முன்னோக்கு

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நவம்பர் 28, 1820 இல் பிறந்தார். இரண்டரை ஆண்டுகள் அவரைவிட மூத்த அவரது நண்பர் கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ் விஞ்ஞான சோசலிசத்தை நிறுவினார். இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்களின் வாழ்க்கையின் பணி சமகாலத்திற்கு அளவிலா முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. மார்க்சிசத்தை மறுக்க முயற்சித்து தமது எழுத்துக்களால் முழு நூலகங்களையும் நிரப்பிய எண்ணற்ற கல்வியாளர்களைக் காட்டிலும் அவர்கள் மிகவும் தொலைநோக்குடையவர்களாக இருந்தனர்.

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ்

நிதியச் சந்தைகள் முற்றிலும் கட்டுப்பாட்டினுள் இல்லை; ஒரு மூன்றாம் உலகப் போர் வெடிப்பினை வர்த்தகப் போர்கள் அச்சுறுத்துகின்றன; மிருகத்தனமான நவகாலனித்துவ போர்களால் உலகின் முழு பகுதிகளும் அழிக்கப்படுகின்றன; அமெரிக்கா உட்பட மிக முக்கியமான முதலாளித்துவ நாடுகளில் ஜனநாயகம் சிதைவடைகின்றது; ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு சூழ்கின்றது; கொரோனா வைரஸ் தொற்றுநோயால் முற்றிலும் தவிர்க்கக்கூடிய நூறாயிரக்கணக்கானோரின் மரணங்கள் நிகழ்கிறது; சமூக சமத்துவமின்மையின் மட்டமானது, 26 தனிநபர்கள் உலக மக்கள்தொகையில் ஏழ்மையான பாதி அளவினருக்கு அதிகமான செல்வத்தை வைத்திருக்கும் நிலையில் உள்ளது. இவை அனைத்தும் 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதியது போல் “பாதாள உலகிலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற்போன மந்திரவாதியின் நிலையில்” “நவீன முதலாளித்துவ சமூகம்” இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்வதிலும் அதன் வீழ்ச்சியைக் கணிப்பதுடன் மட்டும் தங்களைக் கட்டுப்படுத்தவில்லை. அவர்கள் இருவரும் புரட்சியாளர்களாக இருந்தனர். அவர்களின் அரசியல் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளிலிருந்து பிரித்து அவர்களின் தத்துவார்த்த பணியை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. முந்தைய அனைத்து சோசலிஸ்டுகள், குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் மற்றும் அரசியல் அமைப்பின் பிற விமர்சகர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தியது என்னவென்றால், முதலாளித்துவ சமுதாயத்தில் ஒரே "உண்மையான புரட்சிகர வர்க்கமான" தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே காட்டுமிராண்டித்தனத்தினுள் மூழ்குவதைத் தடுக்க முடியும் மற்றும் சமுதாயத்தை வர்க்கங்களாக பிரிப்பதை இல்லாதொழித்து, மனித நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு மகத்தான முன்னேற்றத்திற்கு அடித்தளத்தை அமைக்க முடியும் என்ற நுண்ணறிவு அவர்களிடம் இருந்ததே.

1883 ஆம் ஆண்டில் தனது நண்பரின் கல்லறையில் பேசிய ஏங்கெல்ஸ் இந்த விஷயத்தை வலியுறுத்தினார்:

மார்க்ஸ் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புரட்சியாளராக இருந்தார். முதலாளித்துவ சமுதாயத்தையும் அது கொண்டுவந்த அரசு அமைப்புகளையும் ஏதோ ஒரு வழியில் தூக்கியெறிய பங்களிப்பதும், நவீன பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கும், அதன் சொந்த நிலை மற்றும் அதன் தேவைகளை பற்றி முதலில் விழிப்புணர்வடையச் செய்வதும், அதன் விடுதலைக்கான நிலைமைகளை நனவடையச் செய்வதுமாகும். போராடுவது அவரது இயல்பாகும். அவர் ஒரு ஆர்வத்துடனும், ஒரு சிலராலேயே நின்று பிடிக்கக்கூடிய உறுதியான தன்மையுடனும் வெற்றியுடனும் போராடினார்.

ஏங்கெல்ஸுக்கும் இது பொருந்தும். 1935 ஆம் ஆண்டில், ஏங்கெல்ஸின் மரணத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி ஒரு அற்புதமான கட்டுரையில் அவரைப்பற்றி ஒரு விவரணத்தை வரைந்தார். அதில் அவர் ஏங்கெல்ஸை, இலண்டனில் ஏங்கெல்ஸுடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய கார்ல் காவுட்ஸ்கியுடன் ஒப்பிட்டார். காவுட்ஸ்கி பின்னர் இரண்டாம் அகிலத்தின் மார்க்சிச தத்துவாசிரியர்களில் ஒருவராக உயர்ந்ததுடன் இறுதியில் அக்டோபர் புரட்சியின் கடுமையான எதிரியாக வெளிப்பட்டார்.

ட்ரொட்ஸ்கியின் கூற்றுப்படி, "வியன்னாவின் குட்டி முதலாளித்துவ, சுய திருப்தி மற்றும் அகங்கார மற்றும் பழமைவாதி" என்று காவுட்ஸ்கியை ஏங்கெல்ஸ் கண்டுகொண்டார். அவர் காவுட்ஸ்கி மற்றும் லண்டனில் வாழ்ந்துவந்த எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் ஆகியோருக்கு “மார்க்சிச முறையை உள்ளீர்த்துக்கொள்ள உதவினார். ட்ரொட்ஸ்கி தொடர்ந்தார்: “ஆனால், அவர்களுள் புரட்சிகர விருப்பத்தையோ அல்லது தைரியமாக சிந்திக்கும் திறனையோ அவரால் உட்பதியவைக்க முடியவில்லை. மாணவர்கள் வேறொரு உள்ளறிவுத் திறனின் பிள்ளைகளாக இருந்தார்கள்." "அவரது முழு மற்றும் நீண்ட வாழ்நாள் முழுவதும், காவுட்ஸ்கி தனது சிந்தனை மற்றும் உடலியல் அமைதியைக் குலைப்பதாக அச்சுறுத்திய அந்த முடிவுகளை சுற்றிக்கொண்டிருக்க முடிந்தது. அவர் ஒரு புரட்சியாளர் அல்ல. இது அவரை சிகப்பு தளபதியிடம் [Red General - ஏங்கெல்ஸ்] இருந்து பிரித்த ஒரு கடந்துசெல்லமுடியாத தடையாகும்” என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். [2]

மார்க்சிசத்திற்கு ஏங்கெல்ஸின் பங்களிப்பு

இளைஞனாக ஏங்கெல்ஸ்

மார்க்சிசத்தின் வளர்ச்சிக்கு ஏங்கெல்ஸின் பங்களிப்பு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. மார்க்ஸின் வாழ்நாளில் தான் இரண்டாவது வயலின் வாசித்ததாக பொறாமைக்கான எந்த தடயமும் இல்லாமல் அவரே ஒப்புக்கொண்டார். ஆனால், மார்க்ஸ் முதலில் செய்ததற்கு குறைவில்லாமல் அவர் அதிசயமாய் தேர்ச்சி பெற்றார் என்பதையும், அவர்களின் சேர்ந்து இயங்கிய காலமானது தொடர்ந்து சாதனைகளின் புதிய உயரங்களை எட்டுவதற்கான பரஸ்பர உத்வேகத்தை அளித்தது என்பதையும் ஒருவர் சேர்க்க வேண்டும்.

"மார்க்ஸ் ஏங்கெல்ஸ் போன்ற சக்திவாய்ந்த மனோபாவங்கள் மற்றும் கருத்தியல் சுதந்திரம் கொண்ட இரண்டு மனிதர்களின் இணையான நிகழ்வைக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களின் கருத்துக்கள், அவர்களின் சமூக செயல்பாடு மற்றும் தனிப்பட்ட நட்பின் பரிணாம வளர்ச்சியால் பிரிக்கமுடியாமல் பிணைக்கப்பட்டுள்ளனர்" என ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். “எவராலும் அவர்களது படைப்புகளுக்கு இடையில் ஒரு பிரிக்கும் கோட்டை வரையமுடியாதளவிற்கு இரண்டு நண்பர்களின் ஒத்துழைப்பும் மிகவும் பரந்த அளவில் இருந்தது. இருப்பினும், முற்றிலும் எழுத்துரீதியான ஒத்துழைப்பை விட அவர்களுக்கு இடையே இருந்த ஒருபோதும் உடைக்கப்படாதிருந்த எல்லையற்ற முக்கியம் என்னவெனில், அவர்களுக்கிடையேயான சிந்தனாரீதியான ஒன்றிணைப்பாகும்… சுமார் நான்கு தசாப்தங்களாக, உத்தியோகபூர்வ விஞ்ஞான மற்றும் பாரம்பரிய மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில், அவர்களுக்கு எதிராக இருந்த பகிரங்க கருத்துக்கு எதிராக மார்க்ஸும் மற்றும் ஏங்கெல்ஸும் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக்கொண்டனர்.” [3]

அரசியல் பொருளாதாரத் துறையிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கைப் புரிந்துகொள்வதிலும் ஏங்கெல்ஸ் அவர்களின் பொதுவான உலகக் கண்ணோட்டத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கினார். அவரது குடும்பப் பின்னணி மற்றும் அவரது முப்பது ஆண்டுகால வணிக வாழ்க்கை மற்றும் அந்த நேரத்தில் முன்னணி தொழில்துறை சக்தியான இங்கிலாந்தில் தொழிலாளர்கள் இயக்கம் குறித்த அவரது முழுமையான அறிவு காரணமாக, அவர் இந்த விஷயங்களில் முதல் அறிவைப் பெற்றிருந்தார். மேலும், அவர் ஒரு கலைக்களஞ்சியம் போன்ற சிந்தனையை கொண்டிருந்தார். அவர் இரண்டு டஜன் மொழிகளில் முற்றாக அல்லது சற்று தேர்ச்சி பெற்றிருந்தார். ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டது போல், "தத்துவம், பொருளாதாரம், வரலாறு, இயற்பியல், தத்துவவியல் மற்றும் இராணுவ அறிவியல் பற்றிய அவரது அறிவு, நல்ல ஒரு டஜன் சாதாரண மற்றும் அசாதாரண பேராசிரியர்களுக்கு இருந்ததற்கு போதுமானதாக இருந்திருக்கும்". [4]

பார்மன் (Barmen) நகரில் ஒரு ஜவுளி தொழிலதிபரின் ஒன்பது குழந்தைகளில் மூத்தவராக ஏங்கெல்ஸ் பிறந்தார். இது இன்று வூப்பெற்றால் (Wuppertal) நகரத்தின் ஒரு பாகமாக உள்ளது. அவர் ஒரு உயர்கல்விகூடத்தில் கல்விகற்றார். ஆனால் அவரது தந்தையால் தனது இறுதி ஆண்டில் தனது படிப்பை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தந்தையார் தனது நிறுவனத்தில் தனது வணிகப் பயிற்சியைத் அவர் தொடங்கவேண்டும் என்று விரும்பினார். 1838 ஆம் ஆண்டு கோடையில் இருந்து, அவர் மூன்று ஆண்டுகளாக பிறேமன் நகரில் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். அங்கு அவரது இலக்கிய வாழ்க்கையும் தொடங்கியது. இடது தாராளவாத Telegraph für Deutschland ல் ஒரு புனைபெயரில் ஏங்கெல்ஸ் “வூப்பெற்றாலிலிருந்து வந்த கடிதங்கள்” என்பவற்றை வெளியிட்டார். அதில் அவர் தனது வாழ்ந்த பகுதி மற்றும் அவரது பெற்றோரின் வீட்டுடனான ஆழமாக உட்பொதிந்த பக்தியுடன் கணக்குகளைத் தீர்த்துக் கொண்டதுடன், மேலும் தொழில்துறை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சமூக துயரங்களை வெளிப்படுத்தினார்.

தனது 21 வது பிறந்தநாளுக்கு சற்று முன்பு, ஏங்கெல்ஸ் தனது இராணுவ சேவையை முடிக்க உத்தியோகபூர்வமாக ஒரு வருடம் பேர்லினுக்குச் சென்றார். இருப்பினும், அவர் தத்துவத்தின் தீவிர ஆய்வில் கவனம் செலுத்தி, இளம் ஹெகலியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். தனது எழுத்துப் பணிகளையும் தொடர்ந்தார். மற்ற வெளியீடுகளுக்கிடையில், கார்ல் மார்க்ஸால் தொகுத்தமைக்கப்பட்ட Rheinische Zeitung இற்காக அவர் எழுதினார். ஆனால் ஒரு சுருக்கமான சந்திப்பைத் தவிர மார்க்ஸுடன் தனிப்பட்ட தொடர்பு இருக்கவில்லை. இளம் ஏங்கெல்ஸ் தத்துவத் துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். பேர்லின் பல்கலைக்கழகத்தில் ஹெகலின் பதவியை எடுத்துக்கொண்ட ஷெல்லிங்கின் பகுத்தறிவற்ற தன்மைக்கு எதிராக, அநாமதேயமாக வெளியிடப்பட்ட இரண்டு சிறந்த விமர்சனரீதியான கட்டுரைகளுடன் அவர் கணிசமான ஆரவாரத்தை தூண்டினார்.

1842 இன் பிற்பகுதியில், ஏங்கெல்ஸ் மான்செஸ்டரில் உள்ள தனது தந்தையின் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றார். தொல்சீர் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபாடுகொள்ளவும், தொழிலாள வர்க்கத்தின் நிலையைப் படிக்கவும், பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ளவும் அவர் அங்கு தனது நேரத்தைப் பயன்படுத்தினார். 1863 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை அவரது நண்பியாக இருந்த ஐரிஷ் தொழிலாளியான மேரி பேர்ன்ஸ் என்பவரை அவர் காதலித்த காலமும் இதுதான்.

ஏங்கெல்ஸின் வருகைக்கு பல மாதங்களுக்கு முன்னர், சார்ட்டிச இயக்கம் (Chartist movement) உச்சத்தை எட்டியிருந்தது. 70,000 உறுப்பினர்களைக் கொண்ட இது உலகத்தில் தொழிலாள வர்க்கத்தின் முதல் வெகுஜன அரசியல் இயக்கமாகும். 21 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் உலகளாவிய வாக்குரிமை மற்றும் தொடர்ச்சியான சமூக சீர்திருத்தங்களை கோரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் சார்ட்டிஸ்டுகள் 3.3 மில்லியன் கையொப்பங்களை சேகரித்தனர். நாடாளுமன்றம் மனுவை நிராகரித்தது தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களைத் தூண்டியது. அவை கொடூரமாக அடக்கப்பட்டன. இடதுசாரி சார்ட்டிச தலைவர் ஜூலியன் ஹார்னியுடன் ஏங்கெல்ஸ் நட்பு கொண்டதுடன் அவரது செய்தித்தாளான Northern Star க்காக எழுதினார். ராபேர்ட் ஓவனின் கற்பனாவாத சோசலிசத்தைப் பின்பற்றுபவர்களுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

பின்னர், 1844 ஆம் ஆண்டின் முற்பகுதியில், 23 வயதான ஏங்கெல்ஸ் தேசிய பொருளாதாரத்தின் ஒரு விமர்சனத்திற்கான உருவரை என்ற கட்டுரையை வெளியிட்டார். இது மார்க்ஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதான் சோசலிசத்தினை நெறிமுறை அல்லது தார்மீக அனுமானங்களில் இருந்தல்லாது அரசியல் பொருளாதாரத்தில் அடித்தளமாக கொண்ட முதல் முயற்சியாகும். இக்கட்டுரையில், ஏங்கெல்ஸ் "சமகால பொருளாதார ஒழுங்கின் முக்கிய நிகழ்வுகளை ஒரு சோசலிச நிலைப்பாட்டில் இருந்து ஆராய்ந்தார். அவை தனியார் சொத்துடைமையின் ஆதிக்கத்தின் தவிர்க்கமுடியாத விளைவுகள் என்று கருதினார்" என்று லெனின் பின்னர் ஏங்கெல்ஸின் இரங்கலுரையில் எழுதினார். [5]

ஒரு வருடம் கழித்து, ஏங்கெல்ஸ் தனது அவதானிப்புகளை இங்கிலாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிலை என்ற புத்தகத்தில் சுருக்கமாகக் கூறினார். இதனை பின்னர் மார்க்ஸ் மூலதனத்தினை எழுதுவதற்கு அடித்தளமாக கொண்டார். அதில் இவர் பாட்டாளி வர்க்கத்தை வெறுமனே ஒரு துன்பப்படும் வர்க்கமாக அல்ல, மாறாக ஒரு போராடும் வர்க்கமாக, சோசலிச புரட்சியை தம்முள்ளே சுமப்பவராக அவர் சித்தரித்தார்.

ஏங்கெல்ஸின் தேசிய பொருளாதாரத்தின் ஒரு விமர்சனத்திற்கான உருவரை, Deutsch-Französische Jahrbücher இல் பதிப்பில் முதல்தடவையாகவும் மற்றும் ஒரேயொரு பதிப்பில் தோன்றியது. இது, பிரஷ்ய அரசின் பிற்போக்குத்தனத்திலிருந்து தப்பியோடி பாரிஸில் இருந்த மார்க்ஸ் மற்றும் ஆர்னால்ட் ரூஹெ இனால் உருவாக்கப்பட்டது. அதே தொகுதியில், ஹேகலிய கருத்துவாதத்துடன் முறித்துக் கொண்ட ஒரு மைல்கல்லான உரிமை தொடர்பான ஹேகலின் மெய்யியலின் மீதான விமர்சனத்தை மார்க்ஸ் வெளியிட்டார்.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இடையே ஒத்துழைப்பு

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் பாரிஸில் முதல் சந்திப்பில். இளம் மார்க்ஸ் என்ற திரைப்பட காட்சியிலிருந்து [நன்றி: Kris Dewitte, Neue Visionen Filmverleih]

39 ஆண்டுகளுக்கு பின்னர் மார்க்ஸ் இறக்கும் வரை நீடிக்கும் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இந்த கட்டத்தில் தொடங்கியது. மான்செஸ்டரிலிருந்து திரும்பிய பயணத்தில், ஏங்கெல்ஸ் 10 நாட்கள் தீவிர விவாதத்திற்காக பாரிஸில் மார்க்ஸை சந்தித்தார். இதன் விளைவாக அனைத்து முக்கியமான கேள்விகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த கலந்துரையாடலின் விளைவாக எழுதப்பட்ட, புனித குடும்பம்: விமர்சனரீதியான விமர்சனம் மீதான விமர்சனம், இளம் ஹெகலியர்களுடன் கணக்குகளை இரக்கமின்றி தீர்த்துக் கொண்டது. இது 1845 இன் தொடக்கத்தில் இருவரின் கூட்டு பெயரின் கீழ் வெளியிடப்பட்டது.

தங்களை நம்பமுடியாத புரட்சியாளர்களாகக் காட்டிக் கொண்ட இளம் ஹெகலியர்கள், அனைத்து வர்க்கங்களுக்கும் கட்சிகளுக்கும் மேலாக நிற்கும் விமர்சனங்களை ஆதரித்ததுடன், அனைத்து நடைமுறை நடவடிக்கைகளையும் நிராகரித்து, மேலும் தொழிலாள வர்க்கத்தை ஒரு விமர்சனமற்ற வெகுஜனமாக இழிவுபடுத்தினர். அராஜகவாதம் மற்றும் பிராங்பேர்ட் பள்ளியின் "விமர்சனக் கோட்பாடு" இரண்டுமே பின்னர் இளம் ஹெகலியர்களை அடிப்படையாகக் கொண்டவையாகின. அவர்களின் “நனவை மாற்றுவதற்கான கோரிக்கை யதார்த்தத்தை வேறொரு வழியில் விளக்குவதற்கான கோரிக்கைக்கு சமமாகும். அதாவது, அதை மற்றொரு வழியில் விளக்கமளிப்பதன் மூலம் அங்கீகரிக்க வேண்டும் என்பதாகும்” என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் அதைப்பற்றி இழிவாக எழுதினர். [6]

“உலகத்தை உலுக்கும் அவர்களின் அறிக்கைகளுக்கு மத்தியிலும், “இளம் ஹெகலியர்கள் உறுதியான பழமைவாதிகளாவர். மார்க்ஸும் ஏங்கெல்ஸும் மேலும் குறிப்பிடுகையில், அவர்கள் “இந்த சொற்றொடர்களால் வெறுமனே எதிர்த்துப் போராடும்போது, யதார்த்தமாக இருக்கும் உண்மையான உலகத்தை எந்த வகையிலும் எதிர்த்துப் போராடுவதில்லை” என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

மேற்கண்ட மேற்கோள் 1845-46 குளிர்காலத்தில் பிரஸ்ஸல்ஸில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய ஒரு விரிவான படைப்பான ஜேர்மன் தத்துவஞானம்என்பதில் இருந்து எடுக்கப்பட்டது. அங்கு ஏங்கெல்ஸ் அப்போது மார்க்ஸுடன் சேர்ந்தார். இது இளம் ஹெகலியர்களின் விமர்சனத்தைத் தொடர்ந்தது மற்றும் லுட்விக் ஃபயர்பாக்கை அதனுள் சேர்க்க அதை விரிவுபடுத்தியது. ஹேகலின் புறநிலை கருத்தியலை ஒரு சடவாத நிலைப்பாட்டில் இருந்து முதலில் விமர்சித்தவர் ஃபயர்பாக் ஆகும். இதனால் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் மீது அவர் கணிசமான செல்வாக்கை செலுத்தினார். ஆனால் அவரது சடவாதம் மனிதனின் செயற்பாட்டை விலக்கி, சிந்திக்கக்கூடிய, செயலற்ற மற்றும் வரலாற்றுரீதியானதல்லாததாக இருந்தது.

ஜேர்மன் தத்துவஞானத்தில், மார்க்ஸும் ஏங்கெல்ஸும் வரலாற்றின் சடவாத கருத்தை விரிவாக விவரித்தனர். அதனை பின்னர் தமது பெரும் படைப்பிற்கான அடித்தளமாக கொண்டனர்.

வரலாறு தொடர்பான இந்த கருத்தியல்,

வாழ்க்கையின் பொருள் உற்பத்தியில் இருந்து தொடங்கும் உற்பத்தியின் உண்மையான செயல்முறையை விவரிக்கின்ற, இந்த உற்பத்திமுறையுடன் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பரிமாற்றவடிவத்தைப் புரிந்துகொள்வதற்கும், அனைத்து வரலாற்றின் அடிப்படையாக உள்ள இந்த உற்பத்தி முறையால் உருவாக்கப்படும் (அதாவது, முதலாளித்துவ சமூகத்தின் பல்வேறு கட்டங்களில்),… நனவு, மதம், மெய்யியல், நெறிமுறைகள் போன்ற பல்வேறு தத்துவார்த்த உருவாக்கங்கள் மற்றும் வடிவங்களை விளக்கி, அவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அந்த அடிப்படையில் இருந்து அறிய உதவுகின்றது…..

[வரலாற்றின் சடவாத கருத்து] கருத்திலிருந்து நடைமுறையை விளக்கவில்லை, ஆனால் கருத்துக்களின் உருவாக்கத்தை சடவாத நடைமுறையிலிருந்து விளக்குகிறது; அதன்படி, நனவின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் சிந்தனையின் விமர்சனத்தால் இல்லாதொழிக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறது… ஆனால் இந்த கருத்தியல்வாத தாழ்வுக்கு வழிவகுத்த தற்போதுள்ள யதார்த்தமான சமூக உறவுகளை நடைமுறையில் தூக்கிவீசுவதால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். விமர்சனம் அல்ல புரட்சியே வரலாற்றினதும் உந்து சக்தியே தவிர மற்றும் மதம், மெய்யியல் மற்றும் பிறவகை தத்துவங்களும் அல்ல. [7]

"பொருளாதாய கூறுகள்" போதுமானதாக இருக்கும்போது ஒரு புரட்சி ஏற்படுகிறது. "ஒருபுறம், தற்போதுள்ள உற்பத்தி சக்திகள், மறுபுறம் ஒரு புரட்சிகர வெகுஜனங்களின் உருவாக்கம். இது சமூகத்தின் தனி நிலைமைகளுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக அது அடித்தளமாக கொண்டுள்ள 'மொத்த செயல்பாடாக இருந்த' அதுவரையுள்ள 'வாழ்க்கையின் உற்பத்திக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றது.” [7]

1932 ஆம் ஆண்டில் மட்டுமே முழுமையாக வெளிவந்த ஜேர்மன் தத்துவஞானத்தை வெளியிடுவதில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் வெற்றிபெறவில்லை. ஆனால் அவர்கள் தங்களது மிக முக்கியமான இலக்கான சுய தெளிவை அடைந்தனர். ஜேர்மன் தத்துவஞானத்திற்கான ஆய்வுகள் இதுவரை எழுதப்பட்ட மிகப் பெரிய அரசியல் வேலைத்திட்டமான கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைக்கு வழிவகுத்தது. 1847 ஆம் ஆண்டில், மார்க்ஸும் ஏங்கெல்ஸும் நீதிக்கான கழகத்தில் இணைந்தனர். இதில் நாடுகடந்த ஏராளமான ஜேர்மானியர்கள் தீவிரமாக இயங்கி வந்தனர். அந்த கழகம் அவர்களை அழைத்ததோடு, அவர்களின் வேண்டுகோளின் பேரில் அதன் பெயரை கம்யூனிஸ்ட் கழகம் என மாற்ற ஒப்புக்கொண்டது. அதன் விஞ்ஞாபனத்தை எழுத மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கழகத்தால் அக் கழகத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன் தெளிவு, தொலைநோக்கு மற்றும் தைரியத்துடன் இன்றும் வாசகரை ஈர்க்கும் இந்த படைப்புக்கு ஒரு சில வாக்கியங்களால் ஒரு தகுதியை வழங்குவது ஒரு பெரிய சவாலாகும். அதில், மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஒரு சில பரந்த பக்கங்களில் அனைத்து பிராந்திய மற்றும் தேசிய எல்லைகளையும் கிழித்து, வர்க்க முரண்பாடுகளை தீவிரப்படுத்தி, இறுதியில் அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சக்திகளைக் கட்டுப்படுத்த இயலாது என்பதை நிரூபிக்கும் முதலாளித்துவ அமைப்பின் ஆற்றல்மிக்க வளர்ச்சியை வரைகிறார்கள். "ஆனால் முதலாளித்துவம் தனக்கு மரணத்தைத் உருவாக்கும் ஆயுதங்களை மட்டும் தன்னகத்தே உருவாக்கியுள்ளது மட்டுமல்லாது, அந்த ஆயுதங்களை பயன்படுத்தக்கூடிய நவீன தொழிலாள வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் இருப்பையும் அது கொண்டுவந்துள்ளது” என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதினர்.

இதிலிருந்து ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் எழுகின்றது. அதன் அடிப்படை அம்சங்கள் இன்றுவரை அவற்றின் செல்தகமையை தக்கவைத்துள்ளன. அதன் மத்திய வலியுறுத்தலாக உள்ளவை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும் அதன் சர்வதேச தன்மையும் ஆகும். இந்த அறிக்கையில் முந்தைய சோசலிசத்தின் அனைத்து வடிவங்களான கற்பனாவாத, குட்டி முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவத்தின் மீதான கூர்மையான விமர்சனமும் அடங்குவதுடன், மேலும் வெடிக்கவிருந்த ஜனநாயக புரட்சியின் பணிகளையும் வரையறுக்கிறது. “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!” என்ற புகழ்பெற்ற அறிவிப்புடன் இது முடிகிறது.

1848 புரட்சி

சிகப்பு நிறத்தில் பதிக்கப்பட்ட Neue Rheinische Zeitung பத்திரிகை கவிஞர்Freiligrath இன் முடிவுரையுடன்

பிப்ரவரி 21, 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை லண்டனில் வெளிவந்தது. இதன் மூன்று நாட்களுக்குப் பின்னர், பிரான்சில் ஒரு புரட்சிகர எழுச்சி முடியாட்சியைத் தூக்கியெறிந்தது. புரட்சி மார்ச் மாதத்தில் ஜேர்மனியில் பரவி மற்றும் ஐரோப்பா முழுவதும் வேகமாக விரிவடைந்தது. ஜேர்மன் மாநிலங்களின் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் பதவிகளை கைவிட்டு அல்லது பாராளுமன்றங்களையும் அரசியலமைப்புகளையும் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மே மாதத்தில், தேசிய சட்டமன்றம் பிராங்ஃபேர்ட்டில் உள்ள பௌல் தேவாலயத்தில் கூட்டத்தைத் தொடங்கி, அங்கு ஐக்கியப்பட்ட ஜேர்மனிக்கு ஒரு அரசியலமைப்பை வரைய வேண்டி இருந்தது.

புரட்சியில் பங்கேற்க மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஒரு கணம் கூட தயங்கவில்லை. 1843 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட Rheinische Zeitung ன் பாரம்பரியத்தை தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோர் கொலோனில் Neue Rheinische Zeitung (NRZ) ஐ நிறுவினர். ஜூன் 1, 1848 மற்றும் மே 19, 1849 க்கு இடையில் 301 பதிப்புகள் வெளிவந்ததுடன், அதன் வெளியீடு 6,000 பிரதிகளை எட்டியது. இது அந்த நேரத்தில் கணிசமான எண்ணிக்கையாகும். இந்த செய்தித்தாள் தன்னை ஜனநாயக முகாமின் இடதுசாரிகளாகவும், முதலாளித்துவ புரட்சியை முன்னோக்கி செலுத்துவதை அதன் பணியாகவும் பார்த்தது. இது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் அறிவித்தபடி, "இது உடனடியாக வரும் பாட்டாளி வர்க்க புரட்சியின் முன்னோடியாக இருக்கும்."

அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய பழமையான தொழில்நுட்ப வசதிகளுடன் தினசரி செய்தித்தாளை வெளியிடுவதற்கு மார்க்ஸும் ஏங்கெல்ஸும் மேற்கொண்ட பணிகளின் அளவை புரிந்துகொள்வது சாத்தியமில்லாதது. ஏராளமான கட்டுரைகளை பங்களிக்கும் அதே வேளையில், பணம் திரட்டுவதற்கும் சந்தாதாரர்களை பதிவு செய்வதற்கும் ஏங்கெல்ஸ் நாடு முழுவதும் பயணம் செய்தார். தலைமை ஆசிரியராக, மார்க்ஸ் ஆசிரியர் குழுவின் உந்து சக்தியாக இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே நிதி சிக்கல்கள் இந்த திட்டத்தை எதிர்கொண்டன - குறிப்பாக முதல் பதிப்பில் ஏங்கெல்ஸ் பௌல் தேவாலயத்தில் உள்ள தேசிய சட்டமன்ற பிரதிநிதிகளை கடுமையாக கண்டனம் செய்த பின்னர், அவர் நிகழ்ச்சி நிரலைப் பற்றி வாதிட்டார். அண்டை மாநிலமான வீஸ்பாடனில் புரட்சிகர போராளிகள் பிரஷ்யன் தோட்டாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டுகையில் உணவு இடைவேளையை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்தியதை கடுமையாக கண்டித்தார்.

ஆனால் Neue Rheinische Zeitung முதலாளித்துவ தாராளவாதிகள் மீதான அதன் விமர்சனத்தில் பின்வாங்கவில்லை, இது விரைவில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுடன் இல்லாமல் புரட்சிக்கு எதிரான நிலப்பிரபுத்துவ பிற்போக்குடனும் ஒன்றிணைந்தது. ஜேர்மனியில் புரட்சி மற்றும் எதிர்-புரட்சி என்ற நூலில் இந்த காலத்தின் அனுபவங்களை ஏங்கெல்ஸ் பின்னர் சுருக்கமாகக் கூறினார். இது முதலில் New York Daily Tribune ல் ஒரு தொடராகத் தோன்றியது. இன்றுவரை, இது 1848 புரட்சியின் சிறந்த விபரணங்களில் ஒன்றாக உள்ளது.

ஜேர்மன் "ஜனநாயக" குட்டி முதலாளித்துவம் அன்றிலிருந்து இன்றுவரை உறுதிப்படுத்திய பிராங்ஃபேர்ட் தேசிய சட்டமன்றத்தின் மீது கண்டனத்தை ஏங்கெல்ஸ் வெளியிட்டார்: "வயதான பெண்களின் இந்த சட்டமன்றம், அதன் முதல் நாளிலிருந்தே, அனைத்து ஜேர்மன் அரசாங்கங்களின் ஒட்டுமொத்த பிற்போக்குத்தனமான அனைத்து சதிகளையும் விட பிரபல்யம் குறைந்த மக்கள் இயக்கத்தை பற்றி அச்சமடைந்திருந்தது." [8]

1850 மார்ச்சில், மார்க்ஸும் ஏங்கெல்ஸும் 1848 புரட்சியின் அரசியல் படிப்பினைகளை கம்யூனிஸ்ட் கழகத்தின் மத்திய குழுவிற்கான உரை இல் சுருக்கமாகக் கூறினர். இது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவிருந்தது. அவர்கள் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளிடமிருந்து தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனத்தை வலியுறுத்தினர்:

ஜனநாயக குட்டி முதலாளித்துவம், முழு சமூகத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்க நலன்களுக்காக மாற்ற விரும்புவதைத் தவிர்த்து, தற்போதுள்ள சமுதாயத்தை தாங்கிக் கொள்ளக்கூடியதாகவும், தங்களுக்கு முடிந்தவரை வசதியாகவும் இருக்கவும் வைத்திருக்கும் சமூக நிலைமைகளில் மாற்றத்தை மட்டுமே விரும்புகிறது.… [தொழிலாளர்கள்] தங்கள் சொந்த வர்க்க நலன்களைப் அறிந்துகொள்வதன் மூலமும், விரைவில் தங்கள் சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வதன் மூலமும், ஜனநாயகத்தின் பாசாங்குத்தனமான சொற்றொடர்களால் பாட்டாளி வர்க்கத்தின் சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சியின் அவசியத்தை ஒரு நிமிடமும் சந்தேகிக்க, ஒருகணமும் தவறாக வழிநடத்த, அனுமதிக்காததன் மூலமும், தங்கள் [இறுதி] வெற்றிக்கு பெரும்பாலான பங்களிப்பை வழங்க வேண்டும்.

“நிரந்தரமான புரட்சி” என்பதே பாட்டாளி வர்க்கத்தின் போர் முழக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் மார்க்சும் ஏங்கல்சும் தமது உரையை முடித்தனர். [9]

இலண்டனும் மான்ஷெஸ்டரும்

Neue Rheinische Zeitung தடை செய்யப்பட்ட பின்னர், மார்க்ஸும் அவரது குடும்பத்தினரும் இலண்டனுக்கு நாட்டை விட்டு வெளியேறினர். பாடனில் முன்னேறிக்கொண்டிருந்த பிரஷ்ய இராணுவத்துடன் போராடிக் கொண்டிருந்த புரட்சிகர சக்திகளுடன் ஏங்கெல்ஸ் இணைந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் யூனியன் படைகளின் தரப்பில் பின்னர் ஜெனரலாக பணியாற்றி மூன்று போர்களில் பங்கேற்ற ஆகஸ்ட் வில்லிச்சின் துணைவராக, இருந்தார். வில்லிச் பின்னர் சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி வழியாக பயணம் செய்து லண்டன் சென்றார்.

நாடுகடந்த முதல் தசாப்தம் கடுமையான நிதி சிக்கல்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. புரட்சியைக் காட்டிக் கொடுத்த ஜனநாயகவாதிகளுடன் சமாதானம் செய்ய மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தயாராக இருக்காததால், அவர்களின் இலண்டனில் இருந்த நாடுகடந்தவர்களால் வீரர்களாக கொண்டாடப்பட்டனர். தனது வாழ்வாதாரத்திற்கு நிதியளிப்பதற்காகவும், மார்க்ஸை ஆதரிப்பதற்காகவும் ஏங்கெல்ஸ் தனது தந்தையின் மான்செஸ்டர் தொழிற்சாலையில் வணிக எழுத்தராக தனது பணிக்குத் திரும்பினார். இது மார்க்ஸை மூலதனத்திற்கான வேலையில் கவனம் செலுத்த அனுமதித்தது. ஆரம்பத்தில் அவரது வருமானம் மிதமானதாகவே இருந்தாலும் பின்னர் அவருக்கு தொழிற்சாலையில் ஒரு பங்கு கிடைத்தது. 1870, அவர் தனது பங்கை தனது பொருளாதார நிலைமையைப் பாதுகாக்கும் விலைக்கு விற்க முடிந்ததுடன் மேலும் மார்க்சின் குடும்பத்தை ஆதரிக்க அவருக்கு உதவியது. மார்க்சின் மரணத்திற்குப் பின்னரும், ஏங்கெல்ஸ் அவரது மகள்களுக்கு தனக்கு கிடைத்த செல்வத்தில் பெரும் பகுதியை கொண்டு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் (பின்னணியில்) முதலாம் அகிலத்தின் 1872 ஹாக் காங்கிரஸில்

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வெவ்வேறு நகரங்களில் வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் கடிதங்களில் கிட்டத்தட்ட தினசரி கருத்து பரிமாற்றத்தை பராமரித்தனர், இதன் மூலம் அவர்கள் தீவிரமான தத்துவார்த்த மற்றும் அரசியல் ஒத்துழைப்பைத் தொடர்ந்தனர். மார்க்ஸ் தனது முக்கிய படைப்பான மூலதனத்தை ஏங்கெல்ஸுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் வரைந்தார். அவரது நிபுணத்துவ அறிவின் காரணமாக அடிக்கடி ஆலோசனை கேட்டார். அவரது நண்பரின் எல்லையற்ற நட்பும் ஆதரவும் இல்லாதிருந்தால், மார்க்ஸ் தனது உலக வரலாற்றுப் பணிகளை ஒருபோதும் முடித்திருக்க முடியாது.

மூலதனத்தின் முதல் தொகுதி 1867 இல் தோன்றியது. 1883 இல் மார்க்ஸ் இறந்தபோது இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் முழுமையடையாதிருந்தது. அவற்றின் நிறைவு மற்றும் வெளியீட்டிற்கான பொறுப்பை ஏங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார். ஏங்கெல்ஸ் இந்த வேலையை எவ்வளவு விரைவாகவும் கவனமாகவும் நடத்தினார் என்பதை ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விவரித்தார்:

ஏங்கெல்ஸ் மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை புரிந்துகொள்வது, மெருகூட்டியது, படியெடுத்தது, திருத்தியது மற்றும் சிறுகுறிப்புக்களே இணைத்தது மட்டுமல்லாமல், விரோதமான தாக்குதல்களுக்கு எதிராக மார்க்ஸின் நினைவை பாதுகாப்பதற்காக கழுகுக்கண்ணுடன் விழிப்புடன் இருந்தார். [10]

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தங்கள் நாளின் உலக அரசியல் நிகழ்வுகளான அமெரிக்க உள்நாட்டுப் போர், கிரிமியன் போர், 1863 இன் போலந்து எழுச்சி மற்றும் பல நிகழ்வுகள் குறித்து தீவிரமான மற்றும் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய விவாதத்தையும் நடத்தினர். இந்த பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் சர்வதேச வெளியீடுகளில் எழுதினர். ஏங்கெல்ஸ் சில சமயங்களில் மார்க்ஸை பணியில் இருந்து விடுவித்து, பின்னர் மார்க்ஸின் பெயரில் வெளிவந்த கட்டுரைகளை எழுதினார்.

சூழ்நிலைகள் அனுமதிக்கப்பட்டவுடன் அவர்கள் மீண்டும் அரசியல் ரீதியாக தீவிரமாகினர். 1850 களில் ஒரு காலகட்டமான பிற்போக்குத்தனத்திற்கு பின்னர், தொழிலாளர்களின் இயக்கம் 1860 களின் தொடக்கத்திலிருந்து வலுவாக வளர்ந்தது. 1864 ஆம் ஆண்டில், முதல் அகிலமான அனைத்துலக தொழிலாளர்கள் சங்கம் நிறுவப்பட்டது. மார்க்ஸ் அதன் வழிகாட்டும் உந்துசக்தியாக இருந்தார். இது ஒரு ஐக்கியப்பட்ட, சோசலிச முன்னோக்கில் தொழிலாளர் இயக்கத்தை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாகும். மேலும் இது மார்க்சின் நேரத்தில் கணிசமான பகுதியைக் வேண்டி நின்றது.

மான்செஸ்டரில் அவரது தொழில்முறை, பத்திரிகை மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு நேரம் எடுத்துக் கொண்ட போதிலும், ஏங்கெல்ஸ் தனது கல்வியைத் தொடர நேரம் கிடைத்தது. அவர் மொழிகள் குறித்த தனது அறிவை விரிவுபடுத்தி ஆழப்படுத்தினார். அவர் ஒரு இராணுவ விஞ்ஞானியாக உருவெடுத்ததுடன் முதலாளித்துவ வட்டாரங்களில் மரியாதை பெற்றார். இது அவருக்கு "ஜெனரல்" என்ற புனைப்பெயரைப் பெற்றுக்கொடுத்தது. மேலும் அவர் இயற்கை விஞ்ஞானத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை நெருக்கமாகப் பின்பற்றினார்.

மார்க்ஸின் மரணத்தின் பின்னர் ஏங்கெல்ஸின் பங்கு

1893 சூரிச்சில்சர்வதேச சோசலிச தொழிலாளர் காங்கிரஸில் கிளாரா ஷெட்கின் (3 ஆவதாக இடதிலிருந்து), ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், யூலி பேபல், அகுஸ்ட் பேபல்

கார்ல் மார்க்ஸ் மார்ச் 14, 1883 இல் காலமானார். ஏங்கெல்ஸ் அவரைவிட 12 ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்தார். இந்த நேரத்தில், அவர் மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை நிறைவுசெய்தது மட்டுமல்லாமல், மார்க்சிசத்தின் மேலதிக வளர்ச்சிக்கு ஒரு தீர்க்கமான மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கினார் மற்றும் வேகமாக வளர்ந்துவந்த சர்வதேச சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே 1870 களில், உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சின் படைப்பு திறன்கள் கணிசமாகக் குறைந்துவிட்டதால், அவர்களின் கூட்டுப் பணிகளில் ஏங்கெல்ஸின் பங்களிப்பு தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான துறைகளில் வளர்ந்தது. வரலாற்று சடவாத உலகக் கண்ணோட்டத்தில் செயல்படுவதில் மார்க்ஸ் “முதல் வயலின்” வாசித்திருந்தால், புதிய வெகுஜன தொழிலாள வர்க்கக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதில் ஏங்கெல்ஸ் இந்த பங்கை ஏற்றுக்கொண்டார். இது அதனுடன் புதிய சவால்களை முன்கொண்டு வந்தது.

மான்செஸ்டரிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து, ஏங்கெல்ஸ் விரைவில் சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் உறுப்பினரானதுடன், பெல்ஜியம், இத்தாலி மற்றும் ஸ்பெயினின் தொடர்புடைய செயலாளராக இருந்தார். ரஷ்ய மொழி பேசும் திறன்கொண்ட ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்ஸ் ஆகியோர் ரஷ்யாவிலும் கவனம் செலுத்தினர்.

ஜேர்மன்-பிரெஞ்சுப் போர் மற்றும் 1871 இல் பாரிஸ் கம்யூனின் தோல்வி ஆகியவற்றைத் தொடர்ந்து சர்வதேச தொழிலாளர் சங்கம் நெருக்கடியில் மூழ்கி, இறுதியில் கலைக்கப்பட்டது. ஆனால் சோசலிச தொழிலாளர் இயக்கம் விரைவில் மீண்டும் வேகமாக வளரத் தொடங்கியது. ஆகஸ்ட் 14, 1889 அன்று, பிரெஞ்சு புரட்சியின் 100 வது ஆண்டு தினத்தில் இரண்டாம் அகிலம் பாரிஸில் ஏங்கெல்ஸின் முயற்சியில் ஸ்தாபிக்கப்பட்டது. அதில் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 கட்சிகள் மற்றும் அமைப்புகள் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் தலைவர்களுடன் ஏங்கெல்ஸ் குறிப்பாக நெருங்கிய தொடர்பில் இருந்துடன் அவர்கள் தொடர்ந்து அவரது ஆலோசனையை நாடினார்.

முதலாவது அகிலத்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆற்றிய முக்கிய பங்கையும் மற்றும் இரண்டாம் அகிலத்தில் ஏங்கெல்ஸின் பங்கினையும் கார்ல் காவுட்ஸ்கி பின்வருமாறு விவரித்தார்:

அனைத்து நாடுகளிலுமிருந்த புத்திசாலித்தனமான சோசலிச நனவு கொண்டவர்கள் தாங்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் இருந்த போதெல்லாம் லண்டனில் உள்ள அந்த இரண்டு நீண்ட அனுபவம் மிகுந்தவர்களிடம் ஆலோசனை பெறச் சென்றதில் ஆச்சரியமில்லை. அங்கு சென்றவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடையவில்லை. அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் தங்களை நிர்ப்பந்தப்படுத்தி கொள்ளாமலும் பேசினர். எந்த பாட்டாளி வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்தின் விஷயத்தை தீவிரமாக எடுக்கும் எவரும், இந்த இருவரிடமும் சென்றது வீணாகவில்லை. அவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் போராடும் முழு பாட்டாளி வர்க்கத்தின் ஆலோசகர்களாக இருந்தனர். வெவ்வேறு மொழிகளில் உள்ள அவர்களது துண்டுப்பிரசுரங்கள், ஏராளமான கட்டுரைகள் மற்றும் எண்ணற்ற கடிதங்கள் இதற்கான சான்றுகளாக உள்ளன. [11]

ஏங்கெல்ஸால் பராமரிக்கப்பட்ட கடிதங்களின் நம்பமுடியாத அளவை அவர்களின் படைப்புகளின் முழுமையான மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தொகுப்பு நூல்களினால் அளவிட முடியும். இது இன்னும் கிடைக்ககூடியதாக உள்ளது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் முழு கடிதமும் 35 தொகுதிகளை நிரப்புகிறது. அவை ஒவ்வொன்றும் 1,300 முதல் 1,500 பக்கங்கள் வரை கொண்டுள்ளன. அவற்றில் 13 இதுவரை அச்சிடப்பட்டுள்ளன. மார்க்சின் மரணத்திற்கு பின்னரான ஏங்கெல்ஸ் தானே பராமரித்துக் கொண்ட கடிதங்கள் 10 தொகுதிகளை மட்டும் உள்ளடக்கியுள்ளது.

சர்வதேச அரசியல் பணிகளுடன், மார்க்சின் இலக்கிய தேட்டங்களை நிர்வகிப்பது மற்றும் மூலதனத்தின் இரண்டு இறுதி தொகுதிகளை நிறைவு செய்தல் -இவை ஒவ்வொன்றும் பலரின் உழைப்பு தேவைப்பட்டிருக்கும்- உலக சோசலிச இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடிப்படையாக ஏங்கெல்ஸ் மார்க்சிசத்தின் வெற்றியைப் பாதுகாக்கும் பல குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதினார். அவை அதிக எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு, ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மார்க்சிசத்தை உலகெங்கிலும் உள்ள நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கிடைக்கும்படி செய்தன.

மொழியில் ஏங்கெல்ஸின் திறமையான ஆளுமை, சிக்கலான விஷயங்களை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் முன்வைக்கும் திறன், அவரது கலைக்களஞ்சிய அறிவு மற்றும் மிகவும் தீவிரமான தலைப்புகளுடன் கூட பிரகாசித்த அவரது நகைச்சுவை ஆகியவை, இன்றுவரை அவரது படைப்புகளை வாசிக்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது. இது மார்க்சிச படைப்புகளுக்கு மட்டுமல்ல, அவரது சமகால கட்டுரைகள் மற்றும் பங்களிப்புகளுக்கும் பொருந்தும். இவற்றில் அவர் மார்க்ஸை தவிர ஒருவேளை லியோன் ட்ரொட்ஸ்கி மட்டுமே கொண்டிருந்த அரசியல் கூர்மையையும் தொலைநோக்கான பார்வையையும் வெளிப்படுத்தினார்.

எடுத்துக்காட்டாக, டிசம்பர் 1887 இல், முதலாளித்துவ பொருளாதாரம் தடுத்து நிறுத்த முடியாத உயர்ச்சியடையும் பாதையில் இருந்தபோதும், முதல் சீர்திருத்தவாத மாயைகள் சமூக ஜனநாயகத்தில் தங்களை வெளிப்பாட்டை கண்டபோதும், ஏங்கெல்ஸ் ஒரு உலகப் போர் வெடிப்பதை குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணித்தார். ஒரு இராணுவவாத எதிர்ப்பு துண்டுப்பிரசுரத்தின் முன்னுரையில், அவர் பின்வருமாறு எச்சரித்தார்:

பிரஷ்யா-ஜேர்மனிக்கு முன்னொருபோதும் இல்லாதவாறான விரிவடைந்த மற்றும் தீவிரமானதுமான ஒரு உலகப் போரைத்தவிர வேறு ஒரு போர் இனி சாத்தியமில்லை என்றானது. எட்டு முதல் பத்து மில்லியன் வீரர்கள் ஒருவரையொருவர் படுகொலை செய்வார்கள், அவ்வாறு செய்வதன் மூலம் வெட்டுக்கிளிகளின் படையினால் வெறிச்சோட செய்வதுபோல் ஐரோப்பா முழுவதையும் அவர்கள் விழுங்கிக்கொள்வர். 30 ஆண்டுகால போரின் பேரழிவுகள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் சுருக்கப்பட்டு, முழு கண்டத்திலும் பரவியது. பஞ்சம், கொள்ளைநோய், படைகளுக்கும் மற்றும் பெருந்திரளான மக்களுக்கும் கடுமையான துயரத்தால் ஏற்படும் பொது மனச்சோர்வு; வர்த்தகம், தொழில் மற்றும் கடன் ஆகியவற்றில் எங்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட நம்பிக்கையற்ற குழப்பம் பொது திவால்நிலையில் முடிவடைவது; பழைய அரசுகளின் சரிவு மற்றும் நடைபாதையில் டஜன் கணக்கான கிரீடங்கள் உருளும்போது அவற்றை எடுக்க யாரும் இல்லாத அவற்றின் பாரம்பரிய அரசு மதிநுட்பம்; இது எவ்வாறு முடிவடையும், யார் போராட்டத்தில் இருந்து வெற்றியாளராக வெளியே வருவார்கள் என்பதை முன்னறிவிப்பதற்கான முழுமையான சாத்தியமற்றதன்மை இருக்கும்போது ஒரே ஒரு முடிவு முற்றிலும் உறுதியாக உள்ளது: அதாவது பொது சோர்வு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் இறுதி வெற்றிக்கான நிலைமைகளை நிறுவுதலே. [12]

சமூக ஜனநாயகவாதிகளின் அமைப்புரீதியான வெற்றிகளை எதிர்கொள்கையில், ஏங்கெல்ஸ் தனது வாழ்க்கையின் முடிவில் ஒரு சீர்திருத்தவாதியாக மாற்றப்பட்டார் என்ற கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை இந்த வரிகள் மட்டுமே தெளிவுபடுத்துகின்றன.

மார்க்ஸ் உயிருடன் இருந்தபோது, அவருடன் நெருங்கிய ஒத்துழைப்புடன், ஏங்கெல்ஸ் தொடர்ச்சியான அடிப்படை தத்துவார்த்த எழுத்துக்களை வெளியிட்டார். அவர்கள் கூட்டாக உழைக்கும் உலகக் கண்ணோட்டத்தை முறையான மற்றும் ஒத்திசைவான முறையில் முன்வைத்தது மட்டுமல்லாமல், அதை மேலும் அபிவிருத்தி செய்தனர். 19ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்ட இயற்கை விஞ்ஞானம் பற்றிய ஏங்கெல்ஸின் விரிவான அறிவு குறிப்பாக ஒரு முக்கிய பங்கைக் வகித்தது. அவருக்குப் பின் லெனினைப் போலவே, இயற்கை விஞ்ஞானத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை தொடர்ந்து கருத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால், சடவாத தத்துவத்தை பாதுகாக்கவும் முடியாது, மேலும் அபிவிருத்தி செய்யவும்முடியாது என்பதை ஏங்கெல்ஸ் புரிந்து கொண்டிருந்தார்.

1877 மற்றும் 1878 க்கு இடையில்,திரு. ஒய்கன் டூரிங்கின் விஞ்ஞானத்தில் புரட்சி என்ற தலைப்பில் ஆரம்பத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முக்கிய வெளியீடான Vorwärts இல் தொடர் கட்டுரைகளாக வெளியிடப்பட்டது. முதன்முதலில் தத்துவார்த்த வாயடிப்பாளருக்கு எதிரான ஒரு வாதமாகவும், பின்னர் இனவெறி யூத-விரோத நிறுவனர் ஒய்கன் டூரிங், இறுதி உண்மைகளின் ஒரு "அமைப்பை" பிரகடனப்படுத்தியதும் சமூக ஜனநாயகக் கட்சியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. டூரிங்கிற்கு மறுப்பு விரைவில் தத்துவம், இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் பற்றிய விரிவான மார்க்சிச நிலைப்பாடாக அபிவிருத்தியடைந்தது. ஏங்கெல்ஸ் எழுதினார், “எனது எதிர்மறையான விமர்சனம் நேர்மறையானதாக மாறியது. இந்த விவாதம் இயங்கியல் முறையின் மார்க்ஸும் நானும் வெற்றிகண்ட கம்யூனிச உலகக் கண்ணோட்டத்தின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இணைக்கப்பட்ட விளக்கமாக மாற்றப்பட்டது. இது ஒரு தொடர் விரிவான துறைகளை உள்ளடக்கிய ஒரு விளக்கமானது.” [13]

இயற்கையின் இயங்கியல் மற்றும் ஏனைய எதிர்கால படைப்புகளில் ஏங்கெல்ஸ் ஆழமாக ஆராயும் வரலாற்று மற்றும் இயங்கியல் சடவாதம் பற்றிய அனைத்து கருத்துக்களையும் முன்வைக்கும் டூரிங்கிற்கு மறுப்பு, மார்க்ஸுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பில் வெளிப்பட்டது. "முழு கையெழுத்துப் பிரதியையும் அச்சிடுவதற்கு முன்பே நான் அவருக்கு வாசித்து காட்டினேன். பொருளாதாரம் குறித்த பகுதியின் பத்தாவது அத்தியாயம் (“From Kritische Geschichte” - விமர்னரீதியான வரலாற்றிலிருந்து) மார்க்ஸால் எழுதப்பட்டது," என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார். [14] டூரிங்கிற்கு மறுப்பு மார்க்ஸின் கருத்துக்களை "நேர்மறையாக" மோசடி செய்வதாக வெளிவந்த பிந்தைய குற்றச்சாட்டுகள் வெறும் கற்பனையானவை.

டூரிங்கிற்கு மறுப்பு இனை அடித்தளமாக கொண்டு, ஏங்கெல்ஸ் சோசலிசம்: கற்பனாவாதமும் விஞ்ஞானமும் என்ற சோசலிசத்திற்கான அறிமுகத்தை வெளியிட்டார். அதற்காக மார்க்ஸ் ஒரு முன்னுரை எழுதினார். இது ஏராளமான மொழிகளில் எண்ணற்ற பதிப்புகளில் பின்னர் வெளியிடப்பட்டது.

இயற்கையின் இயங்கியல் இன் முக்கிய அத்தியாயங்கள், முழுமையடையாத மற்றும் ஏங்கெல்ஸின் மரணத்திற்குப் பின்னர்தான் வெளிவந்த ஒரு படைப்பு ஏற்கனவே 1870 களில் உருவாக்கப்பட்டது. ஏங்கெல்ஸ் அதில், இயங்கியல், சிந்தனையுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதை விரிவாகக் காட்டினார். இயற்கையானது, "இயங்கியலுக்கான ஆதாரமாகும்", இது "பொருட்களையும் அவற்றின் உருவமைப்புகளான சிந்தனைகளையும், அவற்றின் அத்தியாவசிய தொடர்பு, இணைப்பு, இயக்கம், தோற்றம் மற்றும் முடிவு ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது." "நவீன இயற்கை விஞ்ஞானம், இந்த சான்றுகளை நாளாந்தம் அதிகரித்தளவில் கிடைக்கும் மிகச் சிறந்த தகவல்களுடன் வழங்கியுள்ளது. ஆகவே, இறுதியில், இயற்கை இயங்கியல்ரீதியாக இயங்குகிறதே தவிர சிந்தனைரீதியாக அல்ல என்பதைக் காட்டுகிறது." [15]

மார்க்சின் மரணத்தைத் தொடர்ந்து, ஏங்கெல்ஸ் தொடர்ச்சியான முக்கியமான படைப்புகளை வெளியிட்டார். இது அவர்களின் பொதுவான உலகக் கண்ணோட்டத்தை தத்துவார்த்தரீதியாக ஆழப்படுத்தியது. 1884 இல் வெளியிடப்பட்ட குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் சமீபத்திய ஆராய்ச்சிகளின் உதவியுடன் முந்தைய கலாச்சார கட்டங்களில் அரசு, சொத்து, குடும்பத்தின் பங்கை ஆராய்வதற்கும் மற்றும் வரலாற்றுரீதியாக தொடர்புபடுத்தி பார்ப்பதற்கும் உதவியது. இந்த வேலை அக்டோபர் புரட்சிக்கு முன்னதாக லெனின் எழுதிய அரசும் புரட்சியும் மீது ஒரு பெரிய ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது.

லூட்விக் ஃபயர்பாக் மற்றும் தொல்லியல் ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவு (Ludwig Feuerbach and the End of Classical German Philosophy - 1888) என்பது தத்துவ வரலாற்றின் ஒரு தனித்துவமான சுருக்கமாகும். அது தத்துவஞானிகளை இரண்டு பெரிய முகாம்களாகப் பிரித்தது. முதலாவதாக கருத்துவாதிகள், “இயற்கைக்கு மேலாக மெய்ப்பொருளின் முதன்மையை வலியுறுத்தி எனவே, கடைசியாக, உலகம் ஏதேனும் ஒரு வடிவத்தில் படைக்கப்பட்டது என்ற ஊகத்திற்கு வருகின்றது. மற்றையவர்கள் “இயற்கையை முதன்மையானதாகக் கருதிய” சடவாதிகள். இது வெவ்வேறு தத்துவப் பள்ளிகளைப் புரிந்துகொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் இன்றுவரை முக்கியமாக உதவுகிறது.

இந்த அடிப்படை தத்துவார்த்த படைப்புகளுடன், மார்க்சிச இயக்கத்தின் வரலாறு (மார்க்ஸ் மற்றும் Neue Rheinische Zeitung, கம்யூனிஸ்ட் கழகத்தின் வரலாறு), வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் (கவிஞர் ஜோர்ஜ் வீர்த் மற்றும் தொழிலாளர் தலைவர் ஜோஹான் பிலிப் பெக்கர்) ஆகியோரைப் பற்றி ஏராளமான படைப்புகளையும் மார்க்சிச எழுத்துக்களின் புதிய பதிப்புகளுக்கு முக்கியமான முன்னுரைகள் மற்றும் சமகால அரசியல் பிரச்சினைகள் குறித்த அறிக்கைகளையும் எழுதியுள்ளார்.

ஏங்கெல்ஸ் 1895 ஆகஸ்ட் 5 ஆம் திகதி இலண்டனில் தனது 74 ஆவது வயதில் காலமானார்

மார்க்ஸை ஏங்கெல்ஸிற்கு எதிராக காட்ட முனைதல்

1891 இல் ஏங்கெல்ஸ்

நீண்ட காலமாக, மார்க்சின் மகள் எலினோரின் வார்த்தைகளில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் “அவர்களைப் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்கள்” என்பது ஒரு அறிந்த விடயமாக இருந்தது. ஆனால் கடந்த ஆறு தசாப்தங்களாக, இரண்டையும் பிரிக்க கல்வி வட்டங்களுக்குள் அனைத்துவகையிலும் ஒரு போட்டி உருவாகியுள்ளது.

இந்த முயற்சிகள் அனைத்திற்கும் பொதுவானது, மார்க்சிசத்தை "நேர்மறைவாத பொதுமைப்படுத்தலில்" (positivist vulgarisation) ஏங்கெல்ஸ் ஒரு குற்றவாளி என்ற குற்றச்சாட்டாகும். சடவாதத்துடன் மார்க்சிசத்தை அவர் அடையாளம் காண்பதன் மூலம், மார்க்ஸ் தனது ஆரம்பகால எழுத்துக்களில் முன்வைத்த தத்துவார்த்த மனிதநேயத்திற்கு எதிராக ஏங்கெல்ஸ் திரும்பினார் எனக் கூறப்பட்டது. மேலும், மார்க்சுக்கு இயங்கியல் என்பது சமூக நடைமுறைக்கும் மனித சிந்தனைக்கும் இடையிலான இருதிசை தாக்கத்தினால் மட்டுமே எடுத்துக்காட்டப்படுகின்றது என்றால், ஏங்கெல்ஸ் இயங்கியலை பொருட்களிலும் இயற்கையிலும் பிழையாக வேரூன்றியிருந்தார் என்றும் அக்குற்றச்சாட்டு கூறியது.

இந்த உரிமைகோரல்களை எளிதில் மறுக்க முடியும். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் வாழ்நாள் ஒத்துழைப்பு, அதேபோல் இயற்கையின் இயங்கியல் மற்றும் சடவாதம் குறித்த தனது புரிதலை ஏங்கெல்ஸ் வளர்த்துக் கொண்டார் என்பதும், நாம் காட்டியுள்ளபடி, மார்க்சுடன் நெருக்கமான ஆலோசனையுடன் என்பதையே நிரூபிக்கிறது. இருப்பினும், ஏங்கெல்ஸின் எதிரிகள் வரலாற்று உண்மைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஏங்கெல்ஸ் மற்றும் சடவாதம் மீதான தாக்குதல் "மார்க்சிசத்தை" தொழிலாள வர்க்கத்திலிருந்தும் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக ஒரு புரட்சிகர கட்சியை கட்டியமைப்பதிலிருந்தும் பிரிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

ஜோர்ஜ் லூக்காஸ் மற்றும் கார்ல் கோர்ஷ் 1920 களின் முற்பகுதியில் இத்தகைய நிலைப்பாடுகளை முன்கொண்டு வந்தனர். பின்னர் பிராங்ஃபேர்ட் பள்ளி அதனை உச்சத்திற்கு தள்ளியது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் வெளியிடப்பட்ட அவர்களின் முக்கிய படைப்பான இயங்கியல் அறிவொளியில், மக்ஸ் ஹொர்க்ஹைமர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோர் சமுதாயத்தை வரலாற்று சடவாத அடிப்படையில் புரிந்துகொள்வதையும், அதனுடன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கையும் வெளிப்படையாக நிராகரித்தனர்.

உற்பத்தி சக்திகளின் முன்னேற்றமானது சமூகப் புரட்சியின் சகாப்தத்தினால் உந்தப்படுவதில்லை, அல்லது சமூகத்தின் உயர்ந்த, சோசலிச வடிவத்திற்கான அடிப்படையை உருவாக்குவதில்லை என்று அவர்கள் கூறினர். மாறாக, இது மக்களை மந்தமாக்குவதற்கும், ஒரு கலாச்சார வீழ்ச்சியையும், இறுதியில் சமூகத்தை காட்டுமிராண்டித்தனத்தினுள் இட்டுச்செல்வதற்கும் வழிவகுக்கிறது என்றனர்.

அவர்கள் எழுதினர், “தடுக்கமுடியாத முன்னேற்றம் என்பது தடுக்கமுடியாத பின்னடைவின் சாபம் ஆகும்… தொழிலாளர்களின் சக்தியற்ற தன்மை என்பது ஆட்சியாளர்களின் முரட்டுத்தனம் மட்டுமல்ல, தொழில்துறை சமுதாயத்தின் தர்க்கரீதியான விளைவு ...” [16]

டேவிட் நார்த் எழுதியது போல, பிராங்ஃபேர்ட் பள்ளி, ஹொர்கைமர், அடோர்னோ மற்றும் மார்குஸ நிராகரித்த “மார்க்சிசத்தை பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் ஆயுதம் என்பதிலிருந்து சமூகரீதியான வடிவமற்ற கலாச்சார விமர்சனமாக மாறியது. இதில் அரசியல் அவநம்பிக்கை, சமூக அந்நியப்படுதல், மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளின் தனிப்பட்ட மற்றும் உளவியல் விரக்திகள் வெளிப்பாட்டைக் கண்டன.” [17]

1960களில் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் உலகம் முழுவதும் தீவிரமயப்படுகையில், ஏங்கெல்ஸ் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்தன. 1961 ஆம் ஆண்டில், ஜோர்ஜ் லிஸ்ட்ஹெம் தனது செல்வாக்குமிக்க, மார்க்சிசம்: ஒரு வரலாற்று மற்றும் விமர்சன ஆய்வு என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது ஏங்கெல்ஸை ஒரு பரிமாண நிர்ணயிப்பாளராகவும், நேர்மறைவாதியாகவும், அதே நேரத்தில் 1843 க்கும் 1848 க்கும் இடையில் மார்க்ஸ் தனது எழுத்துக்களில் “இருப்பு மற்றும் சாராம்சம், யதார்த்தம் மற்றும் ‘அந்நியப்படுதல்’ ஆகியவற்றின் சிக்கலான இயங்கியல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.” என சித்தரித்தது. [18]

ஒரு வருடம் கழித்து, அடோர்னோ மற்றும் ஜூர்கன் ஹேபர்மாஸின் மாணவரான அல்பிரட் ஷ்மிட் என்பவரால் மார்க்ஸின் போதனையில் இயற்கையின் கருத்து என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதுவும் இதேபோன்ற ஆய்வறிக்கைகளை ஆதரித்தது. இளைஞர்களின் எதிர்ப்பு இயக்கங்களை தொழிலாள வர்க்கத்திலிருந்து பிரிப்பதில் இந்த மார்க்சிச எதிர்ப்பு வாதங்கள் முக்கிய பங்கு வகித்தன. அடுத்துவந்த ஆண்டுகளில், இந்த நிலைப்பாடுகள் "இடது" கல்வி வட்டங்களுக்குள் மேலாதிக்கத்தை பெற்றன. மேலும் அவை பின்நவீனத்துவத்தின் பிற்போக்குத்தனமான மற்றும் பகுத்தறிவற்ற கருத்தாக்கங்களுடன் இணைக்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு, ஏங்கெல்ஸிலிருந்து காவுட்ஸ்கி, பிளெக்ஹானோவ் மற்றும் லெனின் வழியாக ஒரு நேரடிப் பாதை வழிவகுத்தது என்று லிஸ்ட்ஹெம் கூறினார். அவர்கள் அனைவரும், தங்கள் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஒரு "இயங்கியல் சடவாதத்தை" ஒரு உலகளாவிய "விஞ்ஞானமாக" ஒரு பொதுவான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். இது "சோவியத் மார்க்சிச மாளிகையின் மூலக்கல்லாக மாறியது." [19]

இந்த வாதத்தின் அபத்தமானது வெளிப்படையானது. முதலாவதாக, ஸ்ராலினிச சர்வாதிகாரம் மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக 1937–38 பாரிய பயங்கரத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த பல்லாயிரக்கணக்கான புரட்சிகர மார்க்சிஸ்டுகளை ஒடுக்கி, கொலை செய்தது. இரண்டாவதாக, ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பாளர்களின் மார்க்சிஸ்டுகள் மட்டுமே 1923 ஆம் ஆண்டு தொடங்கி ஸ்ராலினிசத்தை சரியாக மதிப்பிட்டு அதன் வளர்ச்சியை முன்னறிவித்தனர். மூன்றாவதாக, பொருளாதாரத் துறையைப் போலவே, கருத்தியல் துறையிலும் ஸ்ராலினிசம் முற்றிலும் ஒட்டுண்ணித்தனமாக வாழ்ந்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவம், ட்ரொட்ஸ்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது போல, ஒரு வர்க்கம் அல்ல. இது தொழிலாளர் அரசின் அதிகாரத்தைப் பறித்தது மற்றும் அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சொத்து உறவுகளில் ஒரு ஒட்டுண்ணியாக வாழ்ந்தது. மார்க்சிச சித்தாந்தத்திலும் இதே நிலைதான் இருந்தது. ஆட்சியாளர்கள் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சிலைகளை அமைத்து, வீதிகளுக்கும் நகரங்களுக்கும் அவர்களது பெயரிட்டு, தங்கள் புத்தகங்களை வெளியிட்டு, “இயங்கியல் சடவாதத்தை” ஒரு கட்டாய பள்ளிப் பாடமாக அறிவித்தனர். இவையெல்லாம் அவர்கள் தங்களை மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்று அர்த்தப்படுத்தவில்லை. ஒரு சர்வாதிகார அரசு எந்திரம் அதன் பின்னால் நிற்கும்போது மிகவும் புரட்சிகர தத்துவங்களைக் கூட திசைதிருப்ப முடியும் என்பதை இது காட்டுகிறது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்களின் அடிப்படையில் ஸ்ராலினிச ஆட்சியை விமர்சிக்கத் துணிந்த எவரும் இரகசிய பொலிஸ் மற்றும் அரசு வக்கீல்களால் பின்தொடரப்பட்டு சிறையில், தொழிலாளர் முகாமில் அல்லது துப்பாக்கிச் சூட்டு படைக்கு முன்னால் நிறுத்தப்பட்டனர்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னரும் ஏங்கெல்ஸ் மற்றும் வரலாற்று சடவாதம் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. "ஹேகல், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்சிசத்தின் தோற்றம்" என்ற தனது கட்டுரையில், டேவிட் நோர்த் தத்துவ பேராசிரியர் ரொம் ரோக்மோர் பற்றிய விரிவான மறுப்பை முன்வைத்துள்ளார். மார்க்சிசத்திற்குப் பின்னர் மார்க்ஸ் என்ற அவரது 2002 வெளிவந்த புத்தகத்தில் அவர் ஏங்கெல்ஸ் மீதான தாக்குதல்களை புதுப்பிக்க முயன்றார். நோர்த் அதற்கு பின்வருமாறு பதிலளித்தார்,

வரலாற்று சடவாதம், ஏங்கெல்ஸ், மார்க்சிசம் ஆகியவை இல்லாத மார்க்சிற்குத்தான் ரோக்மோர் வாதிடுகிறார்; இறுதியில் இது சோசலிசப் புரட்சி இல்லாத மார்க்ஸ், தலைகீழாக மட்டும் என்றில்லாமல் கைவிலங்குகள் மற்ற தளைகளுக்கும் உட்படுத்தப்பட்ட "மார்க்ஸ்" என்று ஆகிவிடுகின்றது. [20]

ஏங்கெல்ஸின் ஆளுமை

ஏங்கெல்ஸுடன் மார்க்ஸும் அவரது மகள்களும்

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸின் அசாதாரண மனித குணங்களை ஆராயாமல் அவரின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்க முடியாது. தனிநபர் நேர்மை, தைரியம் மற்றும் மனித விடுதலைக்கான போராட்டத்தைப் பொறுத்தவரை, அவர் உலக வரலாற்றில் மிக உயர்ந்த நபர்களில் ஒருவர். அவரது கருணை, அவரது கவர்ச்சி, அழிக்கமுடியாத நம்பிக்கை, வாழ்க்கை மீதான காதல் மற்றும் அவரது நண்பர் மார்க்ஸ் மீது அவர் கொண்டுள்ள உடைக்கமுடியாத விசுவாசம் ஆகியவற்றிற்கு சாட்சியமளிக்க எண்ணற்ற சாட்சிகள் உள்ளன. அதில் சிறந்த ஒன்று லியோன் ட்ரொட்ஸ்கியின் பேனாவிலிருந்து வந்தது:

மற்றவர்களுடனான ஏங்கெல்ஸின் உறவுகள் எல்லா உணர்ச்சிகளுக்கும் மாயைகளுக்கும் அந்நியப்பட்டதாகவும், மேலும் மேலும் எளிமையினால் ஊடுருவி இருந்ததால் அதன் மூலம் ஆழ்ந்த மனிதத்தன்மையானதாக இருந்தது. மாலை நேரத்தில் உணவுமேசையைச் சுற்றி பல்வேறு நாடுகள் மற்றும் கண்டங்களின் பிரதிநிதிகள் கூடிவந்தபோது, மெருகூட்டப்பட்ட தீவிரவாத சீமாட்டி ஷாக் மற்றும் மெருகூட்டப்பட்ட ரஷ்ய நிஹிலிஸவாதி வேரா ஜாசுலிச் ஆகியோருக்கு இடையிலான எல்லா வேறுபாடுகளும் மந்திரத்தால் மறைந்துவிட்டன. விருந்துபசாரியின் வழமான தனித்தன்மை தனது நோக்குநிலையையோ அல்லது பழக்கவழக்கங்களையோ விட்டுக்கொடுக்காமல் மற்றவர்களையும் இரண்டாம் நிலை மற்றும் மேலோட்டமான எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்துவதற்கான இந்த மகிழ்ச்சியான திறனில் வெளிப்பட்டது. [21]

இன்னும், ட்ரொட்ஸ்கியின் கூற்றுப்படி, மனிதத்தன்மையான எதுவும் ஏங்கெல்ஸுக்கு அந்நியமானதல்ல:

கடமையும் ஆழ்ந்த இணைப்பும் கொண்ட இந்த மனிதர் ஒரு துறவியை போன்ற ஒருவரல்ல. இயற்கையையும் கலையையும் அதன் அனைத்து வடிவங்களிலும் நேசித்த அவர், புத்திசாலி மற்றும் மகிழ்ச்சியான மக்களின் கூட்டணியை நேசித்தார், பெண்கள், நகைச்சுவைகள், சிரிப்பு, நல்ல இரவு உணவு, நல்ல மது மற்றும் நல்ல புகையிலையை விரும்பினார். சில நேரங்களில் தனது நாவல்களில் தரங்குறைந்த நகைச்சுவையை தேடிய ரபேலஸின் புத்தகங்களில் இருந்து சிரிப்பை தேடவும் விருப்பமில்லாமல் இருக்கவில்லை. [21]

இங்கிலாந்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றி ஆகுஸ்ட் பெபலுடன் சேர்ந்து ஜேர்மன் சமூக ஜனநாயகத்தை நிறுவியவரும் கம்யூனிஸ்ட் கழகத்தில் இணைந்த 1848 புரட்சியின் மூத்த வீரரான வில்ஹெல்ம் லீப்க்னெக்ட் ஏங்கெல்ஸின் கல்லறையில் பின்வருமாறு கூறினார்:

அவர் ஒரு அற்புதமான பன்முகத்தன்மை கொண்டவர். அதே நேரத்தில் முழுக்க முழுக்க தன்னிறைவான ஆளுமையும், பெரிய விஷயங்களை கவனித்தது மட்டுமல்லாது மற்றும் சிறிய விஷயங்களை கவனிக்காது விட்டவருமல்ல. தன்னலமற்றவர், மார்க்சின் மரணம் வரை எப்பொழுதும் தன்னைத் தான் எடுத்துக்கொண்ட கடமைக்கு கீழ்ப்படுத்திக்கொண்டவர். அதன் பின்னர் தனது சிறந்த நண்பருக்காக தன்னை தியாகம் செய்தபோதும், அவர் எப்போதும் கடமைமிக்க வாழ்க்கையை நடத்தினார். எப்போதும் தனக்கு மிக உயர்ந்த தரங்களை அமைத்துக் கொண்டார்… மனிதத்தன்மையடைய எதுவும் அவருக்கு அந்நியமானதல்ல. அவர் எப்போதும் மற்றும் அனைத்து இடங்களிலும் தனது கடமைகளை நிறைவேற்றினார், மேலும் மிகவும் கடுமையான போராட்டங்களில் கூட மென்மையாகவும் அமைதியாகவும் இருந்தார். [22]

ஏங்கெல்ஸின் பிறப்புக்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபு முன்பை விட மிகவும் முக்கியமானது. இந்த பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்த்துள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு, திவாலான முதலாளித்துவத்திற்கு ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீட்டைத் தேடும் அனைவருக்கும் ஈர்க்கும் இடமாக மாறி வருகிறது.

Endnotes:

[1] Karl Marx & Frederick Engels, Collected Works [MECW], “Karl Marx’s Funeral,” Volume 24, p. 468.

[2] Leon Trotsky on Engels and Kautsky, Mehring Books, 2020, pp. 13–18.

[3] Ibid., pp. 9–10.

[4] Ibid., p. 8.

[5] Vladimir Lenin, Collected Works, “Frederick Engels,” Volume 2, p. 24.

[6] MECW, “The German Ideology,” Volume 5, p. 30.

[7] Ibid., p. 53–54.

[8] MECW, “Revolution and Counter-Revolution in Germany,” Volume 11, p. 40.

[9] MECW, “Address of the Central Authority to the League,” Volume 10, pp. 280, 287.

[10] Leon Trotsky on Engels and Kautsky, Mehring Books, 2020, pp. 11–12.

[11] Karl Kautsky, „Friedrich Engels. Zu seinem siebzigsten Geburtstag“. In: Die Neue Zeit, 9. Jahrg., 1. Bd., 1890/1891 [Karl Kautsky, “Friedrich Engels. On His Seventieth Birthday.” In: Die Neue Zeit (New Times), Ninth Year, First Volume, 1890/1891].

[12] MECW, “Introduction [To Sigismund Borkheim’s Pamphlet, In Memory of the German Blood-and-Thunder Patriots. 1806–1807], Volume 26, p. 451.

[13] MECW, Anti-Dühring, Preface from 1885, Volume 25, p. 8.

[14] Ibid., p. 9.

[15] MECW, Socialism: Utopian and Scientific, Volume 24, p. 301.

[16] Max Horkheimer & Theodor Adorno, Dialectic of Enlightenment, Stanford University Press, 2002, p. 28.

[17] David North, The Frankfurt School, Postmodernism and the Politics of the Pseudo-Left. A Marxist Critique, Mehring Books, 2016, p. 134.

[18] George Lichtheim, Marxism: An Historical and Critical Study, New York, 1961, pp. 58–59.

[19] Ibid., pp. 234–35.

[20] David North, “It was all Engels’ Fault: A Review of Tom Rockmore’s Marx After Marxism,” in: David North, The Russian Revolution and the Unfinished Twentieth Century, Mehring Books, 2014, p. 360.

[21] Leon Trotsky on Engels and Kautsky, Mehring Books, 2020, p. 9.

[22] Wilhelm Liebknecht, „Zum Tod von Friedrich Engels“, 10. August 1895 (online) [Wilhelm Liebknecht, “On the Death of Friedrich Engels,” 10 August 1895].

Loading