முன்னோக்கு

“அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம்:” COVID-19 பரவுவதை ஊக்குவிக்க வெள்ளை மாளிகை முயன்றதாக மின்னஞ்சல்கள் காட்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தொற்றுநோயால் அமெரிக்காவின் மருத்துவத்துறை தொடர்ந்து மிதமிஞ்சி நிரப்பி வழிகின்ற நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகள் முற்றிலுமாக தீர்ந்து போயிருப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனர். நாடெங்கிலும், வரவிருக்கும் நாட்களில் சிகிச்சையைப் பங்கிட்டு வழங்க வேண்டிய நிலையை மருத்துவர்கள் முகங்கொடுக்கின்றனர். 300,000 இக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், வரவிருக்கும் மாதங்களில் இன்னும் நூறாயிரக் கணக்கானவர்கள் உயிரிழக்கக் கூடுமென பொது சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த பேரிடர் வெறுமனே அலட்சியத்தின் விளைவு அல்ல. இது மிகப்பெரிய பெருநிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்காக உயிர்களைத் தியாகம் செய்யும் ஒரு திட்டமிட்ட கொள்கையின் விளைவாகும்.

பொது சுகாதார வல்லுனர்களின் எச்சரிக்கைகளை மீறி, மாநில ஆளுநர்கள் மற்றும் காங்கிரஸ் சபையுடன் சேர்ந்து, வெள்ளை மாளிகை, நாடெங்கிலும் பள்ளிகள் மற்றும் வணிகங்களை முழுமையாக மீண்டும் திறப்பதை மேற்பார்வை செய்திருந்த நிலையில், இந்த கோடையில் திரைக்குப் பின்னால் நடந்த விவாதங்களை விவரித்து, Politico, புதன்கிழமை ஒரு தொகுப்பு ஆவணங்களை வெளியிட்டது.

President Donald Trump speaks about the coronavirus in the Rose Garden of the White House, Wednesday, April 15, 2020, in Washington. (AP Photo/Alex Brandon)

இந்த மின்னஞ்சல்கள், உத்தியோகபூர்வ சித்தரிப்புக்கு முரண்பாடாக, அமெரிக்க அரசு கொள்கை உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக பள்ளிகள் மற்றும் வேலையிடங்கள் எங்கிலும் கோவிட்-19 பரவலை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டிருந்ததை எடுத்துக்காட்டின.

ஜூலை 4 இல் அனுப்பப்பட்டிருந்த ஒரு மின்னஞ்சலில், பொது விவகாரங்களுக்கான மருத்துவ மற்றும் மனித சேவைகள் துறையின் துணை செயலர் மைக்கல் கப்புட்டோவின் ஓர் ஆலோசகர் பௌல் எலியாஸ் அலெக்சாண்டர் குறிப்பிடுகையில், சாத்தியமோ அந்தளவுக்கு பலருக்கும் நோய்தொற்று ஏற்படுமாறு வணிகங்களையும் பள்ளிகளையும் நிர்வாகம் திறந்து விட வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

“மழலைகளும், குழந்தைகளும், பதின்ம வயதினரும், பருவ வயதடைந்த இளைஞர்களும், ஏனைய எந்த நோயும் இல்லாத நடுத்தர வயதினருக்கும் ஆபத்துக் குறைவே… ஆகவே நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க அவர்களைப் பயன்படுத்துவோம்… அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதையே விரும்புகிறோம்,” என்று அலெக்சாண்டர் எழுதினார்.

இளைஞர்களின் உயிரை விட வயதானவர்கள் மற்றும் நோயாளிகளின் உயிர்கள் மதிப்புக் குறைந்தவை என்ற கண்ணோட்டத்தை அலெக்சாண்டரின் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. “இப்போது 44 வயதுக்கும் குறைவானவர்களிடையே வெறும் 3.5 % மட்டுமே உயிரிழப்பு இருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம்,” என்று எழுதிய அலெக்சாண்டர், இது மாறும் "கடவுள் பாதுகாப்பார்" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த அறிக்கைகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க அரசாங்கத்தின் பாசிச உலகக் கண்ணோட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மக்கள் வேண்டுமென்றே ஒரு கொடிய வைரஸுக்கு ஆளாகின்றனர் மற்றும் வயதானவர்களின் உயிர்களோ பயனற்றதாக கருதப்படுகிறது.

வேறொரு மின்னஞ்சலில் அலெக்சாண்டர் தொடர்ந்தார், “ஆகவே, நோய்தொற்று இப்போது இன்னும் அதிகமானால் [மூலப்பிரதியில் உள்ளவாறு] யார் இந்த பிரச்சினையைக் கவனிப்பார்கள்? என்பதே அடிப்படை அம்சமாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் அது நிறைய நோயாளிகளை உண்டாக்குகிறது என்றால், யார் சிகிச்சை அளிப்பார்கள் என்பதே என் வார்த்தை… இன்னும் நிறைய பரிசோதனைகள் செய்தால் இன்னும் நிறைய நோய்தொற்றுக்களை உறுதிப்படுத்தினால் யார் சிகிச்சை அளிப்பார்கள்,” என்று குறிப்பிட்டார்.

அலெக்சாண்டர் அவரின் ஆட்கொலைக்கான ஆவேச எழுத்துக்களில், அவர் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசுகிறார். அலெக்சாண்டர், அவர் எஜமானர் மைக்கல் கப்புட்டோவுடன் சேர்ந்து, அந்த தொற்றுநோய் முன்நிறுத்திய அச்சுறுத்தலைக் குறைத்துக் காட்ட, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் உறுதியான விஞ்ஞானிகளும் வெளிப்படுத்திய நோய்தொற்று புள்ளிவிபரங்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை வெற்றிகரமாக ஒடுக்கி இருந்தார்.

மிக முக்கியமாக, வெள்ளை மாளிகையின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" இந்த கொள்கை அமெரிக்க ஊடகங்களின் ஒவ்வொரு பிரிவினாலும் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. இந்த தொற்றுநோயின் போது பள்ளிகளையோ வணிகங்களையோ மூடாத சுவீடனை "முன்மாதிரியாக" பயன்படுத்தி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஆகியவை "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மாற்று மருத்துவத் தத்துவத்தை ஊக்குவித்தன.

மார்ச் 22 இல், நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் ஃபிரட்மன் அறிவிக்கையில், “பலரும் கொரோனா வைரஸிற்கு ஆளாகி, மீண்டு, திரும்ப பணிக்கு வரட்டும்" என்று அரசு விட்டுவிட வேண்டும் என்று வாதிட்டு, “குணப்படுத்தல்" “நோயை விட மோசமாக" இருந்துவிடக்கூடாது என்று அறிவித்தார். இந்த தொற்றுநோய் அடைப்பின் கடுமையால் தளர்ந்து போயிருந்த பலருக்கு அல்லது இது முற்றிலும் அவசியம் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத பலருக்கு, சுவீடன் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் ஒரு முன்மாதிரியை வழங்குகிறது,” என்று மே மாதம் வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கத்தில் எழுதியது.

இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே, அமெரிக்க அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் மொத்த விடையிறுப்பும் மிகப் பெரிய பெருநிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டிருந்தது.

இந்த ஆபத்தைக் குறைத்துக் காட்டுவதென ஆரம்பத்திலேயே முடிவெடுக்கப்பட்டது. ஜனவரி மற்றும் பெப்ரவரியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், அவர் மந்திரிசபையும், காங்கிரஸ் சபையும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளிடம் இருந்து உயர்மட்ட குறிப்புகளைப் பெற்றன, இந்த தொற்றுநோய் ட்ரம்பின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் "மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்று அவை எச்சரித்தன. ஆனால் மக்களை எச்சரிக்கைப்படுத்துவதற்குப் பதிலாக, ட்ரம்ப், அவரே சுயமாக ஒப்புக் கொண்டவாறு, “அதைக் குறைத்துக் காட்ட" முயன்றார். இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில், அமெரிக்காவில் இந்நோய்க்கு முறையான பரிசோதனைகளே செய்யப்படாமல், அது பரவலாக பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டது, அத்துடன் மக்கள் பயணிக்கவும், கடைகளுக்குச் செல்லவும் மற்றும் ஒன்றுகூடவும் கூட ஊக்குவிக்கப்பட்டனர்.

மார்ச் மாத வாக்கில், இந்நோயின் பாதிப்புகளை மறைப்பது சாத்தியமில்லை என்றளவுக்கு அது பரவி விட்டிருந்தது. அம்மாத மத்தியில், பிரதான அமெரிக்க உற்பத்தி ஆலைகளில் தொழிலாளர்கள் வேலைகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தொடங்கினர், இது ஜிஎம், ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லர் ஆகியவற்றின் உற்பத்தியை நிறுத்த இட்டுச் சென்றது.

அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் இந்த தொற்றுநோய் தூண்டிவிட்ட நெருக்கடியைச் செல்வந்தர்களுக்குப் பாரியளவில் பிணையெடுப்பு வழங்க பயன்படுத்தியது, இருகட்சிகளது ஒப்புதலுடன் மார்ச் மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட CARES சட்ட ஒப்புதலின் கீழ், பெடரல் ரிசர்வ் மற்றும் நிதித்துறையின் ஒருங்கிணைந்த தலையீட்டின் மூலமாக அது பெருநிறுவனங்களுக்கும் நிதியியல் சந்தைகளுக்கும் சுமார் 6 ட்ரில்லியன் டாலர் வழங்கியது.

பிணையெடுப்பு கிடைத்ததும், இந்த தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் கைவிடுவதற்கான ஒரு முடிவு எடுக்கப்பட்டது. இந்த கொள்கை, இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் சேர்ந்து, அரசின் உயர்மட்டங்களில் ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்த சுவீடன், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடைமுறைப்பட இருந்த ஒரு கொள்கைக்கான முன்மாதிரியாக சேவையாற்றியது. (சில மாதங்களுக்குப் பின்னர், சுவீடனின் அண்டை நாடான டென்மார்க்கை விட, இதன் தனிநபர் உயிரிழப்பு எண்ணிக்கை விகிதம் பத்து மடங்கு அதிகமாக இருந்ததுடன், அதன் மருத்துவமனைகள் மொத்தத்தில் நிரம்பி வழிந்தன.)

இந்த கொள்கை விஞ்ஞானத்தைப் பொய்மைப்படுத்தலின் அடிப்படையிலும், தவறான தகவல்களை ஊக்குவித்ததன் அடிப்படையிலும் இருந்தது. அலெக்சாண்டர் அவர் மின்னஞ்சல்களில் எந்தவித ஆதாரமும் இல்லாமல், மக்களைப் பாதுகாப்பதில் இந்த தடுப்பூசிகள் பயன் தராது என்று வாதிட்டார், “தடுப்பூசி மட்டுமே சமூக நோயெதிர்ப்பு சக்தியை நமக்கு வழங்காது… உள்ளுணர்வாக இதன் அர்த்தம் மக்களுக்கு நோய்தொற்று ஏற்படுவது அவசியம்,” என்றவர் அறிவித்தார்.

அலெக்சாண்டரின் பிதற்றல்களில் எந்த விஞ்ஞான அடித்தளமும் இல்லை. எண்ணற்ற தடுப்பூசிகள் ஏற்கனவே உற்பத்தியில் இருப்பதுடன் பெருவாரியாக நேர்மறையான முடிவுகளைக் காட்டுகின்ற நிலையில், இதுபோன்ற வாதங்கள் முழுமையாக அம்பலமாகி விடுகின்றன.

அலெக்சாண்டர் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் உள்ளடங்கலாக, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையின் ஆதரவாளர்கள், இந்த தொற்றுநோய் நடைமுறையளவில் இளைஞர்கள் மீது எந்த தாக்கமும் கொண்டிருக்காது என்று வாதிட்டார்கள்.

ஆனால் அலெக்சாண்டரின் மின்னஞ்சல்கள் பகிரங்கமாக ஆனதும், டைம்ஸ் அதுவே கூட "25 இல் இருந்து 44 வயதிற்குட்பட்ட பருவ வயதடைந்த அமெரிக்க இளைஞர்களிடையே, மார்ச்சில் இருந்து ஜூலை இறுதி வரையில், வரலாற்று விதிமுறைகளின்படி எதிர்பார்க்கப்பட்டதையும் விட ஏறத்தாழ 12,000 உயிரிழப்புகள் கூடுதலாக இருந்தன,” என்ற ஒரு புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பைக் குறிப்பிட்ட Jeremy Samuel Faust, Harlan Krumholz மற்றும் Rochelle Walensky ஆகிய விஞ்ஞானிகளின் ஒரு துணை-தலையங்கத்தைப் பிரசுரித்தது.

“உண்மையில், நவீன அமெரிக்க வரலாற்றிலையே இந்த வயது குழுவினரிடையே ஜூலை மாதம் மிகப்பெரிய மரண மாதமாக இருந்திருப்பதாக தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளில், ஒவ்வொரு ஜூலையிலும் சராசரியாக 11,000 அமெரிக்க பருவ வயதடைந்த இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்தாண்டு இந்த எண்ணிக்கை 16,000 ஐ கடந்து சென்றுவிட்டது.”

மக்கள் தொகையில் பெருமளவிலான தொற்றுநோய்களுக்கு மத்தியில், வயதானவர்களை COVID-19 இலிருந்து எப்படியாவது பாதுகாக்க முடியும் என்ற கூற்றும் ஒரு பொய்யாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 ஆல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் அண்மித்து 40 சதவீதம் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ளது, இவை வயதானவர்களுக்கு மரணப் பொறியாக மாறி உள்ளன.

இந்த கோவிட்-19 தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளை, உலக சோசலிச வலைத் தளம் "ஈவிரக்கமற்ற அலட்சியம்" என்று குணாம்சப்படுத்தியது, அது பின்வருமாறு எழுதியது:

மேலோட்டமாக பார்க்கையில், இந்த விடையிறுப்பு குழப்பமானதாக, ஒழுங்கமைப்பின்றி, முன்ஆயத்தமற்றதாக தெரிகிறது. இவை அனைத்தும் உண்மை தான், ஆனால் இந்த குழப்பத்திலிருந்து ஒரு தீர்க்கமான கொள்கை எழுகிறது, அதை ஈவிரக்கமற்ற அலட்சியம் என்றே வரையறுக்க முடியும். அதாவது, மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மற்றும் இந்த வைரஸ் பரவுவதன் மீது அலட்சியமான ஒரு அணுகுமுறையை எடுப்பதற்கும் அரசாங்கங்கள் திட்டமிட்டு சில முடிவுகளை எடுத்து வருகின்றன.

“இந்த கொள்கை ஏதோவிதத்தில் இன்னும் அதிக வஞ்சகமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது, இதை 'சமூக படுகொலை' என்று தான் கூற வேண்டியிருக்கும்,” என்று உலக சோசலிச வலைத் தளம் செப்டம்பரில் விவரித்தது. WSWS பின்வருவதையும் குறிப்பிட்டிருந்தது:

ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், இனி வேலை செய்யவியலாத தொழிலாளர், பயனற்றவர்கள் என்பதை விட குறைந்துவிடுகிறார். அவர் ஆணோ பெண்ணோ இலாபங்களை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக வயதானவர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு வழங்கப்படும் ஆதாரவளங்களும் அவருக்காக வீணாகின்றன, அவற்றை வேறு வழியில் சந்தைகளை உயர்த்தவும் அல்லது போர் எந்திரத்திற்கு நிதி வழங்கவும் செலவிடலாம் என்றது கருதுகிறது.

வெள்ளை மாளிகை அறிவுறுத்திய பாரிய நோய்தொற்று கொள்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலும் வழமையாக ஆக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலும் மருத்துவமனைகள் நிறைந்துள்ளதுடன் சேர்ந்து, உற்பத்தி மற்றும் ஏனைய அத்தியாவசியமல்லாத உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் ஒரேயொரு பகுதியும் கூட அடைக்கப்படவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அலெக்சாண்டர் மின்னஞ்சல்களின் குழப்பமான பிதற்றல்கள், இப்போது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள நிஜமான கொள்கையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. “சுவீடன் முன்மாதிரி" “அமெரிக்க முன்மாதிரியாக" ஆகி உள்ளது. இதனால் தான் ஒவ்வொரு நாளும் 3,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தொற்றுநோய்க்கு அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு பாரியளவில் ஒரு சமூக குற்றமாக உள்ளது. உயர்மட்டங்களில் தெரிந்தே எடுக்கப்பட்ட முடிவுகள் நூறாயிரக் கணக்கானவர்கள் உயிரிழப்பதற்கு இட்டுச் செல்கிறது. வரவிருக்கும் நாட்களில், இந்த பேரிடர் மீது ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் பெயரிடப்பட்டு, அவர்களின் குற்றங்களுக்காக சட்டரீதியில் அவர்கள் கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும்.

வெள்ளை மாளிகையின் மோசடியான வாதங்கள் என்னவாக இருந்தாலும், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும், கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இது அத்தியாவசியமல்லாத உற்பத்திகளை நிறுத்தவும் மற்றும் இழந்த எல்லா கூலிகள் மற்றும் சிறு வணிகங்களின் வருமானங்களுக்கு உதவித்தொகைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.

ஆளும் உயரடுக்கு அதன் சொந்த செல்வசெழிப்புக்காக மனித உயிர்களைத் தியாகம் செய்யும் அதன் கொள்கையைத் தானே விருப்பமுடன் முன்வந்து விட்டுக் கொடுக்காது. தங்களின் சொந்த உயிரையும் தங்களின் அன்புக்குரியவர்களின் உயிரையும் காப்பாற்றுவது தொழிலாளர்கள் வசம் உள்ளது! இந்த வேலைத்திட்டத்திற்காக போராட விரும்பும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

Loading