கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட வேண்டும் என கோரும் மாணவர்களை பிரெஞ்சு பொலிசார் தாக்குகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளை மூடுமாறு கோரி நேற்று நடாத்திய ஆர்ப்பாட்டங்களை பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசார் கண்ணீர்ப்புகை அடித்து கலைத்தனர்.

ஒரு டஜன் பள்ளிகளில் பள்ளி நுழைவாயில்களின் போராட்டங்களும் முற்றுகைகளும் பதிவாகியுள்ளன. விடுமுறை இடைவேளையின் பின்னர் வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கையில் திங்கள்கிழமை தொடங்கிய ஆசிரியர் வேலைநிறுத்த அலைகளின் மறுநாளே அவை ஏற்பாடு செய்யப்பட்டன. டஜன் கணக்கான பள்ளிகளின் ஆசிரியர்கள், காலை 9 மணிக்கு சற்று முன்னர் உள்ளூர் கூட்டங்களை நடத்தினர் மற்றும் வைரஸ் பரவுவதை தத்ரூபமாகத் தடுக்க எந்த நெறிமுறைகளும் இல்லாத சூழ்நிலையில் வகுப்பறைகளுக்குள் நுழைய வேண்டாம் என வாக்களித்தனர்.

பாரிஸில், மாணவர்கள் Hélène-Boucher, Maurice Ravel, Sophie Germain மற்றும் Colbert பள்ளிகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர், நுழைவாயில்களை குப்பை கொட்டும் கொள்கலன்கள் மூலம் தடுத்தனர். 300 மாணவர்கள் கொண்ட ஒரு பெரிய போராட்டம் Saint-Nazaire இல் உள்ள Aristride-Briand பள்ளிக்குள் நுழைவதைத் தடுத்தது. Besançon இல் உள்ள Pasteur பள்ளிக்கு வெளியே முப்பது மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர், மேலும் மாணவர்கள் பாரிஸின் வடகிழக்கு Bobigny இல் உள்ள Delaune பள்ளியின் வாயிலுக்கு வெளியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"நாங்கள் இன்னும் காலை 8 மணிக்கு வகுப்பறைகளுக்கான நடைபாதைகளிலும், படிக்கட்டுகளிலும் ஒன்றாக நெரிசலில் இருக்கிறோம். இது முன்பு மாதிரியே" என்று ஒரு மாணவர் France Info க்கு தெரிவித்தார். "எல்லா ஜன்னல்களும் மூடப்பட்ட ஒரு வகுப்பில் நாங்கள் 36 பேர் இன்னும் இருக்கிறோம்," என்று மற்றொருவர் கூறினார்.

“கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாததைக் கண்டிக்க”, Hélène-Boucher பள்ளி மாணவர் அதன் நுழைவாயிலை மறிப்பதாக Actu Paris க்கு கூறினார். நாம் இங்கே இருக்கக்கூடாது. இங்கு வந்து வைரஸை பெற்று, அதை எங்கள் பெற்றோருக்கு பரவச் செய்யும் அபாயம் எங்களுக்கு உள்ளது.” அவர் இதை "மோசமான தனிமைப்படுத்தல்" என்று கண்டித்தார்.

பாரிஸின் மாணவர் Jean, RT பத்திரிகையாளர் Charles Baudry இடம் கூறினார்: “நாங்கள் இன்னும் அதே வகுப்புகளைத்தான் கொண்டுள்ளோம், அக்கம்பக்கமாக மாணவர்களால் நிரப்பப்படுகின்றன. மாணவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்றும், பொருத்தமான சமூக இடைவெளி பேணப்பட்டு பள்ளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம், ஏனெனில் இது அனைவரையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறது.”

மற்றொரு மாணவர் பிரான்ஸ் இன்ஃபோவிடம் கூறினார்: “நாங்கள் இன்னும் முகமூடி இல்லாமல் உடற்கல்வி செய்கிறோம், இருப்பினும் எங்கள் விளையாட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருந்தது. சிற்றுண்டி உணவகங்கள் மூடப்படவில்லை. நாங்கள் சிற்றுண்டி உணவகத்திற்குள் குறைந்தது 500 பேர் இருக்கிறோம், நாங்கள் அக்கம்பக்கமாக அமர்ந்து சாப்பிடுகிறோம்."

பள்ளிக்கு திரும்பிய முதல் நாளில் மாணவர்கள் வெளியே கூடுகிறார்கள்

ஆர்ப்பாட்டங்களை உடைக்க கவசங்களுடன் கூடிய பல ஆயுதமேந்திய கலகப் பிரிவு போலீசாரின் குழுக்கள் அனுப்பப்பட்டன. Colbert இல், 15 மற்றும் 16 வயதுடையவர்களுக்கு எதிராக பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். பொலிஸாரின் கலைந்துபோகும் உத்தரவுகளை மறுத்ததற்காக 60 மாணவர்கள் வரை இப்போது அபராதத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலை படமாக்கிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினர் கண்ணர் புகை அடித்தனர். ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான Clément Lanot ட்வீட் செய்ததாவது: “போலீஸ்காரரால் நான் அடையாளம் காணக்கூடியவராக இருந்தபோதிலும் (பத்திரிகை இலட்சனை கேமரா போன்றவை) பிற பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து கண்ணீர் புகை தாக்குதலுக்கு உள்ளானேன். பொலிஸ் தலையீட்டின் எல்லைக்கு வெளியே நாங்கள் இருந்தோம்; எல்லா போலீசாரும் முகமூடி அணிந்திருக்கவில்லை.”

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பதிலிறுப்பில் சம்பந்தப்பட்டுள்ள முற்றிலும் எதிரெதிரான வர்க்க நலன்களை, மக்ரோன் நிர்வாகத்தின் பொலிஸ் தாக்குதல் நிரூபிக்கிறது. பள்ளிகளை மூடுவது மற்றும் சுகாதார நெறிமுறைகள், கொடிய வைரஸ் பரவுவதைத் தடுப்பது மற்றும் உயிர்களைக் காப்பாற்றுவது உள்ளிட்ட விஞ்ஞானபூர்வ கொள்கைகளை மாணவர்களும் ஆசிரியர்களும் கோருகின்றனர்.

பெருநிறுவன உயரடுக்கின் சார்பாக செயல்படும் மக்ரோன் நிர்வாகம், பெற்றோர்களை வேலையில் இருக்கும்படி கட்டாயப்படுத்த பள்ளிகளைத் திறந்து வைப்பதில் உறுதியாக உள்ளது, இதனால் பெருநிறுவன இலாபங்கள் தொடர்ந்து பெருகும். பெயரைத் தவிர, மக்ரோன் நிர்வாகமும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள அதன் சகாக்களும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்" என்ற கொள்கையை பின்பற்றுகின்றன, இதனால் பள்ளிகள் வைரஸை பரப்ப அனுமதிக்கின்றன. பொலிஸ் அடக்குமுறை உட்பட இந்த குற்றவியல் கொள்கைக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு அது உறுதியாக உள்ளது.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களும் நேற்று தொடர்ந்தன. திங்கட்கிழமை நிலவரப்படி, வேலைநிறுத்தங்களை ஆசிரியர்கள் கீழ்மட்டத்தில் இருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆசிரியர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்கும், அது தங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே வளர்வதைத் தடுப்பதற்கும் தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் கடந்த வெள்ளிக்கிழமை முறையான முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டன.

வேலைநிறுத்தங்கள் குறிப்பாக பாரிஸின் வெளிப்புற வடக்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்தன, இந்த பகுதி அதிகளவு வறுமை, வளங்களின் பற்றாக்குறை மற்றும் குறைவான பணியாளர்களைக் கொண்டுள்ளன. Saint-Denis இல் உள்ள Triolet நடுநிலைப்பள்ளியில் அறுபது சதவீத ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அருகில் Stains இல் உள்ள Pablo Neruda நடுநிலைப் பள்ளியில், 38 ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், திங்களன்று அது 20 ஆக இருந்தது.

தெற்கு பிரான்சில் உள்ள Hérault இல், Jean Moulin, Poussan, Gignac, Villeneuve-lès-Maguelone மற்றும் Pierre Mendès France பள்ளிகளிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெறுகின்றன.

நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் உள்ள நிலைமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, Stylos rouges பேஸ்புக் குழுவில் கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர், மேலும் விருப்பம் தெரிவித்துள்ளனர் அல்லது பகிர்ந்துள்ளனர். மாணவர்கள் சமூக இடைவெளி இல்லாமல் அக்கம்பக்கமாக இருக்கும் தனது வகுப்பின் புகைப்படத்தை ஒரு ஆசிரியர் வெளியிட்டார், "உத்தியோகபூர்வ சுகாதார நெறிமுறைகள் வழங்கப்பட்ட ஒரு அறையில் இங்கே ஒரு வகுப்பு உள்ளது" என்று அதில் கருத்து எழுதப்பட்டுள்ளது.

Stylos rouges பேஸ்புக் குழுவில் அவரது ஜேர்மன் மொழி வகுப்பு மாணவர்களைக் காட்டும் படத்தை ஒரு ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.

மற்றொரு ஆசிரியரான Morgane கருத்துத் தெரிவிக்கையில்: “ஆகவே, ஒரு இறுதிச் சடங்கில் 30 பேருக்கு மேல், திருமணத்திற்கு ஆறு பேருக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் ஒரு வகுப்பறையில் 32 பேர்??? சிறிய குழந்தைகளை முகமூடி அணியச் செய்கையில் வயதான பராமரிப்பு இல்லங்களுக்கு வருகை அனுமதிக்கப்படுகிறது? இது முட்டாள்தனம் மட்டுமல்ல எமது குழந்தைகளின் மீதான நிறுவன ரீதியான துஷ்பிரயோகமும் ஆகும்.”

Bérenice மேலும் கூறினார்: “எனது பள்ளியில் சிவப்பு நாற்காலிகளையும் நீல நாற்காலிகளையும் கலக்க எங்களுக்கு அனுமதி இல்லை. அதைத்தவிர எல்லாமே ஒன்றுதான் [சமூக தனிமைப்படுத்தலுக்கு முன்பு இருந்ததைப்போல].” Olivier கூறினார், "வைரஸ் பரவலுக்கு இந்த அமைச்சர் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பைக் கொண்டுள்ளார்." மற்றொரு ஆசிரியை Anissa, "நான் இதைச் செய்ய விரும்பினேன் [அவருடைய வகுப்பின் புகைப்படத்தை எடுக்க] ஆனால் நான் தைரியம் கொள்ளவில்லை."

Geneviève கூறினார்: “எங்கள் வகுப்பில் CM2 [ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு] இல் 31 பேர் இருக்கிறார்கள்… விரைவில் 32! ஆயினும்கூட சுகாதார அமைச்சர் கூறுகையில், பெரும்பாலான வகுப்புகளில் அதிகபட்சம் 25 மாணவர்கள்தான் உள்ளனர். … விதிவிலக்குகள் விதியை மிஞ்சுகிறது.”

மக்ரோன் அரசாங்கத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு நெறிமுறைகளின் அட்டைப்படத்தில் ஒரு வகுப்பறையில் நான்கு மாணவர்களின் படம் மட்டுமே இருந்தது, அவர்களுக்கு இடையே ஒரு மீட்டருக்கும் அதிகமான பிரிப்பு இருந்தது என்று Grégoire குறிப்பிட்டார். "ஒரு நல்ல ஆத்திரமூட்டல் மற்றும் ‘பலப்படுத்தப்பட்ட’ நெறிமுறையின் பக்கத்திற்கான விளக்கப்படத்தின் நியாயமான தேர்வு” என்று அவர் எழுதினார்.

அரசாங்கத்தின் பள்ளி சுகாதார வழிகாட்டுதல்களின் அட்டைப்படத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கற்பனையான வகுப்பறை படம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான விஞ்ஞானபூர்வ கொள்கைகளுக்கான தங்கள் போராட்டத்தை ஒழுங்கமைக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளைக் கண்காணிப்பதற்கும், சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைகளுக்கு எதிராக, எதிர்-தாக்குதலை தயாரிப்பதற்கும் பள்ளிகளுக்குள் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை கல்வியின் முறையான நிதியுதவியை குறைப்பதற்கும் மற்றும் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கான நிலைமைகளை உருவாக்கிய பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கும் மக்ரோன் நிர்வாகத்துடன் ஒத்துழைத்துள்ளன.

இதற்கு பள்ளி குழுக்களால், பள்ளிகளை மூடுவதையும், சுகாதாரப் பாதுகாப்பு நெறிமுறைகளை அமல்படுத்துவதையும் கோரும் கூட்டு வேலைநிறுத்த நடவடிக்கைக்காக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முறையீடு செய்ய வேண்டும். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும், ஆளும் வர்க்கத்தின் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க மூலோபாயமானது அதன் சொந்த இலாப நலன்களின் பலிபீடத்தின் மீது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை பலியிடுகிறது.

Loading