மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நேற்று, இத்தாலியில் நடந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால், பொதுத்துறையின் பெரும் பகுதியை ஸ்தம்பித்துப் போக வைத்தன. கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்றும் வைரஸ் பரவுவதற்கு அனுமதிக்கும் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கும் நிலையில், பாதுகாப்பான பணி நிலைமைகள் இல்லாமை மற்றும் பல தசாப்தகால சிக்கன நடவடிக்கைகளால் எரியூட்டப்பட்ட மற்றும் தொற்று நோய்களால் எரியூட்டப்பட்ட சமூக சமத்துவமின்மையின் கொடிய மட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தில் பாரிய எதிர்ப்பு உள்ளது.
தொழிற்சங்கங்களின்படி, மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர். வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த பொதுத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பானது பொது நிர்வாக ஊழியர்கள், அரசாங்க ஊழியர்கள், கல்வி மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியதாகும், இருப்பினும் மருத்துவமனை ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
இந்த வேலைநிறுத்தம் பல தசாப்தங்களாக பொது நிதிகளை வெட்டுவதற்கு எதிராக, குறிப்பாக சுகாதாரத் துறையில் பாரிய எதிர்ப்பால் உயிரூட்டப்பட்டது. தற்போது 350,000 பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைபாதுகாப்பு இல்லாமல் தற்காலிக ஒப்பந்தங்களில் உள்ளனர், இதில் 60,000 சுகாதார தொழிலாளர்களும் அடங்குவர். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் செவிலியர்களை "கதாநாயகர்கள்" என்று அது சிடுமூஞ்சித்தனமான முறையில் பாராட்டியபோதிலும், பிரதம மந்திரி யுசெப்பே கொந்தேயின் (Giuseppe Conte) அரசாங்கம் நிரந்தர பணி நிலைகளுக்கு அல்லது ஊதிய உயர்வுகளுக்கு நிதி வழங்க மறுத்துவிட்டது.
சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஒரு தொடர்ச்சியான எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த வேலைநிறுத்தம் நடந்தது. அண்டை நாடான ஸ்பெயினில், மருத்துவ நிதிகளை குறைக்கும் திட்டங்களுக்கு எதிராக நவம்பர் 29 ஆம் திகதி மாட்ரிட்டில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போர்த்துக்கல்லில், குழந்தை பராமரிப்பு, ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வியாளர்களின் ஒரு தேசிய வேலைநிறுத்தம் இந்த வெள்ளியன்று நடைபெறும். கிரீஸில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நவம்பர் 26 ஆம் திகதியன்று நாட்டின் பொதுத்துறையை எட்டு மணி நேர தினத்தை இரத்து செய்யும் ஒரு சட்டத்தை எதிர்த்து கதவடைப்பு செய்தனர்.
பிரான்சில், ஒரு வாரத்திற்கு முன்னர் நாடு முழுவதும் பொலிஸ் வன்முறைகளுக்கு எதிராகவும், போலீஸை படப்பிடிப்பு செய்வதை குற்றவியலாக்கும் மக்ரோன் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்தும் நூறாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். ஜேர்மனியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவுவதை அனுமதிக்க பள்ளிகளை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.
இந்த நிலைமைகளின் கீழ், இத்தாலியில் வேலைநிறுத்தம் சர்வதேச ஊடகங்களில் கிட்டத்தட்ட எந்த செய்தியும் வெளிவரவில்லை. அரசு நடத்தும் பிரான்ஸ் இன்ஃபோ (France Info) வானொலி ஒலிபரப்பாளர் வேலைநிறுத்தம் பற்றி ஒரே ஒரு கட்டுரையை தயாரித்தார், பிரெஞ்சு மொழியில் தோன்றிய ஒரே ஒரு கட்டுரை இதுவாகும். முக்கிய ஆங்கில மொழி அல்லது ஜேர்மன் செய்தி நிறுவனம் எதுவும் வேலைநிறுத்தம் பற்றிய ஒரு கட்டுரையையும் வெளியிடவில்லை.
இதற்கு மாறாக, இந்த ஆண்டு ஜேர்மனியில் நூற்றுக்கணக்கான வலதுசாரி எதிர்ப்பாளர்கள் குழுக்கள் கதவடைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, அவர்கள் உடனடியாக சர்வதேச செய்தி ஊடக வெளியீட்டைப் பெற்றனர். ஐரோப்பாவில் அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையில், பெருநிறுவன இலாபங்களை பாதிக்கும் ஒரு நீண்ட பொருளாதார தடையை நிராகரிப்பதன் மூலம் வைரஸ் பரவ அனுமதித்த அவற்றின் கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெடித்ததில் ஆழ்ந்த கவலை உள்ளது.
இத்தாலியில் கொரோனா வைரஸினால் இறப்பு எண்ணிக்கையானது உலகிலேயே மிக உயர்ந்த தனிநபர் இறப்பு எண்ணிக்கையாகும். நேற்று மட்டும் 634 பேர் வைரஸ் நோயினால் இறந்துள்ளனர். நவம்பர் 20 முதல் ஒவ்வொரு நாளும் 500 க்கும் மேற்பட்ட இறப்புகள் வைரஸினால் வருகின்றன. டிசம்பர் 3ம் திகதி, 993 இறப்புக்கள் நிகழ்ந்தன. மார்ச் 27 திகதியன்று, உலகின் முதல் நாடுகளில் ஒன்றாக இந்த வசந்தகாலத்தில் 921 இறப்புக்கள் நிகழ்ந்தன. இத்தாலியின் மக்கள் தொகை 60 மில்லியனாக இருக்கும் நிலையில், டிசம்பர் 3 ஆம் திகதி இறப்பு எண்ணிக்கையானது அமெரிக்காவில் ஒரே நாளில் சுமார் 5,300 இறப்புகளுக்கு சமமாக இருக்கும். மொத்தத்தில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 60,000 க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்.
ஐரோப்பாவில், பிரான்சுக்கு அடுத்தபடியாக இத்தாலி இரண்டாவது அதிக அளவில் 1.77 மில்லியன் பேர்கள் தொற்றுநோய்க்குள்ளாகி உள்ளனர். பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அக்டோபர் 24 இல் அரை மில்லியனாக இருந்தது, இரண்டு மாதங்களுக்கும் குறைவாக மூன்று மடங்கை விட அதிகமாக உள்ளன. ஒவ்வொரு நாளும் 10,000 முதல் 20,000 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றனர்.
இந்த பாரிய இறப்பு எண்ணிக்கையானது தவிர்க்க முடியாததல்ல. இத்தாலியில் வாகன மற்றும் பிற தொழில்துறை ஆலைகளில் தொழிலாளர்கள் வீட்டில் தங்க அனுமதிக்கவும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று கோரியதையும் அடுத்து, மார்ச் மாதம் கொந்தே அரசாங்கம் பொது முடக்க நடவடிக்கைகளை இயற்ற கட்டாயப்படுத்தப்பட்டது. பொது முடக்கம் முடிந்த பின்னர், ஐரோப்பா முழுவதும் அதன் சகாக்களைப் போலவே, கொந்தே அரசாங்கமும், பெருநிறுவன இலாபங்களை பிரித்தெடுப்பதை மீண்டும் தொடங்குவதை உறுதி செய்ய, அத்தியாவசியமற்ற உற்பத்திகள், பார்கள், உணவகங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட பொருளாதாரத்தை மீண்டும் திறந்தது.
மருத்துவ வல்லுநர்களால் கோரப்பட்ட முழு பொது முடக்கத்தையும் மீண்டும் நடைமுறைப்படுத்துவதை கொந்தே அரசாங்கம் நிராகரித்தது. நவம்பர் 9 ம் திகதி, இத்தாலிய மருத்துவ கில்ட்ஸ் கூட்டமைப்பின் (Italian Federation of Medical Guilds) தலைவர் வைரஸ் பரவாமல் தடுக்க முழுமையான பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதே நாளில், மிலானின் சாக்கோ மருத்துவமனையிலுள்ள தொற்று நோய் துறையின் தலைவர் RAI செய்திக்கு ஒரு பொது முடக்கம் தேவைப்படுகிறது என்று கூறினார், "இல்லையெனில் தொற்று ஏற்கனவே மிகவும் சோகமான இறப்பு எண்ணிக்கைக்கு அப்பால் செல்லும் சேதத்தை ஏற்படுத்தி முடிவடையும்." நவம்பர் 11 ஆம் திகதியன்று லா ஸ்டாம்பா (La Stampa)உடனான ஒரு நேர்காணலில், அத்தகைய பொது முடக்கம் "முதல் தேர்வாக இருக்கக்கூடாது" ஏனெனில் "செலவுகள் மிக அதிகமாக உள்ளன" என்று கொந்தே பதிலளித்தார்.
மாறாக, அரசாங்கம் மாலை 10 மணி முதல் காலை 5 மணி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவைப் பராமரித்து வருகிறது. இடைநிலைக் கல்வியின் இறுதி இரண்டு வருடங்களை உள்ளடக்கிய உயர்நிலைப் பள்ளிகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன, ஆனால் "சிவப்பு மண்டலங்கள்" தவிர, நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகள் எங்கும் திறந்திருக்கின்றன, அங்கு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது, மத்திய அப்ரூசோ பகுதி மட்டுமே "சிவப்பு" என்று குறிக்கப்பட்டுள்ளது. "ஆரஞ்சு மண்டலங்களில்" பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன, ஆனால் வணிக மற்றும் சில்லறை கடைகள் திறந்தே உள்ளன. லோம்பார்டி, பீட்மாண்ட், கலாப்ரியா, போல்சானோ மற்றும் டுஸ்கனி ஆகியவை "ஆரஞ்சு" மண்டலங்களில் அடங்குகின்றன.
தொழிற்சங்கங்கள் சமீபத்திய வேலைநிறுத்தத்தை அரசாங்கத்திற்கும் அதன் கொரோனா வைரஸ் கொள்கைகளுக்கும் எதிரான எதிர்ப்பு நடவடிக்கை என்று அழைப்பு விடுக்கவில்லை. மாறாக தொழிற்சங்கங்கள் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்துள்ளன. ஒரு பொது முடக்கத்திற்கு, தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரும் எந்த நடவடிக்கையையும் தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.
அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்க எதுவும் செய்யாத அதே நேரத்தில், தொழிலாளர்கள் மத்தியிலிருக்கும் எதிர்ப்பை தணியச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாள் நடவடிக்கைகளின் ஒரு தொடர் நடவடிக்கைக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. நவம்பர் 25 ஆம் திகதி இதேபோன்ற நான்கு மணி நேர தேசிய வேலைநிறுத்தத்திற்கு பின்னர் தொழிற்சங்கங்கள் சமீபத்திய வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது ரோமில் பஸ் சேவைகள் உட்பட நாடு முழுவதும் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மூடச்செய்தது.
