"பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை ஏற்றுக்கொண்டு பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை தணிக்கை நடவடிக்கை செய்ய மக்ரோன் நகர்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ருவரி 16 அன்று, தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை அங்கீகரித்தது, இது "குடியரசின் கொள்கைகளுக்கு மரியாதையை வலுப்படுத்துவதற்காக" என்று அழைக்கப்படுகிறது. முஸ்லிம் நம்பிக்கை மீது கடுமையான அரசுக் கட்டுப்பாட்டையும், சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது கூட்டுப் பொறுப்புக் கொள்கையையும் திணிப்பதன் மூலம், காவல்துறை விரைவாகத் தடைசெய்வதை எளிதாக்கும் வகையில், இந்தச் சட்டமானது சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஒரு கடுமையான பிற்போக்குத்தனமான மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2017 இல் பிரெஞ்சு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே உடன் மக்ரோன்

மக்ரோனின் குடியரசிற்கான பேரணி (La RŽpublique en Marche) கட்சி மற்றும் ஜனநாயக இயக்கம் (MoDem) ஆகியவை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France) கட்சியின் 17 பிரதிநிதிகள், பாராளுமன்றக் கமிஷன்களில் சட்டத்திற்கு எதிராக ஒருமனதாக வாக்களித்திருந்தாலும் அதன் பல ஷரத்துகளுக்கு வாக்களித்திருந்தார்கள்; குடியரசுக் கட்சியினர் (Les Républicains) வாக்களித்ததைப் போலவே. பெரும்பாலான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) பிரதிநிதிகள், நவ-பாசிச பாராளுமன்ற உறுப்பினரான மரின் லு பென்னும் வாக்களிப்பதை தவிர்த்தனர். 347 க்கு 151 என்ற வாக்குகளின் மூலம் 65 பேர் வாக்களிக்காத நிலையில், சட்டமன்றம் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இப்பொழுது மார்ச் மாதம் செனட்டிற்கு ஒப்புதலுக்கு செல்லும்.

இந்த சட்ட அடிப்படையின் ஜனநாயக விரோத மற்றும் பாசிச வெளிப்பாடானது உயர் கல்வி அமைச்சர் Frédérique Vidal அன்றே கூறிய கருத்துக்களில் வெளிப்படுகிறது. "பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டம் கல்வி சுதந்திரம் மற்றும் மனச்சாட்சி சுதந்திரம் மீதான ஒரு முன்னணி தாக்குதலுடன் கைகோர்த்து செல்கிறது.

பிரான்சில் நடைபெற்று வரும் அனைத்து பல்கலைக்கழக ஆராய்ச்சிகளையும் அதன் தத்துவார்த்த ஏற்புத்தன்மையை மதிப்பீடு செய்ய அரசாங்கமானது தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தை (CNRS) கேட்கும் என்று விடல் உறுதிப்படுத்தினார்: "ஆம், நம் நாட்டில் நடக்கும் அனைத்து ஆராய்ச்சிகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும், உதாரணமாக காலனித்துவத்திற்கு பிந்தைய ஆராய்ச்சியாக இருந்தாலும் சரி." "அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் தீவிரமயமாக்கலை" போராடுவதற்கான நடவடிக்கைகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

CNews தொலைக்காட்சி ஞாயிறன்று அவர் தெரிவித்த கருத்துக்களை விடல் மேலும் அபிவிருத்தி செய்துகொண்டார், அங்கு அவர் CNRS ஐ பிரான்சில் "அனைத்து ஆராய்ச்சிகளிலும்" "இஸ்லாமிய-இடதுசாரிவாதத்தை" ஆய்வு செய்து அதன் வேரைக் கண்டுபிடிக்க கேட்டுக் கொள்வதாக அறிவித்தார். "கல்விசார் ஆராய்ச்சி என்றால் என்ன, அரசியல் போர்க்குணம் மற்றும் அபிப்பிராயம் என்பதற்கு இடையே ஒரு வேறுபாடு இருக்க வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.

பல்கலைக்கழகத் தலைவர்களின் மாநாடு (CPU) விடலின் அறிக்கையைக் கண்டனம் செய்ய ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது கூறுகிறது: "பல்கலைக்கழகத்தில் 'இஸ்லாமிய-இடதுசாரிவாதம்' என்ற புதிய மலடான சர்ச்சைக்குரிய வாதம் குறித்து CPU தனது திகைப்பை வெளிப்படுத்துகிறது." இஸ்லாமிய-இடதுசாரிவாதம் என்பது ஒரு கருத்தாக்கம் அல்ல.

இது ஒரு போலிக்-கருத்து, ஒரு விஞ்ஞான வரையறையின் தொடக்கத்தை கூட ஒருவர் வீணாகத் தேடுவார், மேலும் CNews இன் நிகழ்ச்சி நடாத்துபவர்களுக்கு, இன்னும் பரந்த அளவில், அதை பிரபலப்படுத்திய அதிவலதுக்கு விட்டுவிடுவதே பொருத்தமானதாக இருக்கும்."

CPU ஆனது "CNRS இன் தவறான பயன்பாடு" என்றும் விமர்சித்தது, அதன் பணி எந்த வகையிலும் ஆசிரியர்-ஆராய்ச்சியாளர்களின் பணிகளின் மதிப்பீடுகளை உருவாக்கவோ அல்லது "அரசியல் போர்க்குணம் அல்லது அபிப்பிராயம்" என்ன என்பதை தெளிவுபடுத்தவோ இல்லை. CPU ஆனது அத்தகைய கோரிக்கையின் தத்துவார்த்த தளங்கள் என்ன, மற்றும் கோரிக்கையின் வடிவம், பல்கலைக்கழகங்களுக்கு எதிராக CNRS ஐ வடிவமைக்கிறது என்ற இரண்டு கருத்துகளையும் குறைந்தபட்சம் அவசரமான விளக்கங்களில் கோருகிறது."

ஆயினும்கூட, அரசாங்கமும் CNRS உம் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் தத்துவார்த்த மதிப்பீட்டை அரசாங்கம் செயல்படுத்த விரைவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. CNRS பிரதிநிதிகள் லு மொன்ட் (Le Monde) பத்திரிகையிடம் CNRS ஆனது "மந்திரியின் எதிர்பார்ப்புகளை தெளிவுபடுத்த அமைச்சரவையுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தனர். அமைச்சகம் "மேலும் விவரங்களை வழங்காமல்" "வரவிருக்கும் நாட்களில் இலக்குகள் வரையறுக்கப்படும்" என்று அமைச்சகம் உறுதிப்படுத்தியது என்று லு மொன்ட் மேலும் சேர்த்துக் கொண்டது.

சட்டப் பேராசிரியரான NoŽ Wagener கூறினார்: "ஜனாதிபதியின் கட்சிப் பிரதிநிதிகள் குடியரசுக் கட்சிகளுடன் கூடுதலாக, உயர்கல்வி "பிரிவினைவாதத்தின்" ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று உறுதியாக நம்புகின்றனர். 'மோசமான' கல்விசார் பணி உள்ளது என்ற கருத்து, அது சமூக வாழ்க்கைக்கு ஆபத்தானது, ஏனெனில், அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து, கல்விசார் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டமியற்றும் முன்முயற்சிகளுக்கு வழிவகுத்திருக்கிறது."

சிக்கன நடவடிக்கைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக அதிகரித்துவரும் சமூக சீற்றத்தால், மற்றும் பெருந்தொற்று நோய்க்கான "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக எழுச்சிபெற்று வரும் எதிர்ப்பை, மக்ரோன் சிந்தனைக் குற்றம் என்று முத்திரை குத்த முயற்சிக்கிறார். கல்விசார் ஆராய்ச்சிகளை மதிப்பீடு செய்வதற்கு, Michel Onfray அல்லது Eric Zemmour போன்ற நவ-பாசிசவாதிகளால் பயன்படுத்தப்படும் சொற்களைப் பயன்படுத்துகிறது என்றால், அது அவர்களை போன்ற அதே இலக்குகளை இலக்காகக் கொண்டுள்ளதால்தான் என்பதாகும்: அதாவது இஸ்லாமிய உலகில் பாரிஸ் நடத்திய போர்களுக்கான எதிர்ப்பு, அதேபோல் இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு. இதன் இலக்கு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் தான்.

அரசாங்கமானது "இஸ்லாமிய-இடதுசாரிவாத" குற்றத்தை அதனுடைய விசாரணை கண்டுபிடிப்புக்களை உயர்கல்வியாளர்கள் மீது சுமத்த விரும்பும் தடைகள் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால் அத்தகைய மதிப்பீடு தவிர்க்க முடியாமல் ஒரு சூனிய வேட்டையின் தன்மையைக் கொண்டிருக்கும்: அதாவது அரசாங்கத்தால் கண்டிக்கப்படும் உயர்கல்வியாளர்கள் பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருக்கும் குற்றவாளிகளுடன் ஒப்பிடப்படுவார்கள், எனவே அவர்கள் எந்த பயங்கரவாதச் செயல்களையும் செய்திருக்கவில்லை என்பது சுய-தெளிவாக இருந்தாலும் அவர்கள் மக்களின் எதிரிகள்.

"பிரிவினைவாத எதிர்ப்பு" சட்டத்தை குடியரசுக் கொள்கைகளைப் பாதுகாப்பதாக உத்தியோகபூர்வமாக முன்வைப்பது ஒரு மோசடியாகும். அதிவலது முடியாட்சிவாத Action Franaise கட்சியின் ஒரு முன்னாள் அனுதாபியான உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனனின் அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்டு, அது 1905 ல் மதச்சார்பின்மை மற்றும் மத மற்றும் அரசு விவகாரங்களைப் பிரிப்பது குறித்த சட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி முஸ்லீம் நம்பிக்கையை அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகள் உட்பட, சட்டமானது கலைக்கப்படலாம் என்று அச்சுறுத்துகின்ற சங்கங்கள் கூட "பிரிவினைவாத-எதிர்ப்பு" ஆணைக்கு இணங்குதற்கான கட்டளைகளின் கீழ் உள்ளன.

1789 பிரெஞ்சுப் புரட்சியால் அனைத்து இனங்களையும், பூர்வீகங்களையும் கொண்ட மக்களைப் பாதுகாக்க வகுக்கப்பட்ட "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" என்ற சர்வதேசக் கோட்பாடுகளைப் பாதுகாத்தல் அல்ல இது. இந்தச் சட்டம் 18ம் நூற்றாண்டில் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகளின் போது நிறுவப்பட்ட ஜனநாயக கொள்கைகளுக்கு நனவான எதிரிகளாக இருக்கும் சக்திகளால் ஈர்க்கப்பட்டது: அவை தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கள் அதிகரித்து வந்த போதிலும், நிதியப் பெரும் செல்வந்த தட்டினரின் நலன் கருதி சமூக-விரோத மற்றும் கொலைகாரக் கொள்கைகளை சுமத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

பிரான்சில் அடிக்கடி நிகழ்வதைப் போலவே, இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கையானது அதிகாரத்துடன் பிணைந்திருக்கும் புத்திஜீவிகளால் ஈர்க்கப்பட்டு குட்டி-முதலாளித்துவ, ட்ரொட்ஸ்கிச-விரோத அமைப்புகளால் பயிற்றுவிக்கப்பட்டது.

விடலின் முன்மொழியப்பட்ட நடவடிக்கையானது, "100 இன் அறிக்கை" என்று அழைக்கப்படும் பல்கலைக்கழகங்களில் தணிக்கை செய்ய அரசாங்கத்திற்கு விடுத்த ஒரு அழைப்பை எதிரொலிக்கிறது, இது 2020 நவம்பரில் மார்செல் கௌசேட் (Marcel Gauchet), பியர்-ஆண்ட்ரே டாகுயெஃப் (Pierre-André Taguieff) மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் லூக் ஃபெர்ரி (Luc Ferry) உட்பட வலதுசாரி அறிவுஜீவிகளின் குழுவினால் செய்யப்பட்டது. கௌசேட் என்பவர் கிளாட் லெஃபோர்டின் (Claude Lefort) மாணவர் ஆவார். இவர் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டியா (Socialisme ou Barbarie) என்ற குழுவின் இணை நிறுவனர் ஆவார். இவர் நான்காம் அகிலத்துடனும் 1949ல் மார்க்சிசத்துடனும் முறித்துக் கொண்டு விட்டார். இன்று, மார்க்சிச வர்க்க அரசியலுக்கு வலதுசாரி, தேசியவாத எதிர்ப்பை ஊக்குவிப்பதற்காக இனரீதியான மற்றும் இனவாத வரையறைகளை அவர்கள் இடைவிடாது உயர்த்தி வருகின்றனர்.

அவர்களின் கொள்கை விளக்க அறிவிப்பானது அமெரிக்க எதிர்ப்பு, பிரெஞ்சு தேசியவாதம், காலனித்துவாதியின் வெறுப்புக்கள் மற்றும் வெளிப்படையான மாறுவேடமான வெள்ளை தேசியவாதம் ஆகியவற்றை பல்கலைக்கழக தணிக்கையை நியாயப்படுத்தும் வகையில் அழைப்பு விடுக்கிறது. அவர்கள் எழுதுகிறார்கள்: "இன மையவாதி, இனவாதி மற்றும் "மேற்கத்தைய ஏகாதிபத்தியவாத" தத்துவங்கள் (வட அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட) உயிராகவும் மற்றும் நன்றாகவும், 'வெள்ளையர்கள்' மற்றும் பிரான்சில் ஒரு வெறுப்பு ஊட்டியாக வாழ்கின்றன; மற்றும் சில நேரங்களில் வன்முறையான அரசியல் போர்க்குணம் மேற்கத்திய எதிர்ப்பு வறட்டுவாதம் மற்றும் பல்கலாச்சாரவாத மரபை எதிர்க்கத் தயாராக இருப்பவர்களையும் தாக்குகிறது."

அவர்கள் தொடர்ந்தனர், “முஸ்லீம் முக்காடு அணிவது-மற்றய அறிகுறிகளுக்கிடையில்-சமீபத்திய ஆண்டுகளில் பரவியுள்ளதால், விஷயங்களுக்கு அவற்றின் சரியான பெயர்களைக் கொடுப்பதற்கும், தற்போதைய சூழ்நிலையில், உருவான தத்துவங்களின் பொறுப்பைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய நேரம் இது மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது. ஆங்கிலோ-சாக்சன் தத்துவங்களின் இறக்குமதி, அறிவார்ந்த இணக்கவாதம், பயம் மற்றும் அரசியல் திருத்தமானது நமது பல்கலைக்கழகங்களுக்கு உண்மையான அச்சுறுத்தலாகும். … எனவே இஸ்லாமியக் கோளாறுகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது, தொழிலாள வர்க்கத்தில் அதிகரிக்கும் சீற்றத்தை எதிர்கொள்ளுவதால் அனைத்துக்கும் மேலாக அதன் பலவீனத்தையும் பீதியையும் காட்டுகிறது என்றால், "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டம் மற்றும் விடல், கௌசேட் மற்றும் பலரால் முன்மொழியப்படும் தணிக்கையால் முன்வைக்கப்படும் சர்வாதிகாரத்தின் ஆபத்துக்களை குறைத்துக் காட்டுவது ஒரு அபாயகரமான தவறாகும். நிதியியல் பிரபுத்துவம் மற்றும் அதன் அனைத்து அரசியல் ஊழியர்களுக்கும் எதிராக ஒரு சோசலிசப் போராட்டத்தை நடத்துவதற்கும், கருத்து சுதந்திரத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் நெரித்துவிடுகிற இந்த முயற்சிக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது அவசியமாகும்.

Loading