மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
“அங்கே பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு இருந்தன” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை ஒன்று குறிப்பிட்டது: “இரண்டு கனமான உலோகத் தடுப்பு அடுக்குகள் (அதனுடன் சேர்ந்து முள் கம்பி உருளைகள்); ஒரு பெரிய கல் கற்பாறைகளின் அடுக்கு; அதைத் தொடர்ந்து (2,000 க்கும் மேற்பட்ட) ஆணிகள் (சாலையில் பதிக்கப்பட்டவை) மற்றும் ஒரு கான்கிரீட் தடுப்புகளின் அடுக்கு. அதற்கு சில மீட்டர் முன்னால் கல் கற்பாறைகளின் மற்றொரு அடுக்கு இருந்தது, அதைத் தொடர்ந்து சில மீட்டர்களுக்குப் பிறகு மற்றொரு அடுக்கு கான்கிரீட் தடுப்புகள் இருந்தன. ”
இது ஒரு போர் மண்டலம் பற்றிய விவரிப்பு என்று யாராவது கருதினால் அது மோசமாக தவறான கருத்தாக இருக்கும். வேளாண் வணிக சார்பு பண்ணை சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் தலைநகரான டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தின் அதிகரித்து வரும் அடக்குமுறை பிரச்சாரத்தில் இது ஒரு அம்சம் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது.
இரண்டரை மாத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், பத்தாயிரக்கணக்கான விவசாயிகளை அடைத்து வைக்க அதிகாரிகள் பாடுபடுகின்றனர். -சில அறிக்கைகள் 200,000 க்கும் அதிகமான எண்ணிக்கையை குறிப்பிடுன்றன. அது இப்போது நடைமுறையில் திறந்தவெளி சிறைகளாக உள்ளன .
செப்டம்பர் மாதத்தில் பாஜக அரசாங்கம் பாராளுமன்றம் வழியாக கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோருகின்றனர், அதே நேரத்தில் பெரும்பாலான வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குவதற்கும் "விருப்பப்படி வேலையில் வைப்பது மற்றும் நீக்குவதை,” "நெகிழ்வான" தொழிலாளர் சந்தையை ஊக்குவிப்பதற்குமாக தொழிலாளர் குறியீட்டில் திருத்தம் செய்தது.
மூன்று வேளாண் சட்டங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வேளாண் வணிக நிறுவனங்களுக்கு இந்தியாவின் விவசாயத் துறையில் ஆதிக்கம் செலுத்த வழிவகுக்கும். விவசாயிகள், அவர்களில் பெரும்பாலோர் 2 ஹெக்டேர் (5 ஏக்கர்) அல்லது அதற்கும் குறைவான நிலங்களுடன் தங்கள் குடும்பங்களை காப்பாற்ற போராடுகிறார்கள், அவர்கள் தங்களது வாழ்வாதாரம் அச்சுறுத்தப்படுவதாகவும், இந்தியாவின் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை ஒழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் அஞ்சுகின்றனர்.
டெல்லியின் புறநகரில் உள்ள விவசாயிகளின் முகாம்களுள்ள இடங்களை பாஜக அரசு சூழ்ந்துள்ளது, குறிப்பாக சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லையில் வழிகளின் சந்திப்பில் அமைந்துள்ள மூன்று பெரிய, போர் போன்ற தடுப்புகள் ஏராளமான காவல்துறையினரால் நிர்வகிக்கப்படுகிறது. கடும் பாதுகாப்புப் நடவடிக்கைகள் தேசிய தலைநகருக்குள் நுழையும் சாலைகளையும், அருகிலுள்ள வசதிகளுக்கு செல்வதையும் தடுக்கின்றன.
வியாழக்கிழமை அன்று காசிப்பூர், உத்தரபிரதேசம் / டெல்லி எல்லையில் வழிகளின் சந்திப்பில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு முகாமுக்கு 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விஜயம் செய்வதை பொலிஸ் தடுத்தது.
"கோட்டை போன்ற கான்கிரீட் தடைகள் மற்றும் முள்வேலி வேலிகளுக்கு பின்னால் விவசாயிகள் தடை செய்யப்பட்டுள்ளனர்" என்று ஒரு எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் பாடல் ட்வீட் செய்துள்ளார். "ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் கூட எதிர்ப்பு நடக்கும் இடங்களுக்குள் நுழைய முடியாது." ஷிரோமணி அகாலிதளத்தின் (எஸ்ஏடி) தலைவரான பாடல், வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபை தளமாகக் கொண்ட எஸ்ஏடி அரசாங்கத்திலிருந்து விலகும் வரை மோடியின் அமைச்சரவையில் பணியாற்றினார்.
"டெல்லி காசிப்பூர் எல்லையில் எங்களுக்கு கிடைத்த எண்ணப்பதிவு என்னவென்றால் அது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை போன்றது" என்று 15 எம்.பி.க்கள் பின்னர் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் சபாநாயகருக்கு எதிர்ப்பு கடிதத்தில் எழுதினர். "விவசாயிகளின் நிலை சிறையில் உள்ள கைதிகளின் நிலையை ஒத்திருக்கிறது."
இந்த கொடூரமான அரசு அடக்குமுறைக்கு டெல்லி காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர், இது மோடியின் பிரதான கையாலான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது, மேலும் இந்தியாவின் தேசிய தலைநகரை சுற்றி வளைக்கும் இரு மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள பாஜக அரசாங்கங்களால் ஆதரிக்கப்படுகிறது.
ஹரியானாவிலிருந்து வரும் வாகனங்களின் டயர்களைக் குத்துவதற்காக சாலைகளில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆணிகளை பற்றி குறிப்பிடுகையில், எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள ஒரு விவசாயி சுதேஷ் கோயாத் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, “அவர்கள் இங்கு உருவாக்கியதை 'சீனச் சுவர்' (சீனாவின் பெரிய சுவர்) என்று அழைக்கிறேன். அவர்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயப்படுகிறார்களா? ” தடுப்புகளுக்குப் பின்னால் உள்ள மிருகத்தனமான நோக்கம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆம்புலன்ஸ் இந்த வழியாக செல்வதற்கு அவர்கள் எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை என்பதே எனது மிகப்பெரிய கவலை."
மற்றொரு எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, சுமார் 100 எளிதாக எடுத்து செல்லக்கூடிய கழிப்பறைகளுக்கு விவசாயிகள் செல்லும் வழிகளில் தடுப்புகள் போட்டனர். பிபிசி வெளியிட்டுள்ள செய்தியுல், “உ.பி. [உத்திரப்பிரதேசம்] முதல் டெல்லி செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. நடைபாதைகள் மற்றும் நடைபாதைகள் கூட தடுக்கப்பட்டுள்ளன. ”
போராட்ட இடங்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை நிறுத்தவும் மோடி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. குப்பைகள் சேகரிப்பதை நிறுத்துமாறு நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இது எதிர்ப்பு நடக்கும் இடங்களில் கழிவுகள் குவிந்து போவதற்கு வழிவகுக்கிறது.
அதன் பெரும் பாதுகாப்பு கட்டமைப்போடு இணைந்து, பாஜக அரசாங்கம் மிகவும் ஆக்கிரோஷமான அரசியல் பகட்டுத்தன்மையை சேர்த்துக் கொண்டது. பெருநிறுவன சார்பு வேளாண் சட்டங்களை இரத்து செய்வதற்கான கோரிக்கையை அவர்கள் கைவிடுவதைப் பொறுத்தே வேளாண் தொழிற்சங்கத் தலைவர்களுடனான எந்தவொரு சந்திப்பும் தங்கியுள்ளது என்று அது கூறியுள்ளது; மற்றும், ஊடக எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, திங்கட்கிழமை 2021-2022 வரவு-செலவுத் திட்டத்தில் விவசாயிகளை சமாதானப்படுத்த எந்த நடவடிக்கையும் சேர்க்கப்படவில்லை.
இந்திய முதலாளித்துவத்தின் இலாபத்தை மேம்படுத்துவதற்காக, மோடி அரசாங்கம் தனது வேளாண் சட்டங்களை செயல்படுத்த வேண்டும் மற்றும் சந்தை சார்பு சீர்திருத்தங்களின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனம் பிடிவாதமாக உள்ளன. கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) மோடியின் வேளாண் வணிகச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது, அவை "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என்று கூறியது. எஸ் அண்ட் பி கடன் தரம் பார்க்கும் முகமை, சட்டங்களை அமல்படுத்துவதில் பின்வாங்கினால், இந்தியாவின் மதிப்பீட்டை குப்பை-பத்திர நிலைக்கு குறைக்க வேண்டியிருக்கும் என்று அதன் பங்கிற்கு, அச்சுறுத்துகிறது.
புதிய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகமும் அதற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. "இந்திய சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது" என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.
மோடி அரசாங்கம் அதன் முதலீட்டாளர் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு பரந்த தொழிலாள வர்க்கத் தலைமையிலான இயக்கத்திற்கு விவசாயிகளின் கிளர்ச்சி ஒரு ஊக்கியாக மாறும் என்று மிகப்பெரிய அச்சத்தில் உள்ளது.. தனியார்மயமாக்கல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீதான அரசாங்கத்தின் பொருளாதார தாக்குதலுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு ஒருநாள் பொது வேலைநிறுத்தங்களில் இணைந்தனர். இந்த வேலைநிறுத்தங்களில் இரண்டாவது விவசாயிகள் தங்களது டெல்லி சாலோ (டெல்லிக்கு செல்வோம்) போராட்டத்தை ஆரம்பித்த அதே நாளான நவம்பர் 26 அன்று, நிகழ்ந்தது. பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளை பெருமளவில் அணிதிரட்டுவதன் மூலம், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை மோடி அரசு தடுத்தது, அது அவர்களை முகாம்களை அமைக்கும்படி கட்டாயப்படுத்தியது, அங்கே தான் அவர்கள் இன்றுவரை தங்கியுள்ளனர்.
தற்போதைய அடக்குமுறை நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு டெல்லியில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையில் நடந்த மோதல்களை மோடி அரசாங்கம் பற்றியுள்ளது. ஜனவரி 26க்கு பிறகு டெல்லிக்கு வெளியிலும், அருகிலிருக்கும் உபி மற்றும் ஹரியானாவிலும் செல்பேசி மற்றும் இணைய சேவைகளை அதிகாரிகள் நிறுத்தியதை “பொதுமக்கள் பாதுகாப்பை” காப்பதாக போலியாக கூறப்பட்டது. சம்பவம் நடைபெற்றபின்னரும் பாஜக ஆளும் மாநிலமான ஹரியானாவில் 22 மாவட்ங்களில் 7இல் பிப்ரவரி 4 மாலை 5 மணிவரை செல்பேசி சேவைகளின் தடைகளை நீட்டித்துவைத்திருந்தது.
ஜனவரி 26 வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறை 44 குற்றவியல் வழக்குகளை பதிவுசெய்திருப்பதுடன் 122 பேரை கைது செய்திருக்கிறது. “கலவரத்தை உண்டுபண்ணுதல், கொலை முயற்சி மற்றும் குற்றச் சதிக்கு” எதிராக குறைந்தது 37 விவசாயிகள் சங்கத்த்தின் தலைவர்கள் மீதும் மற்றும் “உணர்ச்சி பொங்கும் உரைகள்” வழங்கி “வன்முறையில் ஈடுபட்டதாக” மேதா பட்கர் மற்றும் யோகேந்திர யாதவ் உட்பட ஆர்வலர்கள் மீதும் காவல்துறை வழக்குகளை பதிவுசெய்துள்ளது.
ஜனவரி 26 ஆர்ப்பாட்ட செய்தியை சேகரித்த அரை டசினுக்கும் அதிகமான பத்திரிகையாளர்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்காக்கப்பட்டிருக்கின்றனர். பிப்ரவரி 2 அறிக்கையொன்றில், "தேசத்துரோகம், வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கு பங்கம் விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிடுதல்" என்பன உட்பட பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்கு மனித உரிமை கண்காணிப்பு (Human Rights Watch) தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகொள்விடுத்துள்ளார். “அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இழிவுபடுத்துவதற்கும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை துன்புறுத்துவதற்கும் மற்றும் சம்பவத்தின்மீது செய்திகளை கூறியவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கும்” அரசாங்கம் கவனம் செலுத்துவதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஜனவரி 26 பேரணியின்போது டிராக்டரை ஓட்டிவந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயியை காவல்துறையின் துப்பாக்கி சுட்டதை அம்பலப்படுத்திய ஊடக செய்திகளைப் பற்றி அராசாங்கம் கவலையடைந்திருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் குறைந்தது 6 மூத்த ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும், அவர்களுடன் முக்கிய காங்கிரஸ் கட்சி அரசியல்வாதி சசிதரூரும் ஆர்ப்பாட்டத்தில் இறந்தவரைப் பற்றிய உண்மைகளை “தவறாக செய்தியளித்ததற்காக” தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஜனவரி 30 அன்று, ஆர்ப்பாட்ட சம்பவத்தை செய்தியாக எடுத்த தர்மேந்தர் சிங் மற்றும் மண்டீப் புனியா இருவரையும் காவல்துறையினரிடம் “தவறாக நடந்துகொண்டார்கள்” என்று குற்றம் சுமத்தி டெல்லி காவல்துறை அவர்களிருவரையும் கைது செய்துள்ளது. புனியா, எந்த பத்திரிகையும் சாராத பொதுப் பத்திரிகையாளராவர், ஜனவரி 29 அன்று டெல்லிக்கும் மற்றும் ஹரியானாவுக்கும் இடையில் உள்ள சிங்கு எல்லையில் இருக்கும் ஆர்ப்பாட்ட இடத்தில் காவல்துறையினர் நின்றுகொண்டிருக்கும் போதே விவசாயிகள் மீது கற்களை எறிந்து மற்றும் அவர்களின் கூடாரங்களை சேதப்படுத்திய பாஜக வின் நிதியுதவிபெறும் குண்டர்களைப் பற்றிய அவருடைய செய்திகளுக்காக வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டிருக்கிறார். மறுநாள் சிங் காவல்துறையால் விடுவிக்கப்பட்டார் ஆனால் காவல்துறை அதிகாரியை தடுத்தார் மற்றும் தாக்கினார் என்று குற்றம்சுமத்தப்பட்டு அவர்கள் புனியாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளார்கள்.
அரசாங்கத்தின் அடக்குமுறையானது மற்ற விவசாயிகளையும் போராட்டத்தில் சேர்வதற்கு தூண்டியிருக்கிறது. ஹரியானாவில் போராட்டம் நடைபெறும் இடத்தில் பெண்களின் பெரிய பட்டாளங்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து சேர்ந்துள்ளனர். திங்கள்கிழமையன்று இரவு, இணைய சேவைகளையை நிறுத்தியது - அது அவர்களின் பிள்ளைகளின் படிப்பை சீர்குழைத்துள்ளது –அதை எதிர்த்து கண்டேலா கிராமத்திலுள்ள ஜின்ட்-சண்டீகர் நெடுஞ்சாலையை விவசாயிகள் மறித்தனர்.
இன்று இணைய சேவைகளை முடக்கியதற்கும் மற்றும் அதிகாரிகளால் போராட்டக்காரர்கள் துண்புறுத்தப்படுவதையும் எதிர்த்து விவசாயிகள் தேசியளவில் மூன்று மணிநேரம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை முற்றுகையிடும் “சக்கா ஜாம்” (போக்குவரத்து மறியல்) செய்யப்போகிறோம் என்று விவசாயிகளின் சங்க தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். என்று பிப்ரவரி 2 அன்று சிங்கு எல்லையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தால் ஆளும் தட்டுக்களுக்குள் தூண்டப்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகள் குறைவதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என்ற நிலையில் பதட்டங்களை தணிப்பதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சிசெய்துகொண்டிருக்கின்றது. “வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பெற” வேண்டுகோள் விடுப்பதற்கு “அனைத்து கட்சி கூட்டத்தை” நடத்துவதற்கு பிப்ரவரி 2 அன்று பஞ்சாப் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் அழைப்புவிடுத்துள்ளார்.
பாஜக வும் மற்றும் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த அந்த கூட்டத்திற்கு பிறகு பஞ்சாப் காங்கிரஸ் அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது அதில் “பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வு” வேண்டும் என்று முறையிட்டுள்ளது. ஒரு சமூக வெடிப்பை தவிர்ப்பதே அவருடைய பிரதான நோக்கமாக இருந்தது என்பது தெளிவாக உள்ளது. “இந்த பிரச்சனை கையை விட்டுபோய்விடுவதற்கு முன்னர் தீர்ப்பதற்கு நாங்கள் வேலை செய்யவேண்டியிருக்கிறது” என்று முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முதலீட்டாளர் சார்பு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முழுமையாக அர்ப்பணித்திருக்கிறது, அவற்றில் ஒரு பகுதி தான் மோடி அரசாங்கத்தின் வேளாண் சட்டங்கள். 1990களின் முற்பகுதியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தான் பூகோள மூலதனத்திற்காக மலிவு கூலி உற்பத்தி மற்றும் சேவைகளின் ஒரு மையமாக இந்தியாவை உருவாக்குவதற்கான உந்துதலை தொடங்கியது மேலும் அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்த்தை வழிநடத்தியிருந்தது. அதன் ஆட்சி நடத்திய தசாப்தத்தில் (2004–2014) பெருமளவிலான புதிய தாராளமய “சீர்திருத்தங்களை” முன்னோக்கி எடுத்துச்செல்ல அழுத்தம் கொடுத்தது, அதே நேரத்தில் வாஷிங்டனுடன் இந்திய -அமெரிக்காவின் “பூகோள மூலோபாய கூட்டணியையும்”உருவாக்கியது.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் மோடி மற்றும் அவருடைய இந்து மேலாதிக்க பாஜக ஆகியவற்றால் தற்போது வெற்றிகரமாக முன்னெடுத்ததற்கு ஒப்பான வேளாண் வணிக சார்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு பலதடவை முயன்றிருக்கின்றன. ஆனால் வெகுஜன எதிர்ப்பை கண்டு அஞ்சியிருந்தன.
புதன்கிழமையன்று, 16 எதிர்கட்சிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்களின் மீது 15 மணிநேர விவாதத்திற்கு மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பபெறமாட்டாது என்று மோடி அரசாங்கம் பலமுறை வலியுறுத்தியிருக்கிற நிலையில், இந்த சூழ்ச்சி அரசாங்கத்திற்கும் மற்றும் எதிர்கட்சிகளுக்கும் சில “ஜனநாயக” மூடுதிரையையும் மற்றும் சீர்திருத்தங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத நிலையில் விவசாயிகளின் நண்பனைப் போல காட்டிக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.
மேலும் படிக்க
- வேலை நெருக்கடி, மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இந்திய வரவு-செலவுத் திட்டம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கிறது
- இந்தியாவில் மாவோயிச தொழிற்சங்க தலைவர்கள் மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துகிறார்கள்
- இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும்
