இந்திய டொயோட்டா தொழிலாளர்கள் விரைவுபடுத்தலுக்கு எதிராக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவிலிருந்து (முன்னர் பெங்களூர்) சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் பிடாடியில் உள்ள இரண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) கார் அசெம்பிளி ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநில அரசாங்கத்தின் வேலைக்கு திரும்பும்படி கோரும் உத்தரவை மீறி நான்கு வார கால வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்.

பூகோள போட்டித்திறன் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்காக 80,000 க்கு பதிலாக ஒரு மாதத்திற்கு சுமார் 100,000 கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற TKM கோரிக்கையை தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர்.

TKM இல் மொத்தம் 6,500 பணியாளர்கள் உள்ளனர். இதில் 3,460 தொழிற்சங்கமயப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அசெம்பிளி உற்பத்தி வரிசையில் பணிபுரிகின்றனர். மீதமுள்ள ஊழியர்களில் மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் பலர் டொயோட்டாவின் செஞ்சி ஜென்புட்சு (நீங்களே சென்று பாருங்கள்) தத்துவத்தின் கீழ், குறிப்பாக வேலைநிறுத்தங்களை முறியடிக்க அசெம்பிள் வரிசையில் பணியாற்ற வேண்டும்.

வேலைநிறுத்தம் செய்யும் டொயோட்டா தொழிலாளர்கள் கதவடைக்கப்பட்டு ஆலைக்கு வெளியே உள்ளனர்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட TKM ஊழியர் சங்கத்தின் (TKMEU) தலைவர் உமேஷ் கவுடா ஆலூரை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி தொழிலாளர்கள் நவம்பர் 9 அன்று உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். தாங்கமுடியாத பணிச்சுமை குறித்து தொழிலாளர்களின் பெருகிவரும் கோபத்தை நிர்வாகத்திடம் எழுப்பியதற்காக அவர் பழிவாங்கப்பட்டார். நிர்வாகம் மறுநாள் ஒரு கதவடைப்பை திணித்தது, தொழிலாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றுவதற்காக COVID-19 சமூக இடைவெளி வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தியது. தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக, ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் கூட, TKM மேலும் 39 பேரை "முறைகேடான செயல்களுக்காக" என்ற பெயரில் பணி இடைநீக்கம் செய்தது.

இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளுக்கும் இந்த வேலைநிறுத்தம் பரவுவது குறித்து பெருவணிகம் கவலை கொண்டுள்ளது. கர்நாடக முதலாளிகள் சங்கத் தலைவர் பி.சி. பிரபாகர், ”பிடாடி வளாகத்தை சுற்றி ஊரடங்கு உத்தரவை அறிவிக்க உடனடி நடவடிக்கைகள்" என்று மாநில தலைமைச் செயலாளர் டி.எம். விஜய் பாஸ்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார், "குழப்பம் விளைவிப்பவர்களை கைது செய்வது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவர்கள் பிடாடி பகுதிக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை எடுக்கும்படி கோரியுள்ளார்.

இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான கர்நாடக மாநில அரசு வேலைநிறுத்தத்தை தடை செய்தது, அதே நேரத்தில் நவம்பர் 18 முதல் நிறுவனத்தின் கதவடைப்பை நிறுத்த வேண்டும் என்றும் கோரியது. நிறுவனம் அரசாங்க உத்தரவை பற்றிக் கொண்டு தனது சொந்த விரைவுபடுத்தல் நிலைமைகளின் கீழ் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்பும்படி நிர்ப்பந்தித்தது. தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தபோது, நவம்பர் 23 அன்று மாநில அரசாங்கத்தின் உடந்தையுடன் TKM மீண்டும் கதவடைப்பு செய்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா வுக்கு அளித்த பேட்டியில், TKM துணை நிர்வாக இயக்குனர் ராஜு கெட்கலே, தொழிலாளர்கள் மீது “தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாநில அரசுக்கு அழைப்பு விடுத்தார். இது நிறுவனத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அடிபணியுமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்தும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கான ஒரு அழைப்பாகும்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளி, நிறுவனத்தின் வாயில் சுவரில் TKM இரண்டு அறிவிப்புகளை போட்டிருப்பதாக கூறினார். தொழிலாளர்கள் தங்கள் மொபைல் போன்களை பணித் தளத்திற்கு எடுத்துச் செல்வதை தடைசெய்வது ஒன்று. மற்றொன்று "வேலைக்குத் திரும்பிய பின் எந்தவொரு தொழிலாளியும் COVID-19 க்கு சாதகமாக சோதிக்கப்பட்டால், நிறுவனம் அவரது சிகிச்சைக்கான பொறுப்பை ஏற்காது, மேலும் குணப்படுத்தும் காலத்திற்கு ஊதிய விடுப்பு வழங்காது." கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவும் நிலைமையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த நிர்வாகத்தின் கடுமையான அலட்சியப்போக்கை இது பிரதிபலிக்கிறது.

வேலைநிறுத்தத்திற்கு ஊடகங்கள் மற்றும் அரசாங்கத்தின் விரோதப் போக்கு குறித்து டொயோட்டா தொழிலாளி இவ்வாறு கூறினார், “எங்களுக்கு முக்கிய ஊடகங்களிலிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. எந்த ஊடக நபர்கள் வந்தாலும், முதலில் அவர்கள் நிர்வாகத்திடம் சென்று பேசி நிர்வாகம் சொல்வதை வெளியிடுவார்கள். தொழிலாளர்களின் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்பு அவை திருத்துகின்றனர். எங்கள் தொழிற்சங்கத் தலைவர் உள்ளூர் எம்.எல்.ஏக்கள் [மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்] மற்றும் எம்.பி.க்கள் [தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்] ஆகியோரின் ஆதரவை நாட அவர்களை சந்திக்கச் சென்றார், ஆனால் எங்கள் விடயத்தை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை.”

பூகோள ரீதியாக இணைக்கப்பட்ட முதலாளிகளின் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலை எதிர்கொள்ள தொழிலாளர்களை சர்வதேச அளவில் அணிதிரட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தொழிலாளி ஒப்புக்கொண்டார். “நீங்கள் சொல்வது போல், டொயோட்டா தொழிலாளர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் நவம்பர் 26 பொது வேலைநிறுத்தத்தில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் பங்கேற்றனர். இது பெரும்பாலான தொழிலாளர்கள் ஒரு பொதுவான பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.”

COVID-19 க்கு முன்பே, பூகோள வாகனத் தொழில் நெருக்கடியில் இருந்தது. இது ஒருபோதும் அத்தகையதொரு சரிவை எதிர்கொள்ளவில்லை. ஜூலை 2019 இல் 230,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். பின்னர் தொற்றுநோய் நெருக்கடியை தீவிரப்படுத்தியது. 2020 ஆம் ஆண்டில் இந்திய வாகன விற்பனை குறைந்தது 30 சதவிகிதம் குறையும் என்றும் அதை அடுத்த ஜூலை வரையிலான முதல் ஏழு மாதங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு இருக்கும் என்று மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை, ஊடகங்களுக்குத் தெரிவித்தது.

மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பர்கவா அகில இந்திய மேலாண்மை சங்க நிகழ்வில் கார்ப்பரேட் உயரடுக்கின் நிகழ்ச்சி நிரலை வகுத்தார். அவர் அறிவித்தார்: "தொழில்துறையும் அரசாங்கமும் ஒன்றிணைந்து செயல்பட்டால் சீனாவை விட குறைந்த செலவு கொண்ட நாடாக மாறும் திறன் இந்தியாவுக்கு உள்ளது." இதன் பொருள் என்னவென்றால், மிருகத்தனமான அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளின் ஆதரவுடன் இந்திய வாகன நிறுவனங்கள் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்.

2011-12 ஆம் ஆண்டில் அடிமை உழைப்பு தொழிலாளர் நிலைமைகளுக்கு எதிராக வடக்கு மாநிலமான ஹரியானாவின் மானேசரில் உள்ள மாருதி சுசுகி வாகன உற்பத்தி ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்திற்கு எதிராக பார்கவாவின் சொந்த நிறுவனம் அரசாங்க ஆதரவுடன் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் விளைவாக, மானேசர் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழிற்சங்கமான மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் 12 நிர்வாக உறுப்பினர்கள் உட்பட 13 போராளி தொழிலாளர்களுக்கு 2017 மார்ச் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் கொலைக் குற்றச்சாட்டுக்களில் ஜோடிக்கப்பட்டனர்.

TKM தொழிலாளர்கள் ஒரு அரசாங்க-நிறுவன தாக்குதலை எதிர்கொண்ட போதிலும், TKMEU மற்ற வாகனத் தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, தொழிற்சங்கம் அரசியல் ஸ்தாபகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் பக்கம் திரும்பியுள்ளது, அவை அனைத்தும் டொயோட்டா போன்ற நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளன.

TKM தொழிலாளர்கள் ஒரு ஈவிரக்கமற்ற முதலாளிக்கு எதிராக மட்டுமல்ல, ஆனால் ஒட்டுமொத்த பெருவணிகத்திற்கும், அதன் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச எந்திரத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் போராட்டத்தை தனிமைப்படுத்துவதைத் தடுக்க, TKM வேலைநிறுத்தம் செய்பவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் வாகனத் தொழில் மற்றும் பிற துறைகளில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகள் பக்கம் திரும்ப வேண்டும்.

வேலைகள், ஊதியங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அதனுடன் சேர்ந்த அரசு அடக்குமுறையின் ஆழ்ந்த தாக்குதலைத் தோற்கடிக்க, தொழிலாளர்களுக்கு புதிய அமைப்புகள் தேவை, அவற்றில் சாமானிய தொழிலாளர்களால் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கு உட்படும்.

இந்திய தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு முதலாளித்துவ கட்சிகளுடனும், தேசிய கட்டமைப்புடனும் பிணைக்கப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்களைப் போலவே, அவர்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதன் மூலம் பூகோளமயமாக்கலுக்கு பதிலிறுத்துள்ளனர்.

பூகோள நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் இந்த தாக்குதலைத் தோற்கடிக்க போராடும் தொழிலாளர்களின் தைரியமும் போர்க்குணமும் மட்டும் போதாது. முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக உலகளவில் தங்கள் போராட்டங்களை ஒன்றிணைக்க தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச மூலோபாயம் தேவை.

Loading