உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்ததை கூகுள் ஒப்புக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 28 அன்று செனட் விசாரணைக்கு முன் ஒரு அறிக்கையில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் (Alphabet) தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை, ஆதிக்கம்மிக்க வலைத் தள தேடல் நிறுவனம் உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

செனட் வர்த்தகக் குழுவின் விசாரணையில், உட்டாவின் குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ, கூகுள் தணிக்கை செய்த ஒரு இடதுசாரி “உயர்மட்ட நபர் அல்லது நிறுவனம்” ஒன்றின் பெயரை வழங்குமாறு கேட்டபோது, பிச்சை WSWS இனை குறிப்பிட்டார்.

மூன்று உயர் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளான பிச்சை (கூகுள்), மார்க் சக்கர்பேர்க் (பேஸ்புக்) மற்றும் ஜாக் டோர்சி (ட்விட்டர்) ஆகியோரின் சாட்சியங்களை உள்ளடக்கிய இந்த விசாரணை, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுவால் அழைக்கப்பட்டது. 2020 தேர்தல்களுக்கு முன்னதாக இணையம் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களால் வலதுசாரி மற்றும் பழமைவாத வெளியீட்டாளர்கள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளனர் என்ற தமது பொய்யான கூற்றினை நியாயப்படுத்துவதற்கு இந்த குழுவிற்கு குடியரசுக் கட்சியினரால் அழைப்புவிடப்பட்டது.

கேள்வி கேட்க தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், செனட்டர் லீ மூன்று நிர்வாகிகளிடம் பின்வருமாறு கேட்டார், “நீங்கள் எப்போதுமே தணிக்கை செய்கிறீர்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. அதாவது பழமைவாத, குடியரசுக் கட்சி, கருக்கலைப்பிற்கு எதிரான நபர்கள் அல்லது குழுக்கள் அல்லது நிறுவனங்களின் உள்ளடக்கத்தை தடுத்தல், உண்மைச் சரிபார்ப்பு அல்லது உள்ளடக்கத்திற்கு அடையாளமிடல் அல்லது வலைத் தளங்களை செல்லாததாக்குதல் போன்றவற்றை செய்கிறீர்கள். ... நீங்கள் தணிக்கை செய்த தாராளவாத சித்தாந்தவாத ஒரு உயர்ந்த நபர் அல்லது நிறுவனத்தை நீங்கள் பெயரிட முடியுமா, நீங்கள் என்ன குறிப்பிட்ட நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்றும் அக்குழு கேட்டது.

கூகுள் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை வாஷிங்டனில் அக்டோபர் 28, 2020 செனட் வர்த்தக குழு முன் ஒரு விசாரணையின் போது தொலைதூரத்தில் இருந்து ஒரு திரையில் தோன்றுகிறார். [Photo credit: Michael Reynolds/Pool via AP]

பின்னர் ஒரு பட்டியலை வழங்குவதாகக் கூறி டோர்ஸி மற்றும் சக்கர்பேர்க் இருவரும் பெயர்களைக் கொடுக்க மறுத்துவிட்டனர். லீ பிச்சையை கேட்டபோது, கூகுள் நிர்வாகி பதிலளித்தார், "எங்களிடம் நிதானமான கொள்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சமமாக அனைவருக்கும் பயன்படுத்துகின்றோம் ... எங்களுக்கு ஒரு இடது சார்பான வெளியீடான உலக சோசலிச மதிப்பாய்வு [மூலத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது] உடன் குற்றச்சாட்டு விடயங்கள் உள்ளன” என்றார்.

நாம் 2011 இல் வெளியீட்டை நிறுத்திய அச்சு செய்திமடலான “உலக சோசலிச மதிப்பாய்வு” (World Socialist Review) என்ற பெயரைப் பிச்சை பயன்படுத்தினாலும், அவர் உலக சோசலிச வலைத் தளத்தைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. உண்மையில், “உலக சோசலிச மதிப்பாய்வு” என்பதற்கான கூகுள் தேடல் உண்மையில் உலக சோசலிச வலைத் தளத்தை அதன் முதல் இரண்டு முடிவுகளில் தருகிறது.

"குற்றச்சாட்டு விடயங்கள்" என்பதன் அர்த்தம் என்னவென பிச்சை விளக்கவில்லை. ஆனால் செனட்டர் லீக்கு அவர் அளித்த பதில் முற்றிலும் தெளிவாக இருந்தது. கூகுள் உண்மையில் இடதுசாரி மற்றும் சோசலிச வெளியீட்டாளர்களுக்கு எதிராக தணிக்கை நடவடிக்கை எடுக்கும் என்று அவர் சொன்னார். அதற்கு ஒரு உதாரணம் உலக சோசலிச வலைத் தளத்தின் தணிக்கை ஆகும்.

கூகுள், உலக சோசலிச வலைத் தளத்தின் உள்ளடக்கத்தை அடக்குகிறது என்று பிச்சை அளித்த அசாதாரண ஒப்புதல், 2017 ஆம் ஆண்டு வசந்த காலத்திலிருந்து இணைய தணிக்கைக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடங்கிய பிரச்சாரத்திற்கான நிரூபணம் ஆகும்.

ஏப்ரல் 2017 இல், கூகுள் ஒரு புதிய தேடல் நெறிமுறையை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, உலக சோசலிச வலைத் தளம் அதன் உள்ளடக்கம் மற்றும் பிற இடதுசாரி, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கான வலைத் தளங்களுக்கான அணுகல் பெரிதும் தணிக்கை செய்யப்படுவதாக அறிவித்தது. ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், 13 வலைத் தளங்களுக்கான போக்குவரத்தை கூகுள் 19 சதவிகிதத்திற்கும் 67 சதவிகிதத்திற்கும் இடையில் குறைத்துள்ளதைக் காட்டும் தரவை உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டது. இத்தரவு, “உலக சோசலிச வலைத் தளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டியது. கூகுள் தேடல்களிலிருந்து அதன் தகவல் பரிமாற்றம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது.” என குறிப்பிட்டது.

கூகுளின் தேடல் நெறிமுறையை மாற்றியமைப்பதை, "ஜனநாயக உரிமைகளை கடுமையாகக் வெட்டுவதற்கான ஒரு பெருநிறுவன-அரசு சதி" என்று உலக சோசலிச வலைத் தளம் வகைப்படுத்தியது. பின்னர் பொதுமக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கு இதுபற்றி எச்சரிக்க, "சோசலிச, இடது மற்றும் முற்போக்கான வலைத் தளங்களிடையே பரந்த அடிப்படையிலான ஒத்துழைப்பு வேண்டும்" என அழைப்புவிட்டது.

இந்த ஆய்வின் பின்னர் இணைய தணிக்கையை நிறுத்தக் கோரி கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் நிர்வாகத் தலைமைக்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆகஸ்ட் 25, 2017 அன்று பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார். "உலக சோசலிச வலைத் தளத்தை கறுப்பு பட்டியலிடுவதையும் மற்றும் உங்கள் புதிய பாரபட்சமான தேடல் கொள்கைகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இடதுசாரி, சோசலிச, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கான வலைத் தளங்களின் தணிக்கை கைவிட வேண்டும்" என்று அந்தக் கடிதம் கூகிளுக்கு அழைப்புவிட்டது.

உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான தணிக்கை, “ஒரு உண்மையான சோசலிச முன்னோக்கு, நியாயமாக பலரால் அறியப்படுவது அனுமதிக்கப்பட்டால், அது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பரந்த பார்வையாளர்களைக் கண்டுகொள்ளும் என்ற அச்சத்தை பிரதிபலிக்கிறது” என்று பகிரங்க கடிதம் மேலும் கூறியுள்ளது. பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தை நசுக்குவதற்கான உங்கள் முயற்சிகளுக்கு பரவலான மக்கள் எதிர்ப்பு உள்ளது.”

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, உலக சோசலிச வலைத் தளம் ஒரு இணைய வழியிலான மனுவை விநியோகித்தது. அதற்கு 70 நாடுகளிலும் ஐந்து கண்டங்களிலும் வாசகர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கையொப்பங்களை பெற்றது.

பகிரங்க கடிதத்திற்கு கூகுள் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை என்றாலும், நியூ யோர்க் டைம்ஸ் செப்டம்பர் 26, 2017 அன்று Daisuke Wakabayashi எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் டேவிட் நோர்த் உடனான நேர்காணல் இடம்பெற்றது மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் பிரச்சாரத்தைப் பற்றி விவாதித்தது. பின்னர், ஒரு இரண்டாவது கட்டுரையில், கூகுள் தணிக்கை செய்வதில் ஈடுபட்டுள்ளது என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் கூற்றுக்களை மதிப்பிழக்க செய்ய டைம்ஸ் முயற்சித்தது.

நவம்பர் 2019 இல், வோல் ஸ்ட்ரீட் ஜேர்ல் உலக சோசலிச வலைத் தளத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி, கூகுள் அதன் தேடுபொறியால் உள்ளடக்கங்கள் மேலே வெளிப்படுத்துவதை அடக்குவதற்காக அதன் தேடல் வழிமுறையை தவறாக கையாளுகிறது. "அவ்வாறு செய்வதை பகிரங்கமாக மறுத்த போதிலும், கூகுள் சில தளங்களை அகற்ற அல்லது மற்றவர்கள் சில வகையான முடிவுகளில் வெளிவருவதைத் தடுக்க தடுப்புப்பட்டியல்களை வைத்திருக்கிறது" என எழுதியது.

ஜனவரி 20, 2020 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் “நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டத்திற்கான தேடல் முடிவுகளில் உலக சோசலிச வலைத் தள உள்ளடக்கத்தை கூகுள் அடக்குகிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. கூகுள் தேடல் முடிவுகளில் “1619 திட்டம்” என அழைக்கப்படும் வரலாற்று பொய்மைப்படுத்தல் குறித்து உலக சோசலிச வலைத் தளத்தினால் வெளியிடப்பட்ட ஆளுமைமிக்க மற்றும் பரவலாக வாசிக்கப்பட்ட கட்டுரைகள் கூகுள் தேடல் முடிவுகளில் அடக்கப்படுவதாக இந்த கட்டுரை சுயாதீன தரவு பகுப்பாய்வு மூலம் காட்டியது.

பிச்சையின் சமீபத்திய அறிக்கை, காங்கிரஸின் சாட்சியத்தில் உலக சோசலிச வலைத் தளத்தை அவர் இரண்டாவது முறையாக தவறாக பெயரிட்டுள்ளார். “அமசன், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் கூகுளின் ஆதிக்கத்தை ஆராய்வது” என்ற தலைப்பில் ஜூலை 29 அன்று நீதித்துறை காங்கிரஸ் குழுவின் விசாரணையில், குடியரசுக் கட்சியின் காங்கிரஸ்காரர் கிரெக் ஸ்டீபவின் கேள்விக்கு பிச்சை இதேபோல் பதிலளித்தார்.

கூகுளின் வழிமுறைகள், பழமைவாத அரசியல் பார்வைகளை இணையத்தில் பிரத்தியேகமாக தணிக்கை செய்வதாக ஸ்டீப கூறியபோது, பிச்சை பின்வருமாறு கூறினார், “நாங்கள் பாதை முழுவதும் புகார்களைப் பெறுகிறோம். எடுத்துக்காட்டாக, உலக சோசலிச மதிப்பாய்வு [மூலத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது] இந்த ஆண்டு ஜனவரியில் கூகுள் தேடல் முடிவுகளில் தங்கள் தளம் காணப்படவில்லை என்று புகார் கூறியது. எனவே, நாங்கள் புகார்களைப் பெறுகிறோம், நாங்கள் அதைப் பார்க்கிறோம், ஆனால் நாங்கள் எங்கள் வேலையை ஒரு பாரபட்சமற்ற முறையில் அணுகுவோம், மேலும் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்கு சேவை செய்வதுதான் எங்கள் நீண்டகால தூண்டுதலாக இருக்கிறது” என்றார்.

அவர் அதை விளக்கவில்லை என்றாலும், "1619 திட்டம்" பற்றிய உள்ளடக்கம் அடக்கப்படுவதாக ஜனவரி மாதம் உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்தியது, பிச்சை காங்கிரஸ் குழு முன் அளித்த அறிக்கையில் தெளிவாக இருந்தது.

இந்த பகிரங்க ஒப்புதல், ஜூலை 31 அன்று உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்திடம் இருந்து தலைமை நிறைவேற்று அதிகாரி பிச்சைக்கு எழுதப்பட்ட இரண்டாவது பகிரங்க கடிதத்தின் பின்னர் வந்தது. இந்த பகிரங்க கடிதம் இவ்வாறு கூறியது: “உங்களால் காங்கிரஸில் வழங்கப்பட்ட சாட்சியத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் புகாரை நீங்கள் குறிப்பாக குறிப்பிட்டுள்ளமை, இந்த விடயம் எவ்வளவு தீவிரமாக எடுக்கப்பட்டட்டிருக்கின்றது என்பதை காட்டுகின்றது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியான உங்களுக்கு புகார் குறித்து அறிவிக்கப்பட்டது. கட்டுரை வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னரும், அது உங்கள் நினைவில் நிலைத்திருக்கின்றது” என்று குறிப்பிட்டது.

பின்னர் டேவிட் நோர்த் கேட்டார், "உலக சோசலிச வலைத் தளத்தின் ஒடுக்குமுறை பற்றிய உரிமைகோரல் ஆல்பாபெட் / கூகுள் நிர்வாகத்திற்குள் விவாதிக்கப்படுவதாகவோ அல்லது எங்கள் புகாரில் விசாரணை நடத்தப்படுவதாகவோ ஏன் தெரிவிக்கவில்லை?" பிச்சையோ அல்லது கூகுள் நிர்வாகத்திலிருந்து வேறு எவராயினும் இந்த கேள்விக்கோ அல்லது பகிரங்க கடிதத்திற்கோ பதிலளிக்கவில்லை.

மூன்று வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கவோ அல்லது ஒரு கோரிக்கைக்கு பதிலளிக்கவோ மறுத்துவிட்டபின், தலைமை நிறைவேற்று அதிகாரி பிச்சை, உலகளாவிய தேடல் போக்குவரத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் உலக சோசலிச வலைத் தளத்தின் உள்ளடக்கத்தை ஒடுக்கி வருவதாக ஒப்புக் கொண்டார்.

உலக சோசலிச வலைத் தளத்தை ஏன் கூகுள் தணிக்கை செய்கிறது? ஏனென்றால், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கும் மற்றும் உலக அளவில் முதலாளித்துவ அமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் போராடும் உண்மையான மார்க்சிச மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தின் ஒரே இணையவழி மூலமாக உலக சோசலிச வலைத் தளம் உள்ளது. உலகளாவிய தொற்றுநோயால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கம் அதிகரித்தளவில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான சோசலிச அரசியல், தத்துவார்த்த மற்றும் கலாச்சார கல்வியின் மையமாகி வருகிறது.

அமெரிக்க உளவுத்துறையுடன் ஆல்பாபெட் மற்றும் கூகுள் கொண்டுள்ள ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு, பிச்சையின் அறிக்கை அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்கான ஒரு செய்தியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக அது அவரை மேலும் கேள்விகளை கேட்கவில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் மீதான தணிக்கை தொடரும் மற்றும் எதிர்வரவிருக்கும் காலகட்டத்தில் தீவிரமடையும்.

விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசான்ஜின் சுதந்திரத்திற்கான போராட்டம் போலவே, இணையவழி தணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கோரிக்கையும், இணையத்தில் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை ஜனநாயக உரிமைகளாகும்.

மேலதிக வாசிப்புக்கு

கூகுளுக்கு ஒரு பகிரங்க கடிதம்: இணைய தணிக்கையை நிறுத்து! உலக சோசலிச வலைத் தளத்தை இருட்டடிப்பு செய்வதை நிறுத்து!

25 August 2017

உலக சோசலிச வலைத் தளத்தின் முதன்மை 45 தேடு சொற்களில் ஒவ்வொன்றையும் கூகுள் தடுத்தது

4 August 2017

இடதுசாரி வலைத் தளங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான கறுப்புபட்டியலிடலை கூகுள் தீவிரப்படுத்துகிறது

20 October 2017

Loading