பெருந்தொற்று நோய் எழுச்சியடைகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை இரத்துச் செய்வதற்கான அழைப்புகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெருந்தொற்று நோய் தொடர்ந்து கட்டுப்பாட்டை மீறி எழுச்சியடைந்து வருகையில், விடுமுறை இடைநிறுத்தத்தின் பின்னர் இன்று பிரான்சில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. நேரில் சென்று கல்வி கற்கும் வகுப்புகளை இரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் குழுக்களின் அழைப்புகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரிக்கிறது.

பிரித்தானியாவில் ஒரு புதிய மற்றும் இன்னும் வேகமாக தொற்றக் கூடிய மரபுவழி திரிபு வைரஸ் வெளிப்பட்டுள்ளதன் மூலம் நிலைமை மிகவும் ஆபத்தானதாக ஆக்கப்படுகிறது. பிரித்தானியாவில் தினமும் புதிதாகத் தெரிவிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை விட பல மடங்கு அதிகமாக உள்ளன, டிசம்பர் 29ம் திகதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 50,000 ஐ தாண்டிவிட்டன. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த புதிய மாறுபாடு வகை வைரஸ் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லையன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோருடன் ஐரோப்பிய ஒன்றிய -சீனா வீடியோ-மாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கலந்து கொள்கிறார், தெற்கு பிரான்ஸ் Bormes-les-Mimosas உள்ள Fort de Bregancon இல், புதன், டிசம்பர் 30 2020. (Sebastien Nogier, Pool via AP)

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவிலுள்ள முன்னணி மருத்துவ நிபுணர்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம் என்று பகிரங்கமாக கோரியுள்ளனர். ட்விட்டரில், ஜெனீவாவிலுள்ள உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் (Institute of Global Health) இயக்குனர் பேராசிரியர் அன்டோயின் ஃப்ளாஃபால்ட் சனிக்கிழமை ட்டுவிட் செய்ததாவது, “பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் நிலைமை மோசமடைந்து வருவதால், இத்தாலியில் முதல் அலையின் போது நடந்த அதே தவறைச் செய்யக்கூடாது, ஐரோப்பாவில் ஒத்திவைத்தல் இல்லை: அதாவது ஜனவரி தொடக்கத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம், ஆனால் தடுப்பூசி போடுங்கள், தடுப்பூசி போடுங்கள், தடுப்பூசி போடுங்கள். தடுப்பூசியை துரிதப்படுத்துங்கள்.” பாரிஸில் தொற்றுநோயியல் துறையில் கற்பிக்கும் மருத்துவர் மஹ்மூத் சூரேக், வைரஸ் பரவுவதைப் பற்றி ஆய்வு செய்ய அனுமதிக்க குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பள்ளிகளை மூட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு பகிரங்க கடிதத்தில், "மறக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பள்ளிகள்" என்ற அமைப்பு மக்ரோன் அரசாங்கத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டது, அதில் "தொற்றுநோயின் மீளெழுச்சியானது சமீபத்திய விஞ்ஞான தகவல்கள் மற்றும் புதிய வகை Sars-Cov-2 இன் VUI-202012/01 தொடர்பான மகத்தான நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, பள்ளிகள் ஜனவரி 4 அன்று திறக்கப்படக்கூடாது” என்று கோரியது.

தேசிய ஆசிரியர் தொழிற்சங்கங்களானது ஜனவரி 26ம் திகதி கல்வி அமைப்புமுறையில் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இது, வகுப்பறைகளில் நேரடியாக கல்வி கற்பதை நடைமுறையில் வைத்திருக்கவும் ஆசிரியர்களின் எதிர்ப்பை நசுக்கவும் மக்ரோன் அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்து வரும் தொழிற்சங்கங்களின் ஒரு பின்-பாதுகாப்பு முயற்சியாகும். இரண்டு நாட்களுக்கு பின்னர் ஜனவரி 28 திகதியன்று எரிசக்தி துறையில் வேலைநிறுத்தம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் தொடக்கத்தில் வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, ஆசிரியர்கள் பள்ளிக்கு முன்பாக டஜன் கணக்கான பள்ளிகளில் கட்டிடங்களுக்கு வெளியே முன்கூட்டியே கூட்டங்களை நடத்தி வகுப்பறைகளுக்குள் நுழைய வேண்டாம் என்று வாக்களித்தனர். வகுப்பறைகளில் பாதுகாப்பான நிபந்தனைகளை அமல்படுத்துமாறு அவர்கள் கோரினர், மேலும் தங்கள் வகுப்பறைகளில் பாதுகாப்பற்ற நிலைமைகளைக் கண்டித்து சமூக ஊடகங்களில் அறிக்கைகளையும் வெளியிட்டனர்.

அதன் பின்னர், இந்த நிபந்தனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. ஒரே நேரத்தில் 35 மாணவர்கள் வரை இருக்கும் வகையில் எங்கும் பள்ளிகள் தொடர்ந்து நிரப்பப்படுகின்றன, நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக உணவு விடுதியில் உணவுண்ணுகின்றார்கள், குழந்தைகள் பொதுப் போக்குவரத்தில் நெரிசலில் உள்ளனர். வேலைநிறுத்த நடவடிக்கையை அடக்குவதற்கு தொழிற்சங்கங்கள் செயற்பட்டன, பள்ளிகளை மூடுவதற்கான கோரிக்கைகளை எதிர்த்தன, அதற்கு பதிலாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் வகுப்பறைகளில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாள் "எச்சரிக்கை வேலைநிறுத்தங்கள்" என்று அழைக்கப்பட்டதற்கு அழைப்புவிடுத்தன. மக்ரோன் அரசாங்கம் ஒரு டஜன் பள்ளிகளில் அவைகளை மூடக்கோரி எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்த கலகப் பிரிவு போலீஸை நிறுத்தியது.

பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக பிரிட்டனில் ஆசிரியர்களால் தொழிற்துறை நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு குறித்து தொழிற்சங்கங்கள் குறிப்பாக கவலையடைந்தன. பிரித்தானியாவிலுள்ள கல்வித்துறை தொழிற்சங்கங்கள் இன்று பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாகி வருகின்றன.

பள்ளிகளை மீண்டும் திறப்பது வைரஸ் பரவுவதை துரிதப்படுத்தும் என்பதை மக்ரோன் அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. பிரான்சின் பொதுச் சுகாதார சேவை இயக்குனர் ஜெரோம் சாலமன், Journal du Dimanche பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், விடுமுறை இடைநிறுத்தத்தின் பின்னர் மாணவர்களை ஒன்றுகலப்பது “தொற்றுநோயியல் நிலைமைகளின் வரைபடங்களை மாற்றியமைக்க முடியும்” என்று ஒப்புக்கொண்டார்.

பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸின் புதிய மாறுபாடு வகைகளைப் பற்றி குறிப்பிடும் சாலமன், புதிய மரபுவழி திரிபு வைரஸ் குறிப்பாக பள்ளி வயது இளைஞர்களை பாதிக்கிறது என்ற செய்திகளை சுட்டிக்காட்டினார். மரபுவழி திரிபுகள் “குறிப்பாக இளைஞர்களைப் பாதிக்கின்றன, அவர்களுக்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு பொது மக்களை விட அதிகமாக இருக்கலாம். பள்ளி மற்றும் பல்கலைக்கழக சூழலில் நாங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

பிரிட்டனின் அவசரகாலநிலைகளுக்கான விஞ்ஞான ஆலோசனை குழுவின் (Scientific Advisory Group for Emergencies) உறுப்பினரான பேராசிரியர் மார்க் வால்போர்ட் பிபிசியின் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்சியில் கூறுகையில், "12 முதல் 16 வயது வரை உள்ள ஒருவர் (12 வயது) ஒரு குடும்பத்திலுள்ள மற்றவர்களை விட ஏழு மடங்கு அதிகமாக ஒரு குடும்பத்தை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்க வாய்ப்புள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு அரை கல்வி ஆண்டுக் காலத்திற்குப் பின்னர், அவர்கள் திரும்ப வந்தபோது, அது மீண்டும் மேலே சென்றது என்பதை நாங்கள் அறிவோம்." லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையானது இங்கிலாந்திலுள்ள "Sars-Cov-2 மரபுவழி (Lineage) B.1.1.7 இன் பரிமாற்றம்" (மரபணு-Genetic) தரவுகளில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது, 20 வயதிற்குக் குறைவானவர்கள் [வைரஸ் மாறுபாடு வகை] தொற்றுக்கள் [வைரஸ் மாறுபாடற்ற வகை] தொற்றுக்களை விட அதிக பங்கைக் கொண்டுள்ளனர்" என்று தெரிவிக்கிறது.

மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளானது மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைக்கான பொய்யான நியாயப்படுத்தலுக்கு நேரடியாக முரண்படுகின்றன. டிசம்பர் 20 அன்று Europe1 வானொலியில் பேசிய கல்வி மந்திரி புளோன்கே, பள்ளிகள் திறப்பதில் தாமதம் "விருப்பமான விருப்பத் தேர்வு அல்ல" என்று அறிவித்தார். பெயரிடப்படாத ஆய்வுகள் குறித்து அவர் குறிப்பிடுகையில் "நாங்கள் பள்ளி அமைப்பிற்கு வெளியே விட குறைவான தொற்றுக்கள் பள்ளி அமைப்பில் ஏற்படுவதில் வெற்றி அடைந்துள்ளோம் என்று காட்டுகிறது" என்றார்.

அரசாங்கத்தின் கொள்கையானது வைரஸை எதிர்த்துப் போராடும் விஞ்ஞானத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் மாணவர்களின் உளவியல் நல்வாழ்வைப் பற்றிய அக்கறையுடன் குறைவாகவே உள்ளது. அதனுடைய கவலை என்னவென்றால், மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் தள்ளப்படுவதை உறுதி செய்வதும், இதனால் பெற்றோர்களை வேலைக்குத் தள்ளுவதும், பெருநிறுவன இலாபங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருப்பதுமாகும். பிரான்சில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் இறந்ததற்கு, உயிர்களுக்கு முன் அதனுடைய கொலைகாரக் கொள்கையே காரணமாகும், மேலும் இது முந்தைய ஆண்டை விட இன்னும் ஆபத்தானதாக இருக்கும் வைரஸின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கு வழிவகுக்கிறது.

பரந்தளவிலான மரண நிலைமைகளின் கீழ், பிரெஞ்சு நிதிய உயரடுக்கு 2020 ஆண்டு முழுவதும் சிறப்பாக செயற்பட்டுள்ளது. அதாவது இப்போது 500 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய 40 செல்வந்தப் பிரெஞ்சு பில்லியனர்களின் மதிப்பு இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 95 பில்லியன் டாலர்களுக்கும் உயர்ந்திருக்கின்றது. இந்த இலாபத்தின் பெரும்பான்மையானது பேஷன் மற்றும் சொகுசு வடிவமைப்பு தொழிற்துறையின் பங்குகளின் விலைகளின் உயர்விலிருந்து அடைந்ததாகும், இது பேர்னார்ட் ஆர்னோ (LVMH இன் பங்குதாரர்) மற்றும் ஃபிரான்சுவா பெத்தன்கூர் மெய்யேர் (L’Oréal பங்குதாரர்) ஆகியோரின் செல்வத்தை உயர்த்தியுள்ளது. பிரான்சிலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன்களில் பிணையெடுப்பு உள்செலுத்தல் காரணமாக, பிரெஞ்சு பங்குச் சுட்டெண் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து அதனுடைய ஆரம்ப இழப்புகளை முழுவதுமாக ஈடுசெய்துள்ளது.

ஆளும் உயரடுக்கின் மரணக் கொள்கைக்கு எதிராக, பிரெஞ்சு ஆசிரியர்களும் மாணவர்களும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் தொழிற்சங்கங்களிலிருந்து தங்களுடைய சுயாதீனமான சொந்த குழுக்களை அமைக்க வேண்டும். நேரில் சென்று கல்வி கற்றல் மற்றும் அத்தியாவசியமற்ற பணிகளை மூடுவதற்கு வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அணிதிரட்டப்பட வேண்டும், மற்றும் மக்கள்தொகை முழுவதும் ஒரு தடுப்பூசி விநியோகிக்கப்படும் வரை தொலைநிலைக் கல்வி கற்றலுக்கு நிதியளிக்க கல்வி அமைப்புமுறைக்கு பரந்த வளங்களை வழங்க வேண்டும்.

Loading