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை ஊக்குவிக்கும் எதையொன்றையும் செய்யவோ அல்லது கூறவோ ஜனநாயகக் கட்சியினர் பீதியடைந்துள்ளனர், ஏனென்றால் இந்த எதிர்ப்பானது ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் அவர்கள் பாதுகாக்கும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் ஒரு பரந்த இயக்கமாக அபிவிருத்தி அடைய அச்சுறுத்தும்.

அலீம் அவரின் டைம்ஸ் கட்டுரையில், பைடெனை ஆதரிப்பதை எதிர்க்கும் "இடதின் மிகவும் விளிம்போர கண்ணோட்டத்தை" குறிப்பிடுகிறார். இங்கே அவர் மிகத் தெளிவாக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால், “திரு. ட்ரம்ப் போன்ற பிற்போக்குவாதிகளைத் தேர்ந்தெடுப்பது சோசலிசத்திற்குத் திரும்ப மக்களை ஈர்க்கும் விதத்தில் நெருக்கடியைத் தீவிரப்படுத்தும்" என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதுடன் "தேர்தல்களைப் புறக்கணிப்பதையும் அல்லது மூன்றாவது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதையும் நியாயப்படுத்துகிறார்கள்" என்று கூறி, உண்மையான மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாட்டை அவர் பொய்மைப்படுத்துகிறார்.

இதுவொரு அப்பட்டமான பொய், அலீமிற்கு இது தெரியும். உண்மையில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மற்றும் அதிவலதுக்கு எதிரான ஓர் உண்மையான போராட்டம், ஜனநாயகக் கட்சியை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அணித்திரட்டுவதன் மூலமாக மட்டுமே சாத்தியம் என்பதை மார்க்சிஸ்டுகள் வலியுறுத்துகிறார்கள்.

இறுதியாக, “இடது" “திரு. பைடெனுக்குத் தீவிரமாக வாக்குகளைப் பெறுவதன் மூலமாக அதன் சொந்த வாக்காளர்களின் எதிர்காலத்தை முதலீடு செய்கிறது,” என்று அலீம் வாதிடுகிறார். “காலமுறை தோறும் கிடைக்கக்கூடிய வாக்கு எண்ணிக்கையைக் குறித்து பயந்து கொண்டிருப்பதை விட ஒரு நிலையான ஆதரவுத்தளமாக" இருப்பதன் மூலமாக "[இடது] கட்சி ஸ்தாபகத்தின் மீது அதிக நெம்புதிறனைக் கொண்டிருக்கும்,” என்கிறார்.

இது எல்லாவற்றையும் விட படுகேவலமான வாதமாக உள்ளது. ட்ரம்புக்கான எதிர்ப்பை முடக்க ஜனநாயகக் கட்சியினர் அவர்களால் ஆன அனைத்தையும் செய்து கொண்டிருக்கையில், இடதிடமிருந்து எதிர்ப்பு வருகிறது என்றால் அவர்கள் கடுமையாக ஆகிவிடுகிறார்கள். 2020 தேர்தல்களில், ஜனநாயகக் கட்சியினர் இந்த தொற்றுநோய்க்கு இடையிலும் பத்தாயிரக் கணக்கான கையெழுத்துக்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மிச்சிகன், கலிபோர்னியா மற்றும் இதர மாநிலங்களில் சோசலிச சமத்துவக் கட்சி வாக்குச்சீட்டில் இடம் பெறுவதை முடக்கும் முயற்சிகளைச் செய்தனர். ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி திட்டத்தின் மத்திய இலக்குகளில் ஒன்றாக உள்ள, ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிலான மாநில அரசாங்கம் உள்ள மிச்சிகனில், அவர்கள், வேட்பாளரின் பெயரை எழுதி வாக்களிக்கும் எழுத்துபூர்வ வாக்குகளை (write-in votes) எண்ணுவதற்கான SEP பிரச்சாரத்தைத் தடுக்கவும் கூட முயன்று வருகின்றனர்.

பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்ட்டெஸ் போன்ற பிரமுகர்கள் ஜனநாயகக் கட்சியை இடதுக்கு மாற்றுவதில் வெற்றி பெற்றிருப்பதாக அலீம் வாதிடுகின்ற நிலையில், இதுவும் ஒரு பொய்யாகும். உண்மையில், ஜனநாயகக் கட்சி தலைமையில் சாண்டர்ஸ் எந்தளவுக்கு அதிகமாக தன்னை இணைத்துக் கொள்கிறாரோ, அந்தளவுக்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் பெரியளவில் அவமரியாதையுடன் கையாளப்படுகிறார்கள். உண்மையில் நான் தான் "சோசலிசவாதிகளைத் தோற்கடித்தேன்" என்று அறிவிக்க பைடென் அவரால் ஆன ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கையிலெடுக்கிறார்.

“குதர்க்க முறை மூலோபாயத்தைப் பயன்படுத்தும் இடது —அதிகாரத்தை ஜெயிக்க போராடும் இடது— அதன் போராட்டங்களையும் அதன் எதிரிகளையும் எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை அறிந்திருக்கும்,” என்று அறிவித்து அலீம் நிறைவு செய்கிறார். அவர் குறிப்பிடுகிறார், பைடெனுக்கு வாக்களிப்பது, “ஆடுகளத்தை மாற்றுவதற்கும் மற்றும் பலவீனமானவர்களுக்கு சற்று பாதுகாப்பு வழங்குவதற்கும் எளிய மற்றும் மிகவும் நம்பகமான வழிகளில் ஒன்று… திரு. பைடெனைப் பதவிக்குக் கொண்டு வர சோசலிசவாதிகள் "வெறித்தனமாக" போராட வேண்டும்—பின்னர் அவர் ஜனாதிபதி ஆனதும் அன்றைய தினத்திலிருந்து அவருக்கு எதிராக வெறித்தனமாக போராட வேண்டும்,” என்கிறார்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிய வைப்பதற்கான முயற்சியானது "அதிகாரத்தை வெல்வது" குறித்ததோ அல்லது சோசலிசத்தை அடைவது சம்பந்தமானதோ இல்லை மாறாக அதை தடுப்பதற்கானதாகும். இறுதியில், அலீம் குறிப்பிடும் "சோசலிசவாதிகள்", தங்களின் எதிர்காலம் மீது "முதலீடு செய்யும்" இவர்கள், சொத்துறவுகளில் மற்றும் செல்வவள மறுபங்கீட்டில் எந்த மாற்றத்தையும் உள்ளடக்காத ஒரு "சோசலிசம்" மீது பேராவல் கொண்ட ஜனநாயகக் கட்சியினுள் உள்ள நடவடிக்கையாளர்கள் ஆவர், இவர்கள் ஒருபோதும் அடைய முடியாத சிறிய சிறிய சீர்திருத்தங்களைத் தவிர வேறொன்றையும் முன்மொழியவில்லை என்பதோடு, அனைத்திற்கும் மேலாக இவர்கள் விசயங்கள் எவ்வாறு இருந்ததோ அதை அப்படியே திரும்ப கொண்டு வர முயல்பவர்கள்.

பைடென் அதிகாரத்திற்கு வந்தால், இவர்கள் "வெறித்தனமாக அவரை எதிர்க்க" மாட்டார்கள். SDSU நிகழ்வில் இந்த அறிக்கைக்கு விடையிறுத்து நோர்த் கூறுகையில், “ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியை முன்கொண்டு வர, அவரின் வேலைத்திட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், தொழிலாளர்களிடம் அவருக்கு வாக்களிக்க கூறுகிறீர்கள் என்றால், அவரை எவ்வாறு நீங்கள் 'வெறித்தனமாக எதிர்த்து போராட' முடியும், பின்னர் அவர் பதவிக்கு வந்ததும் அவரை எதிர்த்து வெறித்தனமாக போராட கூறுவீர்களா? பைடென் இல்லையென்றால் பின் நமக்கு பாசிசவாதிகள் தான் இருக்கிறார்கள் என்பதால் சரியானவர் திரும்ப வருவதை நாம் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என்பதே அடுத்த வாதமாக இருக்கும்,” என்றார்.

இது தான் நமக்கிருக்கிறது. இந்த வகையான அரசியலில் நமக்கு "சௌகரியமானதோ அல்லது மூலோபாயரீதியிலோ" எதுவும் இல்லை என்பதே இறுதியாக, அலீம் மற்றும் ஜனநாயகக் கட்சியிலுள்ள எண்ணற்ற ஏனைய அனுதாபிகளின் வாதமாக உள்ளது. தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் இதே வாதம் தான் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, இன்று ஜனநாயகக் கட்சியிடம் சரணாகதி அடைவது நேற்றைய விளைவைக் காரணங்காட்டி நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த தேர்தல்களில் அமெரிக்க தொழிலாளர்களும் உலகெங்கிலுமான தொழிலாளர்களும் முகங்கொடுக்கும் நிலைமை அவசரமானது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட முன்பில்லாத நெருக்கடி நிலைமைகளின் கீழ், பகிரங்கமாக பாசிசவாத மற்றும் எதேச்சதிகாரவாத வடிவ ஆட்சிக்குத் திரும்பி வரும் செல்வந்த தட்டுக்களின் ஒரு கன்னையை ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்கிறார். ஆனால் ட்ரம்ப் எங்கிருந்தோ வந்தவரும் இல்லை. அவர் நரகத்திலிருந்து வந்த அரக்கரும் இல்லை மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் விளைபொருளாவார்.

தொழிலாள வர்க்க நலன்களின் நெருக்கடிக்கு ஒரு தீர்வானது, ஒரு சோசலிச அரசியல் தலைமையைக் கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது. ஒரு தேர்தலில் தொழிலாளர்கள் அவர்கள் வாக்குகளை "தீமை குறைந்த" முதலாளித்துவ கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறுவதை விட வேறெதுவும் தொழிலாள வர்க்க நனவின் வளர்ச்சியை அழிப்பதாக இருக்காது என்பதை எல்லா வரலாற்று அனுபவமும் எடுத்துக்காட்டி உள்ளன.

பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகார ஆபத்தைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, “தீமை குறைவு" அரசியல் அதன் சொந்த வழியில் அதை தீவிரப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்க சேவையாற்றும் அது, ஜனவரியில் வெள்ளை மாளிகையில் யார் வந்தாலும், என்ன வரவிருக்கிறதோ அதற்கு முற்றிலும் தயாரிப்பின்றி இருக்க விட்டு வைக்கிறது. இந்த நெருக்கடிக்கு மேலோட்டமான மற்றும் பொய்யான தீர்வுகளை வழங்குவது பணியல்ல, மாறாக ஒருவரின் அரசியலை நெருக்கடி இயல்பைக் குறித்த விஞ்ஞானபூர்வ பகுப்பாய்வு மீதும், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்கள் மீதும் நிலைநிறுத்துவதே பணியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்த தேர்தல்களில், ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நோரிஸ்சா சான்டா குரூஸிற்கு எழுத்துபூர்வமாக வாக்களிக்குமாறும், அதிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சியில் இணையவும், தொழிலாள வர்க்கத்தின் ஓர் உண்மையான, புரட்சிகரமான, சர்வதேசியவாத சோசலிச இயக்கத்தைக் கட்டமைக்கவும் முடிவெடுக்குமாறு அதன் எல்லா ஆதரவாளர்களையும் கேட்டுக் கொள்கிறது.

Loading