முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியும் “உள்ளிருக்கும் பாசிச எதிரியும்”

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை காலை கருத்திற்கொள்ளக் கூடிய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், காங்கிரஸின் சபாநாயகர் நான்சி பெலோசி, காங்கிரஸின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தங்கள் உயிருக்கு உடல் ரீதியான அச்சத்தில் உள்ளதுடன், ஜனவரி 6 ம் தேதி நடந்த கும்பல் தாக்குதல், குடியரசுக் கட்சி பிரதிநிதிகளால் அவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்று அஞ்சுவதாக தெரிவித்தார். "வெளியே நடப்பவற்றிற்கு மேலதிகமாக அங்கத்தவர்கள் கவலைப்படும் ஒரு அச்சுறுத்தலாக பிரதிநிதிகள் சபைக்குள் [காங்கிரஸ்] எதிரிகள் இருக்கும்போது உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க கூடுதல் நிதியுதவிக்கு அவர் அழைப்பு விடுத்தார்”.

"எதிரி உள்ளே இருப்பதாக நீங்கள் சொன்னபோது நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?" என ஒரு நிருபர் கேட்டபோது, பெலோசி பின்வருமாறு பதிலளித்தார், "காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளே துப்பாக்கிகளைக் கொண்டு வர விரும்புவதுடன், காங்கிரஸின் மற்ற உறுப்பினர்கள் மீது வன்முறையை பயன்படுத்த அச்சுறுத்தியுள்ளனர்." அல்லது, அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் புதன்கிழமை இரவு MSNBC க்கு அளித்த நேர்காணலில் சுட்டிக்காட்டியபடி, இப்போது சபையில் குடியரசுக் கட்சியினரிடையே ஒரு வெளிப்படையான வெள்ளை மேலாதிக்கப் பிரிவு உள்ளது. அவர்கள் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான வன்முறையை பயன்படுத்த பலமுறை அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த பாசிசவாதிகளில் பல குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் அடங்குவர். அவர்களில் மேரிலாந்தின் ஆண்டி ஹாரிஸ் மற்றும் கொலராடோவின் லோரன் போபேர்ட் ஆகியோர் காங்கிரஸினுள் ஆயுதங்களைக் கொண்டு செல்வதாக அறியப்படுவதுடன், மேலும் அந்த ஆயுதங்களை பிரதிநிதிகள் சபைக்கு கொண்டு வருவதற்கான தடையை மீறியதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 6 நிகழ்வுகளின் போது போபேர்ட் தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம். அன்று காலை “இன்று 1776” என்று அவர் ட்வீட் செய்ததோடு, பெலோசி, துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் பலருக்கு எதிராக வன்முறையை அச்சுறுத்தி கட்டிடத்தினுள் உடைத்துக்கொண்டு தாக்குதல்கார்கள் புகுந்தபோது பெலோசியின் சொந்த நகர்வுகள் பற்றிய விவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

கடந்த ஆண்டு பிரச்சாரங்களை நடத்திய ஜோர்ஜியாவின் பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீன் (Taylor Greene) பற்றி பெலோசி சிறிது நேரம் பேசினார். அதில் அவர் இடது-தாராளவாதத்தின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் "அணியின்" உறுப்பினர்களான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ், இல்ஹான் உமர் மற்றும் ரஷிதா தலையீப் ஆகியோரின் புகைப்படங்களை நோக்கி துப்பாக்கியை இலக்கு வைத்திருந்தார்.

2019 ஆம் ஆண்டில் தனது காங்கிரஸிற்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு, கோடீஸ்வர தொழிலதிபரான கிரீன், ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிரான "தேசத்துரோகம்" என கூறப்படுவதற்காக பெலோசி படுகொலை செய்யப்படுவதற்கும், பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரை தூக்கிலிடப்படுவதற்கும் ஒப்புதல் அளித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டார். பாசிச QAnon சதி கோட்பாட்டின் பகிரங்க ஆதரவாளரான கிரீன், பலமான குடியரசுக் கட்சி இருக்கைக்கு ஒரு முற்தேர்தலில் போட்டியிட்டு குழப்பமாக ஒரு பதவியை வென்ற பின்னர், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளருக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுத்து போட்டியிலிருந்து விலகி மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு தனது பிரதிபலிப்பை காட்டினார்.

ஜனநாயகக் கட்சித் தலைவி பின்வருமாறு அறிவித்தார், "நான் கவலைப்படுவது பிரதிநிதிகள் சபையில் உள்ள குடியரசுக் கட்சித் தலைமை பற்றியாகும். அவர்கள் இவற்றை கவனிக்க விரும்பாது, அந்த அறிக்கைகளை புறக்கணிக்கின்றனர்." கனெக்டிகட்டில் உள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளியில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் புளோரிடாவில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மீது நடத்தப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூடுகளை, ஆயுதங்களை தடைசெய்வதற்கு ஆதரவானவர்களால் ஏமாற்றுக்காக செய்யப்பட்டதாக அறிவித்து வசைபெயர் எடுத்த பின்னர், குடியரசுக் கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தியால் சக்திவாய்ந்த கல்வி மற்றும் தொழிலாளர் குழுவுக்கு கிரீன் நியமிக்கப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

கிரீன் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று சில ஜனநாயகக் கட்சியினர் அழைப்பு விடுத்தது பற்றி பெலோசி எந்த குறிப்பும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் ஒரு செய்தியாளர் இவ்விடயத்தை எழுப்ப முயன்றபோது, அவர் பதிலளிக்காமல் வெளியேறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு பைடென் மற்றும் ஹாரிஸ் பதவியேற்ற ஒன்பது நாட்களுக்குப் பின்னர், அமெரிக்காவின் தலைநகரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் அசாதாரண விபரணத்தை வழங்குகின்றது. சில வாரங்களுக்கு முன்புதான், ஜனநாயகக் கட்சியினர் ஜோர்ஜியா செனட் போட்டிகளின் பூமியை அதிரவைக்கும் முக்கியத்துவத்தை பற்றி அறிவித்தனர்.

அந்த வெற்றியின் விளைவாக, ஜனநாயகக் கட்சி இப்போது வெள்ளை மாளிகை, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை கட்டுப்படுத்துகிறது. பாராளுமன்ற எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இது மொத்த அதிகாரத்திற்கு அருகில் உள்ளது. ஆயினும்கூட, அதன் முன்னணி நபர்கள் தங்களை அச்சத்துடனும், நடுங்கலுடனும் காட்டுக்கொண்டு, பாசிச வன்முறை அச்சுறுத்தலால் பீதியடைந்து, அதற்கு எதிராக எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை.

இந்த ஆழ்ந்த நெருக்கடி பைடெனின் தொடக்க உரையின் வெற்றத்தன்மையையும் அபத்தத்தையும் அம்பலப்படுத்துகிறது. இது குடியரசுக் கட்சியுடன் ஐக்கியத்திற்கான ஒரு சாதாரண வேண்டுகோளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பைடென் குடியரசுக் கட்சியினரிடம் பரிதாபகரமான முறையீடு செய்கையில், அவர்கள் ட்ரம்பின் மீதான எந்தவொரு விசாரணையையும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிப்பதே அவர்களின் பிரதிபலிப்பாக உள்ளது. அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கு எதிரான பாசிச வன்முறையைத் தூண்டுவதற்கும், “திருடப்பட்ட தேர்தல்” பற்றிய ட்ரம்ப்பின் பொய்களை பேணுவதை தக்கவைப்பதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இரட்டிப்பாக்குகின்றனர்.

கடந்த வாரத்தில், மாநில குடியரசுக் கட்சிகள் ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை இடதுசாரிகளின் "தவறான கொடி" (“தவறான கொடி” நடவடிக்கை என்பது உண்மையான பொறுப்பின் மூலத்தை மறைத்து, இரண்டாவது தரப்பினரின் மீது பழிபோடும் நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு செயலாகும்) நடவடிக்கையாக அறிவித்து, பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக வாக்களித்த சில காங்கிரஸ் குடியரசுக் கட்சியினரைக் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அதே நேரத்தில் குடியரசுக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமைகளை கட்டுப்படுத்த, குறிப்பாக அஞ்சல் மூலம் வாக்களித்தலை கட்டுப்படுத்த 100 க்கும் மேற்பட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கான பிற அறிகுறிகளும் இருக்கின்றன. உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது "உள்நாட்டு வன்முறைதீவிரவாதிகளின்" வளர்ந்து வரும் அச்சுறுத்தலைப் பற்றிய முதல் உத்தியோகபூர்வ எச்சரிக்கையாகும். எந்தக் குழுக்களையும் பெயரிடாத நிலையில், “ஜனாதிபதி பதவிமாற்றம், பொய்யான கட்டுக்கதைகளால் தூண்டப்பட்ட பிற துன்பங்களை” குறித்த கோபத்தை அது மேற்கோளிட்டுள்ளது. இதில் கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக விதிக்கப்பட்ட பூட்டுதல் மற்றும் முகமூடி அணிவதற்கான ஆணைகள் தொடர்பானவை அடங்கும்.

உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களமும் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஆகிய இரண்டும் திணைக்களத்தின் அறிக்கை பற்றிய ஒரு முக்கிய கட்டுரையில், மினியாபோலிஸில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை செய்யப்பட்ட பின்னர் கடந்த கோடையில் வெடித்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான பரந்த இடதுசாரி எதிர்ப்புக்களை ஜனவரி 6 காங்கிரஸில் பாசிச தாக்குதலுடன் ஒப்பிட்டுப் பேச முயன்றது.

பெலோசி, வாஷிங்டனில் குடியரசுக் கட்சியினரின் மரண அச்சுறுத்தல்களைப் பற்றி புகார் கூறிக்கொண்டிருந்தபோது, அவரது குடியரசுக் கட்சி சமதரப்பினர் ட்ரம்பிற்கு வணக்கம் செலுத்தி, புளோரிடாவின் Mar-a-Lago இல் உள்ள அவரது இல்லத்தில் நாடுகடந்துவாழும் சர்வாதிகாரியாகக்கூடியவரை சந்தித்தனர். காங்கிரஸின் சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி தான் தொடர்ந்தும் காங்கிரஸில் தலைவராக இருப்பதற்கு ட்ரம்பின் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள ஜனவரி 6 ம் திகதியில் ட்ரம்பின் நடத்தை குறித்து அவர் கூறிய இலேசான விமர்சன அறிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்க வந்தார்.

மெக்கார்த்தி பின்னர் பதவிவிலக்கல் குற்றச்சாட்டை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் "தீவிரமான ஜனநாயகக் கட்சி நிகழ்ச்சி நிரல் நிறுத்தப்பட வேண்டும்" என்று அறிவித்தார். மேலும் "2022 இல் சபையிலும் செனட்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுக் கட்சியினருக்கு உதவுவதில் ட்ரம்ப்பின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏழு மில்லியன் வாக்குகளால் கணிசமான தேர்தல் தோல்விக்குப் பின்னர் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல் முறைகள் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்ற ஒரு பாசிச ஜனாதிபதியைப் பாதுகாக்க குடியரசுக் கட்சி இப்போது முழுமையாக அர்ப்பணித்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் "சகாக்களைப்" பொறுத்தவரை, குடியரசுக் கட்சியினர் அவர்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்தப்படுவதற்கும், கட்சிக்கு அப்பாற்பட்டு அரசியல் சலுகைகளைப் பெறுவதற்கும் இடையில் ஊசலாடுகின்றனர்.

இரண்டு கேள்விகளுக்கு ஜனநாயகக் கட்சி பதிலளிக்கவில்லை: முதலாவதாக, காங்கிரசுக்குள் கூட, ஜனநாயகக் கட்சியினர் தங்கள் உயிருக்கு அஞ்சுவது உட்பட, அமெரிக்காவிற்குள் இத்தகைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் பாசிசவாதிகள் பெறுவது எப்படி சாத்தியமானது? முதல்கேள்வியை தொடர்ந்து, இரண்டாவதாக, பாசிசத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சமூக நலன்கள் எவை?

இந்த கேள்விகளுக்கான பதில்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிபலிப்பை விளக்குகின்றன. அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சி குறித்த எந்தவொரு கவனமான ஆய்வும், ஆளும் வர்க்கத்தின் அரசியலுடனான ஜனநாயகக் கட்சியின் தொடர்புகளை அம்பலப்படுத்தும். குடியரசுக் கட்சியினருடனான தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஜனநாயகக் கட்சியினர் இதே சமூக வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க காங்கிரஸின் சுவர்களில் இருந்து இரத்தமும் அசுத்தமும் அகற்றப்பட்டபோதும், உலக சோசலிச வலைத் தளம் பாசிச சதி முயற்சி "அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை" என்று பின்வருமாறு எழுதியது.

அமெரிக்க ஜனநாயகத்தின் வெல்ல முடியாத ஆற்றல் மற்றும் காலத்தால் நிலைத்திருக்கும் தன்மை மீதான பழைய பெருமைகள் முற்றிலுமாக வெறும் அரசியல் கட்டுக்கதையாக அம்பலப்பட்டு மதிப்பிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க பாசிசத்தின் மேலெழுச்சி குறித்த சின்கிளேர் லூவிஸின் (Sinclair Lewis) நியாயமான புகழ்வாய்ந்த கற்பனை கதையின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்ட “இங்கே அது நடக்காது,” என்ற பிரபல வாக்கியத்தையே, சம்பவங்கள் தீர்க்கமான மிஞ்சிவிட்டன. இங்கே ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடக்க முடியும் என்பது மட்டுமல்ல, இங்கே ஜனவரி 6, 2021 மதியம் அது நடந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக, இந்த ஆரம்ப முயற்சி போதுமானளவுக்கு அதன் இலக்கை எட்டவில்லை என்றாலும் கூட, அது மீண்டும் நடக்கும்.

இந்த எச்சரிக்கைகள் சரியான நேரத்திலும் மற்றும் முன்னறிவிப்பாக உள்ளன. அதிர்ச்சி மற்றும் திகில் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்புகள் கலைந்து போகவும், இரு கட்சிகளின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் தங்கள் பாதையை மேலும் வலதுபுறம் நோக்கி மீண்டும் தொடரவும் மூன்று வாரங்கள் மட்டுமே எடுத்துள்ளன. ஜனநாயகக் கட்சி தனது சொந்த பிரதிநிதிகளின் உடல் உயிர்வாழ்வு நேரடியாக அச்சுறுத்தப்படும்போது கூட, ஜனநாயகக் கொள்கைகளை பாதுகாக்க விருப்பமின்மையுடனும் மற்றும் இயலாமையுடன் இருப்பது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினருக்கும், அதன் இரட்டைக் கட்சிகளுக்கும் அல்லது அதன் அரசு நிறுவனங்களுக்கும் ஒப்படைக்க முடியாது. அதனது இருப்பு ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ள ஒரே சமூக சக்தி பெரும்பான்மையான மக்களான தொழிலாள வர்க்கமாகும். ஆனால் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பில் முற்றிலும் அதற்கு பிரதிநிதித்துவம் இல்லாதுள்ளது.

தொழிலாள வர்க்கம் தனது வர்க்க வலிமையை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்ட வேண்டும். ஜனவரி 6 ஆட்சி கவிழ்ப்பு பற்றிய முழுவிசாரணைக்கும், காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வழக்குத் தொடரவும், மற்றும் ஆட்சி கவிழ்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் அமெரிக்க மக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அது எடுத்துக் கொள்ள வேண்டும்.

Loading