ஒரு பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப பாரிசிலும் வியன்னாவிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை ஐரோப்பிய அரசாங்கங்கள் பற்றிக்கொள்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாரிஸ், நீஸ், டிரெஸ்டன் மற்றும் வியன்னாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் தீவிர வலதுசாரிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டு விடையிறுத்து வருகின்றன. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போலிக் காரணத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் ஐரோப்பியத் தலைவர்களும் செவ்வாயன்று "ஐரோப்பிய கோட்டை" என்ற ஒரு பாரிய விரிவாக்கமாக, தஞ்சம் கோருவதற்கான உரிமை நடைமுறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கும் ஐரோப்பா முழுவதும் பொலிஸ் அரசு என்ன அளவில் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கும் உடன்பட்டனர்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஆஸ்திரிய சான்சிலர் செபாஸ்டியன் குர்ஸ் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும் முன்னாள் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சருமான ஊர்சுலா வான் டெர் லையென் உடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்: "எங்களுடைய பல்வேறு சேவைகளையும் அதிகாரிகளையும் ஒழுங்கில் கொண்டுவருவதையும், பயங்கரவாதத்தையும் தீவிரமயமாகுதலையும் எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளை ஒருங்கிணைப்பதையும், பல இலக்கு நடவடிக்கைகளுடன் அரசாங்க மட்டப் பணிகளை நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று அறிவித்தார்.

ஆக்டோபர். 21, 2020, பாரிசிலுள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தின் முற்றத்தில், கொல்லப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பட்டியின் பிரேதப் பெட்டிக்கு அருகில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், (AP Photo/Francois Mori, Pool)

"இந்த நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செயற்படுத்துவதே இப்போதைய பணி, எடுத்துக்காட்டாக தகவல்தளங்களின் இயங்குதன்மை, எங்களுடைய தகவல் தளங்களை இணைத்தல் மற்றும் எங்களுடைய பாதுகாப்பு சேவைகளின் ஒத்துழைப்பு ஆகியவைகள் வெளிப்புற எல்லைகளில் உள்ளன." "நாங்கள் விவாதித்த மற்றொரு தலைப்பு, இணையத்தில் பயங்கரவாத பிரச்சாரத்தையும் வெறுப்புணர்வையும் எதிர்த்துப் போராட விரும்புகிறோம்" என்று மக்ரோன் மேலும் கூறினார். "வரவிருக்கும் வாரங்களில் ஒரு மணி நேரத்திற்குள் பயங்கரவாத உள்ளடக்கங்களை அகற்றுவது மற்றும் நீக்குவது குறித்த கட்டுப்பாடு ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று சேர்த்துக் கொண்டார்.

"ஷெங்கன் விதிகளின் சீர்திருத்தத்திலும் நாங்கள் பணியாற்ற வேண்டும்," என்று மக்ரோன் கூறினார். "இதன் அர்த்தம் என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகளை நாம் பலப்படுத்த வேண்டும், சிறப்பாக பாதுகாக்க வேண்டும், மேலும் ஷெங்கன் விதிகளின் செயற்பாட்டை நாம் சிறப்பாகக் கட்டுப்படுத்தி செயல்படுத்த வேண்டும் ... விரைவில் ஒரு உண்மையான பாதுகாப்பு சபையை நிறுவ முடியும் என்று நம்புகிறேன்."

ஐரோப்பாவின் வெளிப்புற எல்லைகளை வலுப்படுத்தவும், தணிக்கை செய்யவும் மேர்க்கெல் வாதிட்டார், "ஐரோப்பிய சபையின் ஜேர்மன் ஜனாதிபதி பதவியானது இன்னும் இணையத்தில் பயங்கரவாத உள்ளடக்கங்களை பரிமாறுவதைத் தடுப்பதற்கான ஒழுங்குமுறையை இறுதி செய்ய விரும்புகிறது" என்று வலியுறுத்தினார். அவர் பெருமையாக இவ்வாறு பேசினார்: "மெசஞ்சர் சேவைகள் [டெலிகிராம் போன்றவை] மற்றும் கடுங்கண்காணிப்பு ஆகியவைகளைக் கண்காணிக்க" நாங்கள் சமீபத்தில் ஜேர்மனியிலுள்ள எங்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளோம்".

இணையத்தில் பயங்கரவாத உள்ளடக்கத்தைத் தடுக்கும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் 2018 ஆண்டு முன்மொழிவான “இப்போது சபையில் மற்றும் பாராளுமன்ற விசாரணையில் இறுதி செய்யப்படும்” என்று அறிவித்த இதே நிலைப்பாட்டை ஊர்சுலா வான் டெர் லையெனும் எடுத்துக் கொண்டார். "இதுபோன்ற பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கும் வேகத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்" என்று அவர் கூறினார். வேகமாக இருப்பது முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.” இது "சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய இணைய தளங்களுக்கு அதிக பொறுப்பைக் கொடுப்பதும்" அடங்கும். இந்த நோக்கத்திற்காக, டிஜிட்டல் சேவைகள் சட்டம் என்று அழைக்கப்படுவது “சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்” என்றார் அவர்.

இதன் அர்த்தம் என்ன என்பது தெளிவாகிறது. "பயங்கரவாத உள்ளடக்கத்திற்கு" எதிரான போராட்டம் என்ற போர்வையில், இடதுசாரி உள்ளடக்கம் மற்றும் குறிப்பாக வலைத் தளங்களின் தணிக்கை விரிவுபடுத்தப்படும். அக்டோபர் 28 ஆம் திகதியன்று தான், கூகுளின் தாய் நிறுவனமான Alphabet இன் தலைமை நிறைவேற்று நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அமெரிக்க செனட்டின் முன் ஒரு விசாரணையில், கூகுளின் தேடுபொறியானது உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்.

புதிய உத்தரவானது யூடியூப் மற்றும் முகநூல் போன்ற பெரும் இணைய நிறுவனங்களை கட்டாயப்படுத்தும், இது இரகசிய சேவைகள் மற்றும் அரசாங்கங்களுடன் நெருக்கமாக வேலை செய்வதுடன் மற்றும் ஏற்கனவே இடதுசாரி மற்றும் முற்போக்கான உள்ளடக்கத்தை மிகப் பெரிய அளவில் தணிக்கை செய்கிறது, “தீங்கு விளைவிக்கும்” கட்டுரைகள், வீடியோக்கள் அல்லது பிற இடுக்கைகளை இன்னும் விரைவாக நீக்குகிறது.

ஒரு ஐரோப்பிய பொலிஸ் அரசை நிர்மாணிப்பதை நியாயப்படுத்தும் பொருட்டு, ஆளும் வர்க்கம் சமீபத்திய வாரங்களில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிக்கொண்டு, தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய அச்சங்களை எரியூட்டி வருகிறது.

"எங்கள் மத்தியில் ஒரு நிலையான ஆபத்து உள்ளது. சிரியாவில் மற்றும் ஈராக்கில் IS க்காக சண்டையில் ஈடுபட்டு பின்னர் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கான ‘வெளிநாட்டு பயங்கரவாதிகள்’ எங்களிடம் உள்ளனர், அல்லது அவர்கள் வெளியேறும்போது எங்காவது தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் திரும்பி வரவில்லை” என்றும் ஆஸ்திரிய சான்சிலர் செபாஸ்டியன் குர்ஸ் எச்சரித்தார். எனவே "ஐரோப்பா முழுவதும் அச்சுறுத்தல்களுக்கு மிகவும் வலுவான அணுகுமுறைக்கு" அவர் அழைப்பு விடுத்தார். நாம் “அனைவரின் சுதந்திரங்களையும் பாதுகாக்க விரும்பினால், இந்த நபர்களின் சுதந்திரத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.”

குர்ஸ் மறைத்தது என்னவென்றால், சமீபத்திய வாரங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் பல வழிகளில் பொறுப்பாக இருக்கின்றன. ஆயிரக்கணக்கான "வெளிநாட்டு பயங்கரவாதிகள்" வானத்திலிருந்து விழவில்லை, ஆனால் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவர்களின் பிற்போக்குத்தனமான பிராந்திய நட்பு நாடுகளால் அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக —சவுதி அரேபியா— லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர்களில் அதிர்ச்சி துருப்புகளாக பயன்படுத்தப்பட்டன.

சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட கிட்டத்தட்ட அனைத்து கொலைகாரர்களும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்: டிசம்பர் 19, 2016 அன்று பேர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் ஒரு டிரக்கை ஓட்டிச் சென்ற அனிஸ் அம்ரி, 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பிரெஞ்சு கேலிச் சித்திர இதழான Charlie Hebdo இன் அலுவலகங்களைத் தாக்கிய குவாச்சி சகோதரர்கள், மற்றும் வியன்னாவில் படுகொலை செய்யப்பட்ட குஜ்திம் ஃபெஜ்ஸுலாய் என்பவர்களாகும்.

"சுதந்திரத்தைப் பாதுகாப்பதில்" ஐரோப்பிய அரசாங்கங்கள் அக்கறை கொண்டுள்ளன என்ற குர்ஸின் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும். உண்மையில், ஆளும் வர்க்கத்தின் கொள்கைகள் சுதந்திரத்தையும் வாழ்க்கையையும் பாதுகாப்பதில்லை, மாறாக அடக்குமுறையையும் மரணத்தையும் கொண்டுவருகின்றன. கொடிய “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தின் காரணமாக, COVID-19 வைரஸ் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து ஐரோப்பாவில் மட்டும் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.

முன்னைய ஆண்டுகளில், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடைய நவ காலனித்துவ போர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் மத்தியதரைக் கடலில் மூழ்கிவிட்டனர். ஐரோப்பாவிற்குள், ஆளும் வர்க்கம் தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளை வளர்த்துக் கொண்டு தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் பயன்படுத்துகிறது.

சமீபத்திய பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். கொரோனா வைரஸ் தொற்றானது முதலாளித்துவ அமைப்புமுறையின் அதிகரித்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை துரிதப்படுத்தியுள்ளது. ஆளும் வர்க்கமானது ஒரு சமூக மற்றும் அரசியல் வெடிமருந்து கிடங்கின் மீது உட்கார்ந்திருப்பதாக உணர்கிறது. சமீபத்திய நாட்கள் மற்றும் வாரங்களில், கிரீஸ், போலந்து மற்றும் பிரான்சில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்கா உட்பட முழு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்களின் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்கின்றன. அங்கு, ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் முடிவுகளை தூக்கிவீசி பாசிச சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முற்படுகின்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி கவிழ்ப்புத் திட்டங்களை குறைத்துக் காட்டுவது மட்டுமல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர வளர்ச்சிக்கு அஞ்சி அவர்களே இராணுவத்திற்கும் அரசு எந்திரத்திற்கும் முறையிடுகிறார்கள்.

அதே அச்சம் அட்லாண்டிக்கின் இந்த பக்கத்தில் பெயரளவிலான இடதுசாரி முதலாளித்துவ கட்சிகளையும் பற்றிக்கொள்கிறது. ஜேர்மனியில், நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் நலன்களுக்காக தெளிவாக செயற்படும் பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி, முழு அரசியல் ஸ்தாபகத்தையும் வலதுபுறமாக மாற்றுவதில் முன்னணியில் நிற்கின்றன.

கடந்த வார இறுதியில், பசுமைக் கட்சித் தலைவர் ராபர்ட் ஹேபெக் மற்றும் பிறரால் வரையப்பட்ட “பதினொரு அம்ச செயல் திட்டம்” என்று அழைக்கப்படும் பகுதிகள் வெளிவந்தன. அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், வலதுசாரி தீவிரவாத AfD ஆல் இந்த வரைவு வரையப்பட்டிருக்கலாம். ஆய்வறிக்கையின் படி, இஸ்லாமிய "Gefährder" (சாத்தியமான குற்றவாளிகள்) என்று அழைக்கப்படுபவர்கள்" தொடர்ந்து மற்றும் நெருக்கமாக கண்காணிக்கப்பட வேண்டும்". அதற்காக, அதிகமான போலீஸ் மற்றும் இரகசிய சேவை முகவர்கள் தேவைப்படுகின்றனர்.

பசுமைவாதிகள் பெரும் கூட்டணியையும் அதன் இழிந்த வலதுசாரி உள்துறை மந்திரி ஹார்ஸ்ட் சீஹோஃபர் (CSU) வலதிலிருந்தும் தாக்குகின்றனர். "இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு" எதிரான கைது வாரண்டுகள் இன்னும் சீராக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடுகடத்தப்படுவது விரைவாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

Frankfurter Allgemeine Zeitung இன் ஒரு அறிக்கையின்படி, ஐரோப்பிய மட்டத்தில், பசுமைவாதிகள் “ஒரு ஐரோப்பிய குற்றவியல் பொலிஸ் அலுவலகத்தை அதன் சொந்த விசாரணைக் குழுக்களுடன் நிறுவ வேண்டும் என்றும், 'கெஃபோர்டர்' (Gefährder) என்ற வார்த்தையின் சீரான வரையறை மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே இன்னும் கூடுதலான எல்லை கடந்த ஒத்துழைப்பு ஆகியவைகளையும் நிறுவ வேண்டும் என்று கோருகிறது.”

எவரொருவரும் பாதுகாப்பாக இல்லாத ஒரு அனைத்து-ஐரோப்பிய பொலிஸ் அரசை உருவாக்குவதற்கான ஒரு வரைபடமாக இது இருக்கிறது. "சிவப்பு-சிவப்பு-பச்சை" (SPD - இடது கட்சி - பசுமைவாதிகள்) செனட் பெரும்பான்மையால் பேர்லின் பொலிஸ் சட்டத்தை அண்மையில் கடுமையாக்கியதை எடுத்துக் கொண்டால், ஒரு பயங்கரவாதக் குற்றத்தைச் செய்யத் தயாராக இருக்கும் மற்றும் ஒரு பயங்கரவாத குற்றத்தை செய்ய முடியும் என்று எந்தவொரு நபரையும் "கெஃபோர்டர்" என்று வகைப்படுத்தலாம். இதன் அர்த்தம், யாரையும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் "கெஃபோர்டர்" என்று வகைப்படுத்தலாம், இதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளால் வழக்குத் தொடரப்படலாம்.

இதை இஸ்லாமிய எதிர்ப்பு கிளர்ச்சியுடன் இணைத்து இடது கட்சி தலைமையும் ஒரு வலுவான அரசைக் கோருகிறது. வலதுசாரி ஸ்பிரிங்கர் செய்தித்தாளான Die Welt இன் ஒரு பின்னூட்டத்தில், Bundestag (ஜேர்மன் பாராளுமன்றம்) இல் உள்ள இடது கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டயட்மார் பார்ட்ஸ், “தெளிவின்மை மற்றும் செயலற்ற தன்மைக்கும்” ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் மற்றும் ஒரு “நன்கு செறிவூட்டப்பட்ட ஜனநாயகத்தின் தெளிவான எதிர்வினைக்கும்” அழைப்பு விடுத்தார்."

இதன் மூலம் முஸ்லிம்களின் மீதான அடக்குமுறையை பார்ட்ஸ் தெளிவாக புரிந்துகொள்கிறார் மற்றயவைகளுடன் சேர்த்து, அதாவது "பகல் நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில்" தலைக்கவசம் தடை செய்ய வேண்டும் மேலும் இது இனவெறி மற்றும் பொலிஸ் அரசுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் குற்றமாக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

"பிரான்சில் தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன அதாவது பிரெஞ்சு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன என்பது அதிர்ச்சியூட்டும் விஷயம்" என்று அவர்Die Weltக்குகோபத்துடன் எழுதினார்.

வர்க்கப் போராட்டத்தில் அவரும் இடது கட்சியும் எங்கே நிற்கிறார்கள் என்பதை பார்ட்ஸால் தெளிவுபடுத்த முடியாது. நாஜி ஒத்துழைப்பாளரான பிலிப் பெத்தானை ஒரு கதாநாயகன் என்று புகழ்ந்து, "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களை அடக்க உத்தரவிட்ட வெறுக்கப்பட்ட "செல்வந்தர்களுக்கான ஜனாதிபதி" மக்ரோனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னாள் ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அரச கட்சியானது பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைப் போலவே தடைக்கு உட்படுத்துவதாக இருக்கின்றன.

ஜூன் மாதத் தொடக்கத்தில், பேர்லின் செனெட்டில் சிவப்பு- சிவப்பு - பசுமைவாதிகள், அமெரிக்காவில் பொலிஸ் வன்முறையால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் போலீஸ் படுகொலையை எதிர்த்து அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸ் வன்முறையை நடத்தியது. அந்த நேரத்தில், வலதுசாரி தீவிரவாத வலைப் பின்னல்களில் பரவலாக உள்நுழைந்துள்ள போலிஸ் படைகளை பார்ட்ஸ் மீண்டும் மீண்டும் பாராட்டினார், மேலும் "பொலிஸ் குறைந்த அளவில் தகுதி பெற்றிருக்கவில்லை, மாறாக அதிக சமூக அங்கீகாரம் மற்றும் படைச் சக்தியாக, குறிப்பாக தெருக்களில்" என்று அறிவித்தார்.

Loading