ஸ்பானிய புரட்சியை தூக்கிலிட்ட ஸ்ராலினிச டோலோரெஸ் இபார்ரூரியை ஜாக்கோபின் புகழ்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டிசம்பர் 9 ஆம் திகதி அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியுடன் (DSA) நெருங்கிய தொடர்பை கொண்ட ஜாக்கோபின் இதழானது, “லா பாசியோனாரியா, ஸ்பானிய உள்நாட்டு போரின் வீராங்கனை” (“La Pasionaria, Heroine of the Spanish Civil War”) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்த நிகழ்வானது டோலோரெஸ் இபார்ரூரியின் 125 வது பிறந்த ஆண்டுவிழாவாகும். இவரை எழுத்தாளரான பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் போல் பிரெஸ்டன் (Paul Preston) "ஒரு உத்வேகம் தரும் உள்நாட்டுப் போர் வீராங்கனை மற்றும் உலகளாவிய பூமித்தாயின் உருவம்" என்று விவரித்தார்.

கட்டுரை, வரலாற்று பொய்மைப்படுத்தல், அரசியல் மூடிமறைப்பு மற்றும் அரசியல் நோக்கத்துடனான ஸ்ராலின் சகாப்த வரலாறு ஆகியவற்றிற்கான ஒரு முயற்சியாகும். இதனுடன் லீசா ஏ. கிர்ஷ்சென்பவும் எழுதிய இரண்டாவது கட்டுரையான (“லா பாசியோனேரியா, ஸ்பானிய பாசிச-எதிர்ப்பின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர், வெளிநாட்டில் இன்னும் எஞ்சியுள்ளவர்”), இபார்ரூரி மற்றும் ஸ்ராலினின் GPU கொலைகாரர்களின் மூடிமறைப்பிற்கு ஒரு பெண்ணிய சாயலை வழங்குகிறது. ஸ்பெயினின் உள்நாட்டுப் போரினை பற்றி (1936-1939) பல புத்தகங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ள பிரெஸ்டனின் ஸ்ராலினிச-சார்பு விளக்கக்காட்சி, 1937 மே 3 முதல் மே 8 வரை பார்சிலோனாவில் தொழிலாளர்களின் “மே நாட்கள்” எழுச்சியை "மதிப்பிழந்தது" என்று குறிப்பிட்டு ஜாக்கோபின் கட்டுரையில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பானிய தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க பிரிவான பார்சிலோனா பாட்டாளி வர்க்கத்தின் பொது வேலைநிறுத்தம், கட்டலோனியாவின் முதலாளித்துவ குடியரசுக் கட்சியின், மக்கள் முன்னணி அரசாங்கத்தால் வேண்டுமென்றே ஆத்திரமூட்டப்பட்டு, அங்கு இயங்கிவந்த ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சி (PCE) மற்றும் ஸ்ராலினின் NKVD/GPU நபர்களால் தூண்டப்பட்டது. இவை ட்ரொட்ஸ்கிசவாதிகள் எனக் கூறப்பட்டவர்கள் மற்றும் இராணுவ ஆட்சி கவிழ்ப்புத் தலைவர் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரங்கோவின் அராஜகவாத முகவர்களுக்கும் அவர்களின் ஜேர்மன் கூட்டாளியான ஹிட்லருக்கும் எதிராக "குடியரசை பாதுகாத்தல்" என்ற பெயரில் கொலைகார அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதை நியாயப்படுத்த செய்யப்பட்டது.

இதில் குறைந்தது 1,000 போர்க்குணமிக்க தொழிலாளர்கள் கொல்லப்பட்ட பார்சிலோனா எழுச்சியை நசுக்கியதும், அதைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும், மத்தியவாத POUM இன் (Workers’ Party of Marxist Unification-மார்க்சிச தொழிலாளர் கட்சி ஒருங்கிணைப்பு) ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராளிகள் மற்றும் தேசிய தொழிலாளர் கூட்டமைப்பில் (National Confederation of Labour - CNT) உள்ள அராஜக-சிண்டிகலிச தொழிலாளர்களை இலக்குவைத்து பாரிய கைதுகள், சித்திரவதை மற்றும் கொலைகள் நடாத்தப்பட்டன. ஸ்பெயினில் உள்ள சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் முன்னாள் தலைவரும், POUM இன் தலைவருமான ஆண்ட்ரியாஸ் நின் (Andreas Nin), ஸ்ராலினின் குண்டர்களால் கொலை செய்யப்படுவதற்கு முன்பு கைது செய்யப்பட்டு பயங்கரமாக சித்திரவதை செய்யப்பட்டார். இந்த புரட்சி, ஸ்ராலினால் காட்டிக்கொடுக்கப்பட்டதற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கிச ஆதரவாளர்களை அணிதிரட்ட, மே நாட்களுக்குப் பின்னர் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட ட்ரொட்ஸ்கியின் செயலாளர் எர்வின் வொல்ஃப் (Erwin Wolf) இக்களையெடுப்பிற்கு பலியானார்.

பார்சிலோனாவில் மே நாட்களில் தொழிலாளர்களின் எழுச்சி (Libcom.org)

1937 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், கிரெம்ளின் மற்றும் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றால் அரசியல்ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட மாட்ரிட்டில் உள்ள மக்கள் முன்னணி அரசாங்கம், அரகோன் மற்றும் ஹூஸ்கா நகரில் முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்த POUM மற்றும் அராஜகவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தொழிலாளர்களின் போராளிகளை இல்லாதொழித்தது. பார்சிலோனா தொழிலாள வர்க்கத்தின் மீதான ஸ்ராலினிச அடக்குமுறை மற்றும் இரத்தம்தோய்ந்த களையெடுப்பு ஆகியவை புரட்சியின் முதுகெலும்பை உடைத்து, பிராங்கோவின் பாசிச சக்திகளின் வெற்றியை உறுதிசெய்தது. இது மார்ச் 31, 1939 அன்று குடியரசுக் கட்சியின் நிபந்தனையற்ற சரணடைதலுடன் பூர்த்தியடைந்தது.

ஆகஸ்ட் 1940 இல் மெக்ஸிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கியைக் கொன்ற GPU கையாள் ரமோன் மெர்காடர், ஸ்பெயினில் நடந்த வெகுஜன அடக்குமுறையின் போது ஸ்ராலினிச கொலையாளியாக தன்னை உருவமைத்துக்கொண்டான். இவை எதுவும் ஜாக்கோபின் கட்டுரையில் குறிப்பிடப்படவும் கூட இல்லை. ஸ்பானிய தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் புரட்சிகர எழுச்சி ஸ்ராலினிஸ்டுகளாலும் மற்றும் மக்கள் முன்னணி அரசாங்கத்தாலும் இரத்தக்களரியாக ஒடுக்கப்பட்டமை ஆகியவை புறக்கணிக்கப்படுகின்றன. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் பிற ஸ்ராலினிச எதிர்ப்பு போராளிகளை இல்லாதொழிப்பதில் இபார்ரூரியின் முக்கிய பங்கும் முதலாளித்துவ குடியரசு அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து இடதுசாரி எதிர்ப்பாளர்களையும் பிராங்கோ மற்றும் ஹிட்லரின் முகவர்களாக இழிவுபடுத்தும் அவதூறின் அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றது.

விக்கிப்பீடியா இடுகையில் இபார்ரூரி தொடர்பாக மிகத் துல்லியமான மற்றும் நேர்மையான விளக்கக்காட்சியை ஒருவர் காணமுடியும். ஸ்பெயினில் ஸ்ராலினின் தலைமை GPU முகவரான அலெக்சாண்டர் ஆர்லோவ், “[சோவியத் யூனியனுக்குள்] பாரிய களையெடுப்பின் வேளையில் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதம், போலித்தனம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற முறைகளைப் அங்கு பயன்படுத்தினார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் மே எழுச்சியை ஒடுக்கியதைத் தொடர்ந்து இபார்ரூரி ஆற்றிய உரையை அது மேற்கோளிட்டுள்ளது. அதில் “பூமித்தாய்” பின்வருமாறு அறிவித்தார்:

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நீண்ட காலமாக பாசிசத்தின் முகவர்களாகவும், ஜேர்மன் கெஸ்டபோவின் முகவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர். கட்டலோனியாவில் மே மாத சதியின்போது இதை நாங்கள் அங்கு பார்த்தோம்; வேறு பல இடங்களில் ஏற்பட்ட குழப்பங்களில் இதை நாம் தெளிவாகக் கண்டோம் ... ட்ரொட்ஸ்கிசம் என்பது நம் கட்சியின் பாட்டாளி வர்க்க அணிகளில் இருந்து விசவிதைகளை களையெடுப்பதுபோல் களையெடுக்க வேண்டும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் காட்டு மிருகங்களைப் போல களையெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

டோலோரெஸ் இபார்ரூரியின் (Historica Wiki - Fandom)

மக்கள் முன்னணி குடியரசுக் கட்சி அரசாங்கம் பிராங்கோவிடம் சரணடைவதற்கு சற்று முன்னர், ஸ்பெயினில் இருந்து அவர் வெளியேறியதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக இபார்ரூரி சோவியத் ஒன்றியத்தில் நாடுகடந்த நிலையில் ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். பெரும் கொலைகாரனின் மரணம் வரை அவர் தொடர்ந்து எதிர்புரட்சிகர கிரெம்ளின் நிலைப்பாட்டை பரப்பியதுடன் மற்றும் ஸ்ராலினின் தனிநபர் வழிபாட்டை ஊக்குவித்தார். அவர் 1939 ஆம் ஆண்டில் ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தையும், 1940 கள் மற்றும் 1950 களின் முற்பகுதியில் GPUவின் கைகளில் சோவியத் ஒன்றியத்தில் நாடுகடந்து இருந்த ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை கைதுசெய்து மரணதண்டனை வழங்கியதையும் ஆதரித்தார். 1977 ஆம் ஆண்டில் பிராங்கோ இறந்ததைத் தொடர்ந்து, ஒரு புதிய முதலாளித்துவ அமைப்பை நிறுவுவதில் பங்கேற்று, பாசிச குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியதுடன் மற்றும் அவர்களின் செல்வம் மற்றும் அதிகார பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிப்பதில் பங்கேற்றுக்கொள்ள அவர் ஸ்பெயினுக்கு திரும்பினார்.

இபார்ரூரிக்கு அதன் புகழுரை எழுத பேராசிரியர் பிரெஸ்டனை ஜாக்கோபின் தேர்வு செய்தது அரசியல்ரீதியாக நனவான முடிவகும். ஏப்ரல் 2009 இல், ஸ்பெயினில் பிராங்கோவின் வெற்றியின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற பிரிட்டிஷ் அகாடமியில் ஒரு குழு விவாதத்திற்கு பிரெஸ்டன் மத்தியஸ்தம் வகித்தார். பேராசிரியர்கள் ஏஞ்சல் வினாஸ் மற்றும் ஹெலன் கிரஹாம் ஆகியோரின் விளக்கக்காட்சிகளுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். ஒரு POUM போராளிகளின் உறுப்பினராக ஜோர்ஜ் ஓர்வெல் தனது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஸ்பெயினில் ஸ்ராலினிச குற்றங்களை அம்பலப்படுத்தி Homage to Catalonia என்ற புத்தகத்தில் எழுதியதை அவர் தாக்கினார். பிரெஸ்டன் பின்னர் அதில் பார்வையாளராக கலந்துகொண்ட பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் ஒரு கேள்வியைக் கேட்பதைத் தடுக்க முயன்றார். ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் சமூகப் புரட்சியுடன் ஒன்றிணைந்துபோனது என்ற உண்மையை குழு உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினரின் கூற்றுக்கு பதிலளித்த அவர், ஸ்பானிய புரட்சி என்ற கருத்தை, "பரபரப்பு செய்தி ஏடுகளின் மிக தீவிரமான மிகைப்படுத்தல்" என்று அழைத்தார்.

இங்கு ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின் நிகழ்வுகளை விரிவாகக் கையாள்வது சாத்தியமில்லை. இருப்பினும், ஜூலை 18, 1936 அன்று குடியரசுக் கட்சி அரசாங்கத்திற்கு எதிரான பிராங்கோவால் தொடங்கப்பட்ட இராணுவ சதி, ஆரம்பத்தில் முதலாளித்துவ அரசாங்கத்தால் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தால் துரத்தியடிக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

இராணுவத்தின் பரந்த பகுதியும் முதலாளித்துவத்தின் மிக தீர்க்கமான பிரிவுகளும் பிராங்கோவின் பின்னால் வரிசையாக நிற்கின்றன. குடியரசுக் கட்சி அரசாங்கம் பாசிஸ்டுகளுடன் நம்பிக்கையற்ற கூட்டை நாடுகையில், ஆரம்பத்தில் தொழிலாளர்களுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்தபோது தொழிலாளர்கள் எழுச்சியுற்று முதலில் பார்சிலோனாவிலும், பின்னர் நாடு முழுவதும் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும், விஷயங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

தொழிலாளர்கள் முக்கிய நடவடிக்கை மற்றும் தகவல்தொடர்பு வசதிகளை இயக்க குழுக்களை அமைத்து, பாசிஸ்டுகளுக்கு எதிராக போராட போராளிக்குழுக்களை அமைத்தனர். ஜூலை 19, 1936 இல் தொடங்கிய புரட்சிகர இயக்கம் இரட்டை அதிகார சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதில் உண்மையான அதிகாரம் தொழிலாளர்களின் கைகளில் இருந்தது. இருப்பினும், அவர்கள் தாராளவாத முதலாளித்துவ தலைமையிலான மக்கள் முன்னணியை ஆதரித்த தங்கள் கட்சிகளான சோசலிஸ்ட் கட்சி (PSOE), கம்யூனிஸ்ட் கட்சி (PCE), POUM மற்றும் CNT ஆகியவற்றால் அரசியல் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதிலிருந்து தடுக்கப்பட்டனர்.

பொருளாதாரத்தின் பிரிவுகளை தொழிலாளர்கள் வைத்திருப்பது, பெரும் நில உரிமையாளர்களின் தோட்டங்களை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களை நசுக்குவது, புரட்சிகர அலைகளை கலைப்பது போன்றவற்றை செய்யுமாறு ஸ்ராலினிஸ்டுகளால் வலியுறுத்தப்பட்ட முயற்சிகள் அரசாங்கத்தினால் பல மாதங்களாக தொடரப்பட்டன. இது பார்சிலோனாவில் தொலைபேசி பரிமாற்றத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கான கட்டலான் அரசாங்கத்தின் முடிவால், மே நாட்கள் நிகழ்வுகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

ஆண்ட்ரியாஸ் நின் (Alchetron.com)

ஸ்பெயினில் உள்ள மக்கள் முன்னணி அரசாங்கமும், அதே ஆண்டில் பிரான்சில் அமைக்கப்பட்ட அதன் மாதிரியும், 1935 இல் அதன் ஏழாவது காங்கிரசில் (இபார்ரூரி கலந்து கொண்ட) மூன்றாம் அகிலத்தால் ஏற்றுக்கொண்ட கொள்கையை பிரதிநிதித்துவப்படுத்தின. 1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததற்கு ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கு வழிவகுத்த தீவிர இடது கொள்கைகளை கைவிட்டு, "பாசிசத்திற்கும் போருக்கும் எதிரான மக்கள் முன்னணி" என்ற வர்க்க ஒத்துழைப்பு கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஸ்ராலின் பதிலளித்தார்.

ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச சக்திகளுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் கூட்டணியில் சேர மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை தூண்டும் முயற்சியில், அவற்றிற்கு ஆதரவளிக்கும்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஸ்ராலின் கட்டளையிட்டார். எங்கு சாத்தியமோ அங்கு முடிந்தவரை முதலாளித்துவத்தின் தாராளவாத பிரிவுகளால் தலைமைதாங்கப்பட்ட முதலாளித்துவ அரசாங்கங்களில் சேர வழிவகுத்தார். 1924 இல் ஸ்ராலினால் பிரகடனப்படுத்தப்பட்ட "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிச எதிர்ப்பு, தேசியவாத வேலைத்திட்டத்திலிருந்து உருவாகும் மக்கள் முன்னணி கொள்கை, நடைமுறையில் சோசலிசப் புரட்சியை கைவிடுவதாகும். "ஜனநாயகத்தை" பாதுகாப்பது என்ற பெயரில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெகுஜனங்களின் புரட்சிகர இயக்கத்திற்கு எதிராக முதலாளித்துவ சொத்துடமை மற்றும் முதலாளித்துவ அரசை பாதுகாத்தன.

தொழிலாள வர்க்கம் "முற்போக்கான" முதலாளித்துவம் என்று அழைக்கப்பட்டதற்கு அடிபணிய செய்யப்பட்டு, அதன் புரட்சிகர அபிலாஷைகள் ஆளும் அதிகாரத்துவத்தால் உணரப்பட்டவாறு சோவியத் ஒன்றியத்தின் இராஜதந்திர தேவைகளுக்காக தியாகம் செய்யப்பட்டன. ஆளும் அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களால் அல்ல, மாறாக 1917 புரட்சியால் நிறுவப்பட்ட சொத்து உறவுகளின் அடிப்படையில், பாசிசத்தால் நேரடியாக அச்சுறுத்தப்பட்ட அதன் சொந்த சலுகைகளைப் பாதுகாப்பதன் மூலம் உந்தப்பட்டது.

மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடனான தனது அணுகுமுறைகளில், உலகப் புரட்சியை நிராகரிப்பதில் ஸ்ராலின் வெளிப்படையாக இருந்தார். மார்ச் 1936 இல் ஸ்க்ரிப்ஸ்-ஹோவர்ட் செய்தித்தாள்களின் நபரான றோய் ஹோவர்ட் உடனான நேர்காணலில், பின்வரும் பரிமாற்றம் நடந்தது:

ஹோவர்ட்: உங்களது இந்த அறிக்கை, சோவியத் ஒன்றியம் உலகப் புரட்சியைக் கொண்டுவருவதற்கான அதன் திட்டங்களையும் நோக்கங்களையும் எந்த அளவிலும் கைவிட்டுவிட்டதா?

ஸ்ராலின்: இதுபோன்ற திட்டங்களும் நோக்கங்களும் எங்களிடம் இருந்ததில்லை.

ஹோவர்ட்: திரு. ஸ்ராலின், உலகின் பெரும்பகுதி நீண்ட காலமாக ஒரு வித்தியாசமான உணர்வை கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்ராலின்: இது ஒரு தவறான புரிதலின் விளைவாகும்.

ஹோவர்ட்: ஒரு சோகமான தவறான புரிதலாகும்?

ஸ்ராலின்: இல்லை, நகைச்சுவையான ஒன்று. அல்லது, ஒருவேளை, சோகமான நகைச்சுவை.

ஸ்பெயினில் மக்கள் முன்னணியும் ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியும்

ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை புரட்சிக்கு இட்டுச் சென்ற உலக மந்தநிலையின் நிலைமைகளின் கீழ், மக்கள் முன்னணியை நடைமுறைப்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப் புரட்சிகளை முன்னெடுப்பதில் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒன்றுபட வேண்டும் என்றாகிறது. இந்த மூலோபாயத்தின் பிரதான இலக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஆகும். அது அக்டோபர் புரட்சியின் ஸ்ராலினிச துரோகத்தை துல்லியமாகவும் நனவாகவும் எதிர்த்ததோடு, புரட்சியை அடிப்படையாகக் கொண்ட உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்காக போராடியது.

சர்வதேச அரங்கில் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பங்கு அதன் மிக நிர்வாணமான வெளிப்பாட்டை ஸ்பெயினில் கண்டது. 1937 டிசம்பரில் எழுதுகையில் (“ஸ்பெயினின் பாடங்கள்: கடைசி எச்சரிக்கை”), ட்ரொட்ஸ்கி பின்வருமாறு விளக்கினார்:

ஸ்பானிய மக்கள் முன்னணியின் எழுச்சிக்கானதும் மற்றும் அதன் உள் இயக்கவியலுக்கான காரணங்கள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இடது முதலாளித்துவத்தின் ஓய்வுபெற்ற தலைவர்களின் பணி, வெகுஜனங்களின் புரட்சியைச் பரிசோதித்து பார்ப்பதிலும், சுரண்டப்படுபவர்களின் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதிலும் இருந்தது: "குடியரசுக் கட்சியினரான நாங்கள் அதையே செய்ய முடிந்தால் உங்களுக்கு ஏன் பிராங்கோ தேவை?" [ஸ்பானிஷ் ஜனாதிபதி] மானுவல் அஸானியா மற்றும் [கட்டலான் ஜனாதிபதி] லூயிஸ் கொம்பானிஸ் (Lluis Companys) இன் நலன்கள் இந்த முக்கிய கட்டத்தில் ஸ்ராலினின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போனது. அதாவது “ஒழுங்கை” பாதுகாப்பதற்கும் "அராஜகத்திற்கு" எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தனது திறனை நிரூபிப்பதன் மூலம் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நம்பிக்கையை பெறவேண்டி இருந்தது. ஸ்ராலினுக்கு அஸானியா மற்றும் கொம்பானிஸ் ஆகியோர் தொழிலாளர்கள் முன் ஒரு மறைப்பாக தேவைப்பட்டனர்: ஸ்ராலின் தன்னை நிச்சயமாக சோசலிசத்திற்கானவராகவும், ஆனால் குடியரசுக் கட்சி முதலாளித்துவத்தை அச்சுறுத்தாமலும் எவராவது பார்த்துக் கொள்ள வேண்டும்! ஒரு புரட்சியாளர் என்ற ஆளுமையுடன், அனுபவமுள்ள மரணதண்டனை நிறைவேற்றுபவராக ஸ்ராலின், அஸானியா மற்றும் கொம்பானிஸ் இற்கு தேவைப்பட்டார். அவர் இல்லாமல், மிகவும் முக்கியத்துவமற்ற அற்பமான ஒரு குழுவினர் ஒருபோதும் தொழிலாளர்களைத் தாக்க துணிந்திருக்கவே மாட்டார்கள்…

மக்கள் முன்னணியின் கைதிகளாக இருந்த இடது சோசலிஸ்டுகள் மற்றும் அராஜகவாதிகள் ஜனநாயகத்திலிருந்து காப்பாற்றக்கூடிய அனைத்தையும் காப்பாற்ற முயன்றனர், அது உண்மைதான். ஆனால், மக்கள் முன்னணியின் பாதுகாவலர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட அவர்கள் துணியாததால், அவர்களின் முயற்சிகள் வெற்றுவாதங்களாகவும் அழுகை ஓலங்களாகவும் இறுதியில் முடிந்தன. ஸ்ராலினிஸ்டுகள் இவ்வாறு தீவிர வலதுசாரி, சோசலிஸ்ட் கட்சியின் முதலாளித்துவ பிரிவுடன் கூட்டணி வைத்திருந்தனர். அவர்கள் தங்கள் அடக்குமுறைகளை இடதுகளான POUM, அராஜகவாதிகள், “இடது” சோசலிஸ்டுகள், வேறுவிதமாகக் கூறினால், மிக குறைந்தளவிலாவது புரட்சிகர மக்களின் அழுத்தத்தை பிரதிபலித்த மத்தியவாத குழுக்களுக்கு எதிராக பிரயோகித்தனர்.

இந்த அரசியல் உண்மை, அதன் முக்கியத்துவத்துடன் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக கம்யூனிச அகிலத்தின் சீரழிவின் அளவை வழங்குகிறது ... இது, சர்வதேச அரங்கில் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையை திட்டவட்டமாக உறுதிசெய்ய செயல்பட்டது. (லியோன் ட்ரொட்ஸ்கி, ஸ்பானிய புரட்சி (1931-39), நியூ யோர்க், 1973, பக். 310–11)

ட்ரொட்ஸ்கி மற்ற இடங்களில் மக்கள் முன்னணியின் சாராம்சத்தை GPU உடனான முதலாளித்துவ தாராளவாதத்தின் கூட்டணியாக சுருக்கமாகக் கூறினார்.

1930 களின் பிற்பகுதியில் லியோன் ட்ரொட்ஸ்கி

மக்கள் முன்னணியின் ஸ்ராலினிச வேலைத்திட்டம் உள்நாட்டு கேள்விகளை காட்டிலும் பூகோளஅரசியலிலும் குறைந்த முக்கியத்துவம் கொண்டவை அல்ல. ஸ்ராலினிச ஆட்சி கடுமையான நெருக்கடியின் ஆட்சியாகும். ஒரு புரட்சிகர மார்க்சிசக் கட்சியான போல்ஷிவிக்குகளின் தலைமையில், அரசியல் வாழ்வில் தொழிலாள வர்க்கத்தின் நனவான புரட்சிகர தலையீட்டால் உருவாக்கப்பட்ட ஒரு தொழிலாளர் அரசின் உடலில் ஒரு ஒட்டுண்ணியாக ஸ்ராலின் தலைமையிலான அதிகாரத்துவம் இருந்தது.

ஆளும் அதிகாரத்துவம் சோவியத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பற்றிய நிரந்தர அச்சத்தில் வாழ்ந்தது. ஊழல் நிறைந்த மற்றும் முன்கணக்கிட முடியாத உயரடுக்கினரால் அதனது அரசியல் அதிகாரம் கைப்பற்றப்பட்டதில் ஏற்பட்ட அதனது கோபம் ஆழமானதும் மற்றும் சமரசம்செய்ய முடியாததுமாகும். உலகில் எங்கும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒரு வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சி, சோவியத் மக்களின் புரட்சிகர நம்பிக்கையையும் நனவையும் புதுப்பிக்கும் என்பதை ஸ்ராலினிச ஆளும் தன்னலக்குழு நன்கு அறிந்திருந்தது. அதிகாரத்துவ ஆட்சியை தூக்கிவீசவும், தொழிலாளர்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்திற்கு திரும்பவும் ஒரு அரசியல் புரட்சிக்காக ட்ரொட்ஸ்கி முன்வைத்த வேலைத்திட்டம் வெகுஜன ஆதரவைப் பெற்றிருக்கும்.

ஆகஸ்ட் 1936 மற்றும் மார்ச் 1938 க்கு இடையில், "மாஸ்கோ வழக்குகள்" என்று அழைக்கப்படும் மூன்று ஒருதொடர் போலி விசாரணைகள் ஸ்ராலினால் நடத்தப்பட்டது. அக்டோபர் புரட்சியினதும் மற்றும் லெனினின் போல்ஷிவிக் கட்சியின் தலைவர்கள் அனைவருமே சோவியத் ஒன்றியத்தை தூக்கியெறிந்து ஸ்ராலினை படுகொலை செய்ய நாஜி ஜேர்மனி மற்றும் பிற வெளிநாட்டு, உள்நாட்டு எதிரிகளுடன் சதி செய்ததாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு ஒப்புக்கொள்ளச் செய்யப்பட்டனர். இந்த கொடூரமான போலி விசாரணைகள், சர்வதேச அரங்கில் மக்கள் முன்னணியின் பதாகையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட எதிர் புரட்சிக் கொள்கைகளின் உள்நாட்டு செயற்பாடுகளாகும்.

இவ்வழக்குகளின் பிரதான பிரதிவாதி லியோன் ட்ரொட்ஸ்கி முதலில் நோர்வேக்கு நாடுகடத்தப்பட்டு, பின்னர் மெக்ஸிகோவில் இருந்தார். அவரின் பிரசன்னம் இல்லாமலே குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த போலி விசாரணைகள் "பெரும் பயங்கரத்தின்" வெளிப்படையான முகமாக இருந்தன. பல ஆண்டுகளாக பாரியளவிலான கைதுகள், கொலைகள் மற்றும் கடூழிய முகாம்களுக்கு நாடுகடத்தப்படுதல் ஆகியவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான உண்மையான சோசலிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், புத்திஜீவிகள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்கள் அழிக்கப்பட்டனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு இதனை ஒரு "அரசியல் இனப்படுகொலை" என்று அழைக்கிறது.

ஐக்கிய முன்னணி எதிர் மக்கள் முன்னணி

கம்யூனிச அகிலத்தின் மூன்றாம் (1921) நான்காம் (1922) காங்கிரசில் லெனினும் ட்ரொட்ஸ்கியும் அறிமுகப்படுத்திய “ஐக்கிய முன்னணி” தந்திரத்தின் விரிவாக்கமாக ஸ்ராலினிஸ்டுகள் தங்கள் மக்கள் முன்னணி கொள்கையை பொய்யாக முன்வைத்தனர். உண்மையில், மக்கள் முன்னணி என்பது முதலாளித்துவத்தின் ஒரு பிரிவுடனான வர்க்க ஒத்துழைப்புக் கொள்கையாகும். எனவே இது ஐக்கிய முன்னணிக்கு முற்றிலும் எதிரானதாகும். ஐக்கிய முன்னணி என்பது முழு முதலாளித்துவத்திற்கும் எதிராக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைப்பதற்கு முன்முயற்சி எடுப்பதற்கான ஒரு வழியாகும்.

ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தின் அடித்தளம், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமுமாகும். ஒருபுறம் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் கீழ் மூன்றாம் அகிலத்தால் விவரிக்கப்பட்டதும், ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட ஐக்கிய முன்னணிக்கும் மறுபுறம் ஸ்ராலினின் மக்கள் முன்னணிக்கும் உள்ள வித்தியாசம் புரட்சிக்கும் எதிர் புரட்சிக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

1930 களில் இருந்து இன்றுவரையும், சந்தர்ப்பவாத மற்றும் திருத்தல்வாத போக்குகள், ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகளுக்கும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ தாராளவாதிகள் ஆகியோருடனான தங்களின் அரசியல் அடிபணிவை மூடிமறைக்க "ஐக்கிய முன்னணி" கொள்கையை பயன்படுத்த முயன்றன. இந்த மயக்கமான வார்த்தைப்பிரயோகம் தொழிலாளர்களின் போராட்டங்களை குழப்புவதற்கும், கழுத்தை நெரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் பாட்டாளி வர்க்க புரட்சிகளின் ஆரம்ப அலை, முக்கியமாக புரட்சிகரத் தலைவர்களின் முதிர்ச்சியற்ற தன்மை மற்றும் தவறுகளால் தோற்கடிக்கப்பட்டபோது ஒரு ஐக்கிய முன்னணி தந்திரோபாயத்தை மேற்கொள்ளுமாறு கம்யூனிஸ்ட் கட்சிகளுள் லெனினும் ட்ரொட்ஸ்கியும் போராடினர். ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மிகவும் பலவீனமான மற்றும் தற்காலிக மறுசீரமைப்பின் நிலைமைகளின் கீழ், மூன்றாம் அகிலத்தின் கட்சிகள் முதலில் அரச அதிகாரத்திற்கான போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு பரந்துபட்ட மக்களின் விசுவாசத்தை வென்றெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நோக்கத்திற்காக, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள கட்சிகள், சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் சீர்திருத்தவாத மற்றும் அராஜகவாத-சிண்டிகலிச தொழிற்சங்கங்களை கம்யூனிஸ்டுகளுடன் ஒரு ஐக்கிய முன்னணியில் இணைந்து பாசிஸ்டுகள் மற்றும் முதலாளித்துவ அரசின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் அமைப்புகளைப் பாதுகாக்கவும் மற்றும் அடிப்படை சமூக கோரிக்கைகளுக்காக போராட குறிப்பிட்ட கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர். இத்தகைய ஐக்கிய முன்னணிகளுக்கான முன் நிபந்தனைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்புரீதியான முழு சுதந்திரமும், ஐக்கிய முன்னணியில் உள்ள மற்ற தொழிலாளர் அமைப்புகளை விமர்சிக்கும் முழு சுதந்திரமும் ஆகும்.

ஐக்கிய முன்னணி என்பது, வெகுஜன தொழிலாள வர்க்க அமைப்புகளுக்கு இடையிலான கூட்டு நடவடிக்கைக்கான ஒப்பந்தமாக வரையறுக்கப்பட்டது. இதில் பதாகைகள் கலக்கப்படுவதும், மார்க்சிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தை நீர்த்துப்போகச் செய்தலும் இருக்காது. "தனித்தனியாக பயணிப்போம் ஒன்றாக சேர்ந்து தாக்குவோம்" (“March separately and strike together”) என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.

மார்ச் 1922 முதல் "ஐக்கிய முன்னணி பற்றி" என்ற தனது ஆய்வறிக்கையில், ட்ரொட்ஸ்கி பிரான்சில் ஐக்கிய முன்னணித் தந்திரத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:

தொழிலாள வர்க்கத்தின் உள்ளே செயல்படுவதற்கான மிகவும் நம்பகமான முறைகளில் ஒன்று, 'இடது பிரிவின்' சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை அதாவது, தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினருக்கும் இடையிலான ஒரு கூட்டணியை முதலாளித்துவத்தின் மற்றொரு பகுதிக்கு எதிராக, விடாமுயற்சியுடன் மற்றும் உறுதியுடன் ஊக்குவிப்பதன் மூலம் முழு முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இடையிலான ஒரு கூட்டை உருவாக்குவதற்கான யோசனையாகும். [அழுத்தம் மூலத்தில் உள்ளது]. (Leon Trotsky, Marxists Internet Archive)

எந்தவொரு அரசியல் பொது மன்னிப்பையும் வழங்குவதற்குப் பதிலாக, புரட்சிகரக் கட்சி தந்திரோபாயத்தின் மூலம் செயல்படுவதையும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் கண்களுக்கு முன்பாக வர்க்கத்தைப் பாதுகாப்பதில் தீர்க்கமான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கும் எடுப்பதற்கும் அதன் தயார்நிலையையும் எடுத்துக்காட்டுவதுடன், சமூக ஜனநாயக தொழிலாளர்களின் முக்கியமான பிரிவுகளை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வென்றெடுக்கும் நிகழ்ச்சிப்போக்கில் சீர்திருத்தவாத தலைமைகளின் ஊசலாட்டத்தையும் அடிபணிவையும் அம்பலப்படுத்துவதுமாகும்.

ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஏர்ன்ஸ்ட் தல்மான் (Wikipedia)

செப்டம்பர் 1930 இன் முற்பகுதியில், ஸ்ராலினிச ஆத்திரமூட்டலாளர்கள் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ட்ரொட்ஸ்கி கிளர்ந்தெழுந்து, சமூக ஜனநாயகவாதிகளை "சமூக பாசிஸ்டுகள்" என்று முத்திரை குத்தி சமூக ஜனநாயகவாதிகளுடன் எந்த வகையிலும் ஒத்துழைக்க மறுக்கும் அதன் தீவிர இடது "மூன்றாம் காலகட்ட" கொள்கையை கைவிட்டு நாஜிசத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்க ஐக்கிய முன்னணியின் தந்திரத்தை பின்பற்ற வேண்டும் எனக் கோரினார். ட்ரொட்ஸ்கியும் ஜேர்மனியில் அவரது ஆதரவாளர்களும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையின்மை அதிகரித்த நிலைமைகளின் கீழ், நாஜிக்களின் வாக்குகளில் கிட்டத்தட்ட 16 சதவீத உயர்வைப் பதிவு செய்த தேசிய தேர்தல்களைத் தொடர்ந்து இந்தக் கொள்கையை முன்வைத்தனர்.

ஸ்ராலினும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையும் இந்த கொள்கையை நிராகரித்தன. தீவிர இடது வார்த்தையாடல்களின் பின்னால் ஒரு பாசிச வெற்றியின் தவிர்க்க முடியாத தன்மையையின் ஒரு அபாயகரமான ஏற்றுக்கொள்ளலை மறைத்து, ஒரு குறுங்குழுவாத வடிவத்தில் சமூக ஜனநாயக தலைமைக்கு அடிபணிவதுடன் இணைந்தன. இதன் விளைவு, ட்ரொட்ஸ்கி பலமுறை எச்சரித்ததுபோல், ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பேரழிவுகரமான தோல்வியாக அமைந்தது.

1996 ஆம் ஆண்டில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் “வரலாற்றின் நீண்ட நிழல்: மாஸ்கோ விசாரணைகள், அமெரிக்க தாராளவாதம் மற்றும் அரசியல் சிந்தனையின் நெருக்கடி” என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். (இந்த விரிவுரை மெஹ்ரிங் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டரஷ்ய புரட்சியும் முடிவடையாத இருபதாம் நூற்றாண்டும் என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது)

அதில் அமெரிக்க தாராளவாத புத்திஜீவிகளின் பெரும்பகுதியினர் மாஸ்கோ விசாரணைகளை ஆதரிப்பதற்கான காரணங்களை நோர்த் ஆய்வு செய்தார். சோவியத் ஒன்றியத்துக்கான அமெரிக்க தூதர் ஜோசப் டேவிஸைப் போலவே, மாஸ்கோவில் உள்ள நியூ யோர்க் டைம்ஸின் நிருபர் வால்டர் டூரண்டி, விசாரணைககளின் நியாயத்தன்மை மற்றும் பிரதிவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவற்றில் தனது நம்பிக்கையை அறிவித்ததாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், அமெரிக்க தாராளவாதத்தின் மிகவும் செல்வாக்குமிக்க இரண்டு பத்திரிகைகளான Nation மற்றும் New Republic இதேமாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருந்தன.

பெரும் மந்தநிலை மற்றும் இத்தாலி, ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றியின் மத்தியில், அமெரிக்காவில் பல தாராளவாத புத்திஜீவிகள் மற்றும் கல்வியாளர்கள் சோவியத் ஒன்றியத்தை பாசிச அச்சுறுத்தலுக்கான எதிர்ப்பலமாக கருதினர் என நோர்த் விளங்கப்படுத்தினார். ஸ்ராலின் தனது பங்கிற்கு, சோசலிசப் புரட்சியின் அச்சுறுத்தலைக் குறைத்துக்காட்டி, அவர்களின் பாசிச-விரோதத்திற்கு ஒரு சோசலிச நிறத்தை வழங்குவதன் மூலம் இந்த அடுக்குகளிடையே ஆதரவை வளர்த்துக் கொண்டார்.

முதலாளித்துவத்தின் மரண வேதனையின் சகாப்தத்தில் தாராளவாதத்தின் அரசியல், தத்துவார்த்த மற்றும் தார்மீக வறுமைமிக்கவர்கள் தங்கள் ஜனநாயக மன உளைச்சல்களை ஒதுக்கி வைப்பதற்கான விருப்பத்திலும், வரலாற்று உண்மை பற்றிய எந்தவொரு கவலையும் மற்றும் ஹிட்லரின் ஜேர்மனியின் நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட கொடூரமான காட்சிகளை எதிர்த்த அல்லது கடந்துவந்த மிஞ்சிய வாழ்நாள் புரட்சியாளர்கள் மீதான நீதித்துறை போலி விசாரணையின் கட்டமைப்பின் நியாயத்தன்மைக்கு உறுதியளிப்பதன் மூலமும் வெளிப்படுத்தப்பட்டது.

நோர்த் பின்வருமாறு விளங்கப்படுத்தினார்:

சோவியத் ஒன்றியம் வென்றெடுத்தவை மீது தாராளவாதிகளின் விமர்சனமற்ற புகழ்ச்சி, அமெரிக்காவினுள்ளே புரட்சிகர மாற்றத்திற்கு ஓர் அங்கீகரிப்பைக் குறிக்கவில்லை. அதிலிருந்து தூரவே இருந்தது. பெரும்பாலான தாராளவாத புத்திஜீவிகள் அமெரிக்காவில் சமூக சீர்திருத்தத்திற்கான தங்களின் சொந்த கோழைத்தனமான நிழ்ச்சிநிரலைப் பலப்படுத்துவதற்கும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து பாசிசத்தை நெருங்கவிடாமல் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக சோவியத் ஒன்றியத்துடனான கூட்டைப் பார்க்க நாட்டம் கொண்டிருந்தனர். சோவியத் ஒன்றியத்திற்கோ புரட்சிகர எழுச்சிகள் இனியும் முன்னிலைக்கு வருமென்ற அச்சம் இருக்கவில்லை. ட்ரொட்ஸ்கியின் தோல்வியானது, சர்வதேச புரட்சிகர அபிலாஷைகளை சோவியத் ஒன்றியம் கைவிட்டதையே குறித்திருந்ததாக தாராளவாதிகள் புரிந்து கொண்டனர். 1930களின் மத்தியில் ஸ்ராலினிச ஆட்சி பிரகாசமான அரசியல் மதிப்பை ஈட்டியிருந்தது.

மாஸ்கோ விசாரணைகளுக்கு தாராளவாத விடையிறுப்பை ஆராய்கையில், மற்றொருமொரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான், 1936 ஜூலையில் ஸ்பானிய உள்நாட்டு போர் வெடித்தது. ஸ்பெயின் பாசிசவாதத்தால் அச்சுறுத்தப்பட்டு இருந்தது, அதன் வெற்றி நிச்சயமாக இரண்டாவது உலக போர் வெடிப்பதற்கே வழி வகுக்கும் என்றிருந்தது. பாசிச-எதிர்ப்பு சக்திகளாக இருந்த குடியரசு கட்சிகாரர்களுக்கு சோவியத் ரஷ்யா மிக முக்கிய கூட்டாளியாக பார்க்கப்பட்டது. சில தாராளவாத புத்திஜீவிகளே, ஸ்பெயினில் ஸ்ராலினிச அரசியலின் உண்மையான முக்கியத்துவத்தை மிகவும் கவனமாக ஆய்வு செய்வதற்கு நாட்டம் கொண்டனர். மிகப் பெரும்பான்மையினர், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் அரசியல் பயங்கரத்தின் ஊடாக அழித்து வந்ததையும், இறுதியில் பிராங்கோவின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்து வந்ததையும் அலட்சியப்படுத்தினர். ஸ்பெயினில் பாசிசத்தை தோற்கடிப்பதற்கு, "முற்போக்கு சக்திகளின்" மொத்த நம்பிக்கைகளும் சோவியத் ஒன்றியத்தின் மீதே சார்ந்திருந்தன, மேல்தோற்றத்தில் சோவியத் ஒன்றியமானது அரணாக பார்க்கப்பட்டது. (டேவிட் நோர்த், ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்)

அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் முன்னணி வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதென்பது, பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட CIO தொழில்துறை தொழிற்சங்கங்களை ஜனநாயகக் கட்சிக்கு அரசியல்ரீதியாக அடிபணிய செய்வதில் அது வகித்த பங்கின் வடிவமாகவும் இருந்தது.

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜேர்மனிக்கு எதிரான போருக்கு கையெழுத்திடுவது (Wikimedia Commons)

தொழிலாளர் இயக்கத்தை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணியச் செய்யும் இவ்விடயம், தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மத்திய அரசியல் பிரச்சினையாக இருந்தது இன்றும் இருக்கின்றது. 1929 ஆம் ஆண்டு வோல் ஸ்ட்ரீட் உடைவினால் தூண்டப்பட்ட முதலாளித்துவத்தின் உலகளாவிய நிலைமுறிவு, ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் தொழில்துறை சக்தியான அமெரிக்காவில் பேரழிவுகரமான சமூக நெருக்கடியின் வடிவத்தை விரைவாக எடுத்தது. கிட்டத்தட்ட ஒரே இரவில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் வறுமை மற்றும் பட்டினியின் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

முதலாளித்துவம் மதிப்பிழந்து போயுள்ளது. புத்திஜீவிகளின் பிரிவுகள் உட்பட வெகுஜனங்களின் உதடுகளில் முதலாளித்துவம் ஒரு அழுக்கான வார்த்தையாக மாறிப்போயுள்ளது. அக்டோபர் புரட்சிக்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சோவியத் ஒன்றியம் மில்லியன் கணக்கான மக்களை ஈர்க்கும் மற்றும் ஊக்கமளிக்கும் துருவமாக மாறியது. அமெரிக்க ஆளும் உயரடுக்கில் மத்தியில், அதன் இருப்பு அமெரிக்காவில் சோசலிசப் புரட்சியின் ஆபத்தின் ஒரு நிரந்தர நினைவூட்டலாக நீடித்தது.

ரூஸ்வெல்ட்டின் புதிய உடன்படிக்கை ஆளும் வர்க்கத்தின் மத்தியில் தொலைநோக்குடன் நோக்கிய பிரிவினரின் முடிவை பிரதிபலித்தது. அவர்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் பரந்த நிதி இருப்புக்களில் ஒரு பகுதியை தங்கள் அமைப்பைத் தூக்கி எறியாமல் காப்பாற்ற மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்களின் திட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் எனக் கருதினர். எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சமூக வீழ்ச்சியின் ஆரம்ப அதிர்ச்சி கலைந்து போகத் தொடங்கியவுடன் வர்க்க மோதல் வெடிப்பதைத் தடுக்க இது போதுமானதாக இருக்கவில்லை. 1934 ஆம் ஆண்டில் டோலிடோ (ஓஹியோ), சான் பிரான்சிஸ்கோ மற்றும் மினியாபோலிஸ் ஆகிய மூன்று நகரங்களில் பொது வேலைநிறுத்தங்கள் நடந்தன. இதில் மினியாபோலிஸில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைமையில், பின்னர் அமெரிக்க கம்யூனிஸ்ட் கழகத்தை (Communist League of America) அமைத்துக்கொண்டனர்.

1934 மினியாபோலிஸ் வேலைநிறுத்தம்

இந்த அரை-கிளர்ச்சி போராட்டங்களை தொடர்ந்தது, சுரங்கத் தொழிலாளர்களின் தலைவர் ஜோன் எல். லூயிஸ் (John L. Lewis) மற்றும் பழைமைவாத கைவினைஞர்களின் அடிப்படையிலான அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பிலிருந்து (AFL) பிரிந்த பிற தொழிற்சங்கத் தலைவர்கள் தலைமையில் 1935 ஆம் ஆண்டில் தொழில்துறை அமைப்புக்கான குழு உருவாகியது. வாகன, எஃகு, மின், இரப்பர், தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதையும், பாரிய தொழில்துறை தொழிற்சங்கங்களை நிறுவுவதையும் AFL எதிர்த்தது.

தொழில்துறை தொழிற்சங்கங்களுக்கான இயக்கம் பெருவணிகங்க கட்சிகளுடனான முறிவு பற்றிய கேள்வியை எழுப்பியது. 1935 இல் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்த்தின் (UAW) ஸ்தாபக மாநாடு ஒரு தொழிற் கட்சி அமைப்பதற்கு வாக்களித்தது.

1937 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஃபிளின்ட் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தால் ஈர்க்கப்பட்ட உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களின் அலை பரவலாக இருந்தது. இது ஜெனரல் மோட்டார்ஸை UAW இனை அங்கீகரிக்க கட்டாயப்படுத்தியது. தொழில்துறை அமைப்புகளின் காங்கிரஸ் (CIO) அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் இந்த வெடிப்புமிக்க கிளர்ச்சியிலிருந்து பிறந்தது.

ரூஸ்வெல்ட் மற்றும் ஜனநாயகக் கட்சியினருடன் முறித்துக் கொள்வதன் மூலம் ஒரு சுயாதீனமான அரசியல் வடிவத்தை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க, கம்யூனிஸ்ட் கட்சி புதிய தொழில்துறை தொழிற்சங்க இயக்கத்தில் அதன் கணிசமான செல்வாக்கை பயன்படுத்தியது. இந்த நிகழ்ச்சிப்போக்கில், அது லூயிஸ் மற்றும் பிற முதலாளித்துவ சார்பு அதிகாரத்துவங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது.

மந்தநிலையின் நிலைமைகள் மற்றும் மற்றொரு உலகப் போருக்கான ஏகாதிபத்திய சக்திகளின் தயாரிப்புகளின் கீழ், முதலாளித்துவக் கட்சிகளுடன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முறிவு அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் மகத்தான புரட்சிகர தாக்கங்களைக் கொண்டிருந்தது. துல்லியமாக அந்த காரணத்திற்காக, கிரெம்ளினின் மக்கள் முன்னணி கொள்கைக்கு ஏற்ப அமெரிக்காவில் ஸ்ராலினிசமயமாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அதைத் தடுக்க செயற்பட்டது.

தெற்கு, அடிமைத்தனத்தின் முன்னாள் கோட்டையாகவும், அந்த நேரத்தில் ஜிம் க்ரோ (Jim Crow) பிரிவினையின் பிரதான செயல்பாட்டாளராகவும் இருந்த அமெரிக்காவின் மிகப் பழமையான முதலாளித்துவக் கட்சியான ஜனநாயகக் கட்சி ஏற்கனவே பல தசாப்தங்களாக சமூக எதிர்ப்பு இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்கும், சக்தியிழக்கச் செய்வததற்கும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய அரசியல் பொறிமுறையாக செயல்பட்டது. வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு, சிறு விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனரஞ்சக இயக்கம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் பின்னால் திசைதிருப்பப்பட்டதன் மூலம் அபாயமற்றதாக இருந்தது. இவ்வாறே 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஏகபோக எதிர்ப்பு போராட்டங்களும் இருந்தன.

மந்தநிலையின் ஆண்டுகளில் தாராளவாத புத்திஜீவிகளின் பெரும்பகுதி, பாசிசத்தின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சியபோதும், ஆனால் ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சியின் சாத்தியத்தால் பயந்து, ரூஸ்வெல்ட் மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்குப் பின்னால் அணிதிரண்டு நின்றது. வர்க்க ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்க தேசியவாதத்தை கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதாலும் சமூக புரட்சியை அது உண்மையாக நிராகரித்ததாலும் அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.

1935 ஆம் ஆண்டில், கம்யூனிஸ்ட் கட்சி, ரூஸ்வெல்ட் மீதான அதன் மூன்றாம் கால தாக்குதல்களை ஒரு "பாசிச ஏகாதிபத்தியவாதி" என்பதை திடீரென கைவிட்டு, அவர் அமெரிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்று அறிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சி, "இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கத்துவத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி, கட்சித் தலைவர் ஏர்ல் ப்ரோடெர் (Earl Browder) ஒரு பாரிய கூட்டத்தில், "நாங்கள் அமெரிக்க குடிமக்களைக் கொண்ட ஒரு அமெரிக்க கட்சி. எங்கள் அனைத்து பிரச்சினைகளையும் அமெரிக்காவின் தேசிய நலன்களின் வெளிச்சத்தில் பார்க்கிறோம்” என்றார்.

1939 இல் ஏர்ல் ப்ரோடெர்

மே 1938 அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தாவது தேசிய மாநாட்டில், இந்த மண்டபம் அமெரிக்கக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அமெரிக்க தேசிய கீதமான “Star Spangled Banner” (நட்சத்திரம் மினுமினுக்கும் கொடி) இனை பாடினர்.

சோவியத் ஆட்சியின் எதிர்புரட்சிகர, தேசியவாதக் கொள்கைக்கு இணங்கிப்போவதற்கும், அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் தோற்றத்தைத் தடுப்பதற்கும் வசதியாக மார்க்சிசத்தை அவர்கள் சிதைத்ததில், அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ நடைமுறைவாதம், தனிமனிதவாதம், தேசியவாதம், புத்திஜீவிதஎதிர்ப்பு சித்தாந்தங்களின் பல்வேறு வகைகளைப் பயன்படுத்தினர். இது அமெரிக்க சிந்தனை மற்றும் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது.

ட்ரொட்ஸ்கி தனது இறுதிக்கால எழுத்துக்களில், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கத்திற்கான போராட்டத்தில் ஒரு சுயாதீனமான அரசியல் வடிவத்தை எடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த அடிப்படையில், பின்னர் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) என ஒழுங்கமைக்கப்பட்ட அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளை, ஜனநாயகக் கட்சியினருடன் முறித்துக் கொண்டு ஒரு தொழிற் கட்சியை நிறுவ வேண்டும் என்ற CIO வின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை, 1938 இன் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான புரட்சிகர சோசலிச இடைமருவு வேலைத்திட்டத்துடன் இணைத்தார்.

ஆகஸ்ட் 20, 1940 இல் ஸ்ராலினிச GPU முகவர் ரமோன் மெர்காடர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மேசையில் காணப்பட்ட “ஏகாதிபத்திய சிதைவின் சகாப்தத்தில் தொழிற்சங்கங்கள்” என்ற தலைப்பில் எழுதிமுடிக்கப்படாத கையெழுத்துப் பிரதியில், ட்ரொட்ஸ்கி எழுதினார்:

அமெரிக்காவில் தொழிற்சங்க இயக்கம் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் புயலான வரலாற்றைக் கடந்துவிட்டது. CIOவின் எழுச்சி என்பது உழைக்கும் மக்களிடையே உள்ள புரட்சிகர போக்குகளுக்கு மறுக்கமுடியாத சான்றாகும். எவ்வாறாயினும், புதிய "இடதுசாரி" தொழிற்சங்க அமைப்பு நிறுவப்பட்ட உடனேயே விரைவில் ஏகாதிபத்திய அரசின் இறுக்கமான அரவணைப்பில் விழுந்துவிட்டது என்பதுதான் உண்மை. ரூஸ்வெல்ட் மற்றும் அவரது அமைச்சரவைக்கான அவற்றின் அனுதாபம் மற்றும் ஆதரவிற்கான போராட்டத்தில் பழைய கூட்டமைப்புக்கும் புதியதுக்கும் இடையிலான முதலிடங்களுக்கிடையேயான போராட்டம் பெருமளவில் குறைக்கப்படக்கூடியது. (Leon Trotsky, Leon Trotsky on the Trade Unions, New York, 1975, p.73)

தொழிற் கட்சி சுலோகம் குறித்து 1938 மே மாதம் SWP தலைவர்களுடன் ஒரு கலந்துரையாடலில், ட்ரொட்ஸ்கி புதிய தொழில்துறை தொழிற்சங்க இயக்கம் பற்றி பின்வருமாறு கூறினார்:

வர்க்கப் போராட்டம் நசுக்கப்படாவிட்டால், மனச்சோர்வுக்குப் பதிலாக, இயக்கம் ஒரு புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும், அந்த பாதை அரசியலாகும். இந்த சுலோகத்திற்கு ஆதரவான அடிப்படையான வாதம் அதுதான். (Leon Trotsky, The Transitional Program for Socialist Revolution, New York, 1977, p.163-164)

டேவிட் நோர்த் தனது 1996 சொற்பொழிவில், போருக்கு முந்தைய ஆண்டுகளில் அமெரிக்க தாராளவாத புத்திஜீவிகளின் சோவியத் சார்புக்கு இடையிலான தொடர்பையும், போருக்குப் பின்னர் மிகவும் கொடூரமான பனிப்போர் கம்யூனிச எதிர்ப்பு மற்றும் சோவியத் எதிர்ப்பை நோக்கிய அதன் திருப்பத்தையும் விளக்கினார். அதே அரசியல் மற்றும் தத்துவார்த்த மேலோட்டமும் சந்தர்ப்பவாதமும், வரலாற்று உண்மையைப் பற்றிய அதே மேலோட்டமான அணுகுமுறையும், ஒரு காலகட்டத்தில் ஸ்ராலினின் குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களாக்கி, அடுத்ததாக அந்தக் குற்றங்களுக்கு ஸ்ராலின் சோசலிசத்தையும் மார்க்சிசத்தையும் காட்டிக் கொடுத்தது காரணமல்ல மாறாக சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டமே என குற்றம் சாட்டுவதற்கு வழிவகுத்தது. ஸ்ராலினின் ஏதேச்சாதிகார சர்வாதிகாரம், அக்டோபர் புரட்சியினதும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினதும் தவிர்க்க முடியாத விளைவு என்று கூறினர்.

ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிசம் மற்றும் சர்வதேசியவாதத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான அவரது இடையறாத போராட்டம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன அல்லது இயல்பாகவே ஒரு சர்வாதிகார ஆட்சியைக் கட்டுப்படுத்துவதற்காக போட்டியாளர்களிடையேயான ஒரு உள் மோதலைத் தவிர வேறொன்றுமில்லை என்று அறிவிக்கப்பட்டன.

லியோன் ட்ரொட்ஸ்கி

நோர்த் குறிப்பிட்டார்

1936க்கும் 1946க்கும் இடையே சோவியத் ஒன்றியம் தொடர்பாக தாராளவாத புத்திஜீவிகளின் மனப்பாங்கில் வியத்தகு மாற்றம் இருந்தது. இருப்பினும், அங்கே சோவியத் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளுக்கு இடையே ஒரு திட்டவட்டமான அரசியல் மற்றும் தத்துவார்த்த தொடர்ச்சியும் இருந்தது. அவர்கள் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஸ்ராலினை ஆதரித்தபோது, பின்னர் ஸ்ராலினுக்கு எதிராக ட்ரூமெனை ஆதரித்தபோது, தாராளவாத புத்திஜீவிகள் ஸ்ராலினிசத்தையும் மார்க்சிசத்தையும் ஒன்றாய் அடையாளம் காண்பதிலிருந்து தொடங்கினர்.

இது தாராளவாத புத்திஜீவிகளை அரசியல்ரீதியாகவும் மற்றும் புத்திஜீவிதரீதியாகவும் பலவீனமான நிலைப்பாட்டிற்கு கொண்டு வந்தது. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திற்கு ஸ்ராலினிசம் சமம் என்ற மேலோட்டமான சூத்திரத்தின் அடிப்படையில், தாராளவாதிகள் இரண்டு மாற்றீடுகளுடன் மட்டும் விடப்பட்டார்கள்: முதலாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் என்ற வகையில் வலதிலிருந்து ஸ்ராலினிசத்தை எதிர்ப்பது; இரண்டாவது ஸ்ராலினிசத்தின் அனுதாபிகளாக இருந்து சேவை செய்வது. The New Republic இதழ் முதலாவது முகாமில் பிணைந்திருந்தது; The Nation இரண்டாவது முகாமில் சிக்கிக் கொண்டது. (David North, The Russian Revolution and the Unfinished Twentieth Century, Oak Park, MI, 2014, pp. 57–58)

தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சி மற்றும் முதலாளித்துவ தாராளவாதிகளுக்கு அடிபணியச் செய்வதன் மூலம், அமெரிக்க ஸ்ராலினிஸ்டுகள் போருக்குப் பிந்தைய தொழிலாளர் இயக்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச் செய்வதிலும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அதன் பனிப்போர் தாக்குதலிலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். CIO தலைமையும் ஜனநாயகக் கட்சியும் தொழிலாளர் இயக்கத்தில் உள்ள அனைத்து இடதுசாரி மற்றும் சோசலிசக் கூறுகளுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாகத் திரும்பின. கம்யூனிச எதிர்ப்பு சூனிய வேட்டை மூலம் தொழிற்சங்கங்களை களையெடுத்தன. இது தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி மற்றும் இறுதியில் சரிவுக்கான களம் அமைத்ததுடன், மேலும் அவை இறுதியில் நிறுவனங்களினதும் மற்றும் முதலாளித்துவ அரசின் நேரடி கையாட்களாக மாற்றப்பட்டன.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியும் பனிப்போர் கால கம்யூனிச எதிர்ப்பும்

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி வரலாற்று ரீதியாக நான்காம் அகிலத்தினதும் மற்றும் அமெரிக்காவின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும் அதன் முன்னணி பிரச்சாரகரரும் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவருமான மக்ஸ் சாக்ட்மன் தலைமையிலான சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேறிய ஒரு வலதுசாரி பிளவில் தனது வேர்களை கொண்டுள்ளது. நியூயோர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் பேர்ன்ஹாம் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினரான மார்ட்டின் ஆபெர்ன் ஆகியோருடன் சாக்ட்மன், ஆகஸ்ட் 1939 ஸ்ராலின்-ஹிட்லரின் ஆக்கிரமிப்புதவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான தனது பிரதிபலிப்பில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை நான்காம் அகிலம் பாதுகாப்பதை கைவிட்டு, சோவியத் ஒன்றியமும் ஒரு ஏகாதிபத்திய அரசே என்று கூறினார்.

அக்டோபர் புரட்சியின் வரலாற்று வெற்றிகளில் எதுவும் இல்லை என்ற பேர்ன்ஹாமின் நிலைப்பாட்டை சாக்ட்மன் விரைவில் ஏற்றுக்கொண்டார். சோவியத் ஒன்றியம் வர்க்க சமுதாயத்தின் ஒரு புதிய வடிவமாக மாறியுள்ளது. இதனை பேர்ன்ஹாம் "அதிகாரத்துவ கூட்டாண்மை" என்று அழைத்தது, ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு புதிய ஆளும் வர்க்கமாக உருவெடுத்துள்ளது என்றார். இப்போக்கானது "அரசு முதலாளித்துவம்" என்று அறியப்பட்ட ஒரு பரந்த போக்கின் ஒரு பகுதியாகும். இது ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் கீழ் சோவியத் ஒன்றியத்தை பற்றிய நான்காம் அகிலத்தின் பகுப்பாய்வான "உருக்குலைந்த தொழிலாளர் அரசு" என்று ஆய்வை தூக்கி எறிந்தது. இவ் ஆய்வின்படி "ஸ்ராலினின் குற்றங்கள் மற்றும் சீரழிவுகள் இருந்தபோதிலும், சோவியத் ஒன்றியம் அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை அடிப்படையாகக் கொண்டதுடன், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் மற்றும் உலக சோசலிசப் புரட்சிக்கான புரட்சிகர வேலைத்திட்டத்தை மீட்டெடுப்பதற்கும், சோவியத் தொழிலாள வர்க்கம் அரசியல் புரட்சி மூலம் அதிகாரத்துவத்தை தூக்கிவீசுவதனூடாக முதலாளித்துவ மறுசீரமைப்பிலிருந்தும் அதனை பாதுகாக்க முடியும் என நான்காம் அகிலம் குறிப்பிட்டிருந்தது.

1939-1940 சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் பிரிவுகளுக்கிடையிலான மோதலின் போது எழுதப்பட்ட புத்திசாலித்தனமான விவாதங்களில் மார்க்சிசத்தை பாதுகாக்க என்ற தலைப்பில் சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி விளக்கமளித்தபடி, சாக்ட்மன் தலைமையிலான சிறுபான்மை பிரிவின் அரசியலின் மத்தியில் இருந்தது என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கினையும் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான எந்தவொரு சாத்தியத்தையும் நிராகரிப்பதாகும்.

ட்ரொட்ஸ்கியிடம் அனுதாபம் கொண்டிருந்த, ஆனால் அக்டோபர் புரட்சி மற்றும் புரட்சிகர சோசலிசத்தை நிராகரிப்பதற்கும், இரண்டாம் உலகப் போருக்குள் நுழைய தயாராக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகளின் முழு அடுக்கின் வலதுசாரி திருப்பத்தினை சாக்ட்மன் மற்றும் பேர்ன்ஹாமின் நம்பிக்கையற்ற முன்னோக்கு சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் பிரதிபலித்தது.

1940 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு குட்டி முதலாளித்துவ பிரிவின் தலைவராக சாக்ட்மன் ஆனார். பிளவு ஏற்பட்ட சில வாரங்களில், பேர்ன்ஹாம் சோசலிசத்தை கைவிட்டு, விரைவாக அமெரிக்க கம்யூனிச எதிர்ப்பு பழமைவாதத்தின் கருத்தியல் தலைவரானார். சாக்ட்மனின் பரிணாமம் மேலும் நீடித்தது. ஆனால் அவரது குட்டி முதலாளித்துவ அரசியலின் தர்க்கம் 1940 களின் இறுதியில் பனிப்போர் கம்யூனிச-விரோதத்தை தழுவுவதற்கு அவரை வழிநடத்தியது. அவர் AFL-CIO இன் அரசியல் ஆலோசகராக ஆனார். 1972 இல் அவர் இறப்பதற்கு முன், நிக்சனின் வட வியட்நாம் மீது குண்டுவீச்சின் ஆதரவாளரானார்.

ஸ்ராலினிசத்தையும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியையும் மூடிமறைக்கையிலும், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி அதன் சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு வேர்களை நிராகரிக்கவில்லை. அதன் நிறுவனரும் சாக்ட்மனின் ஒரு அரசியல் பாதுகாவலர் மைக்கேல் ஹாரிங்டன், பனிப்போரினதும், ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவாளராக இருந்தார். அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தை வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்து கண்டித்ததுடன் மற்றும் அக்டோபர் புரட்சியை காட்டிக்கொடுத்தன் அடிப்படையில் நிறுவப்பட்ட சர்வாதிகார ஸ்ராலினிச ஆட்சியுடன் அதனை அடையாளம் காட்டுகிறது.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள அரச முதலாளித்துவ குழுக்களின் கம்யூனிச எதிர்ப்பு, ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு எதிராகவும் ஸ்ராலினிச போக்குகளுடன் இணைவதை தடுக்கவில்லை. அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியும் ஜாக்கோபினும் இன்று அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் பாராட்டுவது என்னவென்றால், துல்லியமாக 1930 களின் ஸ்பானிய புரட்சியை இரத்தக்களரியாக அழித்த மக்கள் முன்னணி காலகட்டத்தில் அதன் எதிர்ப்புரட்சிகர பாத்திரமும் மற்றும் மாஸ்கோ போலிவிசாரணைகளும் மரணதண்டனைகளும் மற்றும் CIO ஐ ரூஸ்வெல்ட்டிற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் அடிபணியச் செய்ததையுமாகும்.

ஜூலை 22, 1936 இல் பார்சிலோனாவில் நடந்த ஒரு தெருப் போரின்போது குடியரசுக் கட்சி தன்னார்வலர்கள், தடுப்பபுக்கள் அமைத்து துப்பாக்கிகள் மற்றும் ரிவால்வர்கள் ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (AP புகைப்படம்)

ஜாக்கோபின் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி இபார்ரூரியை பெருமைப்படுத்துவது எவ்வகையிலும் ஒரு விதிவிலக்கல்ல. இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமயமாக்குவதற்கான முன்மாதிரியாக ஸ்ராலினிசத்தையும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியையும் கணக்கிடப்பட்ட ஊக்குவிப்பின் ஒரு பகுதியாகும். சமீபத்திய மாதங்களில், அஞ்சலா டேவிஸ் போன்ற 1960கள் மற்றும் 1970களின் ஸ்ராலினிச பிரமுகர்களை ஜாக்கோபின் முன்னணிக்கு கொண்டுவந்தது. அஞ்சலா டேவிஸ் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர மரபு என்று புகழ்ச்சிமிக்க கட்டுரைகளை வெளியிட்டார்.

இந்த மாதத்தில், டிசம்பர் 5 அன்று, ஜாக்கோபின் அமசன் குறித்த ஒரு புதிய புத்தகத்தின் மறுஆய்வை வெளியிட்டது. (இந்த மறுஆய்வு, “அமசனை எதிர்ப்பது பயனற்றது அல்ல” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது) இது “கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்” வில்லியம் ஃபோஸ்டர் இற்கு மதிப்பளித்து வெளியிடப்பட்டுள்ளது. அவர் 1919 இன் எஃகுதுறை வேலைநிறுத்தம் தொடர்பான ஒரு தனிக்கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர் இந்த வேலைநிறுத்தமானது, "1930 களின் CIO இன் தொழில்துறைரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட வெற்றிகளுக்கான ஒரு வழிகாட்டும் பாதையாக மட்டுமல்ல, சமகால போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கும் வழிகாட்டும் பாதையாக உள்ளது" என்று எழுதியிருந்தார். ஃபோஸ்டர் இந்தவேலைநிறுத்தத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அது இறுதியில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஒரு விசுவாசமான ஸ்ராலினிச செயல்பாட்டாளராகவும், மாஸ்கோ விசாரணைகளின் பாதுகாவலராகவும், ட்ரொட்ஸ்கிசத்தின் கடுமையான எதிரியாகவும் மாறி, 1945 முதல் 1957 வரை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தினார். அவர் முக்கியத்துவம் வாய்ந்த 1936 ஆம் ஆண்டின் எஃகு பற்றிய ஒரு தனிக்கட்டுரையும் வெளியிட்டார்.

ஆகஸ்ட் 2017 இல், அதன் நிறுவன ஆசிரியரும் வெளியீட்டாளருமான பாஸ்கர் சங்காரா மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஜோசப் எம். ஸ்வார்ட்ஸ் ஆகியோரால் “சோசலிஸ்டுகள் என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஜாக்கோபின் வெளியிட்டது. கட்டுரை, மக்கள் முன்னணி காலத்தில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை இன்றைய முன்மாதிரியாக முன்வைத்தது. அதன் ஆசிரியர்கள் பின்வருமாறு எழுதினர்:

இறுதி ஆய்வுகளில், சோசலிஸ்டுகள், சோசலிசத்திற்கான தீர்ப்பாயங்களாகவும் சிறந்த அமைப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறுதான் 1935-1939 முதல் கம்யூனிஸ்ட் கட்சி வேகமாக வளர்ந்தது. அவர்கள் தங்களை CIO மற்றும் புதிய உடன்படிக்கை (New Deal) கூட்டணியின் இடதுசாரிகளாக அமைத்துக் கொண்டதுடன், மேலும் அந்தக் காலகட்டத்தில் இருபதாயிரத்திலிருந்து ஒரு இலட்சம் உறுப்பினர்களாக வளர்ந்தனர். அமெரிக்காவில் சோசலிசம் வெகுஜன பிரசன்னத்தை கொண்டிருந்த கடைசி நேரமாக மக்கள் முன்னணி இருந்தது. ஏனென்றால், அதன் சொந்த வழியில், கம்யூனிஸ்டுகள் அமெரிக்க அரசியல் கலாச்சாரத்திற்குள் ஜனநாயகத்திற்கான தங்கள் போராட்டங்களில் வேரூன்றி, அதே நேரத்தில் ஒரு உண்மையான பல்லின தொழிலாள வர்க்க இயக்கத்தை உருவாக்க முயன்றனர்.

கடந்த ஆண்டு, சங்கரா The Socialist Manifesto இனை வெளியிட்டார், இது அமெரிக்காவில் ஒரு வெகுஜன சோசலிச இயக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு மூலோபாயத்தை கோடிட்டுக் காட்டுவதாக கூறியது. அதில், மந்தநிலையின் போது ரூஸ்வெல்ட் மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவைப் பாராட்டிய அவர், ரூஸ்வெல்ட்டுக்கு சோசலிஸ்ட் கட்சித் தலைவர் நோர்மன் தோமஸின் எதிர்ப்பையும், 1936 இல் அவர் ஒரு சுயாதீன ஜனாதிபதி பிரச்சாரத்தை நடத்துவதற்காக எடுத்த முடிவையும் இழிவுபடுத்தி, அவர் எழுதுகிறார்:

1936 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதற்கான ஒரு அறிவுகரமான முடிவை எடுத்தனர். அப்போது ரூஸ்வெல்ட்டின் சீர்திருத்தங்களைத் தொடரவும், சுதந்திர அரசியலுக்கான நிறுவன தடைகளை அங்கீகரிக்கவும் அதிகவிருப்புடன் இருந்தனர். தோமஸின் குழுவால் அந்த தடைகள் எதையும் சமாளிப்பதற்கான ஒரு மூலோபாயத்தையோ அல்லது சிறந்த புதிய உடன்படிக்கை சீர்திருத்தங்களை எதிர்க்க ஒரு வழியைக் கூட வழங்க முடியாதிருந்தது. அவர்கள் முதலாளித்துவ கட்சிகளை எதிர்ப்பது பற்றிய முழக்கங்களையே வைத்திருந்தார்கள். முரண்பாடாக, சிறிய கம்யூனிஸ்ட் கட்சியால் ரூஸ்வெல்ட் ஆதரவாளர்களுடன் இன்னும் கூடுதலான தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது…

தாராளமயத்தின் விசுவாசமான எதிர்ப்பாளர்களாக இருப்பதைவிட அதிகமாக இருக்கக்கூடிய நமது வார்த்தைப் பிரயோகங்களை மாற்றியமைத்து, அன்றாட வாழ்க்கையில் நம்மை வேரூன்றி, சுயாதீனமான தொழிலாள வர்க்க அரசியலின் ஒரு திட்டத்தை உருவாக்கும்போது, இடதுசாரிகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வர முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வி. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நிகழ்ச்சிப்போக்கில் எமது குறிக்கோளை இழந்துவிடாமல் சோசலிசத்தை இருபத்தியோராம் நூற்றாண்டின் அமெரிக்கவாதமாக உருவாக்க முடியுமா? (Bhaskar Sunkara, The Socialist Manifesto: The Case for Radical Politics in an Era of Extreme Inequality, New York, 2019, pp. 179, 181)

ஹாரி ட்ரூமனை ஆதரிப்பதற்கு பதிலாக 1948 இல் ஹென்றி வாலஸின் முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக வில்லியம் ஃபோஸ்டர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோரை சங்கரா விமர்சிக்கிறார். ஜனநாயகக் கட்சியினருடனான இடைவெளி மற்றும் ஒரு தொழிற் கட்சியை ஸ்தாபிப்பதற்காக அந்த நேரத்தில் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு திசைதிருப்பலாக வாலஸை ஊக்குவித்ததற்காக அவர் கம்யூனிஸ்ட் கட்சியை இடதுபுறத்தில் இருந்து விமர்சிக்கவில்லை. ஆனால் ஜனநாயகக் கட்சியினருக்கு கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய முந்தைய ஆதரவிலிருந்து விலகிய தவறான ஆலோசனைக்காக வலதுபுறத்தில் இருந்து விமர்சிக்கின்றார்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி ஏன் இன்று ஸ்ராலினிசத்தினை நோக்கி திரும்புகிறது? அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் விரைவான நிலைமுறிவு மற்றும் சோசலிசப் புரட்சிக்கான ஒரு புதிய காலகட்டம் திறக்கப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் இதனை நோக்கவேண்டும்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி என்பது ஜனநாயகக் கட்சியின் ஒரு பின்இணைப்பாகும். உண்மையான சோசலிசத்துடன் இதற்கு பொதுவானது எதுவும் கிடையாது. இது அமெரிக்க ஜனநாயகத்தின் கண்கூடான சிதைவு, ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தினை நோக்கி திரும்புவது, இராணுவவாதத்தின் வளர்ச்சி, சமூக சமத்துவமின்மையின் மிக மோசமான நிலைமைகள், முதலாளித்துவத்தின் அனைத்து அமைப்புகள் மீதான மதிப்பிழப்பு, பரந்தளவிலான முதலாளித்துவ எதிர்ப்பு உணர்வின் அதிகரிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவிலும், உலகெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் மீள்எழுச்சி ஆகியவற்றால் அது மிகப்பிற்போக்கான அரசியல் சக்திகளையும் பாரம்பரியத்தையும் நோக்கி திரும்புகின்றது.

இந்த நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் முரண்பாடுகள் அனைத்தும், உலகளாவிய COVID-19 தொற்றுநோயால் பெரிதும் அதிகரித்துள்ளன. இது உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பார்வையில் முதலாளித்துவத்தின் நியாயபூர்வமானதன்மையை அபாயகரமாகவும் மீட்டெடுக்கமுடியாமலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த தொழிலாளர்கள் உடல்களை அகழியில் புதைக்கின்றனர். Hart Island, New York City, April 9, 2020 [Credit: AP Photo/John Minchillo]

பல விடயங்களில், முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடியானது, அக்டோபர் புரட்சி மற்றும் வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை ஸ்தாபிக்க வழிவகுத்த முதலாம் உலகப் போர் வெடித்ததன் மூலம் தூண்டப்பட்டதை விடவும் மற்றும் அதைத்தொடர்ந்த மூன்று தசாப்தங்களில் ஆதிக்கம் செலுத்திய இரண்டாம் உலகப் போர், மந்தநிலை உட்பட புரட்சிகர மற்றும் எதிர்ப்புரட்சிகர குழப்பங்களையும் விட தீவிரமானது.

அந்தக் காலகட்டத்திலிருந்து, முதலாளித்துவம் நம்பியிருந்த அனைத்து பாரிய தொழிலாளர் அதிகாரத்துவங்களும் கட்சிகளும், அமெரிக்காவைப் போலவே வெளிப்படையாக முதலாளித்துவ-சார்பு ஸ்ராலினிச, சமூக ஜனநாயக கட்சிகள் சிதைந்துவிட்டன. தொழிலாள வர்க்கம் எண்ணிக்கையில் பெரிதும் அதிகரித்து, உலகளவில் ஒன்றோடொன்று இணைந்து, எதிர்வரும் பரந்துபட்ட தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் புதிய அலை ஒரு சர்வதேச வடிவத்தை எடுக்கும் என்பதை உறுதி செய்கிறது.

இந்த உலக நெருக்கடியின் மையமாக உள்ள அமெரிக்க முதலாளித்துவம் 1930கள், 1940கள் மற்றும் போருக்குப் பிந்தைய எழுச்சிமிக்க காலத்திலிருந்து பாரியளவிலான சரிவை சந்தித்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு முன்னர் உலகின் தொழிற்துறை சக்தியின் மையமாக இருந்த தனது நிலையை இழந்துவிட்டது. பல தசாப்தங்களாக தொழிற்துறை அழிப்பு மற்றும் நிதிமயமாக்கல் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணித்தன்மையை அதிகரித்து, அதன் சிதைவின் மோசமான வெளிப்பாடாக சமூக சமத்துவமின்மை பாரியளவில் அதிகரித்துள்ளது.

முதலாளித்துவத்தினதும் மற்றும் அதன் உதவி அமைப்புக்களான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி போன்றவற்றின் நிலைப்பாட்டில், அவர்கள் அனைவரையும் மிகவும் ஆபத்தானதாக பயமுறுத்துவது என்னவெனில், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமும், அதேபோல் புத்திஜீவிகளின் இளைஞர்கள் மற்றும் முற்போக்கான பிரிவுகளிடையே உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) செல்வாக்கிலும் ஆளுமையிலும் ஏற்படும் மகத்தான வளர்ச்சியுமாகும்.

அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியைக் கட்டுப்படுத்தும் சோசலிசப் புரட்சிக்கு எதிரான நடுத்தர வர்க்கத்தினர்கள் அனைவரும் குறிப்பாக தொழிலாளர் மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களின் வளர்ச்சியைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் ஆளுமை மற்றும் செல்வாக்கால் அவர்கள் பயப்படுகிறார்கள். இது நிறுவனங்கள் சார்பு தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான தரவரிசை மற்றும் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களின் வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. இனவெறி அரசியலை ஊக்குவிப்பதற்கும், அமெரிக்க வரலாற்றை பொய்மைப்படுத்துவதன் மூலமும், அமெரிக்காவின் இரண்டு பெரிய ஜனநாயகப் புரட்சிகளான அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரின் முற்போக்கான மரபுகளை மறுப்பதன் மூலமும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான “1619 திட்டம்” மூலமான நியூ யோர்க் டைம்ஸின் முயற்சியை WSWS அம்பலப்படுத்துவதை அவர்கள் திகிலுடன் பார்க்கிறார்கள்.

ஸ்ராலினிசத்தின் இழிந்த மரபினை நோக்கி அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் கட்சியும் ஜாக்கோபினும் திரும்புவதில் ஒரு பொதுவான நலன்கள் உள்ளன. இது எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சிசத்தின் புரட்சிகர மரபுகள் மற்றும் வேலைத்திட்டத்தையும் அக்டோபர் புரட்சியையும் உள்ளடக்கிய நமது இயக்கத்திற்கு எதிராக இயக்கப்படுகிறது. சோசலிசப் புரட்சியின் புதிய காலகட்டத்தில், ட்ரொட்ஸ்கிசமும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திலிருந்து வெளியேற வழி தேடும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை ஈர்க்கும் துருவமாக மாறும்.

Loading