தொழிலாள வர்க்கத்துடன் மோதலுக்கு இத்தாலிய அரசாங்கம் தயாராகி வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இத்தாலிய பாராளுமன்றத்தின் இரு சபைகளும் மரியோ திராகியின் புதிய அரசாங்கம் மீது கணிசமான பெரும்பான்மைகொண்ட நம்பிக்கை வாக்குகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளன. இது எதிர்க்கப்பட்ட 40 க்கு 262 வாக்குகளின் ஆதரவைப் பெற்றது. பிரதிநிதிகள் சபை 56 எதிர்ப்பு வாக்குகளுக்கு 535 வாக்குகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

73 வயதான முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் கடந்த வாரம் பாசிச இத்தாலியின் சகோதரர்கள் (Fratelli d'Italia) கட்சி தவிர, அதிவலது லீகா இலிருந்து சமூக ஜனநாயக ஜனநாயகவாதிகள் (PD) கட்சி வரை அனைத்து முக்கிய தேசிய கட்சிகளும் அடங்கிய ஒரு அரசாங்கத்தை அமைத்தார். சில முக்கிய அமைச்சகங்கள் அணிசேரா தொழில்வல்லுநர்கள் தலைமை ஏற்பார்கள். வணிக நலன் குழுவான Confindustria (General Confederation of Italian Industry) மற்றும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை உறுதியளித்தன.

கடந்த புதனன்று செனட்டில் ஒரு திட்டவட்டமான உரையை திராகி வழங்கினார், அதில் அவர் "தேசிய ஐக்கியம்" மற்றும் "தேசிய பொறுப்பு" ஆகியவற்றைக் கோரினார். தனது அரசாங்கத்தை வரையறுக்க எந்த அடைமொழியும் தேவையில்லை என்று அவர் கூறினார். இது "வெறுமனே நாட்டின் அரசாங்கம்" என்று அவர் கூறினார். மக்களின் "தியாக உணர்வு" மற்றும் "குடியுரிமையின் கடமை" க்கு அவர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் அவர் சேர்த்துக் கொண்டார், "இன்று, ஐக்கியம் என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, ஆனால் ஒரு கடமையாகும்."

கியுசெப்பே கோந்தேயிலிருந்து மரியோ திராகிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தல் (Image: governo.it/CC-BY-NC-SA 3.0 IT)

ஆனால் அவரது அரசாங்கம் நாட்டின் ஐக்கியத்தைக் கொண்டிருக்கவில்லை மாறாக, ஆழமாக பிளவுபட்டு ஒரு சமூக வெடிப்பை நோக்கி செல்லும் ஒரு நாட்டில் ஆளும் உயரடுக்கின் அணிகளை மூடுவதாகத்தான் இருக்கிறது.

திராகி தனது அரசாங்கத்தை "போருக்குப் பிந்தைய உடனடி கால அரசாங்கங்களுடன்" ஒப்பிடும்போது கவனக்குறைவாக இருக்கவில்லை, "அரசியல் சக்திகள் வெகுதூரம் சிதறிக்கிடந்த போதினும், முரண்பாடாக இல்லாவிட்டால்" ஒத்துழைத்தன. அந்த நேரத்தில், பால்மிரோ தொக்லியாட்டி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்து தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் போராட்டங்களை நசுக்கி இத்தாலிய முதலாளித்துவத்தை காப்பாற்றியது.

இத்தாலிய முதலாளித்துவம் முகங்கொடுக்கும் நெருக்கடி எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதையும், அவருடைய அரசாங்கத்தை ஆதரிக்கத் தவறினால் அவர்கள் ஒரு சமூக எழுச்சி ஆபத்து ஏற்படும் என்பதையும் கூடியிருந்த செனட்டர்களுக்கு திராகி தெளிவுபடுத்தினார்.

பிரதம மந்திரியின் கருத்துப்படி, பெருந்தொற்று நோய் தொடங்கியதில் இருந்து 92,522 இறப்புக்கள் மற்றும் 2,725,106 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் குறைவாக உள்ளன. சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்களில் மட்டும் 120,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 259 பேர்கள் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்று நோயின் விளைவாக, ஒட்டுமொத்த மக்களின் ஆயுட்காலம் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் குறைந்துவிட்டது, அதே நேரத்தில் இந்த வீழ்ச்சியானது குறிப்பாக கடுமையான வைரஸ் தாக்கிய பகுதிகளில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இடையில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒப்பிடத்தக்க சரிவு ஏதும் இல்லை என்று திராகி கூறினார்.

நெருக்கடியின் சமூக விளைவுகள் குறித்து கரிட்டாஸ் நிவாரண அமைப்பிலிருந்து (Caritas) வந்த புள்ளி விவரங்களை திராகி மேற்கோள் காட்டினார், இது சென்ற ஆண்டு மே மற்றும் செப்டம்பர் இடையே, "புதிய ஏழைகளின்" சதவீதம் 31 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டியது. "கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது நபர் கரிட்டாசிற்கு செல்வது முதல் முறையாக அவ்வாறு செல்லுகிறார்கள்," என்று அவர் கூறினார். "புதிய ஏழைகள்" மத்தியில், இளம் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வயதுடைய மக்கள் கொண்ட குடும்பங்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு, ஊழியர்களின் எண்ணிக்கை 444,000 குறைந்துவிட்டது. முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் இதுவரை பாதிப்பிற்கு உள்ளாயினர், ஆனால் நிரந்தர ஒப்பந்தங்களுடன் கூடிய தொழிலாளர்கள் விரைவில் வேலையிலிருந்து வெளியேறிவிடக்கூடும்.

சமூக சமத்துவமின்மையின் மீதான தாக்கம் கடுமையானது, சில வரலாற்று முன்னோடிகளைக் கொண்டுள்ளது, என்று திராகி தொடர்ந்தார். எந்த தலையீடுகளும் இல்லாமல், 2019 இல் 34.8 சதவீதமாக இருந்த கினி குணகம் (Gini coefficient), 2020 இன் முதல் ஆறு மாதங்களில் 4 சதவீதப் புள்ளிகள் அதிகரித்திருக்கும். கினி குணகம் என்பது வருமானப் பங்கீட்டிலுள்ள சமத்துவமின்மையின் ஒரு அளவீடு ஆகும். "இந்த அதிகரிப்பு கடந்த இரண்டு மந்தநிலைகளின் போது ஒட்டுமொத்த அதிகரிப்பை விட பெரியதாக இருந்திருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த பெருந்தொற்று நோய் பள்ளிகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் 1.7 மில்லியன் மாணவர்களில் 61 சதவிகிதத்தினர் மட்டுமே பிப்ரவரி முதல் வாரத்தில் தொலைதூரக் கல்வி பயிலுவதில் பங்கு பெற முடிந்தது.

"இந்த முன்னெப்போதும் இல்லாத அவசர நிலை, ஐக்கியம் மற்றும் ஈடுபாட்டை நோக்கிய ஒரு தீர்க்கமான மற்றும் விரைவான பாதையைக் கோருகிறது," என்று திராகி முடித்தார். ஆனால் ஒரு "தடுப்பு மருந்து திட்டம்" மற்றும் "நமது சுகாதார சேவையின் சீர்திருத்தம் பற்றிய விரிவான விவாதம்" தவிர, அவர் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் அறிவிக்கவில்லை.

சுகாதார மந்திரியின் பெருந்தொற்று நோய் ஆலோசகர் வால்டர் ரிகார்டி மற்றும் பிரபல வைராலஜிஸ்ட் ஆண்ட்ரியா கிரிசான்தி போன்ற முன்னணி நிபுணர்கள் இத்தாலியில் ஆபத்தான பிரிட்டிஷ் வகை வைரஸ் பரவுவதை தடுக்க பல வாரங்கள் ஒரு பொதுமுடக்கம் வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். சில அமைச்சர்கள் இதுவரை இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து வந்தமை பத்தாயிரக்கணக்கான இறப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்று இத்தாலிய செய்தி ஊடகத்திடம் ரிகார்டி கூறினார்.

ஆனால் திராகி ஒரு பொதுமுடக்கத்தை நிராகரிக்கிறார், மனித உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை தரும் முந்தைய போக்கிற்கு உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கிறார். அவர் இத்தாலியின் சமூக மற்றும் பொருளாதார அமைப்பை அடிப்படையாக மறுசீரமைக்கவும், முன்னர் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் காரணமாக தோல்வியடைந்த நடவடிக்கைகளை செயல்படுத்தவும், பெருந்தொற்று நோய் மற்றும் அது உருவாக்கியுள்ள துயரையும் பயன்படுத்த விரும்புகிறார்.

இதில் திராகி ஒரு நிபுணர். ஏற்கனவே 1990களில், அவர் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கி, இத்தாலியின் நிதி அமைச்சரகத்தில் பொது இயக்குனராக சமூக செலவினங்களை வெட்டி, இத்தாலி யூரோவிற்கு "பொருத்தமாக" இருப்பதை உறுதி செய்தார். முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாக்ஸில் (Goldman Sachs) ஒரு இலாபகரமான வசிய ஆற்றலை வழங்கிய பின்னர், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் என்ற முறையில் கிரேக்கம் மற்றும் பிற நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அழித்த மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை கட்டளைகளுக்கு அவர் கூட்டாகப் பொறுப்புக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவர் நிதியச் சந்தைகளுக்கு டிரில்லியன் கணக்கான யூரோக்களை வெள்ளம்போல் பாயச் செய்தார்.

ஒரு சில வாக்கியங்களை மட்டுமே இந்த பெருந்தொற்று நோய் குறித்து திராகி அர்ப்பணித்தாலும், தன்னுடைய செனட் உரையின் பெரும் பகுதியை பெருநிறுவன இலாபங்களை எவ்வாறு அதிகரிக்க விரும்புகிறார் என்பதை விளக்குவதற்காக அவர் செலவிட்டார். இதில் அவர் நேரடியாக ஐரோப்பிய ஒன்றியத்தையே சார்ந்திருந்தார்.

"ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அட்லாண்டிக் கூட்டணியில் எங்கள் நாட்டின் உறுப்புரிமையின் அடிப்படையில் இந்த அரசாங்கம் உருவாகிறது," என்று அவர் செனட்டர்களிடம் தெரிவித்தார். "இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது என்பது யூரோவிற்கான முடிவின் சீர்குலைவு தன்மையைப் பகிர்ந்து கொள்வது, பெருகிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வையை பகிர்ந்து கொள்வது என்பதாகும்." சர்வதேச உறவுகளில், அவரது அரசாங்கம் "உறுதியாக ஐரோப்பிய மற்றும் அட்லாண்டிக்-சார்புடையதாக" இருக்கும் மற்றும் "சிறந்த கட்டமைப்பைக் கட்டமைக்கும் மற்றும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் மூலோபாய மற்றும் அத்தியாவசிய உறவுகளை வலுப்படுத்துவதாக" இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா வைரஸ் பிணை எடுப்பு நிதியைப் பயன்படுத்துவதற்கு திராகி விரும்புகிறார், அதிலிருந்து இத்தாலி 210 பில்லியன் யூரோக்கள் மானியங்கள் மற்றும் கடன்களுக்கு தகுதி பெறுகிறது, இது நாட்டை "சீர்திருத்தச்" செய்வதற்கான நெம்புகோலாக பயன்படுத்துகிறது. எந்த நோக்கத்திற்காக நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு விஷயத்திலும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய நிதியத்திற்கு "அடுத்த தலைமுறை ஐரோப்பிய ஒன்றியம்" என்ற இழிந்த பெயர் உள்ளது, மேலும் திராகி தன்னுடைய சிக்கன திட்டங்களை இளைய தலைமுறைக்கான பொறுப்பு பற்றிய குறிப்புக்களுடன் நியாயப்படுத்த முற்பட்டார். "இன்றைய அனைத்து வீணடிப்புகளும் எதிர்கால சந்ததியினருக்கு நாம் திணிக்கும் அநீதியாகும், அவர்களின் உரிமைகளைக் கொள்ளையடிக்கிறது," என்று அவர் கூறினார்.

இந்த நிதிகள் சமூக துயரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக பொருளாதாரத்தை "நவீனமயமாக்குவது" என்று த்ராக்கி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். "அரசாங்கம் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும்," என்று அவர் கூறினார். "ஆனால் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் ஒரே அளவிற்கு பாதுகாப்பது தவறு. அவற்றில் சில தீவிரமாக மாற வேண்டும். எந்தெந்த நடவடிக்கைகளை பாதுகாக்க வேண்டும், எந்த மாற்றத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது வரவிருக்கும் மாதங்களில் பொருளாதாரக் கொள்கை எதிர்கொள்ள வேண்டிய கடினமான பணியாகும்.”

பெருந்தொற்று நோய்க்கான பொருளாதாரக் கொள்கைக்கான பதில் "புதுமைக்கு வசதியளிக்கும் கட்டமைப்புக் கொள்கை, மூலதனத்திற்கும் கடன்களுக்கும் வளரும் திறன் கொண்ட வணிகங்களின் அணுகல் வசதி, மற்றும் முதலீடுகளை எளிதாக்கும் மற்றும் தேவையை உருவாக்குகின்ற விரிவான நிதி மற்றும் வரவு-செலவுத் திட்ட கொள்கைகள் ஆகியவற்றை எளிதாக்கும் கட்டமைப்புக் கொள்கைகளின் கலவையாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஒரு குறிப்பிடத்தக்க காரணி "தேசிய மற்றும் சர்வதேச தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கான திறனை அபிவிருத்தி செய்வது" -வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குறைந்த கூலிகள்.

உள்நாட்டுக் கொள்கை பற்றிய பிரச்சினையை திராகி தீர்க்கவில்லை. அகதிகள் கொள்கை குறித்து அவர் சுருக்கமாக குறிப்பிட்டதாவது, "சர்வதேச பாதுகாப்புக்கு உரிமை இல்லாத மக்களை திருப்பியனுப்புதல் என்ற ஐரோப்பிய கொள்கையை உருவாக்குவது" தீர்மானகரமானது. ஆனால் ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதற்கு வாதிடும் வலதுசாரி தீவிரவாத லீகா மந்திரிசபை மேசையைச் சுற்றி திராகியுடன் அமர்ந்து கொண்டு, அவருடைய அரசாங்கம் தொழிலாள வர்க்கத்துடனான ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதன் வலதுசாரி வேலைத்திட்டத்தை திணிப்பதற்கு வேறு வழி இல்லை.

Loading