தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் "தலையிட்டதற்காக" விஞ்ஞானிகளை மக்ரோன் அரசாங்கம் கண்டிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரெஞ்சு சுகாதார மந்திரி ஒலிவியே வெரோன், தொற்றுநோய் பரவுவதில் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொள்ள கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளை அறிவிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் என்று அறிவித்தார். மாலை 6 மணி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, வைரஸின் பரவலை தடுப்பதில் தோல்வியுற்றது என வெரோன் ஒப்புக்கொண்டார். மேலும் வைரஸின் மிகவும் பரவும் தொற்று வகைகள், முக்கியமாக இங்கிலாந்தில் முதலில் அடையாளம் காணப்பட்டவை, பிரான்ஸ் முழுவதும் காணப்பட்டுகின்றன.

மக்ரோனின் செய்தித் தொடர்பாளர் காப்ரியல் அட்டல் நேற்று "வார இறுதிக்குள் ஒரு முடிவு எடுக்கப்படும்" என்று கூறினார். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவதன் மூலம் பெருநிறுவன இலாபங்களை பாதிக்கும் ஒரு தேசிய பூட்டுதலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பல வாரங்களாக, பூட்டுதலுக்கான விஞ்ஞான சமூகம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களின் கோரிக்கைகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரித்தது.

மக்ரோன் புதன்கிழமை பேசவிருந்தார், இதில் பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் அனைத்தும் திறந்திருக்கும் நிலையில் ஒரு வரையறுக்கப்பட்ட பூட்டுதல் பற்றிய அறிவிப்பு என்று பரவலாக அறிவிக்கப்பட்டது. குறைந்தது சனிக்கிழமை வரை அவர் பேசமாட்டார் என்ற செய்திகளுடன் புதன்கிழமை பிற்பகல் பேச்சு இரத்து செய்யப்பட்டது.

இந்த வாரம், மக்ரோன் தனது சொந்த தலைமை விஞ்ஞான ஆலோசகர் ஜோன்-பிரான்சுவா டெல்ஃபிரேஸி (Jean-François Delfraisy) உள்ளிட்ட விஞ்ஞானிகளின் பூட்டுதல்களுக்கான அழைப்புகளை பெருகிய முறையில் கண்டனம் செய்தார். "நெருக்கடியை நிர்வகிக்கும் இந்த தானியங்கி மற்றும் ரோபோ வகையான முறையை ஜனாதிபதி போதுமானதாக வைத்திருக்கிறார். அவர் புதிய தீர்வுகளை விரும்புகிறார்” என்று மக்ரோனின் கட்சியின் உயர்மட்ட சட்டமன்ற உறுப்பினர் புதன்கிழமை RTL வானொலிக்கு அநாமதேயமாக தெரிவித்தார்.

அதே நாளில், லு மொன்ட் மக்ரோன் ஆலோசகர் Stéphane Séjourné இன் கருத்துக்களை வெளியிட்டார், அவர் "கட்டுப்பாடற்ற மற்றும் மூச்சுத் திணறடிக்கும் —ஏனெனில் சில சமயங்களில் முரண்பாடான— விஞ்ஞானிகளின் தலையீடுகள்" என கொரோனா வைரஸ் கொள்கை பற்றிய விவாதத்தில் கண்டனம் செய்தார். மேலும் "ஊடகங்களில் இந்த நிரந்தர விரிவாக்கம் பொது விவாதத்தை வெறித்தனமாக்குகிறது," என்று அவர் சேர்த்துக்கொண்டார்.

Sjjourné கூறினார், “கொள்கை வகுப்பது விஞ்ஞானிகள் அல்ல. பொது மக்களுக்கு முடிவுகளை தெளிவுபடுத்த முன்னர், அவர்கள் தங்களுக்குள் தெளிவுபடவேண்டும். இந்த குழப்பமான பங்கு வகிப்பதை நிறுத்த வேண்டும்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: விஞ்ஞானிகளின் பங்கு, பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து அவர்களை எச்சரிப்பதும், விஞ்ஞான அடிப்படையிலான பதிலைக் கோடிட்டுக் காட்டுவதும் அல்ல. வெறுமனே அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்குவதும், மேலும், பெருநிறுவன உயரடுக்கின் நலன்களை பாதுகாப்பதில் விஞ்ஞான எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணிக்கும்போது, அமைதியாகவும், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்பதாகும்.

நான்கு நாட்களுக்கு முன்னர், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மக்ரோன் கண்டித்தார் “இந்த வகையான பிழைகளை தொடர்ந்து கண்காணித்தால்; நாங்கள் 66 மில்லியன் வழக்குரைஞர்களின் தேசமாகிவிடுவோம். நாங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்வது அல்லது முன்னேறுவது இப்படி அல்ல.”

டெல்ஃப்ரைசி ஞாயிற்றுக்கிழமை மாலை BFMTV உடனான ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், "பாரிஸ் பிராந்தியத்திலும், மற்றும் பிற பிராந்தியங்களிலும்" ஆராயப்பட்ட நேர்மறையான நிகழ்வுகளில் "7-9 சதவிகிதம்" பிரித்தானிய வகைப்பாடு அடையாளம் காணப்பட்டதாக அறிவித்தார். "நாங்கள் ஒரு புதிய பூட்டுதலுக்கு செல்ல வேண்டியிருக்கும்" என்றார், அவரின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக செஜோர்னின் கருத்துக்கள் உடனடியாக வந்தன.

செவ்வாய்க்கிழமை, மக்ரோன் சொற்பொழிவு ஆற்றிய பின்னர், டெல்ஃப்ரேஸி லிபரேஷன் பத்திரிகைக்குஒரு நேர்காணலைக் கொடுத்தார், ஒரு பூட்டுதலை விதிக்க உடனடி அவசரம் இல்லை என்றும், வார இறுதி வரை முடிவை தாமதப்படுத்தலாம் என்றும் கூறினார்.

விஞ்ஞானிகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல், பூட்டுதலை எதிர்க்கும் வலதுசாரி சக்திகளை ஊக்குவிப்பதற்கான ஒரு நனவான மற்றும் வேண்டுமென்றே செய்யப்படும் முயற்சியாகும். COVID-19 கட்டுப்பாடுகளுக்கு எதிராக நெதர்லாந்தில் பரவிய தீவிர வலதுசாரி கலவரங்கள் மற்றும் ஜனவரி 6 ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பால் தூண்டப்பட்ட அமெரிக்க பாசிஸ்டுகள் ஆட்சி கவிழ்க்க முயன்றமை, பாசிஸ்டுகளின் ஊக்குவிப்பையே காட்டுகிறது.

2018 இல் பாசிச சர்வாதிகாரி பெத்தானை ஒரு "சிறந்த சிப்பாய்" என்று புகழ்ந்த மக்ரோனே, முஸ்லீம்-விரோத வெறித்தனத்தைத் தூண்டுவதன் மூலம் தீவிர வலதுசாரிகளை ஊக்குவிக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஜனவரி மாத தொடக்கத்தில்,மக்ரோனின் ஆலோசகரான Bruno Roger-Petit, மரின் லு பென்னின் மருமகளான நவ-பாசிச மரியோன் மரேஷால் லு பென்னை சந்தித்ததை லு மொன்ட் வெளிப்படுத்தியிருந்தது.

நேற்று தனது பத்திரிகையாளர் சந்திப்பில், வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தின் கொள்கை தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது ஒவ்வொரு நாளும் 20,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் உள்ளன, அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. "கடந்த இரண்டு வாரங்களாக, மருத்துவமனையிலிருந்து வெளியேறக்கூடியவர்களின் எண்ணிக்கையை விட அவசர சிகிச்சை நோயாளிகள் அதிகம் உள்ளனர்," என்று வெரோன் கூறினார்.

"ஒரு வலுவான தொற்றுநோயை ஏற்படுத்தியுள்ள, முந்தையதை விட வலுவான இந்த மாறுபாடுகளின் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பரவலான நாடுகளில் இருந்து நாம் படிப்பினைகளை பெறவேண்டும். அவை நம் நாட்டில் பரவி வருகின்றன, ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக இருந்தது, ஆனால் போதுமானதாக இல்லை என்று ஒருவர் சிந்திக்க வழிவகுக்கிறது.”

பிரிட்டனில், தேசிய அளவில் அதிக தொற்றுநோய்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தினசரி இறப்புகளின் ஏழு நாள் சராசரி 1,200 க்கும் அதிகமாகும். பிரான்சில், தினமும் 300 க்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டிருக்கிறார்கள். தீவிர சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை 3,000 க்கும் அதிகமாக உள்ளது, இது வரையறுக்கப்பட்ட பூட்டுதல் அறிவிக்கப்பட்டபோது, அக்டோபர் இறுதியில் இருந்த அதே நிலையாகும்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நேர்காணலில், கல்வி அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோங்கேர், மூன்றாவது பூட்டுதல் அறிவிக்கப்பட்டாலும் கூட, முடிந்தவரை பள்ளிகளை திறந்து வைக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று வலியுறுத்தினார். பெற்றோர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்காக பள்ளிகள் பிள்ளைகளை அடைத்து வைத்திருக்கும் இடமாக பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிகளை மூட ஆசிரியர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன.

மக்ரோனின் கொள்கை முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவையும் கொண்டுள்ளது. சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் குடியரசுக் கட்சியினர் (LR) அவர்கள் எதையும் கூறும் அளவிற்கு, அரசாங்கம் அதன் முடிவெடுப்பதில் அவர்களுடன் கலந்துரையாடத் தவறியது குறித்து அவர்கள் விமர்சித்ததை மையமாகக் கொண்டுள்ளனர். மக்ரோன் கடைப்பிடிக்கும் உண்மையான “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை எந்தவொரு கட்சிகளும் அல்லது தொழிற்சங்கங்களும் எதிர்க்கவில்லை, இதனால் வைரஸ் பரவ அனுமதிக்கப்படுவதோடு பெருநிறுவனங்கள் இலாபத்தையும் தொடர முடிகிறது.

Loading