விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை தூண்டக்கூடும் என்று இந்திய அரசாங்கமும் பெருவணிகங்களும் அஞ்சுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விவசாயிகளிடமிருந்து எழுந்துள்ள அமோகமான மற்றும் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அதிவலது பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கமும், பெருநிறுவன சார்பு வேளாண் “சீர்திருத்தங்களை” அமுல்படுத்துவதற்கான தங்களது உந்துதலை இரட்டிப்பாக்கியுள்ளன.

விவசாயிகளின் டெல்லிசலோ (டெல்லிக்கு போவோம்) ஆர்ப்பாட்டத்தின் 22வது நாளான இன்று, தேசிய தலைநகரப் பிராந்தியமான டெல்லிக்கும் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் (UP) நொய்டா நகரத்திற்கும் இடைப்பட்ட சில்லா எல்லைப் பகுதியை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகளின் தலைவர் உறுதிபூண்டார். மேலும், இன்று கொல்கத்தாவிலும், மற்றும் டிசம்பர் 22 அன்று மும்பையிலும் தொடங்கி, நாட்டின் முக்கிய நகரங்கள் எங்கிலும் பெரும் பேரணிகளை நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்திய விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்

300,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் என ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களும் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். நவம்பர் 27 ஆம் தேதி முதல் பலர் அங்கு உள்ளனர் என்ற நிலையில், இந்தியாவின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமுமான தில்லி வரை தங்களது ஆர்ப்பாட்டத்தை அவர்கள் கொண்டுவராமல் தடுக்க துணை இராணுவப் படைகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பிஜேபி அரசாங்கம் அங்கு பயன்படுத்தியது.

மூன்று பக்கங்களிலும் தில்லியின் எல்லைகளாகவுள்ள ஹரியானாவில், நிலைமை அதிகரித்தளவில் “நிலையற்றதாக,” மாறிக் கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர், அது மேலும் வன்முறை மிக்க அரசு தாக்குதலை நடத்துவதற்கான தயாரிப்புகள் அங்கு நடந்து கொண்டிருப்பது சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை மோதல்கள் வெடித்தபோது, ஹரியானாவிலிருந்து தேசிய தலைநகரத்திற்கு டிராக்டர்களில் அணிவகுத்த சில விவசாயிகளை தடுத்து நிறுத்த பொலிசார் முயற்சித்தனர். அவர்களை விடுவிப்பதற்கு முன்னதாக சுமார் 20 விவசாயிகளை பொலிசார் சிறிது நேரத்திற்கு தடுப்பு காவலில் வைத்திருந்ததாக NDTV தெரிவித்தது.

முதலில், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளால் கிளர்ச்சி முன்னெடுத்து நடத்தப்பட்டது. என்றாலும், அது நீட்டித்து தொடரும் போது இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் இன்னும் தொலைதூர மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அதில் இணைந்து கொண்டதால் அவர்களது அணிவகுப்பு பெரிதும் விரிவடைந்தது.

இந்தியா முழுவதுமாக கோவிட்-19 பெருந் தொற்றுநோய் பரவலாக பரவி வரும் நிலைமைகளின் கீழ், போராட்டக் களங்களில் உள்ள கழுவும் அறைகள் மற்றும் கழிப்பறைகளுக்கான தண்ணீர் விநியோகத்தை குறைப்பதன் மூலம் மோடி அரசாங்கம் வேண்டுமென்றே அவர்களுக்கு சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில், போராட்டங்கள் முடிவுக்கு வர வேண்டுமென பெருவணிக நிறுவனங்கள் அதிகரித்தளவில் பொறுமையிழந்து வருகின்றன. இந்த கிளர்ச்சியானது, மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்து முடிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளன என்பது மட்டுமல்லாமல் ஹரியானாவில் உற்பத்தி குறைப்புக்களுக்கு நிர்ப்பந்திக்கின்றன என்று பல முக்கியமான வணிக நிறுவனங்கள் புகார் கூறுகின்றன.

செப்டம்பர் மாதத்தில் பிஜேபி அரசாங்கம் பாராளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றிய மூன்று வேளாண் வணிக சார்பு சட்டங்களை இரத்து செய்யும் படி விவசாயிகளும் அவர்களது ஆதரவாளர்களும் விடுக்கும் கோரிக்கையில் உள்ள உறுதிப்பாடு வலுவானதாகவுள்ளது. செய்தி அறிக்கைகளின் படி, போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் பிரதான வேளாண் குழுக்களில் ஒன்றான, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் (All India Kisan Sangharsh Coordination Committee-AIKSCC) தலைவர், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை தொடர்ந்து பராமரிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஈடாக, இந்த சட்டங்கள் தொடர்ந்து அமலில் இருக்க வகை செய்யும் ஒரு தீர்வை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளுமாறு வாதிட்டதை அடுத்து இந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அவர் ஆளானார்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது தலித் விவசாயி மிர்ச்சிலால் சரோஜ் என்பவர், “விவசாயிகளின் போராட்டங்கள் முற்றிலும் நியாயமானவையே,” என்றும், “அரசாங்கம் இந்த சட்டங்களை மீளப்பெற வேண்டும். எங்களது இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீரைச் சிந்தி நாங்கள் விதைத்து அறுவடை செய்யும் பயிர்களுக்கான நியாயமான விலையை இப்போது வரை நாங்கள் பெறவில்லை. ஆனால் குறைந்தபட்சம் முன்னாட்களில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்காவது உத்தரவாதம் இருந்தது” என்றும் Firstpost.com வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மோடியும் அவரது பிஜேபி அரசாங்கமும், இந்திய வேளாண் துறையை உள்நாட்டு மற்றும் சர்வதேச வேளாண் மிகப்பெரும் வணிக நலன்களுக்கு திறந்து வைக்கும் வகையில் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கட்டத்தில் அரசாங்கம் மற்றும் இந்திய ஆளும் வரக்கத்தின் மிகப்பெரிய கவலையும், பயமும் என்னவென்றால், விவசாயிகளுக்கு முன்னே பிஜேபி பின்வாங்குவதாகக் கருதப்பட்டால், அது ஏற்கனவே மோடி அரசாங்கத்திற்கும் அதன் “முதலீட்டாளர் சார்பு” திட்ட நிரலுக்கும் எதிராக பெருகி வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவும் என்பதே.

சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிஜேபி அரசாங்கத்தின் பெரு வணிகக் கொள்கைகளை எதிர்க்கவும், மற்றும் கோவிட்-19 பெருந் தொற்றுநோய் பரவிக் கொண்டிருப்பதற்கும் மற்றும் இந்திய பொருளாதாரத்தில் ஒருபோதும் நிகழாத கடுமையான மந்த நிலைக்கும் மத்தியில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் எதுவும் செய்யாமல் கைவிட்டுவிட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மில்லியன் பேருக்கு அவசரகால உதவியை வழங்குமாறு கோரவும் நவம்பர் 26 அன்று, இந்திய நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர். தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் சமீபத்திய நாட்களில் தொழிலாள வர்க்கத்தின் கோபம் வெடித்தெழ தொடங்கியுள்ளது. இதில், டொயோட்டாவின் இந்திய துணை நிறுவனம் மற்றும் பொதுத்துறையிலுள்ள பணியமர்த்தி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களாகப் பணிபுரியும் வாகனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதும் அடங்கும். மேலும், கடந்த சனிக்கிழமை, பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது மற்றும் 45 சதவிகிதம் வரை கொடூரமாக ஊதியம் குறைக்கப்பட்டது குறித்து தைவானைத் தளமாகக் கொண்ட உற்பத்தி நிறுவனமான விஸ்ட்ரானுக்கு (Wistron) எதிராக அதன் தொழிலாளர்கள் கோபமடைந்து கலவரம் செய்தனர். (பார்க்க: வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது)

நேற்று, இந்தியாவின் முதன்மை மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (All India Institute of Medical Sciences) தில்லி வளாகத்தில் 5,000 க்கும் மேற்பட்ட செவிலியர்களும் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களும், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பாக “நீண்டகாலமாக நிலுவையில் உள்ள” புகார்களை அரசாங்கம் தீர்க்கத் தவறியதை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இந்நிலையில், தில்லி உயர்நீதிமன்றம் அவர்களது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்ததன் பின்னர் அவர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பணிக்கு திரும்பினர்.

கடந்த சனிக்கிழமை, இந்தியாவின் முதன்மை பெருவணிக சங்கமான, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகையில், வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட மாட்டாது என்று வலியுறுத்தினார். தீவிர இந்து மேலாதிக்கவாதியும் மற்றும் சர்வாதிகார எதேச்சதிகாரியுமான அவர், நடவடிக்கைகளுக்கான உரிய “உரிமை கட்டளையுடன்” ஒரு “வலுவான அரசாங்கத்தை” அவர் வழிநடத்துவதாக கூறினார்.

இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவை என்று இழிவான வகையில் மோடி கூறினார். மேலும், “இவையனைத்தும்,” “விவசாயிகளை வளமாக்குவதையே” குறிக்கோளாக கொண்டது அதாவது விவசாயி(கள்) வளமாக உள்ளனர் என்றால் (ஒரு) தேசமும் வளமானதாக இருக்கும்” என்பதே அதன் பொருளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு பொய் மூட்டை ஆகும். இந்தியாவை உலகின் மிகவும் ஈடற்ற நாடுகளில் ஒன்றாக மாற்றிய முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை செயல்படுத்துவதை நியாயப்படுத்த, “செழிப்பு” பற்றிய இதே வாய்ச்சவடால்கள், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் உட்பட, பல அரசாங்கங்களினால் கடந்த முப்பது ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, விவசாயிகளுக்கும் நிலமற்ற கிராமப்புற ஏழைகளுக்கும், அதிகரித்து வரும் கடன்பாடு, வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை விளைவித்தது.

“முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு மோடி பயன்படுத்திய ஒரு “அபாரமான பாய்ச்சல்” என்ற பதத்தில் வேளாண் சட்டங்கள் வெறும் ஒரு கூறு மட்டுமே. இதில் இந்தியாவின் நிலக்கரி தொழில் மற்றும் இரயில்வே வலையமைப்பு போன்ற இந்தியாவின் நிலக்கரி தொழில் மற்றும் இரயில்வே வலையமைப்பு பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டங்களும் அடங்கும், மேலும் பெருநிறுவன சார்பு வேளாண் சட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் பருவமழை அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட “தொழிலாளர் சீர்திருத்தம்” ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். இந்த பின்னைய சீர்திருத்தம், ஆபத்தான ஒப்பந்த தொழிலாளர் வேலைவாய்ப்பை மேலும் விரிவுபடுத்துகிறது, பரந்தளவில் வேலைவழங்குநர்கள் தமது விருப்பப்படி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும், ஆலைகளை மூடவும் அவர்களுக்கு உதவுகிறது, மேலும் பெரும்பாலான தொழிலாளர் வேலை நடவடிக்கைகளை அது சட்டவிரோதமாக்குகிறது.

கோவிட்-19 பெருந் தொற்றுநோயை அரசாங்கம் அழிவுகரமான முறையில் கையாண்டதன் விளைவாக தூண்டப்பட்ட முன்நிகழ்ந்திராத சமூக நெருக்கடிக்கு மத்தியில், இந்த தாக்குதல் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளை பாதிப்புக்குள்ளாக்கியது. வைரஸ் நோய்தொற்றால் 140,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக இந்தியா பதிவு செய்தது, மேலும் நூற்றுக்கணக்கான மில்லியன் பேர் வேலை இழந்தனர், அல்லது ஊதியம் வழங்கப்படாமல் உள்ளனர், அல்லது தெரு வியாபாரிகள் மற்றும் கைவினைஞர்களின் விடயத்தைப் பொறுத்த வரை, அவர்களது சொற்பமான வருவாய் கூட வெட்டப்பட்டது.

விவசாயிகளின் அமைப்புக்களுடன் அரசாங்கம் ஏற்கனவே நடத்தியுள்ள மேலும் தொடர்ந்து நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு போலித்தோற்றம் உண்டாக்கும் தந்திரமே. முதலாளித்துவ மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பிஜேபி தலைமையும் பெருவணிகமும் பிடிவாதமாக உள்ளன.

வளமுள்ள விவசாயிகளின் மத்தியிலிருந்து முதன்மையாக ஈர்க்கப்பட்ட தலைவர்களைக் கொண்ட விவசாயிகளின் குழுக்களில் ஒரு பகுதியினரை வென்றெடுக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை செதுக்குவதன் மூலம் போராட்டங்களை சிதறடிக்க முடியும் என்று மோடி நம்புகிறார். அதே நேரத்தில், இரக்கமற்ற வகையில் அடக்குமுறையை செயல்படுத்த அரசாங்கம் மறைமுகமாக தயாராகி வருகிறது. இந்த விவசாயிகளின் கிளர்ச்சி குறித்த பிஜேபி இன் மிக மூத்த தலைவர்களின் அனைத்து கூட்டங்களிலும் பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் வெளிப்படையாக கலந்து கொண்டுள்ளார்.

எதிர்கால அடக்குமுறையை நியாயப்படுத்தும் நோக்கத்துடன், அரசாங்க பிரதிநிதிகள், விவசாயிகளின் போராட்டங்களை தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். அதாவது அந்த கிளர்ச்சிகள் சீனா மற்றும் பாகிஸ்தானால் ஊக்கமளிக்கப்பட்டுள்ளது அல்லது இப்போராட்டங்களில் நக்சலைட்டுகள் (மாவோயிஸ்டுகள்) மற்றும் பிற “தேச விரோத” கூறுகள் ஊடுருவியுள்ளன என்று எதிர்த்துப் போராடும் விவசாயிகளை இழிவுபடுத்துகிறார்கள்.

சில விவசாயிகள் குழுக்களுடன் “இரகசிய பேச்சுவார்த்தைகள்” நடந்து கொண்டிருப்பதாக ஒரு மூத்த அரசாங்க வட்டாரம் டிசம்பர் 15 அன்று இந்தியன்எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்தது. “சில தலைவர்கள் நடுநிலை பாதையை அடைவதற்கான தேவையை புரிந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்” என்று எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ஒரு ஆதாரம் தெரிவித்தது. மேலும், மற்றவர்களோ ஒரு “அதிகபட்ச நிலைப்பாட்டை” பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், “என்றாலும் ஒரு தீர்வு எட்டப்படலாம்” என்று அவர் கூறினார்.

ஒரு குறிப்பாணையில் அரசாங்கத்தின் சட்டங்களுக்கு தங்களது ஆதரவைச் சமிக்ஞை செய்த 10 வலதுசாரி விவசாயிகள் அமைப்புகளுடனான கூட்டத்தை நடத்தியதன் பின்னர், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “உண்மையான” விவசாயிகள் அமைப்புக்களுடன் வேளாண் சட்டங்களைப் பற்றி கூறு வாரியாக விவாதிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக திங்களன்று தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பு வெடித்தெழும் தருணத்தில் அதை எதிர்கொள்ள சூழ்ச்சி செய்வதற்கான திறன் அரசாங்கத்திற்கு இருக்குமானால் அதற்கு காரணம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் பெயரில் பேசுவதாகக் கூறும், முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய அமைப்புக்களின் நடவடிக்கைகள் தான்.

இந்த இயக்கம் “அரசியலில்” இருந்து விலகியிருக்க வேண்டும் என்று கடந்த வாரம் சிபிஎம் மற்றும் சிபிஐ தலைவர்கள் வெளியிட்ட அறிவிப்புக்கள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது போல, ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை சீர்குலைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள், அதேவேளை பிஜேபி இன் போக்கை மாற்றுவதற்கான வீண் முறையீடுகளுடன் விவசாயிகளின் எதிர்ப்பை மட்டுப்படுத்திக் கொள்ளும்படி அவர்களை வலியுறுத்த விவசாயிகளின் ஒரு பகுதியினரிடையே தாம் கொண்டிருக்கும் செல்வாக்கை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் மோடி மற்றும் பிஜேபி க்கு எதிராக வளர்ச்சி கண்டு வரும் வெகுஜன எதிர்ப்பை, நீண்டகாலமாக இந்திய ஆளும் வர்க்கத்தின் விருப்பமான அரசாங்கக் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழகத்தை தளமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் உத்தரப்பிரதேசத்தை தளமாகக் கொண்ட சமாஜ்வாடிக் கட்சி போன்ற பல்வேறு வலதுசாரி பிராந்திய பேரினவாத மற்றும் சாதியக் கட்சிகளுக்கு பின்னால் திசை திருப்புவதற்கான சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் முயற்சியுடன் இதுவும் ஒருபக்கம் இணைந்தே நடக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, மோடி அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ இலாபகர முறைக்கும் எதிரான அரசியல் போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் வறிய கிராமப்புற உழைப்பாளர்களுக்கு தலைமை வழங்குவதற்கும், அவர்களை அணிதிரட்டுவதற்கும் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக சமூக-அரசியல் நெருக்கடியில் தலையிடுவதைத் தடுப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் உறுதியாக உள்ளனர். தொழிலாளர் போராட்டங்களின் அதிகரித்து வரும் எழுச்சிகளால் இத்தகைய வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் இருப்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 11 அன்று, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trade Union Congress) மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress-AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions-CITU) உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் ஒரு கூட்டு தளம், விவசாயிகளின் போராட்டத்துடன் இணைந்த தங்களது “அசைக்க முடியாத ஒற்றுமையை” மீண்டும் வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டன.

இது ஒரு மோசடியாகும். உண்மையில், விவசாயிகளின் போராட்டங்களிலிருந்து தொழிலாளர்களை விலக்கி வைப்பதற்கே காங்கிரசும் ஸ்ராலினிஸ்டுகளும் ஒத்துழைக்கின்றனர். குறிப்பாக, கடந்த வாரம் விவசாயிகளின் அகில இந்திய அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்த தேசியளவிலான பொதுவேலைநிறுத்தத்தின் (பாரத் பந்த்) போது தொழிலாளர்களை பணியில் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

விவசாயிகள் தனிமைப்படுத்தப்படுவதனால், அவர்களது போராட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரும் மிகுந்த வலதுசாரி சக்திகளை மட்டுமே அது தைரியப்படுத்தும். டிசம்பர் 12 அன்று பிரசுரமான “விவசாயிகளுக்கான எதிர்காலம்: இந்தியாவின் பெரும் கனவுகள் அனைத்தும் சீர்திருத்தங்களுடன் பிணைந்தவையே. அரசாங்கம் இந்தப் போக்கில் கட்டாயம் நிலைத்திருக்க வேண்டும்,” என்ற தலையங்க கட்டுரையில், டைம்ஸ்ஆஃப்இந்தியா நாளிதழ், பஞ்சாபில் இருந்து கிளம்பிய எதிர்ப்பாளர்களை ஒரு சிறிய சிறுபான்மையினராக சித்தரிக்க முயன்றது. விவசாயிகளுக்கு நிலத்தை வழங்குவது என்பது அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களுக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களை ஊக்குவிக்கும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தி, இந்த தலையங்கம், “அரசாங்கம் பின்வாங்குமானால், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சீர்திருத்த முயற்சியும் ஏதோவொன்றுக்காக போராடும் குழுக்களின் எதிர்ப்பால் நாசப்படுத்தப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே அது இருக்கும்” என்று தெரிவித்தது.

Loading