முன்னோக்கு

உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைக்காக! பள்ளிகள் மூடு மற்றும் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்து! தொழிலாளர்களுக்கு முழு நஷ்டஈடு வழங்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம், அமெரிக்காவின் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் முதல் சுற்று கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெறத் தொடங்கினார்கள். இதுவொரு குறிப்பிடத்தக்க மைல்கல் தான். என்றாலும், முழுமையாக கட்டுப்பாட்டை மீறிய ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் இது நடக்கிறது என்ற கசப்பான உண்மையும் உள்ளது.

இந்த வாரம், அமெரிக்காவில் மரணங்களின் எண்ணிக்கை 300,000 என்ற கொடூர மட்டத்தை கடந்தது. ஒவ்வொரு நாளும் அண்மித்து 3,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள், நாடெங்கிலுமான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்களும் செவிலியர்களும் யாரைக் கவனிப்பது யாரை கைவிடுவது என்று தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவில் இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோயைக் கடந்து, கோவிட்-19 தான் மரணத்திற்கான முக்கிய காரணமாக ஆகிவிட்டது. புதிய நோயாளிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.

COVID Vaccine (Stock image credit: Envato)

போரைத் தவிர இந்தளவிலான மரணம் என்பது அமெரிக்க வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாததாகும். அமெரிக்க எல்லைகளுக்குள் ஏற்பட்டிருந்த உயிரிழப்புகள் என்று பார்த்தால், உள்நாட்டு போர் மட்டுமே ஒரே சம்பவம் இத்துடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது, அதில் நான்காண்டுகளில் 618,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கையில் பாதி வெறும் ஒரே ஆண்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ளது.

ஊடகங்களிலோ, கட்டவிழ்ந்து வரும் பேரிடரில் இருந்து, கவனம், தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் வினியோகத்தை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 300,000 ஐ கடந்துள்ளது என்ற உண்மை இரண்டாந்தர பிரச்சினையாக கையாளப்பட்டு வருகிறது. “இருண்ட குளிர்காலம்" குறித்த குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு, உயிர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் முன்மொழியப்படவில்லை.

தடுப்பூசியால் சாதகமான சூழல் இருந்தாலும் கூட, அடுத்த மூன்றுக்கும் கூடுதல் மாதங்களுக்குத் தீவிரமடைந்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அது எந்த விளைவையும் கொண்டிருக்காது என்பதை விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் (Health Metrics and Evaluation – IHME) துறையின் டிசம்பர் 4 இல் பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கை, “தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தினாலும், ஏப்ரல் 1 வாக்கில் ஒட்டுமொத்தமாக 539,000 உயிரிழப்புகளை எதிர்பார்க்கலாம்,” என்பதைக் கண்டறிந்தது. இது தற்போதைய 300,000 எண்ணிக்கைக்குக் கூடுதலாக, இன்னும் 240,000 உயிரிழப்புகள், அல்லது ஏறக்குறைய ஒரு மில்லியனில் ஒரு கால்வாசி பேரின் மரணங்கள் என்றாகிறது.

IHME இன் தகவல்படி, “தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் வழமைக்குத் திரும்புவதை வேகப்படுத்தக்கூடும் என்றாலும் அது ஏப்ரல் 1 வரையில் வெறும் 9,000 உயிரிழப்புகளை மட்டுமே தடுக்கும்.” இப்போதும் மக்களில் 60 சதவீதத்தினர் ஏப்ரல் 1 வரையில் இந்த வைரஸிற்கு உள்ளாகக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று, தற்போதைய தடுப்பூசி வினியோக திட்டங்களின் அடிப்படையில், அது மதிப்பிடுகிறது.

ஏப்ரல் வாக்கில் 539,000 உயிரிழப்புகள் என்ற மதிப்பீடே கூட, மருத்துவமனைகள் நிரம்பி வழிவதைத் தடுக்க பல மாநிலங்கள் சமூக இடைவெளி மீது பெரியளவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதுபோன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் —இதைத் தான் பல மாநிலங்கள் செய்து கொண்டிருக்கின்ற என்கின்ற நிலையில்— இந்த முன்மதிப்பீடு ஏப்ரல் 1 வாக்கில் ஒட்டுமொத்தமாக 770,000 உயிரிழப்புகளை, அல்லது மேலும் 470,000 பேரின் உயிரிழப்புகளை முன்கணிக்கிறது.

தற்போதைய நிலைமையைத் தொகுத்தளித்து கூறுவதானால்: கொரோனா வைரஸ் நோய்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் ஒரு தடுப்பூசி இருக்கிறது. அதை போதுமான எண்ணிக்கையில் உற்பத்தி செய்து மக்களுக்கு வினியோகிக்க நான்கிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும். இவ்வாறிருக்கையில், இது தெரிந்திருந்தும், ஆளும் வர்க்கம் இந்த காலகட்டத்தில் உயிர்களைக் காப்பாற்ற எந்த அவசர நடவடிக்கைகளும் எடுக்க மறுக்கிறது. ஆனால் ஒரு தடுப்பூசியால் ஏற்கனவே இறந்து போனவர்களுக்கு என்ன உபயோகம் இருக்கிறது?

பாரியளவிலான உயிரிழப்புகளுக்கு அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் காட்டும் அலட்சியத்தை ஒரு கொலைபாதக குற்றம் என்றல்லாமல் வேறு விதத்தில் விவரிக்க முடியாது. நூறாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்புகள் என்ன விலை கொடுத்தாவது தடுக்கப்பட வேண்டிய ஓர் அபாயகமாக காட்டப்படவில்லை, மாறாக தவிர்க்க முடியாத ஒன்றாக மக்கள் சர்வசாதாரணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக காட்டப்படுகிறது.

ட்ரம்ப், 2020 தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னரும், இந்த தொற்றுநோய் பரவலுக்காக எந்த கட்டுப்பாடும் வேண்டாம் என்ற கோரிக்கை மீது மையமிட்ட அவரின் பாசிசவாத சூழ்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவ்வாறிருக்கையில் ஜனநாயகக் கட்சியினரிடமோ, வெறும் அனுதாப உணர்வுகளும் அதே கொள்கையின் தொடர்ச்சியும் தவிர வேறொன்றும் வழங்குவதற்கில்லை.

தேர்வுக்குழுவின் உத்தியோகப்பூர்வ வாக்கெடுப்பு அவரை அடுத்து பதவியேற்கும் ஜனாதிபதியாக ஆக்கியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை இரவு, ஜோ பைடென் உரையாற்றுகையில், “உங்களின் சொந்த தவறேதும் இல்லாமல் கடுமையான காலங்களில் உயிரிழந்துள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தில் இடம் உண்டு,” என்று அறிவித்து, அந்த உரையின் இறுதியில் அத்தொற்றுநோய் குறித்து போகிற போக்கில் மட்டும் ஒரு குறிப்பைக் கூறிச் சென்றார். எதுஎப்படியோ, இந்த பேரழிவைத் தடுப்பதற்கோ மாற்றுவதற்கோ எந்த அவசர நடவடிக்கைகளையும் அவர் முன்மொழியவில்லை. இவ்விசயத்தில், ஜனநாயகக் கட்சியினருக்கு ட்ரம்ப் நிர்வாகத்துடனும் குடியரசுக் கட்சியினருடனும் எந்த அடிப்படை கருத்து வேறுபாடுகளும் இல்லை.

இந்தளவிலான உயிரிழப்புகளுக்குத் தொழிலாளர்கள் பொறுப்பில்லை என்பது நிச்சயமான உண்மை என்கின்ற நிலையில், நிச்சயமாக இந்த அரசும் அது ஊழியம் செய்து வரும் பெருநிறுவனங்களுமே இதற்குப் பொறுப்பாகின்றன. இப்போதிருந்து ஏப்ரலுக்குள் இன்னும் கூடுதலாக நூறாயிரக் கணக்கானவர்கள் மரணிப்பார்கள் என்றால், அது, இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அவசியமான நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் செய்ய மறுக்கிறது என்பதால் மட்டுமே ஆகும்.

இந்த பேரழிவைத் தடுக்க இப்போதே கடுமையான அவசர நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்! ஒவ்வொரு நாளும் அந்த நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துவது என்பது ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளை அர்த்தப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்னெடுக்கிறது:

முதலாவதாக, அத்தியாவசியமல்லாத எல்லா உற்பத்தியும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வீடுகளிலும் அல்லது பயணங்களிலும் மக்கள் ஒன்று கூட வேண்டாமென்ற அறிவுரை, அவசியம் தான் என்றாலும், ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் ஆலைகளுக்கும் வேலையிடங்களுக்கும் செல்ல, அதுவும் அவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க பெரியளவில் எந்த நெறிமுறைகளும் கொண்டிருக்கவில்லை என்கின்ற நிலைமைகளின் கீழ், அது முழுக்க முழுக்க பாசாங்குத்தனமாக உள்ளது.

அமெரிக்காவில் தொற்றுநோய் ஏற்படும் தடம் அறிவதற்கான முறையான வழிமுறை நடைமுறையளவில் இல்லை என்கின்ற நிலையில், கிடைக்கும் விபரங்களோ வேலையிடங்களே தொற்றுநோய் ஏற்படுத்தும் பிரதான ஆதாரமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன. வடக்கு கலிபோர்னியாவின் ஒரு பத்திரிகையானThe Press Democrat இந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை, அது சேகரித்த தரவுகளின் அடிப்படையில், “வேலைக்குச் செல்வது தான் இந்த தொற்றுநோயின் போது மக்கள் செய்யும் மிக ஆபத்தான விசயங்களில் ஒன்றாக உள்ளது,” என்று தீர்மானித்தது.

திங்கட்கிழமை Mlive.com பிரசுரித்த வேறொரு அறிக்கை, மிச்சிகன் மாநிலத்தின் இப்போதைய 1,268 கோவிட்-19 நோய்தொற்றுகளில், வெறும் நீண்டகால மருத்துவக் கவனிப்பு மையங்களைத் தொடர்ந்து, பள்ளிகளும் உற்பத்தி மற்றும் கட்டுமான இடங்களும் தான் மிகவும் பொதுவான அமைப்புகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக இருப்பதாக கண்டறிந்தது. ஆலைகளில் ஏற்படும் நோய்தொற்றுக்களைத் தொழிற்சங்கத்துடன் உதவியுடன் நிர்வாகம் மூடிமறைத்து வருகின்ற நிலையில், தொழிலாளர்கள் அவர்களது ஆலைகளில் ஏற்படும் புதிய நோயாளிகளைக் குறித்து ஒவ்வொரு நாளும் உலக சோசலிச வலைத் தளத்திற்கு செய்திகள் அனுப்பி வருகிறார்கள்.

இந்த தொற்றுநோய் நிலைமைகளின் கீழ், தொழிலாளர்களை ஆலைகளுக்கும் ஆசிரியர்களைப் பள்ளிகளுக்கும் அனுப்புவது என்பது நெருப்பு விட்டு எரியும் கட்டிடத்திற்குள் நுழையுமாறு நிர்பந்திப்பதில் வித்தியாசமானதில்லை. அத்தியாவசிய வேலை நடக்கும் தொழில்துறைகளில் இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி சமூகத்திற்கான அடிப்படை செயல்பாடுகளைப் பேணுவதற்கு, அங்கே தொழிலாளர்கள் மற்றும் மருத்துவத்துறை வல்லுனர்களால் மேற்பார்வை செய்யப்படும் மிகவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, எல்லா பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட வேண்டும்.

நோயாளிகள் கூர்மையாக அதிகரித்ததற்கு மத்தியிலும் நியூ யோர்க் நகரில் செய்ததைப் போல, பள்ளிகளைத் திறப்பது பாதுகாப்பானது என்று ஊடங்களில் பொய் தகவல் பரப்பப்படுகிறது. இது விஞ்ஞான ஆதாரங்களுடன் முரண்படுகின்றன. நேற்று Science ஆய்விதழில் வெளியான ("கோவிட்-19 இக்கு எதிராக அரசு தலையீடுகளின் திறனை ஊகித்தல்” என்ற) ஒரு கட்டுரை தகவல்படி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவது, இவ்வாறு செய்யப்பட்டுள்ள இடங்களில் நடந்துள்ளத் போல, பெரும் பெரும்பான்மை இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீது மிகப் பெரிய பாதிப்பைக் கொண்டுள்ளது.

மூன்றாவதாக, தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப இயலும் வரையில் ஒரு வருமானமும் அவர்களுக்கு முழுமையான நஷ்டஈடும் எந்தளவுக்கு வழங்கப்படுகிறதோ அந்தளவுக்கு மட்டுமே சமூக அடைப்பானது பயனுறுதியாக இருக்கும்.

ஓர் அடைப்புக்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கிறது என்றால், எந்தளவுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்றால், அது ஏனென்றால் தொழிலாளர்களும் அத்துடன் சிறுவணிகர்களும் முற்றிலுமாக கைகழுவி விடப்படும் ஒரு சூழலாக அது சித்தரிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பற்றோருக்கான வாராந்தர 600 டாலர் கூடுதல் உதவித்தொகை உடனடியாக மீளமைக்கப்பட்டு, எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அல்லது நேரில் வரவேண்டுமென்ற நிபந்தனைகள் இல்லாமல் சமூக அடைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்குமாறு செய்யப்பட வேண்டும். சிறுவணிகங்கள் மீண்டும் பாதுகாப்பாக திறக்கப்படும் வரையில் அவை பொருளாதாரரீதியில் தாக்குப்பிடிப்பதை உறுதிப்படுத்த வாடகை மற்றும் கடன் தவணைகள் இருந்து அவற்றுக்கு நிஜமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அவசரகால ஆதாரவளங்கள், உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளை வழங்க திருப்பி விடப்பட வேண்டும். வீட்டு ஜப்தி நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அடமானக் கடன், வாடகை மற்றும் மாணவர் கடன் ஆகியவை இரத்து செய்யப்பட வேண்டும்.

இத்தகைய முறைமைகளை நடைமுறைப்படுத்த அங்கே பணமில்லை என்பது பொய்யாகும். வாரத்திற்கு 200 மில்லியன் தொழிலாளர்களுக்கு 600 டாலர் வருமானம் வழங்க 120 பில்லியன் டாலர் செலவாகும். இந்தாண்டு மார்ச்சில் பெருவாரியாக இரண்டு கட்சிகளது ஏகமனதான ஒப்புதலுடன் நிறைவேறப்பட்ட CARES சட்டம் மூலமாக, பெடரல் ரிசர்வால் மூன்று ட்ரில்லியன் டாலர் வோல் ஸ்ட்ரீட்டுக்குக் கையளிக்கப்பட்டது. அரையாண்டுக்கு 200 மில்லியன் தொழிலாளர்களுக்கு அவசரகால உதவிகள் வழங்க இது மட்டுமே போதுமானது, இதற்குள் ஒரு தடுப்பூசி பரவலாக கிடைக்குமென எதிர்பார்க்கலாம்.

இந்த முறைமைகள் ஆளும் வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் கடுமையாக எதிர்க்கப்படும். தற்போதைய இந்த பேரழிவானது பெருநிறுவனங்களும் அரசாங்கமும் நடைமுறைப்படுத்தி உள்ள கொள்கைகளின் விளைபொருளாகும். ஆரம்பத்தில் இருந்தே, அரசாங்க கொள்கை உயிர்களைக் காப்பாற்றும் நிர்பந்தங்களால் அல்ல மாறாக இலாபங்களைப் பாதுகாக்கும் மற்றும் பங்குச் சந்தையின் முடிவில்லா அதிகரிப்பை உறுதிப்படுத்தும் தேவைகளால் தீர்மானிக்கப்பட்டது. ஆதாரவளங்கள் ஓயாது வோல் ஸ்ட்ரீட்டுக்குப் பாய்ச்சப்பட்டு செல்வந்தர்களுக்குப் பிணையெடுப்பு வழங்கப்பட்ட போதும் கூட, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும், மீண்டும் மீண்டும், இந்த தொற்றுநோயைத் தடுக்கவோ அல்லது அவசர நிவாரணம் வழங்கவோ எதுவும் செய்யவியலாது என்று வாதிட்டனர்.

இதனால் தான் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான இந்த அவசியமான அவசரநடவடிக்கைக்குத் தொழிலாள வர்க்கத்தை முழுமையாக தொழில்துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் அணித்திரட்ட வேண்டியுள்ளது. இது ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு முறையீடுகள் செய்யும் விடயமல்ல, அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். சமூக அடைப்புகளை அமலாக்கவும் மற்றும் தேசியளவில் அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்யவும் ஒரு சுயாதீனமான சக்தியாக தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதே பணியாகும்.

ஒருங்கிணைந்த எதிர்ப்பை ஒழுங்கமைக்க வேலையிடங்களிலும் அண்டைப்பகுதிகளிலும் ஒன்றோடொன்று இணைந்த குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கத் தொடங்குவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி, முக்கிய தொழில்துறைகளான அமசன் மற்றும் சரக்கு பரிவர்த்தனை தொழிலாளர்கள், வாகன மற்றும் உற்பத்தித்துறை தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர்கள், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவு தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.

அத்தியாவசியமல்லாத உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற ஒவ்வொரு வேலையிடத்திலும், இந்த அவசர நடவடிக்கை குழுக்கள் உடனடியாக அடைப்பை நடத்த வேண்டும். தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்களின் நடவடிக்கையால் தான், மார்ச் மாதம் பகுதியளவில் அடைப்புகள் அமலாக்கப்பட்டன. இருந்தாலும் தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் அமைப்புகளின் ஒரு வலையமைப்பு இல்லாததால் அவற்றால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

தொழிலாளர்களின் போராட்டம் ஒரேயொரு ஆலை அல்லது வேலையிடத்தையும் கடந்து விரிவடைய வேண்டும். அது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசுடனான ஒரு மோதலில், ஒட்டுமொத்த தொழில்துறைகளையும், சொல்லப் போனால் தொழிலாள வர்க்கத்தின் எல்லா பிரிவுகளையும் உள்ளீர்க்க வேண்டும். இந்த தொற்றுநோயை நிறுத்துவதற்கான அவசரகால நடவடிக்கைகளைச் செய்வதற்கான போராட்டமானது, சமூகம் யார் கட்டுப்பாட்டில் இருக்கும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கட்டுப்பாட்டிலா அல்லது தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலா? என்ற அரசியல் அதிகார கேள்வியை முன்நிறுத்துகிறது.

தொழிலாளர்கள் எடுக்கும் நடவடிக்கை அமெரிக்காவுக்குள் மட்டும் மிகப்பெரியளவில் ஆதரவைப் பெறும் என்பதல்ல. அது, இதே நிலைமைகளை முகங்கொடுக்கும் மற்றும் இதே நலன்களைக் கொண்டுள்ள உலகெங்கிலுமான தொழிலாளர்களை உத்வேகமூட்டி ஊக்கப்படுத்தும்.

முதலாளித்துவம் மனித முன்னேற்றத்திற்கும் உயிர் வாழ்வுக்குமே கூட பொருந்தாது என்பதையே இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் மொத்த விடையிறுப்பும் எடுத்துக்காட்டி உள்ளது. முதலாளித்துவத்திற்கு மாற்றீடு சோசலிசமாகும்—அதாவது, சமூக மற்றும் பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைப் பூர்த்தி செய்வதற்காக மறுகட்டமைப்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறும், வெளிநடப்புகளை ஒழுங்கமைக்கத் தொடங்குமாறும், சமூக ஊடங்களில் பரந்தளவில் அந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது. எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும், வெவ்வேறு ஆலைகள் மற்றும் தொழில்துறைகளில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதிலும், சுயாதீனமான முன்முயற்சிகள் குறித்து உலகெங்கிலும் தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துவதிலும் தொழிலாளர்களுக்கு ஒத்துழைக்க சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தயாரிப்புடன் உள்ளது. இந்த வேலைத்திட்டத்துடன் உடன்படும் அனைவரும் பின்வரும் படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

வரவிருக்கும் வாரங்களும் மாதங்களும் மிகவும் முக்கியமானவை. தொழிலாளர்கள் இப்போது எடுக்கும் நடவடிக்கையால் நூறாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். இழப்பதற்கு நம்மிடம் நேரமில்லை!

Loading