கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு: ஈவிரக்கமற்ற அலட்சியம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் கொரொனா வைரஸ் ஆய்வு நிறுவனத்தினால் உலகளவில் பதிவு செய்யப்பட்ட 16,000 புதிய நோயாளிகளுடன், உலகளாவிய கொரொனா வைரஸ் தொற்றுநோய் நேற்று ஒரு புதிய கட்டத்தை எட்டியது. 2,547 புதிய நோயாளிகளை அறிவித்த இத்தாலியில் வெள்ளியன்று மேலும் 250 பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் இறப்பு 2,086 ஆக அதிகரித்து அண்மித்து இரட்டிப்பானது. அமெரிக்காவில் ஒன்பது புதிய உயிரிழப்புகளுடன் அண்மித்து 572 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று, நியூ யோர்க் டைம்ஸ்அந்த வைரஸ் பரவுவதற்கான பல்வேறு சூழல்களை விவரித்த உள்ளக CDC மதிப்பீடுகளை வெளியிட்டு, “அமெரிக்காவில் இந்த தொற்றுநோயின் போக்கில் 160 மில்லியனுக்கும் 214 மில்லியனுக்கும் இடையிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்றும், “ஏறத்தாழ 200,000 இல் இருந்து 1.7 மில்லியன் மக்கள் வரையில் உயிரிழக்கக்கூடும்,” என்றும் நிறைவு செய்திருந்தது. டைம்ஸ்தொடர்ந்து குறிப்பிடுகையில், “அமெரிக்காவில் 2.4 மில்லியனில் இருந்து 21 மில்லியன் வரையிலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டியிருக்கும், இது மருத்துவபணியாளர் கவனிக்கத்தக்க வெறும் சுமார் 925,000 மருத்துவமனை படுக்கைகளை மட்டுமே கொண்டுள்ள தேசத்தின் மருத்துவத்துறையையே நாசப்படுத்தி விடக்கூடும்,” என்று குறிப்பிட்டது.

இந்த அதிகரித்து வரும் பேரிடரை எதிர்கொண்டிருக்கையில், நிலைமையின் தீவிரத்திற்கும் உலக அரசாங்கங்களினது விடையிறுப்புக்கும் இடையே பாரியளவில் ஒரு இடைவெளி நிலவுகிறது.

மேலோட்டமாக பார்க்கையில், இந்த விடையிறுப்பு குழப்பமானதாக, ஒழுங்கமைப்பின்றி, முன்ஆயத்தமற்றதாக தெரிகிறது. இவை அனைத்தும் உண்மை தான், ஆனால் இந்த குழப்பத்திலிருந்து ஒரு தீர்க்கமான கொள்கை எழுகிறது, அதை ஈவிரக்கமற்ற அலட்சியம் என்றே வரையறுக்க முடியும். அதாவது, மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மற்றும் இந்த வைரஸ் பரவுவதன் மீது அலட்சியமான ஒரு அணுகுமுறையை எடுப்பதற்கும் உணர்வுடன் சில முடிவுகளை எடுத்துவருகின்றன.

1960 களின் இறுதியில், அமெரிக்கா எங்கிலும் பெருந்திரளான வேலைநிறுத்தங்களும், நகர்புற கலகங்களும், போர்-எதிர்ப்பு போராட்டங்களும் பரவிய போது, ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் வலதுசாரி ஆலோசகர் டானியல் பாட்ரிக் மொய்னிஹன் அமெரிக்க நகரங்களை "வேண்டுமென்றே அலட்சியப்படுத்தும்" ஒரு கொள்கையை —அதாவது, தொழிலாள வர்க்க போராட்டத்தின் மையங்களில் மக்கள்தொகை குறைப்பை அதிகப்படுத்தக்கூடிய விதத்தில் பாரிய சமூக அமைதியின்மைக்கான காரணங்களை கவனத்தில் கொள்ளாதிருக்கும் ஒரு கொள்கையை முன்மொழிந்தார்.

பாரியளவில் ஒருங்கிணைந்த அரசாங்க ஒத்துழைப்பின் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய, இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு அரசாங்கங்கள் அவற்றின் முற்றிலும் செயலூக்கமற்ற விடையிறுப்பில், ஒருவிதத்தில் இன்னும் அதிக கபடத்தனமான "வேண்டுமென்றே அலட்சியப்படுத்தும்" கொள்கையை விரிவுபடுத்தி உள்ளன.

இந்த வாரம், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் கூறுகையில், ஜேர்மன் மக்கள்தொகையில் 60 இருந்து 70 சதவீதம் பேருக்கு அனேகமாக தொற்று ஏற்படலாமென தெரிவித்தார். நூறாயிரக் கணக்கானவர் அல்லது மில்லியன் கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிடும் என்பதே இதன் அர்த்தமாகும். வியாழனன்று. பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் அறிவிக்கையில், “பிரிட்டிஷ் மக்களுக்கு நான் உண்மையை கூறவேண்டியுள்ளது: இன்னும் பல குடும்பங்கள் அவர்களின் காலத்திற்கு முன்னரே அவர்களின் அன்புக்குரியவர்களை இழக்க இருக்கிறார்கள்,” என்றார்.

பிரிட்டிஷ் அரசாங்கமும் சரி ஜேர்மன் அரசாங்கமும் சரி, இந்த நெருக்கடியைக் கையாள இன்னும் அதிக கூடுதலான நிதி ஒதுக்கீடுகளைக் குறித்து ஒன்றும் அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, ஜோன்சனின் தலைமை விஞ்ஞானத்துறை ஆலோசகர் Sir Patrick Vallance வலியுறுத்துகையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த கொரொனா வைரஸ் பொதுமக்களைப் பாதிப்பதிலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்க கூடாது: ஒவ்வொருவரும் அதை பெறுவதைத் தடுப்பது சாத்தியமே இல்லை, அது விருப்பத்திற்குரியதும் இல்லை,” என்றார்.

குறைந்தபட்சம் ஆளும் வர்க்கத்தின் சில உறுப்பினர்கள் கொரொனா வைரஸ் உயிரிழப்புகளை விரும்பத்தக்கதாக பார்க்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரிட்டிஷ் பத்திரிகை டெலிகிராப்பின் கட்டுரையாளர் ஜெர்மி வார்னர் எழுதுகையில் ஆளும் வட்டாரங்களுக்குள் என்ன விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டார், “பொருத்தமற்ற விகிதாசாரத்தில் உள்ள பல வயதான பராமரிக்கவேண்டியவர்களை அகற்றுவதற்கு, COVID-19 நீண்டகால அடிப்படையில் அனேகமாக ஓரளவுக்கு ஆதாயமானதாக நிரூபணமாகக் கூடும்,” என்றார்.

வெள்ளை மாளிகையின் ரோசாதோட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி கொரோனாவைரஸ் பற்றி 13 மார்ச் உரையாற்றுகின்றார் (AP Photo/Evan Vucci)

ஆனால் மிகவும் ஈவிரக்கமற்ற விடையிறுப்பு அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. வெள்ளியன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் மிகப் பெரிய மருத்துவத்துறை மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் சிலவற்றின் செயலதிகாரிகளுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

இந்த நோய் பரவுவதைத் தடுக்கவோ அல்லது இந்த நோய்க்கான சிகிச்சையை விரிவாக்கவோ ட்ரம்ப் எந்த கூடுதல் நடவடிக்கைகளையும் அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர், நடைமுறையளவில் ஒட்டுமொத்த அரசாங்க விடையிறுப்பும் தனியார் பெருநிறுவனங்களை நோக்கி திருப்பப்படும் என்று அறிவித்தார்.

நோய் தடுப்பு மையம் பரிசோதிப்பதற்குப் பதிலாக, நடைமுறையளவில் அனைத்து கொரொனா வைரஸ் பரிசோதனைகளும் Quest Diagnostics மற்றும் Labcorp போன்ற தனியார் பெறுநிறுவனங்களால் நடத்தப்பட உள்ளன. மருத்துவமனைகளில் அல்லது பொது இடங்களில் சிகிச்சை வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவை வால்மார்ட், டார்கெட் மற்றும் CVS போன்ற பிரதான சில்லரை விற்பனை அங்காடிகளின் வாகன நிறுத்துமிடங்களில் நடத்தப்பட உள்ளன. பரிசோதனை கோருவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான வலைத் தளம் வடிவமைக்கப்படும் என்றும், இலாபத்திற்கான ஒரு நிறுவனமான கூகுளினால் அது செயல்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். அதுபோன்றவொரு வலைத் தளம் இதுவரையில் இல்லை என்பதை பின்னர் கூகுள் தெளிவுபடுத்தியது.

இந்த தொற்றுநோய் அவருடன் நிற்கும் அந்த பெருநிறுவன செயலதிகாரிகளுக்கு இலாபத்திற்கான ஒரு வாய்ப்பு என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தினார், அவர்கள் ஏதோ தேசிய மாவீரர்களைப் போல அவரைச் சுற்றி வலம் வந்தனர்.

உண்மையில், இலாபத்திற்கான அவர்களின் வெறியானது இந்த பேரிடரைச் சாத்தியமாக்கி உள்ள அமைப்புரீதியிலான சீரழிவு மற்றும் சமூக சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததற்கும் அப்பாற்பட்டு உள்ளது. தசாப்தங்களாக, இத்தகைய செல்வந்த தட்டுக்கள் தான் ஒவ்வொரு சமூக தேவையையும் "பங்குத்தாரர் மதிப்புக்கு" அடிபணிய செய்துள்ளன என்பதுடன், அந்த சொல் தான் முன்பினும் அதிகமாக செல்வவள திரட்சியை நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கரங்களுக்குக் கைமாற்றுவதை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

மில்லியனிய செயலதிகாரிகள் பலர் பக்கவாட்டில் நிற்க, ட்ரம்ப், பெருநிறுவன அரசின் உருவடிவமாக தோற்றமளித்தார். வோல் ஸ்ட்ரீட்டுக்கு முழுவதும் பணத்தைப் பாய்ச்சுவதற்கு அப்பாற்பட்டு, தேசிய அவசரநிலைக்கு ஒரு பொலிஸ் ஒடுக்குமுறை எந்திரத்தைக் கட்டமைப்பதே அரசாங்கம் வகிக்கும் ஒரே பாத்திரம் என்பதாக அவர் பார்க்கிறார்.

ஆளும் உயரடுக்குகள், கொரொனா வைரஸ் தொற்றுநோயை ஒருபோதும் ஒரு மருத்துவக் கவனிப்பு நெருக்கடியாக பார்க்கவில்லை, மாறாக ஒரு சந்தை நிகழ்வாக பார்க்கின்றன. இந்த நோயால் பங்கு விலைகளில் ஏற்படும் பாதிப்பு தான் எப்போதும் அவர்களின் ஒப்புயர்வற்ற கவலையாக உள்ளது.

2008 மற்றும் 2009 இல் இருந்ததைப் போலவே, வோல் ஸ்ட்ரீட்டுக்குள் பாரியளவில் பணத்தையும் சமூக ஆதாரவளங்களையும் பாய்ச்சுவதே விடையிறுப்பாக உள்ளது. பெடரல் ரிசர்வ் நிதியியல் அமைப்புமுறைக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு வழங்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ட்ரம்ப் பத்திரிகையாளர் கூட்டம் நடந்தது, இந்த தொகை 2008 வங்கி பிணையெடுப்பின் நிஜமான அளவை விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம் என்பதுடன் வெள்ளிக்கிழமை உலக சுகாதார அமைப்பு கோரிய அவசரகால கொரொனா வைரஸ் நிதி ஒதுக்கீடு தொகையை விட ஏறத்தாழ ஆயிரம் மடங்கு அதிகமாகும்.

மக்கள் எப்படி சாகிறார்கள் என்பது விடயமல்ல, மக்கள் எந்த நரகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டாலும் என் அரசாங்கம் உங்கள் செல்வவளத்தைப் பாதுகாக்கும் என்று ட்ரம்ப் வோல் ஸ்ட்ரீட்டுக்கு மிகவும் தெளிவான ஒரு சேதியை அனுப்புகிறார்.

நோய் எதிர்ப்பு மருந்துகள், செயற்கை சுவாசம் மற்றும் அவசரகால காற்றோட்டம் என சிறந்த வசதிகளை அணுகுவதற்கான வசதி மற்றும் தங்களின் பிரத்யேக "சிறப்பு கவனிப்பு மருத்துவ சிகிச்சை" ஆகியவற்றுடன் நிதியியல் செல்வந்த தட்டுக்களோ தங்களுக்கு சிறந்த கவனிப்பு கிடைக்கும் என்பதை அறிந்துள்ள அதேவேளையில் கூட்டத்தால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் மருத்துவத்துறை தொழிலாளர்களோ யார் வாழ வேண்டும் யார் சாக வேண்டுமென மனவருத்ததிற்குரிய முடிவெடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

வோல் ஸ்ட்ரீட்டுக்கு சேதி கிடைத்து விட்டது. ட்ரம்ப் பேச தொடங்கிய அந்த நேரத்திற்கும் சந்தைகள் முடிவடைந்த நேரத்திற்கும் இடையே அந்த அரை மணி நேரத்தில் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி சுமார் 1,400 புள்ளிகள் உயர்ந்தன, இது வரலாற்றிலேயே ஒருநாளில் பங்குச் சந்தை விற்பனையின் மிக அதிகபட்ச அளவாகும்.

ஆளும் வர்க்கத்தின் பிரதான அச்சம், கொரொனா வைரஸால் ஏற்படும் நாசகரமான உடல்நல பாதிப்புகள் இல்லை, மாறாக சமூக போராட்டங்களின் அதிகரிப்பாகும், இதற்கு அவர்கள் வன்முறை மற்றும் ஒடுக்குமுறையைக் கொண்டு விடையிறுப்பார்கள். இத்தாலியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் வெளிநடப்புகளின் வெடிப்பும், இந்த தொற்றுநோய்க்கு மத்தியிலும் அவர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்ற நிலைமையை எதிர்த்து போராடுவதும், தொழிலாள வர்க்க விடையிறுப்பின் தொடக்கம் மட்டுமே ஆகும்.

உலகெங்கிலும் தொழிலாள வர்க்க இயக்கத்தின் அபிவிருத்தி ஒரு முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணி ஆக்கப்பட வேண்டும். செல்வந்த தட்டுக்களின் அலட்சியம் மற்றும் புறக்கணிப்புக்கு முன்னால், இந்த நோயை எதிர்த்து போராடுவதற்கு, தொழிலாள வர்க்கம் மிகப் பெரியளவில் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒரு நடவடிக்கைக்காக போராட வேண்டும்.

ட்ரில்லியன் கணக்கான டாலர்களின் ஒதுக்கீடு பங்கு மதிப்புகளை அதிகரிக்கவும் மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வ வளத்தை அதிகரிப்பதற்காகவும் அல்ல, மாறாக பரிசோதனை அவசியப்படும் ஒவ்வொருவருக்கும் உலகெங்கிலும் பரிசோதனைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், புதிய மருத்துவ சிகிச்சை உள்கட்டமைப்பை உருவாக்கவும், எப்பாடுபட்டாவது அவசியமான மருத்துவத்துறை சாதனங்களின் உற்பத்திக்கும், பாதுகாப்பற்ற நிலைமைகளின் காரணமாக வேலை செய்ய முடியாத அனைவருக்கும் அவசரகால உதவிகள் வழங்குவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் அசுரத்தனமான மனிதாபிமானமற்ற விடையிறுப்பு இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் நிஜமான இயல்பை அம்பலப்படுத்திக் காட்டுகிறது, இது மிகப் பெரும்பான்மையினரை விலையாக கொடுத்து ஒருசிலருக்கு பாரியளவில் செல்வ செழிப்பை வழங்குகிறது. நாகரீக சமூகத்திற்கான மிகவும் அடிப்படை அவசிய தேவைகளைப் பெறுவதற்கு இந்த அமைப்புமுறையைக் கவிழ்ப்பதும் மற்றும் சோசலிசத்தைக் கொண்டு அதை பிரதியீடு செய்வதும் அவசியமாகும்.

கட்டுரையாளர்பரிந்துரைக்கும்ஏனையகட்டுரைகள்:

கொரோனா பெரும் தொற்றுநோய்க்கு முதலாளித்துவத்தின் அழிவுகரமான பதில்

[4 March 2020]

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட என்ன செய்ய வேண்டும்

[6 March 2020]

Trump’s coronavirus address: Ignorance, xenophobia and helplessness
[12 March 2020]

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், முதலாளித்துவத்தின் தோல்வியும்

[10 March 2020]

Loading