வலுவிழந்த இத்தாலிய அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கணிசமாக பலவீனமடைந்தாலும், இத்தாலிய பிரதம மந்திரி ஜோசெப்பே கொன்தே ஆட்சியில் நீடிப்பார், முன்கூட்டியே தேர்தல் எதுவும் இருக்காது. இத்தாலிய பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவுகள் இவைதான். இரு சபைகளிலும் கொன்தே வெற்றி பெற்றார்.

தேர்தல் சட்டத்தின் காரணமாக செனட்டில் இருந்ததை விட பெரும்பான்மை விகிதங்கள் தெளிவாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில், 630 எம்.பி.க்களில் 321 பேர் பெரும்பான்மை திங்களன்று கொன்தேக்கு வாக்களித்தனர். இருப்பினும், இரண்டாவது சபையில், 321 செனட்டர்களில் 156 பேரின் சிறுபான்மையினர் மட்டுமே செவ்வாயன்று பன்னிரண்டு மணி நேர விவாதத்திற்குப் பின்னர் அவரை ஆதரித்தனர்.

மத்தேயோ ரென்சி (Source: the European Parliament)

ஆரம்பத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதன் மூலம் நெருக்கடியைத் தூண்டிய அதே கட்சியே கொன்தே இன் உயிர்பிழைப்பிற்கு நன்றியாக இருந்தது. முன்னாள் பிரதம மந்திரி மத்தேயோ ரென்சியும் அவரது கட்சி இத்தாலியா விவா (Italia Viva-Italy Alive, IV) இன் 13 பிரதிநிதிகளும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் வேண்டாம் என்று வாக்களித்திருந்தால், செவ்வாயன்று அரசாங்கம் விழுந்திருக்கும். எதிர்க் கட்சிகளின் 140 செனட்டர்கள் கொன்தே க்கு எதிராக வாக்களித்தனர். அவர் இப்போது சிறுபான்மை அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவார், அது பாராளுமன்றத்தில் தேவையான போது பெரும்பான்மையை கோர வேண்டும்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் ஆழ்ந்த சமூக, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்ட இந்த அரசாங்க நெருக்கடி, வெறுமனே பல ஊடகங்கள் சித்தரிப்பதுபோல், கொன்தே மற்றும் ரென்சிக்கு இடையேயான தனிப்பட்ட போட்டி காரணமாக அல்ல. மாறாக, இது முதலாளித்துவ பாராளுமன்றவாத முறையின் வீழ்ச்சியின் வெளிப்பாடு ஆகும். 83,000 கொரோனா மரணங்கள் மற்றும் 2.4 மில்லியன் பாதிக்கப்பட்ட மக்களுடன் இத்தாலியை ஐரோப்பாவில் தொற்றுநோய்களின் மையமாக ஆக்கிய ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் எதிர்ப்பு வளர்ந்து வரும் நிலையில், ஆளும் வர்க்கம் பெருகிய முறையில் வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளை நம்பியுள்ளது.

இப்பொழுது தேர்தல் நடந்தால், 24 சதவீத வாக்குகள் மத்தேயோ சல்வீனி தலைமையிலான வலதுசாரி அதிதீவிரவாத லீகா (Lega Nord) கட்சிக்கும், பாசிச இத்தாலியின் சகோதரர்கள் (Fratelli d'Italia) கட்சிக்கு 17 சதவீத வாக்குகளும் கிடைக்கும். சில்வியோ பெர்லுஸ்கோனியின் முன்னிலை இத்தாலி (Forza Italia - "Forward Italy") 8 சதவீதத்துடன், வலதுசாரிக் கட்சிகள் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிருக்கும். மறுபுறம், இரண்டு முக்கிய ஆளும் கட்சிகளுமே வெறும் 20 சதவீத (ஜனநாயகக் கட்சி) மற்றும் 14 சதவீத (ஐந்து நட்சத்திர இயக்கம்) ஆதரவை மட்டுமே பெற்றுள்ளன. ஜனநாயகக் கட்சியினரிடமிருந்து ரென்சியின் பிளவு, இத்தாலி விவா தற்போது 3 சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது.

வலதுசாரி அதிதீவிரவாதிகளின் எழுச்சியானது முதலில் செல்வாக்கு மிக்க வணிக மற்றும் புத்திஜீவித வட்டாரங்களின் ஆதரவைப் பெற்றதற்கு நன்றியாக இருக்கிறது. இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தினரால் (partisans - Italian resistance movement) படுகொலை செய்யப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி மீண்டும் சமூக ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக உள்ளார். இரண்டாவதாக, கடந்த மூன்று தசாப்தங்களாக சமூகநலச் செலவு வெட்டுக்களை சுமத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்த மத்திய-இடது கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் கொள்கைகளிலும் அவை இலாபமடைவதுடன், தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் மீள்ஸ்தாபிதக் கட்சி (Rifondazione Comunista - Communist Refoundation Party - PRC) போன்ற போலி-இடது கட்சிகளின் ஆதரவை எப்பொழுதும் அனுபவித்து வருகின்றன.

தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வெகுஜன எதிர்ப்பு தற்போதுள்ள அரசியல் அமைப்பில் எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் மீண்டும் மீண்டும் வெடிக்கின்றன, ஆனால் அவைகள் தொழிற்சங்கங்களால் மூச்சுத் திணறடிக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியினருக்கு அடிபணிய வைக்கப்படுகின்றன.

மத்தியதர வர்க்கத்தின் அதிருப்தியடைந்த பிரிவுகளிடமிருந்தும் சில வறிய தொழிலாளர்களிடமிருந்தும் கூட ஆதரவைப் பெறுவதன் மூலம் வலதுசாரி அதிதீவிரவாதிகள் இதிலிருந்து ஆதாயமடைகிறார்கள். பணம், செல்வாக்கு மீது கழுகுகள் போல் சண்டை போட்டு கொண்டிருக்கும் ஆளும் கட்சிகளின் திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளானது பாசிச கிளர்ச்சியூட்டுபவர்களின் கைகளில் நேரடியாக விளையாடுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) கொரோனா வைரஸ் நிதியிலிருந்து இத்தாலி பெறவிருக்கும் 209 பில்லியன் டாலர் தொடர்பான மோதலால் அரசாங்க நெருக்கடி தூண்டப்பட்டது. 2014 முதல் 2016 வரை பிரதமராக இருந்த முதல் காலப்பகுதியில் தொழில் பாதுகாப்பு விதி கட்டுப்பாடுகளை நீக்கி, ஓய்வூதியங்களை அழித்த ரென்சி, இத்தாலியை "நவீனமயமாக்குவதற்கான" தனது திட்டத்தை புதுப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதைக் கண்டார்.

கொன்தேக்கு எதிரான ஒரு பகிரங்க பிரச்சாரத்தில், ரென்சி பணம் பெரிய நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும், கொன்தே நெருக்கமாக இருக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் பிரதானமாக குட்டி முதலாளித்துவ அல்லது சுய-தொழில் செய்பவர்களை ஆதரிக்க பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

"பொது மற்றும் தனியார் முதலீடு மூலமே வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதை புரிந்து கொள்ள ஒரு கீன்சியராக இருக்க வேண்டிய அவசியமில்லை," என்று டிசம்பர் 17 திகதியன்று கூரியர் டெல்லா சேரா(Corriere della Sera) பத்திரிகையில் வெளியிடப்பட்ட பிரதமருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் ரென்சி எழுதினார். எஃகு முதல் சாலைகள் வரை ஒரு "ஒத்திசைவான தொழிற்துறை கொள்கை" வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். 209 பில்லியன் யூரோக்கள் "நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு", என்று எச்சரித்த அவர், ஐரோப்பிய மத்திய வங்கியின் நீண்ட கால தலைவர் மரியோ டிராகியை குறிப்பிட்டார்.

ஐரோப்பிய உறுதிப்பாட்டு பொறிமுறையில் (European Stability Mechanism) இருந்து இத்தாலி மேலும் 36 பில்லியன் யூரோக்களை கடனாகப் பெற வேண்டும் என்றும் ரென்சி கோரினார். ஐந்து நட்சத்திர இயக்கத்தைப் பொறுத்தவரை, இது ஒரு காளைக்கு ஒரு சிவப்புத் துணியை ஆட்டியதற்கு சமமானது. 2018 இல் அதன் தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரம் ஆகும், எனவே அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடையாளரீதியாக தன்னை ஒதுக்கி வைக்க முயல்கிறது, ஏனெனில் அது ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நடைமுறை ஒத்துழைப்பு தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது.

வெளியுறவுக் கொள்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் "பைடெனின் அமெரிக்காவின் புதிய உலகம்" ஆகியவற்றுடன் கூட்டணியில் ஏகாதிபத்திய நலன்களை தீவிரமாகப் பின்தொடர்வதை ரென்சி ஆதரித்தார். இத்தாலி "ஆசிய நூற்றாண்டின் பெரும் சவால்களுக்கு ஏற்ப தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்", ஆபிரிக்காவுக்குச் சென்று மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பங்கை வகிக்க வேண்டும், "சமீபத்திய ஆண்டுகளில் நமது பிரசன்னம் கணிசமாகக் குறைந்துவிட்டது, மற்றும் ரஷ்யா, துருக்கியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது” என்றார்.

ரென்சியின் கோரிக்கைகளுக்கு கொந்தே பகுதியளவில் மட்டுமே பதிலளித்தபோது, ரென்சி தன்னுடைய அமைச்சர்களை அரசாங்கத்திலிருந்து விலக்கிக் கொண்டு சமீபத்திய நெருக்கடியைத் தூண்டிவிட்டார். அவர் அநேகமாக கொன்தே மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தத்தான் விரும்பியிருக்கலாம். ஆனால் அவர் புதிய தேர்தலையும், வலதுசாரிகளின் வெற்றியின் வாய்ப்பையும், செலுத்த வேண்டிய விலையாக ஏற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், ரென்சி எதிர்பார்த்த பேர்லினிலும், பிரஸ்ஸல்ஸிலுமான ஆதரவு பலனளிக்கவில்லை. கொரோனா நெருக்கடியின் மத்தியில் அவர் ஒரு அரசாங்க நெருக்கடியைத் தூண்டிவிடுகிறார் என்று இத்தாலியர்கள் மட்டுமல்ல, ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய பத்திரிகைகளும் ஆத்திரமடைந்தன, இதில் அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும் தங்கள் முதுகை திருப்பின. அரசு அதிகாரத்தின் சிதைவு தொழிலாள வர்க்க தலையீட்டைத் தூண்டக்கூடும் என்று அவர்கள் அஞ்சினர், இது ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சியை கேள்விக்குள்ளாக்கும்.

ஐந்து நட்சத்திர இயக்கம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பலவீனமான கூட்டணியான கொந்தே அரசாங்கத்தின் கீழ், இத்தாலிய ஜனநாயகத்தின் சிதைவு தொடரும். இதன் பொருள் ஆளும் உயரடுக்கு ஒரு சர்வாதிகார, பாசிச தீர்வை நோக்கி திரும்பும் வேகத்தை அதிகரிக்கும்.

இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரே வழி, இத்தாலிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீடு மட்டுமே ஆகும். பாசிசம், பெருந்தொற்று நோய், வறுமை மற்றும் போரில் பாரிய இறப்புக்கள் ஆகியவைகளுக்கு எதிரான போராட்டமானது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பெரும் செல்வந்தர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்தும் வளங்களைப் பறிமுதல் செய்வதும், அவற்றை சோசலிச சமூகத்தைக் கட்டமைப்பதன் மூலம் மட்டுமே தான் சாத்தியமாகும்.

Loading