நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் எழுச்சியும் பாசிசத்தின் தோற்றமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் பாசிசவாதத்தின் எழுச்சியும்: அமெரிக்கா எங்கே செல்கிறது?” என்ற அவரது அறிக்கையில், டேவிட் நோர்த் வாஷிங்டனில் ஜனவரி 6 நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் சுவடுகளை ஆராய்ந்திருந்தார்.

தீவிர வலதுசாரியும் பாசிசவாத இயக்கங்களும் எப்பொழுதும் அமெரிக்க அரசியல் அமைப்புக்குள் இருந்து வந்துள்ளன என்றாலும், அமெரிக்காவின் பொருளாதார சக்தி எழுச்சிபெறும் வரையில் இத்தகைய கொடிய அரசியல் மற்றும் சமூக சக்திகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிந்தது என்பதை அவர் விளக்கினார்.

தற்போதைய நிலைமை அடிப்படையிலேயே வேறுபடுகிறது. அமெரிக்கா இப்போது எழுச்சியடையந்து கொண்டிருக்கும் சக்தியாக இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக அது தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று வீழ்ச்சியில் உள்ளது, இது 12 ஆண்டுகளில் இரண்டு புறநிலை உண்மையை வலியுறுத்துகின்ற நிதி நெருக்கடிகளைக் கண்டுள்ளது — அதாவது 2008 வங்கி அமைப்புமுறையின் கரைவு மற்றும் 2020 மார்ச் நடுப்பகுதியில் இன்னும் பெரிய பேரழிவாக, COVID-19 பெருந்தொற்று நோயின் ஆரம்ப தாக்கமானது அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் அனைத்து நிதியியல் சந்தைகளையும் முடக்கும் ஒரு விளைவாக இருந்தது.

Traders work on the floor of the New York Stock Exchange. (AP Photo/Richard Drew)

நோர்த் அவரது அறிக்கையில் குறிப்பிடுகையில், அந்த நெருக்கடி மற்றும் அதன் முக்கியத்துவத்தை அதன் வரலாற்று மற்றும் சர்வதேச உள்ளடக்கத்தில் வைக்கும் போது மட்டுமே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று வலியுறுத்தினார். அதன்படி, இரண்டாம் உலக போருக்குப் பின்னைய உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு அடித்தளத்தை உருவாக்கிய 1944 பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையை நடைமுறையளவில் ஒரேயடியில் அழித்து, அமெரிக்க டாலருக்கும் தங்கத்திற்கும் இருந்த பிணைப்பை நீக்குவதற்காக, ஜனாதிபதி நிக்சன் ஆகஸ்ட் 15, 1971 இல் எடுத்த தீர்மானத்தின் மீது நோர்த் அதன் பொருளாதார தோற்றுவாய்களை அமைத்தார்.

1914 இல் முதலாம் உலக போர் வெடிப்பில் தொடங்கிய 30 ஆண்டு கால மனிதப் படுகொலைக்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தை மீண்டும் மறுஸ்திரப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அடித்தளத்தை வழங்கிய அந்த உடன்படிக்கையின் தூண், டாலரை உலகின் கையிருப்பு நாணயமாகவும், ஒரு அவுன்ஸ் தங்கத்தை 35 டாலருக்கு மாற்றிக் கொள்ளும் அடித்தளத்தை உருவாக்கியது.

அந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டு வெறும் ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின்னர், உலக பொருளாதாரத்திற்குள் அமெரிக்காவின் அந்தஸ்து வீழ்ந்ததன் காரணமாக அது கைவிடப்பட்டது. தங்கத்தை டாலராக மாற்றிக் கொள்ளலாம் என்ற வாக்குறுதியைக் காப்பாற்றுவது தேசிய திவால்நிலைமையைக் கொண்டு வந்துவிடும் என்பதை அமெரிக்காவின் வர்த்தக சமநிலை மற்றும் கொடுப்பனவு சமநிலை பற்றாக்குறை ஆகியவைகள் கட்டியெழுப்பப்பட்டதனை அர்த்தப்படுத்தியது.

“வரலாற்றை பின்னோக்கிப் பார்த்து,” நோர்த் எழுதினார், “இந்த நடவடிக்கை அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார அந்தஸ்துக்கு மட்டுமல்ல, மாறாக அமெரிக்க ஜனநாயகத்தின் தலைவிதிக்கும் கூட ஒரு திருப்புமுனையைக் குறித்தது.”

தற்போதைய இந்த அரசியல் நெருக்கடியின் பொருளாதார தோற்றுவாய்களைக் கண்டறிவதற்கான இந்த முக்கிய புள்ளியைக் கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க முதலாளித்துவத்தின் போக்கை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலமாக, குறிப்பாக நாணய மற்றும் நிதிய அமைப்புமுறையின் அபிவிருத்திகளை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலமாக நிறுவிக் காட்ட முடியும்.

வரலாறை, ஒட்டுமொத்தமாக மூலதனத்தின் மிகவும் பேராசை கொண்ட மற்றும் சூறையாடும் வடிவமான நிதியியல் மூலதனத்தின் முடிவில்லா எழுச்சியாகவும் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரம் மீதான அதன் மேலாதிக்கமாகவும் தொகுத்தளிக்கலாம்.

நாம் அடுத்து பின்தொடரவிருப்பதைப் போல, இந்த நிகழ்ச்சிப்போக்கு தான், ஆட்சியின் பாசிசவாத வடிவங்களின் தற்போதைய அபாயம் மற்றும் நிஜமாக தோற்றம்பெறுவதைக் காணும் அரசியல் மேற்கட்டுமானத்தில் மாற்றங்களுக்கான பொருளாதார உந்துதலை வழங்கி, அடிக்கட்டுமானத்தை அமைக்கிறது.

இது அமெரிக்காவுடன் நின்றுவிடவில்லை. ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள் அபிவிருத்திகள் குறைந்தபட்சம் இதுவரையில் மிகவும் வன்முறையான வெளிப்பாடு மட்டுந்தான், இது ஒவ்வொரு நாட்டிலும் வெளிப்பட்ட ஓர் உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காகும். ஆனால் ஒரு பழமொழி குறிப்பிடுவதைப் போல, மீன் தலையிலிருந்து அழுக ஆரம்பிக்கிறது என்பதாக உள்ளது.

ஆகஸ்ட் 1971 அதிர்ச்சி, உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய திருப்பத்திற்கான —அதாவது போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சியின் முடிவுக்கு— ஓர் ஆரம்ப வெளிப்பாடாக இருந்தது.

1960 களின் இறுதியில் இருந்து அமெரிக்காவிலும் உலகெங்கிலும் இலாப விகிதத்தில் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய திருப்பத்தைப் பின்தொடர்ந்து, 1974-75 இல், உலக முதலாளித்துவம் மிக ஆழ்ந்த மந்தநிலைக்கு, 1930 களுக்குப் பிந்தைய நிலைக்கு சென்றது.

அது 1950 கள் மற்றும் 1960 களின் மந்தநிலைகள் போலிருக்கவில்லை. அவை கடந்து சென்ற பின்னர், வணிக சுழற்சியில் ஒரு புதிய ஏற்றத்தையும், முந்தையதை விட அதிக பொருளாதார வளர்ச்சியையும் வழங்கியிருந்தன.

1974-75 மந்தநிலை கடந்து சென்றது என்றாலும், அது கடந்த காலத்தின் மேல்நோக்கிய திருப்பங்களுக்கு நிகரான எதையும் ஏற்படுத்தி செல்லவில்லை. மாறாக, வளர்ச்சி குறைந்த நிலைமைகளின் கீழ், அது "தேக்கநிலை" (stagflation) என்றறியப்பட்டதை —அதாவது, விலைவாசி உயர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பின் ஒரு கலவையை—முன்னுக்குக் கொண்டு வந்தது. அரசாங்க ஊக்கப்பொதியின் அடிப்படையில் கீன்சிய நடவடிக்கைகள் (Keynesian) என்றழைக்கப்பட்டவைகள், புத்துயிர்ப்பிக்கும் திறனை மீட்டுக் கொண்டு வருவதற்கு உதவாதவையாக நிரூபணமானதோடு மட்டுமின்றி, அவை நிலைமையை இன்னும் மோசமாக்கின.

போருக்குப் பிந்தைய வளர்ச்சியின் தொழிற்துறை கட்டமைப்பின் அடிப்படையில் அரைகுறை நடவடிக்கைகளை வைத்து இந்த புதைகுழியிலிருந்து வெளி வர முடியாது என்பதை, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகள், குறைந்தபட்சம் ஏதோ மட்டத்தில், புரிந்து கொண்டன. அவை பழைய ஒழுங்கமைப்பிற்கு உள்ளிருந்தே இலாபங்களை அதிகரிப்பதற்காக சுரண்டல் அளவை அதிகரிக்க முயன்றன என்றாலும், இது தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளிடம் பல தொடர்ச்சியான போர்குணமிக்க போராட்டங்களை மட்டுமே தூண்டின—பிரிட்டனில் 1973-74 இல் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், இது மிகவும் தெள்ளத்தெளிவான சான்றுகளில் ஒன்றாக ஹீத் டோரி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்கியது.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், முதலாளித்துவ பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வதற்குக் குறைவாக எதுவும் அவசியப்படாது என்றும், இலாப விகித வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமானால் ஒரு புதிய உற்பத்தி முறை அபிவிருத்தி செய்ய வேண்டியிருப்பதையும் அவை ஏற்றுக் கொண்டன.

தொழிற்துறையின் குறைந்த இலாபகர பிரிவுகளை மூடுவது இதில் சம்பந்தப்பட்டிருந்தது, இத்துடன் அவற்றில் பணியமர்த்தப்பட்டிருந்த தொழிலாளர்களின் மிகப்பெரியளவில் ஒன்றுகுவித்தலை நீக்குவதும் சேர்ந்தது; எஞ்சியவற்றில் வேலைகளை வெட்டும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; மிகவும் மலிவு உழைப்பு ஆதாரவளங்களில் இருந்து ஆதாயமெடுக்க சர்வதேச அளவில் வெளித்தரப்பிடம் சேவையை ஒப்படைத்தல் (outsourcing) உற்பத்தி முறை கொண்டு வரப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் தாட்சர் மற்றும் ரீகன் அரசாங்கங்களால் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டது. இந்த மறுசீரமைப்பு திட்டநிரலைத் திணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிரதான பொருளாதார ஆயுதம், பௌல் வோல்க்கர் தலைமையின் கீழ் அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆல் செயற்படுத்தப்பட்டது. 1979 இல் ஜிம்மி கார்ட்டரால் நியமிக்கப்பட்டு, அவர் வரலாற்றுரீதியில் முன்னொருபோதும் இல்லாத மட்டங்களுக்கு வட்டிவிகிதங்களை உயர்த்தினார், அது ஒரு புள்ளியில் 20 சதவீதத்தைத் தொட்டது.

பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் என்ற பதாகையில் நடத்தப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளின் மத்திய இலக்கு, தொழிலாள வர்க்கமாக இருந்தது. 1981 இல் வர்க்க போராட்டத்தின் ஒரு பிரதான திருப்பமாக, அப்போது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களை ரீகன் பாரியளவில் நீக்கியதுடன், அவர்களின் தொழிற்சங்கமான PATCO தலைவர்களையும் சிறையில் அடைத்தார்.

PATCO தொழிலாளர்களின் தோல்வி பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் மிக முக்கிய காரணியாக இருந்தது என்று அறிவித்து, வோல்க்கர் பின்னர் வேலைநிறுத்தத்தை உடைத்ததற்காக ரீகனைப் பாராட்டினார். PATCO இக்கு ஏற்பட்ட முடிவு "ஏனைய பிரச்சினைகள் —அந்த பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும்— அவை சம்பந்தமாக தொழிற்சங்க பேரம்பேசல் நிலைப்பாட்டின் பலத்தின் மீது உளவியல்ரீதியான விளைவு" தீர்க்கமாக ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.

பெடரலின் வட்டிவிகிதத்தை தீர்மானிக்கும் பெடரல் திறந்த சந்தை குழுவின் (Federal Open Market Committee) உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரத்தை அதை விட இன்னும் வெளிப்படையாக பெப்ரவரி 1981 கூட்டமொன்றில் கூறுகையில், “அந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கங்கள் குறைவாக ஏற்க உடன்பட்டிருக்காவிட்டால் … பணவீக்கத்தைப் பாதுகாப்பாக தோற்கடித்திருக்க முடியாது. வார்த்தைகளுக்கு அவர்கள் இணங்கி இருக்காவிட்டால், அனேகமாக இன்னும் பல மில்லியன் வேலைகளின் கலைப்பு அவர்களை ஒப்புக் கொள்ள செய்திருக்கும்,” என்றார்.

ஆனால் இந்த நடவடிக்கைகளை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நேரடியான ஒத்துழைப்புடன் மட்டுமே முன்னெடுக்க முடிந்தது, அவை PATCO தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு சுண்டு விரலைக் கூட உயர்த்த மறுத்து, அதற்குப் பிந்தைய தசாப்தங்களில் தொடர இருந்த பல்வேறு பிரதான தொழிற்துறை போராட்டங்களின் காட்டிக்கொடுப்புக்கு முன்மாதிரியை அமைத்தன.

அமெரிக்க தொழில்துறையின் பரந்த பிரிவுகளை அழித்தமை மற்றும் அதன் விளைவாக தொழிலாள வர்க்கம் மீதான போர் ஆகியவை அமெரிக்க பொருளாதாரத்தைப் பரந்தளவில் மறுஒழுங்கமைப்பு செய்வதில் —அதாவது நிதிய சூழ்ச்சி உபாயங்கள் மற்றும் ஊக வணிகங்கள் மூலமாக ஒட்டுண்ணித்தனமான இலாப திரட்சியின் மையமாக அதை மாற்றுவதில்—ஒரு கூறுபாடாக இருந்தது.

மதிப்பு குறை கடன்பத்திரங்களுக்கு (junk bond) நிதி திரட்டப்பட்டு போட்டி நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் நிறுவனங்களின் விற்றுவாங்கலுடன் தொடங்கிய அது, பின்னர் அவற்றை ஒன்றுமில்லாததாக ஆக்கி, துணை உதிரிப் பாகங்களாக விற்றுத்தள்ளலுடன் தொடங்கியது. இலாப திரட்சி உற்பத்தி மூலமாக அல்ல, மாறாக கடன்களால் பெறப்பட்ட ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கை மூலமாக நடத்தப்பட்டது — இது நிகழ்ச்சிப்போக்கின் தொடக்கம் இப்போது புவி வளிமண்டல மேல் அடுக்குப் போல பெரும் சிகரத்தை எட்டியுள்ளது.

நோர்த் அவரது அறிக்கையில், அரசியல் செயலெல்லையில் முற்றுமுதலான குற்றவியல் நடவடிக்கைகளின் வளர்ச்சியைக் குறித்து குறிப்பிட்டார், இது ஈரான்-கொன்ட்ரா மோசடிக்கு ஓராண்டுக்குப் பின்னர், 1985 இல் ஜேர்மன் நகரமான பீட்பேர்க்கில் Waffen SS உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட கல்லறையில் ரீகன் மலர்வளையம் வைத்ததில் எடுத்துக்காட்டப்பட்டது.

காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை மீறி, இடது-சாரி சான்டினிஸ்டா அரசாங்கத்தை தூக்கியெறியும் முயற்சியில் நிக்கரகுவா கொலைப்படைகளுக்கு ரீகன் நிர்வாகம் நிதி வழங்கியமையும் இதில் உள்ளடங்கும். நிக்கரகுவாவில் படுகொலை நடவடிக்கைகளை வழிநடத்தி அதேவேளையில், கேணல் ஓலிவர் நோர்த், ஒரு தேசிய அவசரகால நிலை சம்பவத்தில் 100,000 அமெரிக்கர்களைச் சிறையில் அடைப்பதற்கான திட்டங்களிலும் சம்பந்தப்பட்டிருந்ததாக காங்கிரஸ் சபை விசாரணைகள் அம்பலப்படுத்தின.

கடந்த காலத்தில் சட்டவிரோதமானவை என்று கருதப்பட்டிருந்த அணுகுமுறைகள் வழமையாக ஆக்கப்பட்ட நிலையில், இதற்கு இணையாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நிதியியல் கட்டமைப்புக்கு அடியிலும் அபிவிருத்திகள் நடந்து கொண்டிருந்தன. நிறுவனங்கள் அவற்றின் பங்கு விலைகளை அதிகரிப்பதற்காக, அவற்றின் சொந்த பங்குகளை வாங்கி விற்க நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், 1982 இல், காங்கிரஸ் சபை சட்டமசோதா நிறைவேற்றியது—இந்த நடைமுறை தான் இப்போது வோல் ஸ்ட்ரீட் நடவடிக்கைகளின் பிரதான அம்சமாக ஆகியுள்ளது. முன்னதாக, இந்த நடவடிக்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் (Securities and Exchange Commission) சந்தை சூழ்ச்சி உபாயம் என்று சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கப்பட்டிருந்தது.

நிதியியல் ஊகவணிகத்தை ஒழுங்கமைக்க நிதியியல் செயல்பாட்டாளர்களின் ஒரு புதிய வகை தோன்றியது, குறிப்பாக போட்டி கையகப்படுத்தல்களுக்கு நிதி வழங்குவதற்காக முதலீட்டு தரத்திற்கும் கீழாக, அல்லது மதிப்பு குறை கடன்பத்திரங்களாக (junk bond) இவை வெளியிடப்பட்டன.

இவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான மைக்கல் மில்கென் இறுதி விளைவாக சிறையில் அடைக்கப்பட்டார் என்றாலும், அவர் அபிவிருத்தி செய்த அணுகுமுறைகள் வேகமாக வோல் ஸ்ட்ரீட்டில் நிலையான நடைமுறை செயல்பாடாக ஆகிவிட்டன — இந்த உண்மை பெப்ரவரி 2020 இல் ஜனாதிபதி ட்ரம்ப் நிதியியல் மூலதனத்தின் பாராட்டுக்காக மில்கெனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய போது அங்கீகரிக்கப்பட்டது. இந்த முடிவைப் பாராட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவிக்கையில், “திரு. மில்கென் நிதியியில் துறையில் 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராவார். 1980 களில் அவர் உயர்-இலாப பத்திரச் சந்தையை உருவாக்கினார் அது இப்போது நிதியியல் வியாபார முக்கிய தளமாக விளங்குகிறது,” என்றது.

ஆனால் 1980 களில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊகவணிக பணவிரயம், அடுத்தடுத்து நெறிமுறை தளர்வு அலைகளால் சாத்தியமாக்கப்பட்டு, நிதிய மூலதனத்தின் நடவடிக்கைகளுக்கான வீச்செல்லையை விரிவாக்கியது என்றாலும், சுமூகமாக அது நடந்தேறிவிடவில்லை. அது வெடிக்கச் செய்த ஒரு பிரதான நெருக்கடி, அமெரிக்க முதலாளித்துவத்தின் மையத்திலேயே அதிகரித்தளவில் அழுகி கொண்டிருந்த ஒரு சீரழிவை அம்பலப்படுத்தியது.

அக்டோபர் 1929 பொறிவையே விஞ்சி, அக்டோபர் 1987 இல், வோல் ஸ்ட்ரீட் வரலாற்றிலியே அதன் மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியைச் சந்தித்தது, டோவ் சந்தை 22 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது. சில வாரங்கள் நீடித்த மரணத்திற்கு நெருக்கமான இந்த அனுபவத்திலிருந்து, அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலையீடு மூலமாக மட்டுமே அது மீட்டுக் கொண்டு வரப்பட்டது. அதன் நடவடிக்கைகள் ஒருமுறை மேற்கொள்ளப்பட்டதாக இருக்கவில்லை, மாறாக அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையில் அது வகித்த பாத்திரத்தில் ஒரு பண்புரீதியிலான நிலைமாற்றமாக இருந்தது.

போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில், பெடரல் வகித்த பாத்திரம் அதன் தலைவர் வில்லியம் மெக்செஸ்னெ மார்ட்டீனால் 1955 இல் தொகுத்தளிக்கப்பட்டது: “நாணய கொள்கை மற்றும் கடன் கொள்கை துறையில், மிகைமிஞ்சிய பணவீக்கத்தைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை சில கடினமான விளைவுகளுடன் பிணைந்துள்ளது… அதுபோன்ற கொள்கை முடிவெடுக்கும் பணியில் இருப்பவர்கள், உங்களுக்கு பாராட்டு கிடைக்குமென எதிர்பார்க்காதீர்கள். பெடரல் ரிசர்வ்… விருந்து உண்மையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் போதே விருந்து பாத்திரத்தை பறிக்க உத்தரவிடும் பாதுகாவலர் நிலையில் உள்ளது,” என்றார்.

1987 இலையுதிர் காலத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பெடரல் ரிசர்வ் தலைவர் அலென் க்ரீன்ஸ்பான் பங்குச் சந்தை பொறிவின் மீது ஒரு வரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார், “பெடரல் ரிசர்வ்,” அவர் கூறினார், “தேசத்தின் மத்திய வங்கியாக அதன் பொறுப்புகளைத் தாங்கியுள்ளது, பொருளாதார மற்றும் நிதியியல் அமைப்புமுறைக்கு உதவும் வகையில் பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்கான ஆதார மையமாக சேவையாற்ற அது தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது,” என்றார்.

பெடரல் மூலமாக இருந்த நிதிய நிறுவனங்களுக்கான நிதிக் கிடங்குகளை திறந்துவிடுவதே இதன் அர்த்தமாகும். அதன் நடவடிக்கைகளின் அளவு, அடுத்தடுத்த தலையீடுகளால் சிறியதாக ஆகியிருந்தாலும், அந்த நேரத்தில் அது மிகப் பெரியதாக இருந்தது. மொத்தத்தில், வங்கி அமைப்புமுறைக்கு 17 பில்லியன் டாலரை மத்திய வங்கி பாய்ச்சியது, இந்த தொகை வங்கி கையிருப்புகளில் 25 சதவீதத்திற்கும் அதிகம் என்பதோடு, தேசிய பண விநியோகத்தில் ஏழு சதவீதத்திற்குச் சமம்.

கிரீன்ஸ்பான் தெளிவுபடுத்த இருந்ததைப் போல, அது ஒரு புதிய வேலைத்திட்டத்திற்கான தொடக்கமாக இருந்தது. பெடரலின் பணியானது பணவீக்க சொத்து குமிழிகளுக்கு எதிராக செயற்படக் கூடாது மற்றும் அவை ஆபத்தானதாக ஆவதற்குள் அவற்றை பணவீக்கத்தைக் குறைப்பதுமாகும். மாறாக அவற்றை பெருக அனுமதிப்பதும், அவை வெடிக்கும் போது, ஊகவணிகத்தில் ஈடுபட்டு அந்த குமிழிகளை உருவாக்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் திவால்நிலையைத் தடுக்கவும் மற்றும் குழப்பத்தைத் தீர்க்கவும் பணத்தைப் பாய்ச்சுவதுமே பெடரலின் பணி என்பதாக மாறிப் போனது.

இத்தகைய வழிமுறைகள் இப்போது அமெரிக்க பொருளாதார செயற்பாடுகளின் மத்திய அம்சமாக ஆகி வருகின்றன என்ற புரிதலின் அடிப்படையில் அது இருந்தது. விருந்து பாத்திரத்தைப் பறிப்பதற்கு பதிலாக, அதில் இன்னும் நிறைய மது போதையை ஊற்றுவதே பெடரல் வகிக்கும் பாத்திரம் என்பதை கிரீன்ஸ்பான் தெளிவுபடுத்தினார்.

மெக்சிகன் பெசோ நெருக்கடி, 1997-98 ஆசிய நெருக்கடி, ரஷ்ய ரூபெல் பொறிவு என 1990 களின் தசாப்தம் பல தொடர்ச்சியான நெருக்கடிகளால் குறிக்கப்பட்டது. இத்தகைய அபிவிருத்திகள் ஹெட்ஜ் நிதி (hedge fund) முதலீட்டு நிறுவனமான Long Term Capital Management இன் பொறிவுக்கு இட்டுச் சென்றன, அந்த ஹெட்ஜ் நிதி முதலீட்டு நிறுவன மறைவு நிதிய அமைப்புமுறை நெடுகிலும் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடுவதை தடுக்க அந்நிறுவனம் நியூ யோர்க் பெடரல் ரிசர்வ் ஆல் பிணையெடுக்கப்பட்டது.

2000-2001 இல் டாட்.காம் குமிழியின் வளர்ச்சி மற்றும் பொறிவானது இணையதள வளர்ச்சியுடன் சேர்ந்திருந்தது. எரிசக்தித்துறை நிறுவனம் என்ரோனின் அறிவிக்கப்பட்ட இலாபங்கள் ஒரு பிரதான கணக்கியல் நிறுவனம் கையொப்பமிட்ட "ஆக்கபூர்வமான கணக்கியல்" இன் விளைவாக இருந்த நிலையில், அந்நிறுவனத்தின் இலாபங்கள் முற்றிலும் போலியானவை என்பது வெளியானபோது, 2001 இல், அந்நிறுவனம் பொறிந்தது.

இத்தகைய நெருக்கடிகள் பல தற்செயலான தொடர் விபத்துக்களால் ஏற்பட்டதல்ல, மாறாக அடியிலிருக்கும் நிஜமான பொருளாதாரம் மற்றும் நிஜமான உற்பத்தி மதிப்பிலிருந்து முற்றிலும் அன்னியப்பட்ட நிதி நடவடிக்கைகள் மூலமாக இடைவிடாத இலாப திரட்சியிலிருந்து பெருகிய ஓர் ஆழ்ந்த சீரழிவின் வெளிப்பாடாகும்.

ஒவ்வொரு கட்டத்திலும், பெடரலின் எதிர்வினை ஒரே மாதிரியாக இருந்தது. அது வட்டி விகிதங்களைக் குறைத்ததுடன், அடுத்த குமிழிக்கான நிலைமைகளை உருவாக்கியது. 1990 கள் நெடுகிலும், கிளிண்டன் நிர்வாகத்தின் கீழ், முன்னர் நிறுவப்பட்டிருந்த நெறிமுறை இயங்குமுறைகளில் இருந்த எச்சொச்சங்கள் நீக்கப்பட்டன, இதன் உச்சக்கட்டமாக பிரதான வங்கிகளின் வங்கியியல் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து வைத்திருந்த 1930 களின் கிளாஸ்-ஸ்டீகால் சட்டம் (Glass-Steagall Act) நீக்கப்பட்டது.

1999 இல், ஊக வணிகத்தின் வழிமுறையாக நிதியியல் சாதனங்கள் (financial derivatives) மிகப்பெரும் முக்கியத்துவத்தை ஏற்க தொடங்கிய போது, கிளிண்டனின் நிதித்துறை செயலர் லாரன்ஸ் சம்மர்ஸ், அவற்றை நெறிமுறைக்குள் கொண்டு வருவதைக் கடுமையாக எதிர்த்தார்.

2008 நெருக்கடியானது அமெரிக்க மற்றும் பூகோள முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியில் பண்புரீதியில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது, இங்கே பிரச்சினையானது, என்ரான் அல்லது ஒரு முதலீட்டு நிதியம் (hedge fund) போன்ற ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் நடவடிக்கைகள் மட்டும் அல்ல, Long Term Capital Management நிறுவன விவகாரத்தில் நடந்ததைப் போல, அது பொறிந்து போனது.

ஒப்பீட்டளவில் நிதிய சந்தையின் சிறிய பாகமாக இருந்த 50 பில்லியன் டாலர்கள் அடைமானக் கடன் (sub-prime mortgage) சந்தையில் தொடங்கிய அந்த நெருக்கடி, அனைத்தையும் தழுவியது ஏனென்றால் அங்கே பயன்படுத்தப்பட்ட முறைகள் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்புமுறை நெடுகிலும் சர்வசாதாரணமாக இருந்தன. முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸின் திவால்நிலைமைக்குப் பின்னர், அரசாங்கமும் பெடரலும் ஒட்டுமொத்த நிதிய அமைப்புமுறையின் பொறிவைத் தடுப்பதற்காக மிகப்பெரும் காப்பீட்டு பெருநிறுவனமான AIG ஐ மீட்க வேண்டியிருந்தது.

புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களினது பாரியளவிலான தலையீட்டில், பெடரலால் நிதியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்கள் பாய்ச்சப்பட்டமை மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகள் சம்பந்தப்பட்டிருந்தன. பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் திட்டத்தின் (quantitative easing program) கீழ் நிதிய சொத்துக்களைத் தொடர்ந்து விலைக்கு வாங்கியதன் விளைவாக, அமெரிக்க மத்திய வங்கிகளின் வரவு-செலவுத் திட்ட அறிக்கை, சுமார் 800 பில்லியன் டாலரில் இருந்து 4 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக விரிவடைந்தது. “சுதந்திரச் சந்தை" என்றழைக்கப்பட்ட இது, அரசின் உதவி இல்லாமல் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காது என்பதைக் குறித்தது.

இரண்டு அடுக்கு கூலி முறையை விரிவாக்கி மற்றும் வழமையான தொழிலாளர் ஒப்பந்தங்களை இல்லாதொழித்த நடவடிக்கைகள் உள்ளடங்கலாக, ஒபாமாவின் கீழ் உழைப்பு சந்தையின் மேலதிக மறுசீரமைப்புடன் சேர்ந்து, இத்தகைய தலையீடுகள் ஒரு நிகழ்வுபோக்கைத் தீவிரப்படுத்தியது. தசாப்தங்களுக்கு முன்னரே தொடங்கி இருந்த இந்த நிகழ்வுபோக்கு என்னவென்றால், உயர்மட்ட வருவாய் பிரிவுக்காக சமூகத்தின் செல்வவளத்தை உறிஞ்சுவதாகும், இது சமூக சமத்துவமின்மையை வரலாற்றில் முன்னொருபோதும் பார்த்திராத மிகப் பெரும் மட்டங்களுக்கு உயர்த்தியது.

முக்கியமாக நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு இலவசப் பணத்தை வழங்குவதற்காக, அரசாங்கப் பத்திரங்களைக் கொள்முதல் செய்தல் மற்றும் வரலாற்றில் குறைந்த மட்டங்களுக்கு வட்டி விகிகங்களைக் குறைத்தல் என இவற்றின் மூலமாக பெடரலின் தலையீடு, தற்காலிக நடவடிக்கைகளாக இருக்கும் என்றும், நிலைமைகள் வழமைக்குத் திரும்பியதும் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டன.

ஆனால் அந்த நாள் ஒருபோதும் வரவில்லை. நிதியியல் சந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து பெடரலின் உதவி இன்றியமையாததாக உள்ளது என்பதே புதிய வழமையாகிவிட்டது. மத்திய வங்கியின் முறைமைகளைத் (நடவடிக்கைகளைத்) திரும்ப பெறுவதற்கான அதன் எந்தவொரு முயற்சியும் வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு வன்மமான எதிர்வினையைச் சந்தித்து, உடனடியாக அதை பின்வாங்கிவிட்டது. 2018 நிகழ்வும் இதுதான், அப்போது பெடரல் ரிசர்வ் நான்கு முறை, ஒவ்வொரு முறையும் 0.25 சதவீத புள்ளிகளுடன், வட்டிவிகிதங்களை உயர்த்தியதுடன், அதன் நிதியியல் சொத்திருப்புக் கையிருப்புகளை மாதத்திற்கு 50 பில்லியன் டாலர்கள் விகிதத்தில் குறைக்க இருப்பதாக சுட்டிக்காட்டியது. சந்தைகள் தேக்கமடைந்த நிலையில், பெடரல் சேர்மன் ஜெரொம் பவல் மேற்கொண்டு வட்டி விகித உயர்வுகளை நிறுத்துவதாக அறிவித்தார்.

2008 நெருக்கடியானது, அதற்கு முந்தைய மூன்று தசாப்தங்கள் மற்றும் அதற்கும் மேலான காலத்தில் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் எழுச்சியும் மற்றும் மேலும் அதிகரித்ததன் விளைவாகவும் இருந்தது. இது, மற்றொரு கொள்கையைக் கடைப்பிடித்தால் எப்படியோ தலைகீழாக மாற்றப்படமுடியும் என்ற ஆளும் வர்க்கங்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து இது எழவில்லை. மாறாக, இது போருக்குப் பிந்தைய வளர்ச்சி முடிவடைந்ததால் மேற்புறத்திற்கு வந்திருந்த, முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையில் ஆழமாக உள்ளார்ந்து நிலவும் புறநிலை முரண்பாடுகளில் இருந்து எழுந்தது.

அந்த ஏற்றக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து வந்த வணிக சுழற்சியின் அனைத்து ஏற்ற இறக்கங்கள் நெடுகிலும், தொழிற்துறை உற்பத்தி செயலெல்லையின், இலாப விகிதங்கள் ஒருபோதும் 1950 கள் மற்றும் 1960 களில் அவை அனுபவித்த இலாப மட்டங்களுக்குத் திரும்பவில்லை. இது தான் இடைவிடாது அதிகரித்தளவில் இலாபத் திரட்சியின் நிதிய முறைகளை நோக்கி திரும்புவதற்குப் பின்னால் இருந்த உந்துசக்தியாக இருந்தது.

ஆகவே, நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு ஏறக்குறைய இலவசப் பணத்தை வழங்குவதன் மூலமாகவும், அதேவேளையில் "பணம் இல்லை" என்ற அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்குவதன் மூலமாகவும், முன்பினும் அதிக உயரங்களுக்கு ஒட்டுண்ணித்தனமான இலாபத் திரட்சியை அதிகரிப்பதே 2008 நெருக்கடிக்கான விடையிறுப்பாக இருந்தது.

இந்த பெருந்தொற்று தாக்கியபோது, அது, பெருந்திரளான மக்களை விலையாகக் கொடுத்து செல்வவளம் சமூகத்தின் மேலடுக்கில் திரள்வதை நிறுவனமயமாக்கியதன் நாசகரமான சமூக விளைவுகளை அம்பலப்படுத்தியது. இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள விஞ்ஞானத்தின் அடிப்படையில் எந்தவொரு நடைமுறை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை ஏனென்றால் அது அத்தியாவசியமற்ற வேலையிடங்களை மூடுவதையும் அதில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்குச் சம்பள இழப்பீடு வழங்குவதையும் உள்ளடக்கி உள்ளதால், அது வோல் ஸ்ட்ரீட்டில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும் என்பதால் ஆகும்.

இப்போது விகிதாச்சார அடிப்படையில் இந்தளவுக்குக் கொழுத்து போயுள்ள நிதிய சொத்துக்களின் இயல்பில் அதற்கான காரணத்தைக் காணலாம். நிதி மூலதனம் என்பது முக்கியமாக போலியானது. அதாவது, அதற்கு மதிப்பும் இல்லை, அது மதிப்பை உள்ளடக்கி இருக்கவும் இல்லை, ஆனால், பகுப்பாய்வின் இறுதியில், அது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுபோக்கில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து உறிஞ்சப்படும் உபரி மதிப்பு மீதான உரிமைக்கோரலாக உள்ளது.

ஒரு தொழிற்துறை நிறுவனம் அதன் நடவடிக்கைகளில் இருந்து இலாபமீட்டும் போது, அது உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் உண்மை மதிப்பு தோற்றுவிக்கப்படுகிறது மற்றும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதிலிருந்து உபரி மதிப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால் வோல் ஸ்ட்ரீட்டில் இலாபத்திற்காக பங்குகள் வர்த்தகம் செய்யப்படும் போது, நாணய பரிவர்த்தனைகள் மூலமாக இலாபமீட்டப்படும் போது, இதற்காக ஒரு சில சான்றுகளைக் கூறுவதானால், 1992 இல் பவுண்ட் ஸ்டெர்லிங் மீது பந்தயம் கட்டியதன் மூலம் ஜோர்ஜ் சோரோஸ் 2 பில்லியன் டாலர்கள் குவித்துக் கொண்டதைப் போல, அல்லது நிதியியல் வழிவகை வர்த்தகங்களில் (derivative trades) இருந்து ஒரு நிதியக் கொலை செய்ததைப் போல, ஒரு சிறியளவிலும் புதிய மதிப்பு எதுவும் உருவாக்கப்படுவதில்லை.

இத்தகைய அடிப்படை பொருளாதார உறவுகள்தான், கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க முதலாளித்துவத்தின் உடற்கூறியலில் ஏற்பட்ட சில மிக முக்கிய மாற்றங்களுக்கான அடிப்படையாகவும் உந்துசக்தியாகவும் உள்ளன.

உழைப்பின் உற்பத்தித் திறனில் பெரும் அதிகரிப்பு இருந்தபோதிலும், உண்மையான கூலி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது, சுரண்டலின் தீவிரமாக்கலுடன் இணைந்து, முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. கற்பனையான மூலதனத்தின் இரத்தம்குடிக்கும் பிசாசு, அதை நிலைநிறுத்த முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உபரி மதிப்பைப் பிரித்தெடுக்கக் கோருகிறது.

இதே போல, கல்வித்துறை மீதான தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க மருத்துவ முறையில் நிலவும் பேராபத்து மீதான தாக்குதல்கள் என சமூக சேவைகளை அழிப்பதும், இதற்கே சேவையாற்றுகிறது, ஏனென்றால், பகுப்பாய்வின் இறுதியில், அனைத்து சமூக செலவுகளும் வோல் ஸ்ட்ரீட்டிற்குக் கிடைக்கும் பாரிய உபரி மதிப்பு குறைவதையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஊகவணிக மூலதனத்தின் எழுச்சியும் மற்றும் அதன் விளைவாக ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியும் இலாபத் திரட்சியின் மேலாதிக்க செய்முறையாக ஆகியிருப்பது மற்றொரு முக்கிய அபிவிருத்தியையும் சுட்டிக் காட்டுகிறது. கடந்த 30 ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ச்சியான போர் நடத்தியதைக் கண்டுள்ளன — வோல் ஸ்ட்ரீட்டுக்கான செல்வவள ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முயல்வதே அந்த சூறையாடும் போர்களின் நோக்கமாக இருந்தன.

அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்கள் இரண்டின் கீழும், அமெரிக்கா இதே நோக்கங்களை எட்டுவதற்காக சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல, ஆனால் அதிகரித்தளவில் ஐரோப்பாவுக்கு எதிராகவும், அதன் போட்டியாளர்களுக்கு எதிராக பொருளாதார போர்முறைகளை அதிகரித்தளவில் பின்தொடர்ந்துள்ளது. இப்போது இது, உலகின் பிரதான கையிருப்பு செலாவணியான டாலரையே "ஆயுதமாக்கும்" புள்ளியை எட்டியுள்ளது. அமெரிக்க நோக்கங்களுக்கு முரணாக நடந்து கொள்வதாக கருதப்படும் —சான்றாக, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்—பெருநிறுவனங்களும் நாடுகளும் முக்கிய நிதிய சந்தைகளிலிருந்து வெளியேற்றப்பட முடியும்.

இந்த பெருந்தொற்றின் தொடக்கம் நிதியியில் ஒட்டுண்ணித்தனத்தின் நாசகரமான சமூக விளைவுகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, 2008 அளவையும் கடந்து செல்லக்கூடிய ஒரு புதிய நிதிய பொறிவுக்கான நிலைமைகள் அதற்கடுத்து வருகிற 12 ஆண்டுகளில் எவ்வாறு உருவாக்கப்பட்டிருந்தன என்பதையும் தெளிவுப்படுத்தியது.

2020 மார்ச் மத்தியில் எல்லா துறைகளிலும் சந்தைகள் உறைந்து போன போது, ஒட்டுமொத்த பூகோள நிதிய அமைப்புமுறை வரை அது நீண்டு கொண்டிருந்த நிலையில், அப்போதைய வோல் ஸ்ட்ரீட் நெருக்கடி இவ்விதத்தில் முக்கியத்துவம் கொண்டிருந்தது.

இந்த நிதியியல் மாரடைப்பின் அளவும் தீவிரமும், அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதி அமைப்புமுறையின் அடித்தளமான 20 ட்ரில்லியன் டாலர்கள் அமெரிக்க கருவூலத்துறை பத்திரச் சந்தையை (Treasury bond market) அது அடித்தளமாக கொண்டிருந்தது என்ற உண்மையில் எடுத்துக்காட்டப்பட்டது. முக்கிய சந்தைக் கொந்தளிப்பு காலங்களில், அமெரிக்க அரசாங்க பத்திரங்களைக் கொள்முதல் செய்வதில் பணம் பாய்ச்சப்பட்டு, கருவூலத்துறை பத்திரச் சந்தையே நிதித்துறையின் ஒருவித பாதுகாப்பு புகலிடமாக செயல்படுகிறது. ஆனால் எவ்வாறெனினும், இந்த சந்தர்ப்பத்தில், முழு நிதியியல் அமைப்புமுறையையும் கீழிறக்கும் அச்சுறுத்தலைக் கொண்ட "பணத்திற்கான தாக்குதல்" என விவரிக்கப்பட்ட ஒரு பத்திர சந்தை விற்பனை இருந்தது.

இந்த நெருக்கடியின் சூழ்நிலைகளானது நிதியியல் அமைப்புமுறையின் செயற்பாடுகளுக்கான வர்க்க போராட்டத்தின் முக்கியத்துவதை எடுத்துக்காட்டுவதுடன், அரசியல் ஸ்தாபகம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் சேவகர்களால் ஏன் அனைத்து நிறுத்தங்களும் அதை ஒடுக்குவதற்கு இழுக்கப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

மார்ச்சில், இந்த பெருந்தொற்றின் பாதிப்புகளும் அது முன்னிறுத்திய பெரும் அபாயங்களும் வெளிப்படையாக இருந்த நிலையில், அதை தடுப்பதற்கு நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி அங்கே குறிப்பாக வாகனத் தொழிற்துறை தொழிலாளர்களின் முக்கிய பிரிவுகளிடையே வேலை வெளிநடப்புகளும் வேலைநிறுத்தங்களும் இருந்தன. இது நிதியியல் செல்வந்த தட்டுக்களிடையே நடுக்கத்தை உண்டாக்கியதுடன், இந்த இயக்கம் வளர்ந்து அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியக்கூறு குறித்து அவை பீதியுற்றன.

அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளால், அந்த ஆரம்ப இயக்கம் முடக்கப்பட்டது. ஆனாலும் அந்த அச்சம் போய்விடவில்லை, நியூ யோர்க் நகரின் Hunts Point உற்பத்தி சந்தை (Hunts Point Produce Market) தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே அடங்கியிருந்த சமூக கோபம் வெடிப்பதற்கு வினையூக்கியாக ஆகிவிடுமோ என்ற கவலைகளால் உந்தப்பட்டு, அந்த வேலைநிறுத்தத்திற்கான அவர்களது கவலைதோய்ந்த விடையிறுப்பில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

மார்ச் மாத மத்தியில் பெடரலின் தலையீட்டு அளவு அந்த நிதிய நெருக்கடியின் அளவையும் ஆழத்தையும் எடுத்துக்காட்டியது. நடைமுறையளவில் இரவோடு இரவாக, அது பத்திர (bond) கொள்முதல்களை அதிகரிக்க உறுதியளித்தும், வர்த்தக காகிதச் சந்தைக்கு (commercial paper market) உத்தரவாதமளித்தும், நகரச்சபை பத்திரங்களுக்கான (municipal bonds) சந்தை, மாணவர் கடன் (student loan) மற்றும் கடன் அட்டைகளுக்கான கடன்தொகைக்கு (credit card debt) உத்தரவாதமளித்தும், மற்றும் வரலாற்றில் முதன்முறையாக பெருநிறுவன கடன்களை (corporate debt) விலைக்கு வாங்கியும், அது நிதியியல் அமைப்புமுறையின் எல்லா பிரிவுகளுக்கும் உத்தரவாதமளிப்பவராக செயற்பட முன்வந்தது.

CARES சட்டத்தின் கீழ் பிரதான பெருநிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வழங்கியதுடன் சேர்ந்து நடந்த இந்த தலையீட்டால், பெடரலின் இருப்புநிலை கணக்கு அறிக்கை சுமார் 4 ட்ரில்லியன் டாலரில் இருந்து 7 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. காலவரையின்றி எதிர்காலத்திற்கு வட்டி விகிதங்களை நடைமுறையளவில் பூஜ்ஜியத்தில் வைத்திருக்கவும், மற்றும் மாதத்திற்கு 120 பில்லியன் டாலர் மதிப்பில்—அதாவது, ஆண்டுக்கு 1.4 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக—கருவூலத்துறை பங்குகள் மற்றும் அடமானக் கடன் சார்ந்த பத்திரங்களை (mortgage-backed securities) விலைக்கு வாங்கவும் பெடரல் உறுதியளித்துள்ளது.

2008 இக்குப் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையே விஞ்சிய இத்தகைய நடவடிக்கைகள், முதலாளித்துவ அரசு நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு உத்தரவாதமளிப்பவராக ஆகியுள்ளது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

மார்ச் மாத மத்தியில் மிகவும் குறைந்த வோல் ஸ்ட்ரீட் அதற்குப் பின்னர் இருந்து பெடரல் மற்றும் அரசு நடவடிக்கைகளால் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கருவூலத்திற்குள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் கைமாறியதில் போய் முடிந்துள்ளது.

இந்த கடுதாசி அட்டைகளிலான நிதி மாளிகையின் அஸ்திவாரம் அதிகரித்தளவில் நிலைகுலையும் தன்மையில் இருந்தாலும் கூட, உள்ளார்ந்து நிலைமைகள் ஸ்திரமின்றியும் நிச்சயமற்று இருப்பதாகவும் வோல் ஸ்ட்ரீட் உள்ளிருந்தே எச்சரிக்கைகள் வருவதற்கு மத்தியிலும், இந்த அட்டைகளின் நிதி மாளிகை முன்பினும் அதிக உயரங்களுக்கு உயர்த்தப்பட்டு வருகிறது.

இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகளில் இருந்து தான், குறிப்பிடத்தக்க பெரிதும் அபாயகரமான சக்தியாக பாசிசவாதத்தின் எழுச்சி உள்ளடங்கலாக, அரசியல் மேற்கட்டுமானத்தில் பரந்த மாற்றங்களுக்கான புறநிலை பொருளாதார தூண்டுதல்கள் வெளிப்படுகின்றன.

ஜனவரி 6 சம்பவங்களைக் குறித்து அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு போலி-இடது போக்குகள் அவற்றின் அதிகாரபூர்வ அறிவிப்புகளில், அவைகளின் அர்த்தம் என்னவென்று தொழிலாள வர்க்கத்திற்கு மயக்க மருந்து கொடுக்க முனைந்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை ஆக்கிரமித்தமை ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி அல்ல என்பதே, மிதமிஞ்சி மிதந்து கொண்டிருக்கும் அதிகரித்த ஆதார குவியல்களின் முன்னால், அவர்களின் உலகந்தழுவிய விடையிறுப்பாக உள்ளது. முதலாளித்துவ ஜனநாயகம் இன்னமும் அரசின் முக்கிய பிரிவுகளிடையே ஆதரவை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்றும், அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் மீதான தாக்குதல் ஒரு மனம் குழம்பிய ஜனாதிபதியால் ஊக்குவிக்கப்பட்ட ஆனால் முதலாளித்துவத்தின் தீர்க்கமான பிரிவுகளிலும் அதன் அரசு எந்திரங்களிலும் ஆதரவைப் பெறாத ஒரு நாடக காட்சி என்பதாக அவை அறிவிக்கின்றன.

அனைத்திற்கும் மேலாக, முதலாளித்துவ கட்டளைகளைச் செயற்படுத்த ஒரு பாசிசவாத இயக்கத்தை அபிவிருத்தி செய்ய அவசியப்படுத்தும் அடிப்படை பொருளாதார நிகழ்வுபோக்கு எதுவும் இல்லை என்பதாகவும், ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து வேகமாகவும் பெருமளவிலும் பணமீட்டி வருகிறார்கள் என்பதுடன் ஆளும் வர்க்கங்கள் பாசிசவாத சக்திகளை எதிர்ப்பதற்கு சமூக எதிர்ப்பு குறிப்பிடத்தக்களவில் இல்லை என்றும் அவர்கள் பேணுகிறார்கள்.

இத்தகைய அபாயகரமான அரசியல் கட்டுக்கதைகள், இந்த போலி-இடது போக்குகளின் வர்க்க அடித்தளத்தை முதலாளித்துவத்தின் முகமைகளாக மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற நிலையில், வாஷிங்டனில் ஒன்றுகூடிய பாசிசவாத சக்திகளின் தோற்றுவாய்களை ஆராய்வதன் மூலமாக அந்த அரசியல் கட்டுக்கதைகள் அம்பலமாகிவிடுகின்றன.

அவை கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதற்கான சமூக பொதுமுடக்கங்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தில் வளர்ந்து அபிவிருத்தி அடைந்தன. மிச்சிகன் ஆளுநர் கெரெட்சென் விட்மரைக் கடத்தி தேசத்துரோகத்திற்காக சிறை தண்டனைக்கு உள்ளாக்கி படுகொலை செய்வதற்கான பாசிசவாத சதித்திட்டம், அவர் அம்மாநிலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுமுடக்கங்களை திணித்ததனால் ஊக்குவிக்கப்பட்டிருந்தது.

பொருளாதாரத்தைத் திறந்து விடக்கோரி, ஆயுதங்களைக் காட்சிப்படுத்தி, இந்த சக்திகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, அவை ஊடகங்களில் முக்கிய செய்திகளாக காட்டப்பட்டன. ஏனென்றால் இவர்களின் கோரிக்கைகள் ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளின் கோரிக்கைகளுடன் அதே நிலைப்பாட்டில் இருந்தன. இவை நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் ஃபிரெட்மனின், “நோயை விட குணப்படுத்தல் மோசமாக இருந்துவிடக் கூடாது" என்ற அறிவிப்பில் தொகுத்தளிக்கப்பட்டது, இந்த பதாகையின் கீழ் தான் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியினரின் பெருமளவில் ஒத்துழைக்கப்பட்டு, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மனிதப்படுகொலை கொள்கையைப் பின்பற்றினார்.

உபரி மதிப்பின் ஓட்டத்தை நிறுத்தும் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை. வோல் ஸ்ட்ரீட் முற்றிலும் நேரடியாகவே மரணத்திற்குத் தீனி போட தொடங்கிவிட்டது.

பாசிசவாத சக்திகளால் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த கொள்கை, நிதியியல் செல்வந்த தட்டுக்களின் மிகவும் அடிப்படை நலன்களின் நேரடியான மற்றும் உடனடியான வெளிப்பாடாக இருந்தது. அவர்கள் பாசிசவாதிகளின் வழிமுறைகளை விரும்பாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களின் நோக்கங்களுடன் அவர்கள் உடன்படுகிறார்கள்.

ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் பெடரலின் நடவடிக்கைகளால் அவர்களின் சொந்த நிலைமை பாதுகாக்கப்பட்டதும், இவை அனைத்தும் ஜனநாயகக் கட்சியினரால் ஆதரிக்கப்பட்டிருந்த நிலையில், பெருந்தொற்றைக் கையாளும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும், மார்ச் மாத மத்தியில் மரணத்திற்கு அருகாமையிலான அனுபவத்தை எடுத்துக்காட்டியதைப் போல, வோல் ஸ்ட்ரீட்டில் நெருக்கடியைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்து, நிதிய உயரடுக்குகள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று கோரின.

ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கங்களுக்கும் மற்றும் மேலாதிக்கம் கொண்ட நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கும் ஆட்சிக்கவிழ்ப்பு சதி அவசியப்படுகிறது என்பதைக் கூட விட்டுவிடுவோம், அவர்கள் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு பாசிசவாத கும்பல்களின் தேவை இல்லை என்ற எந்தவொரு வலியுறுத்தலும், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அதன் நிதியியல் அமைப்புமுறையின் இதயதானத்தில் உள்ள வெடிப்பார்ந்த முரண்பாடுகளையும் வரலாற்றின் படிப்பினைகளையும் இரண்டையும் புறக்கணித்துவிட்டன.

உயர்மட்டத்தில் பெரும் செல்வவள திரட்சியும் வரலாற்றுரீதியில் முன்பில்லாத மட்டங்களில் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பும் பாரியளவில் சமூக மற்றும் வர்க்க போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னோடியில்லாத அளவிற்கு உள்ளன என்பதே அடிப்படை பிரச்சினையாகும், அவற்றின் இயல்பிலேயே, அவை மிக வேகமாக ஓர் அரசியல் வடிவம் எடுக்கும். அவற்றின் உடனடி விளைவுகளில் ஒன்று நிதியியல் சந்தைகளில் ஒரு நெருக்கடியை உருவாக்குவதாக இருக்கும், இந்த நிதியியல் சந்தைகளின் உயர்வு கடந்து மூன்று தசாப்தங்களில் தொழிற்சங்க எந்திரங்களால் வர்க்கப் போராட்டம் ஒடுக்கப்பட்டதால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது என்றால் மிகையில்லை.

இந்த உள்ளடக்கத்தில், ட்ரம்ப் அவரின் பாசிசவாத இயக்கத்தைக் கட்டமைக்க முனைந்த போது மார்க்சிச அபாயங்களுக்கு எதிரான அவரின் அறிவிப்புகளும் சோசலிசத்தை அவர் தொடர்ந்து கண்டித்ததையும் ஒரு தனிநபரின் மனம் குழம்பிய பிதற்றல்கள் என்பதாக விட்டுவிட முடியாது.

ட்ரம்ப் யாரால் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டாரோ அந்த நிதியியல் உயரடுக்களின் ஒரு பிரிவு எதிர்கொண்டிருக்கும் அபாயங்கள் குறித்து, அதாவது பாரிய பெருந்திரளான மக்களின் பொருளாதார நிலைமைகள் மோசமடையும் நிலைமைகளின் கீழ் மற்றும் இளைஞர்கள் எதிர்கொண்டு வரும் பரந்த பிரச்சினைகளின் கீழ், அங்கே மிகப் பெருமளவில் சமூக கோபம் கட்டமைந்து வருகிறது என்பதும், இடதை நோக்கிய திருப்பம் இருக்கிறது என்பதும் அவர்களால் ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

இந்த நிகழ்வுப்போக்கை அடையாளம் காண, இந்த கோபத்தை வலது நோக்கி திருப்பிவிட முனைந்துள்ள ட்ரம்பை நோக்கி காட்ட வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தற்போதைய பொருளாதார நிலைமை மீதான எந்தவொரு தீவிரமான ஆராய்ச்சியும் சமூக சமத்துவமின்மை தீவிரப்பட்டு வருவதையும் மற்றும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு அது முன்னிறுத்தும் அபாயங்களையும் சுட்டிக்காட்டுகின்றன.

சான்றாக, சர்வதேச உயரடுக்குகளின் வருடாந்தர டாவோஸ் ஒன்றுகூடலை ஒழுங்கமைக்கும் உலக பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய அபாய அறிக்கையின் சமீபத்திய பதிப்பு, பல இளைஞர்கள் "இப்போதைய ஒரு வேலைவாய்ப்பு பனியுகத்தில் தொழிலாளர் சக்திக்குள் நுழைந்து வருகிறார்கள்,” என்று எச்சரிக்கிறது. தற்போதைய இந்த தலைமுறை "இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்திருப்பதால்”, இளைஞர்களின் ஏமாற்றம் தான் "குறுகிய காலத்தில் உலகத்திற்கான முக்கிய அச்சுறுத்தலாக" உருவெடுக்கும்.

நிதிய ஒட்டுண்ணித்தனத்தின் எழுச்சி உண்மையிலேயே அடுக்கடுக்காக உயர்ந்ததற்கும் பாசிசவாத சக்திகளின் தோற்றத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்கையில், பாசிசவாதத்திற்கும் மற்றும் ஏனைய ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கும் இடையே வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. முதலாளித்துவ வர்க்கம் அதன் கோரிக்கைகள் மற்றும் கட்டளைகளைத் திணிக்க பெரிதும் இப்போதிருக்கும் முதலாளித்துவ ஆட்சி வடிவங்களைப் பயன்படுத்தவே விரும்புகிறது, என்றாலும் சில குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் அதற்கு பிற பொறிமுறைகளும் அவசியப்படுகின்றன.

லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, முதலாளித்துவ வர்க்கம் எந்தவிதத்திலும் பாசிசவாதத்தால் ஈர்க்கப்பட்டதில்லை. எப்படி "வீங்கிய தாடை கொண்ட ஒருவர் அவரின் பற்களைப் புடுங்குவதை விரும்புவதில்லையோ அது போல" தான் அது பாசிசவாத முறையைக் கருதுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட நிலைமைகளில், அதாவது அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் இப்போது கட்டவிழ்ந்து வரும் நிலைமைகள் போன்ற சமயங்களில், பெரிய முதலாளித்துவ வர்க்கத்திற்குப் பாசிசவாத பல்மருத்துவர் தேவைப்படுகிறார்.

பொருளாதார மற்றும் சமூக முறிவு நிலைமைகளின் கீழ் அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு பாசிசவாத இயக்கமானது, குட்டி-முதலாளித்துவத்தின் உடைமையிழந்த பிரிவுகளையும், சிறு உடைமையாளர்கள், தனிப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரிவுகளையும், தசாப்த காலமாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகளால் வறிய நோக்குநிலைப் பிறழ்ந்தவர்களையும் ஓர் அரசியல் சக்தியாக அணித்திரட்ட முயல்கிறது.

அதன் சமூக அடித்தளத்தின் காரணமாக, பொதுவாக அதன் சித்தாந்தம் மேலோட்டமான "இடது" நிறங்களைக் கொண்டிருக்கிறது. அது அரசுக்குள் அரசை (deep state) எதிர்ப்பதாகவும், பெருநிறுவன ஊழல் ஊடகங்கள், அரசியல் ஸ்தாபகங்கள், சில பெண்கள் மற்றும் ஆண்களை மிகப்பெரும் ஏகபோகங்கள் ஒடுக்கும் போதும் கூட, அவர்களை எதிர்ப்பதாக கூறிக் கொள்கிறது. இவ்வாறு செய்யும் அது, நிஜமான சமூக மனக்குறைகள் மீது பயணிக்கிறது.

ஆனால் அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குச் சேவையாற்றி, ஒவ்வொரு இடத்திலும் எப்போதும் அவர்களை ஒரு பிற்போக்குத்தனமான திசையில் திருப்ப முயல்கிறது. இந்த தொடர்பு தான் ட்ரம்ப் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது, அவர், ஸ்தாபகம் மற்றும் உயரடுக்குகளுக்கு எதிராக நின்று "மறந்துவிடப்பட்ட மக்களுக்காக" போராடுவதாக கூறிய அதேவேளையில், தொடர்ந்து வோல் ஸ்ட்ரீட்டின் வளர்ச்சியை புகழ்ந்துரைத்துடன் இன்னும் மேற்கொண்டு அதை ஊக்கப்படுத்த கோரினார்.

இப்போதிருக்கும் பொருளாதார அமைப்புமுறைக்குள் எந்தவித அர்த்தமுள்ள சீர்திருத்தத்திற்கும் அடித்தளம் இல்லாத நிலைமைகளின் கீழ், முதலாளித்துவமும் அதன் நிதியியல் அமைப்புமுறையின் செயற்பாடுகளும் தோற்றுவித்த அவநம்பிக்கை மற்றும் சமூக விரக்தி ஆகியவற்றால் பாசிசவாதம் வளர்கிறது. ஆகவே அந்த அடித்தளமானது, பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மறுஒழுங்கமைக்க தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்திற்காக போராடி அதை முன்னெடுக்கும் போது மட்டுந்தான் அடியோடு வெட்டியெடுக்க முடியும்.

இப்போதிருக்கும் அமைப்புமுறையை மதிக்குமாறு மக்களின் நோக்குநிலை பிறழ்ந்த அடுக்குகளுக்கு முறையீடுகள் செய்வதன் மூலமாக பாசிசவாதத்தை கீழறுக்க முடியாது, அவர்களின் அவலநிலைக்கு இதே அமைப்புமுறை தான் பொறுப்பு என்பதோடு, மேலும் அதை வெல்வதற்கு நம்பிக்கையிழந்த வழிகளைத் தேடி அவர்களை அனுப்புகிறது.

இப்போதைய நிலைமை மீது ஓர் இருப்புநிலை குறிப்பை வரைவோம். ட்ரம்ப் முயற்சித்த பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதி குடியரசு கட்சியின் கணிசமான பிரிவுகளுக்குள் ஆழ்ந்த ஆதரவைப் பெற்றது, இவர்களுடன் தான் இப்போது பைடென் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.

அது அரசு எந்திரத்தின் பிரிவுகளாலும் செயலூக்கத்துடன் ஆதரிக்கப்பட்டது, சிலர் பகிரங்கமாக ஆதரித்தார்கள், ஆனால் பலர் மறைமுகமாக ஆதரித்தார்கள், இது பைடென் நிர்வாகத்தின் கீழும் தொடர்ந்து சேவையாற்ற உள்ளது.

மக்களிடையே உடைமையிழந்த அடுக்குகளில், அவர்களில் பலர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட ட்ரம்பின் பாசிசவாத இயக்கத்தின் சமூக மற்றும் பொருளாதார அடித்தளம், இந்த ஜனாதிபதி மாறிவிட்டதால் மறைந்துவிடப் போவதில்லை. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைகையில் அது தொடர்ந்து அதிகரிக்கும். நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஒப்பந்தங்கள் (New Deal) எதுவும் இல்லை என்பதோடு, ட்ரம்ப் செய்ததைப் போன்று அதே போல பைடெனும் வோல் ஸ்ட்ரீட்டின் பேராசை மிக்க செல்வந்த தட்டுக்களுக்கே சேவையாற்றுகிறார்.

ட்ரம்ப் தலைமையின் கீழ் ஆகட்டும் அல்லது வேறொருவர் தலைமையின் கீழ் ஆகட்டும், தொழிலாள வர்க்கம் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து போராடாத வரையில் பாசிசத்தின் நிஜமான தற்போதைய அபாயம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்றவொரு வேலைத்திட்டம், பாசிசத்திற்கான சமூக விளைநிலத்தை உருவாக்குவதில் மிக முக்கிய பாத்திரம் வகித்துள்ள நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தினது மூலாதார தலையைக் கையாளுவதன் மூலமாக தொடங்க வேண்டும்.

இதன் அர்த்தம் என்னவென்றால் தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் மையத்தில், ஒட்டுமொத்த நிதிய அமைப்புமுறையையும், அதாவது பெடரல், தனியார் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்களைப் பறிமுதல் செய்து, தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனித தேவையே வழிநடத்தும் சக்தியாக மற்றும் கோட்பாடாக கொண்ட ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டமைக்கத் தொடங்குவதற்காக, அவற்றை ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பொதுவுடைமைக்குள் கொண்டு வருவதற்கான போராட்டம் இருக்க வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம் அதிஅவசர எரியும் தேவையாக உள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின், ஜனநாயகத்தின், அதன் முதலாளித்துவ வடிவத்தின் இதயதானத்திலேயே வேரூன்றி ஒன்றுதிரண்டு வரும் நெருக்கடியின் விளைவு அதன் மரணப்படுக்கையில் உள்ளது என்பதை ஜனவரி 6 சம்பவங்கள் எடுத்துகாட்டி உள்ளன. அதை புதிய சோசலிச அடித்தளங்களில் மட்டுமே புதுப்பித்து அபிவிருத்தி செய்ய முடியும்.

Loading